மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாபெரும் சபைதனில் - 25

மாபெரும் சபைதனில்
பிரீமியம் ஸ்டோரி
News
மாபெரும் சபைதனில்

இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஓர் விழாவில் நான் உச்சரித்த வார்த்தை...

மதுரைப் புத்தகத் திருவிழாவை முடித்துவைத்துவிட்டு முகாம் அலுவலகம் திரும்பி மீண்டும் கோப்புகளுக்குள் மூழ்கியிருந்தேன்.

எதிரில் தொலைக்காட்சியோ விளம்பரங்களுக்கும் செய்திகளுக்கும் நடுவே உண்மையைத் தேடிக்கொண்டிருக்கிறது. தயக்கத்துடன் கதவு திறக்கிறது. உள்ளே நுழைகிறார் முருகேசன். என் வாகன ஓட்டுநர். கையில் சில புத்தகங்கள் இருக்கின்றன. ‘அய்யா! புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கியது’ என்கிறார். வாங்கிப் பார்த்தால் , ‘நாஞ்சில் நாடன் சிறுகதைகள்’, ‘சமணமும் தமிழும்’ போன்ற நூல்கள் இருக்கின்றன. ஆச்சர்யமாக இருந்தது எனக்கு.

‘வந்து நான்கு மாதங்களாகின்றன... இதுவரை உங்கள் வாசிப்பு ஆர்வம் பற்றிச் சொல்லவே இல்லையே’ என்றேன். புன்னகைத்தார். ‘என்னவெல்லாம் படிப்பீர்கள்?’ என்றேன். மதுரையில் சமணம் பரவியது குறித்த நூல்களைத் தேடித்தேடிப் படிப்பதாகச் சொன்னார். மதுரையைச் சுற்றியிருக்கும் திருப்பரங்குன்றம், ஆனைமலை, கீழவளவு, கழுகுமலை பற்றியெல்லாம் செய்திகளை அடுக்கிக்கொண்டே போனார்.

அந்த நாளுக்குப் பிறகு, இலக்கியக் கூட்டங்களில் என் பேச்சைப் பாராட்டவும், சில நேரங்களில் மென்மையாக விமர்சனம் செய்யும் அளவுக்கும் நெருங்கி வந்தார்.

அந்தத் தருணத்தில் மதுரைச் சுற்றுலாவை மேம்படுத்தும்வகையில் நிறைய ஏற்பாடுகளைச் செய்துவந்தோம். பொங்கல் பண்டிகையையொட்டி வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை பழைமையான பகுதிகளுக்கு அழைத்துச்சென்று உபசரிப்பது அதிலொரு திட்டம். அத்திட்டத்தின் ஓர் அங்கமாக, வெளிநாட்டுப் பயணிகளைக் கீழக்குயில்குடி அழைத்துச் செல்லத் திட்டமிட்டோம்.

இதையறிந்ததும் முருகேசனுக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. அந்த ஊரின் சிறப்புகள் பற்றி வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருந்தார். சமண மலை, தீர்த்தங்கரர் சிற்பங்கள், தமிழ் பிராமி கல்வெட்டுகள் என்றெல்லாம் நீண்டது, அவர் பேச்சு. உண்மைதான். வரலாற்றுத் தொன்மையும் அழகியலின் உச்சமும் ஒன்றிணையும் இடம்தான் கீழக்குயில்குடி. ஊரின் எல்லையில் பிரமாண்டமான ஆலமரம். அருகிலொரு அய்யனார் கோயில். அதையொட்டி எழில் கொஞ்சும் தாமரைத் தடாகம். இயற்கை வரைந்த இந்த அழகிய ஓவியத்தில் உறைந்து, மோனத்தவத்தில் ஆழ்ந்திருக்கும் சமணமலை. மூன்று அடுக்குகள் கொண்ட அந்த மலையில் நேமிநாதர், பாசுபதநாதர், மகாவீரர் என எட்டுத் தீர்த்தங்கரர்கள் புடைப்புச் சிற்பங்களாக இருக்கிறார்கள். வற்றாத சுனைப் பள்ளம், பாண்டியன் பராந்தகனின் மனைவி வானவன் மாதேவி பெயரில் அமைந்த பெரும்பள்ளி, சமணப் படுக்கைகள், கல்வெட்டுகள் என அந்தக் கிராமம் ஒரு தொல்லியல் கருவூலமாகவே இருக்கிறது.

