
அன்று நவ பாஷாணங்களோடு நின்ற போகர் பிரானை நவமரும் மிக ஆர்வமாகப் பார்த்தனர். போகர் பிரான் அவ்வேளையில் காலமானியையும் ஒரு பார்வை பார்த்தார்.
கொட்டார முகப்பில் ஒரு நீர்க் கடிகையாகத் தொங்கிக்கொண்டிருந்த அக்காலமானி, துல்லியமாக அப்போது காலை மணி ஒன்பது என்பதை அவருக்கு உணர்த்தியது. கடிகையின் கீழ்ப் பாகத்தில் ஒன்பதாவது கோடுவரை நிரம்பியிருந்த நீர்ச் சொட்டுகள் ராகுகாலம், எமகண்டம் போன்ற காலமாக அப்போது இல்லை என்றும் கூறிவிட்டன. இருந்தும், ``புலி... இப்போதைய காலகதியில் யாதொரு தடைக்கதிர்களும் இல்லைதானே?’’ என்று கேட்டார். புலிப்பாணியும் முன்வந்து ``ஆம் பிரானே...’’ என்றான்.
``புலி... இப்போது உங்களுக்கெல்லாம் நான் பாஷாணம் குறித்த பாடம் நிகழ்த்த இருக்கிறேன். அதற்கு முன் இதோ இங்கிருக்கும் ஒன்பது பாஷாணங்களைக் கிடுக்கிப்பிடியால் எடுத்து, கையளவு வஸ்திரத்தில் வைத்துக்கட்டி, உங்கள் இடுப்போடு கட்டிக்கொள்ளுங்கள். எக்காரணம் கொண்டும் கையால் மட்டும் தொட்டுவிடக் கூடாது. ஞாபகமிருக்கட்டும்...’’ என்ற போகர், நாகலிங்க மர நிழல்பொதிக்குள் காத்திருக்கும் நோயுழலியர் நோக்கி நடக்கத் தொடங்கினார்.
போகர் வருவதைக் கண்ட அவர்களும் கைகளைக் கூப்பி, பரவசமாக வணங்கினர். சிலர் மூங்கில் தட்டில் மா, பலா, வாழை என்னும் முக்கனிகளை வைத்திருந்து போகருக்கு வழங்க முன்வந்தனர்.
``இதெல்லாம் எதற்கு?’’
``எங்கள் அன்புக் காணிக்கை...’’
``ஒரு மருத்துவன், அதிலும் சித்த மருத்துவன் காணிக்கையெல்லாம் பெறக் கூடாது...’’
``அன்புக் காணிக்கையைக் கூடவா?’’
``நீங்கள் அதை எப்படி வேண்டுமானாலும் குறிப்பிடலாம். வைத்தியனுக்கோ அது கைம்மாறு; நோய்வரையில் மருந்து மட்டுமே கைமாற வேண்டும்.’’

``அப்படியானால் சித்த வைத்தியர் எப்படி வாழ்வார்?’’
``சித்த வைத்தியத்துக்கு ஊழியம் கிடையாது. அது ஒரு தொண்டு. வாழ்வதற்கு அவர் வேறு ஊழியம்தான் பார்க்க வேண்டும்.’’
``முழு ஊழியமாக இதைக் கொண்டால்?’’
``அப்போதும் கைநீட்டி பதில் பொருளைப் பெற்றிடக் கூடாது. உண்டியலில்தான் போடச் சொல்ல வேண்டும்.’’
``தங்களுக்கு என வழங்கப்படுவதை, தாங்கள் பெற்றுக்கொள்வது எப்படித் தவறாகும்?’’
``சரி, தவறு என்கிற பேச்சுக்கெல்லாம் இங்கே இடமேயில்லை. நோயுற்றவர் கர்மத்தால் துன்புறுபவர் ஆவார். அதை ஒரு வைத்தியன் `கூலி’ எனும் பெயரில், தான் வாங்கிக்கொண்டுவிடக் கூடாது. வைத்தியன் என்பவன் மனித உருவில் உலவிடும் தெய்வமானவன்! தெய்வத்திற்கே ஒருவரின் கர்மத்தாலான துன்பத்தைப் போக்கும் ஆற்றல் உண்டு. அந்த ஆற்றல், மனிதர்களில் வைத்தியனுக்கே உண்டு.’’
``அப்படியானால் நாங்கள் எங்கள் நன்றியை எவ்வாறு காட்டுவது?’’
