மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாபெரும் சபைதனில் - 34

மாபெரும் சபைதனில்
பிரீமியம் ஸ்டோரி
News
மாபெரும் சபைதனில்

‘இப்போதும் நீலமலையின் பசுமைக்குப் பின்னால் படர்ந்திருக்கும் மெல்லிய சோகம் யாருடைய கண்களுக்கும் தெரிவதே இல்லை’

து ஒரு டிசம்பர் மாதத் திங்கட்கிழமை... கடுங்குளிர் நிலவிய நீலகிரியில் இருபது ஆண்டுகளுக்கு முன் நான் அடியெடுத்து வைத்தது இன்றும் பசுமையாய் நினைவில் நிற்கிறது.

சிறு தேயிலை விவசாயிகளின் கூட்டுறவுத் தொழிற்சாலைகளை நிர்வகிக்கும் பொறுப்பு அது. அலுவலகத்தின் முதல் நாள்… பழைமையான கட்டடம், குளிருக்கான உலர் ஆடைகளுடன் பணியாளர்கள், பசுந்தேயிலைக்கு உரிய விலை கோரி நடந்த போராட்டத்தின் நிழல் என ஒரு புதிய உலகத்திற்குள் நுழைகிறேன்... என்னைச் சந்தித்த அலுவலர்கள் கொடுத்த தேயிலைத் தொழில் குறித்த கனமான அறிக்கைகள் மேசையில் அலட்சியமாய்ப் புன்னகைத்தன. புரட்டிப் பார்த்தால், காலங்காலமாய் விரும்பி அருந்திக்கொண்டிருந்த Dust Tea என்பது CTC வகைத் தேயிலையின் பல ரகங்களில் ஒன்று... மணம் வீசும் வகைக்கு வட இந்தியாவில் வரவேற்பு அதிகம் எனவும் அதேநேரம், தென்னிந்தியா தேநீரிலும் நிறத்தை விரும்புகிறது எனவும் புரிந்தது.

மாபெரும் சபைதனில்
மாபெரும் சபைதனில்

மதிய நேரத்தில் என்னைப் பார்க்க ஒருவர் விரும்புவதாக விசிட்டிங் கார்டு ஒன்று நுழைகிறது. நூறாண்டுகள் பழைமைமிக்க ‘Tea Broking’ நிறுவனத்தைச் சேர்ந்த அவர் ஸ்ரீராம் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு நேர்த்தியான ஆங்கிலத்தில் தேயிலைத் தொழிலின் பழம்பெருமை, உற்பத்தி நுணுக்கங்கள், சந்தை நிலவரங்களை அடுக்கினார். ‘தரமான தேயிலை உற்பத்தி செய்யாவிட்டால் நீலகிரிக்கு எதிர்காலமே இல்லை’ என்ற ஆருடம் வேறு. எனக்கோ அவர் கிரேக்க, லத்தீன் மொழியில் உரையாடியதைப்போல் உணர்வு. அதுவரை சட்டம் ஒழுங்கு, வறுமை ஒழிப்பு எனக் களமாடிவிட்டு இப்போது அறிமுகமில்லாத ஆழமான கிணற்றுக்குள் விழுந்துவிட்டதாகவே உணர்ந்தேன்.

ஓரிரு மாதங்கள் கடுமையான உழைப்பில் நிலைமை மாறியது. ஒவ்வொரு நாளும் மாலை தொடங்கி நள்ளிரவுக்குப்பின் அதிகாலை வரை நீலகிரி முழுக்க 17 தேயிலைத் தொழிற்சாலைகளில் நேரடி ஆய்வு, விவசாயிகள், வல்லுநர்களோடு தொடர் சந்திப்பு என நாள்கள் செல்லச் செல்ல தேயிலையின் மணமும், நிறமும் பிடிபட ஆரம்பித்தன. தேயிலை உற்பத்தியில் தர மேம்பாடு, ஊட்டி டீ விற்பனையைப் பெருக்கிடப் புதிய விற்பனை உத்திகள், நிதி மேலாண்மை, படுக மொழியில் பேசக் கற்றுக்கொண்ட சில சொற்கள் என நீலகிரியில் தேயிலை உலகத்திற்குள் பயணம் இதமாக மாறியது.

