மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாபெரும் சபைதனில் - 23

மாபெரும் சபைதனில்
பிரீமியம் ஸ்டோரி
News
மாபெரும் சபைதனில்

தென்னிந்தியாவின் பண்பாட்டு அடையாளங்களை ஒரே இடத்தில்

விருந்தினர்களை வரவேற்று உபசரிப்பதில் அரசு எந்திரத்துக்கு அலாதி பிரியம் உண்டு. தேவைக்கும் அதிகமான பணிவு, பன்மொழித் திறமை, விருந்தினரின் விருப்புவெறுப்புகளை நொடிப்பொழுதில் உணரும் ஏழாம் அறிவு கொண்ட அலுவலர்கள் எப்போதும் தயார் நிலையில் இருப்பார்கள். அதுவும் தலைநகர் டெல்லியிலிருந்து சென்னைக்கு வரும் உயர் அலுவலர்களுக்கான பயணத்திட்டம், குழப்பமில்லாமல் உடனடியாகத் தயாராகிவிடும். விமான நிலையத்திற்கு அருகே சுகாதார வளாகம், செங்கல்பட்டில் சுய உதவிக்குழு தொழிற்கூடம், சாலை மேம்பாட்டுத் திட்டங்களைப் பார்வையிட்டு, காஞ்சிபுரத்தில் மதிய உணவு... பின் வாய்ப்பிருந்தால் ஆன்மிகச் சுற்றுலா... கூடவே, சகாய விலையில் பட்டாடைகள் குறித்த விசாரிப்புகள்.

ஓர் உயர்நிலைக் குழுவுடன் சில ஆண்டுகளுக்கு முன் நான் பயணம் செய்ய நேர்ந்தது. இரண்டுநாள் பயணத்தில், சில மணி நேரமேனும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள ஒரு கலை அருங்காட்சியகத்துக்குச் போய்வர வேண்டும் என்று குழுவினர் விரும்பினர். அதற்கேற்ப பயணத்திட்டம் சற்றே நெகிழ்ந்து கொடுத்தது. தென்னிந்தியாவின் பண்பாட்டு அடையாளங்களை ஒரே இடத்தில் காண முடிந்ததில் குழுவினருக்கு மிகுந்த மகிழ்ச்சி. செட்டிநாட்டு வீட்டின் அமைப்பு, அய்யனார் கோயில், கர்நாடக நெசவாளர் இல்லம், கதகளி நடனம், ஆந்திர உணவு என மூழ்கிப்போனார்கள்.

மாபெரும் சபைதனில்
மாபெரும் சபைதனில்

திருநெல்வேலி அக்ரஹாரத்தை அச்செடுத்தாற்போல அமைக்கப்பட்ட வீதியில் நடக்கத் தொடங்கினோம். விசாலமான ஒரு வீட்டுத் திண்ணையின் முன்னால் கூட்டம் குழுமியிருக்கிறது. அவ்வப்போது கரவொலியும் ஆரவாரமும் விட்டுவிட்டுக் கேட்கின்றன. நெருங்கிப் பார்த்தால் கிளி ஜோசியர் ஒருபுறமும் கைரேகை பார்ப்பவர் மறுபுறமும் அமர்ந்திருக்கிறார்கள். பார்வையாளர்களில் சிலர் வெளிநாட்டினர். உடன்வந்த உயர் அலுவலர்கள் நொடியில் சிறுவர்களாக மாறிப் போனார்கள். குழுவின் தலைவருக்குத்தான் முதல் மரியாதை... ‘என் பெயர் பரமேஷ்வர்’ என்கிறார்.

