மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாபெரும் சபைதனில் - 35

மாபெரும் சபைதனில்
பிரீமியம் ஸ்டோரி
News
மாபெரும் சபைதனில்

வரலாற்றின் சுவடுகள் மறைந்தால் பண்பாட்டின் அடித்தளம் நொறுங்கிடுமோ...

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் புகழ்பெற்ற `101’ நெடுஞ்சாலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். ஏழுமணி நேரப் பயணம். உடன் பயணிக்கும் இளையராஜாவின் இசை, பசிபிக் கடலோர எழிலோடு உறவாடத் தொடங்குகிறது.

கலிபோர்னியா மாநிலத்தின் பழம்பெருமை, பழங்குடி மக்களின் வாழ்க்கை, ஸ்பெயின், மெக்சிகோ நாடுகளின் பிடியிலிருந்து விடுபட்டு அமெரிக்க ஒன்றியத்தில் அம்மாநிலம் இணைந்த வரலாறு என நண்பர் பாண்டியன் விளக்கியபடியே வருகிறார். புரட்சிகரமான மக்கள் நலத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதில் கலிபோர்னியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் உள்ள ஒற்றுமைகளைப் பட்டியலிடுகிறேன் நான். அதுமட்டுமல்ல, ஹாலிவுட் திரையுலகிலிருந்து அரசியல் வானில் ஒளிர்ந்த ரொனால்டு ரீகன், அர்னால்டு இருவரும் கலிபோர்னியா மாநில ஆளுநர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வர்கள்தானே என்று நான் நினைவுபடுத்த, இரு மாநிலங்களுக்கு இடையேயான ஒப்பீட்டின் நம்பகத்தன்மை சற்று அதிகரிக்கிறது.

திடீரென காரில் தவழ்ந்து வந்த இசை நிறுத்தப்படுகிறது. ‘ஒரு மாறுதலுக்காக இதைக் கேட்டுப் பாருங்களேன்’ என்கிறார் நண்பர். சற்று உன்னிப்பாகக் கேட்டால் ‘பொன் மாலைப்பொழுது’ நிகழ்ச்சியில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் ஒவ்வொரு வாரமும் தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்கள் நிகழ்த்திய உரைகள் அடங்கிய ஒலிப்பேழை அது. இன்ப அதிர்ச்சியில் மூழ்கிப்போகிறேன். ஒரு சிறு முயற்சி, உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் அதிசயத்தை என்னவென்று சொல்வது? என்னைத் தூக்கத்தில் இருந்து எழுப்பி சென்னை மாநகரில் என் மனதைக் கவர்ந்த இடம் எது என்று கேட்டாலும் தயங்காமல் வரும் பதில் ‘அண்ணா நூற்றாண்டு நூலகம்’ தான். அதன் அழகிய வடிவமைப்பு, நவீன வசதிகளுடன் கூடிய அரங்கங்கள், கலை வண்ணம் கொண்ட மழலைகள் பகுதி, அரிய ஓலைச்சுவடிகள் மட்டுமன்றி, தன்னை நிலைநிறுத்திக்கொள்ள நீதிமன்றங்களில் நடந்த போராட்டம் என அணு அணுவாய் நான் ரசித்திடும் வளாகம் அது. அதன் திறந்தவெளிக் கலையரங்கில் தெருக்கூத்தும், பரதமும் அரங்கேற்றம் செய்திட்டால் எப்படி இருக்கும் என்று கனவுகளில் மூழ்கிப்போகிறேன்.

IAS officer Udhayachandran shares his experiences part 34
IAS officer Udhayachandran shares his experiences part 34

உரையாடல், முதல் நாள் பார்த்த பெர்க்லி பல்கலைக்கழக நூலகம் நோக்கிச் சென்றது. வெறும் நூலகமாக மட்டும் இல்லாமல் அழகிய ஓவியங்கள், ஒளிப்படங்கள்... அந்த அற்புதக் கலைக்கூட முகப்பில் இருக்கும் புகழ்பெற்ற எழுத்தாளர் மார்க் ட்வைனின் சிற்பம், நட்புடன் நம்மை உரையாட அழைப்பதுபோலவே அமைந்திருக்கும். பெர்க்லி நகர் முழுவதுமே பழைமையான கட்டடங்கள் நிறைந்திருக் கின்றன. அவற்றைப் பாதுகாப்பது மட்டுமன்றி, புதிதாய் முளைக்கும் நவீன கான்கீரிட் உருவங்கள் பழைமையின் அழகைச் சிதைத்துவிடக்கூடாது என்பதிலும் மிகக்கவனமாக இருக்கி றார்கள். வரலாற்றின் சுவடுகள் மறைந்தால் பண்பாட்டின் அடித்தளம் நொறுங்குகிறது என்றுதானே பொருள்.

