
பள்ளியையும், புள்ளிமானையும் நேசித்த புதுப்பட்டி கிராம மக்கள் கலெக்டருக்கு மத நல்லிணக்கம் குறித்தும் அன்று வகுப்பு எடுத்துச் சென்றார்கள்.
சென்ற வார விடுமுறை நாள் ஒன்று. காலைப்பொழுதில் சோம்பலும் பதற்றமும் பின்னிப்பிணைந்து கிடந்தன. விதம் விதமாக அபாயச் செய்திகளை நிரப்பியிருந்த நாளிதழ்களைத் தவிர்த்துவிட்டு இணையத்தில் உலவிக்கொண்டிருந்தேன்.
கணித்திரையில் அந்தச் செய்தி மெதுவாய்த் தவழ்ந்து சென்றது. மதுரை, மேலூருக்கு அருகே புதுப்பட்டி கிராமத்துக்குள் இரை தேடி வந்த ஒன்றரை வயதுப் புள்ளிமான் ஒன்று எதிர்பாராமல் முள்வேலியில் சிக்கிக்கொண்டதாம். இதைப் பார்த்த கிராமப் பொதுமக்கள் அந்த ஊராட்சி மன்றத் தலைவருக்குத் தகவல் கொடுக்க, அனைவரும் சேர்ந்து மானை எவ்விதக் காயமுமின்றி மீட்டு அருகிலிருந்த மலைப்பகுதியில் கொண்டு விட்டதாகச் செய்தி சொன்னது. இதே போன்று சில நாள்களுக்கு முன் கீழையூர்ப் பகுதியில் கிணற்றுக்குள் விழுந்த கலைமான் மீட்கப்பட்டதையும் கனிவோடு பதிவு செய்ததைப் படித்தபோது மனதில் மகிழ்ச்சியும், பெருமிதமும் மலர்ந்தன. ஆம்... இன்று புள்ளிமானைக் காப்பாற்றத் துடித்தவர்கள் அன்று ஒரு பள்ளிக்கூடத்தை மீட்கப் போராடியது நினைவுக்கு வருகிறது.

மதுரை கலெக்டரின் முகாம் அலுவலகத்தில்தான் அவர்களை முதன்முதலில் பார்த்ததாக நினைவு. தனி நபராய் மனுக் கொடுக்க வருபவர்களிடம் பரிவும், கூட்டமாய் நுழைபவர்களிடம் கவனமும் கொள்வது என் இயல்பாக மாறிவிட்டிருந்த காலம் அது. ஒரு திங்கட்கிழமை மாலைப்பொழுதில் நான்கைந்து பேர் உள்ளே நுழைந்து கோரிக்கை மனுவை நீட்டுகிறார்கள். `மேலூர் வழியே, மதுரை தாண்டிச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளினால் புதுப்பட்டி கிராமப் பள்ளிக்கூடம் இடிக்கப்பட்டுவிடும். மாற்றுக் கட்டடம் தேவை’ என்று அந்த மனு சோகத்துடன் சொன்னது. `இதில் என்ன சிக்கல்... மத்திய அரசு இழப்பீடு வழங்கும்... தேவைப்பட்டால் மாநில அரசு நிதியும் கிடைக்கும். மாற்று இடம் கண்டுபிடித்தால் உடனே கட்டடம் கட்ட முடியுமே’ என்று அடுக்கடுக்காய் நான் கேள்விகளை முன்வைக்கிறேன். வந்தவர்களுள் ஒருவர், தன்னை ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் என அறிமுகப்படுத்திக்கொண்டு பேசினார். `மத்திய அரசின் இழப்பீட்டை வைத்துப் பள்ளிக் கட்டடம் கட்ட முடியும் என்றாலும், கிராமத்தின் பெரும்பாலான நிலம் குன்றக்குடி ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால் புதிய இடம் தேடுவதில் சற்று சிக்கல்’ என்கிறார். `புதுப்பட்டி கிராமத்தில் இடம் கொடுக்கவில்லை என்றால் அருகிலுள்ள ஊராட்சிக்கு அந்தப் பள்ளி மாற்றப்பட்டு விடும். அப்படி நடந்துவிட்டால் எங்கள் கிராமக் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்’ என்கிறார். உடனே மேலூர் தாசில்தாருக்கு உரிய ஏற்பாடுகள் செய்திட அறிவுரைகள் கொடுத்துவிட்டு வழக்கமான அலுவலகப் பணிகளில் மூழ்கிப்போனதில் இந்தச் சம்பவம் மறந்தே போனது.