``நல்ல கேள்வி. என்னைக் காண இங்கு வருபவர்கள் இந்தக் கொட்டாரத் தோட்டத்தில் விருட்சங்களுக்கு நீர் வார்த்திடுங்கள். களைகளைப் பிடுங்கி உரக்குழியாக்குங்கள்... உடம்புக்கு வந்ததை உடம்பாலேயே வெற்றி கொள்ளுங்கள்...’’
``அதையும் செய்கிறோம். அப்படியே இந்தக் காணிக்கை களையும் மனதார வழங்குகிறோம். இதை உங்கள் கொட்டாரத்துச் சீடர்கள் மற்றும் பணியாளர்கள் நிமித்தம் தாங்கள் ஏற்று அருள வேண்டும்.’’
``அப்படியாயின் அதைச் சீடர் கள் பெற்றுக்கொள்வர். இப்போது நான் உங்களுக்கு வைத்தியம் புரிய வந்துள்ளேன். எனவே, எல்லோரும் அவரவர் நிற்கும் இடங்களில் அமர்ந்து கொள்ளுங்கள். நான் அழைக்கும் சமயம் என்னைக் காண வாருங்கள்.’’ - போகர், நாகலிங்க மரத்தடியில் அவர் அமர்வ தற்கெனப் போட்டிருந்த ஓரடி உயரப் பலகை மேல் சென்று அமர்ந்துகொண்டார். வரிசையாக ஒவ்வொருவராக வந்தனர். `கை மணிக்கட்டு நாடித்துடிப்பு, விழி வெளுப்பு, நாவின் பசலை, முகவாட்டம், மூச்சின் உஷ்ணம்’ இவற்றைவைத்தே நோயை அறிந்தவர், அதற்கென மருந்தினைக் கூறி உண்ணச் சொன்னார். வந்திருந்தவர்களில் ஐம்பது வயதைக் கடந்துவிட்ட பலருக்கும் மூட்டில் வலி... உணவில் புளியை அறவே விலக்கச் சொன்னதோடு, உவர்ப்பையும் கசப்பையும் கொண்ட காய்கனிகளை உண்ணச் சொன்னார். அதற்குள், `பஸ்ப சம்புடம், சூர்ண சம்புடம், களிம்புச் சம்புடம், திராவகக் குடுவை, லேகிய தாளி’ என்று மருந்தக மரமேடை ஒன்றை போகரின் மருந்தாளுநர்கள் உருவாக்கிவிட்டனர்.

அத்தனை பேருக்கும் அப்போதே உண்ண மருந்தளித் ததோடு, மேற்கொண்டு சாப்பிட வேண்டிய மருந்தினை ஆலந் தொன்னைகளிலும், தாமரை இலைத் தொன்னைகளிலும் அளித்து, அவர்களைத் திருப்திப்படுத்தியவர் திரும்பக் கொட்டாரத்துக்கு வந்தார்.
நவமரும் நவபாஷாணங்களை ஆளுக்கொன்றாகக் கிடுக்கியில் எடுத்து, கையளவு வஸ்திரத்தில் வைத்து, சுருட்டிக்கட்டி, அதை இடுப்பிலும் கட்டிக்கொண்டு விட்டிருந்தனர்.
``என்ன... எல்லோரும் நான் கூறியதுபோல செய்துகொண்டீர்களா?’’
``ஆம் பிரானே...’’
``நீங்கள் இப்போது என் சீடர்கள் மட்டுமல்ல, நீங்களும்கூட இப்போது பாஷாணங்களே... அதாவது, பாஷாணம் சார்ந்த மனிதர்கள்.’’
``அதனால் என்ன பிரானே?’’
``இப்படித்தான் கேட்க வேண்டும். பாஷாணங்கள் மொத்தம் 64 வகைப்படும். இயற்கையாகக் கிடைப்பவை இவற்றில் சரிபாதி... மறுபாதி இந்தப் பாதியைக்கொண்டு பிறிதொன்றின் துணையோடு சேர்த்துச் செய்தவை. இந்த 64 பாஷாணங்களில் உங்கள் வசம் நான் அளித்திருக்கும் ஒன்பது பாஷாணங்கள், ஒன்பது கோள்களின் ஆதிபத்யம் கொண்டவை. அதாவது, முழுமையான ஆதிபத்யம் கொண்டவை. மற்ற பாஷாணங்கள் கணிசமான ஆதிபத்யமுடையவை.’’
