
ஓவியம்: டிராட்ஸ்கி மருது
மூன்று வருடங்களுக்கு முன் ஒரு வெள்ளிக்கிழமை காலை. கோவை செல்லும் விமானத்திற்குள் வழக்கம்போலவே கடைசி விநாடியில் நுழைகிறேன். இருக்கையைத் தேடி நகர்வதற்குள் என் பெயர் சொல்லி விமானத்திற்குள் ஆங்காங்கே குரல்கள் எழுகின்றன. சிலரை அடையாளம் தெரிகிறது. சிலர் முகங்கள் நிழலாய் மனதில் இருக்கின்றன. எல்லோரும் என் கல்லூரித் தோழர்கள்.

பொறியியல் படிப்பை முடித்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாட ஈரோடு சென்றுகொண்டிருக்கிறோம். விமானத்தைவிட வேகமாகக் கல்லூரியை நோக்கி விரைகின்றன நினைவுகள். கல்லூரி வளாகத்தில் மெல்லத் தவழ்ந்து, வசந்தகாலத்தை நுகர்ந்திட்ட நினைவலைகள் எங்களை வரவேற்கத் தயாராகி நிற்கின்றன.
25 வருடங்களில் எத்தனை மாற்றங்கள்? வகுப்பின் கடைசி வரிசையில் அமர்ந்திருந்தவர்கள் வாழ்வில் வெற்றிவாகை சூடியது; குக்கிராமத்தில் இருந்து முகிழ்ந்த முதல் தலைமுறைப் பட்டதாரிகள் தொழில்நுட்பக்கரம் பற்றி உலகை வலம் வந்தது; பெற்றோர் பாதுகாப்பைத் தாண்டி, தயக்கத்துடன் அடியெடுத்து வைத்த பெண்கள் இன்று பன்னாட்டு வங்கிகளில் உயர்பதவிகள் வகிப்பது; கடும் எதிர்ப்புகளைக் கடந்து சிலர் காதலித்துக் கரம் பற்றிக்கொண்டது; முதலில் அம்பெய்வது யாரென்ற தயக்கத்தில் சிலர் வாய்ப்பைத் தவற விட்டதென, கல்லூரிவளாகத்தில் நினைவலைகள் ததும்புகின்றன.

நட்பு, விரோதம், கிரிக்கெட், கவிதை, பட்டப்பெயர் என்று இலக்கற்ற நீண்ட பேச்சு இறுதியில் என்னைச் சுற்றி மையம் கொள்கிறது. மூன்றாம் ஆண்டு மாணவர் விடுதியில் என்னுடைய அறைக் கதவில் எழுதப்பட்டிருந்த வாசகத்தை நினைவுபடுத்துகிறான் நண்பன் ஒருவன். அத்தனை பேர் முகத்திலும் புன்னகை, பெருமிதம்.
ப்ளஸ் டூ முடித்தபின் தொழில்நுட்ப அலையில் அடித்துச் செல்லப்பட்டுப் பொறியியல் கல்லூரியில் கரையேறிய நபர் நான். மூன்றாம் செமஸ்டரிலேயே பொறியியல் எனக்கான இடம் இல்லை என்பதை உணர்ந்துவிட்டேன். சிவில் சர்வீசஸ் தேர்வுகளே இலக்கென முடிவெடுத்தபோது நண்பர்களும் உறவினர்களும் சற்று அதிர்ந்துதான் போனார்கள். நண்பர்கள், Digital Signal Processing, Acoustics என்று விழுந்து விழுந்து படித்துக்கொண்டிருந்தபோது, நான் இந்திய அரசியலமைப்புச் சட்டம், நவீன இந்திய வரலாறு என்று வேறொரு திசையில் பயணித்துக்கொண்டிருந்தேன். தமிழ் இலக்கியப் பேரவை, போட்டிகள், பரிசுகள், அரசியல் விவாதம் எனச் சுற்றிக்கொண்டிருந்த என் நடை உடை பாவனைகளை வைத்து நண்பர்கள் அறைக்கதவில் செதுக்கி வைத்த பெயர், ‘ஜில்லா கலெக்டர்.’ சீண்டலுக்காக வைத்த பெயர், சில நாள்களில் என்னை உற்சாகம் கொள்ள வைக்கும் வாசகமாக மாறிப்போனது. என் திறமைமேல் என்னைவிட என் நண்பர்களுக்கு அதிக நம்பிக்கை.
