Published:Updated:

இடம், பொருள், ஆவல்: ஒரு நூற்றாண்டு சென்னை வரலாற்றைத் தாங்கி நிற்கும் மணிக்கூண்டுகள்!

சென்னை மணிக்கூண்டுகள்

சென்னையில் ஒருகாலத்தில் 14 மணிக்கூண்டுகள் வரை இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அவற்றில் பாதிக்கும் மேல் இடிக்கப்பட்டுவிட்டன.

Published:Updated:

இடம், பொருள், ஆவல்: ஒரு நூற்றாண்டு சென்னை வரலாற்றைத் தாங்கி நிற்கும் மணிக்கூண்டுகள்!

சென்னையில் ஒருகாலத்தில் 14 மணிக்கூண்டுகள் வரை இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அவற்றில் பாதிக்கும் மேல் இடிக்கப்பட்டுவிட்டன.

சென்னை மணிக்கூண்டுகள்

மணிக்கூண்டு... நகரங்களின் முதன்மை அடையாளங்களில் ஒன்று. நகரத்தின் மையத்தில், பிரதான வீதியில், சந்திப்புகளில், சந்தைகளில் என தனித்தும், அரசு அலுவலங்கள், தேவாலயங்கள், கல்விக்கூடங்கள் ஆகியவற்றின் கட்டடங்களோடு இணைந்தும் மணிக்கூண்டுகள் அமைந்திருக்கின்றன.

லண்டன் பிக் பென்
லண்டன் பிக் பென்

மணிக்கூண்டு என்பது நான்கு திசைகளிலிருந்தும் பார்க்கக் கூடியவகையில், நான்கு கடிகாரங்கள் பொருத்தப்பட்ட ஒரு அமைப்பு. இன்று நகரங்களில் கைவிடப்பட்ட முதியோர்களைப்போல மாறிவிட்ட மணிக்கூண்டுகள், அவற்றின் தொடக்ககாலம் தொட்டு மிகச் சமீபத்திய காலம்வரை மக்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றிருந்தன.

18-ம் நூற்றாண்டு காலகட்டத்தில் எல்லோரிடமும் கைக்கடிகாரம் இருக்கவில்லை. பெரும் பணக்காரர்களே வைத்திருந்தார்கள். வீடுகளிலெல்லாம் கடிகாரங்கள் இருப்பதே அரிது. அப்போதெல்லாம் மணிக்கூண்டுகள்தான் எல்லோருக்கும் நேரம் காட்டிக்கொண்டிருந்தன.

18-ம் நூற்றாண்டில் மணிக்கூண்டு
18-ம் நூற்றாண்டில் மணிக்கூண்டு

ஆதிகால மணிக்கூண்டுகளில் கடிகாரம் இருந்ததில்லை; அவை வெறும் வெண்கல மணி மட்டுமே இருக்கும். சுற்றுப்புறத்திலுள்ள மக்களைப் பிரார்த்தனைக்கு அழைப்பதே அந்த மணிக்கூண்டுகளின் முக்கியப் பணி. எனவே மணியின் ஓசை ஊரில் எல்லைவரை சென்றடைய வேண்டும் என்பதற்காக, அவை உயரமான கோபுரங்களில் அமைக்கப்பட்டன. காலப்போக்கில் மணிக்கு பதிலாக கடிகாரம் நிறுவப்பட்டது.மணிக்கூண்டுகளின் வரலாறு பண்டைய காலம் வரை நீள்கிறது.

