மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாபெரும் சபைதனில் - 27

மாபெரும் சபைதனில்
பிரீமியம் ஸ்டோரி
News
மாபெரும் சபைதனில்

உலக அறிவியல் கருத்துகளை உள்ளூர் மொழி கொண்டு சாமானியர்களையும் சென்றடையும் உன்னத முயற்சி அது...

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது நடந்த நிகழ்வு அது. அன்றைய காலை நாளிதழில் வெளிவந்த ஒரு செய்தி பேரதிர்ச்சியைக் கொடுத்தது.

கமுதிக்கு அருகே சில கிராமங்களில் போலியோ தடுப்பு மருந்து கொடுக்கச் சென்ற மருத்துவர் களுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகச் செய்தியின் தலைப்பு அலறியது. உடனடியாக வருவாய்த்துறை, மருத்துவத்துறை அலுவலர்களைத் தொடர்பு கொண்டால் உள்ளூர் அம்மன் கோயில் திருவிழாவின்போது தடுப்பூசி போட்டுக் கொள்ளக்கூடாது என்று மக்கள் நம்புவதாகத் தெரிவித்தனர். இதைக் கேட்டவுடன் சலிப்பு ஒருபுறம். மறுபுறமோ கல்லூரி நண்பன் பாலுவின் முகம் திடீரென்று நினைவுக்கு வந்தது.

சிரித்த முகம். துறுதுறுவென்று அலைபாயும் கண்கள். ஒரு கால் போலியோவால் பாதிக்கப்பட்டாலும் முகத்தில் தவழும் புன்னகை அதை எளிதாய் மறைத்துக் கடந்திடும். ஒருமுறை விடுதிக்குள் விளையாடிக்கொண்டிருந்த போது விரைந்து சென்றுகொண்டிருந்த பந்தைத் தடுக்க முயன்று இரண்டாம் தளத்திலிருந்து கீழே விழுந்து பலத்த அடி அவனுக்கு. ஆனால் துள்ளி எழுந்து விளையாடத் தயாராகிறான் பாலு. அவனுடைய வீரதீர சாகச முயற்சிகள் ஏற்கெனவே எங்களுக்கு அறிமுகம் என்பதால் அதை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அன்றிரவு தற்செயலாய் அவன் அறைக்குள் நுழைந்தபோது கால்வலி தாங்க முடியவில்லை என்று அவன் கதறி அழுதது என்றென்றைக்கும் நினைவில் உறைந்துபோனது.

மாபெரும் சபைதனில்
மாபெரும் சபைதனில்

எந்தக் குழந்தைக்கும் இளமைப்பருவத்தில் உரிய மருத்துவ வசதிகள் கிடைக்காமல்போவது சமூகத்தின் அலட்சியமே காரணம். ஆனால், அதே நேரம் அரசு நிர்வாகம் பெருமுயற்சி எடுத்து நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது அதைத் தடுப்பதற்கு இவர்களுக்கு என்ன உரிமை என்று கோபம் தலைக்கேறியது. கூடவே நண்பன் பாலுவின் முகமும் அடிக்கடி வந்து நிழலாடியது. கமுதி தாசில்தாரிடம் பரிமாறப்பட்ட கடுஞ்சொற்களால் தொலைபேசியே அதிர்ந்தது. ஊர்ப் பெரியவர்களைக் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அன்பாக விசாரித்தால் உண்மை வெளிவருகிறது. உள்ளூர் வைத்தியர் தன் பிழைப்பைத் தடையின்றி நடத்திட அம்மனைத் துணைக்கு அழைத்திருக்கிறார். உள்ளூர் வைத்தியர் கடுமையாக எச்சரிக்கப்படுகிறார். மருத்துவக்குழு திட்டமிட்டதைவிட ஓரிரு நாள்கள் அதிகமாக அப்பகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்தது.

சற்று ஆழமாக யோசித்துப் பார்த்தால், தனிநபர்களின் தவறான வழிகாட்டுதல் என்பதைவிட எதிரெதிரான இரு நம்பிக்கைகளுக்கு இடையேயான போராட்டம் என்று புரிந்துகொள்வதே பொருத்தமானது.

