
வரலாற்றின் உக்கிரமான தருணங்களை மறைத்தபடியே மௌனமாய் உறைந்திருக்கிறது அந்தக் கிராமம்.
பசுமையான வயல்வெளி, வழிமறிக்கும் கால்நடைகள், உள்ளூர் மக்களின் உயரும் புருவங்களென மண்மணம் கமழும் அந்தச் சின்னஞ்சிறு கிராமத்திற்குள் 24 வருடங்களுக்குமுன் நுழைந்தது இன்றும் என் நினைவில் தேங்கியுள்ளது. புள்ளலூர்... காஞ்சிபுரம் மாவட்டத்தின் எல்லையோரச் சிற்றூர். உதவி கலெக்டராக ஒரு வருட பயிற்சிக் காலத்தின் முதல் முப்பது நாள்கள் அந்த கிராமத்தில்தான் கழிந்தன.

பட்டா, சிட்டா, அடங்கல் என மண்வாசனை தவழும் கிராமக் கணக்குகளெல்லாம் விநோத வகை உயிரினங்கள்தான். அவற்றின் பார்வையில் கிராமத்து மனிதர்களில் இரண்டே வகைதான். ஏக்கர் கணக்கில் நிலம் வைத்திருப்பவர்களைக் கண்டால் கிராமக் கணக்கேடுகள் பயபக்தியோடு பணிவு காட்டும். அவ்வப்போது கொஞ்சம் வளைந்துகொடுக்கவும் முன்வரும். அதே சமயம் நிலமற்ற ஏழைகளின் பெயர்கள் மட்டும் ஆக்கிரமிப்பாளர் கணக்கில் வரவு வைக்கப்படும். சமூக விலகலை அப்போதே கடைப்பிடித்த குக்கிராமங்கள், குடிசைகளுக்கு நடுவே அலட்சியமாய் உயர்ந்து நின்ற ஊர்ப்பெரியவரின் மாளிகை, பழைமை வாய்ந்த கைலாயநாதர் ஆலயம் ஒரு புறம், வரதராஜப் பெருமாள் சந்நிதி மறுபுறம் என முதல் சில நாள்கள் அந்த கிராமத்தைச் சுற்றிப் பார்ப்பதில் கழிந்தன.
ஒருநாள் கிராமத்து இளைஞர்கள், ’ஊர்க்கோடியில் நினைவுச் சின்னம் இருக்கிறது, பார்க்க விரும்புகிறீர்களா’ என்று கேட்க, விரைந்தோம். வயல்வெளிக்கு நடுவே புதர்மண்டிக் கிடந்த பாதையில் சென்றால் கூம்பு வடிவில் இரு நினைவுச் சின்னங்கள். அருகே சென்று கல்வெட்டைப் படித்தேன். `கேப்டன் ஜேம்ஸ், கர்னல் ஜார்ஜ் பிரவுன் என்னும் இரு ஆங்கிலேய வீரர்கள் ஹைதர் அலியுடன் நடந்த போரில் உயிரிழந்ததால் அவர்கள் நினைவாக எழுப்பப்பட்ட நினைவுச் சின்னங்கள் இவை’ என்று எழுதப்பட்டிருந்தது. உள்ளூர் மக்கள் யாருக்கும் கூடுதல் விவரங்கள் தெரியவில்லை.
காஞ்சிபுரம் திரும்பி வரலாற்றைப் புரட்டிப் பார்த்ததில் வியப்பிலாழ்ந்துவிட்டன என் கண்கள். அந்தச் சின்னஞ்சிறு கிராமத்தில்தான் வரலாற்றின் மூன்று முக்கியமான போர்கள் நிகழ்ந்திருக்கின்றன. 1,400 ஆண்டுகளுக்கு முன் முதல்முறையாக, புள்ளலூர் வரலாற்றில் இடம்பெற்றது. வளமான காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்ட மகேந்திரவர்ம பல்லவனுக்கும் சாளுக்கிய மன்னன் புலிகேசிக்கும் நடந்த உக்கிரமான போரில் மகேந்திர வர்மன் பின்வாங்கிட, தென்னிந்திய வரலாற்றில் குருதிபடர ஆரம்பித்து, இறுதியில் நரசிம்மவர்மன் சாளுக்கியத் தலைநகர் வாதாபியை அழிப்பதில் முடிந்தது.
