மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இறையுதிர் காடு - 41

இறையுதிர் காடு
பிரீமியம் ஸ்டோரி
News
இறையுதிர் காடு

குடிலுக்குள் கண்ணாடிச் சாடி ஒன்றினுள் விரல்பருமனில் ஒரு தீபம் எரிந்துகொண்டிருந்தது. அதன் ஒளி போதுமானதாய், அந்த வெளிமுழுக்க மஞ்சள் ஒளியைப் பரத்தியிருந்தது.

அன்று போகர்பிரான் தன் கொட்டாரக் குடிலுக்குள் நுழையவும் அஞ்சுகன் காத்திருந்தவன் போல அவர் எதிரில் சென்று வணங்கி நின்றான். போகரும் அவன் எதிரில் விரிப்பில் கிடந்த புலித்தோல் மேல் தன் இடைத்துவராடையை மழிக்கச்சமாய் முட்டிக்கு மேல் ஏற்றி வளைத்து முதுகுப்புறமாய் தண்டுவட முதல் கண்ணி அருகே செருகிக்கொண்டு, ஒரு மல்யுத்தக்காரன் களத்தில் நிற்பதுபோல் காட்சி தந்தவர், அப்படியே குக்குடாசனத்தில் அமர்ந்தவராய் அஞ்சுகனைப் பார்த்தார்.

குடிலுக்குள் கண்ணாடிச் சாடி ஒன்றினுள் விரல்பருமனில் ஒரு தீபம் எரிந்துகொண்டிருந்தது. அதன் ஒளி போதுமானதாய், அந்த வெளிமுழுக்க மஞ்சள் ஒளியைப் பரத்தியிருந்தது. அந்த ஒளிக்குள் போகரின் உருவம் கருமஞ்சளாய்த் தெரிந்தது.

இறையுதிர் காடு - 41

“என்ன அஞ்சுகா, என்னோடு பேச வேண்டுமா?”

“ஆம் பிரானே, தாங்கள் குன்றின் உச்சி நோக்கிச் செல்லக் கண்டேன்... மழைப்பொழிவினூடே இடியும் மின்னலுமான வேளை... தங்களுக்கு ஏதும் ஆகிவிடக்கூடாதே என்று எண்ணிப் பிரார்த்தனை புரிந்தேன்.”

- அதைக் கேட்டு போகர் உரக்கவே சிரித்தார். பின் விளக்கமும் அளிக்கத் தொடங்கினார்.

“அஞ்சுகா, நீ உன் குருவான என்னைச் சரியாக விளங்கிக்கொள்ளவில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது. எப்போது இந்தப் பூலோக மனிதர்களைப்போல ஆசாபாசம் மிகுந்த வாழ்வை விட்டு நான் விலகினேனோ அப்போதே மனித இனம் என்னும் தன்மையையும் விட்டு நான் பிரிந்துவிட்டேன்.

இந்த உடல் மட்டும்தான் மனித உடல் - ஆனால், மனம் மாயை புரிந்து தெளிந்து சித்தமாகி, நான் சித்தனாகிவிட்டேன்! சித்தத்தால்தான் என் வாழ்வும் நடக்கிறது. இந்த உடலை என் சித்தம் கட்டிப் போட்டுவிட்டது. ஒரு மனிதனுக்குப் பசிப்பதுபோல, தாகம் எடுப்பதுபோல, முடி உதிர்வதுபோல, மலம் வெளிப்படுவதுபோல, ஒரு சித்தன் வரையில் நடக்காது. அடுத்து காலஞானத்தால் முந்தைய பிறப்புகள் எல்லாமும் தெளிவாகி, என் உயிராகிய ஆத்மா இந்த உடலை விட்டு எப்படிப் பிரியும் என்பது வரை தெரிந்துவிட்டதால், அது இப்போது இல்லை என்பதால், உனக்குத் தேவைப்படும் எச்சரிக்கைகள் எனக்குத் தேவைப்படவில்லை.

சுருக்கமாய்க் கூறுவதானால் இன்றோ, நாளையோ, இல்லை இன்னும் சில மாதங்களிலோ எனக்கு மரணமில்லை. அதனால் நான் இப்போது எரியும் நெருப்பில் குதித்தாலும்கூட உடல் புண்ணாகுமே அன்றி உயிர் பிரியாது. அதனாலே இடி மின்னல் பற்றிய அச்சமின்றிக் குன்றேறினேன்.”

- போகரின் பதிலால் அஞ்சுகனுக்குப் பல விடைகள்!

“பிரானே... மனிதன் வேறு, சித்தன் வேறா? தங்கள் விளக்கமே என்னை இக்கேள்வியைக் கேட்கத் தூண்டுகிறது” என்று, அவர் சொன்னதை வைத்தே ஒரு கேள்வி எழுப்பினான்.

