
மகாத்மா பயன்படுத்திய எளிமையான மரக்கட்டில் காலம் கடந்தும் கனமான நினைவுகளைச் சுமந்துகொண்டிருக்கிறது.
நான்கு வருடங்களுக்கு முன் நவம்பர் மாதத்தில் ஒருநாள் குடும்பத்தோடு தலைநகர் தில்லி, விமான நிலையத்தில் இறங்கினோம்.

அந்த மதியத்திலும் மிதமான குளிர்... நகரெங்கும் பரபரப்பு சூழ்ந்திருந்தது. முந்தைய நாள் அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை இயல்பான குடும்பச் சுற்றுலாவை ஒரு சாகசப் பயணமாக மாற்றிடும் என்பதை அப்போது நாங்கள் அறிந்திருக்கவில்லை. பார்வையிடப் போகும் பட்டியலில், பௌர்ணமி நிலவொளியில் ஆக்ராவின் காதல் சின்னம்... பின்னர் இளஞ்சிவப்பு நகர அரண்மனை என வரிசையாக இடம்பெற்றிருந்தாலும், தலைநகரின் அதிகார மையங்களில் அன்று அடியெடுத்து வைக்கும்போது சற்றுத் தயக்கமாகத்தான் இருந்தது. குடியரசுத் தலைவர் மாளிகையின் பிரமாண்டம், 160 வகை ரோஜா மலர்ச் செடிகள் கொண்ட முகலாயர் பூங்கா, வழக்கத்திற்கு மாறான அமைதியுடன் நடந்த மாநிலங்களவைக் கூட்டம் என ராஜபாட்டையில் பயணம் செய்துவிட்டு அன்று மாலை நாங்கள் வந்து சேர்ந்த பிர்லா மாளிகையிலோ அமைதி தவழ்ந்துகொண்டிருந்தது. சுதந்திர இந்தியாவின் மௌன சாட்சியான மகாத்மா காந்தி அருங் காட்சியகம் எங்களை உள்வாங்கிக்கொள்கிறது. மகாத்மா பயன்படுத்திய எளிமையான மரக்கட்டில் காலம் கடந்தும் கனமான நினைவுகளைச் சுமந்துகொண்டிருக்கிறது. கண்ணாடிப் பேழைக்குள் பாதுகாப்பாய் உறைந்துபோய் இருக்கும் கைக்கடிகார முட்களைப் பின்னோக்கி நகர்த்த முடியாதா என்று ஒரு நிமிடம் மனம் ஏங்கத்தான் செய்கிறது. மகாத்மாவின் இறுதிநாள் எப்படிக் கழிந்தது என்று குழந்தைகளுக்கு விவரிக்க முயல்கிறேன். `அந்த வெள்ளிக்கிழமை காலை மூன்றரை மணிக்கே எழுந்து, காலை வழிபாடு முடிந்தவுடன் தேன் கலந்த எலுமிச்சைச் சாற்றைப் பருகுகிறார்’ என்று தொடங்குகிறேன். தலைநகர் தில்லி வாழ் மக்களிடம் மனமாற்றத்தை வலியுறுத்தி மேற்கொண்ட உண்ணாவிரதம் அவர் உடலையும், பத்து நாள்களுக்கு முன் அவர்மீது மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித் தாக்குதலால் வெறுமையாக இருந்த அவர் மனதையும் மழலை மொழியில் மொழிபெயர்த்திட சற்றுத் தடுமாறுகிறேன். அருகிலிருந்த அருங்காட்சியகப் பணியாளர் ஒருவர் உதவிக்கு வருகிறார். அவர் ஒளிப்படங்கள் வழியே இறுதி நாள் நிகழ்வுகளைப் படம்பிடித்தாற்போல் சொல்லச் சொல்ல, குழந்தைகளின் ஆர்வம் அதிகமாகிறது. காலையில் எழுதிக் கொண்டிருந்தபோதே அயர்ந்து உறங்கி விட்ட காந்தியை