
உலகெங்கும் மருத்துவ ஆராய்ச்சிகள் தொடர்ந்தாலும் இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை...
மதுரை ராஜாஜி மருத்துவமனையைக் கடக்கும்போதெல்லாம் என் நினைவுகள் தவழ்ந்து அங்கிருக்கும் மகப்பேறு மருத்துவ ப் பிரிவிற்குச் செல்லும். 13 ஆண்டுகளுக்கு முன் நடந்த அந்த நிகழ்வு மனதில் விரியும். தென் தமிழகத்திலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்லும் அந்த மருத்துவமனையை மேம்படுத்துவது தொடர்பாக அவ்வப்போது அங்கு சென்று பார்வையிடுவதுண்டு.
ஒருநாள், மதுரை மாநகராட்சியில் ஆய்வுப் பணியை முடித்துவிட்டு, அலுவலகம் செல்லும் வழியில் ராஜாஜி மருத்துவமனைக்குள் நுழைகிறேன். மருத்துவமனை அலுவலர்களிடம் பேசியபடி மகப்பேறு மருத்துவப் பிரிவுக்கு வருகிறேன். அங்கு பெருங்கூட்டம். கர்ப்பிணித் தாய்களைப் பார்க்க வந்த உறவினர்களிடம் அங்கிருந்த காவலர்கள் கையூட்டு கேட்டதாகக் குற்றச்சாட்டு. தவறிழைத்த நபர்கள்மீது அங்கேயே நடவடிக்கை எடுத்துவிட்டு இன்னொரு பிரிவுக்குள் நுழைய முயன்றபோது, சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து அந்தத் தகவல் வந்தது. எட்டே மாதத்தில், மதுரையிலிருந்து ஈரோடு மாவட்டத்துக்கு இடமாறுதல். கனவுகள் சிதைந்து தமிழ்ப் பண்பாட்டின் தலைநகர வீதிகளெங்கும் சிதறிக் கிடக்கின்றன. பெயர்த்து நடப்பட்ட பூஞ்செடியோ புதிதாய்த் துளிர்த்திடப் பெருமுயற்சி மேற்கொள்கிறது. விட்ட இடத்திலேயே தொடரலாம் என்று, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு என் முதல் ஆய்வுப் பயணத்தை அமைத்துக் கொண்டேன்.

அங்கு எனக்கு இன்ப அதிர்ச்சி. பாராட்டும் அளவுக்குச் சுகாதாரம், கனிவான மருத்துவர்கள் எனப் புதிய அனுபவம் ஆடுகளம் மாறியிருப்பதை உணர்ந்து ஆட்டநுணுக்கங்களை மாற்றி, நிலைத்து நின்று விளையாட வேண்டிய தேவை அங்கே. மாவட்டம் எங்கும் மருத்துவமனை களுக்குத் தேவையான புதிய கட்டில்கள், மெத்தைகள், விரிப்புகள் முதல் நீரிழிவு நோயாளிகளுக்கான இலவச டயாலிஸிஸ் சிகிச்சைவரை செயல்படுத்த நன்கொடை திரட்டல், எம்.ஆர்.ஐ ஸ்கேன் எனப் பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. ‘நோய் நாடி நோய் முதல் நாடி’ என வழிநடத்திக் கொண்டிருந்தபோது தான் அந்தச் சம்பவம் நடந்தது.
