
உலகை வெல்லும் இலக்குடன் பயணிக்கும் வல்லமை கொண்டது ஒரு உலகம்.
சென்னை, தலைமைச் செயலகத்தின் ஆறாவது தளம். பள்ளிக்கல்வித்துறையின் செயலாளர் அலுவலக வாயிலில் உதவியாளர்கள் படபடப்புடன் காத்திருக்கிறார்கள். அந்த இரு விருந்தினர்களின் வருகையை உடனே தெரிவிக்கவேண்டும் என உத்தரவு அவர்களுக்கு. உள்ளே உயர் அலுவலர்கள் பங்குபெறும் கூட்டம் முடிவே இல்லாமல் நீண்டு கொண்டிருந்தது.
அவர்கள் வந்து விட்டார்கள் என்று செய்தி கிடைத்ததும் கூட்டம் முடிவுக்கு வருகிறது. அதுவரை சோர்ந்து போயிருந்த அலுவலர்களின் முகங்கள் இயல்பு நிலைக்குத் திரும்புகின்றன. கிடைத்த ஒரு நிமிட இடைவேளையில் விருந்தினர்களை அழைத்து வந்த நிறுவனத்தின் நம்பகத்தன்மையை அலைபேசி வழியே இணையத்தில் உலாவி உறுதி செய்துகொள்கிறேன். நிமிர்ந்து பார்த்தால்... விண்வெளிச் சிறுவர்கள்! ஆம் நாங்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த விருந்தினர்கள், தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். பல்வேறு சமூகத் தடைகளைத் தாண்டி அறிவியல் சாதனை படைக்கத் துடிப்பவர்கள். விருதுநகர் அரசுப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் ஜெயக்குமார். கரூருக்கு அருகே ஒரு மெட்ரிக்குலேசன் பள்ளியில் 12-ம் வகுப்பு தேர்வெழுதியிருக்கும் ரிஃபாத் ஷாரூக். கொஞ்சம் பேச்சுக் கொடுத்தால் வார்த்தைகள் அருவிபோல் கொட்டுகின்றன.

விருதுநகர் மாணவன் தீவிபத்தைத் தடுக்க ஆராய்ச்சி மேற்கொள்ள முயன்றதில் பெரிய ஆச்சர்யம் ஏதுமில்லை. பட்டாசுத் தொழிற்சாலையில் நடக்கும் தீவிபத்துகள் அந்தப் பிஞ்சு மனதைப் பாதிக்க, அவன் கரங்கள் உருவாக்கியது, தானியங்கி தீயணைக்கும் கருவி. தீ விபத்து ஏற்பட்டதும் எச்சரிக்கை செய்வது மட்டுமின்றி பரவும் தீயைக் கட்டுப்படுத்த நீரும், மண்ணும் தூவிடும் கருவிதான் அவனுடைய முதல் கண்டுபிடிப்பாம். அதற்குப்பிறகு நிறைய அறிவியல் கட்டுரைகள் எழுதியிருப்பதாகச் சொல்லியபடியே அலைபாய்கின்றன அந்தச் சிறுவனின் கண்கள். மற்றொரு சிறுவன் ரிஃபாத் தயக்கத்துடன் ஓரிரு வார்த்தைகளில் பதில் அளிக்கிறான். 15 வயதில் ஹீலியம் வாயு நிரம்பிய பலூன் தயாரித்ததில் தொடங்கி இன்று ஒன்றரை அங்குல செயற்கைக் கோள் தயாரிப்பதில் வந்து நிற்கிறான். 3D பிரிண்டிங் முறையில் எட்டு சென்சார்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ‘கலாம்சாட்’ என்ற அந்தக் குட்டிச் செயற்கைக்கோள் 12 நிமிடங்கள் விண்ணில் சுற்றும் என்று சொல்லும்போது அவன் கண்களில் கனவுகள் விரிகின்றன.