யுத்தத்தின் சுவடுகள் ஆயிரத்து நூறு ஆண்டுகள் கழித்து மீண்டும் புள்ளலூர் நோக்கித் திரும்ப வந்தன. இம்முறை மோதிக்கொண்டவர்கள் மண்ணின் மைந்தரும், கடல் கடந்து வந்த ஆங்கிலேயரும். ஆம். 1780-ம் ஆண்டு செப்டம்பர் 10-ம் தேதி புள்ளலூர் மண்ணில் தந்தை ஹைதர் அலியும், மகன் திப்புவும் ஒரு புறம் நிற்க, மறுபுறம் மதராசிலிருந்தும், குண்டூரிலிருந்தும் அதிக படைகள் வந்து சேரும் என்ற எதிர்பார்ப்பில் ஆங்கிலேய படைப்பிரிவின் தலைவர் கர்னல் பேயில் காத்துக் கொண்டிருக்கிறார். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதமாக, போரில் ஈடுபட்ட பிரிட்டீஷ் படை வீரர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

இதுவரை அவர்கள் கேள்விப்பட்டிராத ஆயுதங்கள் விண்ணிலிருந்து பாய்ந்து வந்து தாக்கின. நான்கு அங்குல இரும்புக் குப்பியில் வெடி மருந்தை நிரப்பி ஓரடி மூங்கில் குழாயில் மறைத்து ஏவப்படும் அந்த ஆயுதங்களின் பெயர் `மைசூர் ஏவுகணைகள்’ என்று அவர்கள் அறிந்திருக்கவில்லை. மைசூர் ராக்கெட் படைப்பிரிவின் துல்லியத் தாக்குதல் பிரிட்டிஷ் வெடிமருந்துக் கிடங்கை முழுவதுமாக நாசமாக்கியது. ஏராளமான வீரர்கள் மடிந்த நிலையில் கேப்டன் பேயில் தலைமையில் ஆங்கிலேயப் படை ஹைதர் அலியிடம் சரணடைந்தது.
தோல்வியில் கிடைத்த அவமானம் ஆங்கிலேயரை அடுத்த ஆண்டே மீண்டும் போருக்கு அழைத்துவந்தது. புள்ளலூர் மீண்டும் போர்க்களமானது. வெற்றி தோல்வியைக் கணிக்க முடியாதபடி இருதரப்பிலும் கடுமையான சேதம். அந்த மைசூர் போர்களின் குண்டுவீச்சின் அடையாளங்களைப் பற்றி நூறாண்டுகள் கழித்துப் பதிவு செய்யப்பட்டதைப் படித்து விட்டு அந்தப் பகுதியெங்கும் சுற்றியலைந்தோம். வரலாற்றின் உக்கிரமான தருணங்களை மறைத்தபடியே மௌனமாய் உறைந்திருக்கிறது அந்தக் கிராமம்.
முப்பதாம் நாள் பயிற்சி முடிவடையும்போது அந்த கிராம மக்கள் சிலர் உள்ளூர் நியாயவிலைக் கடையில் நடக்கும் தவறுகள் பற்றிப் பட்டியலிட்டனர். அடுத்த சில நிமிடங்களில் அங்கே ஆய்வு செய்தால் காலங்காலமாய் நடைபெற்று வரும் முறைகேடுகள் வெளிவரத் தொடங்கின. தவறுகளைக் கண்டுபிடிப்பதை விட அவற்றை நுணுக்கமாக ஆவணப்படுத்துதலில் உள்ள சிரமத்தைக் கற்றுக்கொண்ட நாள் அது. அன்றிரவு கலெக்டரிடமிருந்து ஒரு தகவல். அரிசிக் கடத்தல் பற்றி ஒரு துப்பு கிடைக்க, அதைப் பின்பற்றி இரவு நேர ஆய்வு செய்ய உத்தரவிடுகிறார்.