“அதில் யாதொரு சந்தேகமும் உனக்கு வேண்டாம். ஆசாபாசம் மிகுந்த மனிதர்கள் கிரகங்களால் வழி நடத்தப்படுபவர்கள், ஆனால் ஒரு சித்தன் கிரகத்தையே வழி நடத்துவான் என்றால், வேறு வேறுதானே?”

“அப்படி ஒரு சித்தனுக்கு மட்டும் எப்படிக் கிடைக்கிறது?”

இறையுதிர் காடு - 41

“மனதை அடக்கு... அது ஒரு புரவி! அது ஒரு மதயானை! அது ஒரு காட்டாறு. புரவி எனில் வீரனாக மாறி அதன் மேல் ஏறி அமர்ந்து அதை உனக்கான வாகனமாக்கு, அது ஒரு யானை என்பதால் அதை அடக்கி சவாரி செய், அது ஒரு காட்டாறும்கூட... உன் மனதில் அதற்கான அணையைக் கட்டு. இதற்கெல்லாம் தேவைப்படும் ஆற்றலோடுதான் தாயின் கருவிலிருந்து ஒரு மனிதன் உற்பத்தி செய்யப்படுகிறான். ஆனால் தன் சக்தி எவ்வளவு என்று தெரியாமலே வளர்ந்து, தன் சக்தியைக் காமம் லோபம் மாச்சரியத்திலேயே விட்டுவிடுகிறான்.”

“அப்படியானால் ஒரு மனிதன் ஆசாபாசங்களில் சிக்கிய நிலையில் மேலான நிலைகளை அடையவே முடியாதா?”

“பதைக்காதே... போகட்டும். முதலில் பூஜையைச் செய்துவிட்டு, பிறகு குகைக்குச் செல்லப் பணித்திருந்தேன் அல்லவா?”

“முடியவே முடியாது. அவற்றைத் துறந்தாலன்றி சித்தமும் வாய்க்காது.” -அஞ்சுகனும் போகர்பிரானும் பேசிக்கொண்டிருந்த அவ்வேளையில் புலிப்பாணியும வந்து சேர்ந்தான். பயணக் களைப்பு நன்கு தெரிந்தது. புரவிப்பயணம் என்பது ஒட்டுமொத்த உடம்பையே உலுக்கிடும். பழகினால் மட்டுமே வசப்படும். அவ்வப்போது மட்டுமே பயணிப்பவர்களுக்குக் குடல் ஏற்றம் கண்டுவிடும்.

புலிப்பாணி சற்றே தடுமாற்றங்களுடனும் முகச்சுருக்கங்களுடனும் வரவும் போகர் புரிந்துகொண்டார்.

“என்ன புலி, வயிற்று உபாதையா?”

“ஆம் பிரானே, மலப்பெருக்கும்கூட..!’’

“முதலில் ஒரு காரியம் செய்...”

“உத்தரவிடுங்கள்.”

“அதோ கொட்டார நுழைவாயிலின் தலை மூங்கிலைப் பிடித்து காலை மடக்கித் தொங்கிக்கொண்டு, ஒன்றிலிருந்து நூறுமுறை மனதுக்குள் நொடிக்கான கால கதியில் கூறு.”

- புலிப்பாணி மறுபேச்சின்றி அவ்வாறு செய்தான். மூங்கிலை இரு கைகளால் பற்றிக்கொண்டு தொங்கிய நிலையில், கால்களைப் பின்புறமாய் மடக்கிக் கொண்டான். மனதுக்குள் ஒன்று, இரண்டு என்று எண்ணவும் செய்தான். நூறுவரை அதுபோல் எண்ண, கால அளவில் இருநிமிடத்துக்குச் சற்றுக் குறைவாக ஆகலாம். நாற்பது வரை சரளமாகச் சொல்லிவிட்டான்... அதன் பின் நொடிக்கான கால அளவு மாறி மெல்லத்தான் சொல்ல முடிந்தது. உடலின் மொத்தப் பளுவும் வயிற்றில் விழுந்து கீழே ஒரு சக்தி அவனை இழுப்பதுபோல் உணர்ந்தான். பற்றியிருந்த கைப்பிடிப்பிலும் மணிக்கட்டுப் பகுதியிலும் இனம்புரியாத வலி உருவாயிற்று. போகரும் அஞ்சுகனும் அவனை உற்றுநோக்கியபடியே இருந்தனர். நூறுவரை சொல்லி முடிப்பதற்குள் ஒரு மலை உச்சியை அடைவது போன்ற களைப்பு உருவாகி, பிடியையும் விட்டவனாய் அப்படியே தரையில் அமர்ந்துவிட்டான். பின் இரு கரங்களைப் பின்னுக்குக் கொண்டு சென்று தரையில் ஊன்றிக்கொண்டு சற்றுப் பெருமூச்சும் விட்டான்.