சரியாக ஒரு மாதம் கழித்து மீண்டும் அவர்கள் என்னைப் பார்த்து நினைவூட்ட வந்தனர். ஆதீனத்திற்குச் சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலம் எதிர்காலப் பயன்பாட்டிற்கும் ஏற்ற வகையில் பள்ளி வளாகம் கட்டத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்கள். உடனே குன்றக்குடி அடிகளாரைத் தொடர்பு கொண்டு பேசியதில் அவர் பெருந்தன்மையோடு நிலம் வழங்க ஒப்புக்கொண்டார். அலுவலர்களுக்கு விரைந்து செயல்பட அறிவுரைகள் வழங்கியதைப் பார்த்து ஊர்ப் பொதுமக்கள் முகத்தில் நம்பிக்கை பிறக்கிறது. இது நடந்து ஓரிரு மாதங்கள் கழித்து மேலூருக்கு ஆய்வுப் பயணம் மேற்கொண்டபோது மீண்டும் அவர்கள் சந்திக்கிறார்கள். அனுமதி இன்னும் கிடைக்கவில்லை என்ற சோகம் அவர்கள் முகத்தில் படர்ந்திருக்கிறது. இந்து சமய அறநிலையத் துறையில் கோப்புகள் நகரும் வேகம் குறித்த ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறார்கள். தற்காலிகமாக வகுப்புகள் நடைபெற மாற்று ஏற்பாடுகள் செய்து தர வாக்குறுதி தருகிறேன். அதற்குப் பிறகு ஒவ்வொரு திங்கட்கிழமையும் என்னைச் சந்திக்க ஆரம்பித்தார்கள். அதே ஐந்து பேர் மட்டும் திரும்பத் திரும்ப வந்ததைப் பார்த்து எனக்கு சற்று ஆச்சர்யம்தான். ஊராட்சி மன்றத் தலைவர் வள்ளி மயில் என்ற பெண்மணி, அவர் கணவர் முருகேசன் தலைமையில்தான் இந்தக் குழு வாராவாரம் மதுரை நோக்கி வந்து செல்கிறது.

ஒவ்வொரு வாரமும் நேரில் பார்த்துக் கொண்டதில் பள்ளி மீட்புக் குழுவினருக்கும் எனக்குமான இடைவெளி குறைந்ததே போனது. கால தாமதத்தினால் ஏற்படும் வலியைக் குறைத்திட இதமான சொற்களைப் பயன்படுத்தத் தொடங்குகிறேன் நான். வள்ளிமயில் மற்றும் முருகேசன் பொருத்தமான பெயர்கள்தான் என்று தொடங்கி, குழுவில் இடம்பெற்றிருந்த முகமதியப் பெரியவர் பிடித்திருக்கும் மஞ்சள் துணிப்பை வரை இயல்பாய்க் கதைத்து தாமதத்தை மறைக்க தொடர் முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கினேன். சில மாதங்கள் கழித்து ஒரு வழியாய் சென்னைத் தலைமை அலுவலகத்திலிருந்து ஆதீன நிலத்தைப் புதிய பள்ளிவளாகம் கட்ட ஒப்புதல் வழங்கிக் கடிதம் வந்தது. மகிழ்ச்சியுடன் சந்திக்க வந்த புதுப்பட்டி கிராம மக்களுக்கு இன்ப அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. ஆம். மத்திய அரசின் இழப்பீடு தவிர, மாவட்ட நிர்வாகம் சார்பிலும் பள்ளி வளாகத்தில் கூடுதல் வசதிகள் செய்திட அதிக நிதி ஒதுக்கப்பட்டது குறித்துத் தெரிவித்தவுடன் அவர்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. `வேறுபாடுகளையெல்லாம் மறந்து, ஒற்றுமையாய் உங்கள் பள்ளியை மீட்க ஆறுமாதமாக அலைந்த உங்களுக்கு மதுரை மாவட்ட நிர்வாகத்தின் அன்புப் பரிசு’ என்று சொல்லி, `கட்டடப் பணிகளை விரைந்து மேற்கொள்ளுங்கள்’ என்று வழியனுப்புகிறேன். மீண்டும் அடுத்த திங்கட்கிழமை அதே குழு வந்து நின்றபோது, `இப்போது என்ன சிக்கல்’ என்கிறேன். ‘அதெல்லாம் ஒன்றுமில்லை... புதிய பள்ளி வளாகக் கால்கோள் விழாவிற்கு வருகை தர கலெக்டரின் தேதி வேண்டும்’ என்கிறார் முருகேசன். இதுபோன்ற விழாக்களில் கலந்து கொள்வதை நான் எப்போதும் தவிர்த்துவருவதை இவர்களுக்கு எப்படிப் புரிய வைப்பது? மேலூர்ப் பகுதியில் ஆய்வு செய்ய வரும்போதுதான் இயலும் என்றபடியே உதவியாளரை அழைத்துக் கேட்கிறேன்.