பிரிட்டிஷ் காலனிய
ஆதிக்கத்தின் கோர முகம்

இப்படியொரு பேரழகு வாய்ந்த கீழக்குயில்குடிக்கு சோகம் கவிந்த ஒரு நூற்றாண்டு வரலாறு உண்டு. முன்னிருக்கும் வரலாற்றுத் தடங்களை விட்டுவிலகி கிராமத்திற்குள் நுழைந்தால், பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்தின் கோர முகம் தென்படும். ஆண்களை இரவு அடைத்து வைக்க உள்ளூர்ச் சிறைச்சாலை, உடனுக்குடன் தண்டனை வழங்க நீதிமன்றம், மதுரையி லிருந்து விரைந்து வர முதல் மெட்டல் சாலை என பிரிட்டிஷ் நிர்வாகத்தின் இரும்புக் கரங்களின் இடிபாடுகள் இன்றும் காணக் கிடைக்கின்றன. கைரேகைச் சட்டத்தால் தென்தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கீழக்குயில்குடியும் ஒன்று. தனி நபர்களின் மரபுமீறலைப் பொறுப் புணர்வுடனும் கரிசனத்தோடும் அணுகாமல், பிரிட்டிஷ் நிர்வாகம் மொத்த மக்களையும் அவமதித்து மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டவிதம் இருண்ட பக்கங்களாக வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் தங்கள் முன்னோர் பட்ட துன்பங்களை மனதில் ஏந்தியபடியே உலவும் பெரியவர்கள் அந்தக் கிராமத்தில் இன்றும் உள்ளனர்.

கீழக்குயில்குடியில் பொங்கல் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. காலை 11 மணிக்கெல்லாம் அங்கே சென்றடைந்துவிட்டோம். கிராமமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. எல்லையில் இருந்து வெளிநாட்டு விருந்தினர்களை மாட்டு வண்டியில் அழைத்துச் செல்கிறார்கள். சிலர் அய்யனார் சிலையைப் பார்த்து பிரமிக்கிறார்கள். சிலர் தாமரைக் குளத்தின் அழகில் மயங்கிப் போகிறார்கள். நாட்டுப்புறப் பாடல்கள், நடனம், விளையாட்டு என அனைவரது முகங்களிலும் பொங்கி வழியும் உற்சாகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறுகின்றன பொங்கல் பானைகள்.

வெளிநாட்டுப் பயணி களைத் தனித்தனியாக எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். ஐரோப்பாவின் பல நாடுகளிலிருந்து வந்திருக் கிறார்கள். அந்தக் குழுவின் தலைவர், ‘இங்கிலாந்திலிருந்து அதிகம் பேர் வந்திருக்கிறோம்’ என்றார். ‘வரலாறு திருத்தி எழுதப்படுகிறது’ என்று நான் சொன்னதை அவரால் முழுமையாக உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை. நிகழ்ச்சியில், ‘ஓரிரு வார்த்தைகள் கலெக்டர் பேச வேண்டும்’ என்கிறார்கள் விழா அமைப்பாளர்கள்.

மாபெரும் சபைதனில்
மாபெரும் சபைதனில்

கொண்டாட்டங்களின் ஆரவாரத்துக்கு நடுவே, தயக்கத்தோடு பேசத் தொடங்குகிறேன். ‘வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளோடு பொங்கல் விழா கொண்டாட, கீழக்குயில் குடியைத் தேர்வுசெய்யக் காரணம் உங்கள் ஊரின் இயற்கை அழகும், வரலாற்றுச் சிறப்பும் மட்டுமல்ல, இக்கிராம மக்களின் மனதில் நூற்றாண்டுக் கால சோகம் படர்ந்திருக்கிறது; அந்த வரலாற்றின் வடு மறையும் வரை இதுபோன்ற மயிலிறகு வருடல்கள் தொடரும்’ என்று சுருக்கமாகப் பேசி முடித்தேன்.

