சினிமா
தொடர்கள்
Published:Updated:

இந்திய முத்தம் - சிறுகதை

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுகதை

- வி.எஸ்.முஹம்மத் அமீன்

இன்னும் சில மணித்துளிகளில் உனைஸாவை விட்டு விடைபெறப் போகிறேன். அடுத்த நாளில் இந்திய மண்ணை மிதிக்கப்போகிறேன். அடுத்த நாள் என் சொந்த ஊரில், தெருவில், வீட்டில் கால் பதிக்கப் போகிறேன். இன்னும் இரண்டு ஆண்டுகளில்... இன்னும் ஒன்றரை ஆண்டுகளில்... இன்னும் ஏழு மாதங்களில் என்று நகம் நகமாய் நகர்த்தி இன்றைக்கு அந்த நாள்களை மணிக்கணக்கிட்டு நெருங்கிக் கொண்டிருக்கின்றேன்.

பிழைப்புத்தேடி வெளிநாட்டு வாழ்க்கைக்கு வாக்கப்பட்டுவிட்டால் உள்ளத்தை ஊரில் வைத்துவிட்டு வெற்றுடம்பைச் சுமந்து பாலைவெளிகளில் இப்படித்தான் காலம் தள்ள வேண்டியிருக்கின்றது. எதற்கெடுத்தாலும் கட் அண்ட் ரைட் பேசும் கஃபில் இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தத்தில் ஒருநாள்கூட முந்திவிடாதபடி இரண்டு ஆண்டுகளைப் பூர்த்தி செய்தால்தான் விசா அடிக்கக்கொடுப்பார். இந்த முறை பேரதிசயம் நடந்திருக்கிறது. ஊரிலிருந்து வந்து ஓராண்டு எட்டு மாதங்கள் முடியும் முன்பே லீவு அடித்துக் கொடுத்திருக்கின்றார். ஏன் இந்த மாற்றம்? புரியவில்லை. கேள்வி கேட்கும் இடத்தில் நான் இல்லை. லீவு கிடைத்ததை விடவும் பெருமகிழ்ச்சி வேறென்ன இருக்கமுடியும்.

‘ரெண்டு வருஷம் தெவயலையே... ஏன், எதுனாச்சும் பிரச்னையா?’ என்றுதான் வாப்பா கேட்டார். மனைவியால் வெளிப்படுத்த முடியாத பெருமகிழ்வை பிள்ளைகள் கொட்டித் தீர்க்கின்றார்கள். ‘ஹையா... எங்க வாப்பா அடுத்த வாரம் வருதே..!’ என்று சின்னவள் பார்க்கின்றவர்களிடமெல்லாம் சொல்கிறாளாம். ‘என்ன வேண்டும்?’ என்று கேட்டால் ‘நீங்க வந்தாலே போதும் வாப்பா’ என்கிறாள் மூத்தவள்.

யார் யாருக்கு என்ன வாங்க வேண்டுமென யோசித்து யோசித்து எழுதி, புரைதாவுக்குப் போய் கடைகடையாய் ஏறி இறங்கிப் பொருள்களை வாங்கியாகிவிட்டது. முன்பெல்லாம் கோடாரித் தைலம், பெல்ட், டேப் ரிக்கார்டர், பேண்ட் சட்டைத் துணி, கால்குலேட்டர் என்று வாங்கினால் போதும். இப்போது ஐபோன் தொடங்கி ஒவ்வொருவருக்கும் பொருள்கள் வாங்குவதற்குள் இரண்டு மாதச் சம்பளமும் முழுசாய்த் தீர்ந்துபோய்விடுகிறது. சின்னாப்பா பையனுக்கு டேப்லெட் வாங்கணும். தம்பி பொண்ணுக்கு பேசும் பொம்மை, மச்சான் குழந்தைகளுக்கு கிச்சன் செட் ரியாத்தில் போய்தான் வாங்க வேண்டும்.

