`நிலவைத் தொட இலக்கை நிர்ணயுங்கள். அப்போதுதான் அது தவறினால், நட்சத்திரத்தையாவது உங்களால் நெருங்க முடியும்.’ - டயிள்யூ. க்ளெமென்ட் ஸ்டோன் (அமெரிக்கத் தொழிலதிபர்)
இந்தியப் பாரம்பர்யமும் பண்பாடும் சிறப்பானவை. அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதேநேரத்தில் ஆண், பெண் பாகுபாடு இன்றளவும் தொடர்கிற சமூகம் இது. ஒரு பெண் பருவமடைந்துவிட்டாலே, `எப்போது அவளுக்குத் திருமணம் செய்யலாம்?’ எனக் காத்திருக்கும் சமூகம். அப்படிப்பட்ட வாழ்க்கைச் சூழலில் ஒரு பெண்ணின் லட்சியத்துக்கு ஆதரவு கொடுக்கும் பெற்றோர் மிகச் சிலரே. அந்த வரம் அன்னி திவ்யாவுக்கு (Anny Divya) வாய்த்திருந்தது. ஒரு விமானியாகப் பறக்க ஆசைப்பட்டார் திவ்யா. அந்த ஆசைக்கு உரம்போட்டு வளர்த்ததோடு, அவர் படிப்பதற்காகத் தங்கள் வாழ்நாள் சேமிப்பையெல்லாம் கொட்டிக் கொடுத்தார்கள் அவரின் பெற்றோர்.
30-வது வயதில், அன்னி திவ்யா இந்தியாவின் போயிங் 777 விமானத்தின் இளைய பெண் கமாண்டர் ஆனார். `இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே போயிங் விமானத்தை இயக்கும் இளைய பெண் கமாண்டர் திவ்யாதான்’ எனக் குறிப்பிட்டது சி.என்.என் செய்தி நிறுவனம்.
போயிங் 777 விமானத்தை இயக்குவது சாதாரணமான காரியம் இல்லை. 301 முதல் 368 பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லும் விமானம்; சுமார் 5,240 முதல் 8,555 மைல்கள் வரை பறக்கக்கூடியது. அதிக அனுபவமும் திறமையும்கொண்ட விமானிகளால் மட்டுமே போயிங் 777 விமானத்தை இயக்க முடியும். அதை, இளம் வயதிலேயே வெற்றிகரமாக இயக்கி, சாதித்துக் காட்டியிருக்கிறார் திவ்யா. விஜயவாடாவில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் அன்னி திவ்யா. 19 வயதிலேயே பறக்கும் பள்ளியில் (Flying School) பட்டம் பெற்று, ஏர் இந்தியா நிறுவனத்தில் விமானியாகப் பணிக்குச் சேர்ந்தார். இளம் வயதில் சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த அன்னி திவ்யா, இவ்வளவு பெரிய உயரத்துக்கு வந்த பாதை மென்மையானதாக இல்லை.

ஒரு பேட்டியில் இப்படிக் குறிப்பிடுகிறார்... `என் பள்ளியில் ஒரு அசைன்மென்ட் . என் வாழ்நாளில் நான் அடைய விரும்புகிற 10 விஷயங்களைப் பட்டியலிடச் சொன்னார்கள். நான் கொஞ்சம்கூட யோசிக்கவில்லை. முதலில் விமானியாக ஆக வேண்டும். இரண்டாவதாக வழக்கறிஞராக வேண்டும். இந்த என் கனவைக் குறிப்பிட்டேன்.’
அப்பா இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர். பஞ்சாப்பில், பதான்கோட்டில் இருக்கும் ராணுவ முகாமுக்கு அருகில் வசித்தது குடும்பம். திவ்யாவின் தந்தை ஓய்வுபெற்ற பிறகு விஜயவாடாவுக்குக் குடிபெயர்ந்தது. அங்கேதான் பள்ளிப் படிப்பை முடித்தார் திவ்யா. பிறகு பதினேழாவது வயதில் உத்தரப்பிரதேசம் ரேபரேலியிலுள்ள அரசாங்கத்தால் நடத்தப்படும் விமானிப் பயிற்சி நிறுவனமான `இந்திரா காந்தி ராஷ்ட்ரிய ஊரன் அகாடமியில்’ ( Indira Gandhi Rashtriya Uran Akademi) சேர்ந்தார். இந்தப் பயிற்சி நிறுவனத்தில் திவ்யா படிப்பதற்காக, அவரின் தந்தை செலுத்திய கட்டணம் 15 லட்ச ரூபாய்.
திவ்யா சொல்கிறார்... ``என் குடும்பம் என் லட்சியத்துக்கு மிகவும் ஆதரவாக இருந்தது. என் அம்மாவோ, அப்பாவோ `இது உனக்கான ஃபீல்டு இல்லை’ என்றோ, `இவ்வளவு காசு செலவழுச்சு உன்னைப் படிக்கவைக்க முடியாது’ என்றோ ஒருபோதும் சொன்னதில்லை. என் கல்விச் செலவுக்காக என் பெற்றோர் தங்களின் சேமிப்புகளை எடுத்துக் கொடுத்தார்கள்; கடன் வாங்கினார்கள். நான் இதையெல்லாம் சம்பாதித்துத் திருப்பிக் கொடுத்துவிடுவேன் என அவர்களுக்கு உறுதி கொடுத்தேன்.’’ கொடுத்த வாக்கை நிறைவேற்றவும் செய்தார் திவ்யா.
திவ்யாவுக்கு ஆங்கிலத்தில் படிக்கவும் எழுதவும் தெரியும். ஆனால் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசத் தெரியாது. ஃப்ளையின் ஸ்கூலில் சக மாணவ, மாணவிகள் ஆங்கிலத்திலேயே உரையாடினார்கள். அந்த நேரத்திலெல்லாம் திணறிப்போனார். பல சங்கடங்களையும், அவமானங்களையும், கேலிகளையும் எதிர்கொண்டார்.