இருமல் எழுப்பி விடுகிறதாம். வழக்கமான பனங்கற்கண்டுடன் கூடிய மிளகு, கிராம்புப் பொடியைத் தேடினால் இருப்பு இல்லை. உடன் தயார் செய்ய உதவியாளர் மனு விரைந்திடும்போது, `இரவு உயிருடன் இருந்தால் பார்த்துக்கொள்ளலாம்’ என்று மகாத்மா கூறியதைக் கேட்டு அனைவருக்கும் அதிர்ச்சி. ஜனவரி 30-ம் தேதி காலை காந்தியின் உடல் எடை அளவிடும் போது 109 ½ பவுண்டுகள் இருந்தது. சமீபத்திய உண்ணாவிரதத்திற்குப் பின் 2 ½ பவுண்டுகள் எடை அதிகரித்ததில் அன்று அனைவருக்கும் மகிழ்ச்சிதான். மகாத்மா வழக்கமாக விருந்தினர்களைச் சந்திக்கும் அறை, எளிமையாக, ஆனால் விசாலமானதாக இருக்கிறது. தன்னைச் சந்தித்த உதவியாளர் பியாரிலாலிடம் நவகாளி யாத்திரைச் சம்பவங்கள் குறித்தும் மதராஸ் மாகாணத்தில் அப்போது நிலவிய அரிசிப் பஞ்சம் குறித்தும் எழுத வேண்டும் என நினைவுபடுத்துகிறார். தலைநகர் பற்றி எரியக் காரணம் வெறுப்பை உமிழும் சிலரின் பேச்சுகள்தான் என்று ஒரு பத்திரிகையாளர் குறிப்பிடும்போது, அவர் புருவங்கள் உயர்ந்து பின் தாழ்கின்றன. திடீரென்று எழுந்து பிறர் உதவியின்றித் தானே நடக்க ஆரம்பித்த காந்தியை அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர். அவரோ தாகூரின் ‘Walk alone’ என்ற கவிதை வரிகளை நினைவுகூர்ந்தபடியே அங்குமிங்கும் நடக்கத் தொடங்குகிறார். மதிய நேரத்திலும் சந்திப்புகள் தொடர்கின்றன. `நாளை மறுநாள் வார்தா திரும்புகிறீர்களாமே’ என்று ஒருவர் கேட்க, `இருக்கலாம்! ஆனால் எந்த காந்தி என்று தெரியவில்லையே’ என்று சிரிக்கிறார் அவர். சந்திக்க வந்த பேராசிரியர் ஒருவர், `உங்கள் கொள்கைகளுக்கும் புத்தரின் கோட்பாடுகளுக்கும் நிறைய ஒற்றுமை உள்ளது’ என்று சொல்லும்பொழுது காந்தியின் முகத்தில் புன்னகை மலர்ந்து, பின் சோகம் படரத் தொடங்குகிறது. சிலோன் நாட்டிற்குச் சுதந்திர தினச் செய்தி கேட்டு வந்தவரின் குழந்தையின் விருப்பத்தை நிறைவேற்றிட, இறுதியாய் ஆங்கிலத்தில் தன் கையெழுத்தைப் பதிவு செய்தபடியே அந்தச் சிறுமியைக் கொஞ்சி விளையாடுகிறார். காய்கறிகள், பழச்சாறு எனப் பிற்பகல் உணவு முடிந்தபின் தன்னைச் சந்திக்க வந்த சர்தார் படேலுடன் வெகு நேரம் விவாதித்துக் கொண்டிருந்த அந்த இடம் மௌன சாட்சியாய் உறைந்துபோயிருக்கிறது. பத்து நிமிடத் தாமதத்தை உணர்ந்த காந்தி வழிபாட்டுக் கூடம் நோக்கித் தன் இறுதிப்பயணத்தைத் தொடங்கியபோது மௌன்ட்பேட்டனும், பண்டித நேருவும் தலைநகரிலேயே தங்கள் அலுவலகப் பணிகளில் மூழ்கிப்போயிருந்தார்கள். பிர்லா மாளிகையில் விவாதத்தை