‘கண்ணா, வெளியே வா! அய்யாவுக்கு ராசியான சீட்டை எடுத்துப் போடு..!’ - கிளி வெளியேவந்து சுற்றுமுற்றும் பார்க்கிறது. இரண்டு மூன்று சீட்டுகளுக்குப்பின் ஒன்றைக் கையில் கொடுத்துவிட்டு ஜோசியர் தந்த நெல்மணிகளைப் பதம் பார்த்துவிட்டு உள்ளே செல்கிறது. பலத்த பீடிகையோடு சீட்டு பிரிக்கப்படுகிறது. ‘தியான நிலையில் சிவபெருமான்...’ அவ்வளவுதான். நம் உயர் அலுவலர் காலணிகளைக் கழற்றிவிட்டு பயபக்தியுடன் நின்றார். ‘இன்னும் சில மாதங்களில் நல்ல காலம் பிறக்க இருப்பதாகவும், துன்பங்கள் விலகப்போவதாகவும் ஜோசியர் சொல்ல, இவர் மனதில் விரைவில் வரவிருக்கும் பதவியுயர்வு நிழலாட, மனிதர் பறக்க ஆரம்பிக்கிறார். காணிக்கை 40 ரூபாய் என்றால் அவரால் நம்பவே முடியவில்லை. இதைப் பார்த்து உடன் வந்திருந்த மற்றொரு பெண் அலுவலருக்கும் ஆர்வம் தொற்றிக்கொண்டது. நடமாடும் நகைக்கடையாக நிற்கும் அவர், தன் பெயரைச் சொல்கிறார். இம்முறை கிளி ஆர்வத்துடன் முன்வருகிறது. வந்தது, திருப்பதி பாலாஜி! அவருக்கு மெய்சிலிர்க்கிறது. இந்தச் சிலிர்ப்பான காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்த சில வெளிநாட்டினரும் கிளி ஜோசியம் பார்க்க முன்வருகின்றனர். ஒருவர் தன் பெயர் ஜோசப் என்கிறார். கிளி தயங்கியபடியே வந்து ஒரு சீட்டைக் கவ்வி எடுத்துப்போடுகிறது. பிரித்துப் பார்த்தால் இயேசுநாதர்! அதிசயித்து நின்றவர்மீது துல்லியத் தாக்குதல் ஒன்றைத் தொடுக்கிறார் கிளி ஜோசியர். ‘துணையைத் தேடுவதில் அல்லது தக்க வைப்பதில் சிக்கல் உங்களுக்கு இருந்துகொண்டே இருக்கும். மூன்று மாதம் கழித்து நல்ல சேதி வரும். கவலை வேண்டாம்’ என்கிறார். அருகிலிருந்தவர் மொழிபெயர்த்துச் சொன்ன நொடியில், ஜோசப் ஜோசியரைக் கட்டியணைக்க, கூட்டம் ஆரவாரிக்கிறது. அடுத்து முன்வந்தது ஒரு ஜப்பானிய இளம்பெண். அவர் பெயரையும், எந்த நாடு என்பதையும் இருமுறை உறுதிசெய்து கொண்ட ஜோசியரின் அழைப்புக்கு முரண்டு பிடிக்கிறது கிளி. வெளிநாட்டிலிருந்து வந்திருப்பதால் கொஞ்சம் கருணை காட்டிடக் கிளியிடம் விண்ணப்பம் வைக்கிறார் இவர். பல சீட்டுகளைக் கலைத்துப் போட்டு, இறுதியில் ஒன்றை எடுக்கிறது கிளி. பிரித்துப் பார்த்தால், போதி மரத்தடியில் புத்தர் அமர்ந்திருக்கிறார். அந்தப் பெண் உருகி முழங்காலிட்டு அமர்ந்துவிட்டார். கிளி ஜோசியரோ பெருமிதத்துடன், அந்தப் பெண்ணின் பெற்றோர் நல்வினைப்பயன் கொண்டவர்கள் என்றும் அவருக்கு விரைவில் மனம்போல் திருமணம் நடக்கும் என்றும் சொல்ல, தன்மொழிக்கு மாற்றிக்கேட்ட அந்தப் பெண்ணின் முகத்தில் அவ்வளவு வெட்கம்.

