மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாபெரும் சபைதனில் - 33

மாபெரும் சபைதனில்
பிரீமியம் ஸ்டோரி
News
மாபெரும் சபைதனில்

என் அலுவல் பயணத்தின் நிறைவேறாக் கனவுகளுள், பெரும் ஏமாற்றங்களில் இதுவும் ஒன்று...

சரியாக 12 ஆண்டுகளுக்கு முன்... ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கருகே அரசு விருந்தினர் மாளிகையில் அலுவலர்கள், வேளாண்துறை அதிகாரிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் அனைவரும் கூடியிருக்கின்றனர். அலுவலர்களின் கரங்கள் புள்ளிவிவரங்களைச் சரிபார்த்துக்கொண்டிருக்க, விவசாயிகளோ எதிர்வரும் பயிர் அறுவடை குறித்த கவலைகளைப் பகிர்ந்துகொண்டிருந்தார்கள். அனைவரும் சென்னையிலிருந்து வருகை புரியும் பொதுப் பணித்துறைச் செயலர் ஆதிசேஷையாவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.

குறித்த நேரத்துக்கு வந்துசேர்ந்த செயலர், “காலதாமதம் செய்யாமல் நேரடியாக விவசாயிகளைச் சந்திக்கலாமே” என்கிறார். அனைவரும் அந்த வளாகத்திற்குள் நுழைகிறோம். செயலரை மிகச் சுருக்கமாக வரவேற்றுவிட்டு, “அந்தப் புதிய திட்டத்தை விளக்குங்கள்” என்று கீழ்பவானி விவசாய சங்கத் தலைவர் ஒருவரை அழைக்கிறேன். அந்தப் புதிய திட்டத்தை கலெக்டர் அல்லது பொதுப் பணித்துறை அதிகாரிகள் விளக்கிச்சொல்வார்கள் என்று எதிர்பார்த்த அரசுச் செயலருக்கோ விவசாயி ஒருவர் திட்ட வரைவைக் கரங்களில் ஏந்தி முன்வந்ததில் கொஞ்சம் ஆச்சர்யம்.

மாபெரும் சபைதனில்
மாபெரும் சபைதனில்

விவசாயிகள் சங்கத் தலைவர் அழுத்தந்திருத்தமாகப் பேசத் தொடங்குகிறார். “கீழ்பவானி பாசனத் திட்டத்தின் கீழ், இரண்டு லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. தற்போது, அதை இரு சம பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு பகுதிக்கும் ஒருவருடம் நெல் பயிரிட 24 டி.எம்.சி நீரும் அடுத்த வருடம் கடலை பயிரிட 12 டி.எம்.சி நீரும் பங்கீடு செய்து வழங்கப்படுகிறது. இந்தப் பழைய முறைக்குப் பதிலாக, இரண்டு லட்சம் ஏக்கர் பரப்புக்கும் அதே 36 டி.எம்.சி நீரைக் கொண்டு வருடம் முழுவதற்கும் 300 நாள்கள் மூன்று போகம் நெல், வாழை, கரும்பு பயிரிடும் வகையில் தண்ணீர் வழங்கும் நவீன சொட்டு நீர்ப் பாசனத் திட்டம்தான் இது” என்று அவர் பெருமிதத்துடன் தொடங்கி திட்டத்தை விவரிக்கிறார். செயலர் வியப்பில் உறைந்திருக்கிறார். நான் மென்மையாகப் புன்னகைத்துக்கொண்டிருக்கிறேன்.

அடுத்து களமிறங்குகிறார், வேளாண் பொறியியல் துறையின் உதவிச் செயற்பொறியாளர் பாலன். தமிழ் ஆர்வலர். புள்ளிவிவரங்களோடு பேசத் தொடங்குகிறார். “முதலில் முன்மாதிரியாக, கீழ்பவானி அணையின் தலைப்பகுதியில் ஆயிரம் ஏக்கரில் செயல்படுத்தப் போகிறோம். முப்பது ஏக்கருக்கு ஒரு பாசனக் குட்டை என அமைத்து, சொட்டுநீர்ப் பாசனக் குழாய்கள் மூலம் ஆயிரம் ஏக்கருக்கும் நீர் வழங்க ஏற்பாடு. தாழ்வான கீழ்ப்பகுதிக்குப் புவியீர்ப்பு விசை மூலமாகவே நீர் செல்ல முடியும் என்பதால் மின் தேவை பாதியாகக் குறையும். இப்போது விநாடிக்கு 6.25 கன அடி நீர் 120 நாள் என வழங்குவதை விநாடிக்கு 2.5 கன அடி வீதம் நவீன சொட்டுநீர்ப் பாசனம் மூலம் 1000 ஏக்கருக்கும் வருடத்தில் 300 நாள்கள் வழங்கத் திட்டம். நன்செய்ப் பாசனம், அதுவும் மூன்று போகம் என்ற அதிசயம் நிகழ வாய்ப்பிருக்கிறது” என்று முடிக்கிறார். வியப்பில் ஆழ்ந்துபோகிறார் பொதுப்பணித்துறைச் செயலர்.