`மேலூருக்குப் போக தேதி இருக்கிறதா, என்ன?’ என்ற என் கேள்வியின் போக்கைக் குறிப்பால் உணர்ந்த உதவியாளர், `இன்னும் ஒரு மாதத்திற்கு வாய்ப்பே இல்லை’ என்கிறார் சற்றே உரத்த குரலில். முருகேசன் குழுவினரோ `நாங்கள் காத்திருக்கிறோம்’ என்கின்றனர். சுற்றுப் பயணத் திட்டத்தை வாங்கிப் பார்த்தபடியே, `இரண்டு வாரம் கழித்து ஒரு சனிக்கிழமைதான் மேலூர் வர வாய்ப்பிருக்கிறது’ என்கிறேன். வழக்கமாக சுப நிகழ்ச்சிகளை சனிக்கிழமை நடத்தமாட்டார்கள். அப்படியாவது தவிர்க்கமுடியுமா என்று பார்த்தால்... அதற்கும் `சரி’ என்கிறார்கள். அனைத்து அம்புகளையும் இழந்துவிட்ட நிலையில் இறுதியாக ஒரு ஆயுதத்தைப் பயன்படுத்த முடிவு செய்கிறேன். இம்முறை எப்படியும் அவர்கள் பின்வாங்கி விடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு. `புதுப்பட்டி கிராமக் குழுவில் இடம்பெற்ற முகமதியப் பெரியவர் முன்னின்று கால்கோள் விழாவை நடத்தினால் நான் வருகிறேன்’ என்று சொல்லி முடித்தவுடன், `அப்படியே செய்துவிடுகிறோம்’ என்றார்கள். இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை நான்.
எப்படியும் ஊர் திரும்பி தங்களுடைய தயக்கத்தை எப்படியாவது வெளிப்படுத்துவார்கள் என்று பார்த்தால், தினந்தோறும் விழா ஏற்பாடுகள் குறித்துத் தகவல் தெரிவிக்க, இவர்கள் அழைத்துக்கொண்டேயிருக்கிறார்கள் என்று உதவியாளரின் ஆதங்கமும் தெரியவருகிறது. எப்படியாவது இந்நிகழ்ச்சியைத் தவிர்க்க வேண்டுமென நினைத்தது மாறிப்போய், அந்த நாளை நோக்கி எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கத் தொடங்கினேன். கள்ளழகர் திருவிழா, ஏர்வாடி சந்தனக் கூடு திருவிழா போன்ற நிகழ்வுகளில் மாற்று மதத்தவர் பங்கு பெற்றதுண்டு. ஆனால் இங்கு தலைமை தாங்கி முன்னின்று விழாவை நடத்திக்கொடுக்கும் புதுமையான நிகழ்வைக் காண மனம் விரைந்து கொண்டிருந்தது. அந்தச் சனிக்கிழமையும் வந்து சேர்ந்தது. இதர ஆய்வுப் பணிகளையெல்லாம் முடித்துவிட்டு, காலை 11 மணி வாக்கில் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து புதுப்பட்டி கிராமம் நோக்கித் திரும்பினால், ஊரே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. ஒரு கிராமமே அந்தப் பள்ளியை அவ்வளவு நேசித்திருக்கிறது. ஊர்ப் பெரியவர்கள், ஆசிரியர்கள் அறிமுகம் செய்து வைக்கப்படுகிறார்கள். என் கண்களோ விழா நிகழ்விடம் நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன. துள்ளிக்குதித்தோடும் குழந்தைகளை அதட்டியபடியே ஊர்ப் பெரியவர்கள் எங்களை அழைத்துச் செல்லுகின்றனர்.
கால்கோள் விழா நடக்கும் இடத்தை நெருங்கியவுடன் காலணிகளை அகற்றியபடியே பார்த்தால், தேங்காய் பழங்களுடன் கிராமப் பூசாரி ஒருவர் கூட்டத்தில் தென்படுகிறார். எனக்கோ ஏமாற்றம். விழா தொடங்குகிறது. எளிமையாகப் பூசைகள் தொடங்குகின்றனர். தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி மரபுகள் முழுமையாகப் பின்பற்றப்படுகின்றன. மேலும் மேலும் ஏமாற்றம்.
கால்கோள் நிகழ்வுகள் முடியும் நேரத்தில் பள்ளி வாசலிலிருந்து வந்திருந்த முகமதியப் பெரியவர்கள் அழைக்கப்படுகிறார்கள், அவர்கள் முன்வந்து திருமறை வரிகளை ஓதத் தொடங்குகிறார்கள். வியப்பில் மூழ்கிப் போகிறேன். ஊர்ப் பொதுமக்களோ கற்பூர வழிபாட்டுக்குத் தந்த அதே மரியாதையை பாத்தியா ஓதி முடித்தபின், அந்த மயிலிறகு வருடலுக்கும் தருகிறார்கள்.