இந்திய முத்தம் - சிறுகதை

உனைஸாவிலிருந்து ரியாத் 350 கிலோமீட்டர் தூரம். இங்குள்ள அரசுப் பேருந்துபோல் அங்குள்ள SAPTCOவில் சென்றால் ஐந்துமணி நேரம். காரில் என்றால் மூன்றுமணி நேரத்தில் பறந்துவிடலாம். காருக்கு எப்படியும் நூற்றிருபது ரியால் வேண்டும். SAPTCOவில் அறுபது ரியால்களுடன் முடிந்துவிடும். நேற்றே டிக்கட் முன்பதிவு செய்தாயிற்று. மாலை ஐந்து மணிக்கு பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்படும். இங்கிருந்து மூன்றரைக்குக் கிளம்பினால் சரியாக வரும். இன்னும் இரண்டு மணி நேரம்தான். சாப்பாடு உள்ளே செல்லவில்லை. ஊர் செல்லும் படபடப்பு இரண்டு நாள்களாகவே தொற்றிக் கொண்டது. வழியனுப்புவதற்கு நண்பர்கள் இன்னும் கொஞ்சம் நேரத்தில் வந்துவிடுவார்கள்.

அட்டைப்பெட்டிக்குள் எல்லாவற்றையும் எடுத்துவைத்தாலும் ஏதாவது விடுபட்டுப் போகலாம். ஓடிக்கொண்டிருந்த சிந்தனைகளை கஃபிலுடைய அலைபேசி அழைப்பு சிதறடித்தது. இந்த நேரத்தில் எதற்காக இந்த மனுஷன் போன் செய்யணும். அலைபேசியுடன் இதயமும் சேர்ந்து அதிர்ந்து இரைந்தது.

`அஸ்ஸலாமு அலைக்கும்’

‘வ அலைக்கும் ஸலாம்’

‘நலம்தானே..!’

‘அல்ஹம்துலில்லாஹ்..!’

‘எத்தனை மணிக்கு ரியாத்திலிருந்து ஃப்ளைட்?’

‘நாளை இரவு 12 மணிக்கு..!’

‘இன்றைக்கே ரியாத் போவதாய்ச் சொன்னாயே..!’

‘ஆமா..! ரியாத்தில எங்க மாமா இருக்காங்க.. அங்கபோய் இருந்துட்டு நாளை கிளம்பணும்..!’

‘நல்லது..! ரியாத் எப்போ கிளம்பற..?’

‘இதோ... கிளம்பிட்டேன். 5 மணிக்கு SAPTCOவில் புக் பண்ணிருக்கேன்.’

‘அந்த டிக்கட்ட கேன்சல் பண்ணிடு..! நான் வந்து பேசிக்கறேன். ம்ம்... இல்ல, அஸர் தொழுகைக்கு என் வீட்டுப் பக்கத்திலுள்ள பள்ளிவாசலுக்கு தொழ வா... பேசலாம்.’

சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டார். வானம் இடிந்து தலையில் விழுந்ததுபோல் அதிர்ந்தேன். குப்பென வியர்த்தது. என்னாச்சு..! ஏன் திடீர்னு பயணத்தை ரத்து செய்யச் சொல்கிறார்? இந்த நாட்டில் நான் ஓர் அகதிபோலத்தான். எனது எல்லாப் பிடியும் முதலாளியின் கைகளில்தான். இவர்கள் இப்படித்தான்..! திடீர் திடீரென எதையாவது நினைப்பது. நினைத்ததை எந்தவித யோசனையுமில்லாமல் உடனே செய்வது..!

மாமாவுக்கு போன் செய்து விஷயத்தைச் சொன்னபோது திட்டித் தீர்த்துவிட்டார். என்ன செய்வதென ஒருவருக்கும் புரியவில்லை. நண்பர்கள் ஆறுதல் சொல்ல வந்து கொண்டிருக்கின்றார்கள். கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அழுகை முட்டிக்கொண்டு வந்தது. கோபப்படவோ, அழவோ முடியாது. அதுதான் வளைகுடா வாழ்க்கை.

‘வாப்பா வரலியாம்!’ சின்னவளின் ஆசை தூள்தூளாய்ப் போகாதா? பெரியவள் எப்படிச் சமாளிப்பாள். மனைவி கட்டிய ஓராயிரம் கனவுக்கோட்டைகளை ஒரே நொடியில் இப்படியா தகர்த்தெறிவது. நம்பியிருக்கக் கூடாது. இரண்டாண்டு முடிவதற்கு முன்பே லீவு தருகிறாரென்றால் அப்போதே சுதாரித்திருக்க வேண்டும். எதனால் ரத்து செய்யச் சொல்கிறார். யார் என்ன சொல்லித் தொலைத்துவிட்டார்கள்? வார்த்தைகள் வெடித்துக் கிளம்பின. அலைபேசி அழைப்புகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன. ஒவ்வொருவரிடமும் விளக்கம் சொல்லி முடியவில்லை. சிலர் அதிகமாகவே பயமுறுத்தத் தொடங்கிவிட்டார்கள். ஊருக்குக் கொண்டுசெல்வதற்காகக் கட்டிய பெட்டிகள் என்னைப் பார்த்து ஏளனமாய்ச் சிரித்தன.