போகர்பிரான் புன்னகை புரிந்தார். “உம் எழுந்திரு... உன் உடல் எடை கூடிவிட்டது. நடைகுறைந்து, அமர்ந்து அதிகம் பணிபுரிகிறாய். அரிசிச் சோற்றை ஒரு மண்டல காலம் உண்ணாதே! அதேபோல் வாழைப்பழங்களையும் சேர்க்காதே. காலை வேளையில் இஞ்சிச் சாற்றுடன் தேன் கலந்து குடி. இதுபோல் தினமும் தொங்கவும் வேண்டும். 1000 எண்ணிக்கை வரும் வரை நீ தொங்க வேண்டும். சரி, இப்போது அந்த ஆசனத்தின் மேல் ஏறி நின்று தரை நோக்கி ஒன்பது முறை குதி” என்றார். புலிப்பாணியும் தொம் தொம் என்று குதித்தான். குதிக்கும்போது கால்களைச் சேர்த்து வைத்துக்கொண்டு பிரிக்காமல் குதிக்க வேண்டும். அப்படிக் குதித்து முடித்தவனை அருகில் அழைத்து உச்சந்தலை பாகத்தில் விரல் பருமனுக்கு முடிக் கற்றையைப் பிடித்து வெடுக்கென்று இழுக்கவும் செய்தார்.

“டாக்டர் 24 மணிநேரம் கெடு கொடுத்திருக்கார். ஆர்கன் டொனேட் பண்றது வரை போயிட்டார். அவர் பேசினதுல இருந்து அவருக்கு ஹோப் இல்லன்னு தெரியுது. உங்களுக்கு?”

இதெல்லாம் குடலேற்ற சிகிச்சை முறைகள்!

புரவிப்பயணம் மட்டுமல்ல, மலையேற்றம், மரத்தில் ஏறுவது போன்றவற்றாலும்கூட சிலருக்கு உள்ளே குடலின் அமைப்பில் சிக்கல் ஏற்பட்டு குடலானது மடிந்து அழுத்தம் ஏற்பட்டு அதனால் வலி ஏற்படும். அப்படியே நீர்ச்சத்து சிறுநீரகப்பகுதிக்குச் சென்று வடிகட்டப்படாமல் மலக்குடலுக்குள் புகுந்து மலப்பெருக்கம் ஏற்பட்டுவிடும். அதற்கு வெளியே இருந்து தரப்படும் சிகிச்சை இது.

புலிப்பாணிக்கும் குணப்பாடு நன்கு தெரிந்தது. முகத்தில் சோர்வு விலகி ஒரு புத்துணர்வு பரவத்தொடங்கியது.

“பிரானே, நான் இப்போது நல்ல குணப்பாட்டை உணர்கிறேன். மிக்க நன்றி.”

“அது சரி, போன காரியம் என்னாயிற்று?”

“எல்லாம் நன்கு முடிந்தது. அக்கருமார்கள் கன்னிவாடி குகையில் தங்கள் பணியைச் செய்திட சித்தமாகிவிட்டனர்.”

“வேறு ஏதேனும் சிறப்பு உண்டா?”

“ஆம் பிரானே... அங்கே கருவூரார் எழுந்தருளினார்...”

“தானாகவா... இல்லை நீ விரும்பி அழைத்தாயா?”

“கருமார்கள் நிமித்தம் நான்தான் அழைத்தேன்.”

“அப்படியானால் நீ சுயமாகச் செயல்படத் தொடங்கிவிட்டாய் என்று சொல்.”

“பிரானே...”

இறையுதிர் காடு - 41

“பதைக்காதே... போகட்டும், முதலில் பூஜையை செய்துவிட்டு, பிறகு குகைக்குச் செல்லப் பணித்திருந்தேன் அல்லவா?”

“ஆம் பிரானே...”

“ஆனால் குகைக்கு முதலில் சென்றுவிட்டுப் பிறகு கீழிறங்கி பூஜை செய்யச் சென்றாய்போல் உள்ளதே?”

- போகர் பிரானின் கேள்வி புலிப்பாணியை சற்றே கட்டிப்போட்டது. மௌனிப்போடு வெறித்தான்.

“எதனால் இந்தத் தடுமாற்றம்?”

“திட்டமிட்டுச் செய்யவில்லை... அதன் போக்கில் நிகழ்ந்துவிட்டது பிரானே...”