பொங்கல் விழாவில் ததும்பிய உற்சாகத்தில் நான் பேசிய வார்த்தைகள் காற்றோடு கரைந்துபோயிருக்கும் என்றே நினைத்தேன். ஆனால் நான்கு ஆண்டுகள் கழித்து, நான் பேசிய வார்த்தைகளை நினைவுகளில் சுமந்துகொண்டு ஒருவர் வந்தார்.

சென்னையில் ‘காவல் கோட்டம்’ நூல் வெளியீடு. அந்த விழாவுக்குக் கீழக்குயில்குடி கிராமத்தைச் சேர்ந்த அரிச்சந்திரன் என்பவர் வந்திருந்தார்.

சிறந்த கதைசொல்லி. ‘எப்படி இருக்கிறீர்கள், ஊரில் அனைவரும் நலமா?’ என்றேன். ‘மயிலிறகு வருடல் தொடர்ந்தால் மகிழ்ச்சி’ என்றார். ‘நீங்கள் பொங்கல் விழாவில் பேசிய வார்த்தைகள் இன்றைக்கும் எங்கள் கிராமத்தில் உலவிக்கொண்டி ருக்கின்றன’ என்றார். ஆச்சர்யமாகத்தான் இருந்தது.

இதேபோல இன்னொரு நிகழ்வு. சில ஆண்டுகளுக்கு முன் நீலகிரியிலிருந்து தன் மகளின் திருமண அழைப்பிதழோடு என்னைச் சந்திக்க வந்தார் ஒருவர். மஞ்சூர் கிராமத்தின் சிறு தேயிலை விவசாயச் சங்கத்தின் தலைவர் அவர். ‘முடிந்தால் வருகிறேன்’ என்றேன். ‘இதயம் இடம் மாறிவிட்டதா?’ என்று சொல்லிவிட்டுக் குறும்பாகப் பார்த்தார் அவர். இருவரும் சேர்ந்து சிரித்தோம். இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஓர் விழாவில் நான் உச்சரித்த வார்த்தைகள்.

‘மயிலிறகு வருடல்
தொடர்ந்தால் மகிழ்ச்சி’

உதகமண்டலத்தின் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கத்தில் குழுமியிருந்தோம். நீலகிரி மாவட்டத்தின் சுமார் அறுபதாயிரம் சிறு தேயிலை விவசாயிகளின் பிரதிநிதிகள் நிரம்பியிருக்கிறார்கள். பசுந்தேயிலைக்கு நியாயமான விலை கேட்டு நடந்த போராட்டம்... அதனால் எழுந்த சட்டம், ஒழுங்குப் பிரச்னைகளுக்கு இடையே நடக்கும் கூட்டம் அது. வருவாய்த்துறை, காவல்துறை, தேயிலை வாரியம் என அனைத்துத்துறை அலுவலர்களும் கூடியிருக் கிறார்கள். அரங்கம் முழுவதும் அவநம்பிக்கை சூழ்ந்திருக்கிறது.

பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்த சிந்தனையில் தேயிலை விவசாயிகளும், ஒருவேளை அப்படி நடந்தால் அதைத் தடுப்பது எப்படி என்ற யோசனையில் உயர் அதிகாரிகளும் தனித்தனியே சிந்தித்துக் கொண்டிருந்தார்கள்.