அரக்கோணம் போகும் வழியில் எங்கள் குழு காத்திருந்தது. கிடைத்த தகவலின்படியே தூரத்தில் ஒரு லாரி வந்துகொண்டிருந்தது. தடுக்க முயன்றோம். நிற்காமல் வேகமாகப் பாய்ந்து செல்கிறது. நாங்கள் துரத்த, மறுமுனை யிலிருந்து மறைந்திருந்த காவல்துறை வாகனமும் வந்த சேர, அந்த லாரி வலதுபுறம் திரும்பி கிராமச் சாலையில் நுழைகிறது. நள்ளிரவில் வேட்டை தொடர்கிறது.
முன்னால் சென்றுகொண்டிருந்த லாரியோ, வழியில் மரத்தில் திடீரென்று மோதிச் சாய்கிறது. வாகனத்திலிருந்து குதித்துத் தப்பியோட முயன்றவர்களைத் தேடிப் பிடித்து அழைத்து வரும்போது பாதை சற்றுப் பழகியதுபோல் தெரிகிறது. வாகன வெளிச்சத்தில் உற்றுக் கவனித்தால் அந்தக் கிராமத்தின் பெயர்ப் பலகை மங்கலாகத் தெரிகிறது. மீண்டும் ஒருமுறை `புள்ளலூர்.’
சாதகமான சூழலும், நெகிழ்வான விதிமுறைகளும் அமைந்துவிட்டால், மனித மனம் மரபு மீறத் துடிப்பது இயல்பே. வல்லமை பொருந்திய பேரரசுகளும் மேன்மை தாங்கிய கனவான்களின் அரண்மனைகளின் அடித்தளங்களும் மரபைமீறி எழுப்பப் பட்டவைதான். அப்படித்தான் ப்ரான்சிஸ் டே என்னும் ஆங்கிலேயே வணிகர், தாமல் வெங்கடாத்ரியிடம் மதராசப்பட்டினத்தில் இரண்டு வருடம் வணிகம் செய்திடவும், கோட்டை கட்டிக்கொள்ளவும் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்கிறார். கம்பெனி நிர்வாகத்தின் ஒப்புதலை விரைவாகப் பெற்றிட ஒப்பந்தத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பில் திருத்தங்கள் சில செய்யப்படுகின்றன. ஒப்புதல் பெறுவதற்கு முன் மனம் மாறிடுவதைத் தடுக்க வெங்கடாத்ரிக்குக் குதிரை ஒன்றை அன்பளிப்பாகத் தருவது என்று ப்ரான்சிஸ் டே முடிவு செய்கிறார். இவ்வாறு அன்பளிப்பும், மரபுமீறலையும் அடித்தளமாகக் கொண்டு எழுப்பப்பட்ட பிரிட்டிஷ் சாம்ராஜ்யம், இந்திய வளங்களை விதம் விதமாகக் கவர்ந்து சென்றதில் வியப்பேதும் இல்லை.

வணிகம்புரிய வந்த கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் நாடாளத் தொடங்கியதற்கு விதை போட்ட ராபர்ட் கிளைவ், ஓர் ஊழல் நாயகனாகவும் திகழ்ந்தார். பெற்றோருக்கு அடங்காத பிள்ளையாய் மதராஸ் வந்து சேர்ந்தவருக்கு மோசடியும், முறைகேடும் கைவந்த கலையாக மாறின. அசட்டுத் துணிச்சலும், மதிமயக்கும் பேச்சும் ராபர்ட்கிளைவை கம்பெனி நிர்வாகத்தின் உச்சியில் வைத்து அழகு பார்த்தன. மதராஸ் மற்றும் வங்காள மாகாணங்களில் அவர் பெற்ற பரிசுப் பொருள்களும், தனிப்பட்ட முறையில் வணிகம் செய்து சேர்த்த செல்வமும், பிரிட்டனின் அன்றைய செல்வந்தர்களுள் ஒருவராக உயர்த்தியது. இந்தியாவில் சுரண்டிய செல்வத்தைக் கொண்டு இங்கிலாந்து அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். அதே நேரம் சூறையாடப்பட்ட வங்கத்திலோ மூன்றில் ஒரு பங்கு மக்கள் பஞ்சத்தில் மடிந்துபோயினர்.
