
நெருக்கடியான சூழலிலும் முகம் தெரியா நபர்களிடையே முகிழ்க்கும் நேசம்தான் எவ்வளவு அழகானது..?
ஒரு சின்னஞ்சிறு அஞ்சலட்டை 22 வருடங்களாகத் தொடர்ந்து விடாமல் என்னைத் துரத்திவரும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. ஆம். பரமக்குடியில் முதன்முதலில் பணியாற்றியபோது நகரின் முக்கியப் பகுதிகளில் காணப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றி, பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய முடிவெடுத்தோம். கலவரங்கள் நடந்து முடிந்து சில மாதங்களே ஆன நிலையில், இது தேவையற்றது என சக அலுவலர்கள் கேட்காமலேயே கருத்து தெரிவித்தனர். ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை, பின்னாளில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளின்போது நிர்வாகத்தின் கரங்களை வலுப்படுத்தும் என்பது எனது வாதம். அறுவடைக் காலம், உள்ளூர்த் திருவிழா அனைத்தும் முடிந்து நகர் இயல்பு நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது இந்தத் துல்லியத் தாக்குதல் நடத்திடத் திட்டம் தீட்டப்பட்டது. பதினான்கு மாதங்கள் அங்கே பணியாற்றிய அனுபவத்தில் நகரின் ஒரு பகுதியைத் தொட்டால் மறுபகுதியில் எப்படி எதிரொலிக்கும் எனும் சமூகவியல் நீரோட்டத்தின் தடம் பழகிப்போனதால் பணி சற்று சுலபமானது. ஊரின் நான்கு வெவ்வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கிய அதே நேரத்தில், நகரின் முக்கியப் பிரமுகர்கள் பலர் பரமக்குடி சப் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தனர். தங்களுடைய வணிக வளாகங்கள், நகரில் அப்போது இடிக்கப்பட்டுவருவது தெரியாமலேயே சிலர், பரமக்குடி நகரத்தை அழகுபடுத்த அற்புதமான ஆலோ சனைகளை அள்ளி வழங்கிக் கொண்டி ருந்தனர். நொடியில் வன்முறை பரவிடக் கூடிய பகுதியில் உயர்ந்த வணிக வளாகங்களும், மாளிகைகளும் மட்டுமல்ல, சில அரசு அலுவலகங்களும் தங்களது எல்லைகளை இழந்தன. கூடவே சாதிக்கலவரங்களைத் தூண்டும் பெயர்ப்பலகைகளும் தாமாகவே முன்வந்து விடைபெற்றன. சில வாரங்கள் நீடித்த இந்தப் பணியைப் பலர் பாராட்டவும், சிலர் விமர்சிக்கவும் செய்தார்கள்.
அடுத்த இரு மாதங்களில் காஞ்சிபுரத்திற்கு இடமாறுதல் கிடைக்க, ஏதோ மாபெரும் சாதனைகள் புரிந்துவிட்ட மகிழ்ச்சியுடன் புறப்படத் தயாராகிக்கொண்டிருந்தபோது, முதுகுளத்தூரிலி ருந்து ஒரு அஞ்சலட்டை வந்து சேர்ந்தது. `சின்னசாமி’ என்று மட்டும் கையெழுத்திட்டு, முகவரி இல்லாமல் வந்த அந்தச் சின்னஞ்சிறு அஞ்சலட்டைதான் இன்னும் என்னைத் துரத்திக்கொண்டிருக்கிறது. ஆம், “முதுகுளத்தூரிலிருந்து மனைவியின் நகைளை விற்றுக் கிடைத்த பணத்தில் பரமக்குடி பேருந்து நிலையம் அருகே ஒரு கடையின் முன்பகுதியை மூன்று வருடக் குத்தகைக்கு எடுத்துச் சிறிய இரவு உணவகம் ஒன்றை நடத்தி வந்தேன். சமீபத்தில் நீங்கள் எடுத்த ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையின் போது இடிக்கப்பட்டுவிட்டது. எனவே கொண்டு வந்த அனைத்தையும் இழந்து ஊர் திரும்புகிறேன். ஆனாலும் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் நீங்கள் நேர்மையாகப் பணிபுரிந்தீர்கள். நன்றி” என்று எழுதப்பட்டிருந்தது. எதிர்காலமே கேள்விக்குறியான போதும் அந்த நிலைக்குக் காரணமானவரின் நேர்மையைப் பாராட்ட முன்வரும் அந்த எளிய மனிதர் எங்கே? தகுதியுள்ள நபர்களுக்கு முறையான மாற்று ஏற்பாடுகள் செய்தி டாமல் அவர்களுடைய வாழ்வாதாரத்தைச் சிதைத்திட்ட செயலை மிகப்பெரிய சாதனை என நினைத்து உலாவரும் நான் எங்கே..? முகவரியில்லாத அந்தச் சின்னசாமியின் பெருந்தன்மைக்கு முன்னால் மிகச் சிறிய உயிரினம்போல் நான் உணர்ந்த நாள் அது.

