மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாபெரும் சபைதனில் - 26

மாபெரும் சபைதனில்
பிரீமியம் ஸ்டோரி
News
மாபெரும் சபைதனில்

சனிக்கிழமை அனுமன் கோயில் நோக்கி பக்தர்கள் கூட்டம். மிதந்து முன்னேறி வருகிறதாம்...

குமாரசாமி ஆசிரியரைச் சந்திப்பதற்காக ஊருக்குச் சென்றிருந்தேன். ஊரே மாறிப்போயிருக்கிறது. ஒவ்வொரு முறை திரும்பி வரும்போதெல்லாம் புதிய மாற்றங்கள்.

பெரு நகரத்திற்கே உரிய வணிகப் பதாகைகள், துரித உணவகம், நவநாகரிக ஆடையகம், மூன்றடுக்கு நகை மாளிகை என நாமக்கல் நகரே புத்தாடை உடுத்தியதுபோல் இருக்கிறது. பாழடைந்து கிடந்த இடத்தில் பசுமையாய் மக்கள் நடைபயில ஒரு பூங்கா. அருகில் அதே பழைமையுடன் நூலகம். அந்தச் சாலையில் கடும் வாகன நெரிசல்.

மாபெரும் சபைதனில்
மாபெரும் சபைதனில்

விசாரித்தால் சனிக்கிழமை அனுமன் கோயில் நோக்கி பக்தர்கள் கூட்டம். மிதந்து முன்னேறி வருகிறோம். நான் படித்த கோட்டைப் பள்ளி வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பில் இடப்புறம் திரும்பினால் அரச மர விநாயகர் புன்னகையோடு அமர்ந்திருக்கிறார். நினைவுகள் சுழலத் தொடங்குகின்றன. நாற்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வு அது. நான்கு மாணவர்கள் அச்சிறு கோயிலுக்குள் நுழைகிறார்கள். சீற்றத்தோடு ஒருவன். பயபக்தியோடு மற்றவர்கள். தன்னுடைய புத்தம் புது பென்சில் பெட்டி தொலைந்துபோய்விட்டதாகவும் எடுத்தவர் யார் எனக் கேட்டும் முதற்கட்ட விசாரணையைத் தொடங்குகிறான் அந்தச் சிறுவன். நெருங்கிய நண்பர்கள் தாங்கள் யாரும் எடுக்கவே இல்லை எனச் சத்தியம் செய்கிறார்கள். விரக்தியின் உச்சத்தில் சத்திய சோதனை செய்வதென முடிவு எடுத்து அறிவிக்கிறான். அரச மரத்தடி விநாயகர் முன்பு உள்ளங்கையில் கற்பூரம் ஏற்றி ஒவ்வொரு மாணவனும் தான் களவாடவில்லை எனச் சத்தியம் செய்திட வேண்டும். மூன்று நண்பர்களும் உடன்படுகிறார்கள். நடக்கப்போவதை அறியாத அரசமரம் வினை தீர்ப்பவருக்கும், வேண்டுதல் விண்ணப்பம் ஏந்தி வருபவர்களுக்கும் நிழல் தந்து உபசரித்துக்கொண்டிருந்தது. பென்சில் பெட்டியைத் தொலைத்த மாணவன் வரும் வழியில் கவனமாகக் கற்பூரம் வாங்கி வந்துவிட அந்த உண்மை அறியும் சோதனை நிகழத் தொடங்குகிறது. சோதனைக்கு முதலில் நான் தயார் என்று முன்வருகிறான் ஒரு சிறுவன். தான் தவறு செய்யவில்லை என்பதால் இந்த சத்திய சோதனையில் தனக்கு எதுவும் நிகழ்ந்துவிடாது என்ற அந்த எட்டு வயது அப்பாவிச் சிறுவன் நம்பினான். கற்பூரத்தை உள்ளங்கை ஏந்துகிறது. பென்சில் சிறுவன் பற்ற வைக்க, கொழுந்து விட்டெரிகிறது கற்பூரம். செய்வதறியாது எல்லோரும் நிற்க, எங்கிருந்தோ ஓடிவந்த ஒரு சிறுமியின் கை, தட்டிவிட்டுப் பதறுகிறது. வகுப்புகள் தொடங்குகின்றன. சில நிமிடங்களில் வகுப்பறையின் வாசலில் புதிய முகம். கையில் புத்தம் புதிய பென்சில் பெட்டி. வந்தது சத்திய சோதனையை முன்மொழிந்த சிறுவனின் தம்பி. தவறுதலாக தன்னுடைய பையில் இடம்பெற்றதாகக் கூறி அண்ணனிடம் திருப்பிக் கொடுக்க வந்துள்ளான். ஆசிரியர் அனுமதிக்கிறார். அதற்குப் பின்னும் ஏன் சத்தம் என்று திரும்பிப் பார்த்த ஆசிரியருக்கு அரசமரத்தடிச் சம்பவம் சென்று சேர்கிறது. அதிர்ச்சி அடைந்தவர் பென்சில் சிறுவனைப் பதம் பார்க்கிறார்.

