மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாபெரும் சபைதனில் - 21

மாபெரும் சபைதனில்
பிரீமியம் ஸ்டோரி
News
மாபெரும் சபைதனில்

தமிழ்நாட்டில் சமூக நீதிக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி அது.

நியூயார்க் நகரத்தின் பரபரப்பான தெருவொன்றில் இருந்த மெக்சிகன் உணவகத்தில் அமர்ந்திருந்தேன். உடன் கல்லூரித் தோழர்கள். நண்பர்களின் இல்லத்தரசிகள், இந்திய உணவு, உடை குறித்த பேச்சுக்கு நடுவே தங்கள் குழந்தைகளின் தமிழ் உச்சரிப்பைத் திருத்த முயன்றுகொண்டிருந்தார்கள். பரிட்டோ, டாகோ, மார்கரிட்டோ என விதவிதமான மெக்சிகன் உணவு வகைகளின் சுவையை நண்பர்கள் விதந்தோத, மெல்லிய பதற்றத்தோடு அந்தச் சூழலில் நான் ஒட்டியிருக்கிறேன். அருகிலுள்ள மேசையொன்றில் பிறந்தநாள் கொண்டாட்டம் களைகட்டியிருக்கிறது. கௌபாய் தொப்பிகளுடன் மரபிசை தரும் உற்சாகத்தில் மிதக்கிறார்கள் சிலர். மரியாச்சி வகை இசை நுணுக்கங்களை ஒரு நண்பன் விளக்கிக்கொண்டிருந்தான். நாங்கள் அனைவரும் குறிப்பிட்ட ஒரு நண்பரின் வருகைக்காகக் காத்திருக்கிறோம். அவரைப் பார்க்காமல் என் அமெரிக்கப்பயணம் முழுமை பெறப்போவ தில்லை. ‘வாகன நெரிசல் காரணமாக வர ஏழு நிமிட தாமதம்’ என்று செய்தி வருகிறது.

மாபெரும் சபைதனில்
மாபெரும் சபைதனில்

வந்து சேர்ந்தார் நண்பர். எங்கள் அனைவரையும் உற்சாகம் தொற்றிக்கொள்கிறது. ‘குப்புசாமி, எப்படி இருக்கிறாய்?’ எனக் கட்டித்தழுவி வரவேற்கிறோம். இருபது ஆண்டுகள் கழித்து சந்திக்கிறேன் நான். குடும்பம், குழந்தைகள், பணிச்சூழல் என்று பேச்சு இயல்பாகச் சுழன்று கொண்டிருக்கும்போதே மனம் முப்பது ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல ஆரம்பித்துவிட்டது.

பொறியியல் கல்லூரியில் முதல் ஆண்டில் அடியெடுத்து வைத்த நேரம். புதிய சூழல், விடுதி வாழ்க்கை, கல்லூரிகளில் சுதந்திரக் காற்று வீசிய காலகட்டம். புரட்சி மனப்பான்மையும், மரபு மீறலும் எட்டிப் பார்க்கத் துணியும் கூட்டத்தில் கண்களில் மிரட்சியுடன் தனியே தெரிந்தான் குப்புசாமி. சேலத்திற்கு அருகே ஒரு குக்கிராமம். ஏழைக்குடும்பம். தமிழ்வழிக் கல்வியில் பள்ளிப் படிப்பு. அனைத்தும் சேர்ந்து தனித்து விடப்பட்டான். தாழ்வு மனப்பான்மை உந்த ஒரு கட்டத்தில் கல்லூரிப்படிப்பை நிறுத்த முயன்ற செய்தி கிடைத்து நண்பர்கள் களத்தில் இறங்கினோம். தன்னம்பிக்கை, உற்சாகம், ஆங்கிலவழிப் பாடப் பயிற்சி என அனைத்தும் கிடைப்பதை உறுதிசெய்தோம். குப்புசாமி எங்களுக்குச் செல்லக்குழந்தையானான். முதல் ஆண்டில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி, இரண்டாம் ஆண்டில் எதிர்பாராதவிதமாக கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு கிடைக்க, முதலில் அவனுக்குச் சற்றுத் தயக்கம். மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்தான். கடுமையான உழைப்பு பலன் தந்தது.