ஆறுமாதக் கடும் உழைப்பில் உருவான எலெக்ட்ரானிக் தேயிலை ஏல மையம் பல புதுமைகளைக் கொண்டிருந்தது. இடைத்தரகர்கள் யாருமின்றி, உற்பத்தியாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்த தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்திடும் வகையில், உடனுக்குடன் விற்பனைத் தொகையை வங்கிக்கணக்கில் செலுத்தும் நவீன முறை என்று துளிர்த்த புதுமைகளை பெருமிதத்துடன் நாங்களும் ரசிக்கவே ஆரம்பித்தோம். உலகின் தேயிலை உற்பத்தி செய்யும் இந்தியா, சீனா, இலங்கை, கென்யா உள்ளிட்ட ஏழு நாடுகளில் முதல் எலெக்ட்ரானிக் ஏல மையம் என்ற பெருமையையும், மத்திய, மாநில அரசுகளின் விருதையும், பாராட்டையும் பெற்றது. பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்தின் நிழல் படிந்த அந்தத் தோட்டப் பயிரை நோக்கித் தொழில்நுட்பக் கரம் நீண்ட தருணம் அது.

நீலகிரியில் தேயிலை அறிமுகமான வரலாறு சுவைமிகுந்தது. அதற்கு சற்றுப் பின்னோக்கிப் பயணிக்க வேண்டும். நானூறு ஆண்டுகள் முன்பு வரை இயற்கையோடு உறவாடல், நீர் வழிபாடு, பசும்புல்வெளிகளுக்கிடையே இயல்பான வாழ்க்கை என நீலமலையில் பழங்குடியினர் பரவியிருந்த காலம் அது. இப்பழங்குடியினர் ஆதியில் கிழக்கில் இருந்து வந்ததாகவும் ஒரு பகுதியினர் இங்கு தங்க, மற்றவர்கள் சமவெளிக்கு இறங்கியதாகவும் நம்பிய பழங்குடியினர் மத்தியில் விவிலியத்தின் சுவடு தேடி வெளிநாட்டினர் சிலர் வந்தனர். பழங்குடிகளின் பண்பாடு, வாழ்க்கை குறித்து இவ்வாறு பதிவு செய்தவர்கள் போகும்போது பரிசளித்த முகம் பார்க்கும் கண்ணாடிகளும், வண்ண நூல்களும் உள்ளூர்ப் பெண்களை மிகவும் கவர்ந்தன. பின்னர், கர்னல் மெக்கன்சி வழிகாட்டுதலில் மலைப்பகுதியை ஆய்வு செய்து நில வரைபடம் தயாரிக்கும் முயற்சி பாதியில் நின்றுபோனது. மைசூர்ப் போரில் திப்புவின் தோல்விக்குப் பிறகு நீலகிரி பிரிட்டிஷாரின் வசம் வந்தாலும்கூட அவர்களின் பார்வை நீலமலை நோக்கித் திரும்ப சில ஆண்டுகள் பிடித்தன.

மாபெரும் சபைதனில்
மாபெரும் சபைதனில்

1818-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் உதவி கலெக்டர்கள் இருவர் நீலமலை நோக்கி ஓர் பயணத்தை மேற்கொண்டனர். விஷ் மற்றும் கிண்டர்லே என்ற அந்த இரு இளைஞர்களுடைய முதல் நோக்கம் கோத்தகிரி வழியாகப் புகையிலை கடத்துபவர்களைப் பிடிப்பதே. அத்துடன் வேட்டையாடவும், சாகசப் பொழுதுபோக்கவும் கிடைத்த வாய்ப்பாக அமைய உற்சாகத்துடன் கிளம்பினர். தோதர் பழங்குடியினர் வாழும் மலையைக் கண்டடைந்த இருவரும் அதன் அழகில் மதிமயங்கி, அதன் பேரழகை வார்த்தைகளில் வடித்து கோயம்புத்தூர் கலெக்டர் ஜான் சல்லிவனுக்கு அறிக்கை அனுப்புகிறார்கள். இதைத் தொடர்ந்து அடுத்த வருடம் நிகழ்ந்த கலெக்டர் ஜான் சல்லிவனின் பயணம்தான் நவீன நீலகிரி உருவாக அடித்தளமிட்டது.