ஊருக்குத் தகவல் சொல்ல வேண்டாம். பாவம் அவர்கள் ஏமாந்துபோவார்கள். இந்த வீணாப்போனவன் என்ன சொல்கிறான் என்று பார்த்துவிட்டு இரவு பேசி சமாதானம் செய்யலாம். சந்திக்க வந்த தோழர்கள் கிளம்பியதும் வெறுமை இன்னும் அதிகமானது. அஸர் தொழுகைக்கான அழைப்பு வந்ததும் உளூச் செய்துவிட்டு பள்ளிக்கு நடைபோட்டேன்.

தொழுகை முடிந்து காத்திருந்தேன். ஆபரேஷன் தியேட்டருக்கு வெளியே காத்திருக்கும் அதே துடிப்புடனான காத்திருத்தல். தேர்வு முடிவுகளைத் தேடும் இறுதி நேரத்திற்கான படபடப்பு. கஃபில் வேறு யாருடனோ சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார். தீயாய் வெந்தது. அருகில் வந்தார். தோள்மீது கைபோட்டு நலம் விசாரித்தார். நலவிசாரிப்புக்கான நேரமா அது? மீண்டும் அப்போது கேட்டதையே கேட்டார்.

‘ஒன்னுமில்ல... ஒரு ஏழு மணியப்போல ரெடியா இரு..! நான் என்னோட கார்லேயே உன்னை ரியாத்தில் விட்டுடுறேன். ரியாத்ல ஒரு சின்ன வேலை இருக்கு. நாளை போக வேண்டியது. உனக்காக இன்னிக்கே போறோம்.’

பனித்துளியாய்க் கரைந்தோடியது பயம். ப்பூ... இதுதானா..! இவர்கள் இப்படித்தான். இதை அப்பவே சொல்லியிருக்க வேண்டியதுதானே..!

இந்திய முத்தம் - சிறுகதை

‘வேற ஏதாச்சும் உனக்கு வேணுமா..?!’ என்று அவர் கேட்டபோது கண் கலங்கியது. ‘இல்லை’ எனத் தலையாட்டி நன்றி சொன்னேன். ச்சே, என்ன மனிதன் நான். இந்த இரண்டு மணி நேரத்தில் இவரை என்னவெல்லாம் பேசிவிட்டேன். வந்திருந்த நண்பர்களிடமெல்லாம் இவருடைய மரியாதையைச் சிதைத்துவிட்டேன். அவரை மட்டுமா? ‘இந்த சவூதிகளே இப்படித்தான்’ என்று அவருடைய நாடு, வீடு எல்லாவற்றையும் இந்தக் குற்றத்தில் இணைத்துக்கொண்டேன். மீண்டும் எல்லாரிடமும் இந்த விளக்கத்தைச் சொல்ல முடியுமா? தெரியவில்லை. மாமாவுக்கு போன் செய்தபோது அவர் எடுக்கவில்லை. அழைப்பார். பேசிக்கொள்ளலாம்.

சவூதிகள் கார் ஓட்டுவதே தனி அழகுதான். ஒரு கையில் சாண்ட்விச், டேஷ்போர்டில் டீ, அலைபேசியில் ஓயாத பேச்சு, தலையில் அணிந்திருக்கும் துணியை நிமிடத்திற்கு குறைந்தது ஐந்து முறையாவது சரிசெய்வது, இத்தனையும் செய்துகொண்டே மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் லாகவமாக கார் ஓட்டுவார்கள். பள்ளிப்பருவத்திலேயே ஸ்டீயரிங் பிடித்துப் பழகியவர்கள். அங்குள்ள சாலையும் வாகனமும் அந்த வேகத்திற்கு ஏற்றவை. முதலாளி கார் ஓட்ட ஒரு வேலைக்காரனாய் அவர் அருகில் அமர்ந்திருக்கின்றேன். என்னை வழியனுப்புவதற்காக ஒருநாள் முன்பே கிளம்பியிருக்கின்றார். நிறைய பேசிக்கொண்டே வந்தார். விஷயத்திற்கு வந்துவிட்டார்.