கற்பூரம் ஏந்திக் காயம்பட்ட சிறுவனை என்ன செய்வதென்றே புரியவில்லை. அருகில் மருத்துவரிடம் அழைத்துச் சென்றால், அனைவரின் விநோதப் பார்வையும் அவன்மேல்தான்.

மூன்று நாள் விடுமுறைக்குப் பின் பள்ளிக்கு வந்தவனை அதன் பின் சற்றுக் கவனமாகவே கையாளத் தொடங்கியது அந்தப் பள்ளி.

சாலையில் போக்குவரத்து சீரடைந்து அரச மரத்தடிக் கோயிலைத் தாண்டிச் செல்கிறோம். என் கண்கள் உள்ளங்கையைப் பார்க்கின்றன. வலக் கையின் கற்பூரத் தழும்பினை வருடுகின்றன இடக் கை விரல்கள். புன்னகையுடன் திரும்பிப் பார்த்தால் அரச மரத்தடிக் கோயிலில் இரண்டு மாணவர்கள் கைகளில் புத்தகங்களோடு மனமுருக வணங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

அந்தக் காலத்தில் அத்தனை பேரும் அரசுப் பள்ளிகளில் படித்தார்கள். சமூக ஏற்றத்தாழ்வுகள் வகுப்பறையை எட்டிப் பார்த்ததில்லை. மாணவர் கரங்களில் சாதி, மத அடையாளங்கள் இல்லை. அருகில் அமர்ந்திருக்கும் மாணவரின் சமூகச் சூழல் குறித்து யாருக்கும் கவலையில்லை. பொங்கல், தீபாவளி, ரமலான் நோன்பு, கிறிஸ்துமஸ் அனைத்துமே அன்றன்று கிடைக்கும் உணவு வகைகளை மட்டுமே வைத்து வேறுபடுத்தி அறிந்துகொண்ட காலம். திருவிழாக்களும், கொண்டாட்டங்களும் மாணவர்களை மகிழ்விக்கத் தோன்றும் வானவில் அவ்வளவுதான். நிறங்களைத் தேர்ந்தெடுப்பது அவரவர் விருப்பம்.

தமிழாசிரியரின் கருணை, கணித ஆசிரியரின் வாய்ப்பாடுகளை மிஞ்சிய கண்டிப்பு, உடற்பயிற்சி ஆசிரியரின் அரவணைப்பு எனக் குடும்ப உறவுகளின் நீட்சியாகவே பள்ளி வளாகம் அன்று இருந்தது. மயிலிறகைப் பாதுகாத்த பாட நூல்கள், புரியா மொழியில் சாரணர் இயக்கப் பாடல், நாலணாக் காசில் தேன் குழல் வாங்குவதா, கடலை மிட்டாய் வாங்குவதா என்று பட்டிமன்றம் நடத்திய காலம். எதிர்காலம் குறித்த கவலைகள் இல்லா உலகம் அது.