``பிரானே... விண்ணில் எண்ணிறந்த கோள்கள் இருப்பதாகத் தாங்கள் கூறியுள்ளீர்... அப்படியிருக்க, அது என்ன ஒன்பது என்று ஒரு கணக்கு... மற்ற கோள்கள் ஒரு பொருட்டில்லையா?’’
``புலி... இதற்கு நீ பதில் சொல். நீ சொன்னால்தான் சரியாக இருக்கும்.’’
``உத்தரவு பிரானே... இதற்கு விடையை நான் கூறுகிறேன். சகாக்களே... சுழன்றபடியே இருக்கும் இந்த பூமியின் மீது இந்த ஒன்பது கோள்களின் கதிர் வீச்சுதான் பட்டபடி உள்ளது. ஏனைய கோள்கள் கோடிக்கணக்கான காத தூரத்தில் இருப்பதால், அவற்றின் தாக்கத்துக்கு நாம் வசிக்கும் பூமியில் இடமேயில்லை. எனவே, ஒன்பது கோள்களே பூமிக்குக் கணக்காகும்.’’
``அப்படியானால், `இந்தக் கோள்களின் கனிமங்கள்’ என்று இந்த பாஷாணங்களைக் கூறலாமா?’’
``ஆம்... வீரம் எனும் பாஷாணம் செவ்வாய்க்கோளின் தன்மையை உடையது. வெள்ளைப் பாஷாணம் சுக்கிரனின் தன்மையை உடையது. இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோளின் தன்மையைக் கொண்டவை.’’
``இதை எப்படி நாம் கண்டறிந்தோம்... கூற முடியுமா?’’ - நவமரில் ஒருவன் நறுக்கென்று கேட்டான்.
``நல்ல கேள்வி... யார் இதைக் கேட்டது?’’ - போகர், கேள்வி கேட்டவனைப் பார்த்தார். அகப்பைமுத்துதான் அப்படிக் கேட்டவன். அவர் முன் பணிவாக வந்து நின்றான்.
``உன் வசமுள்ள பாஷாணம் எது?’’
``மனோசிலை குருபிரானே...’’
``இந்த மனோசிலை கோள்களில் புதனின் ஆதிக்கத்தை உடையது. புதனே கல்வி கேள்விகளுக்குத் தூண்டுதல் அளிப்பவன். புதனுக்கான பாஷாணம் உன்னோடு இருக்கவும், நீயும் கேள்வியைக் கேட்டுவிட்டாய். அதுவும் நுட்பமான கேள்வி. பாஷாணத்தை நான் உங்களோடு வைத்திருக்கச் சொன்னது, அதன் செயல்பாடு உங்களை பாதித்து நீங்கள் அதற்கேற்பச் செயல்படுகிறீர்களா என்று பார்க்கத்தான். என் ஆய்வுக்கான விடையை அகப்பைமுத்து உடனேயே அளித்துவிட்டான்.’’
``குருவே... இக்கேள்வி என்னிடமும் உள்ளது. நானும் கேட்க விரும்பினேன்” என்றான் மல்லி என்பவன். ``விரும்புவது வேறு... அதைச் செயல் வடிவாக்குவது வேறு... உன் வசமுள்ள பாஷாணம் எது?’’

``சிங்கி என்பதாகும்.’’
``சிங்கி, சந்திரனைப் பிரதிபலிப்பதாகும். சந்திரன் மனோகாரகன். அதே சமயம் வளர்ந்து தேய்பவன். ஒரு நிலையில் தொடர்ந்து இல்லாதவன். நம் மனமும் அப்படிப்பட்டது தானே... ஸ்திரமாகத் திகழ, செவ்வாயின் துணை வேண்டும். உன்னிடம் அது இல்லை. உன் வசமுள்ள பாஷாணமும் அதன் தன்மையைச் சரியாகவே காட்டிக்கொண்டிருக்கிறது.’’
``அப்படியானால், இது எங்களுக்கான பரிசோதனையா?”
``உங்களுக்கான பரிசோதனை மட்டுமல்ல... பாஷாணங்களுக்கான பரிசோதனையும்கூட...’’
``இப்படிப் பரிசோதிப்பதன் நோக்கம்..?’’
``இவற்றின் சக்தியைப் பார்த்துப் புரிந்து கொள்ளவும் அறிந்துகொள்ளவும் இப்படித்தான் நடக்க வேண்டியிருக்கிறது!’’
``இதனால் எங்களுக்குத் தீய பாதிப்பு ஏதும் நேருமா?’’
``அதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.’’
