சினிமா
பேட்டிகள்
ஆன்மிகம்
கட்டுரைகள்
Published:Updated:

இயக்கி - கவிதை

கவிதை
பிரீமியம் ஸ்டோரி
News
கவிதை

என் வள நிலத்தின் மலையிறங்கும் அருவிகள் வான் தெறிக்கின்றன

அழகான ஒரு கனவு

ஆயிரமாயிரம் தும்பிகள் என் நிலமெங்கும் திரிகின்றன

மழை வரும் என்பதாய் ஒரு வானிலை

இருள் குருவிகள் தலையுரசப் பறக்கும்

சீதளத்தில் கிழக்கிலிருந்து நீ வருகிறாய்

மயில் தோகை விழிகள்

புடவையாய் சரசரக்க

திருந்த வகிடெடுத்த கருங்குழல் கற்றைகள்

சன்னமாய்க் கலைந்து காற்றைக் கிறுகிறுக்க

பறக்கும் என் பார்வைத் தட்டான்கள்

உன் ஒவ்வொரு அசைவிலும் மோதி

மீளும் வழியற்ற சிலந்தி வலைப் பூச்சிகளாக

அதிலேயே அப்பிக்கொள்கின்றன

குலைந்து நிலம்

உன் மென் அடிக்குப் பூவாகக் கனிய

கையசைவின் சிறுகாற்றில்

என் வள நிலத்தின்

மலையிறங்கும் அருவிகள்

வான் தெறிக்கின்றன

மதயானையின் பிளிறலில்

மத்தகங்கள் அதிர்வதுபோல்

அச்சிறு நடைக்கே மென் முலைகள் அதிர்கின்றன

இயக்கி - கவிதை

பிறை நிலாப் புன்னகையில்

மறைபற்கள் உதிக்கச் சிரித்து நின்றாய்

உன் சருமத்தின் குளிர்ச்சியை

என் கண்கள் உணர்ந்தன

முகப்பூச்சின் மென் வேதி மணமும்

உன் இயல்பான வாசமும் எனை விண்ணவனாக்கின

பதற்றமாய்க் காத்திருக்கும்

என் பூஞ்சையான

இரு சக்கர வாகனத்தில்

பெருங்கருணை போல் அமர்ந்துகொள்கிறாய்

தேவீ!

இந்த வண்டியை இப்படியே வானுக்கு விடவா?