கே.எஸ். ராஜா, அப்துல் ஹமீது
கே.எஸ். ராஜா, அப்துல் ஹமீது

கோடை விடுமுறை ஒரு வண்ணமயமான கொண்டாட்டம். அதுவரை கிட்டிப்புள் விளையாடிக்கொண்டிருந்தவர்கள் பதவி உயர்வு பெற்று கிரிக்கெட் விளையாடக் கனவு காண்பார்கள். விளையாட்டு உபகரணங்களைத் தருவிக்கும் நபர் ஆட்டம் இழந்தாலும் இருமுறை தொடர்ந்து விளையாட அனுமதி, நடுநடுவே எழும் நடுவர் தீர்ப்புக்கு எதிரான முறையீடுகளை முடிவு செய்திடும் வேலை இல்லாப் பட்டதாரிகள். சிலரோ ஒரு ரூபாய்க்கு ஒரு மணி நேர வாடகை சைக்கிளில் வலம் வந்துகொண்டிருப்பார்கள். உற்றுக் கவனித்தால் அதில் ‘பயணங்கள் முடிவதில்லை’ என்ற வாசகம் இடம் பெற்றிருக்கும். சில மாணவர்கள் நூலகத்தில் தஞ்சமடைவார்கள். முத்து காமிக்ஸ், தமிழ்வாணன், சுஜாதா, கணையாழி, தி.ஜா, ஜெயகாந்தன் என வயதுக்கேற்ப புத்தகங்கள் கைமாறும். இரவல் வழங்கும் புத்தகங்களில் எத்தனை திரும்பி வருமோ என்ற நிரந்தர பயத்தில் நூலகர் இருப்பார். இல்லங்களில் பொன்னியின் செல்வன் தொடர்கதைக்குள் மூழ்கியிருந்தவர்களைத் திடீரென்று ஒரு கம்ப்யூட்டர் குரல் ‘விக்ரம்’ என்று சீண்டிப் பார்க்கும்.

அந்தக் காலத்தில் கடல் கடந்து வந்து தமிழர் உள்ளங்களைக் கவர்ந்து சென்றதில் முக்கியமானது இலங்கை வானொலி. பொங்கும் புதுப்புனல், ஒலிச்சித்திரம், நேயர் விருப்பம் என மனதைக் கவரும் நிகழ்ச்சிகள்.

ஊடுருவும் காந்தக் குரல் வழியே ‘இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் - தமிழ்ச்சேவை’ என கே.எஸ். ராஜா, அப்துல் ஹமீது போன்றவர் உச்சரிக்கும் அழகே தனி. ஒரு தலைமை ஆசிரியருக்கே உரிய கண்டிப்புடன் ஒலிபரப்பாகும் ஆகாசவாணி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசுவாமி என்ற குரலைவிட இலங்கை வானொலியின் கொஞ்சும் தமிழே நேயர்களுக்கு மிகவும் நெருக்கம்.

IAS officer Udhayachandran shares his experiences part 26
IAS officer Udhayachandran shares his experiences part 26

அன்று காற்றிலும் நீரிலும் நஞ்சு கலக்கவில்லை. வயல்கள் எதிர்பார்த்த வேளையில் மழை பொழிந்தது. பசுமை பரவியது. நகரமும் கிராமமும் ஒன்றையொன்று சார்ந்திருந்த காலகட்டம். அறுவடைக்கால ஈரம், மார்கழி மாதக் கோலம், பூச்சரம் தொடுக்க முன்வரும் நளின விரல்கள். கைக்குழந்தையுடன் பூக்குழி இறங்கத் தயாராகும் நனைந்த பாதங்கள். திருவிழாக்கால உண்டியல், உக்கிரம் ததும்பும் தெருக்கூத்து இரவுகள்… ஆபத்தை உணராத வேலியோர ஓணான், அட்டைப் பெட்டிக்குள் சிக்கித் தவித்த பொன் வண்டு, கைவிரல்களுக்கு இடையே படபடக்கும் பட்டாம்பூச்சி, விட்டு விடுதலையாகத் துடிக்கும் பட்டம் என மண்மணம் கமழும் நினைவுகள் அவை.