“அதுதான் உண்மை... அதை ஒப்புக்கொண்டு உன் நேர்மையை உணர்த்திவிட்டாய். ஆனால் குருவின் வார்த்தைகளை ஆழமாகவும் மிக அக்கறையோடும் கேட்கத்தான் உனக்குத் தெரியவில்லை.”

“ஆம், நான் இம்மட்டில் தவறு செய்துவிட்டேன். இனி நடவாதபடி கவனமாக இருப்பேன்.”

“தவற்றை உடனடியாக ஒப்புக்கொண்டு திருத்தமும் செய்துகொண்டுவிட்டாய். பாராட்டுகிறேன். ஒரு நற்காரியத்திற்காகச் செல்லும் சமயம் முதல் காரியம் வந்தனமாக இருக்க வேண்டும். அதன்பிறகே அந்தக் காரியம் தொடங்கப்பட வேண்டும். காரியத் தொடக்கமான இரண்டு எனும் எண் விருத்தியை உணர்த்துவது. அதற்காகவே நான் அழுத்தமாகவும் கூறியிருந்தேன். ஆனாலும் நீ சரியாகக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.

இது ஒரு சின்ன விஷயம்போல் தெரிந்தாலும் இதனால் பல விஷயங்கள் மாறிவிட்டன... முதலில் பூஜிக்கச் சென்றிருந்தால் அவ்வேளை நண்பகலாக இருந்து நம் நிழல் கீழ் விழாத ஒரு அமைப்பு ஏற்பட்டு அபிஜித் முகூர்த்த காலத்தில் பூஜை நிகழ்ந்திருக்கும்.

அபிஜித்காலத்தின் வேண்டுதல் பிராத்தனைகள் எதுவாய் இருந்தாலும் பலிக்கும் என்பது சோதிடனான உனக்குத் தெரியாதா என்ன?”

“உண்மைதான் குரு பிரானே... கருமார்களோடு பேசியபடி சென்றதில் அவர்கள் மனப்போக்கிற்கேற்ப செல்லும்படி ஆகி நான் நல்ல முகூர்த்த வேளையை இழந்துவிட்டேன். இதற்குப் பரிகாரமாக நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். அதைச் செய்து விடுகிறேன்.”

“இனி கூர்ந்து கவனித்து, சொன்னபடி செயல்படு. ஒரு முறைகூடத் தவறு வந்துவிடக் கூடாது.”

“உத்தரவு பிரானே!”

“இப்போது நீ சென்று ஓய்வெடுத்துக் கொள். நாளை உன்னோடு சேர்ந்த நவமர்கள் அவ்வளவு பேரும் என்னை இதே இடத்தில் சந்தியுங்கள். தூக்குதராசில் தலைக்குப் பத்துத்தட்டு பாஷாணம் வாங்கி வர வேண்டும். அதன் பொருட்டு மரவாளிகளைப் பெற்றுக்கொண்டு நீங்கள் செல்ல வேண்டும்.”

“அவ்வாறே ஆகட்டும் பிரானே...”

“நல்லது... சென்று ஓய்வெடுத்துக்கொண்டு நவமராய் வந்து சேர்...”

“உத்தரவு பிரானே... இவ்வேளையில் இன்னொரு செய்தி...”

“சொல்...”

“கருவூரார் தங்களின் நலன் விசாரித்ததோடு, பொதினி ஆலய நிமித்தம் ஆகம உதவி தேவை எனில் செய்துதரத் தயாராக இருப்பதாகக் கூறினார்.”

“மகிழ்ச்சி. இனி சித்தர் பெருமக்களை அல்ப காரியங்களுக்காக விளிக்காதே. ஒரு சந்திப்பில் எல்லோருக்கும் சித்த ஞானம் ஏற்பட்டுவிடாது. இந்த ஞானம் பெற ஐம்புலச் சுருக்கமே முதல் தேவை. உள்ளமும் உடலும் ஆசாபாசங்களில் இருக்கும் நிலையில் சித்த ஞானம் கொண்ட கருத்துகள் வெறும் சப்தமாகித்தான் போகும்.”

“புரிந்துகொண்டேன். என் பிழைகளைப் பொறுத்துக்கொண்டு என்னை வழி நடத்துவதற்காக நன்றி கூறுகிறேன்.’’

இறையுதிர் காடு - 41

“நல்லது. சென்று ஓய்வெடு! மல்லாக்கப்படு... தலைக்குப் பலகை வேண்டாம். ஒருக்களித்தும் படுக்காதே. அப்போதுதான் நீ இப்போது பெற்ற சிகிச்சை ஸ்திரமாகும்.”