மத வேறுபாடுகளைச் செயற்கையாக இணைக்க முயன்ற கலெக்டருக்கு கால்கோள் விழாவை ஒரு சர்வமத வழிபாடாக மாற்றிக்காட்டிய புதுப்பட்டி கிராம மக்களின் அழகிய செயல்பாட்டை என்றும் மறக்கவே முடியாது.
பள்ளியையும், புள்ளிமானையும் நேசித்த புதுப்பட்டி கிராம மக்கள் கலெக்டருக்கு மத நல்லிணக்கம் குறித்தும் அன்று வகுப்பு எடுத்துச் சென்றார்கள்.
பள்ளியை மீட்டெடுத்த கிராம மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் பரிசளித்ததுபோலவே பள்ளிச் சிறுமிகள் இருவர் கலெக்டருக்குப் பரிசளித்ததும் மதுரையில் நடந்தது. ஒரு நாள் காலை முகாம் அலுவலகத்திலிருந்து அவசரமாக வாகனத்தில் ஏறும்போது வெள்ளைத்தாளை ஏந்தியபடியே இரண்டு சிறுமிகள், பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு நர்சிங் படிப்பைத் தொடர கல்விக்கடன் கேட்டு விண்ணப்பம் கொடுக்கிறார்கள். ஒரு பெண்ணின் தாய், கணவரை இழந்தவர். கட்டடத் தொழிலாளராகப் பணிபுரிகிறார். மற்றொரு பெண்ணின் தாய், மீனாட்சி அம்மன் கோயில் நடைபாதையில் பூ விற்பவர். இருவருக்கும் அவசியம் உதவ வேண்டும் என மாவட்ட வங்கி மேலாளர் வணங்காமுடியிடம் நினைவுபடுத்த உதவியாளரிடம் சொல்கிறேன். இது நடந்த ஒரே வாரத்தில் எதிர்பாராதவிதமாக மதுரையிலிருந்து ஈரோடு மாவட்டத்திற்கு இடமாறுதல். நாற்பத்து எட்டு மணி நேரத்தில் எல்லாமே நடந்து முடிந்துவிட்டது.
மதுரையிலிருந்து கிளம்புவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கும்போது வணங்காமுடியிடமிருந்து தொலைபேசி அழைப்பு. அரை மணி நேரத்தில் சந்திப்பதாகக் கூறுகிறார். விடைபெறுவதற்கு முன்னால் சந்திக்க வந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட ஒரு மணி நேரம் கழித்து உள்ளே வந்த வணங்காமுடியுடன் இரண்டு சிறுமிகள். நர்சிங் படிக்கக் கல்விக் கடன் கேட்டவர்கள் தான். மேலமாசி வீதி கனரா வங்கி அந்தப் பெண்களுக்குக் கல்விக் கடன் வழங்கிவிட்டது. `மதுரையிலிருந்து விடைபெறுமுன் அந்தப் பெண்களுக்கு நீங்கள்தான் கல்விக் கடனை வழங்க வேண்டும்’ என்றார். ஒரு நிமிடம் கண் கலங்கிவிட்டது எனக்கு. வழியனுப்பு விழாக்கள், பரிசுகளையெல்லாம் என்றும் தவிர்த்திட விழையும் எனக்கு மதுரையில் கிடைத்த மிகச்சிறந்த நினைவுப் பரிசு இதுதான் என்று நெகிழ்ச்சியுடன் அன்று சொன்னது இன்றும் என் நினைவில் நிழலாடுகிறது. மாமதுரையின் அந்த நடைபாதை மலர்களின் நினைவுகளைச் சுமந்தபடியே சென்றதால்தான், கொங்கு மண்ணில் சில மாதங்கள் கழித்து எட்டாயிரம் மாணவர்களுக்குக் கல்விக் கடன் என்ற விருட்சத்தை வளர்த்தெடுக்க முடிந்தது. `துள்ளி ஓடும் புள்ளிமான்.’
- நடை பயில்வோம்...
சபைக் குறிப்பு

`ஆகட்டும் பார்க்கலாம்.’ கிராமந்தோறும் கல்விக் கூடங்கள், தொழிற்புரட்சி, நீர் வளம், நிர்வாகம் என இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் போக்கை வடிவமைத்த, பெருந்தலைவர் காமராஜர் குறித்து மிக எளிமையாக எழுதப்பட்ட நூலைப் பலருக்கும் நான் பரிசளித்திருக்கிறேன். வெளி மாநிலத்திலிருந்து வருகைபுரிந்த இளம் அதிகாரிகள் பலர் எழுத்துக் கூட்டிப் படித்து வியந்த புத்தகம் இது. என் அலுவல் பயணத்தில் நான் சோர்வடையும்போதெல்லாம் தஞ்சமடையும் தாய்மடி, இந்தச் சிறு நூல்!
- உதயச்சந்திரன்