காலம் மாறுகிறது. சாமானியரின் அன்றாட வாழ்விலும் தொழில்நுட்பம் எட்டிப் பார்க்கிறது. காந்தக்குரல் வழியே கனவுகாணக் கற்றுக் கொடுத்த வானொலியின் இடத்தை, அழையா விருந்தினராக வருகை புரிந்த தொலைக்காட்சி தட்டிப் பறிக்கிறது. வரவேற்பறையின் ஒருமூலையில் முடங்கிக்கிடந்த சின்னத்திரை, தங்கள் வாழ்வையே ஆக்கிரமிக்கப்போகிறது என்று யாரும் அன்று கற்பனைகூடச் செய்திருக்கமாட்டார்கள். கறுப்புவெள்ளைத் தொலைக்காட்சியில் கபில்தேவ் சாகசம் பல செய்து உலகக்கோப்பை வென்றதை முதன்முதலில் பார்த்த கண்கள் வியப்பில் ஆழ்ந்தன. பின்னர் நிறம் மாறி ஒளியும் ஒலியும் என்று மனம் கவர்ந்தன. சித்ரகார் என்று பன்மொழிப் புலமை காட்டியது. நகைச்சுவைத் துணுக்குகள் நாடகம் என்ற பெயரில் வெளி வந்தன. வெள்ளித் திரையின் உச்ச நட்சத்திரங்களோ வெகு இயல்பாய் இல்லங்களில் நடைபயின்று நேயர்களின் நலம் விசாரித்தார்கள். அதிகாலை சுப்ரபாதத்தை அதுவரை புறக்கணித்த இளைஞர்கள் சிட்னி கிரிக்கெட் போட்டியை நேரலையில் காண அதிகாலை நாலரை மணிக்குத் துயில் கலைந்த அதிசயமெல்லாம் நடந்தேறின.

IAS officer Udhayachandran shares his experiences part 26
IAS officer Udhayachandran shares his experiences part 26

மணியார்டர் என்றால் மகிழ்ச்சி, தந்தி என்றால் அதிர்ச்சி, தொலைபேசி செல்வந்தரின் அடையாளம் என்றிருந்த வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது அலைபேசி. 15 பைசா அஞ்சல் அட்டை, 35 பைசா இன்லேண்டு லெட்டர் என எழுத்தின் வழி தூரத்து உறவுகளின் நலம் விசாரித்துவந்த தலைமுறைக்குத் தொழில்நுட்பம் ஆனந்த அதிர்ச்சி கொடுத்தது. காலையில் டிரங்க் கால் பதிவுசெய்தால் மாலையில் தொடர்பு கிடைக்கலாம். அப்படியிருந்த நிலையை வீதிக்கு வீதி முளைத்த எஸ் டி டி பூத்துகள் மாற்றிப்போட்டன. அதே தகவல்தொடர்பு வசதி தங்கள் கரங்களிலேயே தவழத் தொடங்கியது மாபெரும் மாற்றம். உறவுகள் நெருங்கி வந்தன. மனம் கவர்ந்தவரின் எண்ணங்களைச் சுமந்தபடியே பயணம் மேலும் சுகமானது.

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் ஓடியாடிக் களைப்புடன் வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தவர்களைத் தோழமையுடன் அணுகியது ஒரு வாகனம். அது மொபெட். சைக்கிளுக்கும் மோட்டார் சைக்கிளுக்கும் இடையே தோன்றிய விநோதப் பிறவியைப் போன்றே மக்கள் முதலில் பார்த்தனர். பின்னர் அதன் எளிமை அனைவருக்கும் பிடித்துப் போனது. பால்காரரின் வாகனம் மாறியது. மாணவரின் திருவிளையாடலுக்கு அஞ்சாமல் ஆசிரியர்கள் கம்பீரமாக வலம் வரமுடிந்தது. தயக்கத்தை உதறி பெண்களும் புதிய வேகத்தில் பயணிக்கத் தொடங்கினர். மிக்சி, கிரைண்டர் என வீட்டு உபயோகப்பொருள்கள் சமையலறை அனுபவத்தைச் சற்றே எளிதாக்கிட, கிடைத்த ஓய்வுநேரத்தில் சின்னத்திரை நிகழ்ச்சிகள் பிழிந்த சோகத்தில் இல்லத்தரசிகள் உருகத் தொடங்கினர்.

காலம் உருண்டோடுவதில் காட்சிகள் மாறிக் கொண்டேயிருக்கின்றன. இந்த உலகில் மாற்றம் ஒன்றே நிலையானது என்பது புரிகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் இயல்பே என்பதும் தெரிகிறது.