எட்டு சூரியக் கடிகாரங்களுடன் ஏதென்ஸில் அமைந்திருந்த ‘காற்றின் கோபுரம்’ என்ற மணிக்கூண்டு மிகவும் பழைமையான மணிக்கூண்டாகக் கருதப்படுகிறது. 1088-ல் சீனாவில் வானியல் கடிகாரம் கொண்ட மணிக்கூண்டு ஒன்று முதன்முறையாக நிறுவப்பட்டது. இன்றைய பிக் பென் கடிகாரத்துக்கு முன்னோடியாக இங்கிலாத்தின் வெஸ்ட்மின்ஸ்டரில் 1288-ல் மணிக்கூண்டு ஒன்று நிறுவப்பட்டது; அதைப்போலவே 1292-ல் கேன்டிபரி தேவாலயத்திலும் ஒரு மணிக்கூண்டு எழுப்பப்பட்டது. 1326-ல் செயிண்ட் அல்பன்ஸில் நிறுவப்பட்ட மணிக்கூண்டு வானியல் நிகழ்வுகளைப் பதிவு செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்டது.

‘காற்றின் கோபுரம்’
‘காற்றின் கோபுரம்’

பிக் பென் என்றழைக்கப்படும் லண்டன் எலிசபெத் டவர், மும்பையின் ராஜாபாய் டவர், மாஸ்கோவின் கிரெம்ளினில் அமைந்திருக்கும் ஸ்பாஸ்கயா டவர், லக்னௌவின் ஹுசைனாபாத் மணிக்கூண்டு, கொல்கத்தாவின் பிக் பென் என்றழைக்கப்படும் லேக் டவுன் மணிக்கூண்டு என உலகம் முழுவதும் மணிக்கூண்டுகள் அமைந்திருக்கும் இடங்களே ஒரு தனித்த அடையாளமாக மாறியிருக்கின்றன. 1908-ல் கட்டிமுடிக்கப்பட்ட பிர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் அமைந்திருக்கும் 100 மீட்டர் உயரமுள்ள ஜோசப் சேம்பர்லின் நினைவு மணிக்கூண்டு தான் உலகிலேயே உயரமான மணிக்கூண்டு.

சென்னையும் மணிக்கூண்டுகளின் நகரம்தான். இந்த மாநகரத்தைச் சுற்றியிருக்கும் எல்லா மணிக்கூண்டுகளும் வரலாறுகளையும் நினைவுகளையும் சுமந்துகொண்டு நிற்கின்றன. 20-ம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை எளிய மக்களிடம் கைக்கடிகாரங்கள் பரவலாகாத சூழலில் அவர்களின் அன்றாட வாழ்வில் முக்கியமான இடத்தை மணிக்கூண்டுகள் பெற்றிருந்தன. ஆனால், இன்று எல்லாமும் மொபைல் போனிலேயே அடங்கிவிட மணிக்கூண்டுகள் பயன்பாடிழந்து வரலாற்றின் எச்சங்களாக உறைந்து நிற்கின்றன.

சென்னையில் ஒருகாலத்தில் 14 மணிக்கூண்டுகள் வரை இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அவற்றில் பாதிக்கும் மேல் இடிக்கப்பட்டுவிட்டன. ராயப்பேட்டை, டவுட்டன், பட்டாளம், தங்கசாலை, தண்டையார்பேட்டை, கத்திவாக்கம் ஆகிய இடங்களில் மட்டுமே மணிக்கூண்டுகள் இன்று எஞ்சியிருக்கின்றன. இந்த மணிக்கூண்டுகளும்கூட சில மட்டுமே நேரம் காட்டிக்கொண்டிருக்கின்றன.

சென்னையிலேயே பழமையான மணிக்கூண்டாக டவுட்டன் மணிக்கூண்டு திகழ்கிறது. இது இருபதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் கட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து 1930-ல் ராயப்பேட்டை மணிக்கூண்டு கட்டப்பட்டது. இந்த மணிக்கூண்டு இன்றும் சீராக இயங்கிக் கொண்டிருக்கிறது.

