
திரைக்கதை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, பின்னணி இசை - இவைதாம் உலகத் திரைமொழியின் அடிப்படை இலக்கணம்...
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அந்தப் பயணம் தொடங்கியது. கண்களில் பெருங் கனவும், மனதில் நிரம்பிவழியும் தன்னம்பிக்கையுமாக முதல் தலைமுறைப் பட்டதாரிகள் நான்கு பேரும் தலைநகர் தில்லியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். மே மாத வெயில் சுட்டெரிக்கிறது. கோடைக்காலத்தில் பயணிக்கும் ரயில்களுக்கு `நகரும் பாலைவனம்’ என்று பெயரிட்டால் பொருத்தமாக இருக்கும் என்று புன்னகைத்துக் கடந்து செல்கிறோம். ஒவ்வொருவரின் கரங்களிலும் விதவிதமான புத்தகங்கள். நாட்டு நடப்புகளை அலசும் பருவ இதழ் ஒருவரிடம்; பொருளாதார நிகழ்வுகளைக் கசக்கிப் பிழிந்து கொடுக்கும் கையடக்கப் பதிப்பு ஒருவர் கையில்; வேளாண் துறையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த ஆராய்ச்சியில் மற்றொருவர்.
ஆம், அனைவரும் ஐ.ஏ.எஸ் நேர்முகத் தேர்வுக்காக தில்லி சென்றுகொண்டிருக்கிறோம். எதிர் இருக்கையில் சப்பாத்தி, தயிர் சாதத்துடன், அன்பையும் பகிர்ந்துகொள்ளும் முதிய தம்பதி. மதிய வேளையில் ரயில் நாக்பூரில் நின்றபோது மெதுவாகப் பேச்சு கொடுக்கிறார் அந்த முதியவர். ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியாம். தேசியமயமாக் கப்பட்ட வங்கிகளின் சேவை குறித்துகூடக் கேள்விகள் கேட்கப்படலாம் என்று அவராகவே சொற்பொழிவாற்றத் தொடங்கினார். நண்பர்கள் சிறிது நேரத்தில் நழுவிவிட நிராயுதபாணியாக நின்றிருந்த நான் இலக்கானேன். `மற்றவர்கள் எல்லாம் அரசியல், அறிவியல் என்று படித்துக் கொண்டிருக்க, நீங்கள் மட்டும் வேறு ஏதோ புரட்டிக்கொண்டி ருக்கிறீர்களே’ என்றார் அந்த முதியவர். என் கைகளில் உலக சினிமா குறித்துச் சில புத்தங்கள்... புதிராகத்தான் தோன்றியிருக்கும் அவருக்கு. `ஐ.ஏ.எஸ். நேர்முகத் தேர்வு விண்ணப்பத்தில் என்னுடைய பொழுதுபோக்கு `Film Appreciation’ என்று போட்டிருப்பதால் அதுகுறித்து ஏதேனும் கேள்விகள் கேட்கப்படலாம். அதற்காகத்தான்’ என்று சொல்லி நிமிர்ந்து பார்த்தால் ஆர்வத்துடன் முதியவரின் கண்கள் விரிகின்றன. ரயில் சிநேகம் துளிர்க்கும் தருணம் ஓர் அழகிய கவிதைதான். அடுத்த சில மணி நேரம் அகிரா குரோசோவின் ‘ரஷோமன்’ திரைக்கதை, ஐஸன்ஸ்டீனின் ‘மான்டேஜ்’ படத்தொகுப்பு, பதேர் பாஞ்சாலியின் ரயில் வருகைக் காட்சிகள் எனப் பொழுது போனதே தெரியாத அளவுக்கு உரையாடல் நீள்கிறது. தில்லி ரயில் நிலையத்தில் வாழ்த்துகளுடன் கைபற்றிக் குலுக்கி விடைபெற்றார். யு.பி.எஸ்.சி நேர்முகத் தேர்வுக்காக அன்று அமைக்கப் பட்டிருந்த ஆறு அமர்வுகளில், கடும் கேள்வி களையும், மதிப்பெண் வழங்குவதில் மிகுந்த கறார்த்தன்மையும் கொண்ட ஓர் அமர்வுக்குள், ஐந்தாவது நபராக உள்ளே நுழைகிறேன். இந்தியாவின் தொழில்நுட்பப் புரட்சி, உலகப் பொருளாதாரத்தில் ஜி-7 நாடுகளின் பங்கு என்றெல்லாம் கேட்டவர்கள், என் பொழுதுபோக்கு குறித்து எதுவுமே கேட்கவில்லை. என் வாழ்வில் நான் கலந்துகொண்ட ஒரே ஒரு நேர்முகத் தேர்வில் ஏமாற்றத்தின் சாயல் படர்ந்தாலும் திரைமொழிமீதான ஆர்வம் மட்டும் இன்றும் தொடர்கிறது.