நானூறு ஆண்டுக்கால கலிபோர்னியாவின் வரலாற்றிலிருந்து, நானூறு ஆண்டுகளுக்கு முன் உருவான மதராசப்பட்டினம் நோக்கி மெல்ல நகர்கிறது எங்கள் உரையாடல்.

சென்ட்ரல்
சென்ட்ரல்

நறுமணம் மிக்க மிளகும், நீல வண்ணம் தோய்ந்த பருத்தித் துணிகளும்தான் ஐரோப்பியரை இந்தியா நோக்கி இழுத்தன. வணிகம் செய்ய வந்தவர்கள் முதலில் தங்கள் பொருள்களைப் பாதுகாக்கக் கிடங்குகள் அமைப்பதில் ஆர்வம் காட்டினர். பின்னர் தங்கள் குடியிருப்பைச் சுற்றிக் கோட்டைகள் கட்டுவது குறித்து யோசிக்கத் தொடங்கினர். கிழக்குக் கடற்கரை யோரம் மசூலிப்பட்டினத்தில் முதலில் வணிகம் செய்த ஆங்கிலேயர்கள் அங்கிருந்து இடம்பெயரத் தேர்ந்தெடுத்தது கோவளம். எனினும் சாந்தோமுக்கு மூன்று மைல் தொலைவில் கூவம் ஆறும், எழும்பூர் ஆறும் கடலில் கலப்பதற்கு இடையே சமவெளியாகவும், சதுப்பு நிலமாகவும் இருந்த இடமே கோட்டை கட்டச் சிறந்தது என்ற முடிவுக்கு வந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு வணிகம் செய்ய ஒப்பந்தம் போடப்படுகிறது. 380 ஆண்டுகளுக்கு முன்னால், ப்ரான்சிஸ் டே தலைமையில் ஒரு சிறு குழு எழுப்பியதுதான் புனித ஜார்ஜ் கோட்டையாக பின்னாளில் கம்பீரமாக உருவானது. அந்தக் குழுவில் நாகப்பன் என்ற உள்ளுர் வெடி மருந்து தயாரிப்பவரும், துபாஷ் பேரி திம்மண்ணாவும் இடம்பெற்றிருந்தனர். சற்றுத்தொலைவில் ஈகிள் மற்றும் யுனிடி என்ற பெயர்களைக் கொண்ட இரு கப்பல்கள் நங்கூரம் பாய்ச்சிக் கடலில் மிதந்துகொண்டிருந்தன. அடுத்த முந்நூறு ஆண்டுகள் தொடரப்போகும் ஒரு சரித்திரத்தின் அடித்தளம் அப்போது அமைக்கப்படுகிறது என்று யாருக்கும் தெரியவில்லை.