அவற்றையெல்லாம் பொறுத்துக்கொண்டு, ஆங்கில அறிவை வளர்த்துக்கொண்டார். படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினார் அன்னி திவ்யா. 19 வயதில் பயிற்சியை முடித்த திவ்யாவுக்கு விமானி உரிமமும், ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலையும் கிடைத்தபோது அவருக்கு வானத்தில் பறப்பதுபோலவே இருந்தது. பிறகு 737 என்ற ஒரு வகை விமானத்தை ஓட்டும் பயிற்சிக்காக திவ்யா, ஸ்பெயினுக்குச் சென்றார். 737 பயிற்சி முடிந்து இந்தியாவுக்குத் திரும்பியயவர் வழக்கறிஞர் பணிக்கான எல்.எல்.பி-கோர்ஸிலும் சேர்ந்தார். வேலை நேரத்தில் விமானத்தில் பறப்பார். விமானதிலிருந்து இறங்கியதும் எல்.எல்.பி படிப்பில் மூழ்கிப்போவார். அதிகாலைகளிலும், பின்னிரவிலும் நேரம் ஒதுக்கிப் படித்ததற்குப் பலனும் கிடைத்தது. எல்.எல்.பி தேர்வில் தேர்ச்சிபெற்றார் அன்னி திவ்யா.
அடுத்த லட்சியமாக அவருக்கு இருந்தது போயிங் விமானத்தை ஓட்டுவது. `இவ்வளவு தூரம் வந்துவிட்டோம்... இது முடியாதா என்ன?’ போயிங் 777 ஓட்டுவதற்கான பயிற்சியில் சேருவதற்காக லண்டனுக்குப் போனார். அந்தப் பயிற்சியை முடித்தபோது திவ்யாவுக்கு வயது 21. பலவருட கடின உழைப்புக்குப் பலனும் கிடைத்தது. போயிங் 777 விமானத்தை இயக்கிய முதல் இளம்பெண் கமாண்டர் என்கிற புகழும் வந்து சேர்ந்தது. 7,000 மணி நேரத்துக்கும் மேல் விமானத்தை இயக்கிய அனுபவம் அவருக்கு வாய்த்தது. விமானியாக மட்டும் அவருடைய வாழ்க்கை நின்றுவிடவில்லை. ஒரு மாடலாக, நடிகையாக புதிய பாதையில் பவனி வந்தார். தன் பெற்றோருக்கு சின்னதாக ஒரு பிசினஸையும் ஆரம்பித்துக் கொடுத்தார்.

அன்னி திவ்யா... ஒரு பேட்டியில் இப்படிச் சொன்னார்... ``வாழ்க்கையில் நான் சாதித்ததையெல்லாம் பெருமையாகக் கருதவில்லை. நான் கேப்டனாக விமானத்தை இயக்கும்போது, என் பெற்றோரும் அந்த விமானத்தில் பயணிக்கும் வாய்ப்பு எப்போதாவது அமையும். விமானம் கிளம்பவிருக்கும் தருணத்தில் ஒரு கேப்டனாக என் அறிவிப்பை (Announcment) தொடங்குவேன். அப்போது என் பெற்றோர், என் அறிவிப்பைக் கேட்டு உற்சாகமாகக் கைதட்டுவார்கள். அது போதும்." கங்கிராட்ஸ் அன்னி திவ்யா!