திரைப்படங்கள் பற்றிய எனது பார்வையில் , விறுவிறுப்பான திரைக்கதை, பொருத்தமான ஒளிப்பதிவு, நேர்த்தியான படத்தொகுப்பு, உயிரோட்டமான பின்னணி இசை - இவைதாம் உலகத் திரைமொழியின் அடிப்படை இலக்கணம் என்பேன். உலகப்போர் குறித்து சமீபத்தில் வெளியான இரு படங்கள் சிறந்த தொழில்நுட்பப் பயன்பாட்டுக்கெனப் பரிசுகள் பல வென்றன. ‘1917’-முதல் உலகப் போர் குறித்த இந்தத் திரைப்படம் முழுவதுமே ஒரே ஒரு ஷாட்டில் படமாக்கப்பட்டது போன்ற உணர்வைத் தரும். `The Shawshank Redemption’, `Blade Runner 2049’ ஆகிய படங்களை ஒளிப்பதிவு செய்த Roger Deakins இந்தப் படத்தில் துல்லியத் திட்டமிடுதல் மூலம் அந்தச் சாதனையை நிகழ்த்தியிருப்பார். படம் முழுவதும் பார்வையாளரைப் பதுங்கு குழிகளுக்கும் போர்முனைக்கும் கரம்பிடித்து அழைத்துச் செல்லும். காமிரா ஒரு பாத்திரமாகவே காட்சிக்குள் உலவும். அதேபோல், `Dunkirk’ இரண்டாம் உலகப் போரில் வீரர்களை வெளியேற்றும் போர்முனைக் காட்சிகள்... ஒரு வார கால ராணுவ முற்றுகை, ஒரு நாள் கடல் வழி முயற்சி, ஒரு மணி நேர வான்வழித் தாக்குதல் – இவை மூன்றையும் `Non-linear’ முறையில் இணைத்து கிறிஸ்டோபர் நோலன் உருவாக்கிய இத்திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் சிறந்த படத்தொகுப்பு மற்றும் ஒலிக்கலவைக்காக ஆஸ்கர் விருதுகளையும் வென்றது. அதேபோல் 40 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ‘The Black Stallion’ படத்தின் முதற்பாதியில் வசனமே கிடையாது. கடற்கரையில் ஒதுங்கிய ஒரு சிறு குழந்தையும், குதிரை ஒன்றும் நட்புடன் உறவாடி வெற்றி பெற்ற கதையை உயிர்ப்புடன் நகர்த்தியது அதன் பின்னணி இசைதான்.

ஒரு திரைப்படத்தின் இறுதிக்காட்சி மகத்தானதாக அமைந்தது சார்லி சாப்ளினின் ‘The Great Dictator’ படத்தில்தான். சர்வாதிகாரத்திற்கும், கொடுங்கோன்மைக்கும் எதிராகக் குரல் கொடுத்து உலக அமைதியை வலியுறுத்திய அந்த ஐந்து நிமிடப் பேச்சு, காலத்தை வென்ற திரைத்தொகுப்பு. அதேபோல், தமிழ்த் திரையுலகிலும் ஒரு சிறந்த படைப்பு உண்டு. ஊர்மக்களின் ஒட்டுமொத்த வெறுப்புக்குள்ளாகி, மனைவி இறக்கவும் மனைவியின் தங்கையுடைய வாழ்வைச் சிதைக்கவும் முயன்ற பண்ணையாருக்கு கிராமமே ஒன்றுகூடிக் கடுந்தண்டனையை வழங்குகிறது. நீச்சல் தெரியாத அந்த நபர் தானே குளத்தில் இறங்கி உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டும். தன் முடிவைத் தேடி நடக்கும் முன் தன் இரு குழந்தைகளை வாரியணைத்துக் கொஞ்சுவது, தனக்கு எதிராகத் தீர்ப்பளித்தவர்களைப் பார்த்து `என்னைப் போல் உங்களையும் கெட்டவர்களாக் கியதுதான் நான் செய்த மிகப்பெரிய தவறு’ என்று சொல்வது, தற்கொலையைத் தடுக்க முடியாத இளைஞரின் பரிதவிப்பு, தந்தையின் மரணத்தை உணராத ‘உதிரிப்பூக்களாய்’ அந்த இரு குழந்தைகள்... உயிரோட்டமான பின்னணி இசையுடன், இவ்வளவு வலிமையான ஓர் இறுதிக்காட்சி வேறெந்தத் தமிழ்ப்படத்திலும் இடம்பெற்றிருக்கிறதா என்று தெரியவில்லை. புதுமைப்பித்தனின் ‘சிற்றன்னை’ எனும் இலக்கியப் படைப்பைத் திரைமொழிக்கேற்ப செதுக்கிய இயக்குநர் மகேந்திரன் ஓர் கனவுலகச் சிற்பி.