முடித்துவிட்டு, படேல் இல்லம் திரும்பிக்கொண்டிருக்கிறார். காந்தியிடம் பேட்டிகாண வந்த குஜராத் பிரமுகர்கள் ஒருபுறம் காத்திருக்க, அமெரிக்கப் பத்திரிகையாளர் ஒருவரோ பிர்லா மாளிகை நோக்கி விரைந்துகொண்டிருந்தார். தென்னாப்பிரிக்கா முதல் தரங்கம்பாடி வரை... தண்டி முதல் நவகாளி வரை... சம்பரான் முதல் சபர்மதி வரை தேசமெங்கும் ஓடிக் களைத்த கால்கள் இறுதியாய் ஒருமுறை தளர்வாய் நடக்கத்தொடங்கின. தன் உடலை இருபுறமும் தாங்கி வந்த செவிலித் தாய்களான மனு, அபாவிடம், இன்று கால்நடைக்கு உரிய பச்சைக் காய்கறிகளைத் தனக்கு உணவாகக் கொடுத்துவிட்டதாக நகைச்சுவையுடன் கூறியபடியே முதல்முறையாக குறுக்கு வழியில் புல்வெளியில் நடக்கத் தொடங்குகிறார். மகாத்மா இறுதியாக நடந்த பாதச்சுவடுகளின் மீது பிஞ்சுப் பாதங்களை வைத்து விளையாட முயலும் மகிழனைத் தடுக்க நினைத்துப் பின்னர் சற்றுப் பின்வாங்குகிறேன் நான். ஒருவேளை மகாத்மா இன்று உயிரோடு இருந்திருந்தால் தன்னோடு உறவாடவும் முரண்படவும், ஏன், அடுத்த தலைமுறை தன்னைக் கடந்து செல்லவும் நிச்சயம் அனுமதித்திருப்பார் என்று யோசித்துக் கொண்டே தொழுத கரங்களோடு, மாபெரும் வரலாறு முற்றுப்பெற்ற இடத்திற்கு வந்து நிற்கிறோம். எங்களையும் அறியாமல் உதடுகள் உச்சரிக்கின்றன `ஹேராம்.’

வாழ்நாள் முழுவதும் வன்முறையைத் தவிர்த்திட வலியுறுத்திய காந்தி இறந்து மூன்று ஆண்டுகள் கழித்து அதற்கு நேரெதிர்ப் பாதையைத் தேர்ந்தெடுத்தபடியே உலகெங்கும் தன் சாகசப் பயணத்தை மேற் கொண்டிருந்த அந்த இளைஞருக்கு வயது 23. ஒரு நார்ட்டன் 500 சிசி மோட்டார் சைக்கிளில் தன் நண்பருடன் புழுதி பறக்கும் அர்ஜென்டினா நாட்டின் சாலைகளில் பயணத்தைத் தொடங்கும்போது பிற்காலத்தில் உலகப் புகழ்பெற்ற ஒரு கனவுப் பயணமாக அது வரலாற்றில் இடம் பெறப்போகிறது என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அமேசான் மழைக்காடுகள் ஒருபுறம்... வறண்ட பாலைவனங்கள் மறுபுறம்... இயற்கை எழில் ததும்பும் கடற்கரை அருகிலேயே வறுமையில் வாடும் மக்கள். சுரங்கத் தொழிலாளர்களின் உழைப்பின் மீது எழுப்பப்பட்ட மாபெரும் நிறுவனங்கள் என லத்தீன் அமெரிக்கா முழுவதும் 8,000 மைல் தூரம் பயணம் செய்து முடித்தபோது தெளிவான முடிவுக்கு வருகிறார் அவர். மருத்துவம் பயின்ற அந்த இளைஞர் உலக மக்களின் துயரங்களைத் துடைத்திட புரட்சி எனும் ஆயுதமேந்தி அறுவை சிகிச்சை செய்ய முன்வருகிறார். காண்பவரின் மனதைக் கவரும் காந்தக் கண்கள். கம்பீரம், கரங்களில் அலட்சியமாய்த் தவழும் புகைச்சுருட்டு. உலகெங்கும் இளைய தலைமுறையினர் அடிக்கடி உச்சரித்த பெயர் `சேகுவாரா.’ கியூபப் புரட்சிக்குப் பின் மனித வள மேம்பாடு, தொழிற்புரட்சி எனத் தொடர்ந்தவரின் மனம் போராட்டத்தையே நாடியது. பொலிவியா புறப்படத் தயாராகிறார் சே. அறுபது வயது மதிக்கத்தக்க முதியவர் போன்று மாறுவேடத்தில் வந்தவரை அவருடைய நெருங்கிய நண்பர்களால்கூட கண்டுபிடிக்க இயலவில்லை. புரட்சிப் பாதையில் அடியெடுத்து வைக்கும்முன் இறுதியாகத் தன் குழந்தைகளைப் பார்க்க விரும்புகிறார் சே. ஹவானா நகரின் பாதுகாப்பான ஒரு வீட்டில், உருகுவே நாட்டிலிருந்து வருகைபுரிந்திருக்கும் நண்பர் ‘ரமோன்’ என அறிமுகப்படுத்திக்கொண்டு, தன் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடுகிறார். ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்த மூத்த மகள் கீழே விழுந்து தலையில் அடிபட பதறிப்போய் தாங்கிப் பிடித்த சேவைப் பார்த்து அந்தக் குழந்தை நன்றி சொன்ன அந்தக் கணத்தில் சேவும் அவரின் காதல் மனைவியும் நொறுங்கித்தான்போனார்கள். பொலிவியக் காடுகளில் புரட்சியாளர்களுடன் பயணம் செய்துகொண்டே சே, ‘உன்னை நினைவில் ஏந்தி விடைபெறுகிறேன்’ என்று முடித்திருந்த கடைசிக் கடிதம், மனைவி அலெய்டாவிடம் கிடைக்கும்போது சே பொலிவிய ராணுவப் படைகளால் சுற்றி வளைக்கப்பட்டிருந்தார். காலில் குண்டடிபட்டதுடன் கடும் சித்திரவதை களுக்கும் உள்ளாகி அடைக்கப்பட்டிருந்த அந்தப் பாழடைந்த கட்டடத்திற்குள் கொஞ்சம் உணவு எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்த பெண்ணிடம் சேகுவாரா கேட்ட கேள்வி காலத்தை வென்றது.

ரொட்டித் துண்டுகளை ஏந்தி நின்ற பெண், தான் உள்ளூர்ப் பள்ளி ஆசிரியை என்றவுடன், தான் கிடத்தப்பட்டிருக்கும் சிதிலமடைந்த கட்டடம் எதற்குப் பயன்படுகிறது என்று சே கேட்கிறார். பதில், `பள்ளிக் கட்டடம்’ என்று வருகிறது. `இவ்வளவு மோசமான கட்டடத்திலா இந்நாட்டுக் குழந்தைகள் கல்வி கற்கிறார்கள்? நான் உயிருடன் இருந்தால் இந்தக் கிராமத்தின் குழந்தைகளுக்கு ஒரு அழகிய பள்ளிக் கட்டடத்தைக் கட்டித் தருவேன்’ என்கிறார். இன்னும் சில மணி நேரத்தில் தான் கொல்லப்படுவோம் என்பது தெரிந்தும் குழந்தைகளின் நலன் கருதி உதிர்த்த அந்தச் சொற்கள் அமரத்துவம் வாய்ந்தவை.புரட்சி நாயகர் சேவின் பயணத்தில் பாப்லா நெரூதாவின் கவிதை வரிகள் எப்போதும் உடன் சென்றன என்றால்,
தமிழ்நாட்டின் ஒரு மகாகவி தான் போகும் பாதையெங்கும் புரட்சி விதைகளைத் தூவிச் சென்றார்.