முதலில் கோத்தகிரிக்கு அருகே திம்மட்டி... அடுத்தடுத்த பயணங்களில் நீலமலையின் பல பகுதிகள் எனப் பயணம் சென்று ஓர் அழகிய கல் வீடு ஒன்றைக் கட்டத் தொடங்கினார். ஒதகமந்து என்ற அந்த இடம்தான் பின்னாளில் உதகமண்டலம் ஆனது. பழங்குடியினரின் நிலங்களை ஏக்கருக்கு ஒரு ரூபாய் கொடுத்து வாங்கியவர், ஆங்கிலேயே அதிகாரிகள் தங்கிட ஓய்வு இல்லங்களை உருவாக்கினார். 65 ஏக்கர் பரப்பில் அவர் உருவாக்கிய ஏரி, வருகை புரிந்த கவர்னர் தாமஸ் மன்றோவையும் கவர்ந்தது. சுவிட்சர்லாந்தின் அழகுக்கு இணையான பேரெழில் கொண்ட பகுதி என மன்றோ தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தில் புகழ்ந்தது மட்டுமல்ல, போரில் காயமடைந்த பிரிட்டிஷ் போர்வீரர்கள் தங்கிடும் வசதிகள் அமைத்திடவும் பரிந்துரைத்தார். நகர் விரிவடையத் தொடங்கியது. ஓய்வெடுக்க வந்தவர்கள் தங்கள் தாயகத்தை நகலெடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பல புதிய தாவர வகைகளை இறக்குமதி செய்து நீலமலையின் நிலப்பரப்பை மாற்றத் தொடங்கினர். ஆஸ்திரேலியாவில் இருந்து வரவழைக்கப்பட்டு, பன்னிரண்டு அணாவிற்கு விற்கப்பட்ட யூகலிப்டஸ் நாற்று உதகையின் தோற்றத்தையே உருமாற்றியது. வாட்டில் புளு, சிங்கோனா சிடார் மரங்கள் அறிமுகமாயின. விதவிதமான இங்கிலீஷ் காய்கறிகளும் வருகை புரிந்தன. சல்லிவனின் தோட்டத்தில் பீட்ரூட், டர்னிப், முள்ளங்கி, முட்டைக் கோஸ் செழித்து விளைந்தன. ஸ்ட்ராபெரி, பீச், ஆப்பிள், உருளைக்கிழங்கு மட்டுமன்றி, புதிய மலர் வகைகளும் உதகை நோக்கி அணிவகுத்தன. ஒதகமந்துவில் வாழும் ஐரோப்பியர் குடும்பங்களுக்கு மலிவு விலையில் காய்கறி உற்பத்தி செய்யத் தொடங்கப்பட்ட பூங்காதான் பின்னாளில் மாபெரும் தாவரவியல் பூங்காவாக விரிவடைந்தது. இங்கிலாந்திலிருந்து வரவழைக்கப்பட்ட அரிய வகை சில்வர் ஈல், ட்ரௌட், தங்க மீன்கள் உதகை ஏரியில் துள்ளிக் குதித்து மக்களைப் பரவசப்படுத்தின. பார்லி தானியத்தை உள்ளூர் மக்கள் ‘சல்லிவன் கஞ்சி’ என்று, அறிமுகம் செய்தவரின் பெயரிலேயே அழைக்கத் தொடங்கினர்.

ஓய்வெடுக்க வந்தவர்கள் கேளிக்கையில் ஈடுபட விழைந்ததன் விளைவு, நீலகிரியில் குதிரைப் பந்தயங்கள் அறிமுகமாயின. ‘ஸ்நூக்கூர்’ என்ற புதிய விளையாட்டு கண்டுபிடிக்கப்பட்டது. வேட்டை நாய்கள் உதவியுடன் ‘நரி வேட்டைத் திருவிழா’ பிரபலமானது. வன விலங்குகளும், அரிய பறவைகளும் உயிர்துறந்து ஆங்கிலேயே அதிகாரிகளின் வரவேற்பறையில் மௌனமாய் உறைந்து நிற்கத் தொடங்கின.