பொறியியல் படிப்பை முடித்த கையோடு, சென்னை, அண்ணா நகர் அரசுப் பயிற்சி நிலையத்தில் சேர்ந்துவிட்டேன். ஆனால், அங்கு சுற்றிலும் ஒரே அவநம்பிக்கைச் சூழல். 90களின் முற்பகுதி அது. தமிழகத்திலிருந்து ஏன் அதிகம் பேர் ஐ.ஏ.எஸ் தேர்வுகளில் வெற்றிபெறுவது இல்லை என நாளிதழ்களின் நடுப்பக்கக் கட்டுரைகள் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தன. இறையன்பும், அவரின் சகோதரர் திருப்புகழும் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றிபெற்றது போன்ற சில செய்திகள் மட்டும் மனதின் ஓரத்தில் வெளிச்சம் தூவும்.
கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும்போதே சிவில் சர்வீசஸுக்கான முதல்நிலைத் தேர்வில் Sociology, முதன்மைத் தேர்வில் Anthropology மற்றும் தமிழ் இலக்கியத்தையே விருப்பப்பாடமாகத் தேர்வுசெய்வதெனத் தீர்மானித்துவிட்டேன். என் முன்தயாரிப்பு வேகத்தைக் கண்டு, என்னை சற்று விநோதமான ஜந்துபோலவே அருகில் இருந்தவர்கள் பார்த்திருக்கக்கூடும். தினந்தோறும் பயிற்சி வகுப்புகளுக்கு வரமுடியாது. வாரந்தோறும் நடக்கும் இரண்டுமணிநேரத் தேர்வை 40 நிமிடங்களுக்குள் முடிக்க முயல்வேன். நள்ளிரவு தாண்டியும் தொலைக்காட்சியில் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியைப் பார்த்துக்கொண்டிருப்பேன். வகுப்பில் கொஞ்சம் மரபுமீறல்களையும் அனுமதித்த பயிற்சி மையத்தின் ஆசிரியர்களும் அலுவலர்களும் நன்றிக்குரியவர்கள்.

உடன் படித்தவர்களெல்லாம் தமிழாசிரியரிடம் டியூசன் போய்க்கொண்டிருக்க, நானோ கோபி கலைக்கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர் அரங்கசாமியிடம் சங்க இலக்கியம், திருக்குறள், மனோன்மணீயம் குறித்த விளக்கம்; அப்போது சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டிருந்த பெருமாள் முருகன் உதவியுடன் நவீனத் தமிழ் இலக்கியத் திறனாய்வு என்று என் பயணம் நீண்டுகொண்டிருந்தது. டெல்லியில் இருந்தால் மட்டுமே போட்டித் தேர்வுகளில் வெற்றிபெறமுடியும் என்று நம்பப்பட்ட காலத்தில், சென்னையிலிருந்துகொண்டே வெற்றிபெறுவேன் என வலம்வந்ததை அசட்டு தைரியம் என்று சொல்வதா, அசாத்திய தன்னம்பிக்கை என்று பெருமிதம் கொள்வதா... தெரியவில்லை. ஆனால் எந்தவித வழிகாட்டுதலும் இல்லாமல், சுற்றிலும் அவநம்பிக்கை சார்ந்த சூழலிலும் உறுதியாய் அடியெடுத்து வைத்த அந்த 22 வயது இளைஞனைத் திரும்பிப் பார்த்தால் எனக்கே இன்று பொறாமையாகத்தான் இருக்கிறது.
சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் சொல்லிச் சொல்லி மாய்ந்திட ஓராயிரம் வெற்றிக்கதைகள் உண்டு. கடந்த இருநூறு ஆண்டுகளுக்கு மேல் அதிகார வர்க்கத்தின் மேல் காதல் கொண்டு ஆயிரக்கணக்கான மாணவர்கள் படையெடுக்க, கலெக்டர் பதவியின் மதிப்பும், காவல்துறை அதிகாரியின் மிடுக்கும்தான் முதன்மைக் காரணம். ‘யாரெல்லாம் இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்து வெற்றிபெறமுடியும்’ என்று நிறையபேர் கேள்வி கேட்பதுண்டு. சமூகத்தில் நடக்கும் அவலங்கள் குறித்துக் கவலைப்படுவதோடு அதுபற்றி அவ்வப்போது கொஞ்சம் ரௌத்திரம் பழகும் நபர்கள் வெற்றிபெற வாய்ப்புகள் அதிகம்.
நான் இராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த தருணம். முதுகுளத்தூருக்கு அருகே கீழத்தூவல் கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்ட நூலகத் திறப்பு விழாவுக்கு என்னை அழைக்க சிலர் வந்தார்கள். சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க எதையும் சந்தேகக் கண்ணோடு பார்த்துப் பழகிய கண்களுக்கு இது பசுமை போர்த்திய அழைப்பு. ஒரு காலகட்டத்தில் வன்முறை நிழலாடிய இடத்தில் இன்று நூறு பூக்கள் மலர்ந்திட ஒரு வாய்ப்பு. உடனே ஒப்புக்கொண்டேன். பத்து நாள்கள் கழித்து விழா. மேடையில் பேசிய அத்தனை பேரும் புதிதாய்க் கட்டப்பட்ட நூலகத்தைப் பற்றிப் பேசுவதை விட்டுவிட்டு, கீழத்தூவல் கிராமத்தில் பொது சுகாதார மையத்தில் பணியாற்றும் டாக்டர் ஒருவரைப் பற்றிப் புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
எனக்கோ ஆச்சர்யம். விழா முடிந்தபின் அந்த டாக்டரைப் பார்க்க, கீழத்தூவல் சுகாதார மையத்திற்குச் சென்றேன். சுகாதார மையத்துக்கு அருகிலேயே அவர் தங்கும் அறை. அந்த மாலை நேரத்திலும் நோயாளிகள் கூட்டம். ‘மிகக் கனிவான மருத்துவர்’ என்றும், ‘அவர் தொட்டுப் பார்த்தாலே நோய் பறந்துவிடும்’ என்றும் பேசிக் கொள்கிறார்கள். மருத்துவர் மிகவும் இளைஞராக இருந்தார். ‘கடலாடி, சாயல்குடிப் பகுதிகளிலிருந் தெல்லாம் நோயாளிகள் வருவதாகவும், சுகாதார மையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் சொன்னார். ‘இவ்வளவு பின்தங்கிய பகுதிக்கு நிர்வாகத்தால் தரமான குடிநீர்கூட வழங்க முடியாதா? இவ்வளவு சுகாதாரக்கேட்டிற்குக் காரணமே தரமற்ற குடிநீர்தான்’ என்றார். மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தப்போகும் புதிய திட்டங்கள் குறித்து விளக்கினேன். ஆனால் அந்த இளைஞருக்கு நம்பிக்கை பிறக்கவில்லை. நான் விடைபெறும்வரை, ரௌத்திரத்தால் சிவந்த அவர் முகம் மாறவே இல்லை.
அடுத்த சில வாரங்களில் கீழத்தூவல் சுகாதார மையத்தின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டன. அடுத்தடுத்து, நரிப்பையூர் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் கடல் நீரையும் காவிரி நீரையும் சுத்திகரித்து தரமான குடிநீர் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது நடந்து பல ஆண்டுகளுக்குப் பின்னால், ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது ‘அழைக்கலாமா’ என்று என் அலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. பேசிய நபர், ‘தன் பெயர் இராஜமார்த்தாண்டன்’ என்றும், ‘இந்தியாவின் வடகிழக்கு மாநிலம் ஒன்றில் ஐ.பி.எஸ் அதிகாரியாகப் பணிபுரிவதாகவும்’ கூறினார். அவர் அடுத்துச் சொன்னதுதான் இன்ப அதிர்ச்சி. ‘கீழத்தூவல் கிராமத்தில் மருத்துவராகப் பணியாற்றும்போது உங்களைச் சந்தித்திருக்கிறேன்’ என்றார். கீழத்தூவலில் அன்று ரௌத்திரம் பழகியவர் இன்று வடகிழக்கில் மனிதநேயம் பழகுகிறார்.