இறுதியாக நான் எழுந்து, “இத்திட்டம் நிறைவேற்றிட ஆகும் மொத்தச் செலவில் பாதியை அரசு மானியமாக வழங்கும். மற்ற மாவட்டங்களில் செலவழிக்க முடியாத நிதியை ஈரோடு மாவட்டத்திற்கு மடைமாற்றிட அரசுக்குக் கோரிக்கை வைத்திருக்கிறோம். பாதித் திட்டச் செலவைக் குறைந்த வட்டியில் வங்கிகள் கடனாக வழங்கும். கரும்பு விவசாயிகளுக்கு உதவிபுரிய சர்க்கரை ஆலை நிர்வாகம் முன்வருகிறது. அரசிடமிருந்து எங்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் இந்த முன்மாதிரித் திட்டம் செயல்படுத்தப்படப்போகும் ஆயிரம் ஏக்கருக்கு 120 நாள்களுக்கு வழங்கி வரும் அதே நீரை வருடத்தின் 300 நாள்களுக்கு வழங்கிட சிறப்பு அனுமதி மட்டுமே” என்று விளக்குகிறேன்.

கூட்டம் முடிந்து, ஈரோட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும்போது என்னைப் பார்த்து “உங்கள் மாவட்டத்தில் மட்டும் எப்படி இது சாத்தியமாகிறது” என்று கேட்டார் செயலர். “காளிங்கராயன் பிறந்த ஊரில் இது இயல்புதான்” என்கிறேன். 750 ஆண்டுகளுக்கு முன் காவிரியும் அதன் கிளைநதி பவானியும் இணையும் கூடுதுறைக்கு முன் கட்டப்பட்ட அணைக்கட்டும் அதிலிருந்து வளைந்து நெளிந்து 90 கி.மீ. பயணம் செய்யும் கால்வாயும் 15,000 ஏக்கருக்குப் பயன்தருகிறது. 12 ஆண்டுகள் உழைத்து அணை கட்டிய காளிங்கராயன் இம்மக்களுக்கு ஓர் காவல் தெய்வம் என்று விவரித்துக்கொண்டே வந்ததில் ஈரோடு நெருங்கியதே தெரியவில்லை.

முல்லைப் பெரியாறு அணைக் கட்டுமானப் பணியின்போது...
முல்லைப் பெரியாறு அணைக் கட்டுமானப் பணியின்போது...

சென்னை திரும்பியவர் புதிய திட்டத்தைச் செயல்படுத்த அரசின் சிறப்பு அனுமதியை ஒரே மாதத்திற்குள் பெற்றுத் தந்ததில் அனைவருக்கும் ஆச்சர்யம். செயலருக்கு நன்றி தெரிவித்துக் கடிதங்கள் பறந்தன. சொட்டுநீர்ப்பாசனத் திட்டத்தை நிறைவேற்றிட நடவடிக்கைகள் தொடர்ந்தன.

இதற்கிடையில், ஆறு வாரப் பயிற்சிக்காக முசௌரி மற்றும் தென்கொரியாவுக்கு நான் செல்ல வேண்டியிருந்ததால், திரும்பி வருவதற்குள் திட்டம் முழுமையாக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தி, கோவையிலிருந்து தில்லி நோக்கிப் பயணமாகிறேன். பயிற்சி தொடங்கி ஏழாவது நாள் எதிர்பாராதவிதமாக ஈரோட்டிலிருந்து சென்னைக்கு இடமாறுதல் வந்தது. காட்சிகள் மாறின. நவீனப் பாசனத் திட்டத்தின் வேகம் குறைந்து நின்றேபோனது. அதற்குப் பிறகு ஒவ்வொரு முறை ஈரோடு செல்லும்பொழுதும் நிறைவேறாமற்போன இத்திட்டம் குறித்துப் பேசிக்கொள்வோம். இன்னும் கொஞ்சம் விரைவாகச் செயல்படாமற்போனது என் தவறுதான் என்று நானும், தொடர் வலியுறுத்தலைக் கைவிட்டது எங்களுடைய தவறுதான் என்று விவசாயிகள் சங்கத் தலைவர்களும் துக்கத்தை ஒருவரையொருவர் பகிர்ந்துகொள்வோம்.