ஒரு சின்னஞ்சிறு அஞ்சலட்டை... நான்கு எளிமையான வரிகள். ஆனால் அவற்றின் தாக்கம் காலம் கடந்தும் வலிக்கிறது. ஒரு சொல் தீரா வலியை ஏற்படுத்தும் என்பது உண்மைதான். அதே சமயம் என்றோ முன்வைத்த தனது கோரிக்கை இன்று நிறைவேறிய மகிழ்ச்சியில் கள்ளம்கபடமில்லாத, நன்றி கலந்த புன்னகையை உதிர்த்தபடியே செல்லும் ஏதோவொரு கிராமத்துப் பெரியவரின் முகம், அதுவரை இருந்த களைப்பை நீக்கி அடுத்த ஒரு மாதத்திற்கு உற்சாகமாய் ஓட வைக்கும். தமிழகப் பள்ளிக் குழந்தைகளின் கரங்களில் தரமான பாடநூல்கள் தவழவேண்டும் என உறக்கமின்றி உழைத்த நாள்கள் அவை. தமிழ்ச் சமூகத்தின் மாபெரும் கனவை நிறைவேற்றிட சில நூறு ஆசிரியர்கள் கொண்ட குழுவுடன் இரவு பகல் பாராமல் பணியாற்றி உருவாக்கிய பக்கங்களை அழகாக வடிவமைக்க வேண்டும் என்ற வேகத்துடன் இயங்கிக்கொண்டிருந்தோம்.
பயன்படுத்தும் எழுத்துரு, நிறங்களின் கோவை, கதை சொல்லும் ஒளிப்படங்கள், வெளிநாட்டுத் தரத்தில் வரைபடங்கள், தொழில்நுட்பம் இழைந்தோடும் விரைவுக் குறியீடுகள் எனப் பார்த்துப் பார்த்துச் செதுக்கிய சிற்பங்கள் அவை. ``சில நூறு பக்கங்கள் கொண்ட வெறும் புத்தகங்கள் அல்ல இவை. தமிழக மாணவர்களின் நன்னம்பிக்கை முனை. புதிய பாடநூல்களைக் கரங்களில் ஏந்தும் தமிழக மாணவர்கள் தங்களுடைய தன்னம்பிக்கை உயர்வதை உணர வேண்டும்” என்று அடிக்கடி குழுவினரை நான் உற்சாகப்படுத்திக்கொண்டே இருப்பதுண்டு. வடிவமைப்பில் நளினம், மழலையர் விரும்பும் வண்ணக்கலவை என ஒவ்வொன்றிலும் பார்த்துப் பார்த்து அடம்பிடித்து அழும் குழந்தையாய் உலவி வந்த என்னைப் பொறுத்துக்கொண்டு ஆசிரியர் குழுவினர் பணிபுரிந்த காலம் அது.