சினிமா எனும் கலைக்கு இந்தியர்களின் முதற்கொடை இசைப்பாடல்களும், இடைவேளையும். சென்ற வருடம், வாஷிங்டன் நகருக்கு அருகே ஓரிடத் தில் கல்லூரிக் கால நண்பர்களுடன் இரவு உணவு அருந்தியபடி வசந்தகால நினைவுகளுடன் மூழ்கிப் போயிருந்தோம். பேச்சும் மனமும் தமிழகத்தைச் சுற்றியே வந்ததில் வியப்பேதுமில்லை. எதிரெதிர் துருவங்களாய் இருந்த உச்ச நட்சத்திர நடிகர் களின் திரைப்படக் காட்சிகளை இப்போது கேலி கிண்டலுடன் எளிதில் கடந்துசென்ற எங்களால், இளையராஜாவின் இசை சாம்ராஜ்யத்தை விட்டு மட்டும் விலகிச் செல்ல முடியவில்லை.

ஒவ்வொருவரும் தனக்குப் பிடித்த பாடல் வரிகளைப் பாடி மகிழ்ந்தோம். பாடலின் இசை நுணுக்கம், ராக ஆலாபனை குறித்து ஒருவர், இசைக் கருவிகள் நிகழ்த்தும் அற்புதங்கள் குறித்து மற்றொருவர், காதலில் தோய்ந்த வைரமுத்துவின் கவித்துவத்தில் மயங்கிய குரல் ஒன்று என நேரம் கடந்தது. பல்வேறு நிலப்பரப்புகளின் இசைக் குறிப்புகள் இழையோடுவதால்தான், நெடுந் தொலைவுப் பயணங்களின் வழித்துணையாக அவரது இசை என்றும் உடன் வருகிறது என்றேன் நான். இளையராஜாவின் தலைசிறந்த பத்து இசைக் கோவைகளைப் பட்டியலிடத் தொடங்கினோம். அதில் ஒருமனதாக முதலிடம் பெற்ற பாடல் ‘அந்தி மழை பொழிகிறது.’ கண்பார்வை இழந்த நாயகனுக்கு மழைத்துளியின் முன்னறிவிப்பு போல மிருதங்க ஒலியுடன் தொடங்கும் பாடல், கிட்டாரின் உதவியோடு காற்றும் மழையும் ஒன்றுகூடி அருவியாய்ப் பொழியும். பின்னர் வயலினின் அரசாட்சி. இடையிடையே இனம்புரியா சோகத்தைத் தூவும் ஆலாபனை. தண்ணீரில் மூழ்கிக்கொண்டே தாகம் என்றவர்களை நோக்கிய ராஜபார்வைதான் அந்தப் பாடல்.

ஆழ்ந்த இளையராஜா ஆராய்ச்சியில் திளைத்திருந்த எங்களை ஒரு நண்பரின் குழந்தைகள் மட்டும் வித்தியாசமாகப் பார்த்துக் கொண்டிருந்தன. திடீரென அந்த நண்பரின் மகன் உரையாடலுக்குள் நுழைகிறான். `` ‘சின்னச் சின்ன ஆசை’ பாடலில் கரீபியன் தீவுகளின் ‘ரெக்கே’ வகை இசைக்குறிப்புகள் பயன்படுத்தப் பட்டுள்ளது தெரியுமா’’ என்றவன், கஜல், ஜாஸ் வகை இசை மரபுகளின் தாக்கம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் எப்படி இருக்கும் என்று பட்டியலிடத் தொடங்கினான். இரு தலைமுறைகளின் பார்வையும் ரசனையும் இயல்பாய் மாறி வருகின்றன. எனினும் இந்த இரு இசைத்தமிழர்களின் சாதனைகள் மகத்தானவை. வேற்றுமொழிப் பாடல்கள் மூலம் நிகழவிருந்த பண்பாட்டு ஊடுருவலைத் தனிநபராகத் தடுத்தது மட்டுமல்ல... தமிழ் மரபிசையைத் தமிழருக்கே அறிமுகம் செய்தவர் இளையராஜா. மறுபுறம் தொழில்நுட்பக் கனவோடு உலகை வலம் வரத் தொடங்கிய தமிழ் இளைஞர்களுக்கு உற்ற தோழனாய் உலக இசை மரபுகளை உள்வாங்கி உடன் பயணித்தது ஏ.ஆர்.ரஹ்மானின் இசை.