காலங்காலமாக மக்கள் மனதில் நிலவும் நம்பிக்கைகளும், அறிவியல் முன்னெடுப்புகளும் ஒன்றையொன்று உரசிக்கொள்ளும் நுட்பமான தளத்தில் நிர்வாகத்தை வழிநடத்துவது ஒரு பெரும் சவால்தான். இருநூறு ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அன்றைய சென்னை கலெக்டர் பிரான்சிஸ் எல்லிஸ் பெரியம்மை நோய்த் தடுப்பூசியை மக்களிடம் கொண்டு சேர்க்க ‘தேவதையும் தன்வந்திரியும்’ உரையாடி பஞ்சகவ்யத்தை ஒட்டிய அருமருந்து அதுவே என்று பிரசுரம் வெளியிட்டார். புனைவின் வழி அறிவியலைக் கொண்டு செல்லும் விநோத முயற்சி அது.

யாழ்ப்பாண மருத்துவக் கல்லூரி மாணவர்கள்
யாழ்ப்பாண மருத்துவக் கல்லூரி மாணவர்கள்

இதே போன்ற சிக்கலை இலங்கையில் எதிர்கொண்டார் அமெரிக்க மருத்துவர் ஒருவர். புனித விவிலியத்தைக் கரங்களில் ஏந்தி ஏழை மக்களுக்கான மருத்துவப் பணி செய்திட சாமுவேல் பிஷ்கிரீன் வந்திறங்கியது யாழ்ப்பாணத்திற்கு அருகே வட்டுக்கோட்டையில். நியூயார்க்கில் மருத்துவம் படித்த அந்த 25 வயது இளைஞனுக்கு உள்ளூர் மக்கள் தங்கள் நோய் தீர, மந்திர தந்திரங்களை நம்பியிருந்தது அதிர்ச்சியைத்தான் கொடுத்தது. சட்டத்தையும், புனைவையும் துணைக்கு அழைக்காமல் மக்கள் மொழியில் உரையாடுவது என்ற ஆயுதத்தை எடுக்கிறார் கிரீன். தட்டுத் தடுமாறி தான் கற்ற தமிழைக் கொண்டு சிறு பிரசுரங்களை வெளியிடுகிறார். உள்ளூர் மாணவர்கள் மருத்துவக் கல்வி பயின்றிட மானிப்பாய் பகுதியில் ஒரு மருத்துவக் கல்லூரி நிறுவுகிறார். வைத்தியலிங்கம், கணபதி என யாழ்ப்பாணத் தமிழ் மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் நுழைகின்றனர். மருத்துவமனைகளில் நோயாளிகளின் வருகை அதிகரிக்கிறது. எனினும் புதிய சிக்கல் ஒன்று எழுகிறது. படித்து முடித்த மருத்துவர்கள் அரசுப்பணியில் சேர்ந்து இலங்கையில் பல நகரங்களுக்கும் இடம்பெயர்ந்து சென்றுவிட யாழ்ப்பாணக் கிராமங்களில் மருத்துவர் பற்றாக்குறை.