IAS officer Udhayachandran shares his experiences part 21
IAS officer Udhayachandran shares his experiences part 21

மூன்றாம் ஆண்டில் முக்கியப் பாடங்களில் நல்ல மதிப்பெண் பெறத் தொடங்கியவன் முன்னர் உதவி செய்தவர்களைத் தாண்டி ஓடத் தொடங்கியதில் அனைவருக்குமே மகிழ்ச்சி. பொறியியல் படிப்பை முடித்தபோது வகுப்பின் முதல் ஐந்து மாணவர்களுள் குப்புசாமியும் ஒருவன். படித்து முடித்தவுடன் சென்னை மற்றும் பெங்களூரில் பணி. பின் அமெரிக்கா பயணம். இன்று ஒரு பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மிக முக்கியப் பதவியில் உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறான். அடுத்த இரண்டு மணி நேரமும் குப்புசாமியின் அழகிய ஆங்கில உச்சரிப்பு, உலகெங்கும் பயணித்து அவன் சுவைத்த உணவு வகைகள், தன் குழந்தைகள் பங்குபெறும் புதிய விளையாட்டுப்போட்டிகள் என விவரித்துக் கொண்டிருப்பதைப் பெருமிதத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.

என்னுடன் பொறியியல் கல்லூரியில் படித்த பலர் இன்று உலகெங்கும் பல நிறுவனங்களில் உயர்பதவியில் இருந்தாலும், குப்புசாமியின் வெற்றி பிரமிக்கத்தக்கது. ஒரு குக்கிராமத்திலிருந்து ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த முதல் தலைமுறைப் பட்டதாரி, ஆங்கிலவழிக் கல்வியில் தட்டுத் தடுமாறி, தன் கடும் உழைப்பால் தொழில்நுட்ப உலகில் வெற்றி பெறமுடியும் என்பது எவ்வளவு பெரிய செய்தி? தன்னம்பிக்கைக்கும், தமிழ்நாட்டின் சமூக நீதிக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி அது.

முத்துமணி
முத்துமணி

தொண்ணூறுகளில் பொறியியல் படித்த மாணவர்களுக்கு Y2K எனப்படும் புத்தாயிரமாண்டுப் புதிர் புதிய வழிகளைத் திறந்துவிட்டது. நூறு ஆண்டுகளுக்கு முன்னால், பஞ்சம்பிழைக்கக் கடல்கடந்து பயணித்த தமிழர்களின் புதிய தலைமுறை இன்று தொழில்நுட்பக் கனவோடு உலகை வலம்வரத் தொடங்கிவிட்டனர். தகவல் தொழில்நுட்பத் திறன், ஆங்கில அறிவு, கொஞ்சம் தன்னம்பிக்கை, கண்களில் வண்ணக்கனவுகள் எனத் தமிழக இளைஞர்கள் கடைக்கோடிக் கிராமங்களில் இருந்தும் புறப்பட்டனர். அதன் தாக்கம் வெளிநாடுகளில் இன்று எதிரொலிக்கிறது. வேறு எந்த மாநிலத்தைவிடவும் தமிழகத்திலிருந்து சமூகத்தின் அனைத்துத் தரப்பிலிருந்தும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பரவலாக வெளிநாடுகளுக்குச் சென்றிருப்பதைக் காணமுடிகிறது.

வெளிநாடுகளில் நடக்கும் தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகளில் கொங்குத் தமிழ், தஞ்சை மணம், நெல்லை வழக்கு எனக் குட்டித் தமிழ்நாடே தென்படுகிறது. பொங்கல் விழா, தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சிகள் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகின்றன. தலைவாழை இலையில் அறுசுவை விருந்து, மல்லிகைப் பூச்சூடி, பட்டாடை உடுத்தி வெட்கம் ததும்பும் முகங்களென, தமிழ்ப் பண்பாட்டின் அசைவுகள் அனைத்தும் கடல்கடந்தும் பரவியுள்ளன.