ஆம், பாரதியின் இறுதிக்காலம் ஒரு சோக காவியம். திருவல்லிக்கேணி கோவில் யானைக் காலடியில் சிக்கித் தப்பிப் பிழைத்தவர், வழக்கறிஞர் தங்கவேலுவின் அழைப்பை ஏற்று ஈரோடு சென்று கருங்கல்பாளைய நூலகத்தில் உரையாற்றுகிறார். சுதேசமித்திரனில் வெளியான பாரதியின் `ஈரோடு யாத்திரை’ கட்டுரையில் நகைச்சுவை மிளிர்ந்தது. மூன்றரை அடி நீள கட்டை வண்டியில் மூன்று தடிமனிதர்களை மாட்டுப் பூனை எனும் ஜந்து இழுத்துச் சென்றது குறித்து அங்கதம் ததும்பப் பதிவு செய்கிறார். இரண்டு மாதங்கழித்து உடல் நலிவுற்ற நிலையிலும் மருந்து உட்கொள்ள மறுக்கிறார் பாரதி. நோபல் பரிசு பெறத் தகுதிபெற்ற மாபெரும் மக்கள் கவிஞனின் இறுதிக்காலம் துளசிங்கப் பெருமாள் கோயில் தெரு இல்லத்தில் வாழ்ந்த பத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களில் ஒன்றாய், ஒண்டுக் குடித்தனமாக ஒரு சிறிய அறைக்குள் முடங்கியது, வரலாற்றுச் சோகம். அச்சிறு அறைக்குள் இருந்துதான், அடுத்த நாள் அலுவலகம் சென்று `ஆப்கானிஸ்தானத்து அமானுல்லாகான்’ குறித்து வியாசம் ஒன்று எழுத வேண்டும் என்ற அவரது இறுதி ஆசை வெளிப்பட்டது. வேறு யார் சொன்னாலும் செவிமடுக்காத பாரதி, தன் செல்ல மகள் சாகுந்தலையின் கோரிக்கைக்குப் பணிவார் என்ற நம்பிக்கையில் மருந்து கொடுக்கிறார்கள். மருந்து கொடுப்பது தன் மகள் என்பதால் மறுப்பேதும் சொல்லாமல் வாங்கிச் சாப்பிட்டபின் பாரதி சொன்னது. ‘சாகுந்தலை, நீ கொடுத்தது மருந்து அல்ல; பார்லிக் கஞ்சியம்மா’ என்று.
புரட்சியாளர்கள் மரணத்தை முத்தமிடும் நேரத்திலும் சக மனிதரை நேசித்திருக்கிறார்கள். நகைச்சுவை அவர்களின் இறுதிப்பயணத்தில் உடன் வந்தது. சிலோன் நாட்டுச் சிறுமிக்குப் போட்ட இறுதிக் கையெழுத்து, சாகுந்தலையின் பார்லிக் கஞ்சி, வண்ணமயமான பள்ளி வளாகம் குறித்த வாக்குறுதி என மாபெரும் மனிதர்களின் கடைசி மணித்துளிகளில் மழலைக் குழந்தைகளின் மயிலிறகு வருடல்கள் மென்மையைத் தவழச் செய்திருக்கின்றன. சமூக நலன் காக்க பெருங்கனவோடு போராடி விடைபெற்ற மாமனிதர்களை இந்தச் சமூகம் உரிய வகையில் நினைவுகூர்வதுண்டா என்ற கேள்வி திரும்பத் திரும்ப எழுப்பப்படுவதுண்டு. அதற்கான விடை, இருபது ஆண்டுகளுக்கு முன் எனக்குக் கிடைத்தது.