‘உனக்கு ஏன் ரெண்டு வருஷம் முடியுறதுக்கு முன்பே லீவு தர்றேன் தெரியுமா?’ இது நான் எதிர்பாராத கேள்வி. அல்லது நான் அவரிடம் கேட்டிருக்க வேண்டிய கேள்வி. என்னிடம் பதில் இல்லை.

‘இங்கு இப்போ யார் மன்னர் தெரியுமா?’ என்றார். இது தொடர்பில்லாத கேள்வி. ஆனாலும் ஏதோ ஒன்று இருக்கிறது. மன்னரின் பெயரைச் சொன்னேன். ‘அதற்கு முன்பு இங்கு மன்னராக இருந்தவர் யார் தெரியுமா’ என்ற கேள்விக்கு கொஞ்சமாய் யோசித்தேன்.

‘ரொம்பவெல்லாம் யோசிக்க வேண்டாம். இங்கு பெயர் முக்கியமில்லை. காலமெல்லாம் மன்னர், அவருடைய தந்தை, அவருடைய குடும்பம்தான் இங்கு ஆட்சி புரிகின்றார்கள். இனி வரக்கூடியவர்களும் இவர்களின் குடும்பத்திலிருந்தே வருபவர்கள்’ என்று சொல்லிக்கொண்டே என்ன நினைத்தாரோ தெரியவில்லை.

`நான் உன்னிடம் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் அமானிதம். இந்தக் காருக்குள்ளேயே இந்த உரையாடல் முடிந்துவிடவேண்டும். இறைவன்மீது ஆணையாக இது அமானிதம்’ என்றார்.

‘உங்கள் நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன். சொல்லுங்கள்’ என்று சொன்னாலும், அவர் சொல்லும் விஷயங்கள் ஒரு காருக்குள் புதைந்துபோகின்ற செய்தி அல்ல. உலகம் முழுவதும் சென்று சேர வேண்டிய செய்தி.

‘இங்குமட்டுமல்ல, எகிப்து, துனீசியா, லிபியாவில் நாற்பது ஐம்பது ஆண்டுகள் எதேச்சதிகார ஆட்சிதான் இருந்தது. அதை எதிர்த்த மக்கள் புரட்சிதான் அரபு வசந்தம். மக்கள் புரட்சி அங்குள்ள ஆட்சியாளர்களைத் தூக்கி வீசியது. இங்கு அந்த வசந்தம் வருவதற்குள் அடக்கப்பட்டது.’

இந்திய முத்தம் - சிறுகதை

முதலாளி இங்குள்ள மிக முக்கியமான ஆளுமை. அவரை இவ்வளவு நெருக்கமாக நான் பார்த்து உரையாடுவது, அதுவும் இந்த ஆழமான கருப்பொருளில் உரையாடுவது இதுவே முதல் முறை. அவர் ஏதோ ஒன்றை என்னிடம் சொல்ல விரும்புகிறார்.

‘இந்த மன்னரை எதிர்த்து நாங்கள் எதுவும் செய்துவிட முடியாது. இவர்களை நாங்கள் தேர்ந்தெடுக்கவும் முடியாது. அதற்காகத்தான் நீண்ட காலமாய் உயிரைக் கொடுத்து பல நாடுகளில் மக்கள் போராடினார்கள். அரசு அந்தச் சிந்தனையில் உள்ளவர்களைத் தேடியெடுத்துச் சிறைப்படுத்தியது.’

காரின் வேகம் குறைந்தது. இங்குள்ள போக்குவரத்து வசதிகளில் மிக முக்கியமானது இந்த சாஸ்கோ எனும் ஓய்விடங்கள். இதுதவிர ஒவ்வொரு பெட்ரோல் நிலையத்திலும் கடைகள், பள்ளிவாசல் அதனுடன் இணைந்த கழிப்பறைகள் இருக்கும். குறைந்தது பத்து பதினைந்து வண்டிகள் ஒவ்வொரு பெட்ரோல் நிலையத்திலும் இளைப்பாறிக்கொண்டிருக்கும். ஒரு பெட்ரோல் நிலையத்திற்குள் வண்டியை நிறுத்திவிட்டு எனக்கும் அவருக்குமாக பால் கலக்காத சுலைமானியும், சாண்ட்விச்சும் வாங்கி வந்தார்.