சாமுவேல் கிரீன்
சாமுவேல் கிரீன்

பல நாள்கள் சோர்வுடன் உலவிக் கொண்டிருந்த மருத்துவர் கிரீனின் எண்ணத்தில் புதிய திட்டம் ஒன்று உருவானது. மருத்துவக் கல்வியைத் தமிழ் மொழியில் மேற்கொள்வதும் அதற்காக மருத்துவ நூல்களைத் தமிழில் மொழிபெயர்ப்பதும்தான் அந்தத் திட்டம். 50 பவுண்டுகள் பிரிட்டிஷ் அரசு நிதி உதவியுடன் 1855-ம் ஆண்டு ஈழத்தில் தமிழில் மருத்துவக் கல்வியைக் கற்பிப்பது என்ற முடிவுக்கு மாணவர்கள் சிலரே முதலில் எதிர்ப்பு தெரிவிக்கின் றனர். ஆனால், மருத்துவர் கிரீன் தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தார். ‘எதிர்காலத்தில் வைத்தியர்கள் தமது சொந்தக் கிராமங்களிலேயே வாழ்ந்து மக்கட்சேவை புரிய வேண்டும். இதற்கு இணங்க மறுப்பவர்கள் வேறு தொழிலைத் தேடிக்கொள்ளலாம். மருத்துவப் படிப்பைத் தமிழில் கற்க முன்வருபவர்கள் மட்டும் தமது கல்வியைத் தொடரலாம்’ என்று கூறினார். எதிர்ப்புகள் தணிந்து மருத்துவர் சாமுவேல் கிரீனுடன் உள்ளூர்த் தமிழ் மாணவர்கள் சிலரும் ஒத்துழைக்க மரபுத் தமிழும் நவீன அறிவியலும் இணைந்திடும் அதிசய நிகழ்வு நடந்தது. மருத்துவக் கல்வியைத் தமிழ் மொழியில் கொண்டுவர மருத்துவர் கிரீன் செய்த சாதனைகள் அசாத்தியமானவை. மொத்தம் 4,500 புதிய பக்கங்கள் கொண்ட 24 மருத்துவ நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. மருத்துவக் கலைச்சொல் அகராதி உருவாக்கப்பட்டது. தமிழ் வழியில் மருத்துவக் கல்வி 150 ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறைக்கு வந்தது.

அவருடைய கைவண்ணத்தில் கிரேசின் அங்காதிபாரம் (Gray’s Anantamy), டால்தனின் மனுசகரணம் (‘Dalton’s Physiology) போன்ற புகழ்பெற்ற மருத்துவ நூல்கள் தமிழில் வெளிவந்தன. ‘Well’s Chemistry’ தமிழில் நிறம் மாறி ‘கெமிஸ்தம்’ என்று ஒளிர்ந்தது. இது மட்டுமன்றி, வைத்தியம், பிள்ளைப்பேறு மருத்துவம், இரண வைத்தியம், மாதர் மருத்துவம் என உலக மருத்துவ அறிவியல் கருத்துகள் செந்தமிழில் நடமாடி தமிழரை நெருங்கி வந்தன. புதிய மருத்துவத் தமிழ்நூல்களின் புகழ் தமிழ்நாட்டிலும் எதிரொலித்தது. அமெரிக்கா திரும்பிய பின்னும் தமிழ்மொழிபெயர்ப்பில் ஈடுபட்டுத் தன்னுடைய 62 வயதில் மறைந்த சாமுவேல் கிரீனின் கல்லறை அவர் விருப்பப்படியே மிக எளிமையாக அமைக்கப் பட்டதுடன் ஓர் உயரிய வாசகத்தையும் கொண்டிருந்தது. அதில் ‘சாமுவேல் கிரீன் – தமிழர்களின் மருத்துவ ஊழியன்’ என்று எழுதப்பட்டிருந்தது.

ஆராய்ச்சியில் யூ யூ து
ஆராய்ச்சியில் யூ யூ து

உலக அறிவியல் கருத்துகளை உள்ளூர் மொழி கொண்டு சாமானியர்களையும் சென்றடையும் உன்னத முயற்சி அது. அதே சமயம், ஏட்டறிவும், ஆங்கிலப் புலமையும் இல்லாத ஒரே காரணத்திற்காகப் பாமர மக்களின் பட்டறிவை ஒதுக்கித் தள்ளுவதும் முறையாகாது என்பதை அறிவுலகமும், மேற்கத்திய நாடுகளும் புரிந்து கொள்ள மேலும் நூறு ஆண்டுகள் பிடித்தன.

