Published:Updated:

“ஜப்பானில் கல்யாண ஆசை குறைகிறது!”

கண்மணி குணசேகரன்
பிரீமியம் ஸ்டோரி
News
கண்மணி குணசேகரன்

நம்மூர்ல ஐடியில வேலை பார்க்கிறவங்க எப்படி இருப்பாங்களோ, அப்படியேதான் அங்கேயும் இருக்காங்க.

“கடைசி சுவாசத்திற்காக

மீன்கள் தத்தளிக்கும்

வற்றிய

சேற்றுக்குளத்தின் விளிம்பில்...

மிகவும் கரிசனமாய்

தனது முதற்பூவை

மலர்த்திக் கொண்டிருக்கிறது.

தனித்துக் கிளைத்தவோர்

தாமரைக் கொடி.”

மண்ணின் ஈரம் கனக்கும் படைப்புகளுக்குச் சொந்தக்காரர் கண்மணி குணசேகரன். அண்மையில், நண்பர்களின் அழைப்பின் பெயரில் ஜப்பான் சென்றிருந்தார். அந்தப் பயணம் பற்றி அவரிடம் உரையாடினேன்.

கண்மணி குணசேகரன்
கண்மணி குணசேகரன்

“ஜப்பான்ல தமிழர்கள் ரெண்டாயிரம் பேர்தான் இருப்பாங்க. எல்லாரும் ஒண்ணுசேர்ந்து ஜப்பான் தமிழ்ச்சங்கம் மூலமா வருஷா வருஷம் விழா நடத்துவாங்க. இந்த வருஷம் என்னைக் கூப்பிட்டுருந்தாங்க. பள்ளிக்கூட ஆண்டுவிழாப் போல ஆட்டம், பாட்டத்தோடு நல்லா நடந்துச்சு. ஜப்பானி லேருந்து திண்டுக்கல் வந்து கரகாட்டம், பறையாட்டம் கத்துக்கிட்டுப் போய் ஆடினாங்க. டோக்கியோ தப்பாட்டக்குழுன்னே ஒண்ணு இருக்கு. நானும் சில விஷயங்களை அவங்ககிட்ட பகிர்ந்துகிட்டேன்.”

“ஜப்பானில் வேறெங்கும் சுற்றிப்பார்க்கவில்லையா?”

“போனேனே... அசகுஷான்னு ஒரு கோயிலுக்கு அழைச்சிட்டுப்போனாங்க. அது நம்ம ஊரு காளி, யாளி மாதிரிதான் இருக்கு. பிறகு, மிகப் பெரிய புத்தர் சிலையைப் பார்க்கப் போனேன். அதுல ‘புத்தர் இந்தியாவில் பிறந்தவர்’னு எழுதியிருந்ததைப் பார்த்தப்ப பெருமையா இருந்துச்சு. போக்குவரத்து வளராத அந்தக் காலத்துலேயே புத்தமதம் இவ்வளவு தூரம் பரவியிருக்கேன்னு ஆச்சர்யமாவும் இருந்துச்சு. அங்கே உள்ள மெட்ரோ ரயில்ல, ஒரு மாற்றுத்திறனாளி ஏறினதும், அவர் எந்த ஸ்டேஷன்ல இறங்குறார்னு தகவல் போய், அந்த ஸ்டேஷன்ல ரயில் நிக்கும்போது ஓர் ஊழியர் வண்டி யோடு நின்னார். அவங்க எடுத்துக்கிற அக்கறையைப் பார்த்து பிரமிப்பா இருந்துச்சு.”

“அங்குள்ள தமிழர்களின் வாழ்க்கை முறை எப்படி இருக்கிறது?”

“நம்மூர்ல ஐடியில வேலை பார்க்கிறவங்க எப்படி இருப்பாங்களோ, அப்படியேதான் அங்கேயும் இருக்காங்க. பிள்ளைங்க பள்ளியில தமிழை ஒரு பாடமாப் படிக்கிறாங்க. அதுக்கு அந்த அரசும் உதவுது. அங்குள்ளவங்க நிறைய சம்பாதிக்கிறாங்க; அதுக்கு ஏத்த மாதிரி செலவும் இருக்கு. இந்தச் செலவை நினைச்சு ஜப்பான் இளைஞர்கள்கிட்ட கல்யாணத்துல விருப்பம் குறைஞ்சிட்டே போகுதாம்.”

“இப்போ என்ன எழுதிட்டிருக்கீங்க?”

“கல்யாணங்களுக்கு போட்டோ எடுக்கப் போறவன் ஒரு பொண்ணைப் பார்க்குறான். அதைப் பத்தின நாவல், ‘பேரழகி’ன்னு பேரு வச்சிருக்கேன். அப்புறம், ‘காலூன்றிப் பெய்யும் கனமழை’ன்னு கவிதைத் தொகுப்பும் ரெடியாயிட்டிருக்கு.”