‘குடிமைப்பணித் தேர்வுகளில் வெற்றிபெற ஏதேனும் சிறப்பு வழிமுறைகள் உண்டா’ என்ற கேள்வியைப் பலமுறை எதிர்கொண்டதுண்டு. பத்து லட்சம் பேர் பங்குபெறும் ஒரு தேர்வில் வெற்றிபெற, இதுதான் சிறந்த வழி என்று யாராலும் உறுதியாகக் கூறிட முடியாது. எனினும் எளிமையான சில அடிப்படை விஷயங்கள் மிக அவசியம். ‘பொது அறிவுக் கேள்விகளுக்கு, தேர்வுக்கு முதல் நாள் படித்து பதில் எழுத முடியுமா’ என்றால், ‘முடியவே முடியாது’ என்பேன். பொது அறிவு, நாட்டு நடப்புச் செய்திகளின் அலசல், சமூக அரசியல் நிகழ்வுகள் குறித்த விவாதங்கள் எல்லாமும் ஒரு மாணவரின் அன்றாட வாழ்வின் இயல்பாய் இணைந்துவந்தால் அதுதான் வெற்றிக்கான முதற்படி.

அடுத்து, தன்னுடைய பலம், பலவீனம் குறித்துத் தெளிவாகப் புரிந்துவைத்திருக்க வேண்டும். பொறியியல் படித்தவர் பொருளாதாரம் குறித்தும், வரலாறு பயின்றவர் அறிவியல் தொழில்நுட்பம் குறித்தும் அதிக கவனம் செலுத்தவேண்டும். முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வுகளில் அகல உழுதலும், பின் ஆழ உழுவதும் உத்தமம் என்ற தெளிவு அவசியம். மற்றவர்களிடமிருந்து தனித்துத் தெரிவதுதான் போட்டித் தேர்வுகளில் வெற்றி ஒருவரை நெருங்குவதற்கான முன்னறிவிப்பு. ‘Winners either do different things or they do things differently.’
போட்டித்தேர்வுச்சூழல் ஒருவிதமான ‘கனவுத் தொழிற்சாலை’ என்றும், வென்றவர்களைச் சுற்றி வரும் புகழ் வெளிச்சம், வெற்றிவாய்ப்பை இழந்தவர்களின் வலியை இருட்டடிப்பு செய்துவிடுகிறது என்றும் விமர்சனம் உண்டு. உண்மைதான்... சில நேரங்களில் இவ்வளவு திறமையான நபர்கள் எப்படி வெற்றிபெறாமல் போனார்கள் என்று வியக்கும் அளவிற்குப் பல துடிப்பான நபர்களைச் சந்தித்திருக்கிறேன். தன்னுடைய தந்தை யுகாந்தார், ஒரு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்தபோதிலும் அந்தத் துறையைத் தேர்ந்தெடுக்காமல், ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வை எழுதித் தேர்ச்சி பெறாவிட்டாலும் மணிப்பால் பொறியியல் கல்லூரியில் படித்து இன்று மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலராகப் பணியாற்றும் சத்யா நாதெள்ளா மிகச் சிறந்த உதாரணம். இவ்வளவு ஏன்? ஐ.ஏ.எஸ் பணியிலிருந்து பதவிவிலகி, பொது வாழ்வில் சாதனை புரிந்தவர்களும் உண்டு. தகவல் அறியும் உரிமைச் சட்டம் இயற்றக் காரணமாக இருந்த அருணா ராய், முசௌரியில் கைரிக்ஷா இழுக்கும் அவலத்தை ஒழித்து, இன்றும் சிறுபான்மையினர் நலன் காக்கப் போராடிவரும் ஹர்ஷ் மந்தர் எனப் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.