``இந்தப் பாஷாணங்கள், நாங்கள் இவற்றை உண்டிராத நிலையில் அந்த அளவிற்கா எங்கள் மேல் ஆதிக்கம் செலுத்தும்?’’
``ஆம்... இந்த உலகிலுள்ள சகலமானவற்றுக்கும் ஒரு சக்தி உண்டு. ஒருவன் அணிந்திருக்கும் ஆடையில் படியும் அழுக்கும், அதில் ஏற்படும் கிழிசலும்கூட அவனையறியாமல் அவன் ஒளியுடலை பாதித்திடும். அதன் அளவு குறைவாக இருந்து, நமது ஒளியுடம்பின் பலம் அதைவிட அதிகமாக இருக்கும்போது அந்த பாதிப்பை நாம் பெரிதாக உணர மாட்டோம். அதே சமயம் நம் ஒளியுடம்பு தீட்டுக்கு ஆட்பட்டு சக்தி குன்றி யிருந்தால், நிச்சயம் அதன் பாதிப்பை நாம் உணர்வோம். உடல் சோர்வு, மனக்கிலேசம், வெறுப்புணர்வு என்று மனம் பாடாய்ப்படும்...’’
``ஆடை அழுக்கும் கிழிசலும் கூடவா ஒரு மனிதனை பாதிக்கின்றன?’’
``ஆம்... சக்தி என்பது எதிர்மறை, நேர்மறை என இரு தன்மைகொண்டது. நமக்கு ஏற்படும் தாக்கத்தை வைத்தே அதைக்கூடக் கண்டறிந்து விடலாம்...’’
``இந்த உலகில் ஒருவர் எந்த மூலையில் இருந்தாலும், மனதார ஒருவரை நெகிழ்வுடன் நினைத்து வாழ்த்திடும்போது அதனாலும் நல்ல தாக்கம் உருவாகும்.’’
``அது எப்படி குருவே?’’
``ஆலயங்களுக்குச் சென்று வருவதால் நேர்மறை சக்தி உருவாகும். அநேகமாக இறை நம்பிக்கை உடையோர் மட்டுமே அங்கு வந்து மனதை அடக்கிப் பிரார்த்தனை புரிவர். மனம் அடக்கப்படும்போதெல்லாம் சக்தி மிகும். ஒருவருக்கு நூறு பேர், ஆயிரம் பேர் அவ்வாறே செய்யும் இடத்தில் அந்த சக்தி பொங்கி வழிந்திடும். எனவே, ஆலயவெளிக்குள் நம்மையறியாமல் சென்று வந்தாலேகூடப் போதும். நேர்மறை எண்ணங்களும் சமாதான உணர்வும் மனதில் எழும்பிவிடும்...
அதேபோல ஒரு பசுமாட்டைப் பலமுறை வலம் வந்தாலும், நேர்மறைத்திறன் அதிகரித்து நம் ஒளியுடம்பு அதீத பிரகாசமடையும்.
குரு மற்றும் தாய்தந்தையரின் ஆசிக்கரங்கள் சிரம்மேல் படும்போதும் நேர்மறைத் தாக்கம் உருவாகும். இந்த உலகில் ஒருவர் எந்த மூலையில் இருந்தாலும், மனதார ஒருவரை நெகிழ்வுடன் நினைத்து வாழ்த்திடும்போது அதனாலும் நல்ல தாக்கம் உருவாகும்.
விளக்கின் சுடர், வேள்வி நெருப்பு மற்றும் அதன் புகை, விபூதி, செந்தூரம், குங்குமம், மந்திர அஞ்சனம், எலுமிச்சைப்பழம், துளசி, வில்வம், தங்கம், வெள்ளி, நவரத்தினக்கற்கள், `அட்சதை’ எனப்படும் மஞ்சள் கலந்த அரிசி, பருத்தியாலான கயிறு, மலர்கள், நெய், பால், பழங்கள் என்று இவையெல்லாமும்கூட நேர்மறைத் தாக்கம் ஏற்படுத்துபவையே...’’
``அந்தத் தாக்கம் எப்படிப்பட்டதாக இருக்கும்? ஏனென்றால், இவை என் வசம் இருந்ததுண்டு. ஆனால் நான் எப்போதும்போல் அப்போது இருந்ததாகவே கருதுகிறேன்.’’