“உத்தரவு பிரானே...” - புலிப்பாணி வணங்கிவிட்டுப் புறப்பட்டான். அஞ்சுகனும் சேர்ந்துகொண்டான். போகர்பிரானும் அந்தக் குக்குடாசன நிலையில் கண்களை மூடி தியானத்தில் மூழ்கலானார்.

மறுநாள் காலை...

“ஆமாம் சார். ஆள் யார்னு தெளிவா தெரியுற நிலைல போலீஸ் கம்ப்ளெயின்ட் கொடுக்கறதுதான் சரி. அந்த நபரே கொடுன்னு சொல்லியிருக்கும் போது நாம சும்மா இருக்கறது தப்பு சார்...”

வானில் பனிப்பிரதேசத்து மச்ச விழுங்கிப் பறவைகள், தங்களுக்கே உண்டான தனிச் சிறப்போடு ஒரே நேர்கோட்டில் நூலிழைகூட முன் பின் என்று இல்லாமல் தென்மேற்கிலிருந்து வடகிழக்கு நோக்கிச் சென்றபடி இருந்தன.

கொட்டாரக் கலிங்கக்குழாய்கூடத் தென்மேற்கு நோக்கி ஊதிப் பெருத்துப் பறந்தபடி காற்றின் திசையை உணர்த்திக் கொண்டிருந்தது. போகர் பிரானை மருத்துவ நிமித்தம் சந்திப்பதற்காக ஏராளமானோர் நாகலிங்க மர நிழல் வெளியில் அமர்ந்த நிலையில் காத்திருந்தனர். அப்போது புலிப்பாணி போகர் விரும்பியபடி தன்னோடு எட்டுப்பேரை அழைத்துக்கொண்டு போகரின் குடிலுக்கு முன் வந்து நின்றான்.

‘புலிப்பாணி

அஞ்சுகன்

மருதன்

பரிதி

மல்லி

அகப்பை முத்து

சங்கன்

நாரணபாண்டி

சடையான்’ என்கிற ஒன்பதுபேரும் காத்திருக்க, போகரும் வெளியே வந்தார். வந்தவரின் வசம் ஒரு மரப்பெட்டி இருந்தது. அதில் அஞ்சறைப் பெட்டி போல் ஒன்பது அறைகள் இருக்க, அதனுள் உள்ளங்கையில் அடங்கிவிடும் அளவில் நவபாஷாணங்கள் இருந்தன. வீரம், பூரம், சாதிலிங்கம், கௌரி, வெள்ளைப்பாஷாணம், மனோசிலை, அரிதாரம், சிங்கி, தாளகம் என்பவையே அவை!

இன்று பாரதி தன்னை அழைத்துவரச் சொன்ன டாக்டர் முன்னால் போய் நின்றபோது சற்றே வெளிறிப்போயிருந்தாள். கூடவே ஜெயராமன், அரவிந்தன், கணேசபாண்டியனும்...

“ஐயம் சாரி... எப்படிச் சொல்றதுன்னு தெரியல. எங்க ட்ரீட்மென்ட்டுக்கு சாரோட உடல் சரியா ரெஸ்பாண்ட் பண்ண மாட்டேங்குது. பல்ஸ் விழுந்துகிட்டேதான் போகுது. என் அனுபவத்துல இப்படி ஆன யாரும் பிழைச்சு எழுந்தது இல்லை...”

-அந்த டாக்டர் ஒவ்வொரு வார்த்தையாக ஒவ்வொருவர் முகமாகப் பார்த்துச் சொல்லிமுடித்தார்.

“அப்ப என்ன பண்ணலாங்கறீங்க?” - ஜெயராமனே பாரதியின் சார்பில் கேட்டார்.

“அட்லாஸ்ட்... இன்னும் ஒரு 24 மணிநேரம் நாங்க ட்ரை பண்ணிப் பாக்கறோம். இதேநிலை கன்டினியூ ஆனா பிரெய்ன் டெத்தா கன்சிடர் பண்ணி ஃபைலை குளோஸ் பண்ணிடுவோம். அப்புறம் ஆர்கன்சை டொனேட் பண்றதுங்கறது உங்க விருப்பம்தான்.”

- டாக்டர் அப்படிச் சொன்ன ஜோரில் மேற்கொண்டு பேச எதுவுமில்லை, பேசுவதால் பயனுமில்லை என்பதுபோல் எழுந்து நின்றார்.

அங்கே ஒரு பேரமைதி!

மெல்ல அதை உடைத்துக்கொண்டு “அப்பாவை நாங்க கிட்டப் போய்ப் பாக்கலாமா டாக்டர்?” என்று கேட்டாள் பாரதி.