புகழ்பெற்ற Guyton வகை மருத்துவப் படிப்பு நூல்களை அடிப்படையாகக் கொண்டு ப்ளஸ்டூ உயிரியல் பாடங்களின் வரைபடங்களை உருவாக்கிட முயன்றுகொண்டிருந்தோம். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் சிங்கப்பூர் அரசுப் பாட நூல்களை அலசி ஆராய்ந்து ஒரு குறிப்பிட்ட வடிவமைப்பில் பாடநூலைத் தயார் செய்ய வடிவமைப்பாளர்கள் பலரைப் பணிக்கு அமர்த்தியிருந்தோம். உயிரியியல் பாட வடிவமைப்பு முடிவடையும் கடைசி நேரத்தில், அதை மாணவர் நலன் கருதி, முழுமையாக மாற்றிட வல்லுநர் குழு பரிந்துரைத்தது. முந்நூறு பக்க நூலின் வடிவமைப்பைப் புதிய முறையில் மூன்றே நாள்களில் உருவாக்க வேண்டிய கட்டாயம். முடியுமா என்று அனைவரும் தயங்குகின்றனர். இரவு பகலாகப் பணியாற்றி, வடிவமைப்பு செய்துகொடுத்த நபரிடம் நானே பேசுவது என்று அவரை அழைக்கச் சொன்னேன்.
அடுத்த நாள் காலை, பத்தே மாதங்களில் 245 பாடங்கள், 23,000 பக்கங்கள் உருவாக்கம் என இயங்கிக்கொண்டிருந்த கனவுலகத்தை நேரில் காண இலக்கிய நண்பர் ஒருவர் வந்திருந்தார். 11-ம் வகுப்பு தமிழ்ப் பாடநூலில் இடம்பெற்ற பிரமிள் கவிதையைப் பற்றிச் சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தபோதுதான், அந்த உயிரியல் பாட வடிவமைப்பாளர் பார்க்க வந்திருப்பதாக உதவியாளர் கூறுகிறார். `வரச்சொல்லுங்கள்’ என்று நிமிர்ந்து பார்த்தால், பணிவா, தயக்கமா என்ற தெளிவின்றி மெலிந்த உடலமைப்பில் அந்த இளைஞர் உள்ளே வருகிறார். `உயிரியல் பாடங்களை மிக அழகாக வடிவமைத்தி ருக்கிறீர்கள். உங்களுடைய நிறுவனத்தில் எத்தனை பேர் பணிபுரிகிறார்கள், இந்த நூல் வடிவமைக்க எத்தனை நாள்கள் ஆனது’ என்று கேட்டுக்கொண்டிருந்த நான் `உங்கள் பெயர் என்ன’ என்கிறேன். `பாபு’ என்கிறார் அந்த இளைஞர். `அவ்வளவுதானா, ரொம்ப சின்னப் பெயராக இருக்கிறதே..? சொந்த ஊர் எது?’ என்றேன். அவர், `கும்பகோணம்’ என்றவுடன் இலக்கிய நண்பரைப் பார்த்துப் புன்னகைக்கிறேன். `கும்பகோணம்...’, `பாபு...’ என்று தொடங்கினால், `யமுனா...’, `மோகமுள்’ என்றுதானே முடியவேண்டும். யமுனாவின் வீட்டு நிலைகளில் இரு மயில்கள் ஒன்றையொன்று பார்ப்பதுபோல் அசைந்தாடிக் கொண்டிருக்கும் வண்ணக் கண்ணாடிக் குழல்கள்; புள்ளி மான்களும், மயிலும், கொடியும் எனப் பூக்கள் வரையப்பட்ட வெல்வெட் துணியொன்று விளக்கொளியில் மின்னிக் கொண்டிருப்பதைப் பார்த்து பாபு சொன்ன வரிகளை நண்பரிடம் நினைவுபடுத்துகிறேன். “யமுனாவின் கைப்பட்ட எதற்குமே ஒரு தனி அழகு ஏறி விடும்.” தீண்டிய மோகமுள் விட்டு விலகிட சில மணித்துளிகள் ஆனது.