பார்த்துப் பார்த்துச் செதுக்கிய பண்பாட்டு அடையாளங்களையும், உயிரைக்கொடுத்து நிகழ்த்தப்பட்ட நாட்டுப்புறக் கலைகளின் சிறப்பையும் மறந்துபோய் கிளி ஜோசிய மகிழ்ச்சியில் மயங்கிப்போனார்கள் அனைவரும். வரும் வழியெங்கும் அதைப் பற்றியே பேச்சு. குழுவின் தலைவர் என்னைப் பார்த்துக் கேட்கிறார். ‘இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ நான் சொன்னேன் ‘கிளி பாவம்! ஆனால் ஜோசியர் திறமையானவர்’ என்று.

‘நீங்கள் சொல்வது புரியவில்லை’ என்கிறார் தலைவர். ‘கூண்டிலிருந்து வெளியே வரும் கிளியை ஜோசியரின் கைவிரல்கள் ஆட்டுவிக்கின்றன. விரல்களின் ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு பொருள். நெல்மணிகள் வீசப்பட்டால் அந்தச் சுற்று முடிந்தது. கிளி எந்தச் சீட்டை எடுப்பது என்பதை ஜோசியரே முடிவு செய்கிறார். வந்திருக்கும் நபரின் நடை, உடை, வயது, வாழ்க்கைத் தரம் குறித்து நொடிப்பொழுதில் எடைபோட்டு அவரவர் மனதைக் கவரும் கடவுளர் உருவங்களைக் காண்பித்து ஆறுதல் வார்த்தைகளைக் கூறி வசீகரிக்கும் ஜோசியரின் திறமை பாராட்டப்படத்தான் வேண்டும்’ என்கிறேன்.

சில நிமிட அமைதிக்குப் பின், ‘இப்படி மாற்றி யோசிக்க எப்போது கற்றுக்கொண்டீர்கள்’ என்றார் பரமேஷ்வர். அது பாராட்டா, குறையா என்று புரியவில்லை. ‘பள்ளியில் படிக்கும்போது சமூகவியல் பாடம் நடத்திய ஆசிரியர் இதை விளக்கிச் சொன்னார்’ என்கிறேன். அதற்குப் பிறகு சென்னை வந்து சேரும்வரை ஆழ்ந்த அமைதிதான்.

மூடநம்பிக்கைகள் பலவிதம். 13-ம் எண் மீதிருக்கும் பயத்தில், உலகெங்கும் பல இடங்களில் அறை எண் 12A என்றே குறிப்பிடுகிறார்கள். கறுப்புப்பூனையும் ஆந்தையும் அபாயத்தின் அறிகுறிகள். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நாஸ்ட்ரடாமஸ் எழுதிய எதிர்காலம் குறித்த கணிப்புகள் அடங்கிய நூல் கடந்த 400 வருடங்களாகப் பல பதிப்புகள் வெளிவந்து விற்றுத் தீர்கிறது. சின்ன வயதில், ஆவிகளுடன் பேசி ஆண்டுத்தேர்வுக்கான வினாத்தாள் கிடைக்குமா என்று நண்பன் ஒருவன் முயன்றது நினைவுக்கு வருகிறது. வால் நட்சத்திரம் வானில் தோன்றினால் அரசியல் வானில் வெற்றிடம் ஏற்படும் என்று நம்புபவர்களும் உண்டு. கிரிக்கெட் விளையாட்டில் 111 ரன்கள் எடுத்திருக்கும் வீரரோ, அணியோ அடுத்து விக்கெட் இழப்பைச் சந்திக்க நேரிடும் என்ற மூடநம்பிக்கைக்குப் பெயர் ‘Nelson.’

ஆசிரியர் குமாரசாமியோடு...
ஆசிரியர் குமாரசாமியோடு...