“போலாம்... ஸ்டெய்ன் வாஷ் பண்ணிகிட்டு நோஸ்கேப்பைப் போட்டுகிட்டுப் போங்க...”

“அப்பாவுக்கு கான்ஷியசே இல்லையா?”

“பாருங்க... உங்களுக்கே தெரியும்...”

- அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் ராஜாமகேந்திரனின் படுக்கை அருகே முகத்தில் பாதி மறைந்த நிலையில், தலையிலும் கேப்புடன், கையில் கிளவுஸுடன் சூழ்ந்து நின்றனர். பாரதி அப்பாவின் முகத்தைக் கூர்ந்து பார்த்தாள். ஆக்சிஜன் மாஸ்க், சலைன் ட்யூப், ஹார்ட் பீட் மானிட்டர் என்று மருந்து வாடைக்கு நடுவில் ‘நான் இனி அவ்வளவுதான்’ என்பதுபோல் கிடந்தார் ராஜா மகேந்திரன்.

இறையுதிர் காடு - 41

பாரதியிடம் வரவேண்டிய கண்ணீர் கணேசபாண்டியின் கண்களில் திரண்டிருந்தது. பாரதி மெல்ல அவர் கையைத் தொட்டுப்பார்த்தாள்... பனித்துண்டு ஒன்றைத் தொட்டது போல்தான் இருந்தது. அப்போது அரவிந்தனுக்கு முத்துலட்சுமி கொடுத்துவிட்டிருந்த விபூதி ஞாபகம் வரவே பாக்கெட்டிலிருந்து அதை எடுத்து விரித்தான்.

நல்லவேளை, டாக்டரோ நர்ஸோ யாருமில்லை. இனி அருகில் இருப்பது வேஸ்ட் என்று நினைத்துவிட்டார்களோ என்னவோ? அரவிந்தன் கட்டைவிரலில் விபூதியைத் தொட்டு அப்படியே சற்று முனைந்து எட்டி அவர் நெற்றியில் பூசியும் விட்டான்.

பாரதி வெறித்தாள். அந்த நிலையிலும் ஜெயராமன் சிரித்தார்.

“தம்பி, எனக்கும் வெச்சு விடுங்க” – என்று கணேசபாண்டி கைகட்டி முகத்தை முன் நீட்டினார்.

வைத்துவிட்டான்!

மூக்கின்மேல் கொஞ்சம் சிந்தியது.

அப்படியே வெளியே வந்தனர். அணிந்தவற்றை அவ்வளவையும் கழற்றி ஒரு பிளாஸ்டிக் பேக்கில்போட்டு அருகிலிருந்த டேபிள்மேல் வைத்தனர். அப்படியே நிதானமாக நடந்து வெளியே கார் பார்க்கிங் செய்த இடம் வரை வந்தனர்.

“அரவிந்தன் உங்க திட்டம் என்ன?” - ஜெயராமன் ஆரம்பித்தார்.

“இப்ப நான் பாரதியை வீட்ல விட்டுவிட்டு என் வீட்டுக்குப் போகப்போறேன். நாளைக்குக் காலைல அந்தப் பெட்டியைத் திறந்து பாக்கறதுதான் சார் முதல் வேலை.”

“சரி... அப்புறம்?”

“தெரியல சார்.”

“டாக்டர் 24 மணிநேரம் கெடு கொடுத்திருக்கார். ஆர்கன் டொனேட் பண்றது வரை போயிட்டார். அவர் பேசினதுல இருந்து அவருக்கு ஹோப் இல்லன்னு தெரியுது. உங்களுக்கு?”

“இப்ப என்னால எதுவும் சொல்ல முடியல சார். பெட்டியால ஏதாவது நல்லது நடக்கலாம்.”

“உங்களுக்கு அப்ப நம்பிக்கை இருக்கு.”

“நம்பறதுல தப்பில்லையே சார்.”

“சரி... அந்தக் குமாரசாமி பிரதர் விஷயத்துல என்ன செய்யப்போறோம்?”

“கட்டாயமா போலீஸ் கம்ப்ளெயின்ட் கொடுக்கணும் சார்...”

“ஆமா... அதான் இப்ப ரைட் ஸ்டெப். என்ன பாரதி சொல்றே?”

எடிட்டர் கேள்விமுன் பாரதி சற்று மௌனித்தவளாய், பின் வாய்திறந்து “சார்... அந்த விஷயத்தை இப்போதைக்கு விட்ருவோம் சார். 24 மணிநேரம் கழியட்டும். பிறகு யோசிக்கலாம்.”

“அப்பகூட யோசிக்கலாம்தானா?”