திரும்பிப் பார்த்தால் என் அலுவல் பயணத்தின் நிறைவேறாக் கனவுகளுள், பெரும் ஏமாற்றங்களில் இதுவும் ஒன்று.

நீர்வழிப்பாதையை திசைதிருப்பும் முயற்சிகள் நினைத்த மாத்திரத்தில் நடந்துமுடிவதில்லை. வரலாறு நெடுக அதுகுறித்த முயற்சிகள், நிறைவேற்ற முற்படும்போது கிடைத்த அவமானங்கள் என அனுபவங்கள் சிதறிக் கிடக்கின்றன.

வரலாற்றில் கரிகாலன், காலிங்கராயன் வரிசையில் ஒரு ஆர்தர் காட்டன். இவர் பிரிட்டிஷ் பொறியாளர். தன்னுடைய 26வது வயதில் காவிரிப் பாசனப் பகுதிக்குப் பொறுப்பாளராக நியமிக் கப்பட்டு, ‘இந்திய நீர்ப்பாசனத்தின் தந்தை’யாக உயர்ந்தது சாதனை மிகு வரலாறே. கல்லணையில் மணல் மேடுகளால் நீரோட்டம் தடைப்பட்டி ருப்பதற்கும், முக்கொம்பில் விவசாயக் கழிவு களைக் கொண்டு உருவாக்கப்படும் தற்காலிக அணை உடைந்து போவதற்கும் தீர்வுகாண முயன்ற காட்டன், ஆழம் காண முடியாத ஆற்று மணற்படுகையில் அடித்தளம் அமைக்கும் பழந்தமிழரின் தொழில்நுட்பத்தை அறிந்து வியக்கிறார். அந்தத் தருணம்தான் தென்னிந்தியாவின் எதிர்கால வளத்தையே தீர்மானித்தது.

ஆம். கரிகாலனுக்கு நன்றி செலுத்தி காட்டன் விரைந்து பணியாற்றத் தொடங்கினார். கொள்ளிடத்தின் குறுக்கே அவர் கட்டிய மேலணை, தஞ்சை டெல்டா பகுதி முழுக்கப் பாசன நீரைப் பகிர்ந்தளிக்க உதவி செய்தது. காவிரியில் வெள்ளம் கரைபுரண்டோடிய காலங்களில் உபரி நீரைச் சேமிக்கக் கட்டப்பட்ட கீழணை மூலம் நாகை முதல் வீராணம் வரை லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பயன்பெற்றன. நவீன கால வரலாற்றில், தஞ்சை நெற்களஞ்சியமாய் எழுச்சிபெற்றிட ஆர்தர் காட்டனின் முயற்சியே முக்கிய காரணம். காவிரிக்கரையில் பெற்ற அனுபவம் அவருக்கு கோதாவரிக் கரையிலும் கைகொடுத்தது. கோதாவரி நதியின் குறுக்கே கட்டப்பட்ட தெளலீஸ்வரம் அணை உட்பட மிகக்குறைந்த செலவில், மிகப்பெரிய அணைக்கட்டுகளை விரைவாகக் கட்டி முடித்திடும் திறன் பெற்றவராக விளங்கினார் காட்டன். இதற்காக பிரிட்டிஷ் அரசுடனே அவர் முரண்பட நேர்ந்தது.

இந்தியப் பொருளாதாரத்தை உறிஞ்சும் ரயில்வே பாதைகளைவிட நீர்த்தேக்கங்கள் மூலம் அடையும் வேளாண் முன்னேற்றமே சிறந்தது என்று வாதிட்டவரை பிரிட்டிஷ் அரசாங்கம் சந்தேகக் கண் கொண்டு பார்த்தது. அவர்மீது பணிநீக்க நடவடிக்கைகளிலும் இறங்கியது. இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் மக்களுக்காக உழைத்திட்ட ஆர்தர் காட்டனின் சிந்தனையில் உதித்ததே இந்திய நதிகளை இணைக்கும் திட்டம். அதன் ஒரு பகுதிதான் பெரியாறு அணைத் திட்டம். கிடப்பில் போடப்பட்ட அந்தத் திட்டத்தை மீண்டும் தூசிதட்டி எடுத்திட ஒரு பேரழிவு தேவைப்பட்டது.

