
ஓவியம்: டிராட்ஸ்கி மருது
மதுரை மாநகரம். நூற்றாண்டுக் கால வரலாற்று நிகழ்வுகளை அசைபோட்டபடியே கம்பீரமாய் நின்றுகொண்டிருக்கிறது கலெக்டர் அலுவலகம். உள்ளே வழக்கமான ஆய்வுப்பணிகளில் மூழ்கியிருந்தேன். உதவியாளர் அனுமதி பெற்று அழைப்பதற்குள் உரிமையாக உள்ளே நுழைந்தார் அவர். ‘மதுரைக்கு ஒரு உறவினரைச் சந்திக்கவந்தேன். அப்படியே கலெக்டரையும் பாத்துட்டுப்போகலாம்னு வந்தேன்’ என்றார். அடிக்கடி அவர் அப்படி வருவதுண்டு.
அவர் பெயர் சாக்ரடீஸ். ஊர், பாப்பாபட்டி. ஊராட்சி மன்றத் தேர்தல் முடிந்து இயல்பு நிலை திரும்பியிருந்தாலும் அந்த மூன்று கிராமங்களும் தொடர் கண்காணிப்பில் இருந்தன. எந்த ஒரு சிறு சலனமும் உடனடியாய் கலெக்டரின் அலைபேசியை வந்தடைந்துவிடும். எனினும் அந்த மூன்று கிராமத்திலிருந்து எந்தக் கோரிக்கையுடன் யார் வந்தாலும் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் முன்னுரிமை தந்து நிறைவேற்றிட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. அரசு நலத்திட்ட உதவிகள், தொழில் தொடங்கக் கடன், பேருந்து வசதி என மாவட்ட நிர்வாகத்தின் செல்லக் குழந்தைகளாயின அந்தக் கிராமங்கள். ஊர்ப் பெரியவர்கள் பலர் அடிக்கடி அலுவலகம் வந்து கலெக்டரை நலம் விசாரித்துச் செல்லும் அளவிற்கு இடைவெளி குறைந்திருந்தது.
கோப்புகளைப் பார்த்துக்கொண்டே ஊர்நிலவரம் பற்றி விசாரிக்கிறேன். விரைவில் நடக்கவுள்ள கோயில் திருவிழா, உள்ளுர் அலுவலர்களின் விதிமீறல், தாமதமாகும் கரும்பு அறுவடை எனப் பேச்சு விரிகிறது. உதவியாளர் கொண்டுவந்த தேநீரில் சர்க்கரை தூக்கல்தானே என்று உறுதிசெய்துகொள்கிறார்.

பேச்சுவாக்கில், ‘சாக்ரடீஸ் என்று உங்களுக்கு ஏன் பெயர் வைத்தார்கள்’ என்று கேட்டேன். ‘எங்க அப்பா அதிகம் படிக்கவில்லையென்றாலும் அவருக்கு உலக அரசியலில் ஆர்வம் அதிகம். மூன்று சகோதர்களுக்கும் ஷேக்ஸ்பியர், சாக்ரடீஸ், லெனின் என்று பார்த்துப் பார்த்து பெயர் வைத்தார். உறவினர்கள் வாயில் ‘ஷேக்ஸ்பியர்‘ நுழைய மறுத்ததால் முதல் பையனை எல்லோரும் ‘கிருஷ்ணன்’ என்று கூப்பிடத் தொடங்கினார்கள். அதில் அப்பாவுக்கு பெரிய வருத்தம்’ என்றவர், தன் பையிலிருந்து எதையோ தேடி எடுக்கிறார். அது ஒரு புகைப்படம். பார்த்து அசந்துவிட்டேன். முன்னும் பின்னும் பலமுறை திருப்பிப் பார்க்கிறேன். பாப்பாபட்டியைச் சேர்ந்த சாக்ரடீஸ், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் வாக்குடன் கைகுலுக்கியவாறு நின்றுகொண்டிருக்கும் புகைப்படம். கொஞ்சம் பொறாமையாகக்கூட இருந்தது. ஒரு தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் முகவராகப் பணிபுரிந்தபோது சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று அவர் சொன்னார்.
ஸ்டீவ் வாக் எனக்கு மிகவும் பிடித்தமான கிரிக்கெட் வீரர். ஒருமுறை சிங்கப்பூர் விமான நிலையத்தில் பேசக் கிடைத்த வாய்ப்பு ஒரு சில நொடிகளில் தவறிப்போய்விட்டது குறித்து காலமெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் என்னிடம் பாப்பாபட்டிக்காரர் புகைப்படம் காட்டினால் எப்படி இருக்கும்?