விக்டோரியா ஹால்
விக்டோரியா ஹால்

வணிகம் வகுத்த வழியில் ராஜதந்திரம் நடைபயில்வது இயல்புதானே..? கோட்டைக்கு வெளியே உள்ளூர் மக்கள் வாழும் ‘ஜார்ஜ் டவுன்’ உருவானது. நீதி பரிபாலனம் ஆங்கிலேயர் கரங்களில் தஞ்சம் புகுந்தது. வணிகம் செழித்ததில் ஆங்கிலேயருடன் உள்ளூர் வணிகர்களும் செல்வந்தர்களாக உயர்ந்தனர். செல்வம், அதிகாரம் இரண்டும் அழகியலைத் துணைக்கு அழைக்க கட்டடக் கலை மதராசப்பட்டினத்தில் அறிமுகமானது. கோட்டைக்குள் தன் மாளிகையைக் கட்ட முயன்று முடியாமல் போன ஆற்காடு நவாப் சேப்பாக்கத்தில் உருவாக்கிய அரண்மனை, அப்படிக் கட்டப்பட்டதுதான். முதலில் ஆங்கிலேயர் எழுப்பிய கட்டங்கள் ரோமானிய, கிரேக்கக் கட்டடக்கலை அம்சங்களை நகலெடுத்து, உயர்ந்த தூண்கள், முக்கோண வடிவ முகப்புடன் உருவாகின. ஆங்கிலேயர் தங்கள் அதிகாரத்தையும், பண்பாட்டின் பெருமையையும் நிறுவும் முயற்சி அது. 1857 ராணுவப் புரட்சிக்குப் பிறகு, அரசியல் வானில் மிதமான வானிலை தென்படத் தொடங்கியது. வணிக நோக்கம் கொண்ட கம்பெனி ஆட்சி விடைபெற்று, கருணையே உருவான விக்டோரியா மகாராணியின் ஆட்சியில் இந்தியர்களின் மரபும் பண்பாடும் மதிக்கப்படும் என்ற அறிவிப்புடன் தொடங்கியது. அந்த மனமாற்றத்தின் நிழல் கட்டடக் கலையிலும் பரவத் தொடங்கியது.

இந்தியா மற்றும் முகலாயக் கட்டடக் கலை அம்சங்கள் ஆங்கிலேயர் எழுப்பிய கட்டடங்களில் இடம்பெற ஆரம்பித்தன. உயர்ந்த குவிமாடங்கள், நீண்ட தூண்கள், அழகிய வளைவுகளுடன் கூடிய முகப்பு என அனைத்திலும் உள்ளூர் கைவினைஞர்களின் ஓவியங்களும், வேலைப்பாடுகளும் இடம்பெற்று அழகு சேர்க்கத் தொடங்கின. Indo-Sarcenic என்று அழைக்கப்பட்ட இப்புது வகைக் கட்டடக் கலை ஆளுநர் நேப்பியரின் நன்மதிப்பைப் பெற்ற ராபர்ட் சிஷோம் என்ற தலைசிறந்த கட்டடவியல் கலைஞர் முன்னெடுத்துச் சென்ற கலை இயக்கமாக உருவானது. கடற்கரைச் சாலையில் அமைந்த மாபெரும் ‘செனட் ஹவுஸ்’, பிரசிடென்சி கல்லூரியின் கட்டடங்கள் அப்படி உருவானவைதான்.

செனட் இல்லம்
செனட் இல்லம்

கோட்டைக்கு மறுபுறம் எழுந்துநின்ற உயர்நீதிமன்றக் கட்டடம் ஆங்கிலேயரின் வழுவாத நீதியைச் சுட்டிக்காட்டும் வகையில் அமைந்தது. 13 லட்ச ரூபாய் செலவில் உயர்ந்த குவிமாடங்கள், நீண்ட படிக்கட்டுகள், அகண்ட தாழ்வாரங்களுடன் சட்டத்தின் ஆட்சியை வரைபடத்திலும் நிலைநிறுத்தும் முயற்சிதான் அது. கவின்கலைக் கல்லூரியில் பயிற்சி பெற்ற கைவினைஞர்களின் கைவண்ணத்தில் உருவான அழகிய ஓவியங்கள் உயர்நீதிமன்ற விதானங்களிலும், கண்ணாடிக் கதவுகளிலும் இடம்பெற்றன.