ஐ.ஏ.எஸ் கனவு, செல்வந்தர்களுக்கும், நுனி நாக்கு ஆங்கிலம் தவழும் நபர்களுக்கும் மட்டும் உரித்தானதா? இல்லை! நாட்டின் கடைக்கோடி கிராமங்களிலிருந்து புறப்பட்ட பலர், சிகரம் தொட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் பல வெற்றிக் கதைகள் உண்டு. இறையன்பு, திருப்புகழ் என்று தன் இரு புதல்வர்களுக்கும் அழகிய தமிழ்ப்பெயர் சூட்டி, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக்கி உலவச்செய்த பெற்றோர், சேலத்தில் பணியாற்றிய அரசுப்பள்ளி ஆசிரியர்கள். இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப்படிப்பில் தமிழ் இலக்கியம் படித்து, முழுக்க முழுக்கத் தமிழிலேயே ஐ.ஏ.எஸ் தேர்வெழுதி வெற்றிபெற்ற பாலகிருஷ்ணன், இன்று ஒடிசா மாநிலம் கொண்டாடும் சிறந்த ஆளுமை. கற்றல் குறைபாடு காரணமாக பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்தி, தடை பல கடந்து இன்று வருமானவரித்துறை அதிகாரியாக வலம் வருபவர், நந்தகுமார். மதுரை மாநகராட்சியின் கடைநிலை ஊழியரின் மகன் வீரபாண்டியன், இன்று கர்னூல் மாவட்ட கலெக்டர். தந்தை அகால மரணமடைந்தபின் படிப்பைத் தொடரமுடியாமல் தொலைநிலைக் கல்வி மூலம் பட்டம் பயின்ற இளம்பகவத், இன்று சாதிக்கத் துடிக்கும் ஒரு சப்-கலெக்டர். படிக்கும்போதும் துரத்திய வறுமையை வென்றிட மொபைல் ரீசார்ஜ் செய்திடும் கடையில் பகுதி நேர வேலை பார்த்த சிவகுரு பிரபாகரன் இன்று திருநெல்வேலியில் இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக, புத்தகக்காட்சியை ஒருங்கிணைத்து மாணவர்களுக்குப் புத்துயிர் ஊட்டுகிறார். ஒரு எளிய குடும்பத்தில் வாகன ஓட்டுநரின் மகளாகப் பிறந்த வான்மதி, இன்று மகாராஷ்டிர மாநிலத்தில் ஊரக வளர்ச்சிக்கு வழிகாட்டுகிறார்.
நிதானமாக யோசித்து உங்கள் இலக்கைத் தீர்மானித்துக்கொண்டால், இந்தப் பிரபஞ்சம் உங்கள் கனவை நிறைவேற்றிட எதையும் செய்யும்.
கடுமையான உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கையோடு முன்னேறி வரும் எவருக்கும் வழி விடக் காத்திருக்கிறது யமுனை நதி!
- நடை பயில்வோம்...
சபைக் குறிப்பு
இந்திய அதிகாரவர்க்கம் எப்படிச் செயல்படுகிறது என்று தெரிந்துகொள்ள இந்த நூல்கள் உங்களுக்கு உதவக்கூடும்.
கோப்புகள் நகரும் வேகம், கொள்கை முடிவுகள் எடுக்கப்படும் விதம் எனக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லும் புத்தகம். Everything You Ever Wanted to Know about Bureaucracy But Were Afraid to Ask by T.R. Raghunandan

இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள் சந்திக்கும் சவால்கள், நிறைவேற்ற வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்துப் பேசும் நூல் What Ails the IAS and Why It Fails to Deliver: An Insider’s View by Naresh Chandra Saxena


இந்திய அதிகார வர்க்கத்துக்குள் நடக்கும் பதவி நாற்காலியை நோக்கிய பயணங்கள், அதற்குக் கையாளப்படும் வழிமுறைகள் குறித்து நகைச்சுவை மிளிர எழுதப்பட்ட நூல் - Bureaucrazy Gets Craizer: IAS Unmasked by M.K.Law
-உதயச்சந்திரன்