ஸ்டீவ் வாக்கை ஏன் பிடித்தது என்று சற்றே யோசித்துப் பார்த்தால், அவர் நெருக்கடியான நேரங்களில்கூட நிதானம் இழக்காமல் அணியை வழி நடத்திடும் கேப்டன். முகத்தில் எந்தவித உணர்ச்சிகளுக்கும் இடமளிக்காமல் இறுதி வரை போராடும் நபர். தோல்வியின் விளிம்பில் மன உறுதியுடன் விளையாடி வென்றவர். அதேபோல் ரோஜர் பெடரர். டென்னிஸ் விளையாட்டின் பேரரசர். வெற்றிபெறுவது தன் வாடிக்கை என்பதுபோல், வென்ற தருணம் கொடுத்த உற்சாகத்தை உடனே மறந்து இயல்பாக நடுவரை நோக்கி நடந்துசெல்லும் காட்சி என்றென்றும் அற்புதம்தான்.
தனக்குப் பிடித்தமானவற்றை அநாயாசமாய் செய்துவிட்டு அகலும் நட்சத்திரங்களிடம் யாரும் மனதைப் பறிகொடுப்பது இயல்புதான். பல நேரங்களில் தன்னுடைய கனவை, தனக்குக் கிடைக்காத வெற்றியை எளிதில் அடைந்திடும் நாயகர்களை மக்கள் காலந்தோறும் கொண்டாடுகிறார்கள்.

ஒவ்வொரு சமூகமும் வெவ்வேறு காலகட்டங்களில் தனக்குத் தேவையான வெற்றிநாயகர்களை அடையாளம் கண்டுகொள்கிறது. சற்று ஆழ்ந்து யோசித்தால் புதிதாய்க் கொண்டாடப்படும் ஒவ்வொரு நாயகரும் கால வெள்ளத்தில் உருவாகும் சமூக எழுச்சியின் வெவ்வேறு வடிவங்களே.
இந்திய தேசத்தை உணர்வுபூர்வமாக ஒன்றிணைத்த நவீன வடிவங்களுள் முக்கியமானது கிரிக்கெட். இந்தியாவைப் பொறுத்தவரையில் கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு மட்டும்தானா அல்லது ஒரு மதத்திற்குரிய தகுதியைப் பெற்றுவிட்டதா என்று சமூகவியல் ஆராய்ச்சிகள் இன்றும் தொடர்கின்றன. இந்தக் காலனிய விளையாட்டின் தாக்கம் இந்தியச் சமூகத்தில் கணிசமானது. கடந்த 50 ஆண்டுகளாக ஒவ்வொரு தலைமுறையும் தன்னுடைய கனவு நாயகர்களைக் கிரிக்கெட் விளையாட்டிலிருந்தே தேர்வு செய்தன. கிரிக்கெட் உலகின் முதல் சூப்பர் ஸ்டார் மன்சூர் அலிகான் பட்டோடி, ஒரு சாலை விபத்தில் வலது கண்பார்வை பறிபோனாலும் மனம் தளராமல் விளையாடி சதங்களையும் வெற்றியையும் குவித்தவர். அண்டை நாடுகளுடனான போர், உணவுப் பஞ்சம் எனப் பல சிக்கல்களை எதிர்கொண்ட தேசம், தடைகளைத் தகர்த்து இந்தியக் கிரிக்கெட் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்த டைகர் பட்டோடியைக் கொண்டாடி மகிழ்ந்தது. 70களில் மிகக் கவனமாக விளையாடி ரன்களைக் குவிக்கத் தொடங்கிய கவாஸ்கர், இந்தியாவில் உருவாகி வந்த மத்தியதர வர்க்கத்தின் கனவை நிறைவேற்றினார். கபில்தேவோ பசுமைப் புரட்சி மூலம் இந்தியக் கிராமங்களில் நிகழ்ந்த மறுமலர்ச்சியின் குறியீடாகவே மாறிப்போனார். உலகமயமாக்கல் ஊடுருவிய 90களில், தாய் சொல்லைத் தட்டாத சச்சின் முடிசூடா மன்னனாக உருவானது உலக அரங்கில் இந்தியா வளர்ந்துவருவதை உறுதிசெய்தது. ராகுல் டிராவிட், கிரிக்கெட்டின் மனசாட்சி என்றால் அது மத்திய தரவர்க்க மதிப்பீடுகளின் உருவகம்தான். இந்தியாவின் பெரு நகரங்களுக்கு வெளியே இருக்கிறது வணிகம் என்பதைப் பன்னாட்டு நிறுவனங்கள் கண்டுபிடித்தபோது, திறமையும் அங்கிருக்கிறது என்று எழுந்துவந்த தோனி அழகாய் அந்த எழுச்சியுடன் ஒன்றிப் போனார். புத்தாயிரத்தில் பிறந்து வளர்ந்த தலைமுறையின் கட்டுக்கடங்காத ஆர்வமும் உழைப்பும் விராட் கோலியின் உருவகத்தோடு பொருந்திப்போனதில் ஆச்சர்யமில்லை. இதை விரிவுபடுத்தினால் இறகுப் பந்து வீராங்கனைகள் சிந்துவும், சாயினா நெய்வாலும் சிறகுகள் விரிக்கத் துடிக்கும் இந்தியப் பெண்களின் வலிமையான அடையாளங்கள்!
கிரிக்கெட் விளையாட்டின் வெற்றி தோல்விகள் நம் வாழ்க்கையின் ஒரு பிரிக்கமுடியாத அங்கமாகமாறிவிட்டன. பொங்கல் திருநாளை ஒட்டி சேப்பாக்கம் கிரிக்கெட் போட்டியின் தமிழ் வர்ணனை, கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சியில் கபில்தேவ் வென்ற உலகக்கோப்பை, வெள்ளிக்கிழமை ஷார்ஜா போட்டிகள் தந்த பதற்றம், ஒன்பது வீரர்கள் எல்லைக்கோட்டில் நின்றிட, கடைசிப் பந்தில் மியான்டாட் அடித்த சிக்ஸர் ஏற்படுத்திய வலி, பல ஆண்டுகள் கழித்து பாலைவனப் புயலுக்கு நடுவே சச்சின் அடித்த சதங்கள் தந்த பெருமிதம், லஷ்மண்-டிராவிட் கூட்டணி ஈடன் கார்டனில் நிகழ்த்திய அற்புதம், எதிர்பாராத டி20 உலகக் கோப்பை வெற்றி என விளையாட்டின் ஏற்ற இறக்கங்கள் ரசிகர்களின் சுக துக்கங்களாகவே மாறிப்போயின.