நான் பேச அழைக்கப் படுகிறேன். பசுந்தேயிலையின் தரம், உலகச் சந்தை நிலவரங்கள் பற்றியெல்லாம் பேசினேன். அதையெல்லாம் அலட்சியத்துடன் கேட்டுக் கொண்டிருந்த விவசாயிகள், ‘தமிழக அரசின் புதிய திட்டமான எலெக்ட்ரானிக் தேயிலை ஏல மையம் எப்படிச் செயல்படப்போகிறது’ என்பது பற்றியும் ‘இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகள் பயன்பெறுவது எப்படி’ என்பது பற்றியும் விளக்கியபின் ஒரு வழியாக இறங்கி வந்தார்கள். கூட்டத்திலிருந்த ஒருவர் ‘உங்களைப் போன்ற அலுவலர்களை எப்படி நம்புவது?’ என்று மீண்டும் முதலிலிருந்து தொடங்க முயன்றார். விவசாயிகளையும், எதிரே அமர்ந்திருந்த அலுவலர்களையும் பார்த்து, ‘`இங்கு இருக்கைகள்தான் இடம் மாறியிருக்கின்றன. இதயம் ஒன்றுதான், இனி ஒரே அலைவரிசையில் சிந்திப்போம்’’ என்றேன். அரங்கில் கரவொலி அடங்க வெகுநேரமாயிற்று. போராட்டக்காரர்களை மென்மையான பார்வையாளர்களாக மாற்றுமளவுக்கு காந்தசக்தி கொண்ட வார்த்தைகளா அவை என்ற சந்தேகம் எழுந்தாலும் அந்தச்சூழலுக்குத் தேவையான இதமான சொற்றொடர்கள் அவை என்று புரிந்தது. அந்த வார்த்தைகளை நினைவு படுத்தித்தான் மஞ்சூர் நண்பர் திருமணத்திற்கு அழைத்தார்.

IAS officer Udhayachandran shares his experiences part 25
IAS officer Udhayachandran shares his experiences part 25

கொஞ்சம் ஆழமாக யோசித்துப் பார்த்தால் மக்களின் உணர்வுகளுக்கு வடிவம் கொடுக்கும் வாசகங்கள் காலத்தை வெல்கின்றன. சாமானியரின் மனதைக் கவர நுணுக்கமான புலமை தேவையில்லை. எளிமையான சொற்கள் போதும். அதனால்தான் புதிய கலைச்சொல்லாக்கத்தில்கூட மிக எளிமையான சொற்கள் காலம் கடந்து நிற்கின்றன.

‘மெம்பர்’ என்று ஆங்கிலச் சொல்லுக்கு ‘அங்கத்தினர்’ என்பது சரியான தமிழ்ச்சொல் இல்லை என்று கருதிய பாரதியார், வெகுநேரம் யோசித்து, ‘இப்போதைக்கு ‘உறுப்பாளி’ என்று வைத்துக்கொள்வோம். பிறிதொரு முறை ஆழமாகச் சிந்தித்து முடிவுக்கு வருவோம்’ என்று எழுதியிருக்கிறார். அதுதான் பின்னர் ‘உறுப்பினர்’ என்றானது. அக்கிராசனார், காரியதரிசி, பொக்கிஷதாரர் என்றெல்லாம் அழைக்கப்பட்ட காலத்தைக் கடந்து தலைவர், செயலாளர், பொருளாளர் என எளிமை வழிகாட்ட மொழியின் பயணம் தொடர்கிறது. அதேநேரம், எளிமைக்கு முதன்மை என்றாலும் மொழியின் மரபுசார் செழுமை எங்கும் நீர்த்துவிடுவதில்லை. ‘போலீஸ் ஸ்டேஷன்’ என்பதை ‘டேசன்’ என்றே சிலர் உச்சரிப்பார்கள். அதற்கு அறியாமை காரணம் அல்ல. ‘மெய்யெழுத்து மொழி முதல் வாரா’ என்ற இலக்கண விதி அவர்கள் வாழ்வியலில் இரண்டறக் கலந்திருப்பதுதான். திருப்பெரும்புதூரா, ஸ்ரீபெரும்புதூரா என்றெல்லாம் ஆராய்ச்சியில் இறங்கிவிடாமல் பூந்தமல்லி அருகே பேருந்தில் ஏறிய மூதாட்டி ஒருவர் ‘பெருமந்தூருக்கு ஒரு சீட்டு கொடுப்பா’ என்று நடத்து நரிடம் கேட்பதைப் பார்த்திருக்கிறேன்.