எனினும் மாற்றத்தை எதிர்கொள்ளும் வேகத்தில் நம் அடையாளங்களை இழப்பது சரியா என்ற கேள்வி எழுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் கோவையிலிருந்து சென்னை நோக்கி வரும் ரயில் பயணத்தில் என் கைகளில் Jared Diamond எழுதிய Guns, Germs and Steel என்ற புத்தகம். முன்னிருக்கையில் இருந்து ஒரு குழந்தை அடிக்கடி தவழ்ந்து வந்து ஒவ்வொரு வரிசையாக ஆய்வுசெய்வதும், பின் ஒரு பெரியவர் வந்து அழைத்துச் செல்வதுமாக இருந்தார். மழலையின் குறுக்கீடு அதிகமாகவே, புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, குழந்தையின் கரங்களைப் பற்றி அதன் பெயரைக் கேட்கிறேன். மழலைமொழியில் தெளிவில்லை. அருகிலிருந்த அதன் தாத்தா மொழிபெயர்த்தார். ‘யாஷிகா... யாசி என்று செல்லமாகக் கூப்பிடுவோம்’ என்றார். அதிர்ச்சி எனக்கு. ‘எங்கிருந்து முளைக்கின்றன இந்தப் பெயர்கள்..? யாஷிகா என்பது ஜப்பான் நிறுவனமொன்றின் பெயரல்லவா... ஜப்பானோடு ஏதேனும் இந்தக் குடும்பத்துக்குத் தொடர்பிருக்குமோ...? என் சிந்தனையைக் கலைக்கிறார் டிக்கெட் கண்காணிப்பாளர். உறங்கிக்கொண்டிருந்த தன் மகளைப் பெயர்சொல்லி எழுப்புகிறார் அந்தப் பெரியவர். அந்தப் பெண்ணின் பெயர் ‘தமிழ்ச்செல்வி!’ ஒரு தமிழ்ச்செல்வி தன் மகளுக்கு வைத்த பெயர் ‘யாஷிகா.’ எந்தத் திசையில் செல்கிறது நம் பயணம்? பெயர் என்பது நம் மரபின் அடையாளம். அதை இழக்கத் துணிந்து விட்டோமா?

IAS officer Udhayachandran shares his experiences part 26
IAS officer Udhayachandran shares his experiences part 26

எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் நாம்?

உயர்ந்து வளர்ந்த மரம் ஒன்று கிளைகள் பல விரித்திடும். கிளைகளோ ஆயிரம் பறவைகளை அரவணைக்கத் துடிக்கும் கரங்கள். அதன் நிழலில் புத்தம்புதுச் செடிகள் ஆயிரமாயிரம் முளைத்திடலாம்.

ஆனால், அந்த மரத்தின் வேர் வீரியம் இழந்தால் என்னதான் மிஞ்சும்?

‘வேரில் கசியும் ஈரம்.’

- நடை பயில்வோம்...

சபைக் குறிப்பு

தழியல் துறைக்கான ராம்நாத் கோயங்கா விருதைப் பெற்றதுடன் நிறைய விவாதங்களையும் உருவாக்கிய புத்தகம் Harish Damodaran எழுதிய India’s New Capitalists. இந்தியாவின் பல்வேறு சமூகப் பிரிவுகள் தொழில் துறையில் முன்னேறிய விதம் குறித்து, சமூக வரலாற்றியல் நோக்கில் எழுதப்பட்ட நூல்.

IAS officer Udhayachandran shares his experiences part 26
IAS officer Udhayachandran shares his experiences part 26

ஒரு குறிப்பிட்ட பகுதியில் தொழில் வளம் பெருக என்னவெல்லாம் தேவை, மூலப்பொருள்களின் இருப்பு, நிதிநிறுவனங்களின் அரவணைப்பு, நிலவியல் சாதக அமைப்பு, பெரும்பான்மை மக்கள் திரளின் தொழில் முனையும் திறன், அரசு நிர்வாகத்தின் ஊக்குவிப்பு, அல்லது, குறைந்தபட்சம் அதன் குறுக்கீடின்மை என அனைத்தையும் விரிவாகப் பேசும் நூல். சாதியக் கட்டமைப்பில் சிக்கிக்கிடக்கும் இந்தியச் சமூகத்தில் தன் பரம்பரைத் தொழிலில் இருந்து விடுபடாத சமூகப் பிரிவு தொடர்ந்து சிக்கலில் உழன்றுகொண்டேயிருக்கும் என்று சிந்திப்பவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

- உதயச்சந்திரன்