கலெக்டர் ஜான் சல்லிவன்
கலெக்டர் ஜான் சல்லிவன்

ஆங்கிலேய அதிகாரிகளை மகிழ்விக்கத் தொடங்கிய நீலகிரியில் சிறைச்சாலைகளும் உருவாகின. ஆங்கிலேயரால் பிடித்து வரப்பட்டு நடுவட்டத்தில் சிறை வைக்கப்பட்ட சீனப் போர்க்கைதிகள் மூலமாகவே தேயிலை நீலகிரியில் அறிமுகமானது.

இவ்வாறு செயற்கை அழகுகள் எவ்வளவு முயற்சி செய்தாலும் நீலமலையின் பசுமைக்கு அழகு சேர்ப்பது பழங்குடி மக்களின் எளிமைதான். அப்படித்தான் ஒருமுறை தோதர்களின் வாழ்வியல், சோலைக்காடுகளின் மகத்துவம், அரிய வகை விலங்குகள், பறவைகளின் உலகம் பற்றிய புரிதல் எனப் பெரிய திட்டமிடுதலுடன் இயற்கைச் சுற்றுலா ஒன்றை நண்பர்களுடன் மேற்கொண்டோம். உடன் வந்த வனத்துறை அலுவலர்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவரையும்கூட அழைத்து வந்திருந்தனர். நஞ்சப்பன் அவரது பெயர். மிகவும் அமைதியாக இருந்தவர் தேவைப்பட்டால் ஓரிரு வார்த்தைகளில் பதில் அளிப்பார். பின் இயற்கை எழில் காட்சிகளில் லயித்துவிடுவார். இயற்கைச் சுற்றுலா வந்த அனைவருக்கும் ஆழ்மனதில் ஓர் நிறைவேறா கனவு, இந்த முறையாவது அடர் வனத்தில் நடமாடும் புலியைப் பார்த்துவிட வேண்டும் என்பதுதான். பலமுறை நீலகிரி முழுக்க தேயிலைத் தொழிற்சாலைகளைப் பார்வையிட மேற்கொண்ட பணி சூழ்ந்த நள்ளிரவுப் பயணங்களில் காட்டு யானைகள் வழிமறித்தது உண்டு. காட்டெருமைகள், கரடிகள்கூடத் தென்பட்டதுண்டு. ஆனால் இதுவரை புலியைக் கண்டதில்லை என்று நான் கூறிட, நஞ்சப்பன் முகத்தில் புன்னகை அரும்பி மறைகிறது. புலியின் உடலமைப்பு, அதன் அசைவின் கம்பீரம், தனித்து இயங்கும் திறன் என எங்கள் பேச்சு அதைச் சுற்றியே வந்தது. சங்க இலக்கியத்திலிருந்து மரபு சார் சடங்குகள் வரை புலியின் தடம் நீண்டிருப்பது குறித்துப் பேசிப் பேசி மாய்ந்துபோனோம். ‘ஜிம் கார்பெட் வீழ்த்திய பெண் புலி குமோவான் பகுதியில் நான்கு வருடத்தில் 236 பேரை வேட்டையாடியது’ என்று நண்பர் ஒருவர் குறிப்பிடுகிறார்.