``ஒன்றின் மதிப்பு, அது இல்லாமற்போய்த் திரும்பக் கிடைக்கும்போதுதான் பளிச்சென்று தெரியவரும். இதை உணர, சில அனுபவங்கள் அவசியம். இப்போது நீங்கள் ஆரோக்கியமாக இருப்பது உங்கள் உடம்பு நோய்க்கு ஆளாகும்போதுதான் தெரியும். ஜாதக அமைப்பின் நற்கால கதியில் இருக்கும்போது, இவற்றால் ஏற்படும் தாக்கத்தை நாம் பெரிதாக உணர மாட்டோம். ஆற்றில் வெள்ளம் ஓடிக்கொண்டி ருக்கும்போது மழை பெய்கிறது. அதனால் என்ன பயன்? அதே மழை காய்ந்த நிலத்தின் மேல் பெய்திடும்போது அதன் பயன் அபரிமிதமாக உணரப்படும் இல்லையா?’’
``புரிகிறது குரு பிரானே... அடுத்து நாங்கள் என்ன செய்ய வேண்டும்?’’
``இப்படியே நாளைக் காலைவரை இருங்கள். பாஷாணத்தைப் பிரிந்து விடாமல் உறக்கத்தின் போதுகூட அது உங்களோடு இருக்கட்டும். இந்த நொடியிலிருந்து உங்கள் வாழ்க்கை இயல்பானதாகவே செல்கிறதா, இல்லை, இந்த பாஷாணங்களால் நீங்கள் என்னவாகப் போகிறீர்கள் என்று நான் காண வேண்டும்.’’
``பிரானே... இப்பரிசோதனையால் எங்கள் உயிருக்கு ஏதும் ஆபத்து...’’ என்று இழுத்தான் அகப்பை முத்து.
``அற்ப ஆயுள் உள்ளவர்களுக்கு என்னைச் சந்திக்கும் விதிப்பாடு இல்லை என்பதை உணருங்கள். ஒருவேளை அப்படி ஏதும் நிகழ்ந்தால், போன உயிரைத் திரும்பக் கொண்டு வந்துவிடும் சஞ்சீவினி இருக்கும் இடம் எனக்குத் தெரியும்...’’ என்று போகர் கூறியபோது அவர் குரலில் மெல்லியதாக ஒரு ரௌத்ரம்!
இன்று பெட்டிமேல் கடபயாதி புத்தகத்தையும் திருப்புளியையும் ஒருசேரப் பார்த்த அரவிந்தன், அடுத்து பாரதியைத்தான் ஆச்சர்யத்தோடு பார்த்தான்.
``நான்தான் இரண்டையும் தயாரா எடுத்து வெச்சேன்’’ என்றாள். அப்போது முத்துலட்சுமியும் அங்கே வந்தாள். காலையிலேயே எழுந்து குளித்து, பளிச்சென்று நெற்றியில் விபூதி துலங்க நின்றாள். நின்று பார்த்த விதமே, `என்ன, பெட்டியைத் திறக்கப் போறீங்களா?’ என்று கேட்டது.
அந்த ஹாலிலிருந்து சமையலறை நோக்கிச் செல்லும் வழியில் அடைக்கலம்மாவும், வெளியே போர்ட்டிகோ அருகே நின்று உள்ளே பார்த்தபடி ஒரு தவிப்போடு தோட்டக்கார மருதமுத்துவும்கூடத் தென்பட்டனர்.
பெட்டி அந்த வீட்டுக்குள் வந்ததிலிருந்தே வீடே மாறிவிட்டது. எது எப்போது நடக்கும் என்பது தெரியாதபடி எதிர்பாராத பல நிகழ்வுகள்!
இப்போது அதன் உச்சம்..! எல்லோரிடமும் இனம் தெரியாத பரபரப்பு. அரவிந்தன், அந்தக் ‘கடபயாதி’ என்கிற புத்தகத்தைக் கையிலெடுத்தான். மெல்லப் புரட்டினான். உள்ளே முதல் பக்கத்தில் `கடபயாதி’ என்கிற பருமனான எழுத்துகளுக்குக் கீழ் `இது ஒரு சம்ஸ்கிருத கணித நூல்’ என்கிற ஒருவரி விளக்கமும் கண்ணில்பட்டது. அதற்கும் கீழே `ப்ரம்ம வைத்யநாத தீட்சிதர்’ என்கிற பெயர். கீழுக்கும் கீழ் `அம்பாள் அச்சகம், பீட்டர்ஸ் சாலை, சென்னப் பட்டினம்’ என்கிற குறிப்போடு விலை எட்டணா என்கிற எழுத்தால் ஆன குறிப்பு. படித்து முடித்த நிலையில் அடுத்த பக்கத்தைப் புரட்டினான். `திருமுகம்’ என்னும் தலைப்பின் கீழ் அந்தப் புத்தகத்தை உருவாக்கியிருந்த வைத்யநாத தீட்சிதர் ஒரு கடிதத்தை எழுதியிருந்தார். அதைப் படிக்கத் தொடங்கினான்.