டவுட்டன் மணிக்கூண்டு
டவுட்டன் மணிக்கூண்டு

1948-ல் தங்கசாலை மணிக்கூண்டு திறக்கப்பட்டது. இந்த மணிக்கூண்டு கோபுரத்தின் உயரம் 60 அடி; இதன் கடிகாரத்தின் ஒவ்வொரு பக்க முகப்பும் அலுமினியத்தால் ஆனது. இந்தக் கடிகார முகப்புகள் நான்கு அடி விட்டமுடையவை. இந்தக் கடிகாரம் பல ஆண்டுகளாக இயங்காமல் இருந்த நிலையில், 2013-ல், இந்தச் சந்திப்பில் தங்கசாலை மேம்பாலம் கட்டப்பட்ட பின்னர் மாநகராட்சி இந்த மணிக்கூண்டைப் புதுப்பிக்க முடிவு செய்தது. ஜனவரி 2014-ல் சென்னை மாநகராட்சி, சென்னையின் பழமையான கடிகாரத் தயாரிப்பு நிறுவனமான பி.ஆர்&சன்ஸூடன் இணைந்து இந்த மணிக்கூண்டைப் புதுப்பித்தது; ஆனால் முறையான பராமரிப்பு இன்றி அதன் இயக்கம் நின்றுவிட்டது. மணிக்கூண்டின் இயக்கம் நின்றிருந்தாலும், அது பழமையைத் தாங்கி வரலாற்றின் எச்சமாக நின்றிருந்தது. ஆனால், சில மாதங்களுக்கு முன்பு மணிக்கூண்டுக்குச் சற்றும் பொருத்தமில்லாத வகையில் வண்ணம் பூசப்பட்டு அதன் தன்மை மாற்றப்பட்டுவிட்டது.

தங்கசாலை மணிக்கூண்டு
தங்கசாலை மணிக்கூண்டு

சென்னையில் அமைந்துள்ள மணிக்கூண்டுகளில் பட்டாளத்தில் அமைந்துள்ள மணிக்கூண்டு தனித்த வரலாற்றுச் சிறப்புடையது. இந்தியாவில் தோன்றிய அமைப்புரீதியிலான முதல் தொழிற்சங்கமான சென்னை தொழிலாளர் சங்கத்தை நிறுவிய செல்வபதி செட்டியார், ராமாஞ்சலு நாயுடு ஆகியோரின் நினைவாக இந்த மணிக்கூண்டு 1948-ல் கட்டப்பட்டது. 4 ஆகஸ்ட் 1948-ல் அன்றைய சென்னை மேயர் யு.கிருஷ்ணாராவ் இந்த மணிக்கூண்டினைத் திறந்துவைத்தார்; தங்கசாலை மணிக்கூண்டைத் திறந்துவைத்தவரும் இவரே.

பட்டாளம் மணிக்கூண்டு
பட்டாளம் மணிக்கூண்டு

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மணிக்கூண்டுகளின் கடிகாரங்கள், ஜார்ஜ் டவுன் ரத்தன் பஜார் சாலையில் அமைந்திருக்கும் 103 ஆண்டுகள் பழமையான கனி & சன்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. ஈரானை பூர்விகமாக கொண்ட ஹாஜி மிர்சா கனி நமாசி என்பவரால், சவுத் இந்தியா வாட்ச் கம்பெனி என்ற பெயரில் 1909-ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், பின்னாளில் பட்டாளம், திருவொற்றியூர் போன்ற இடங்களில் நிறுவப்பட்ட மற்ற தனித்த மணிக்கூண்டுகளுக்கான கடிகாரங்களை உருவாக்கியது.

சென்னையில் மணிக்கூண்டுகள் நிறுவப்படுவதற்கு முன்பாக, புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்த காலனிய அதிகாரிகள் ஒவ்வொரு நாளும் சரியாக மாலை நான்கு மணிக்கு பீரங்கி குண்டுகளை முழங்கச் செய்து நேரத்தைக் குறித்தனர். இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் குண்டு வீச்சு அச்சுறுத்தலால் 1943-ல் இந்த வழக்கம் நிறுத்தப்பட்டது.