இதுபோன்ற ஆழ்மனநம்பிக்கைகளுக்கு, எதிர்காலம் குறித்துத் தெரிந்துகொள்ள விரும்பும் மனிதர்களின் தவிப்புதான் அடிப்படை. அதன் நீட்சி தகவல் தொழில்நுட்ப உலகில் எதிரொலித்ததை ஒருமுறை நான் உணரநேர்ந்தது. எட்டாண்டுகளுக்கு முன், பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற ஐ.ஐ.எம் மேலாண்மை நிறுவனத்தில் மின் ஆளுமை குறித்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டேன். அதில் பங்கேற்ற கம்யூட்டர் சயின்ஸ் பேராசிரியர் ஒருவர் சொன்ன செய்தி சுவாரஸ்யமாக இருந்தது.

அது 2012-ம் ஆண்டு. ‘வருகிற நவம்பர் மாத அதிபர் தேர்தலில் ஒபாமா வெற்றி பெறுவதை, ‘வாஷிங்டன் ரெட்ஸ்கின்ஸ்’ என்ற அமெரிக்கக் கால்பந்து அணிதான் முடிவு செய்யும்’ என்றார் பேராசிரியர். நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். ‘அமெரிக்க அதிபர் தேர்தல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நவம்பர் மாத முதல் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும். அந்தத் தேர்தலுக்கு முன்னர், ‘வாஷிங்டன் ரெட்ஸ்கின்ஸ்’ அணி தங்கள் சொந்த மைதானத்தில் கடைசியாக விளையாடிய போட்டியில் வென்றால், அப்போது ஆட்சியிலிருக்கும் கட்சி வெற்றியைத் தக்க வைத்துக்கொள்ளும். தோற்றால் எதிர்க்கட்சி வெற்றிபெறும். கடந்த 76 ஆண்டுகளில், 19 முறை நடந்த ஒவ்வொரு அதிபர் தேர்தலிலும் இந்தக் கணிப்பு வென்றிருக்கிறது’ என்றார் அவர்.

இது எப்படி சாத்தியம்? அடுத்த சில மாதங்கள் இதைச் சுற்றியே நினைவுகள் சுழன்று கொண்டிருந்தன.

நவம்பர் 7-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல். அதற்கு மூன்று நாள்களுக்கு முன்னால் ‘வாஷிங்டன் ரெட்ஸ்கின்ஸ்’ தன் சொந்த மைதானத்தில் ‘கரோலினா பாந்தர்ஸ்’ அணியை எதிர்கொள்கிறது. இது எப்படி என்றால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத் தேர்தலுக்கு முன்னர் சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டியில் கிடைக்கும் வெற்றி/தோல்வி, தமிழ்நாட்டின் தலை யெழுத்தைத் தீர்மானிக்கும் என்பதுபோல. உண்மையில் நாங்கள் பதற்றத்தில் இருந்தோம். நிமிடத்திற்கு ஒரு முறை ஆட்டத்தின் போக்கைக் கவனித்துக்கொண்டிருந்தோம். இறுதியில் வாஷிங்டன் அணி 13-21 என்ற எண்ணிக்கையில் கரோலினா அணியிடம் தோற்றுப்போனது.

என்றால், அப்போது ஆட்சியில் இருக்கும் ஜனநாயகக் கட்சி வெற்றிபெறாது என்பதுதான் கணிப்பு. ஆனால், எங்களுக்குக் கிடைத்த கள நிலவரங் களும் அமெரிக்க நண்பர்களிடமிருந்து வந்த மின்னஞ்சல்களும் வாஷிங்டன் ரெட்ஸ்கின்ஸ் விதிக்கு மாறாகவே இருந்தன. இறுதிக்கட்டப் பிரசாரத்துக்கு இடையே அமெரிக்கத் தொலைக்காட்சிகள்வேறு இந்த விதியை அடிக்கடி ஒளிபரப்பிக்கொண்டிருந்தன. ஒருவழியாக அதிபர் தேர்தல் இரண்டு நாள்கள் கழித்து நடந்தது. இரவு முழுக்கக் கண்விழித்துக் கொண்டிருக்கி றோம் இங்கே. இறுதியில் ஜனநாயகக் கட்சி மீண்டும் வென்றது. ஒபாமா அதிபராகத் தொடர்ந்தது மட்டுமல்ல, 76 ஆண்டுக்கால விநோத நம்பிக்கையையும் தகர்த்தது.