இந்திய வெற்றிக்கு இரவு பகலாக பிரார்த்தித்துக் கொண்டிருந்தாலும் எதிரணி வீரர்களுக்கும் உரிய மரியாதை இங்கே உண்டு. விவியன் ரிச்சர்ட்ஸின் அதிரடி, மால்கம் மார்ஷலின் புயல் வேகம், இடதுகை ஆட்டக்காரர்களுக்கே உரிய நளினத்துடன் டேவிட் கோவர், உலகெங்கும் ரசிகைகளை உறங்க விடாமல் செய்த இம்ரான் மற்றும் ரிச்சர்ட் ஹாட்லி என மாற்றான் தோட்டத்து மல்லிகையை பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டவர்கள் அதிகம். அதிலும் சென்னை சேப்பாக்கம் ரசிகர்கள் உயர்தரம்.

பாகிஸ்தான் உட்பட எதிரணியின் வெற்றியைக்கூட அரங்கமே எழுந்து நின்று பாராட்டுவதை வேறெங்கும் பார்க்கமுடியுமா என்று தெரியவில்லை. கிரிக்கெட் மட்டுமன்றி டென்னிஸ், சதுரங்கம் என்று சென்னையின் புகழ் பரவியதும் உண்மை. இந்தியா விளையாடாத போட்டிகளில் அல்லது விளையாட்டுகளில் நாம் எந்த அணியை ஆதரிக்கிறோம், அது ஏன் என்ற ஆய்வே சுவாரசியமானது. சென்ற வருடம் உலகக் கோப்பை அரை இறுதியில் நம்மை வென்ற நியூசிலாந்து அணி, இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வெல்ல வேண்டும் என்று நினைக்க நமக்கு எப்படித் தோன்றுகிறது? உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளில் பிரேசில், அர்ஜென்டினா நம் மனம் கவர்ந்த அணிகளாக இருப்பதற்கு நம் காலனிய எதிர்ப்பு மனநிலை காரணமா? ஆழ்ந்த ஆய்வுக்குரிய செய்திகள் இவை.
வரலாற்றுத் தொடக்க காலத்தில் நிகழ்ந்த பழங்குடி மக்களுக்கு இடையேயான போர்களின் மருவிய வடிவமே இன்றைய விளையாட்டுப் போட்டிகள் என்ற கருத்து ஒன்று உண்டு. விளையாட்டில் வெற்றிபெற எது முக்கியம்... தொடர் பயிற்சியா, இயற்கையாய் அமைந்த உடலமைப்பா என்று ஒரு விவாதம் தொடர்ந்து வருகிறது. உலகின் தலைசிறந்த தடகள வீரர்களின் உடலில் காணப்பட்ட ACTN3 என்ற மரபணுதான் அவர்களுடைய வெற்றிக்குக் காரணம் என்று ஒரு செய்தி வெளிவர, உலகெங்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தத் தொடங்கினர். ஆனால் மறுபுறம் உலகின் அதிவேக ஒட்டப்பந்தய வீரர்கள் பலர் பசிபிக் பெருங்கடலின் ஜமைக்கா தீவுகளில் இருந்து உருவாவது ஏன் என ஆராய்ச்சி தொடங்கியது. 