காருக்குள் இருந்த மனிதரா இவர். எது இவரின் இயல்பு? இங்கு வருபவர்களிடம் கைகுலுக்கி கன்னத்தோடு கன்னம் வைத்து முத்தமிட்டுப் பேசிச் சிரிக்கின்றார். ஆனால் அவரின் உள்ளுக்குள் ஒரு விடுதலைக்கான ஏக்க நெருப்பு அணையாமல் எரிந்துகொண்டிருக்கிறது.

மீண்டும் பயணம் தொடங்கியது. ஆனாலும் அவர் விட்ட இடத்திலிருந்து உரையாடலைத் தொடங்கவில்லை. கடை வியாபாரம் குறித்து, என் வீடு, எதிர்காலம், இந்தியாவைக் குறித்துப் பேசிக்கொண்டு வந்தார். என் விடுமுறை குறித்துக் கேள்வி எழுப்பி இந்த நாடு குறித்த கவலையைச் சொன்னவர் பாதியிலேயே நிறுத்திவிட்டார். ஏன், நான் சரியான முறையில் அவருடைய உணர்வோட்டத்துடன் இணைந்து கொள்ளவில்லையா?

நாமே கேட்பது அவ்வளவு நன்றாகவா இருக்கும். கேட்கலாமா, வேண்டாமா எனும் மனப்போராட்டத்துடன் அவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். சட்டென நான் எதிர்பாராத ஒரு சூழலில் அந்த உரையாடலுக்குத் திரும்பினார்.

‘ஜனநாயகம் ஓர் அருமையான தத்துவம் தெரியுமா சகோதரனே..!’ என்று சொல்லிவிட்டு பேரதிர்ச்சியாய் ஒரு செயலைச் செய்தார். உன் கையை நீட்டு என்றார். நீட்டினேன். இறுகப் பற்றிக் கொண்டார். கண்களில் வைத்து ஒற்றினார். ஆட்காட்டி விரலில் முத்தமிட்டார். உடலுக்குள் உயிர் பாய்ந்தது. ஜில்லென்றாகிவிட்டது. உறைந்துபோய் நின்றேன்.

‘என்ன... என்ன இது..! ஷேக்..!’ என்றேன்.

‘நான் இதுவரை பேசியது உனக்குப் புரியவில்லையா?’ என்று கேட்டு ஒரு ஏக்கப் பெருமூச்சுடன் பதிலளித்தார். ‘நீ இந்தியன். உன் நாடு ஜனநாயக நாடு. உனக்கு வாக்களிக்கவும், ஆட்சியாளனை எதிர்த்து விரல் நீட்டிக் கேள்வி கேட்கவும் உன் நாடு உனக்கு உரிமை வழங்கியுள்ளது. என் வாழ்நாளில் நான் ஒருமுறைகூட வாக்களித்தது இல்லை. அதற்கான வாய்ப்பு எனக்கில்லை. உன் தமிழ்நாட்டில் தேர்தல் எனச் சொன்னாய். அதற்காகத்தான் நான்கு மாதங்களுக்கு முன்பே உனக்கு விடுமுறை தந்துள்ளேன். அதற்காக உன்னை வழியனுப்ப நானே ரியாத் வருகிறேன். வாக்களிக்கும் உன் விரல்களுக்கு நான் ஜனநாயகத்திற்கான முத்தத்தைத் தந்தேன். அது நான் இந்தியாவிற்குத் தந்த முத்தம்.’ இந்த வார்த்தைகளை அவர் சொல்லும்போது அவர் மிகுந்த உணர்ச்சிப் பெருக்குடன் இருந்தார். அவரை ஆரத் தழுவ வேண்டும்போல் இருந்தது.

டாக்ஸி ஸ்டாண்டில் என்னை இறக்கிவிட்டு வட்டமடித்து வண்டி கிளம்பியது. சாலையின் அந்தப்பகுதியிலிருந்து காரின் கண்ணாடிக் கதவை இறக்கிவிட்டு, பெருவிரல் உயர்த்திக் காட்டினார். வாக்குச் செலுத்தும் ஒற்றை விரலை உயர்த்தி நின்றேன். அவரின் முத்தம் உடம்பெங்கும் பரவிக் கொண்டிருந்தது.