உரையாடல் இயல்பாய் நகர்ந்து. இசை, கவிதை, காட்சி என விரிந்தது. திடீரென்று நண்பர்களுள் ஒருவன், `பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து கூட்டணி தொடர்ந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்’ என்றான். தமிழகத்தை விட்டு வெகுதூரம் விலகிச்சென்று இருபத்தைந்து ஆண்டுகள் கழிந்தும் அந்த ஏக்கம் இன்னும் தீரவில்லை. தமிழ்த் திரையுலகில் நடந்த பெருஞ்சோகம் அதுதான். பாரதிராஜாவின் படத் தலைப்புகளின் கவித்துவம், வைர வரிகளின் ஓசை நயம், இசை ஞானியின் இசைக்கோவை நெய்திடும் வண்ணக் கனவுகள் –இந்த வெற்றிக் கூட்டணி ஏற்படுத்திய அதிர்வுகளைத் தமிழ்ச் சமூகம் என்றென்றும் தன் நினைவில் ஏந்திப் பாதுகாக்கும்.

சினிமா என்னும் கலை உலகெங்கும் பரவினாலும் இடத்திற்கேற்ப கொஞ்சம் நெகிழ்ந்துகொடுக்க முன்வந்தது. உலகத் திரைப்படங்கள் எல்லாம் சமகால அரசியல், உயர்தர நகைச்சுவை, புதுப்புதுத் தொழில்நுட்ப யுக்திகள் என உற்சாகமாகப் பயணம் மேற்கொள்ள, இந்தியத் திரைப்படங்களோ நாடகத் தாக்கத்திலும், பிரிட்டிஷ் தணிக்கையைத் தவிர்க்கவும் தொடக்கத்தில் புராணக் கதைகளையே பெரிதும் சார்ந்திருந்தன. ஆழமாக யோசித்துப் பார்த்தால் `சினிமா என்னும் திரை மொழியின் அழகியல் உன்னதங்களை முழுவதுமாக உள்வாங்கிடாமல் ஓர் மாயவலைக்குள் சிக்கிக்கொண்ட தமிழ்ச் சமூகம்’ என்றே இருபதாம் நூற்றாண்டின் வரலாறு குறித்துக்கொள்ளக்கூடும். அது மட்டுமல்ல, வரலாறு நெடுகிலும் மூவேந்தர்களுக்கு இடையே முரண், பல்வேறு இனக்குழுக்களுக்கு இடையே பிரிவும் மோதலும் எனச் சுழன்றுகொண்டிருந்த தமிழ்ச் சமூகம் முதன்முறையாக சமூக, அரசியல், பண்பாட்டுத் தளங்களிலும் நேரெதிர் இரு துருவங்களுக்கு இடையே வாழ்ந்திடப் பழகிக்கொண்டதையும் குறிப்பிட வேண்டும்.
நூறு ஆண்டுக் காலத் தமிழ் சினிமா வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், திரைப்படத்தின் தலைப்புகளில் மட்டுமல்ல, கதைப் பாத்திரங்களின் பெயரிலும் ஆழ்ந்த பொருளுண்டு. `வியட்நாம் வீடு’, `கிழக்குச் சீமையிலே’, `எஜமான்’, `வடசென்னை’ எனத் தமிழ்த் திரைப்படங்களின் கதைக்களமும், நாயகர்களின் பெயரும், பேச்சுவழக்கும் மாறிக் கொண்டேயிருப்பது தமிழ்ச் சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களின் நிழல் திரையுலகம் நோக்கியும் நீள்கிறது. கதையின் நாயகர்கள் உள்ளூரிலிருந்து எழுச்சி பெற, நாயகிகள் மட்டும் ஏன் தொடர்ந்து இறக்குமதி செய்யப்படுகிறார்கள்? கொடூர மனம் படைத்த வில்லன்களைத் தேடி அண்டை மாநிலங்கள், வட இந்தியா தாண்டி சீனா, ஆப்பிரிக்கா வரை நம்மவர்கள் படையெடுக்க உளவியல் காரணம் ஏதேனும் உண்டா? திரையில் தோன்றும் நகைச்சுவை நடிகர்களின் பெயர், நிறம், பேச்சுவழக்கு மட்டும் ஏன் மாறுபட்டு இருக்கின்றன? மரபு மீறலும், சட்டத்தை வளைக்கவும் துணிகின்ற பாத்திரங்களின் பெயர்களில் உள்ள ஒற்றுமையைக் கவனித்தது உண்டா? ஆழ்ந்த ஆய்வுக்குரிய கேள்விகள் இவை.