400 ஆண்டுகளுக்கு முன் மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து கரீபியன் தீவுகளில் அமைந்த கரும்புத் தோட்டங்களில் அடிமையாய் பணிபுரிய கப்பல்களில் ஏற்றி வரப்பட்டவர்களில் பலர் நீண்ட கடற்பயணத்தில் மடிந்து போகின்றனர். தப்பிப்பிழைத்தவர்கள் ஜமைக்காவின் காடுகளிலும் சுண்ணாம்பு மலைகளிலும் சுற்றித் திரிந்து, நீண்ட கால்களையும் வலுவான உடல் அமைப்பையும் பெறுகின்றனர். அவர்களுக்கு முறையான பயிற்சி கொடுத்ததால் உலகின் சிறந்த வீரரான உசேன் போல்ட் போன்ற தடகள வீரர்கள் உருவாவதாகக் கண்டுபிடிக்கிறார்கள். ஆனால் இதே உடலமைப்பைக் கொண்ட சூடான் நாட்டு வீரர்கள் அங்கு நடக்கும் உள்நாட்டுப் போரினால் தங்கள் வாய்ப்பை இழந்து நிற்கிறார்கள். எனவே மரபணுவுடன் பயிற்சியும் இணைந்தால் மட்டுமே வெற்றி சாத்தியம்.
இந்தியாவிலும் அதுபோன்ற நிகழ்வுகள் உண்டு. மும்பை சிவாஜி நகர் ஜிம்கானா கிளப், மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களை உருவாக்கியது. மேற்கு வங்கம், கேரளம், கோவாவைப் போன்று வடசென்னையிலும் கால்பந்து மோகம் அதிகம். வேலூர் சத்துவாச்சேரியில் பளுதூக்குதலும், கோவில்பட்டியில் ஹாக்கியும் வளர்வதற்குத் திறமையும் பயிற்சியும், இணக்கமான சூழலும் உதவி செய்தன.

அப்படித்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன், மதுரை மாவட்டத்தில் அமையவிருக்கும் நீச்சல்குளப் பயிற்சி மையத்தை எங்கள் ஊர் அரசுப் பள்ளியில் அமைக்க வேண்டும் என்று ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் குறுஞ்செய்தி ஒன்று எனக்கு வந்தது. ‘எங்கள் பள்ளி மாணவர்கள் நீச்சல், சிலம்பம், தடகளம், கராத்தே, டேக்வாண்டா, வாள்வீச்சு எனப் பல போட்டிகளில் தேசிய அளவில் பதக்கங்கள் வென்றுள்ளனர்’ என்றும் அந்தக் குறுஞ்செய்தி பெருமிதமாகச் சொன்னது. ஊர்ப்பெயரைப் பார்த்தவுடன் புன்னகை அரும்பியது.
‘அலங்காநல்லூர்!’
- நடை பயில்வோம்...
சபைக் குறிப்பு:
உலகப் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள் குறித்த ஆவணப் படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு அதிகம். குத்துச்சண்டை உலக சாம்பியன் பட்டத்தை முகமது அலி வென்ற வரலாறு, ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் எழுச்சியோடு பொருந்திவருவதை அழகிய விதத்தில் படமாக்கபட்டு விருதுகள் பல வென்றது - When we were Kings.

பிரேசிலின் புகழ்பெற்ற ஃபார்முலா 1 கார்ப் பந்தய வீரரின் நான்காவது உலக சாம்பியன் கனவுகள் ஒரு விபத்தில் சிதைந்த சோகம் - Senna