ஆம். கடந்த 2015-ம் ஆண்டு ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரின் விழா அரங்கில், நிகழ்ச்சித் தொகுப்பாளர் மருத்துவத்திற்கான நோபல் பரிசை வென்றவர்கள் பெயரை அறிவிக்கிறார். 85 வயதான அந்த முதிய பெண்மணி கைத்தாங்கலாக அழைத்து வரப்படும்போது அரங்கமே எழுந்து நின்று ஆரவாரிக்கிறது. கிழக்குச் சீனக் கடற்கரையோரச் சிறு நகரத்தில் பிறந்து இன்று நோபல் அரங்கம் வரையிலான அவர் பயணம் சாகசங்கள் பல நிரம்பியது.

மருத்துவ மூலிகை ஆர்டிமீசியா ஆனுவா
மருத்துவ மூலிகை ஆர்டிமீசியா ஆனுவா

எளிமையான குடும்பத்தில் பிறந்து வண்ணக் கனவுகளுடன் பள்ளிப் படிப்பை முடித்த யூயூது என்ற அந்தச் சிறுமிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 15 வயதில் தொழுநோயின் தாக்குதலுக்கு உள்ளாகிப் படிப்பு இரண்டு வருடம் தாமதமானது. நோயிலிருந்து மீண்ட யூயூது மருத்துவம் படித்தே தீருவது என்ற முடிவில் பீகிங் பல்கலைக்கழகத்தில் மருந்தியல் துறையில் சேர்ந்தார். படிப்பை முடித்தவருக்கு சீனப் பாரம்பர்ய மருத்துவக் கழகத்தில் வேலையும் கூடவே சவால்களும் காத்திருந்தன.

சில ஆண்டுகளில் வடக்கு வியட்நாமிலிருந்து சீன அரசுக்கு ஒரு கோரிக்கை வருகிறது. அமெரிக்கப் படைகளுக்கு எதிரான போரில் இறந்தவர் களைவிட மலேரியா நோய்க்குப் பலியானவர்கள் அதிகம் என்பதால் மருத்துவ உதவி வேண்டும் என்று. 1967-ஆம் ஆண்டு Project 523 என்று ஒரு திட்டம் உருவாக்கப்படுகிறது. மே மாதம் 23-ம் தேதியன்று தொடங்கியதால் அந்தப் பெயர். 500க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள், பல முன்னணி நிறுவனங்கள் இணைந்து மேற்கொண்ட அந்தப் புதிய திட்டம் மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இரும்புத் திரைக்குப்பின், யூயூது தலைமையிலான குழு ஆராய்ச்சியைத் தொடர்ந்தது. மலேரியா பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாகப் பயணம் செய்து பல மாதிரிகளைச் சேகரித்தனர். மலேரியா நோயைக் குணப்படுத்த வழக்கமாகப் பயன்படுத்தப்படும் குளோரோகுயின் மருந்தைத் தடுத்தாட்கொள்ளும் திறனை, மலேரியா நோயைப் பரப்பிடும் பிளாஸ்மோடியம் எனும் ஒட்டுண்ணி பெற்றுவிடுவதால் புதிய சிக்கல் எழுகிறது. மேற்குலகமும் மருத்துவ ஆராய்ச்சியில் இறங்கியது. எனினும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வேதியியல் மூலக்கூறுகளைப் பரிசோதித்தும் முமுமையான வெற்றி கிட்டவில்லை.

யூ யூ து இடம் பெற்ற டைம் அட்டை
யூ யூ து இடம் பெற்ற டைம் அட்டை
கலாசாரப்புரட்சி சீனாவையே புரட்டிப் போட்டதுடன் யூயூவின் குடும்பத்தையும் பிரித்தது. உலோகவியலில் பட்டம் பெற்ற அவரின் கணவர் தொலைதூரத்தில் உழவுத் தொழில் பழகிடப் பணிக்கப்பட்டார்.