தமிழர்களின் இணைபிரியா உறவாகிப்போன திரை அனுபவங்கள் குறித்து நேரடியாய் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு பதினைந்து வருடங்களுக்கு முன் கிடைத்தது. சென்னை மாநகராட்சிப் பகுதியில் சுனாமி நிவாரணப் பணிகளைப் பார்வையிட, தலைநகர் தில்லியிலிருந்து வருகை புரிந்த உயர்மட்டக் குழுவினரோடு பயணம் செய்துகொண்டிருந்தேன். காசிமேட்டுத் துறைமுகம் அருகே ஒரு பெண் சோகம் கவிந்த தன் கதையைக் கூறிக்கொண்டிருக்கிறார். ஆழிப் பேரலையில் வயதான தன்னுடைய தாயையும், பத்தே வயதான தன் மகளையும் ஒரு சேரப் பறிகொடுத்துச் சில நாள்கள்தான் ஆகின்றன. கண்களில் நீர் வற்றிப்போய் எதிர்காலத்தையே இழந்த நிலையில் அந்த ஞாயிற்றுக்கிழமை காலை என்ன நடந்தது என்று விவரிக்கும்போது, அந்த நேரத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நகைச்சுவைத் தொடரின் பெயரை அந்தச் சோகத்திலும் குறிப்பிட்டுச் சொன்னதைக் கேட்டு எங்களுக்கு நெகிழ்ச்சியாகவும் வியப்பாகவும் இருந்தது. அந்தத் தொடரின் பெயர், `மீண்டும் மீண்டும் சிரிப்பு.’

இப்படித்தான் தமிழ்ச் சமூகத்தில் தவிர்க்க முடியாத இழையாக மாறிப்போனது சினிமா. தொடக்கத்தில் தமிழ்நாட்டின் குக்கிராமங் களுக்கும் விரிவுபடுத்தப்பட்ட மின்வசதி, நகரும் திரையரங்கங்களைப் பாமரருக்கு அருகே கொண்டு சேர்க்கிறது. இருள் கவிந்த அந்தத் திரையரங்கில் சாதி, மத வேற்றுமைகளைத் தற்காலிகமாக மறந்திட்ட தமிழர்கள் கனவுலகில் மூழ்கிப்போனார்கள். தங்கள் அபிமான நட்சத்திரங்களின் உதவியோடு உள்ளூர்ச் செல்வந்தர்களை வீழ்த்தவும், நிறைவேறாத காதலை நனவாக்கிடவும் துடித்தார்கள். தேவைப்பட்டபோதெல்லாம் பயன்படுத்தப்படும் மயக்க மருந்தாகிப்போனது தமிழ் சினிமா.
மிகப் பொருத்தமான பெயர்தான் - `கனவுத் தொழிற்சாலை.’
- நடை பயில்வோம்...
சபைக் குறிப்பு.
வெற்றிபெறும் ஒவ்வொரு திரைப்படமும் ஒரு புதிய செய்தியைக் குறிப்பால் உணர்த்துகிறது. சமூக முரண், விளிம்பு நிலை மக்களின் எழுச்சி, புரிந்துகொள்ளப்படாத பெண்மை என, கடந்த ஐம்பதாண்டுக்காலத் தமிழ்த் திரையுலகில் முத்திரை பதித்த சில படங்கள் – என் பார்வையில்:
உதிரிப்பூக்கள், பதினாறு வயதினிலே, அவள் அப்படித்தான், முள்ளும் மலரும், முதல் மரியாதை, தண்ணீர் தண்ணீர், பேசும் படம், ஹேராம், இருவர், அங்காடித் தெரு, பிதாமகன், ஆடுகளம், பரதேசி, பருத்தி வீரன், விசாரணை, பரியேறும் பெருமாள்.
சிறந்த அயல்மொழித் திரைப்படங்கள்: Bicycle Thieves, Modern Times, The Great Dictator, 12 Angry Men, Rashomon, The Godfather, Schindler’s List, The Shawshank Redemption, Braveheart, The Prestige.
- உதயச்சந்திரன்