``என்ன அரவிந்தன்... இதைப் படிச்சு முடிச்சாதான் பெட்டியைத் திறக்க முடியுமா?’’ என்று கையில் அன்றைய ஒரு நாளிதழை எடுத்த படியே கேட்டார் ஜெயராமன்.
``ஆமாம் சார்... சின்ன புத்தகம்தான்! அதிகபட்சம் அரை மணியிலிருந்து ஒரு மணி நேரம் ஆகலாம்னு நினைக்கறேன்.’’
``அப்ப அதுவரை நான் இந்தப் பேப்பரைப் படிக்கறேன்’’ என்றார் ஜெயராமன். அந்த நொடியே அவரது செல்போனில் சிணுங்கல்.
காதைக் கொடுத்தவர் முகம் குத்துப்பட்டாற்போல் கசங்கியது.
``என்ன சார்?’’
``நம்ப பிரின்ட்டிங் செக்ஷன்ல பச்சமுத்துங்கற மெஷின் ஆபரேட்டர் ஹார்ட் அட்டாக்ல சுருண்டு விழுந்து செத்துட்டாராம். நான் இப்ப உடனே போயாகணும்’’ - என்று விரித்துப் பிடித்திருந்த பேப்பரை மோடோமேல் மடக்கிவைத்தார்.

``சார், நான் கூட வரட்டுமா..?’’ - பாரதி வேகமாகக் கேட்டாள்.
``இல்லை... நீ இங்கே இருந்து இந்தப் பெட்டியில் கான்சன்ட்ரேட் பண்ணு. நான் போய்த்தான் தீரணும். இது ஒருவிதமான பேத்தடிக் சிச்சுவேஷன்... உனக்குத்தான்னா இப்ப எனக்கும்..! நான் வர்றேன்...’’ -ஜெயராமன் புறப்பட்டுவிட்டார்.
மருதமுத்து ஓடிப்போய் கேட் கதவைத் திறந்து அவரை வழியனுப்பத் தயாரானான். நடுவே முத்துலட்சுமி, பாரதியின் கையைப் பிடித்துத் தனது அறைக்கு அழைத்துச் செல்லத் தொடங்கினாள்.
``ஏ கெழவி... நீ எதுக்கு இப்ப தனியா கூப்பிடுறே?’’
``அப்போ இந்தப் பெட்டி இப்ப வந்தது தற்செயலா இல்லை - வேற காரணம் இருக்குன்னு சொல்றியா?’’
``நிச்சயமா! இந்தப் பெட்டி வந்த அன்னிக்கு எங்கம்மா கனவுல வந்த ஒரு சித்தர், `இந்த ஜென்மத்துல உனக்கு இதைக் கும்புடுற பாக்கியம் மட்டும்தான். அடுத்த பிறப்புல நீ போகர் சித்தரை தரிசனம் செய்வே. அதற்குத் தகுந்த மாதிரி எல்லாம் நடக்கும்’னும் சொன்னாராம்.’’
``நல்லாருக்கு கெழவி... அம்பது அறுபது வருஷத்துக்கு முந்தி நடந்ததுன்னு சொல்லி, இப்போ என்னை எதுக்குத் தயார்படுத்தறே?’’
``நான் உன்னைத் தயார்படுத்தலடி... நடந்ததைச் சொன்னேன் அவ்வளவுதான்... இப்பகூட இது ஏதோ தற்செயலா வந்ததா என்னால நினைக்க முடியலை.’’
``போதும்... ஏற்கெனவே ஏகப்பட்ட குழப்பங்கள். இதுல நீ புதுசா ஒண்ணைச் சொல்லி, இருக்கறதைப் பெருசுபடுத்தாதே... நான் தெரியாமதான் கேட்கறேன். லிங்கம்கறது ஒரு கல். அதைக் கும்புடுறதால எந்த வகையில நமக்கு பிரயோஜனம்? இதுக்கு உன் அம்மா ஆசைப்பட்டதைக்கூட நான் சகிச்சிடுவேன். ஆனா, `உனக்கு அடுத்த பிறப்புலதான்’னு யாரோ, ஏதோ சொன்னார்னு சொன்னியே... அதைத்தான் ஜீரணிக்கவே முடியலை என்னால... இந்த மறுபிறப்பு, ஜென்மம் இதெல்லாம் எவ்வளவு பெரிய கற்பனை தெரியுமா?’’