சம்பந்தம், ஜானகிராமன்
சம்பந்தம், ஜானகிராமன்

புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கைப் பயணம் தனித்துவமானது. உலகின் தலைசிறந்த நிறுவனங்களில் பணிபுரிந்தும், வாழ்க்கைத் தரத்தில் உயர்ந்தபோதும் அவர்களுடைய நினைவுகள் தமிழகக் கிராமங்களின் வயல்வெளிகளைச் சுற்றியே வட்டமிடுகின்றன. தமிழ்மரபின் சிறப்பை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்த்திட அவர்கள் கடுமையாக உழைப்பது தெரிகிறது. வார இறுதியில் தமிழ் மொழி வகுப்புகள், பரதம், கோயில் திருவிழாக்கள் என ஆர்வத்துடன் அலைமோதுவதைப் பார்க்க முடிகிறது. கலிபோர்னிய தமிழ்ச் சங்கம் நடத்தும் தமிழ் வகுப்புகளில் ஆயிரக்கணக்கில் குழந்தைகள் படிக்கிறார்கள். இல்லத்தரசிகள் முன்வந்து தமிழ் கற்பிக்க, குழந்தைகள் ‘உங்களை இன்று சந்தித்ததில் மகிழ்ச்சி’ என்று நம்மை நோக்கி மழலைக் கரம் நீட்டும்போது ஆனந்தக்கண்ணீர். தமிழ்மொழிப் பாடங்களைக் குரல்வழிப் பதிவுகளாக மாற்றித் தரமுடியுமா என்று கேட்டவர்கள், தொழில்நுட்பம் இழையோடத் தமிழ்மொழிக் கல்வி இருந்தால் வசதி என்று சுட்டிக் காட்டுகிறார்கள். தமிழ்த் திரைப் படங்களும், திரையிசையும் தமிழ்மீதான ஆர்வத்தைத் தக்கவைக்கும் கருவிகளாக மாறுகின்றன. இளையராஜாவின் இசைத்தடம் பற்றிவளர்ந்த பெற்றோருக்கும் ஏ.ஆர். ரஹ்மானின் ஒலிநுட்பங்களை வியந்து சிலாகிக்கும் அடுத்த தலைமுறைக்கும் இடையே நடந்திடும் உரையாடல்கள் இனிமையானவை.

அதனால்தான் தமிழ்நாட்டில் நடக்கும் சிறு அசைவும் மிகப்பெரிய சலனத்தைப் புலம் பெயர்ந்த தமிழர் மத்தியில் உருவாக்குகின்றன. ஏறுதழுவுதல் குறித்து உலகத் தூதரகங்களில் முறையிடவும், எதிர்வினையாற்றவும் துணிகிறார்கள். கீழடி அகழாய்வு குறித்தான ஆக்கபூர்வமான ஆலோசனைகள் புலம் பெயர்ந்த தமிழர்களிடம் இருந்தே கிடைத்தன. சிகாகோ, ஹார்வர்டு பல்கலைக்கழகங்களின் உதவியுடன் மரபணு ஆய்வு, ஐரோப்பிய வல்லுநர்களின் உதவி என அனைத்தும் புலம் பெயர்ந்த தமிழர்களால் மட்டுமே சாத்தியமாயின. தாய்த் தமிழகத்தை விட்டுப் பாதுகாப்பான தொலைவில் இருப்பதால் மொழிசார்ந்த செயல்பாடுகளில் அறிவுபூர்வமாக இயங்குவது அவர்களுக்கு எளிதாகிறது.

IAS officer Udhayachandran shares his experiences part 21
IAS officer Udhayachandran shares his experiences part 21

புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்கள் துறைகளில் தனி முத்திரை பதிக்கத் தொடங்கிவிட்டனர். உலகையே அச்சுறுத்தி வந்த ஜிகா வைரஸ் பரப்பிய நோய்களுக்குத் தடுப்புமருந்து கண்டுபிடித்த முத்துமணி, மதுரை சமயநல்லூரைச் சேர்ந்த முதல் தலைமுறைப் பட்டதாரி. அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘தி விஸ்டர் இன்ஸ்டிட்யூட்’ ஆராய்ச்சி நிலையத்தில் அவருடைய ஆய்வகத்துக்குச் சென்றிருந்தேன். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்துள்ள ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் இந்த மதுரைத் தமிழருக்கு அவருடைய ஆராய்ச்சிக் குழுவின் தலைமைப் பொறுப்பிலிருக்கும் யூத மருத்துவர் கொடுத்த புகழாரங்கள் அபாரமானவை.