நஞ்சப்பன் பேசத் தொடங்குகிறார்... அதிவேகத்தில் ஓடி தன்னைவிட எடை மிகுந்த விலங்குகளை வீழ்த்திட உதவும் உடல்வாகு, இருநூறு ஹெர்ட்ஸ் அலைவரிசையில்கூட கானகத்தின் சிறு ஓசையையும் உணரும் திறன், தன் ஆளுகைப் பரப்பைக் கட்டியாளும் விதம், தன் இனத்தைத் தொடர்புகொள்ள விட்டுச் செல்லும் தடயங்கள் குறித்தெல்லாம் விளக்கிய நஞ்சப்பன், ‘புலியின் பலவீனம் தெரியுமா உங்களுக்கு?’ என்று கேட்டார். எங்களிடம் பதில் இல்லை. ‘மணிக்கு 60 கிமீ வேகத்தில் ஓடக் கூடிய புலியால் தொடர்ந்து ஒரு கி.மீ கூட ஓட முடியாது என்பது அதன் மிகப்பெரிய பலவீனம். இரை அருகில் வரும் வரை காத்திருந்து பாய்வது புலியின் குணம். பத்து முயற்சிகளில் ஒரு முறை மட்டுமே வெற்றியடையும் எனினும், மற்ற விலங்குகளைப்போல் அல்லாமல் தனித்து வேட்டையாடும் இயல்புடையது. ஆனால் காயப்பட்டால் அதன் வாழ்வு நாசமாகிவிடும். எனவேதான் தாக்குதலையும், பின்வாங்குதலையும் தேவைக்கேற்பப் பயன்படுத்தித் தற்காத்துக் கொள்ளும் அரிய வகை உயிரினம் அது’ என்று அவர் சொல்லி முடித்தபோது மசினகுடி வந்து சேர்ந்தது.

இரவு முழுவதும் அடர் இருள் வழிப் பயணம். காட்டெருமைகள் முறைத்துப் பார்த்திட, புள்ளி மான்கள் துள்ளி அகன்றிட எங்கள் கண்கள் மட்டும் புலியைத் தேடித்தேடிக் களைத்துப் போயின. கர்நாடக எல்லை தாண்டி பந்திப்பூர் வனச் சரகம் முழுவதும் சுற்றித் திரிந்து ஏமாற்றத்துடன் திரும்பினோம். நஞ்சப்பன் ஆறுதல் கூறுகிறார். ‘காட்டில் புலியைக் காண்பது கானுயிர் ஆர்வலர்களின் பெருங்கனவு. ஆனால் யாருக்கு, எப்போது தரிசனம் தருவது என்பதை முடிவு செய்வது என்றுமே புலிதான். என்னுடைய நாற்பதாண்டுக் கால கானகப் பயணத்தில் இரண்டு முறை மட்டுமே புலியைக் காண முடிந்தது’ என்கிறார். நிறைவேறாக் கனவுடன் உறங்கச் சென்ற எங்களுக்கு ஒரு புதிய விடியல் காத்திருந்தது.

காலையில் நஞ்சப்பனின் முதல் தகவலே எங்களைத் திடுக்கிட வைத்தது. ‘ஒரு காட்டில் 50 மான்கள் வேட்டையாடப்படுகிறது என்றால் ஒரு புலி மறைந்துபோகிறது என்று பொருள்’ என்று கூறி, கானக உயிர்கள் ஒன்றையொன்று சார்ந்து வாழும் அற்புதத்தை விளக்கத் தொடங்கினார். நீலமலையின் சோலைக் காடுகள் மழைநீரைப் பெற்றுப் பசும்புல்வெளிகளுக்கு அனுப்பி வைக்கும் அழகு; சேகரித்த மழைநீரைப் பாதுகாக்கும் புல்வெளிகள் சிறிதுசிறிதாக நீரை வெளியேற்றி நீரோடை, அருவிகள் வழியே தென்னிந்திய நதிகளை உயிர்ப்பிக்கும் அதிசயம்; Tree Canopy எனப்படும் மரக் கவிகைக்குள் அடுக்கடுக்காய் காணப்படும் அரிய தாவர வகைகள்; பூச்சியினங்கள்; பெண் பறவைகளின் மனம் கவர அழகுற வடிவமைக்கப்படும் பறவைக் கூடுகள்; இமயமலையைவிடப் பழைமையான மேற்குத் தொடர்ச்சி மலை எப்படிக் காலங் காலமாய் நீடித்து ஓர் தாவர நெடுஞ்சாலையாக இருக்கிறது என்று அவர் சொல்லிமுடித்தபிறகு எங்கள் முன்னால் பசுமையான ஓர் புதிய உலகமே தோன்றுவதை உணர முடிந்தது. கானுறை வேங்கைமீது தீராக் காதல்கொண்டு பயணத்தைத் தொடங்கியவர்களின் நினைவுகள் இப்போது பெருங்கானகத்தையே தழுவி நிற்கின்றன.