இன்னமும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நினைவுகள் அமெரிக்க மண்ணை நோக்கிச் செல்வதைத் தடுக்க முடியவில்லை. சில மாதங்களுக்கு முன் அமெரிக்கத் தூதரக அதிகாரி ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. இந்தியப் பண்பாடு, மரபுசார் கலைகள் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தோம். உத்திரமேரூர் கல்வெட்டு குறித்து மிகவும் ஆர்வத்துடன் கேட்டறிந்தார். சோழர் காலச் சமூகம் பற்றியும் அப்போதிருந்த வாக்குரிமை பற்றியும் விளக்கிக் கொண்டிருந்தேன் பேச்சு திசை மாறியது. அமெரிக்க அதிபர் தேர்தலில். ‘Iowa’, ‘Nevada’, ‘Super Tuesday’ எனத் தற்போதைய நிலவரம் குறித்து ஆர்வம் மேலிட, கேள்வி மேல் கேள்வியாகக் கேட்க ஆரம்பித்தேன். பதினேழு ஆண்டுகள் பல்வேறு நாடுகளில் பணிபுரிந்த அந்த அதிகாரி விடைபெறும்போது கேட்டார். ‘எப்படி இவ்வளவு ஆர்வம் வந்தது உங்களுக்கு?’ ‘பள்ளியில் படிக்கும் போது சமூகவியல் ஆசிரியர் தூண்டிவிட்டது. இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது’ என்றேன்.

IAS officer Udhayachandran shares his experiences part 23
IAS officer Udhayachandran shares his experiences part 23

உண்மைதான். சமூக அரசியல் நிகழ்வுகள் குறித்த விவாதங்கள் நடத்துமளவுக்குச் சூழல் வீட்டிலேயே எனக்கு அமைந்தது. எனினும் பள்ளி வளாகத்தில் ஆர்வத்தைத் தூண்டிச் செதுக்கியது ஆசிரியர் குமாரசாமிதான். கண்டிப்புக்குப் பேர்போனவர். வரலாறு, புவியியல் பாடங்கள் எடுத்தார். ஆனால் குறித்த காலத்திற்குள் அவர் பாடங்களை முடித்ததே இல்லை. காரணம், வகுப்பின் முதல் 15 நிமிடங்கள் பொது அறிவுக் கேள்விகள்தான். அன்று, குப்தர்களின் ஆட்சிக்காலம் பற்றிப் பாடம் எடுக்கவேண்டி இருக்கும். வந்தவுடன் அவர் கேட்கும் முதல் கேள்வி ‘கியூபாவின் அதிபர் யார்?’ குப்தப் பேரரசில் கியூபா எங்கே இருக்கிறது என்று விழிக்கும் அல்லது முறைக்கும் மாணவர் மத்தியில் ‘பிடல் காஸ்ட்ரோ’ பெயரைப் பெருமிதத்தோடு சொல்லிப் பாராட்டு வாங்குவேன் நான். சற்றுச் சிந்தித்துப் பார்த்தால், அன்றைய நாளிதழின் முதல் பக்கத்தில் அணி சேரா நாடுகளின் உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற்றிருக்கும். அதன் தலைவர் பதவியை கியூப அதிபர் பிடல் காஸ்ட்ரோவிடமிருந்து இந்தியப் பிரதமர் பெற்றுக்கொண்ட செய்தி படத்துடன் வெளியாகியிருக்கும். அதன் பின்னர் பனிப்போர், உலக அரசியலெல்லாம் பேசி பாடப்புத்தகத்தைப் பிரிப்பதற்கும் பாடவேளை முடிவதற்கும் சரியாகியிருக்கும்.