’மொத்தம் 57 நாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட ஆய்வு கட்டுரைகளில் வல்லுநர் குழு அலசி ஆராய்ந்து, இந்த இரு சிறுவர்களைத் தேர்ந்தெடுத்து மாஸ்கோ மற்றும் நாசா நிறுவனத்தில் பயிற்சி கொடுக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்’ என்று அவர்களுடைய ஆசிரியர்கள் பெருமிதத்தோடு தெரிவிக்கிறார்கள். அவர்களை வாழ்த்தியதோடு வெளிநாடு களுக்கான பயணத்திட்டம், அதற்குத் தேவையான உதவிகள் என குறிப்பெடுத்துக் கொள்கிறேன். தலைமைச் செயலகத்தின் அதிகார நிழல் படிந்த சுவர்களுக்கு இடையே அந்தச் சிறுவர்கள் அலட்சியமாய் நடந்து சென்ற விதம், குறிப்பேதும் இல்லாமல் நேரலைத் தொலைக் காட்சிகளில் அவர்களுடைய பேச்சு என அடுத்த இரண்டு நாட்கள் அந்தச் சிறுவர்களைச் சுற்றியே கழிந்தது. அதற்கு அடுத்தவாரம் நடந்த உயர் அலுவலர்கள் கூட்டத்தில் இந்த இரண்டு சிறுவர்களுக்கும் இடையே காணப்பட்ட ஒற்றுமை, வேற்றுமைகள் என்ன என்ற கேள்வியை முன்வைக்கிறேன். ’அரசுப் பள்ளி மாணவனும் சரி, தனியார் பள்ளியில் படிக்கும் மாணவனும் சரி... தங்கள் தந்தையை இழந்தபோதிலும் சமூகத்தடைகளை மீறி அறிவியல்பாதையில் பயணம் செய்யத் துடிக்கிறார்கள்’ என்று பதில் வந்தது. ’என்ன வித்தியாசம்’ என்ற கேள்விக்கு மௌனமே பதிலானது. “இருவருக்குமான உடல்நலன் சார்ந்த வித்தியாசத்தைக் கவனித்தீர்களா.. அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் பத்து வயதுக்குரிய வளர்ச்சியைத்தான் கொண்டிருக்கிறான்...” என்று நான் சொன்னபோது அனைவருக்கும் அதிர்ச்சி.
வண்ணக் கனவுகளுடன் ஒரு பகுதி, வறுமையின் பிடியில் நாட்டின் மறுபகுதி. உலகை வெல்லும் இலக்குடன் பயணிக்கும் வல்லமை கொண்டது ஒரு உலகம். அடிப்படை வசதிகள் கிடைக்கும் என்ற வாக்குறுதிக்கே கரங்கள் தொழும் உலகம் மற்றொன்று.
வறுமைக்கோட்டை வடிவமைத்திடும் பணி பரம்பொருளைத் தேடும் பயணத்தை விட சிக்கலானது. கண்ணுக்குத் தெரியாத அந்த வறுமைக் கோட்டை முறையாக வரைந்திட வல்லுநர்கள் காலகாலமாய் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இந்தியக் கிராமங்களில் மக்கள் வறுமையை வென்றிட நாள் ஒன்றுக்கு 2400 கலோரி திறன் கொடுக்கும் உணவு அவசியம் என்று புள்ளி விவரங்கள் வழியே முதலில் வறுமைக்கோட்டை வரைய முயன்றார்கள். பின்னர் அவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு அமெரிக்க டாலர் மதிப்பில் வருவாய் ஈட்டுகிறார்களா என்று இறக்குமதி செய்யப்பட்ட கருத்துகளின் வழியே வறுமையை மதிப்பிட முயன்றனர். ஆனால் வறுமையோ தன்னுடைய நிறத்தைக் காலந்தோறும், இடத்திற்கேற்ப மாற்றி வந்தது.
வல்லுநரின் பார்வையில் வறுமையின் முதன்மைக் குறியீடு உணவின் தேவை. ஆனால் ஏழைகளின் பார்வையிலோ வறுமை என்பதன் பொருள் “ஒழுகும் கூரை, கூலி உயர்வு கேட்கத் தயங்கும் உதடுகள், செங்கல் ஏந்தும் பிஞ்சுக் கரங்கள், தொலைதூரத்தில் தோன்றிமறையும் திருவிழா வாண வேடிக்கைகள், மருத்துவ மனையில் உயிருக்குப் போராடும் தந்தை, குறிப்பறிந்து அடகுக் கடையில் தஞ்சம் புகுந்த தங்க மாங்கல்யம்’’ என்று விரியக்கூடும். வறுமையின் பன்முகத்தன்மையினை மெத்தப் படித்த மேதாவிகள் உணர்ந்து கொள்ள பல ஆண்டுகள் பிடித்தது. அதற்கேற்ப மக்கள் நலத் திட்டங்களின் நோக்கங்களும் மெதுவாக மாறத் தொடங்கின. நிலக்கிழார்கள் முன் பணிந்து ஒதுங்கிப்போன சட்ட விதிகள், இப்போது உழுபவருக்கே நிலம் சொந்தம் என அறிவித்து நிமிர்ந்து நிற்க முயன்றன. உணவுக் கிடங்குகளில் வீணாகும் தானியம் பசித்தவருக்குப் போய்ச் சேரலாமே என்று உச்சநீதிமன்றம் கேட்டபின் உணவுப் பாதுகாப்புச்சட்டம் நிறைவேறியது. குடிசை வீடுகள் இருபத்தியோராம் நூற்றாண்டின் அவமானச் சின்னங்கள் என்ற முழக்கம் குடிசையில்லா மாநிலம் எனப் புதிய திட்டம் பிறந்திட வகை செய்தது. உலகிலேயே உயரம் குறைந்த பெண்கள் தெற்காசியாவில்தான் இருக்கிறார்கள், இந்தியாவில் பிறக்கும் மூன்றில் ஒரு குழந்தை எடைக்குறைவுடன் இந்த உலகில் அடியெடுத்து வைக்கிறது என்ற விமர்சனங்கள் ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை உணர வைத்தன. அனைவருக்கும் கல்வி, பாதுகாக்கப் பட்ட குடிநீர் என்பவையும் வறுமையின் ஒவ்வொரு பரிமாணத்தையும் சரிசெய்யும் முயற்சிகளே.