சென்னை, அண்ணாசாலையில் திரையரங்கு ஒன்றில் அரங்கம் நிறைந்திருந்த மாலைக் காட்சியில் அமர்ந்திருக்கிறேன். ‘பாரதி’ திரைப்படம். ஒரு மகாகவியின் இறுதி ஊர்வலத்தில் ஏன் வெறும் பதினான்கு பேர் மட்டும் கலந்துகொண்டார்கள் என்ற வலி மிகுந்த கேள்வியை முன்வைத்து பார்வையாளர்களை பாரதியின் வரலாற்றுக்குள் அழைத்துச் செல்லும் அந்தத் திரைப்படம். பாரதியின் ரௌத்திரம், செல்லம்மாவின் தவிப்பு, குவளையின் நட்பு, புலமையுடன் உறவாடிய வறுமை என அனைத்தையும் அழுத்தமாகப் பதிவு செய்த படைப்பு. திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் மீண்டும் பாரதியின் இறுதி ஊர்வலக் காட்சி. `பாரதி போன்ற மகாகவிகளை வாழும் போதே அங்கீகரியுங்கள். நல்லதோர் வீணை செய்தே நலம்கெடப் புழுதியில் அதை எறிந்திடல் வேண்டாம்’ என்ற வேண்டுகோளுடன் அத்திரைப்படம் முடிவு பெறும். வழக்கமாக, ஒரு திரைப்படத்தின் முதற்காட்சி மீண்டும் இறுதியில் இடம்பெறும்பொழுது அதை உணர்ந்துகொண்ட பார்வையாளர்கள் திரைப்படம் முடியும் முன்னரே அரங்கை விட்டு வெளியேறுவது இயல்பு. ஆனால் இம்முறை அது நிகழவில்லை. பாரதியின் இறுதி ஊர்வலக்காட்சி மீண்டும் இடம்பெற்றபொழுது அரங்கமே எழுந்து நின்றது. அரங்கத்தின் திரை வீழும் வரை நின்றுகொண்டே இருந்தனர் பார்வையாளர்கள். 80 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு மகாகவியின் இறுதி ஊர்வலத்திற்கு வெறும் பதினான்கு பேரை அனுப்பி வைத்த தம் முன்னோரின் அறியாமைக்கு உரிய முறையில் மன்னிப்பு கோருவதைப் போல அமைந்தது அந்த நிகழ்வு. நெகிழ்ச்சியில் முழுவதுமாக உறைந்து போன தருணம் அது. ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றியபோது பார்த்துப் பார்த்துப் புனரமைத்த கருங்கல்பாளையம் நூலக அரங்கில் எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும் பாரதியின் இறுதிப் பேருரையின் தலைப்பு இப்போது நினைவுக்கு வருகிறது. `மனிதருக்கு மரணமில்லை.’
- நடை பயில்வோம்...
சபைக் குறிப்பு
பாரதி நினைவுகள் – யதுகிரி அம்மாள்.
மகாகவியின் புதுவை வாசத்தை ஒரு குழந்தையின் பார்வையில் பதிவு செய்த இந்நூல், பாரதியியல் படைப்புகளில் ஒரு மணி மகுடம். நெல்குத்தும் பெண் பாடிய பாட்டில் இருந்து உருவான ‘மனதில் உறுதி வேண்டும்’ பாடல், குடும்பத்தலைவியாகச் செல்லம்மாள் எதிர்கொண்ட சிக்கல்கள் என அனைத்தையும் விவரிக்கும் உயிர்ப்பான படைப்பு.

‘என் நினைவில் சே’ – அலெய்டா மார்ச்
கெரில்லாப் போராட்டத்திற்கு நடுவே முகிழ்த்த காதல், புரட்சிப் பயணத்திற்கு நடுவே எழுதப்பட்ட காதல் கடிதங்கள் எனப் பத்து ஆண்டுகள் புரட்சி நாயகன் சேவுடனான தன் வாழ்வு குறித்து அவர் மனைவி அலெய்டா எழுதிய நூல் சேகுவாராவின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டுகிறது.
- உதயச்சந்திரன