அவரிடம் பாராட்டு பெறுவதற்கென்றே அதிகம் படித்தேன். காலை வணக்கக் கூட்டத்தில் அன்றைய செய்திகளை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அன்று, குமாரசாமி ஆசிரியரிடம் பாராட்டு பெறத் தொடங்கிய ஓட்டம், இன்று அமெரிக்கத் தூதரக அதிகாரியிடம் விவாதிக்கும் அளவுக்கு நீண்டிருக்கிறது.

இந்த வாரத்துக்கான இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும்போது திடீரென்று ஒரு நினைவு. குமாரசாமி சாரிடம் பேசிப் பல மாதங்கள் கடந்துவிட்டதே... அலைபேசியில் தொடர்புகொண்டேன். நீண்டநேரம் கழித்து மறுமுனையில் குரல் பலவீனமாக இருந்தது. நலம் விசாரிக்க எழுந்த வார்த்தைகளை உதடுகள் உடன் தணிக்கை செய்கின்றன. அடையாளம் தெரிந்துகொண்ட மறுமுனையோ அன்புடன் நலம் விசாரிக்கிறது. பேச்சு தடுமாறிக் குழறுகிறது அவருக்கு. புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் பேசமுடியவில்லை. மீண்டும் மீண்டும், ‘நான் நலமா’ என்று கேட்க முயல்கிறார். என்ன சொல்வது..? உடல் நலம், சிகிச்சை முறைகள் குறித்து அவரின் குடும்பத்தினருடன் பேசிவிட்டு அலைபேசியைத் துண்டிக்கிறேன்.

மூட நம்பிக்கைகளை அகற்றித் தெளிவு பெற்றிட, உலக அரசியலைக் கற்றுத் தேர்ந்திட வழிகாட்டிய அந்த வெண்கலக் குரல், நினைவில் இன்னும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அடர்ந்து வளர்ந்த ஆலமரத்தின் மௌனம் கானகமெங்கும் பரவுகிறது. விழித்துக்கொண்ட விழுதுகள் நினைவுகளின் தடம் பற்றித் தாய்மையைத் தழுவ விரைகின்றன.

‘விழுதுகள் தாங்கும் விருட்சம்!’

- நடை பயில்வோம்...

சபைக் குறிப்பு

2016-ல் அமெரிக்க அதிபர் தேர்தலில், ஒரு பெண்மணி வெற்றி பெறுவார் என உலகமே எதிர்பார்த்திருந்தது, ஆனால் முடிவு மாறிப்போனது. ஆனால் அந்தத் தேர்தல் முடிவை ஆலன் லிட்மேன் என்ற அமெரிக்கப் பேராசிரியர் மிகச்சரியாகக் கணித்தார்.

சபைக் குறிப்பு
சபைக் குறிப்பு

லிட்மேன் எழுதியுள்ள புத்தகம் ‘The Keys to the White House.’ அமெரிக்கப் பொருளாதாரம், வெளியுறவுக் கொள்கை, வேட்பாளர்களின் செல்வாக்கு போன்ற எளிமையான 13 கேள்விகளை முன்வைக்கிறது இந்தப் புத்தகம். அவற்றுக்கு, ஆம் / இல்லை என்ற பதிலைப் பொறுத்து, முடிவுகள் மாறும். குறைந்தது 8 கேள்விகளுக்கு சாதகமான பதில்களைப் பெற்றால் ஆட்சியிலிருக்கும் கட்சி வெற்றியைத் தக்க வைக்கும் என்கிறார். ஒரு நாட்டின் பொருளாதார நிலை, நிர்வாகத் திறன், சமூக அமைதி போன்றவைதான் தேர்தல் முடிவைத் தீர்மானிக்கின்றன. கடைசிநேரப் பிரசாரங்களும் விவாதங்களும் உதவாது என்பதுதான் அதன் அடிப்படை அம்சம்.

-உதயச்சந்திரன்