``பாபு! நீங்கள் அழகாக வடிவமைத்துக் கொடுத்திருக்கிறீர்கள். ஆனால் வல்லுநர் குழு பரிந்துரையின்படி வடிவமைப்பில் மாற்றம் செய்ய முடிவெடுத்திருக்கிறோம். ஆகவே, முழுமையாக வடிவமைப்பை மாற்றி மீண்டும் முதலில் இருந்து தொடங்கவேண்டும். இவ்வளவு நாள்கள் நீங்கள் உழைத்ததற்கு உரிய ஊதியத்தை நாங்கள் கொடுத்துவிடுகிறோம். புதிய வடிவமைப்பை விரைந்து முடித்திட வேண்டும்’’ என்கிறேன்.
``புதிய வடிவமைப்பில் பாடநூலைச் செதுக்கிட நான்கு நாள்கள் போதும். ஆனால் பழைய வடிவமைப்புப் பணிக்கு எனக்கு ஊதியம் எதுவும் வேண்டாம்’’ என்று பாபு சொன்னதைக் கேட்டு எங்களுக்கு அதிர்ச்சி.
``இந்தப் பாட நூல்களை உருவாக்க நீங்களெல்லாம் இரவு பகல் பார்க்காமல் எவ்வளவு சிரமப்படு கிறீர்கள் என்று பார்த்திருக்கிறேன். இந்த வடிவமைப்பு என்னுடைய பங்கு’’ என்று சொன்ன பாபு ``இந்தப் பாடநூல்களெல்லாம் நான் படிக்கும்போது இருந்திருந்தால் இன்னும் நல்லா படிச்சிருப்பேன் சார்” என்று முடித்தபோது அறையில் இருந்த அனைவரும் நெகிழ்ந்து போனோம்.
தொடர் பயணத்தில் கற்றுக்கொள்ளும் பொழுதுகள்போலவே தென்றல் தழுவிச்செல்லும் தருணங்களும் உண்டு. கொரானா நோய்த் தடுப்புப் பணிகளைச் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒருங்கிணைத்துச் செயல்படும் பணியில் சென்ற வாரம் ஒரு புதிய அனுபவம் கிடைத்தது. நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பின்பும், நோயின் அறிகுறிகள் தென்படாததால் அவரவர் வீட்டிலேயே மருத்துவர் ஆலோசனைப்படி, சிலர் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர். எனினும் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பு அவசியம் என்று அளிக்கப்பட்டிருந்த அறிவுரை முழுமையாகக் கடைப்பிடிக்கப்படுகிறதா என்று நேரடியாக தொலைபேசி வழியே அழைத்துப் பரிசோதிக்க விரும்பினேன்.
மொத்தம் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 186 பேரின் பட்டியல் கிடைத்தது. வயது, தொழில், வசிப்பிடம் என்று வகை பிரித்து, பத்துப் பேரிடம் பேசுவதாகத் திட்டம் வகுத்துக்கொண்டேன். முதலில் கிழக்குத் தாம்பரத்தில் வசிக்கும் ஒருவரிடம் தொடர்புகொண்டு பேசினேன். தற்போது நலமாக இருப்பதாகவும் அரசு மருத்துவப் பணியாளர்கள் உடல் வெப்பநிலையை இப்போதுதான் கவனித்துச் சென்றதாகவும் குறிப்பிட்டார். அடுத்து தொடர்புகொண்ட தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண், தானும் நோய்த் தொற்றுக்குள்ளான தன் தாயும் நலமாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
செங்கல்பட்டைச் சேர்ந்த மருத்துவர் சாதிக் என்பவரோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மீண்ட கதையைச் சொன்னார். மனதைத் தளரவிட வேண்டாம். ‘உங்களால் போராடி வெற்றிபெறமுடியும்’ என்றேன் நான். அடுத்து தொடர்புகொண்ட வெங்கடேசன் என்பவர், வணிகவரித் துறையில் பணியாற்றுபவர். ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த அவர் நலமாக இருப்பதாகவும் ‘மாபெரும் சபைதனில்’ தொடரைத் தொடர்ந்து படித்து வருவதாகவும் கூறி வியப்பில் ஆழ்த்தினார்.