வறுமையின் வடிவத்திற்கும், சமூக ஏற்றத்தாழ்வுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. வேளாண் தொழில் கைவிடப்பட்டு நகரத்தை நோக்கி விரையும் மக்கள், தெருக்களில் புதிதாக முளைத்த எஸ்.டி.டி, தொலைபேசி பூத்கள் காலத்திற்கேற்ப நெகிழ்ந்து உருமாறி கம்யூட்டர் சென்டராய் மாறி நிற்கும் அதிசயம், மாறி வரும் சூழலுக்கேற்ப நெகிழ்ந்து கொடுத்து புதியவர்களை வரவேற்கத் தயாரான அக்கிரகாரத் தெருக்கள், விளிம்பு நிலை மக்களின் குடியிருப்பை எட்டிப்பார்த்த சாலைகள் என மாற்றங்கள் பல பதிவு செய்யப்பட்டன. எனினும் அன்று நிலச்சுவான்தார்களாக இருந்தவர்கள் இன்று ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கி தங்கள் ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்வதும் குறிப்பிடத்தக்கது.

வறுமையின் தீவிரம் பல நேரங்களில் வன்முறையைத் துணைக்கு அழைப்பதுண்டு. உலகின் எந்தப் பகுதியிலும் வன்முறைச் சம்பங்கள் ஏன் நிகழ்ந்தன என்று அலசி ஆராய்ந்தால், அவற்றின் ஆழத்தில் வறுமையின் நிழல் படிந்திருப்பதைத் காணமுடியும். எனவேதான் வன்முறையை அடியோடு அகற்றிட துப்பாக்கி முனையை விட மக்கள் நலத்திட்டங்களே சிறந்த ஆயுதங்கள் என்பது வல்லுநர்களின் வாதம். சாதிய அமைப்புகளுக்குள் சிக்கித் தவிக்கும் இந்திய சமூகத்தில் மக்கள் தங்கள் பரம்பரைத் தொழிலில் இருந்து விடுபடுபவதும், பெண்கள் கல்வி கற்பதும் வறுமைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல உதவும் காரணிகள்.