``எழுத்தாளராக, சமகாலத்தில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

“சிலர் எழுத்து, போராட்டக்களம் ரெண்டு லேயும் சிறப்பாச் செயல்படுவாங்க. எனக்கு விவசாயம், வேலை, எழுத்து, வீடுன்னு மாறி மாறி ஓடுற சூழல்... அதைத்தாண்டி வேற எதுவும் செய்ய முடியல. பல வாழ்க்கை நெருக்கடிகளை மீறி, தரவுகளைத் தேடி எழுதத்திட்டமிட்டு வெச்சிருக்கும் பெரிய படைப்பைக்கூட, நேரடியான செயல்பாடுகள்ல ஈடுபடறது பொசுக்குன்னு சிதைச்சிடுது. அதுக்காக, மக்களை பாதிக்கிற பிரச்னைகளைப் புறந்தள்ளியும் விட்டுடலை. அதையெல்லாம் என் எழுத்துல வடிக்கிறேன். நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துக்கு நிலம் எடுத்தது தொடர்பான போராட்ட வாழ்க்கையைத்தான் ‘வந்தாரங்குடி’ நாவல்ல எழுதியிருக்கேன். புனைவு இலக்கியம் மேல நம்பிக்கை வெச்சிருக்கிற என்னால, சமகாலச் சிக்கலை, அதன் தாக்கங்களை ஆராய்ந்து உடனடியாக ஒரு படைப்பாக்க முடியாது.

கண்மணி குணசேகரன்
கண்மணி குணசேகரன்

அஞ்சாவது எட்டாவதுக்குக் கட்டாயத் தேர்வை இப்போ கைவிட்டாலும், மத்திய அரசோட கைப்பிடிக்குள்ள தமிழக ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சிகளும் ஏதோ ஒரு வகையில் சிக்கியிருக்கோன்னு நினைக்கிறேன். இந்த நாட்டுல உள்ள சிறுபான்மை மக்களோட மாண்பு, வாழ்வு, தனித்துவத்துல அக்கறை கொள்ற நாம, இங்கே வாழும் பெரும்பான்மை மக்களோட பாதுகாப்பு, நலன், எதிர்காலம், கலை, இறைநம்பிக்கை, பண்பாட்டுலயும் கூடுதல் கவனம் வைக்கணும். பெரும்பான்மை மக்களுக்கு உகந்ததான ஒரு சட்டத்தின் சாதக, பாதகங்கள விவாதிச்சு, சரிசெய்யணுமே தவிர, அதை அப்படியே குப்பைத் தொட்டியில போடச்சொல்ற போராட்டங்கள் மக்கள்கிட்ட தோல்விதான் அடைஞ்சிருக்கு.”

“திரெளபதி படம் பார்த்தீர்களா... அது குறிப்பிட்ட ஒரு சாதிக்கு ஆதரவான படம் எனச் சொல்லப்படுவது பற்றி?”

“பார்த்தேன். போலி மற்றும் நாடகக் காதல் திருமணங்களோட கொடூரங்களைப் பேசற சமூக விழிப்புணர்வுப் படம். பணத்துக்கு ஆசைப்பட்டு வசதியான குடும்பத்துப்பெண்களைக் குறிவைச்சி, வீழ்த்தும் இந்தக் கொடூரர்களுக்கு பயந்துகிட்டு, பெண்களைப் படிக்க வைக்கவே விருப்பமில்லாம சின்ன வயசிலேயே கல்யாணம் செஞ்சு வைக்கிறவங்க ஏராளம்.

“ஜப்பானில் கல்யாண ஆசை குறைகிறது!”

நல்லா வளர்ச்சியடைந்த இந்தக் காலத்துல இப்படிப் பெண்களைப் படிக்க முடியாம, வேலைக்கு அனுப்ப முடியாம இள வயசிலேயே கல்யாணம் பண்ண வெச்சி, அடுப்படியில அடைக்கிறதுக்குக் காரணமானவங்கள இந்தப் படம் துகிலுரிக்குது. பெண்ணுரிமைப் போராளிங்க, ஊடகம் எல்லாம் இந்தப் படத்தை ஆதரிக்கணும். மாறாக, சாதியக் கட்டத்துக்குள்ள தள்ளி, புறக்கணிக்கிறது, குறை சொல்லி திசை திருப்பறதும் பாதிக்கப்பட்ட மக்களோட வலியைக் கேலி செய்யறதுக்குச் சமம்.

“இங்கே நாடகக் காதல்னு ஒரு விஷயம் நடக்கிறதா நினைக்கிறீங்களா?”

“ஆமா, இதெல்லாம் எங்க கடலூர்ப் பகுதியிலேருந்துதான் முதல்ல ஆரம்பிக்குது.

பொண்ணு வராமலே பதிவுத் திருமணம் எல்லாம் நடக்கிற சம்பவங்கள் இருக்கு.

இதையெல்லாம் ஒரு சாரார் மட்டும்தான் திட்டமிட்டுச் செய்யறாங்க. அதுக்காக, ஒரு சமூகமே இதுக்குப் பின்னாடி இருக்குன்னு ஒட்டுமொத்தமா குத்தம் சொல்ல முடியாது.”