222 ஆண்டுகளுக்கு முன், வறண்டுபோன தென் தமிழகத்தில் நீர்வளம் பெருக்கிட இராமநாதபுரம் மன்னர் சேதுபதி வழி தேடுகிறார். அவருடைய அமைச்சர் முத்து இருளப்பர் தலைமையில் ஒரு குழு மேற்குத் தொடர்ச்சி மலைக்குச் சென்று ஆய்வு மேற்கொள்கிறது. பெரியாற்றின் நீர்வழிப்பாதையை மாற்ற முடியும் என்ற முடிவுக்கு வருகிறது அந்தக்குழு. எனினும் இயற்கைச் சூழலும், நிதி நெருக்கடியும் கைகொடுக்கவில்லை. நாற்பது ஆண்டுகள் கழித்து முல்லையாற்றின் நீரை மண் அணை கட்டித் திருப்பிட நடந்த முயற்சியும் தோல்வியில் முடிகிறது. வறண்டுபோன தென் தமிழகத்தின் நீர்த்தேவை கானல் நீராய்க் காட்சியளிக்கத் தொடங்கியது... காலமோ பொறுமை காத்தது.

ஆர்தர் காட்டன்
ஆர்தர் காட்டன்

1876-ம் ஆண்டின் தாது வருடப் பஞ்சத்தில் சென்னை மாகாணத்தில் லட்சக்கணக்கானோர் மடிந்தனர். இந்தத் தாது பஞ்சத்தின் பேரழிவு, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மனசாட்சியை உலுக்கியது. உறங்கிக்கொண்டிருந்த, ஆர்தர் காட்டனின் கோப்பைப் புரட்டிப் பார்த்தபோது அவர் பரிந்துரைத்த பல திட்டங்களில் ஒன்றாக முல்லைப் பெரியாறு அணைத்திட்டம் காலத்தால் உறைந்துபோய் இருந்தது. அந்த அணைத் திட்டத்தை நிறை வேற்றிடச் சரியான ஒரு நபரைத் தேடிக் கண்டுபிடித்தார்கள். அவரோ சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார். சிறந்த ஆல் ரவுண்டரான அவர் போட்டியின் முதல் விக்கெட்டை வீழ்த்துவதில் வல்லவர். அவர் பெயர் கர்னல் ஜான் பென்னி குயிக்.

19-ம் நூற்றாண்டின் மாபெரும் பொறியியல் அதிசயத்தை நிகழ்த்திக்காட்ட பென்னிகுயிக் செய்த தியாகங்கள் பல. சக பொறியாளர்களின் சந்தேகப் பார்வை, உயர் அதிகாரிகளின் கேள்விக் கணைகள் எனப் பல தடைகளைத் தாண்ட வேண்டி இருந்தது. 75 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 1887-ல் தொடங்கி எட்டு ஆண்டுகள் நடைபெற்ற கட்டுமானப் பணியின் சிறப்புகளைப் பட்டியலிட்டால் இன்றும் மெய்சிலிர்க்கிறது. பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி களின் மேற்பார்வையில் தொழிலாளர்களின் மன உறுதி, குணநலன்களைப் பரிசோதிக்கும் மனோதத்துவ முறைப்படி நடைபெற்ற ‘கூலித் தேர்வில்’ அன்றைய மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி மக்கள் பங்கு பெற்றனர். கட்டுமானப் பொருள்களை எடுத்துச் செல்ல சாலை, நீர்வழிப் போக்குவரத்து மட்டுமன்றி டிராம், கம்பி வடம் மற்றும் சரக்கு ரயில் இயக்கவும் தண்டவாளங்கள் போடப் பட்டன. திருப்பி விடப்பட்ட பெரியாற்று நீரைக் கொண்டு வர, மலைக்குள் 5,900 அடி தூரம் சுரங்கம் அமைக்கப்பட்டது. செங்கல் தூள், சுண்ணாம்புக் கலவையுடன் அப்போதுதான் இங்கிலாந்தில் பரவலாக அறிமுகமாகியிருந்த போர்ட்லேண்ட் சிமென்ட்டும் பயன்படுத்தப்பட்டது. ஒரு சதுர அடி அளவுள்ள அடித் தளம் 80 டன் எடை தாங்கும்படி அமைக்கப்பட்டது. கான்கிரீட் கலவை உருவாக்க 200 குதிரை சக்தி கொண்ட இயந்திரங்கள், செங்குத்தான உயரங்களை அளந்திடும் ‘Eckhold Omnimeter’ கருவிகள் பயன்படுத்தப் பட்டன. பாறைகளைப் பிளந்திட உதவும் வெடி மருந்துகள் புகழ் பெற்ற நோபல் வெடி மருந்து நிறுவனத்திலிருந்து வரவழைக்கப்பட்டன.