வறுமைக்கு எதிரான போராட்டம் எப்போதுமே நேர்கோட்டில் செல்வதில்லை. இயற்கைப் பேரழிவுகள், கொள்ளை நோய்கள், கொடிய போர் போன்றவை நொடிப்பொழுதில் செல்வந்தரையும் ஏழையாய் இடமாற்றம் செய்திடும் திறன் பெற்றவை. எளியவரின் வாழ்க்கைப் பயணத்தில் அதிர்ச்சிகள் அங்கங்கே காத்துக் கிடக்கும். தந்தையின் அகால மரணம், மனநலம் குன்றிய சகோதரி, தாயின் தீரா நோய் என வாழ்வையே புரட்டிப் போடும் நிகழ்வுகள் பல உண்டு. ஆனால் அவற்றையும் மீறி முன்னேறத் துடிக்கும் மாணவர்கள் சிலரை தேர்ந்தெடுத்து வழிகாட்டும் ‘அகரம்’அமைப்பு நடத்தும் நிகழ்ச்சியில் சில ஆண்டுகளுக்கு முன் கலந்து கொண்டது இன்னும் நினைவில் தேங்கியிருக்கிறது. உயர்கல்வி பயில உதவி கேட்டு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்தது எப்படி என தன்னார்வலர்கள் ஒவ்வொருவராக மேடையேறி விளக்கிக் கொண்டிருந் தார்கள். குடும்பத்தின் வறுமையான சூழல், குடிசை வீடு,பொறுப்பற்ற தந்தை, உழைத்துத் தேயும் தாய், கூலி வேலைக்குச் செல்லும் சகோதரன் என வறுமையின் அத்தனை வடிவங்களும் மேடையில் வலம் வந்து வதைத்தன. அப்போது ஒரு தன்னார்வலர் சொன்னதை நிமிர்ந்து உட்கார்ந்து கூர்ந்து கவனித்தேன். ’இந்தச் சமூகமும், அரசும் தந்தையை இழந்த குழந்தைகளுக்குத்தான் முன்னுரிமை அளிக்கின்றன. ஆனால் அதை விடக் கவனம் செலுத்த வேண்டியது தாயை இழந்த குழந்தைகளைத்தான். தாய் இறந்தபின் மாறிய குடும்பச் சூழலில் தந்தையின் கவனிப்பின்மை அல்லது மாற்றாந்தாய் மனப்பான்மை என உளவியல் சிக்கலோடு வறுமையும் சேர்ந்து கொண்டால் மீள்வது கடினம்’ என்று அவர் சுட்டிக்காட்டியபோது அரங்கமே உறைந்து போனது. மறுக்கப்பட்ட தாயன்பும் வறுமையின் ஒரு வடிவமே என்ற அரிச்சுவடியை நான் கற்றுணர்ந்த தருணம் அது.
வறுமை ஒழிப்பு பொருளாதார முன்னேற்றத்தை நோக்கிய பயணம். அதனால் சமூக மாற்றம் நிகழுமா என்று எதிர்க்கேள்வி கேட்பவர்களும் உண்டு. இதற்கான நேரடியான பதில் சில ஆண்டுகளுக்கு முன் கிடைத்தது. தமிழகத்தில் வெற்றிகரமாக பெயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் சுயஉதவிக்குழு திட்டத்தில் சிறந்து விளங்கும் 6 குழுக்களைத் தேர்ந்தெடுக்க தேர்வுக்குழு கூடுகிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பல குழு உறுப்பினர்கள் தங்கள் சாதனைகளைப் பட்டியலிடுகிறார்கள். பால் குளிரூட்டும் நிலையம் அமைத்த குழு ஒன்று, ரெடிமெட் துணி வகைகளை பெருநிறுவனங்களுக்கு உற்பத்தி செய்து கொடுத்து நல்ல லாபமீட்டும் சுய உதவிக்குழு, இயற்கை வேளாண் முறைகளைக் கடைபிடித்து சாதனை புரிந்த பெண்கள், உறுப்பினர்களின் கல்வி, மருத்துவத் தேவைகளுக்கு வட்டியில்லாக் கடன் கொடுத்த முன்மாதிரிக்குழு என்று விதவிதமாகப் பட்டியல் நீளுகிறது. இறுதியில் விருதை வென்று பட்டியலில் முதல் இடம் பிடித்த சுயஉதவிக்குழு, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தது. வழக்கமான தொழில் முன்னேற்றம், கல்வி சுகாதாரப் பணிகள் தாண்டி அந்தக் குழுவின் ஒரு குறிப்பிட்ட செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அந்தக் கிராமத்தில் வசித்த இளம் விதவைப் பெண் ஒருவருக்கு மறுமணம் செய்துவித்தது அந்தக்குழு. உண்மைதான் பொரு ளாதார சுதந்திரம் சமூக முன்னேற்றத்திற்கான முதல்படியே.