``இல்லை பாரதி... கற்பனை இல்லை! அது நிஜம்கறதுக்கு நீயே சாட்சி...’’
``நானா... என்ன உளர்றே?’’
``ஒரு நிமிஷம் இரு...’’ - முத்துலட்சுமி எழுந்து சென்று, பீரோவைத் திறந்து ஒரு பழைய கறுப்பு வெள்ளை ஆல்பம் ஒன்றை எடுத்து வந்து பாரதி முன் திறந்தாள். அதில் ஒரு தபால் கார்டு சைஸ் புகைப்படத்தில் முத்துலட்சுமியின் அம்மாவின் இளவயதுப் படம் - அந்தப் படம் அச்சு அசலாக பாரதிபோலவே காட்சியளித்தது. பாரதியிடமும் திகைப்பு.
``யார் இது?’’
``உன் கொள்ளுப்பாட்டிடி! அப்படியே உன்னை மாதிரியே இருக்காங்க பார்...’’
``இதுல ஆச்சர்யப்பட என்ன இருக்கு... மரபணுக்கள் எப்பவும் ஒண்ணாத்தானே இருக்கும்.’’
``என்னைப் பொறுத்தவரை என் அம்மாதான் நீ... அவளோட மறுஜென்மம்டி நீ...’’
``ஆரம்பிச்சிட்டியா... உங்களையெல்லாம் திருத்தவே முடியாது. அடுத்து நீ என்ன சொல்வே, எங்க வந்து நிப்பேன்னு நல்லாத் தெரியும். ஒண்ணு நல்லாத் தெரிஞ்சிக்கோ... ஒருவேளை நீ சொல்ற மாதிரி, எல்லாம் சாமியோட செயல்பாடுதான்னு வை... அந்தச் சாமியை நான் சும்மா விட மாட்டேன். நீ கண்ணாமூச்சி விளையாட நான்தான் கிடைச்சேனான்னு ஆரம்பிச்சு, நான் அதுகிட்ட கேட்க ஏராளமான கேள்விகள் இருக்கு. கேள்வி கேட்கறதோட மட்டும் விட மாட்டேன். ஒரு பக்கம் யுத்தம், ஒரு பக்கம் குடிக்கக்கூடத் தண்ணியில்லாத நிலை, ஒரு பக்கம் காடே பத்தி எரியற கொடுமை, தப்பான மனிதர்கள்னு உன் படைப்புல ஏன் இவ்வளவு ஓட்டைகள்னு கேட்டு அதைச் சாவடிச்சிடுவேன்...’’ சற்றுப் பெருமூச்சுவிட்டவள்,
``இதையெல்லாம் ஒரு பேச்சுக்குத்தான் சொன்னேன். உடனே, `சாமி இருக்குன்னு ஏத்துக்கிட்டே பாத்தியா’ன்னு ஆரம்பிச்சிடாதே... சந்திரனுக்கு நாம ராக்கெட் விட்டு, அது இப்போ அங்கே இறங்கி, அங்கேருந்து கல்லு, மண்ணுன்னு எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு வரப்போகுது. கூடிய சீக்கிரம் சந்திரக்கல், சந்திர மண்ணால பங்களா கட்டி `மூன் பேலஸ்’னு இங்கே வாழப் போறோம். இங்கேருந்து அங்கே போய், சந்திரனையும் இந்த பூமியை எப்படிக் குப்பைக்கூளம், பிளாஸ்டிக்கால சாகடிச்சிக்கிட்டு இருக்கோமோ அதைச் செய்யப்போறோம். உன் சந்திரன் சாமி கதறப்போகுது பார்...’’ என்று கோபமாகப் பேசியபடியே ஹால் பக்கம் திரும்பி வந்தாள்.
அரவிந்தன் புத்தகத்தில் மிகக் கூர்மையாக இருந்தான். அவனைத் தொந்தரவு செய்ய விரும்பாமல் ஒதுங்கிச் சென்று ஆஸ்பத்திரிக்குத் தொடர்புகொண்டாள்.
``அண்ணே... ஏதாவது இம்ப்ரூவ்மென்ட் தெரியுதாண்ணே?’’
``இல்லீங்க பாப்பா... நேத்து பார்த்த மாதிரியேதான் இருக்காரு. நெத்தியில விபூதி பூசினதை ஒரு டாக்டர் பார்த்துட்டு, `இதுக்குத்தான் ICUவுக்குள்ள யாரையும் விடுறதில்லை’ன்னு ஒரே சத்தம்...’’