அடுத்து பட்டியலை அலசிய கண்கள் ஒரு பெயரில் நிலைகொண்டு நின்றன. லீலாவதி. வயது 80. குறிப்பிடப்பட்டிருந்த அலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டால் சென்னையில் மருத்துவராகப் பணிபுரியும் அவர் மகன் பேசுகிறார். தன்னுடைய தாய் நலமாக இருப்பதாகத் தெரிவித்தவரிடம், அவர் உட்கொள்ளும் மாத்திரைகள், இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு என அடுக்கடுக்காய்க் கேட்கத் தொடங்குகிறேன். அவரும் பொறுமையாக பதில் சொல்கிறார். “தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். 80 வயது என்பதால் சற்று கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் கேட்கிறேன்” என்று சொல்கிறேன் நான். கூடவே ‘`லீலாவதி என்பது என்னுடைய அம்மாவின் பெயரும்கூட. எனவே உங்கள் அம்மாவைச் சற்று கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று நான் சொன்னவுடன் மறுமுனையில் பேசிய மருத்துவர் நெகிழ்ந்து போகிறார். ‘நோய்த் தொற்று விலகியவுடன் நேரில் சந்திக்கலாம்’ என்று விடைபெறுகிறோம். நெருக்கடியான சூழலிலும் முகம் தெரியா நபர்களிடையே முகிழ்க்கும் நேசம்தான் எவ்வளவு அழகானது..?
‘மயிலிறகு வருடல்.’
(நிறைவு பெற்றது)
சபைக்குறிப்பு:

நாற்பது வாரங்களில் நிறைய கற்றுக்கொண்டேன். ‘பத்து மாதங்கள் சுமந்து’ என்று அடிக்கடி உச்சரிக்கப்படும் சொற்றொடரின் பொருள் முழுமையாகப் புரிந்தது. கீழடி, ஏறுதழுவுதல் எனும் ஒற்றைச் சொற்கள் உலகெங்கும் வாழும் தமிழர்களை ஒன்றிணைக்கும் வல்லமை கொண்டவை என்பதும் தெரியவந்தது. மக்களுடன் இணைந்து வாசித்தால்தான் வரலாறு முழுமையடையும் என்ற தெளிவு பிறந்தது. சிந்துவெளி முதல் Big Data தொழில்நுட்பம் வரை, மன்ரோ முதல் மண்டேலா வரை, திரைமொழியின் அழகியல், பசுமையின் மறுபக்கம், கற்றல் குறைபாடு எனப் பல்வேறு வண்ணங்களில் உரையாட தமிழ்ச் சமூகம் ஆர்வத்துடன் முன்வரும் என்ற செய்தியே உற்சாகம்கொள்ள வைத்தது. தொடரில் நாயக மனோபாவத்தைத் தவிர்த்து எளிய மனிதர்களை முன்னிலைப்படுத்த கூடுதல் முயற்சி தேவைப்பட்டது. கடந்த சில வாரங்களில் நெருக்கடியான பணிச்சூழலின் நிழல் எழுத்தில் படிந்திருப்பதை வாசகர்கள் உணரக்கூடும். ஒவ்வொரு வாரமும் எழுத்து, குரல் பதிவு, ஓவியம் எனப் பார்த்துப் பார்த்து உலகின் பல பகுதிகளிலிருந்தும் வரவேற்பளித்த லட்சக்கணக்கான விகடன் வாசகர்களுக்கு என் அன்பும் நன்றியும்.
இது ‘மாபெரும் சபைதனில் ஒரு நிறைவான பயணம்.’
மீண்டும் வசந்தகாலத்தில் சந்திப்போம்!
- உதயச்சந்திரன்