Also Read
ஒரு திங்கட்கிழமை மாலை... வெகுநேரம்நீண்ட ஆய்வுக் கூட்டங்களை முடித்துவிட்டு, பார்வையாளர்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். இறுதியாக, உதவியாளர் தயக்கத்துடன் உள்ளே வந்து, துணை தாசில்தார் நிலையில் பணியாற்றும் ஒருவர் பெயரைக் குறிப்பிட்டு, பார்க்க விரும்புவதாகக் கூறுகிறார். பெயரைக் கேட்ட உடனே என் முகம் மாறுகிறது. தாராபுரம் பகுதியைச் சேர்ந்தவருக்கு, கடந்த மாதம் நடந்த கலந்தாய்வில் சத்தியமங்கலம் பகுதிக்கு மாறுதல் கிடைத்திருக்கிறது. ‘தாசில்தார், துணை தாசில்தார் பணிகளுக்குக் கெல்லாமா கலந்தாய்வு நடத்துவது’ என்று கலெக்டர்மீது ஆங்காங்கே அதிருப்திகள் இருக்கத்தான் செய்தன. இடமாறுதலில் வெளிப்படைத் தன்மை என்பது, தேவையில்லாப் பரிந்துரைகளை நிராகரிக்க உதவும் செயற்கைக் கவசம் என்பதால் கலந்தாய்வு முறையை அடம்பிடித்துச் செயல்படுத்திக்கொண்டிருந்த காலகட்டம் அது. ‘தன் மகனுடைய மருத்துவ சிகிச்சை தொடர தன் சொந்த ஊரிலேயே பணியாற்ற அனுமதிக்க வேண்டும்’ என்ற அவரது வேண்டுகோள் தொடர்ந்து நிராகரிக்கப்படுகிறது. அவர் பற்றிய நினைவுகள் நிழலாடிக்கொண்டிருக்க, உதவியாளர், ‘இப்போது அவர் தன் மகனோடு வந்திருக்கிறார்’ என்கிறார். ‘சரி, வரச் சொல்லுங்கள்’ என்கிறேன். அவருடைய வழக்கமான கோரிக்கையை நிராகரிக்க இப்போது என்ன சொல்லலாம் என்று வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருக்க, கதவு திறக்கிறது. அந்த அலுவலர் தன் மகனைத் தூக்கமுடியாமல் தாங்கி அணைத்தபடி மெல்ல நடந்து வருகிறார். நிற்கமுடியாமல் தள்ளாடிய மகனின் தோளை இறுக்கமாகப் பற்றுகின்றன அந்தத் தந்தையின் கரங்கள். இயலாமையும், ஏக்கமும் நிறைந்த அந்தப் பிள்ளையின் பார்வையை எதிர்கொள்ள முயன்று தோற்றுப்போகிறேன்.
என் கண்கள் அந்த அலுவலரை நோக்கித் திரும்புகின்றன. அவர் பேசப்பேச, அந்த அறை முழுவதும் துயரம் சூழ்கிறது. ஆமாம்... அந்தச் சிறுவனைத் தாக்கியது ‘Muscular Dystrophy’ எனப்படும் தசைச் சிதைவு நோய். 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அடிக்கடி தடுமாறி விழுவது இந்தக் குறைபாட்டின் முதல் அறிகுறி என்கிறார்கள்.
‘படிகளில் பிடிப்பின்றி ஏறமுடியாமல் கால்கள் வளைந்து போகும். 10-12 வயதில் நிற்கவோ, நடக்கவோ முடியாது. 12-18 வயதில் பிற உறுப்புகளில் நோயின் தாக்கம் தீவிரமடையும். 25-30 வயதுக்கு மேல் உயிர்வாழ்வது கடினம்’ என்றவரின் பேச்சை இடைமறித்து நம்பிக்கையான வார்த்தைகளைச் சொல்கிறேன்.
‘உலகெங்கும் மருத்துவ ஆராய்ச்சி கள் தொடர்ந்தாலும் இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை’ என்று மீண்டும் விரக்தியோடு பேசுகிறார்.
நாற்காலியில் தளர்ந்து போய் அமர்ந்திருந்த அந்தச் சிறுவனைப் பார்க்கிறேன். அவன் கண்களில் அத்தனை வெளிச்சம். ஒரு தனிநபரின் கோரிக்கையில் இருந்து ஒட்டுமொத்தச் சமூகத்திற்கும் பயனளிக்கும் திட்டத்தை உருவாக்குவதுதான் சிறந்த நிர்வாகத்துக்கு அழகு. தசைச்சிதைவு நோய் குறித்து அலசி ஆராய்ந்ததில் சென்னையில் இதற்கென்றே ஒரு அமைப்பு செயல்படுவது தெரியவந்தது. அதில் பணியாற்றும் டாக்டர் லட்சுமி மற்றும் குழுவினரை அழைத்து ஈரோட்டில் மருத்துவ முகாம் நடத்தினோம்.