பொறியியல் நிபுணர்களை இயற்கை அவ்வப்போது சீண்டிப்பார்க்கத்தான் செய்தது. தொடர் மழை, வெள்ளப் பெருக்கில் கட்டிய அணை சேதம், காலரா, விஷக்கடியில் 483 பேர் மரணம் எனப் பல விதங்களிலும் சோதனைகள் வந்தன. பெருகிவரும் வெள்ளப் பெருக்கைத் தடுத்திட வேறு வழி தெரியாமல் பணியாற்றிய அதிகாரிகள், தொழிலாளர் அனைவரும் மனிதச் சங்கிலியாய் நின்று அணை காத்த சம்பவங்களும் நடந்தன. கட்டுமானச் சிக்கலுக்கு இணையாகத் திருவாங்கூர் அரசுடனான பேச்சுவார்த்தையும் நீடித்தது. இறுதியாக 8,000 ஏக்கர் நிலம் 999 வருடக் குத்தகைக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. புவியீர்ப்பு விசையைப் பயன்படுத்திக் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணையில் வழிந்த நீர், வறண்ட வைகையை உயிர்ப்பித்தது; தென் தமிழகத்தில் இரண்டு லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றது. அதனால் வறுமை நீங்கியது. வன்முறை மறைந்தது. வளம் பெருகியது.

இதைத்தான், ‘காவல்துறை செய்ய முடியாத பணியைப் பொதுப்பணித்துறை செய்து முடித்தது’ என பிரிட்டிஷ் கால மதுரை கெசட்டியர் பெருமிதத்துடன் பதிவு செய்தது. பென்னிகுயிக் மதுரை மக்களின் காவல் தெய்வமானார்.ஆனால் இவ்வளவு சாதனைகள் புரிந்து இங்கிலாந்து திரும்பி இறந்துபோன பென்னிகுயிக்கின் கல்லறையில் பெரியாறு அணைத் திட்டச் சாதனைகள் குறித்து எதுவும் இடம்பெறவில்லை.

அவர் தன் கிரிக்கெட் வாழ்வில் எடுத்த 12,000 ரன்கள் மற்றும் 2,000 விக்கெட்டுகள் குறித்துச் சில செய்திகள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. அதனால்தானோ என்னவோ, இங்கிலாந்து தேவாலய மரபுப்படி நூறு ஆண்டுகள் கழித்து பென்னிகுயிக்கின் கல்லறை இடிக்கப்பட முடிவெடுக்கப்படுகிறது. அந்தச் செய்தி கேட்டு மதுரை, தேனி, இராமநாதபுரம் மாவட்ட மக்கள் கிளர்ந்து எழுகிறார்கள். எதிர்ப்பின் தீவிரம் இங்கிலாந்தை எட்ட, உண்மை நிலவரம் அறிய தூதுக்குழு ஒன்று தமிழகம் வருகிறது. தை மாத அறுவடைக் காலத்தில் தேனி, கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளுக்குச் சென்ற வெளிநாட்டாருக்கு இன்ப அதிர்ச்சி...

ஆம். நன்றிமறவாத தமிழர்கள் அன்று கொண்டாடிக்கொண்டிருந்தது,

‘பென்னிகுயிக் பொங்கல்!’

- நடை பயில்வோம்...

சபைக் குறிப்பு

IAS officer Udhayachandran shares his experiences part 33
IAS officer Udhayachandran shares his experiences part 33

நீர் எழுத்து - சங்க காலம் தொடங்கி சமகாலம் வரைக்குமான தமிழ்நாட்டின் 2,000 ஆண்டுக்கால நீர் வரலாற்றைப் பதிவு செய்யும் நூல் இது. நீர் நாகரிகம் முதல் நவீன நீர் தீண்டாமை வரை; நீர் மேலாண்மைத் தொழில்நுட்பம் முதல் புதிய கலைச்சொற்கள் வரை இந்த நூல் கையாண்டிருக்கும் தலைப்புகள் மிக விரிவானவை. தமிழ்ச்சமூகம் எதிர்கொண்டிருக்கும் பல சிக்கல்களுக்குத் தீர்வுகளையும் முன்வைக்கும் அரிய முயற்சி.

- உதயச்சந்திரன்