“என்னமோ தெரியல... பேசின அந்த நபரோட குரல்ல ஒரு மெட்டாலிக் தன்மை. உச்சரிப்புல ஒரு பெரிய உணர்வு.”

“அதெல்லாம் இருக்கட்டும். கிரிமினல்னு தெரிஞ்சு நாம சும்மா இருக்கறது பொறுப்பில்லாத தனமாகும். அதுலயும் ஒரு பத்திரிகை ஆசிரியரா நான் உன் விருப்பம்னு சொல்லி ஒதுங்கவே கூடாது.”

“ஆமாம் சார். ஆள் யார்னு தெளிவா தெரியுற நிலைல போலீஸ் கம்ப்ளெயின்ட் கொடுக்கறதுதான் சரி. அந்த நபரே கொடுன்னு சொல்லியிருக்கும்போது நாம சும்மா இருக்கறது தப்பு சார்.”

“அதுக்கு முன்னால அந்தக் குமாரசாமி வீட்டுக்குப் போய் மனசார மன்னிப்பு கேட்டு அந்த இடத்துக்கு இனி எந்தச் சிக்கலும் இல்லைன்னு சொல்றது முக்கியமில்லையா?”

- பாரதியின் கேள்விக்குத் தன் முகபாவங்களிலேயே முக்கியம்தான் என்று சொன்னார் ஜெயராமன்.

“அம்மா... இப்ப முதல்ல நாம கவனிக்க வேண்டியது அய்யாவைத் தாம்மா... இதெல்லாம் அப்புறம்! இந்த 24 மணி நேரத்தில் அய்யாவைக் காப்பாத்த வேற ஏதாவது வழி இருக்குதான்னு பாப்போம்மா.”

-கணேசபாண்டியனின் நெகிழ்வான கருத்தும் சரி என்றுதான் எல்லோருக்கும் தோன்றியது. அப்போது அரவிந்தனின் கைப்பேசியில் அழைப்பொலி. பழநியிலிருந்து ரிப்போர்ட்டர் செந்தில்தான் பேசினான்.

“சார் நல்லபடியா போய்ச் சேர்ந்துவிட்டீர்களா?”

“சேர்ந்துவிட்டேன் செந்தில்... இப்பகூட ஹாஸ்பிடல்லதான் இருக்கோம்...”

“சார் எப்படி இருக்கார் சார்...?”

“ரொம்ப மோசமாதான் இருக்கு நிலைமை.”

“இப்பகூட அவர் சம்பந்தமாதான் சார் கூப்பிட்டேன். கூப்பிடச் சொன்னவர் நம்ம பண்டார சாமியார் - நாம தென்னந் தோப்புல பார்த்தோமே, அவர்தான் சார்!”

“அவரா... என்ன சொன்னார்?”

“பொட்டிய சீக்கிரம் திறக்கச்சொல்லு... மலைக்குப் போற நாள் நெருங்கிக்கிட்டே இருக்கில்லன்னு சொன்னார் சார்.”

“எந்த மலைக்கு?”

“தெரியல சார். என்னோட போன் நம்பருக்குக் கூப்பிட்டு, பொட்டியத் திறந்தா குழப்பம் தீரும் - செத்தவனும் பிழைப்பான்னு சொன்னார்.”

“அவருக்கு உங்க செல்போன் நம்பர் எப்படிக் கிடைச்சது?”

“என்ன சார் நீங்க... தென்னை மரத்தைப் பார்த்துக் கைதட்டி இளநீர் கேட்டா மரம் அவர் கேட்டதைக் கொடுக்குது. இப்படிப் பட்டவருக்கு என் நம்பர்லாமா சார் ஒரு விஷயம்?”

“அதுவும் சரிதான். அந்தக் கடபயாதி புத்தகமும் கிடைச்சிடுச்சு. நாளைக்குக் காலைல அதைத் திறக்கறதுதான் முதல் வேலை.”

“அப்புறம் சார்... பெட்டிக்கு சொந்தமானவங்களும் வந்துகிட்டிருக்காங்களாம். உங்களுக்கு வேண்டியத எடுத்துக்கிட்டு பொட்டிய அவங்க கிட்ட கொடுத்துடுவீங்களாம்.”

“இதையும் அவரா சொன்னார்?”

“ஆமாம் சார்.. போன் பண்ணி உடனே சொல்லு... நான் அவங்கள காட்டுக்குள்ள பார்ப்பேன்னும் சொல்லுன்னு சொன்னார்...”

“அவர் விஷயமே ஒரே ஆச்சர்யம்தான். தேங்க்ஸ் செந்தில். நாங்க இப்ப குழப்பத்துல தான் இருக்கோம். எதை எப்படிச் செய்யறதுங்கற குழப்பம். உங்க போனால ஒரு சின்ன தெளிவு, ரொம்ப தேங்க்ஸ் உங்களுக்கு...”