புனித ஜார்ஜ் கோட்டை பீரங்கி
புனித ஜார்ஜ் கோட்டை பீரங்கி

இன்றைக்குத் திருவான்மியூருக்குச் சென்று மணிக்கூண்டு எங்கிருக்கிறது என்று கேட்டால், ``மணிக்கூண்டா எங்கேயிருக்கிறது?" என்கிறார்கள். திருவான்மியூரிலிருந்து கிழக்குக் கடற்கரை சாலை திரும்பியதும் உள்ள புதுச்சேரி பேருந்து நிறுத்ததில் மற்ற கட்டடங்களும் மரங்களும் மறைக்க, பாழடைந்து நிற்கிறது திருவான்மியூர் மணிக்கூண்டு. வரலாறு எப்படிச் சிதைந்து போகிறது என்பதற்கு இந்த மணிக்கூண்டே எளிய உதாரணம்.

எத்தனையோ ஆயிரம் பேருக்குக் காலத்தைக் காட்டிய திருவொற்றியூர் மணிக்கூண்டு, தன்னுடைய காலத்தை இழந்துவிட்டதால், சில ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டுவிட்டது.

1967-ல் முன்னாள் முதலமைச்சர் பக்தவத்சலம் திறந்துவைத்த கத்திவாக்கம் மணிக்கூண்டில் இன்று ஓடாத சுவர்க்கடிகாரம் ஒன்று பொருத்தப்பட்டிருக்கிறது; பராமரிப்பு இல்லாத நிலையில் மணிக்கூண்டின் பின்பக்கம் மரங்கள் அடர்ந்து நிற்கின்றன.

கத்திவாக்கம் மணிக்கூண்டு
கத்திவாக்கம் மணிக்கூண்டு

சீரமைப்புப் பணிகள் என்ற பெயரில் தண்டையார்பேட்டை மணிக்கூண்டின் தன்மையை முற்றிலும் இழக்கச் செய்யும் வண்ணப் பூச்சு வேலைகள் இப்போது நடந்துகொண்டிருக்கின்றன; தங்கசாலை மணிக்கூண்டைப் போல் வரலாற்று அடையாளத்தை இழந்து வெறும் வண்ணக் கட்டட அமைப்பாக தண்டையார்பேட்டை மணிக்கூண்டு எஞ்சியிருக்கிறது.

தனி மணிக்கூண்டுகள் தவிர சென்னையில் வரலாற்றுச் சிறப்புவாய்ந்த பல கட்டடங்களின் முகப்பில் கடிகாரம் பொருத்தப்பட்ட கட்டட மணிக்கூண்டுகள் உள்ளன. 1913-ல் கட்டப்பட்ட சென்னைப் பல்கலைக்கழக மணிக்கூண்டு, சென்ட்ரல் ரயில் நிலைய மணிக்கூண்டு, அண்ணா பல்கலைக்கழக மணிக்கூண்டு, காமராஜர் சாலை - ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் இருக்கும் மணிக்கூண்டு, ரிப்பன் மாளிகை மணிக்கூண்டு, ஸ்பென்சர் மணிக்கூண்டு, மாநிலக் கல்லூரி மணிக்கூண்டு, பி.ஆர் & சன்ஸ் மணிக்கூண்டு என அவை தொன்மையும் சிறப்பும் ஏறி நிற்கின்றன.

சென்னைப் பல்கலைக்கழக மணிக்கூண்டு
சென்னைப் பல்கலைக்கழக மணிக்கூண்டு

திருவான்மியூர், கத்திவாக்கம் மணிக்கூண்டுகள் இரண்டையும் இன்று உடனடியாக சீரமைக்க வேண்டிய தேவை இருக்கிறது. மணிக்கூண்டுகள் கட்டிடக் கலை சார்ந்த வரலாறு மட்டுமல்ல, சமூக வரலாற்றையும் தாங்கி நிற்கின்றன. இன்று அவற்றைப் பாதுக்காக்க வேண்டிய தேவை இருக்கிறது. எத்தனையோ லட்சம் மக்களுக்கு மணி காட்டி, வாழ்க்கையை நகர்த்திய மணிக்கூண்டுகள் அவற்றின் பயன்பாட்டினை இழந்து சிதிலமடைந்து நிற்பதென்பது காலப் பிழையாகிவிடும்.