சமூகத்தின் வேறு எந்தப் பிரிவினரைக் காட்டிலும் ஏழை, எளிய மக்களிடம் கனிவும், கருணையும், மனித நேயமும் மிகுந்து இருக்கும் என்பது எல்லோரும் அறிந்த செய்திதான். வறுமையிலும் அவர்கள் சுயமரியாதையை இழப்பதில்லை என்பதை எனக்கு உணர்த்திய நிகழ்வு ஒன்று ஈரோட்டில் நடந்தது. ஒரு திங்கட்கிழமை மாலைப்பொழுதில் தொடர்ச்சி யான ஆய்வுக் கூட்டங்களை எதிர்நோக்கி கலெக்டர் அலுவலகம் நோக்கி விரைகிறேன். காத்துக் கொண்டிருந்த மனுதாரர்கள் கூட்டத்திலிருந்து ஒரு பெண், என் காலில் விழப்போனவரைத் தடுத்து, ’என்ன வேண்டும்’ என்று கேட்கிறேன். ஒருமாதத்திற்கு முன் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கல்விக்கடன் முகாமில், சென்னை பொறியியல் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்த தன் மகனுக்கு இரண்டு லட்ச ரூபாய் கடன் வழங்க பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் விபத்தில் அடிபட்டுப் படுக்கையில் கிடக்கும் தந்தை வாங்கிய கடன் நிலுவையில் இருப்பதைச் சுட்டிக் காட்டி மகனுக்குக் கல்விக்கடன் மறுக்கப்படுகிறது. சத்தியமங்கலத்திற்கு அருகே புளியம்பட்டி கிராமம் என்று சொல்வதை உடனே குறிப்பெடுத்துக் கொள்கிறார் உதவியாளர்.
கலெக்டரின் அறிவுரையை எதிர்பார்க்காமலேயே உத்தரவுகள் பறக்கின்றன. கடன் தர மறுத்த வங்கி மேலாளர், அவருடைய உயர் அதிகாரி, உள்ளூர் தாசில்தார் எனத் தொலைபேசி தொடர்ந்து அதிர்கிறது. இருபத்து நான்கு மணி நேரத்திற்குள் என்று உதடுகள் சொல்லி முடிப்பதற்குள், அதற்கு முன்பே கல்விக்கடன் வழங்கப்பட்டு விடும் என்று பதில் வருகிறது. உயர் அதிகாரியின் விருப்பத்திற்கு ஏற்ப நெகிழ்ந்து கொடுப்பதில் அரசு இயந்திரத்தின் திறமை அலாதியானது. அடுத்த நாள் மாலை கல்விக்கடன் வழங்கப்பட்டதுடன், தந்தையின் கடனுக்கான அபராத வட்டி குறைக்கப்பட்டு, கடன் செலுத்தும் தவணைகள் நீட்டிக்கப்பட்ட செய்தியோடு தாயும், மகனும் அழைத்து வரப்படுகிறார்கள். வந்தவர்களிடம், ’உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறேன்’ என்றபோது, ’இவ்வளவு பெரிய வார்த்தைகள் எதற்கு’ என்று அந்தப் பெண் கண்கலங்குகிறார். ஆனால் அந்த மயிலிறகு வருடல் அவருடைய மகனை நோக்கியது என்பதை அந்தப் பெண் அறிந்திருக்கவில்லை. ஆம். அன்று அந்தப்பெண் காலில் விழப்போனபோது மகனின் கண்கள் அந்தக் காட்சியைக் காண முடியாமல் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டதை நான் கவனிக்கத் தவறவில்லை. உதவி செய்வது உயர் அதிகாரியாக இருந்தாலும் தன்னுடைய தாயை அடுத்தவர் காலில் விழவைத்த அந்த கணத்தை, தன் தந்தையை, ஏன் இந்தச் சமூகத்தின் மீதும் வெறுப்பை உமிழ்ந்த அந்தக் கண்களைப் பார்த்தேன். அதன் உக்கிரத்தைத் தணிக்கவே இந்த மலர் அம்புகள்!
’வறுமையில் செம்மை!’
- நடை பயில்வோம்...

சபைக் குறிப்பு
நிச்சயமற்ற பெருமை - இந்தியாவும் அதன் முரண்பாடுகளும்
An uncertainity Glory - India and Its contradictions
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வென்ற உலகப்புகழ் பெற்ற பேராசிரியர் அமர்த்தியா சென் மற்றும் பேராசிரியர் ழீன் தெர்சே இருவரும் இணைந்து எழுதிய இந்நூல் பரவலான வரவேற்பைப் பெற்றது. இந்தியாவின் முரண்பாடுகளையும் அதற்குக் காரணமான வரலாற்று , பொருளாதாரக் காரணிகள் குறித்து விவரிக்கும் இந்நூல் இந்தியாவின் பலம் அதன் மதச்சார்பின்மை, சகிப்புத்தன்மை, மக்களாட்சியின் பிணைப்பில் அடங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏழைகள் அதிகம் வசிக்கும் நாட்டில் நாட்டின் வளர்ச்சி , மேம்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து விரிவாகப் பேசும் இந்நூல் தமிழ்நாடு கேரள மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் குறித்து மெதுவாக பாராட்டுவதும் குறிப்பிடத்தக்கது.
- உதயச்சந்திரன்