பிறந்த குழந்தையைப் பிரிந்து யூயூது தலைமையிலான குழு சீனாவின் மூலைமுடுக்கெல்லாம் பயணம் செய்கிறது. சீன மருத்துவ மூலிகையான ‘ஆர்டிமீசியா ஆனுவா’ என்ற தாவரத்தின் மருத்துவக் குணங்கள் மலேரியாவைக் கட்டுப்படுத்தும் என்று கண்டுபிடிக்கிறார்கள். எனினும் ஆய்வகத்தில் முறையான பரிசோதனைகள் செய்துபார்த்தால் முழுமையான திறன் எட்டுவதில் தோல்விதான் கிடைத்தது. சோர்வடையாத யூயூவுக்கு இம்முறை உதவிக்கு வந்தது பழைமையான சீனக் காகிதச்சுவடி ஒன்று. ஆபத்துகளின் போதும் அவசரக்காலத்திற்கும் உதவிடும் மருத்துவக் குறிப்புகள் அடங்கிய பனுவல் அது. 1700 ஆண்டுகளுக்கு முன் கே ஹாஸ் என்பவரால் எழுதப்பட்ட சுவடிகளை ஆராய்ந்து கொண்டிருந்தவருக்கு, மிக முக்கியமான தீர்வு கிடைக்கிறது. Sweet Warmwood என்று அழைக்கப்பட்ட ஆர்டிமீசியா தாவரத்திலிருந்து மூலிகை மருந்தைத் தயாரிக்க மிதமான கொதிநிலை அவசியம் என்று குறிப்பிட்டு அதைத் உருவாக்கும் வழிமுறைகள் விரிவாக விளக்கப்பட்டிருந்தன. உடனே நவீனத் தயாரிப்பு முறைகள் கைவிடப்பட்டு பழஞ்சுவடி காட்டிய வழியில் மலேரிய ஆராய்ச்சிப் பயணம் தொடர்ந்தது. இறுதியில் வெற்றிகரமாகத் தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டு சோதனை எலிகளுக்குச் செலுத்தி பரிசோதித்துப் பார்க்கப்பட்டது. அடுத்த கட்டமாக மனிதர்களுக்குத் தடுப்பு மருந்தைச் செலுத்திப் பரிசோதனை செய்திடும் நிலையில் யூயூது அந்தச் சோதனையை மேற்கொள்ள தானே முன்வந்தார். கிருமிகளுடனான போரை அவர் முன்னின்று வழிநடத்தி வெற்றியும் கண்டார். ‘ஆர்டிமிசினின்’ என்று அழைக்கப்பட்ட அந்தத் தடுப்பு மருந்து அன்றிலிருந்து இன்றுவரை உலகில் 40 கோடி நபர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. பல லட்சக்கணக்கான உயிர்களை, குறிப்பாக ஆப்பிரிக்காவில் வறுமையில் வாடும் குழந்தைகளைக் காப்பாற்றியிருக்கிறது.

தேடி வந்த நோபல் பரிசு
தேடி வந்த நோபல் பரிசு

ஆனால், பல வருடங்களுக்கு ஆர்டிமிசினின் மருந்தைக் கண்டுபிடித்தவர் பெயரை உலகம் அறியவில்லை. சீன அரசின் கட்டுப்பாடுகள் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளிவருவதைத் தடைசெய்ததுதான் காரணம். நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு இரு அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் புலனாய்வு செய்து கண்டுபிடித்தபோது, பணியிலிருந்து ஓய்வுபெற்ற யூயூது சிறு நகரம் ஒன்றில் எளிமையான சூழலில் வசித்துவந்தார். காலம் கடந்த அங்கீகாரம் நோபல் பரிசு வடிவில் அவரைத் தேடி வந்த போது மரபுசார் மருத்துவ உலகமே மகிழ்ந்து கொண்டாடியது. அதிலும் குறிப்பாக, மருத்துவர் அல்லாத ஒருவர்; முறையாக ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெறாத பெண்மணி; வெளிநாடுகளில் அதுவரை கால்பதித்திராத ஒருவர், நோபல் பரிசைப் பெற்றது அதுதான் முதல்முறை.

தன்னுடைய நோபல் உரையில் யூயூது உலகப் புகழ்பெற்ற வாசகம் ஒன்றை உச்சரித்தார். அவருடைய கண்டுபிடிப்பு, “சீனப் பாரம்பர்ய மருத்துவம் உலகுக்கு அளித்த கொடை” என்று கூறியபோது மருத்துவ உலகமே கண்கலங்கியது.