ஈரோடு மட்டுமன்றி அருகிலிருந்த மாவட்டங் களில் இருந்தெல்லாம் தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வந்திருந்தார்கள். மொத்தம் 110 பேர். எடுத்துக்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள், உடற்பயிற்சிகள், பெற்றோருக்கு ஆலோசனை என மருத்துவ முகாம் விரிவாக வடிவமைக்கப்பட்டிருந்தது. பொதுவாக ஆண் குழந்தைகளை மட்டுமே தாக்கும் இந்நோய் அபூர்வமாகப் பெண் குழந்தைகளையும் பாதிக்கிறது. சேலத்தில் ஒரே குடும்பத்தில் இரு பெண் குழந்தைகள் இந்நோயால் பாதிக்கப்பட்ட செய்தி வெளிவந்து எல்லோரையும் கலங்கவைத்தது. இதுநடந்து சில ஆண்டுகளில், தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாத உதவித்தொகை உள்ளிட்ட பல சிறப்பு நலத்திட்டங் களைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.
‘பெரியவர்கள் பார்வையில் குழந்தைகள் நலன்’ என்ற பாதை மாறி, மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் உலகில் பெரியவர்கள் இடம்பெறுதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய ‘Taare Zameen Par’ திரைப்படம் அந்தத் தருணத்தில்தான் வெளியாகியிருந்தது. அப்படம் பெரும் கவனம் பெற்றது. 12 ஆண்டுகளுக்கு முன் அந்தத் திரைப்படம் தந்த அனுபவத்தைச் சமீபத்தில் மீண்டும் எதிர்கொள்ள நேர்ந்தது.

தனியார் வங்கி ஒன்றில் உயர்பதவி வகிக்கும் நண்பர் ஒருவரிடமிருந்து அவசர அழைப்பு. பதற்றத்துடன் அவர் வீட்டுக்குச் சென்றேன். சோகம் ததும்ப அமர்ந்திருந்தார். அவர் மனைவி அழுகையைக் கட்டுப்படுத்தத் தவித்தார். ஆசுவாசப்படுத்தி ‘என்னவாயிற்று?’ என்று விசாரித்தேன். அப்போதுதான் குழந்தைகள் நல ஆலோசகர் ஒருவரிடம் தங்கள் மகனை அழைத்துச்சென்று திரும்பியிருக்கிறார்கள். பையன், ‘பள்ளிக்குச் செல்ல மாட்டேன்’ என்று அடம்பிடித்திருக்கிறான். சரியாகப் படிப்பதில்லை என்று பள்ளியிலிருந்து தொடர்ந்து புகார்... திடீரென தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதையே உணராமல் அமைதியில் ஆழ்ந்துவிடுகிறான்... எழுதுவதிலும் படிப்பதிலும் தடுமாற்றம்... யாருடனும் பழகாமல் முடங்கிப்போகிறான்...
அத்தனை அறிகுறிகளையும் வைத்து சிறுவனைப் பரிசோதித்த குழந்தைகள் நல ஆலோசகர், அவனை பாதித்திருப்பது `டிஸ்லெக்ஸியா’ என்ற `கற்றல் குறைபாடு’ என்பதைக் கண்டறிந்திருக்கிறார். மருத்துவரின் கணிப்பு பெற்றோருக்கு அதிர்ச்சியளித்தாலும், நண்பரின் மனைவி கதறி அழுததற்கு வேறொரு காரணம். ‘மகனுக்கு இப்படியொரு குறைபாடு இருப்பது தெரியாமல் தினமும் அவனைத் திட்டிவிட்டேனே... இரண்டு முறை இந்தக் கைகளால் அடித்துவிட்டேனே...’ என்று தொடர்ந்த அவருடைய அழுகையை நிறுத்தி ஆறுதல்படுத்த எங்களுக்கு வெகுநேரம் தேவைப்பட்டது.