சேப்பாக்கம் அரண்மனை
சேப்பாக்கம் அரண்மனை

கடற்கரைச் சாலையில் வலம்வந்த அழகியல் அலை, நகரின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. சென்னையின் முப்பது முக்கிய பிரமுகர்களின் முயற்சியில் 99 வருடக் குத்தகையில் `பீப்பிள்ஸ் பார்க்’ பகுதியில் பெறப்பட்ட 57 கிரவுண்ட் இடத்தில் உருவானதுதான் ‘விக்டோரியா பப்ளிக் ஹால்.’ விஜயநகர, திருவாங்கூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மன்னர்களின் நன்கொடையைப் பெற்று நம்பெருமாள் என்ற ஒப்பந்தக்காரரால் உருவாக்கப்பட்ட இந்தக் கட்டடத்தில்தான் விவேகானந்தர் முதல் மகாத்மா காந்தி வரை பலர் உரையாற்றி யிருக்கிறார்கள். ‘Arrival of a Train’ என்ற லூயி சகோதர்களின் முதல் சலனப்படம் இங்கே திரையிடப்பட்டபோது பார்வையாளர்கள் மிரண்டேபோனார்கள். அருகே வெண்ணிற மாளிகை ஒன்றை தரமான தேக்கு, கடப்பா கல் கொண்டு சுண்ணம் குழைத்துக் கட்டிக் கொண்டிருந்தவர் லோகநாதர். 7 லட்ச ரூபாய் செலவில் இங்கிலாந்தின் Westminster Quarts கடிகார அமைப்புடன் உருவானதுதான் இந்த ரிப்பன் கட்டடம். முதல் முதலில் உருவான ராயபுரம் ரயில் நிலையத்தின் நெரிசலைக் குறைக்க வழிதேடியபோது கிடைத்த போர்த்துகீசிய வணிகர் ஒருவருக்குச் சொந்தமான இடத்தில் சேவற் சண்டைகள் நடைபெற்று வந்த பகுதியில்தான் சென்ட்ரல் ரயில் நிலையம் உருவானது.

ரிப்பன் பில்டிங்
ரிப்பன் பில்டிங்

கட்டடத்தின் உண்மையான அழகு, அதன் பயன்பாட்டில் இருக்கிறது. அப்படித்தான் பூந்தமல்லி சாலையில் அணிவகுக்கும் அழகியல் படைப்புகள் ஒவ்வொன்றும் ஒரு உண்மையை சென்னை மக்களுக்குத் தொடர்ந்து நினைவுபடுத்திக்கொண்டே இருக்கின்றன. அப்பழுக்கற்ற நிர்வாகத்தின் அவசியத்தை வெண்மை பொங்கும் ரிப்பன் கட்டடமும், அறிவார்ந்த விவாதங்களின் தேவையை செந்நிற விக்டோரியா பப்ளிக் ஹாலும், பழைமையின் பெருமையினை பழுப்பு நிறத் தென்னக ரயில்வே தலைமை அலுவலகமும், கலையின் உன்னதத்தைக் கவின் கலைக் கல்லூரியும் உணர்த்துகின்றன. முத்தாய்ப்பாக, சென்ட்ரல் ரயில் நிலையமோ, இந்த உலக நடைமேடையில் மனிதர்கள் குறித்த நேரத்திற்கு வருகைபுரிந்து உரிய நேரத்தில் விடை பெற்றுச் செல்வதற்கு இடையில் ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்து தினந்தோறும் நினைவுபடுத்திக் கொண்டே உள்ளது.

திருவனந்தபுரம் சென்று திரும்பிய பாதிப்பில் சிஷோம் உருவாக்கிய தலைமை அஞ்சல் அலுவலகக் கட்டடம், இங்கிலாந்தின் ஐசிஎஸ் பயிற்சிக் கல்லூரியிடம் இருந்து நன்கொடையாகப் பெறப்பட்ட உபரி நூல்களைக் கொண்டு தொடங்கப்பட்ட கன்னிமாரா நூலகம் மற்றும் அருங்காட்சியகக் கூடங்கள் அனைத்திலும் இந்தோ-சாரசெனிக் கட்டடக் கலை அம்சங்கள் மிளிர்ந்தன. இந்தியர்களுக்கும், பெண்களுக்கும் அனுமதி மறுத்த ‘மெட்ராஸ் கிளப்’பிற்கு மாற்றாக உருவாக்கப்பட்ட ‘காஸ்மோபாலிடன் கிளப்’ பின் அகண்ட தாழ்வாரங்களிலும், வரவேற் பறைகளிலும் தான் ராஜாரவிவர்மா தன் அழகிய ஓவியங்களைக் கண்காட்சியாக வைத்தார். தீவுத்திடலில் இருந்து இடம்பெயர்ந்து சேப்பாக்கத்தில் குடிபுகுந்தது ‘மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்’. ஏதென்ஸ் நகரக் கோயிலை நகலெடுத்து பச்சையப்பன் கல்லூரிக் கட்டடமும், வாஷிங்டன் வெள்ளை மாளிகையை ஒட்டி எழுப்பப்பட்ட டவ்டன் மாளிகையும் சென்னைக்கு அழகு சேர்க்கத் தொடங்கின.