அதேபோல் இங்கிலாந்துடன் எதற்கெடுத் தாலும் போரிடத் துடிக்கும் பிரான்ஸ் தேசமும் இந்திய வளங்களைப் பங்குபோடத் தயங்கவில்லை. பிரெஞ்சுத் தரப்பிலும் ஓர் ஊழல் நாயகர் தோன்றினார். பாண்டிச்சேரியின் கவர்னர் துய்ப்ளேவின் பெருங்கனவு செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் கைப்பற்றுவதே. ஒரே ஒரு வித்தியாசம், துய்ப்ளேவின் மனைவி ஜேனின் ஊழல் நடவடிக்கைகள் தன் கணவரையே மிஞ்சின. பாண்டிச்சேரியின் நிர்வாகப் பதவிகள் ஏலம் விடப்பட்டன. தமிழ்நாட்டின் வளத்தைக் கொள்ளையடிப்பதில் பிரிட்டன் மற்றும் பிரெஞ்சுக் கம்பெனிகள் போட்டி போட்டன.
ராபர்ட் கிளைவ்வைத் தொடர்ந்து பதவியேற்ற வாரன் ஹேஸ்டிங்க்ஸ் குறுகிய காலத்திலேயே பெரும் செல்வத்தை ஈட்டினார். மதராஸ் மாகாணத்தில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில்தான் அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகம் உருவானது. மதுரை கலெக்டராய் இருந்த ரோஸ் பீட்டர் நிர்வாகக் கருவூலத்திலிருந்து முறைகேடு செய்த பணத்தில் ஏழை மக்களுக்குப் பல உதவிகளையும், மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் பாதுகைகளையும் கொடையாக அள்ளிக்கொடுத்தார்.
கிழக்கிந்தியக் கம்பெனியின் கடைநிலை ஊழியர்கள்கூட தனியே வணிகத்தில் ஈடுபட்டுச் சேர்த்த நிதியை ஆற்காடு நவாப்பிற்குக் கடன் கொடுக்கும் அளவிற்கு உயர்ந்தனர். கொடுக்கல், வாங்கல் ஆங்கில மொழி இரவல் பெறுவதில் சென்று முடிகிறது. ஆம். இந்தியாவிலிருந்து ஆங்கில அகராதியில் இடம்பெற்ற முதல் சில சொற்களில் ஒன்று - கொள்ளையைக் குறிக்கும் `loot.’
செல்வத்தை மட்டும் கொள்ளையடிக்கவில்லை அவர்கள். மதராசப்பட்டினத்தில் அடிமைகள் விற்பனை பரவலாக நடந்துவந்தது. பஞ்சம் பிழைக்க முன்வந்த மக்கள் அடிமைகளாக விற்கப்பட்டுத் தொலைதேசங்களுக்குப் பயணமாயினர். இந்தியாவின் மண்வளமும் தப்பவில்லை. சீனத் தேயிலையின் இறக்குமதியைக் குறைத்திட, மலைப்பாங்கான பகுதிகளில் தேயிலைக் கொழுந்துகள் அறிமுகமாயின. பருத்தி, கரும்பு முதல் அபினி போதைப் பயிர் வரை பிரிட்டனின் தேவைக்கு ஏற்ப இந்திய நிலப்பகுதிகள் விருப்பமின்றி, தன் வடிவத்தை மாற்றிக்கொண்டன.
எனினும் இந்தியாவின் செல்வத்தைச் சுரண்டிச் சென்றவர்களின் இறுதிக்காலம் படுதுயரமாகவே அமைந்தது. இந்தியாவில் பல முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட ராபர்ட் கிளைவ் தன்னுடைய பண்ணை வீட்டில் தனிமையில் தானே வாளால் அறுத்துத் தற்கொலை செய்துகொண்டார்.
அவருடைய அரசியல் எதிரி துய்ப்ளேவும் அவர் மனைவியும் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, சேர்த்த சொத்துகளை எல்லாம் இழந்து வறுமையில் மடிந்துபோயினர். வாரன் ஹேஸ்டிங்க்ஸ் மற்றும் யேல் இருவரும் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டனர். தன்மீது உத்தரவிடப்பட்ட விசாரணையைச் சந்திக்க பயந்த ரோஸ் பீட்டர் தற்கொலை செய்து கொண்டார். இவற்றையெல்லாம் கவனித்த உள்ளூர் வரலாறோ ‘அரசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாகும்’ என்று சொல்லிக் கடந்து சென்றது.