உலகின் தலைசிறந்த ஆராய்ச்சிக் கூடங்களில் தமிழ்மணக்கும் தருணங்களை அருகிலிருந்து பார்த்து மகிழ்ந்த அழகிய பொழுதுகள் அவை. பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள் மத்தியில் உரையாடும்போது, புகழ்பெற்ற பொருளாதாரப் பேராசிரியர் செந்தில் முல்லைநாதனுக்கு எதிர்காலத்தில் நோபல் பரிசு கிடைக்கும் என்று நம்பிக்கை விதைக்கிறார்கள். மதுரையில் பிறந்த இளம் மானுடவியல் ஆராய்ச்சியாளர் ஆனந்த பாண்டியனுக்குக் கிடைத்த இன்போசிஸ் விருது பற்றிப் பெருமிதத்தோடு பேசுகிறார்கள். தமிழின் செம்மொழித் தகுதிக்காக வாதாடிய ஜார்ஜ் ஹார்ட் பணியாற்றிய பெர்க்லி பல்கலைக்கழகம் சென்று அங்குள்ளவரிடம் சென்று உரையாடினால் தமிழுக்குக் கிடைக்கும் தனி மரியாதை புலப்படுகிறது.

கல்லூரியில் படிக்கும்போது கணையாழி கவிதைகள், மோகமுள் என இலக்கியம் பேசித் திரிந்த நண்பர் ஒருவரை நியூயார்க்கில் சந்தித்தேன். நாமக்கல், திருச்சி, ஈரோடு ஆகிய பகுதிகளில் படித்து சென்னை விப்ரோவில் பணி. பின்னர் அமெரிக்க மண்ணில் அடியெடுத்து வைத்து இன்று ‘Capgemini’ நிறுவனத்தில் உயர்ந்த பதவி. நண்பருக்குக் கீழே பணியாற்றும் பலர் உலகப் புகழ்பெற்ற ‘Ivy League’ கல்வி நிறுவனங்களில் எம்.பி.ஏ முடித்தவர்கள். தொலைபேசி வழியே அவர்களுக்கு அலட்சியமாய் அறிவுரைகள் சொல்லிக்கொண்டே மெக்சிகன் உணவை அவர் ருசித்துக்கொண்டிருந்த காட்சி இன்னும் என் கண்களில் நிற்கிறது. கலிபோர்னியாவின் சான்ஹோஸே நகரில் அஞ்சப்பர் உணவகத்தில் அசைவ உணவைத் தேடிச்சென்றால் அசல் தமிழ்நாட்டில் இருப்பதைப்போன்றே உணர்வு. உற்சாகக் குரல்கள், சற்றே அதிகமான இரைச்சல், காரசாரமான தமிழ்த் திரைப்பட விமர்சனங்களுக்கு நடுவே அறிமுகமான நண்பர் பேச்சு வாக்கில், சென்ற வாரம் தன்னுடைய நிறுவனத்தை 50 மில்லியன் டாலருக்கு விற்றதாகவும், புதிதாக என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பதாகவும் சொன்னபோது சற்று இன்ப அதிர்ச்சிதான் எனக்கு. மூன்று மணி நேரம் பயணம் செய்து கலிபோர்னியாவில் என்னைச் சந்திக்க வந்த வேல்முருகன், கூகுள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். தொல்காப்பியம் வழியே தமிழ் இலக்கணம் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருப்பவர். கடல்கடந்து வந்த பின்னும் அவர்களுடைய சொல்லும் செயலும் நினைவுகளும் தமிழகத்தை நோக்கித்தான்.

உலக அரங்கில் வெற்றிபெற்ற தமிழர்கள் தமிழுணர்வோடு இயங்கினால் விளைவு எப்படி இருக்கும் என்பதற்கு ஜானகிராமன், சம்பந்தம் என்ற இரு மருத்துவர்களே சாட்சி! ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைந்திட தன் சொந்த நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் அமெரிக்க டாலர் நன்கொடையாகக் கொடுத்தவர்கள். சென்னையில் அவர்கள் என்னைச் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்த போது. அரசிடம் நிதி உதவி பெற நான் செய்த சிறு முயற்சிக்காக அவர்கள் என்னைப் பாராட்ட, நானோ, ‘மருத்துவர்களின் பெருந்தன்மைக்கு முன்னால் என் பங்கு மிகச் சிறியது, மேலும் இது எங்கள் கடமையும்கூட’ என்றேன். பேச்சு இயல்பாகத் திசைமாறி ‘ஹார்வர்டு தமிழ் இருக்கை என்பது மக்கள் இயக்கமாக மாறிவருகிறது’ என்று நிலைபெற்று நின்றது. அப்போது அவர்கள் குறிப்பிட்ட செய்திகள் வியப்பைத்தான் கொடுத்தன. மதுரையிலிருந்து ஓய்வுபெற்ற அலுவலர் தன்னுடைய ஓய்வூதிய நிதியிலிருந்து இரண்டு லட்ச ரூபாய் அனுப்பி வைத்திருக்கிறார். பள்ளிச் சிறுவர்கள் தங்கள் சேமிப்பிலிருந்து சில நூறு ரூபாய் நன்கொடை அளித்துள்ளனர். அதையெல்லாம்விட, சிறைக் கைதி ஒருவர் தான் சிறையில் தச்சுவேலை செய்து சேகரித்த பணத்தை ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைக்க அனுப்பி வைத்திருக்கிறார். ஊர்கூடி வடம் பிடித்த உணர்வுதான் இது.