பெர்க்லி பல்கலைக்கழக நூலகம்
பெர்க்லி பல்கலைக்கழக நூலகம்

கட்டடக் கலையின் அழகியல், வணிகர் களையும் தீண்டத் தொடங்கியது. அமெரிக்காவின் வட மாகாணங்களில் குளிர் காலத்தில் ஏரியில் உறைந்திருக்கும் பனிக்கட்டிகளை அறுவடை செய்து நறுமணமிக்க பைன் மரத்தூளால் மூடி மூன்று மாதக் கடல் வழிப் பயணம் மேற்கொண்டு, சென்னை வந்து சேர்ந்ததும் பாதுகாப்பாய் வைக்கப்படும் ‘ஐஸ் ஹவுஸ்’ கட்டடம், திருமண நாளன்று வெட்டப்படும் கேக் போன்ற அமைப்பு கொண்டது. சென்னை மக்கள் தங்கள் கடிகாரத்தை அவ்வப்போது சரிசெய்திட நிமிர்ந்து பார்த்த பி.ஆர்.சன்ஸ் கட்டடம், நுணுக்கமான வேலை செய்திடும் தொழிலாளர்களுக்கு உதவிட சூரிய ஒளியையும், இதமான காற்றையும் பெருந்தன்மையோடு அனுமதித்தது. அழகிய முகப்பு, நீண்ட சாளரங்கள், இத்தாலிய மார்பிளைக் கொண்டு உருவாக்கப்பட்ட கறுப்பு வெள்ளைச் சதுரங்கள் அடங்கிய தரை என உருவான ‘ஹிக்கின் பாதம்ஸ்’ கட்டடம் ஆங்கிலேயர், இந்தியர் இருவர் மனங்களையும் கவர்ந்தது. அழகிய தேக்கு வளைவுகளைக் கொண்ட விதானத்தில் கண்ணாடி பிம்ப ஓவியங்களுடன் கூடிய `ஸ்பென்சர்ஸ்’ கட்டடத்தில் இடம்பெற்ற 80 வகையான பொருள்கள் தென்னிந்தியா மட்டுமன்றி உலக அளவிலும் பிரபலம் பெற்றன. அந்த நிறுவனம் தயாரித்த Light of Asia புகைச்சுருட்டுகள் வின்ஸ்டன் சர்ச்சிலின் கரங்களில் தவழ்ந்தன. ஹைதர் அலியின் படையெடுப்பிலிருந்து ‘ஜார்ஜ் டவுனை’ப் பாதுகாக்கக் கட்டப்பட்ட ‘வால்டாக்ஸ்’ சுவரிலும், ராயபுரம் மாடிப் பூங்காவிலும் வரலாற்றுச் சுவடுகள் படிந்தே இருக்கின்றன.

‘தியாசபிகல் சொசைட்டி’யை உள்ளடக்கிய அடையாற்றில் அமைதி தவழ்வதும், ஐசிஎஸ் அதிகாரி ஷெனாய் பெயரில் அமைந்த நகரின் ஒழுங்கும், பாரிஸ் நகர வடிவமைப்பை ஒத்த தியாகராய நகர்ச் சாலைகளும், சின்ன தறிப்பேட்டை எனப்பட்ட சிந்தாதிரிப்பேட்டையில் உலர்த்தப்பட்ட தறிநூல்களும், இராணுவ முகாம்கள் அமைந்திருந்த கீழ்ப்பாக்கத்தின் மௌனமும், நடுவக்கரை எனப்பட்ட இன்றைய அண்ணா நகரின் திட்டமிடுதலும் வரலாற்றின் பக்கங்களில் உறைந்துபோயிருக்கின்றன.