மெல்லக் கற்கும் மாணவர்களுக்கும், கற்றல் குறைபாடு கொண்ட மாணவர்களுக்கும் நுண்ணிய வேறுபாடு உண்டு. ‘கற்றல் குறைபாடு கொண்டவர்கள் என்பதைவிட, ‘மாற்றுத் திறன் கொண்டவர்கள்’ என்று அவர்களை அழைப்பதே சரி...’ என்கிறார்கள் கல்வியாளர்கள். சில பிள்ளைகளுக்கு எழுதுவதில் சிரமம் இருக்கும். தொடர்ச்சியாக எழுத்துப் பிழைகள்... சிலசமயம் எழுத்துகள் இடம் மாறித் தெரிவதுமுண்டு. சில குழந்தைகளுக்கு எண்கள் சிக்கலாகும். கணிதம் வரவே வராது. சிலருக்கு வரைபடங்களைப் புரிந்துகொள்வது கடினம். சில குழந்தைகளுக்கு அவர்கள் நினைப்பதை முழுமையாகச் சொற்களால் வெளிப்படுத்த முடியாது. ஆனால், இந்தத் தடைகளையெல்லாம் தொடர் முயற்சியால் நிச்சயம் வெல்லமுடியும். அதற்கான வழி, ஒவ்வொரு குழந்தையின் தனித்தேவையையும் அறிந்து கற்பிக்கும் Individual Education Plan. கற்பித்தல் முறையில் சற்று மாற்றம் செய்து, நம்பிக்கை கொடுத்து, முறையான உடற்பயிற்சிகள் செய்தால் அந்தக் குழந்தைகள் இயல்பான குழந்தைகளை விடவும் அதிக உயரம் தொடுவார்கள். ஆனால், நம் வகுப்பறைகள், இந்தக் குழந்தைகளின் பிரச்னைகளையும், தனித்தேவைகளையும் புரிந்துகொள்ளாமல், வழக்கம்போல பக்கம் பக்கமாக எழுதச் சொல்லி, மனப்பாடம் செய்து படிக்கச் சொல்லி, எண்களோடு மல்லுக்கட்ட வைத்து வதைத்துக் கொண்டிருக்கிறது. இந்தச் சித்ரவதை தாங்காமல் இவர்கள் தனித்து விடப்படுகிறார்கள். தாழ்வு மனப்பான்மையில் உழன்று, கற்றல் செயல்பாடுகளிலிருந்து விலகி எதிர்மறைப் பாதையில் வெகுதூரம் சென்றுவிடுகிறார்கள்.
‘கற்றல் குறைபாடு கொண்டவர்கள் என்பதைவிட, ‘மாற்றுத் திறன் கொண்டவர்கள்’ என்று அவர்களை அழைப்பதே சரி...’
ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்திறன் உண்டு என்பதை உணரும் வகுப்பறைச் சூழல்தான் உன்னதமானது. ஓர் அடர்ந்த கானகத்தில் வானரங்களோடு சிங்கம், யானை, ஒட்டகம், முதலையை வரிசையாக நிற்கவைத்து, அனைத்து விலங்குகளையும் மரமேறச்சொல்லி மதிப்பெண் போட முயன்றால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருக்கிறது நம் கல்விச்சூழல். வகுப்பறை, நெகிழ்ந்துகொடுப்பதாக, அனைவரையும் உள்ளடக்கியதாக மாறவேண்டும். இந்தக் கருத்தைத்தான் உலகெங்கும் உள்ள கல்வியாளர்கள் முன்வைக்கிறார்கள். கற்பித்தல் முறையிலும் நிறைய மாற்றங்களை முன்மொழிகிறார்கள் கல்வியியல் நிபுணர்கள்.

‘மழையின் மகத்துவம்’ குறித்துப் பாடம் எடுக்க வேண்டிய ஆசிரியர், பாடப்புத்தகத்தில் உள்ளவற்றைப் படித்து விளக்கினால் மட்டும் போதாது. மழை உருவாகும்விதம் குறித்த நீண்ட வர்ணனை சில குழந்தைகளை ஈர்க்கும். வரைபடங்கள் மூலம் விளக்கிச் சொன்னால்தான் சில பிள்ளைகளுக்குப் புரியும். சிரபுஞ்சியில் பெய்யும் மழை அளவையும், பாலைவனப் பகுதியின் மழை அளவையும் வேறுபடுத்திக் கூறினால் சிலர் கண்கள் விரியக் கேட்பார்கள். மழை பொய்த்ததால் வறட்சியில் வாடும் மக்கள் குறித்து விளக்கினால் சில குழந்தைகள் மனதில் ஆழமாகப் பதியும். சில குழந்தைகளுக்கோ மழை குறித்த பாடலும், நடனமும் மனதுக்கு நெருக்கமாக அமையும்.
தனித்திறன் கொண்ட மாணவர்களைக் கண்டறிவதிலும், கவனமாகக் கையாள்வதிலும் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது. குழந்தைகளின் ஆர்வம் எதை நோக்கிச் செல்கிறது என்பதைக் கவனத்துடன் ஆராய்ந்து, அதற்கேற்ப வாய்ப்புகளை உருவாக்கித் தரவேண்டியது பெற்றோரின் கடமை.