அயலகம் தற்போது வழிகாட்டத் தொடங்கியிருக்கிறது. உலகின் 70 நாடுகளில் 45 லட்சம் தமிழர்கள் புலம்பெயர்ந்து வசிக்கிறார்கள். அலாஸ்கா முதல் நியூசிலாந்து வரை உலகெங்கும் தமிழர்கள் பரவியிருக்கிறார்கள். சூரியன் மறையாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் என்பார்கள். இன்று ‘கதிரவன் மறையாத தமிழ்ப்புலம்’ என்பதும் பொருத்தமே. பறவைகள் வலசை போவது போலத்தான். கூந்தன்குளத்தில் இருந்து கிளம்பும் வரித்தலை வாத்து, பனி உறையும் இமயமலையைக் கடந்து மங்கோலியா சென்றுசேர்கிறது. நம் கண்ணில் அடிக்கடி தென்படும் வாலாட்டுக்குருவி ஒவ்வோர் ஆண்டும் ரஷ்யா சென்று திரும்புகிறது. தமிழரும் அப்படித்தான். பொருள்தேடி உலகைச் சுற்றி வந்தாலும் அவர்களின் நினைவுகள் மட்டும் தமிழ்நாட்டின் திசைநோக்கியே பயணம் செய்கின்றன.

சங்க இலக்கியம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்திணைகளை அடையாளம் காட்டுகிறது. ஆனால் புலம் பெயர்ந்த தமிழரோ புதிதாய் பனியும், பனி சார்ந்த நிலத்தையும் கண்டு அடைந்துள்ளனர். உறைபனியில் உருவாகும் தமிழ் மரபு. கடல் கடந்து கரைபுரளும் வண்ணத் தமிழ்க் கனவுகள். உலக அரங்கில் ஓங்கி ஒலிக்கும் தமிழ்ப்பெருமிதம்.

ஆம். அயலகம் தமிழின் ஆறாம் திணை!

- நடை பயில்வோம்...

சபைக் குறிப்பு-உதயச்சந்திரன்

புலம்பெயர் இலக்கியத்தில் ஈழத்துப் படைப்புகளுக்குச் சிறப்பிடம் உண்டு. உயிருக்குயிராய் நேசித்த உறவுகளின் இழப்பு, இடம்பெயர்தலின் வலி, இன்று மீண்டெழுந்து வரும் இளைய தலைமுறை என அனைத்தும் இடம்பெற்று நம் மனசாட்சியை நிரந்தரமாக உறுத்தும் வல்லமை கொண்டவை. ஈழத்துப் படைப்பாளிகளில் அ.முத்துலிங்கம், சேரன் மற்றும் வ.ஐ.ச. ஜெயபாலன் ஆகியோரின் படைப்புகள் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானவை. 11-ம் வகுப்பு தமிழ்ப்பாட நூலில் இடம்பெற்ற வ.ஐ.ச.ஜெயபாலனின் கவிதையை இன்று படித்தாலும் மனம் பதறுகிறது.

         ‘யாழ் நகரில் என் பையன்

         கொழும்பில் என் பெண்டாட்டி

         வன்னியில் என் தந்தை

         தள்ளாத வயதினிலே

         தமிழ்நாட்டில் என் அம்மா

         சுற்றம் பிராங்க்பர்ட்டில்

         ஒரு சகோதரியோ பிரான்ஸ் நாட்டில்

         நானோ

         வழிதவறி அலாஸ்கா

         வந்துவிட்ட ஒட்டகம்போல்

         ஓஸ்லோவில்.’

- உதயச்சந்திரன்