``அங்கே மட்டும் என்ன வாழுதாம்? திரும்பின பக்கமெல்லாம் முருகன் படம்! அதையெல்லாம் கழற்றிப் போடச் சொல்லுங்க முதல்ல...’’
``பாப்பா... இது சண்டை போடுற நேரமா? ஆமா... பெட்டியைத் திறந்துட்டீங்களா?’’
``இல்லண்ணே... அதுக்காக அரவிந்தன் சார், பரீட்சைக்குப் படிக்கற மாதிரி படிச்சிக்கிட்டு இருக்கார். ஆனா ஒண்ணு, உடைச்சாவது திறந்துடுவோம்.’’
``எல்லாமே விநோதமா இருக்குதும்மா எனக்கு. அதுலயும் அந்தக் குமாரசாமிய நான் ஆவியா நினைச்சு பயந்ததை நினைச்சா எனக்கே பத்திக்கிட்டு வருது.’’
``நல்லா வரட்டும்... உங்களை இப்படித்தானே பயமுறுத்த முடியும்? நல்லதுக்கு பயப்படாதவங்க இப்படித்தான் கண்டதுக்கும் பயந்து தலைகுனிவாங்க.’’
``ரொம்ப கோபத்துல இருக்கற மாதிரி தெரியுதே பாப்பா...’’
``கோபமா... அப்படியே பத்திகிட்டு வருது எனக்கு. ஐ ஆம் சாரி... நான் என் இயலாமையை அடக்க முடியாம ஏதேதோ பேசிக்கிட்டிருக்கேன். இங்கே பெட்டியைத் திறந்து பார்த்துட்டுக் கூப்பிடுறேன். இருபத்தி நாலு மணி நேரத்துல பன்னண்டு மணி நேரம் ஓடியே போயிடிச்சு. கையில இருக்கற இந்தப் பன்னண்டு மணி நேரத்துலதான் எல்லாம் இருக்கு’’ என்றபடி செல்போனை கட் செய்த பாரதியின் முன் காபியோடு வந்தாள் அடைக்கலம்மா!
``இப்ப எதுவும் வேண்டாம் அடைக்கலம்மா... சாருக்கு வேணும்னா கொடுங்க...’’ என்றாள் அலுப்போடு. அப்போது, ``அம்மா உங்களைப் பார்க்க யாரோ ரெண்டு பேர் வந்திருக்காங்க’’ என்றபடி வந்தான் மருதமுத்து. அவன் பின்னால் அமெரிக்காவின் பேடன் ரூஜிலிருந்து வந்திருக்கும் சாந்தப்ரகாஷ், சாருபாலா!
- தொடரும்
மனிதம் மகத்தானது!
ஆனந்த விகடன் 11.09.19 இதழில் பார்வைச் சவால் உடைய ஜாகிர் உசேன் கறிக்கடை நடத்திவருவது குறித்து, ‘விழிகளிலா இருக்கிறது வெளிச்சம்?’ என்ற கட்டுரையை வெளியிட்டிருந்தோம். அந்தக் கட்டுரையைப் படித்த சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன், ஜாகிர் உசேனை நேரில் சந்தித்தார்.

அவரின் திறமையைப் பார்த்து நெகிழ்ந்த ஆட்சியர், அவரிடம் உரையாடி விட்டு, ஒரு லட்ச ரூபாய் கடனுதவி ஆவணங்களை வழங்கினார். பசுமை வீடு கட்டித்தர அதிகாரிகளிடம் உத்தரவிட்டார். அவரின் மகன்களது படிப்பு உதவிக்குத் தன்னை அணுகுமாறும் கூறியுள்ளார். மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தனுக்கு நன்றிகள்!
அன்புமிக்க வாசகர்களே!
உங்கள் ஊரிலும் இதுபோல் எண்ணற்ற மனிதர்கள் இருப்பார்கள். சவால்களைச் சந்தித்து மீண்டுவந்து சாதித்த எண்ணற்ற கதைகள் இருக்கும். அவை அத்தனையையும் எங்கள் ஆனந்த விகடன் முகவரிக்குக் கடிதமாகவோ HumanStoryAV@vikatan.com -க்கு மின்னஞ்சலாகவோ அனுப்புங்கள். தகுதியான செய்திகள் நெகிழ்வான கட்டுரைகளாக வெளியாகும்.