“தேங்க்ஸ் எல்லாம் எதுக்கு சார்... உங்களால் பண்டார சாமியார் என்கூட பேசிட்டார். அவரைப் பாக்கறதே விசேஷம். இதுல பேசினா இன்னும் விசேஷமாம். அதனால நான் சந்தோஷத்துல இருக்கேன் சார்.”

“குட்... உங்க சந்தோஷம் எதுவரைன்னு பாக்கத்தானே போறேன். வெச்சிடட்டுமா?”

“நானும் வெச்சிடறேன் சார்...”

- செந்தில் போனை கட் செய்ய, அரவிந்தன் நிமிர, எல்லோர் பார்வையும் அரவிந்தன் மேல்தான்.

“ஆமாம் சார்... பழநியில நாங்க பார்த்த சித்தசன்யாசி இப்ப செந்தில்ங்கற பழநி ரிப்போர்ட்டர்கிட்ட போன் பண்ணி பெட்டிய திறக்கச் சொல்லு, குழப்பம்லாம் தீர்ந்துடும், செத்தவனும் பிழைப்பான்னு சொல்லியிருக்கார் சார்.”

“அவர்கிட்ட எதுக்குச் சொல்லணும்?”

“அவர்தான் கூட்டிகிட்டே போனார் சார், நைஸ் மேன்.”

“அப்ப முதல் வேலை பெட்டிய திறக்கறது தானா?”

“ஆமாம் சார். என்னன்னுதான் பாத்துருவோமே?”

“குட். ட்ரை பண்ணுங்க. நல்லது நடந்தா சந்தோஷம்!”

“இன்னொரு முக்கியமான விஷயம் சார்.”

“என்ன?”

“பெட்டிக்கு உரியவங்க வந்துகிட்டிருக்காங்க. அவங்ககிட்ட பெட்டிய ஒப்படைச்சிடறதாம்...”

“அது யார் புதுசா?”

“சித்தர்கள் பேச்சு சார்... போகப் போகத்தான் புரியும்.”

“ஓகே... இப்ப எல்லாரும் கிளம்புவோம். காலைல மீட் பண்ணுவோம். பெட்டியையும் திறக்க முயற்சி செய்வோம். அப்புறமா மற்ற விஷயங்களைப் பேசுவோம்.”

“அதுதான் இப்ப சரியான முடிவு.”

“மிஸ்டர் கணேசபாண்டியன், நீங்க கவனமா இருங்க. அந்த நபர் எப்ப வேணா எப்படி வேணா வரலாம். இங்க எங்கேயாவது ஒளிஞ்சிகிட்டு நாம அடுத்து என்ன செய்யப்போறோம்னு கவனிச்சிக்கிட்டிருக்கலாம். அந்த நபரைக் குறைச்சு எடை போட்டுட வேண்டாம். போலீஸ் கம்ப்ளெயின்ட்ல இருந்து எல்லா விஷயத்தையும் காலைல பேசிக்கலாம்” - என்று ஜெயராமன் கணேச பாண்டியனை எச்சரித்துவிட்டு அவர்களோடு புறப்பட்டார். கணேசபாண்டிக்கும் சற்று ஆர்வமாகத்தான் இருந்தது. சுற்றிச்சுற்றிப் பார்த்தபடியே வார்டு நோக்கி நடக்கத் தொடங்கினார்!

மறுநாள் காலை!

சொல்லிவைத்தாற்போல் அரவிந்தன் பைக்கும், ஜெயராமன் காரும் ஒன்றாக பங்களாவினுள் நுழைந்து நின்றது. சொல்லி வைத்தாற்போல் இருவருமே கறுப்பு ஜீன்ஸ் பேன்ட்டும் ஆரஞ்சு நிறச் சட்டையும் அணிந்திருந்தனர். அவர்களை வரவேற்க வந்த பாரதியும் கறுப்புச் சுடிதாரும் ஆரஞ்சுத் துப்பட்டாவுமாகத்தான் இருந்தாள்.

இது என்ன இப்படி ஒரு தற்செயல்? ஒரு அமானுஷ்யத்தின் தொடக்கமாய் ஒருவரை ஒருவர் வியப்போடு பார்த்துக்கொண்டே ஹாலில் முருகன் படத்தின் முன்னால் இருக்கும் பெட்டியை நோக்கி நடந்தனர். அதன்மேல் அந்தக் கடபயாதி என்கிற புத்தகத்தோடு ஒரு திருப்புளி!

- தொடரும்