‘டிஸ்லெக்ஸியா’ நிலை கொண்ட குழந்தைகள் என்று அறியப்பட்ட பலர், வாழ்வில் மாபெரும் சாதனையாளர்களாக உயர்ந்திருக்கிறார்கள். இளம்வயதில் ‘Attention deficit hyperactivity disorder’ என்ற கவனச்சிதைவுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு, வகுப்பறையில் கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாகி, பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டான் ஆல்வா என்ற சிறுவன். அந்தச் சிறுவன், பின்னாளில் 1093 கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமை பெற்று, தாமஸ் ஆல்வா எடிசன் என்ற உலகின் ஆகச்சிறந்த விஞ்ஞானியாக உருவானார்.

சிந்தனையாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஓவியர் பிக்காஸோ, திரைப்பட மாமேதை ஸ்டீபன் ஸ்பீல்பெர்க், எழுத்தாளர் அகதா கிறிஸ்டி என இந்தப் பட்டியல் நீளும். ‘Out of Box Thinking’ என்று சொல்லத்தக்க மரபுமீறிய புது இலக்கணம் படைக்க வல்லவர்கள் இவர்கள். அவர்களுடைய தனித்திறன் அறிந்து, அவர்களுடைய மொழி உணர்ந்து, அவர்களின் உலகத்துக்குள் நுழைந்து நம்மை நிலைநிறுத்திக் கொள்வதில் அடங்கியிருக்கிறது நம் வெற்றி.
தசைச்சிதைவு நோயின் பெரும் வலியைச் சுமந்துகொண்டு மற்றவர்களின் நலனுக்காகச் சிந்திக்கும் இரு சகோதரிகளைப் பற்றிய நினைவுகள் என் மனதில் உழன்றுகொண்டே இருக்கின்றன. இவர்களைப் பற்றி சில நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். கடந்தவாரம் அவர்களைத் தொடர்புகொள்ள முயன்றேன்.

வானவன் மாதேவி, இயல் இசை வல்லபி என்று அழகிய தமிழ்ப் பெயர் கொண்ட சகோதரிகள். தொடர்பில் கிடைத்தது இளைய சகோதரி இயல் இசை வல்லபி. அந்தக் கொடிய நோய் வானவன் மாதவியை மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் பறித்துக்கொண்டதாகத் தெரிவித்தார் இயல். உண்மையில், மனம் உடைந்துபோனது எனக்கு. தன் உடல்நிலையும் மோசமாகிவருகிறது என்றார். இருப்பினும் என்னால் முடிந்தவரை தசைச்சிதைவு நோயாளிகளுக்கு உதவி வருவதாகவும் சொன்னார். தமிழக அரசு செயல்படுத்திவரும் நலத்திட்டங்கள், இந்தியாவில் நடைபெற்றுவரும் மருத்துவ ஆராய்ச்சிகள் குறித்தெல்லாம் பேசிக் கொண்டிருந்தோம். பேச்சின் நடுவே, ‘தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சி செய்வது உங்கள் துறைதானே’ என்றார். ‘ஆமாம்’ என்றேன். ‘சக்கர நாற்காலியில் நகர்ந்து கீழடி அகழ்விடத்தை நான் நேரில் பார்க்கச் சிறப்பு ஏற்பாடு செய்யமுடியுமா?’ என்றார். ஒரு கணம் சிலிர்த்துப்போனேன். `இயல் இசை வல்லபியை வரவேற்றுக் கரம்பற்றி உரையாடக் காத்திருக்கிறது கீழடி!’
- நடை பயில்வோம்...
சபைக் குறிப்பு
Theory of Multiple Intelligences - உலக அளவில் கற்பிக்கும் முறைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய நூல். ஹார்வர்டு பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர் ஹோவர்டு கார்ட்னர், 1983-ல் வெளியிட்ட புத்தகம் இன்றுவரை தொடர்ச்சியாக வாசிக்கப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வருகிறது.

மொழிவளம், கணித / தருக்க அறிவு, வரைபட அறிவு, இசையறிவு, உடற்திறன், இயற்கை குறித்த அறிவு, பிறரோடு நெருங்கிப் பழகும் திறன், தனித்து இயங்கும் தலைமைப் பண்பு எனக் குழந்தைகளின் திறனுக்கேற்ப கற்றல் / கற்பித்தல் முறையும், அவர்கள் தேர்ந்தெடுக்கும் துறையும் அமைதல் வேண்டும் என்பதுதான் இந்த நூல் போதிக்கும் அடிப்படை அம்சம்.
-உதயச்சந்திரன்