பாமரர் மொழியில் இலக்கணம் மட்டுமல்ல, இலக்கிய நயமும் மிகுந்து இருப்பதை அறிவுலகம் இப்போது ஏற்றுக் கொண்டுள்ளது. காலந்தோறும் மக்கள் பாடிவந்த நாட்டுப்புறப் பாடல்கள் குறித்து இன்றுவரை ஆயிரக்கணக்கான முனைவர் பட்ட ஆய்வுகள் வெளிவந்திருக்கும்.

குழந்தைக்கான தாலாட்டுப் பாடலில் மாமனின் கைகளில் மல்லிகைப்பூச்செண்டைக் கொடுத்தவர்கள், அத்தையின்கைகளில் மட்டும் ஏன் அரளிப்பூச் செண்டைக் கொடுத்தார்கள் என்ற ஒற்றைக் கேள்வியை முன்வைத்து எழுதப்பட்ட மானுடவியல் கட்டுரைகள் உலக அரங்கில் இன்றும் வலம்வருகின்றன. நல்லதங்காளின் பெருந்து யரத்திற்குப் பஞ்சம் மட்டும் காரணமல்ல, மறுக்கப்பட்ட பெண்களுக்கான சொத்துரிமையும்தான் என்பதை உணர்ந்து தமிழ்ச்சமூகம் தன்னைத் திருத்திக்கொள்ள நூறாண்டுகள் பிடித்தன. தமிழ்மொழியில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பழமொழிகள் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழச் சமூகத்தின் மேல்தட்டு மக்கள் மணிப்பிரவாளம், ஆங்கில மொழிக் கலப்பு என அவ்வப்போது வளைந்து கொடுத்தாலும், எளிய சாமானிய மனிதர்களே தமிழ் மொழியைக் காலந்தோறும் உயிர்ப்போடு காப்பாற்றி வருவதை வரலாறு நன்றியோடு பதிவு செய்கிறது.

கரிசல் இலக்கியப் பிதாமகர் கி.ரா சொல்வதைப்போல, பழமொழி என்பது ஒரு கதையின் முடிவு அல்லது நல்ல தொடக்கம்.

அரசவையில் அவ்வப்போது எழும் மாற்றாந்தாய் மனப்பான்மையைவிட, தமிழ் மொழி என்றென்றும் பாதுகாப்பாய் உணருவது சாமானியரின் கரங்களில்தான்.

மாபெரும் காவியங் களைவிடக் கதைப்பாடல் களும், பழமொழிகளும் நம் ஒவ்வொருவர் வாழ்விலும் இணைந்து உறவாடுகின்றன. என் அலுவல் பயணத்தில் அவ்வப்போது விபத்துகளைச் சந்தித்து வீழும்போதெல்லாம் என் அம்மாவிடமிருந்து அலைபேசியில் அடிக்கடி ஒலிக்கும் வாசகம்:

‘செடிகொடிகள் காற்றுக்கு அசைவதுண்டு; கற்பாறைகள் அசைவதில்லை.’

- நடை பயில்வோம்...

சபைக் குறிப்பு

ரு பெரும் மக்கள் திரள் எடுக்கும் முடிவு சரியானதாக இருக்குமா என்ற கேள்வியை முன்வைத்து எழுதப்பட்ட ஒரு புத்தகம் கடந்த 2005-ம் ஆண்டு வெளிவந்து பரபரப்பாக விற்றுத் தீர்ந்தது.

சபைக் குறிப்பு
சபைக் குறிப்பு

The Wisdom of Crowds – James Surowiecki எழுதியது. ஒரு மக்கள் திரளின் கூட்டுச் சிந்தனை, பல நேரங்களில் அந்தத்துறை வல்லுநர்களின் கணிப்பைக் காட்டிலும் துல்லியமானதாகவும், சரியானதாகவும் இருந்திருக்கிறது என்பதே இந்நூலின் வாதம். உலகக் கோப்பையை வெல்லும் அணி, அதிபர் தேர்தலில் வெற்றி பெறப் போகும் வேட்பாளர், பங்குச்சந்தையில் ஏற்றம் காணும் நிறுவனம் எனப் பல எடுத்துக்காட்டுகளை அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட புத்தகம்.

- உதயச்சந்திரன்