கடல் கடந்து வந்து கொள்ளை அடித்தவர்களை எதிர்த்துக் கேள்வி கேட்கவும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹேஸ்டிங்க்ஸ்மீது பணி நியமனத்தில் ஊழல் செய்வதாக ஹூக்ளி பகுதியின் ஆளுநரான நந்தகுமார் என்பவர் வழக்கு தொடுக்கிறார். வழக்கு தொடுத்தவரைப் பழிவாங்க, மோசடியாக ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தது மட்டுமல்ல, நீதி தேவதையின் கண்களை மறைப்பதிலும் வெற்றிபெறுகிறார் வாரன் ஹேஸ்டிங்க்ஸ். மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நந்தகுமார் ஊழலுக்கு எதிரான ஒரு மௌன சாட்சியாய் வரலாற்றின் பக்கங்களில் உறைந்துபோனார்.

ஊழலை எதிர்த்துப் போராடும் தனிமனிதர் களின் உளவியல் சிக்கல்களை அறிந்துகொள்ள சில வருடங்களுக்கு முன் எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு நடைமுறைகள் குறித்து எனது குற்றச்சாட்டுகளைத் தாங்கிய கடிதம் பெரும்புயலையே உருவாக்கியது. புயல் திரும்பி வந்து தாக்கக்கூடும் என்று நண்பர்களின் எச்சரிக்கையை அலட்சியம் செய்துவிட்டு இயல்பாய் இருக்க முயல்கிறேன்.
வாகனங்களில் பயணம் செய்யும்போது கவனம் தேவை என்ற காவல்துறையின் அறிவுரைக்குப்பிறகு என்னையும் அறியாமல் நிகழ்ந்த ஒரு மாற்றம் எனக்கே அதிர்ச்சி தந்தது. ஒவ்வொரு நாளும் அலுவலகம் செல்லும் வழியில் அப்போது ஐந்தே வயதான என் செல்ல மகள் ஓவியாவின் மழலை மொழியை ரசித்துக்கொண்டே மழலையர் பள்ளியில் விட்டுச் செல்வது வழக்கம். காவல்துறையின் எச்சரிக்கைக்குப் பிறகு, மழலை மொழியின் இனிமையைத் தவறவிட்டு எதிரே யாராவது தாக்குதல் நடத்தினால் எப்படி எதிர்கொள்வது என்று மனம் சிந்தித்த தருணங்களை வார்த்தைகளால் எப்படி விவரிப்பது? அது மட்டுமல்ல, ஒற்றைக் காகிதத்தில் உயர் அதிகாரிகளும், சக அலுவலர்களும் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்படுவதை ஒருவர் கடந்து செல்ல இரும்பு மனம் தேவை. இதுகுறித்த குழப்பத்திற்கு விடை தேடி நான் சென்று சந்தித்த நபர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர் லட்சுமிநாராயணன். எளிமையான அடுக்கு மாடிக் குடியிருப்பொன்றில் அன்புடன் வரவேற்றவர் ஓர் அடிப்படையான கேள்வியைக் கேட்டார். `Are you a Government Servant or a Public Servant..?!’
எளிமையான ஆனால் கனமான கேள்வி. அரசு ஊழியர் என்பதைவிட பொது ஊழியர் என்பதே சரியானது என்கிறேன். `பொது மக்களின் நலனுக்கு எதிராக உயர் அலுவலர்கள் செயல்பட்டாலும் அவர்களின் செயல்களை விமர்சிப்பது சரியே’ என்று தெளிவுபடுத்தினார் அவர்.
‘மக்கள் சேவகம்!’

சபைக் குறிப்பு:
கோகினூர் வைரம்: கோல்கொண்டா சுரங்கத்திலிருந்து தொடங்கிய அதன் பயணம் இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணியின் மணிமகுடம் வரை நீண்டது. எனினும் பாதை நெடுகிலும் மண்ணாசை கொண்ட படையெடுப்புகள், ராஜதந்திரம் என்ற பெயரில் அரசியல் மோசடிகள், ஆருடமும் ரசவாதமும் சேர்ந்த கலவை எனக் கோகினூர் வைரம் சந்தித்த அபூர்வமான நிகழ்வுகள் குறித்த சுவையான நூல்.
- உதயச்சந்திரன்