கோட்டை
கோட்டை

சமீபத்தில் மரபுசார் கட்டடங்களைப் புனரமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் கட்டடக் கலைஞர் ஒருவரைச் சந்தித்தபோது, `பிரிட்டிஷ் கட்டடக் கலைக்கும், பிரெஞ்சு அணுகுமுறைக்கும் என்ன வேறுபாடு’ என்று கேட்டேன். ‘ஆங்கிலயரின் பார்வையில் எப்போதும் அதிகாரத்தின் நிழல் படிந்தே இருக்கும். உயர்ந்த குவிமாடங்கள், பெருந்தூண்கள், அலங்கார வளைவுகள், மிரட்டும் வாயிற்கதவுகள்… ஏன், பரந்த புல்வெளியில் மலர்கள்கூட அணி வகுத்துதான் நிற்க முடியும். ஆனால் பிரெஞ்சுக் கட்டடக் கலைஞர்கள் பிரமாண்டக் கட்டடங்களை எழுப்பினாலும் அதில் ஒரு நளினம் இருக்கும். பாண்டிச்சேரியின் வளையாத வீதிகளில், மனம் கவரும் வண்ணம் கொண்ட சுவர்களில் பற்றிப் படரும் செடிகொடிகளைக் கவனித்துப் பாருங்கள். தாழ்ந்த முகப்பு கொண்ட சாளரம்கூட பெண்மையின் கடைக்கண் பார்வையின் இயல்பைக் கொண்டிருக்கும்’ என்றார். ஆம். பேரரசின் வலிமை ஒரு புறம். எழில் மிகு நளினம் மறுபுறம்.

அடுத்து, உரையாடல் சென்னையின் சிறந்த பண்பாட்டு அடையாளம் எதுவாக இருக்க முடியும் என்று தொடர்ந்தது. ராயபுரம் ரயில் நிலையம், மயிலை திருக்குளம், லஸ் முனை ஆழ்வார் புத்தக்கடை, கிண்டி பொறியியல் கல்லூரி எனச் சுற்றி வந்து ஒருமனதாக நாங்கள் தேர்ந்தெடுத்தது ‘மெரினா கடற்கரை.’ ஆம், மண்ணின் மைந்தரின் உழைப்பு அந்தியரின் வருகை, சீரணி அரங்கில் எதிரொலித்த விடுதலை முழக்கம், ஆழிப்பேரலையின்போது எழுந்த அழுகுரல், ஏறுதழுவுதலைப் பாதுகாக்க நடந்த தைப்புரட்சி எனப் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளின் மணல் வழி மௌன சாட்சியான மெரினாக் கடற்கரை மட்டும், என்றுமே தன்னை நாடி வருபவர்களுக்குத் தடையேதும் விதிப்பதில்லை.

சரி, வரலாற்றின் மிகச் சிறந்த கட்டடக் கலைஞர் யார் என்று கேட்கிறேன். பேரரசின் வலிமையைக் கூட்டிடவோ, செல்வத்தின் முகவரியைச் செதுக்கிடவோ அழகியல் துணைபோகக் கூடாது. அரிய பொருள்களைத் தேடித் தேடிக் கண்டுபிடித்து அன்பைக் குழைத்து பெண்மையின் மணம் கவர உருவாக்கும் சிறுகுடில்… என்று தொடங்கியவர், ஒருவேளை ஆக்ரா நோக்கிப் பயணமாகிறாரோ என்று நினைத்தால், அவர் சொன்ன பதிலைக் கேட்டு மனம் பறக்கத் தொடங்கியது.

‘தூக்கணாங்குருவி.’

- நடை பயில்வோம்...

சபைக் குறிப்பு:

IAS officer Udhayachandran shares his experiences part 35
IAS officer Udhayachandran shares his experiences part 35

லாரி பேக்கர்- கட்டடக்கலையின் காந்தியவாதி. இங்கிலாந்தில் பிறந்து பர்மா, இமயமலைப் பகுதிகளில் பணிபுரிந்து கேரளத்தைச் சொந்தமாக்கிக்கொண்ட அபூர்வ மனிதர். உள்ளூர்க் கட்டுமானப் பொருள்களைக் கொண்டு எளிய மனிதர்களின் கனவு இல்லங்களை வடிவமைத்தவர். இல்லத்தரசிகளின் ஆலோசனையுடன், ஓங்கி உயர்ந்த மரக்கிளைகள், ஊடுருவும் ஒளி, தவழும் காற்றுக்கும் சம உரிமை கொடுத்து வரைபடம் தயாரிப்பவர். மீனவர் முதல் உயர் அதிகாரிகளின் குடியிருப்பு வரை அழகுற வடிவமைத்த லாரி பேக்கர் ஓர் ‘மக்கள் கலைஞர்.’

- உதயச்சந்திரன்