‘இப்போதும் நீலமலையின் பசுமைக்குப் பின்னால் படர்ந்திருக்கும் மெல்லிய சோகம் யாருடைய கண்களுக்கும் தெரிவதே இல்லை’ என்கிறார் சுற்றுச் சூழல் ஆர்வலர். நாடு விடுதலை பெற்ற பின்னும் அந்நியத் தாவரங்களுடனான போராட்டம் நீலமலையில் இன்றும் தொடர்கிறது. ஆண்டுதோறும் மலர்க் கண்காட்சியைக் காண வரும் சுற்றுலாப் பயணிகளுக்குப் பழங்குடியினரின் பண்பாடு குறித்துக் கவலையில்லை. தலைசிறந்த நீர்மின் நிலையங்கள் ஒருபுறம்; மறுபுறமோ குடிக்க நீரின்றி மக்கள் வாழிடம் நோக்கிப் படையெடுக்கும் வன விலங்குகள். விழாக்கோலத்தில் மின்னும் நட்சத்திர விடுதிகள் ஒருபுறம்; மறுபுறமோ மின்வேலியில் சிக்கி மடிந்துபோகும் அழகிய யானைகள். ‘வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை வரவேற்று உபசரிப்பதில் தோட்டத் தொழிலாளர் நலனை மறந்தே போனோம் நாம்’ என்றவர், ‘நீலக்குறிஞ்சி குறித்து ஒரு செய்தி சொல்லட்டுமா?’ என்றார். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சோலைக் காடுகளை ஒட்டிய பசும்புல்வெளியில் பரந்துவிரியும் குறிஞ்சி மலர்ப்படுகையை நோக்கிப் படையெடுக்கும் தேனீக்கள் குறிஞ்சித் தேனின் சுவையினை நாடெங்கும் பரப்பிடும். அதேநேரம் குறிஞ்சி மலரின் வளத்தைப் பெற்று வளர்ந்திட சிறு செடி கொடிகளும், உயிர்பெறத் துடிக்கும் விதைகளும் காத்திருக்கின்றன. அடுத்த தலைமுறைக்குத் தன் வளத்தைச் சுரந்த குறிஞ்சி மலர்ப்படுகை முழுவதும் திடீரென ஒருநாள் மறைந்தே போகும். அப்படித்தான் நீலமலையின் அழுகுரல் சோலைக்காடுகள் எங்கும் இன்றும் ஒலித்துக் கொண்டேதான் உள்ளது.

சோலைக் காடுகள் அழிக்கப்பட்டு தோட்டப் பயிர்களின் வருகையால், வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கையால் சீரழியும் சுற்றுச்சூழல் குறித்துப் பேசும்போது அவரது குரல் உடைந்தே போனது. தொடர்ந்து நிலவிய கனத்த மௌத்தைக் கலைத்திட அறிவுமதியின் கவிதை ஒன்றை என் உதடுகள் உச்சரிக்கின்றன.

‘`மரம் வெட்டிய கோடரி...

பார்த்துக்கொள்

கடைசி மழைத்துளி!”

- நடை பயில்வோம்...

சபைக் குறிப்பு

IAS officer Udhayachandran shares his experiences part 34
IAS officer Udhayachandran shares his experiences part 34

‘பசும் பாலைவனம்’ என்று அழைக்கப்படும் தேயிலைத் தோட்டங்களின் வளர்ச்சிக்கு உயிரைக்கொடுத்து உழைத்த தொழிலாளர்களின் வலியைப் பதிவுசெய்யும் ‘எரியும் பனிக்காடு’ ஒரு முக்கியமான நூல். தவறுதலாகக் கடத்தப்பட்ட வனவிலங்கு ஆர்வலர்கள் இருவருக்கும், கடத்திய வீரப்பனுக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடல் குறித்துப் புதுமையான பதிவு ‘வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள்!’

- உதயச்சந்திரன்