அறிவியல் கருத்துகளை மக்கள் மொழியில் எடுத்துச் சொல்வதும், மக்கள் திரளின் மரபுசார் மருத்துவ அனுபவங்களை அறிவுலகம் ஏற்றுக்கொள்வதும் மானுடம் தழைக்க உதவும் பெருமுயற்சிகள்.

ஒருமுறை அமெரிக்க மானுடவியல் அறிஞர் மார்கரெட் மேட் என்பவரிடம் ஒரு கருத்தரங்கில் ஆராய்ச்சி மாணவி ஒருவர் கேள்வி கேட்கிறார். மனித நாகரிகத்தின் தொடர்ச்சி எது என்பதுதான் அந்தக் கேள்வி. சக்கரம், நெருப்பு, வேளாண்மை என்று பதில் எதிர்பார்த்துக் கொண்டிருந்தவருக்கு அதிர்ச்சி. அகழாய்வு ஒன்றில் கிடைத்த 15,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதத் தொடை எலும்பு ஒன்றைக் குறிப்பிடுகிறார் மார்கரெட் மேட். உடலின் இடுப்புப் பகுதியையும், முழங்காலையும் இணைக்கும் அந்த நீண்ட எலும்பு உடைந்து பின் குணமாக்கப்பட்டதைக் கண்டுபிடித்துள்ளார்கள். வேட்டையாடி வாழ்ந்த ஆதிமனிதர் கூட்டத்தில் கால் ஒடிந்த ஒருவர் சுமையாகவே கருதப்படுவார். தனித்து விடப்பட்டவர் விலங்குகளுக்கு இரையாக நேரிடும். அந்தச் சூழலில் காலில் அடிபட்ட சக மனிதரைப் பேணிப் பாதுகாத்த தருணம்தான் மனித நாகரிகத்தின் மகத்தான தொடக்கம் என்ற மார்கரெட்டின் பதில் காலத்தை வென்றது.

`பேரழிவில் துளிர்க்கும் மனிதம் மகத்தானது.’

- நடை பயில்வோம்...

சபைக் குறிப்பு

கொரோனா வைரஸின் பிடியில் உலக நாடுகள் சிக்கித் தவிக்கும் வேளையில் 13 ஆண்டுகளுக்கு முன் வந்த SICKO என்ற ஆவணப்படம் மீண்டும் முக்கியத்துவம் பெறுகிறது. லாப நோக்கில் செயல்படும் மருந்து மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள், அமெரிக்க சுகாதாரத் துறையை எப்படி பாதிக்கின்றன என்பதைப் புலனாய்வு முறையில் ஆராய்ந்து உருவாக்கப்பட்ட இந்தப் படைப்பு உலகெங்கும் பரவலான வரவேற்பைப் பெற்றது.

IAS officer Udhayachandran shares his experiences part 27
IAS officer Udhayachandran shares his experiences part 27

அதுமட்டுமன்றி பிரிட்டனின் National Health Service, கனடா மற்றும் கியூபா நாடுகளில் மக்கள் சுகாதார நலம் எப்படிக் காக்கப்படுகிறது என்ற விவரங்களும் அடங்கியிருப்பது கூடுதல் சிறப்பு. செயற்கையான எல்லைக் கோடுகள் சிதைந்து மனிதகுலம் ஒன்றாகத் திரளும் இந்த நேரத்தில் பல்வேறு நாடுகளின் மக்கள் நலத்திட்டங்களைச் சுயபரிசோதனை செய்திட இந்த ஆவணப்படம் நிச்சயம் உதவும். 9/11 இரட்டைக் கோபுரத் தாக்குதல், Capitalism- a Love story போன்ற புகழ்பெற்ற ஆவணப்படங்களை இயக்கிய Michael Moore –ன் மற்றுமொரு படைப்பு இது. மக்கள் ஊரடங்கின்போது அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய ஆவணப்படம்.

- உதயச்சந்திரன்