மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இறையுதிர் காடு - 44

இறையுதிர் காடு
பிரீமியம் ஸ்டோரி
News
இறையுதிர் காடு

அன்று சதுரகிரி மெத்து மெத்தென்ற மேகப் பொதிகளுக்குக் கீழே கரும்பச்சை, இளம்பச்சை என இரண்டும் பின்னிப்பிணைந்தாற்போல் மரம், செடி, கொடி எனும் தாவரங்கள்.

வற்றையே தன் மேனிக்கான கேசம்போல் ஆக்கிக்கொண்டு விரிந்துகிடந்தது அந்த மலைவெளி.கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நாலாபுறமும் சிவன் கொண்டைபோல் மலைகள்..! அதற்கு அப்பாலும் அதன் தொடர்ச்சிகள்... இதில் தென்கிழக்குச் சிகரத்தின் தொடர்ச்சி பொதிகைவரை தொடர்ந்து அங்கே ஒரு பாணதீர்த்தம் என்றும் குற்றாலம் என்றும் அருவிக்கும்மாளம்!

தென்மேற்குப்புறமோ கேரளமாய் விரிந்து சென்றபடியே இருந்தது. வடபுறமோ கூமாச்சி மலைத்தொடராய் நீண்ண்ண்டபடியே இருந்தது!

`இந்திரகிரி’, `ஏமகிரி’, `வருணகிரி’, `குபேரகிரி’ என்று இவற்றினிடையே நான்கு மலைகள். இதன் நடுவில் கங்காரு வயிற்றுக்குட்டிபோல் துருத்தலாக நான்கு மலைகள். இவற்றுக்கு `சிவகிரி’, `பிரம்மகிரி’, `விஷ்ணுகிரி’, `சித்தகிரி’ என்று பெயர். இந்த மலைகளையே சித்தர்கள் உலகம், `சதுரகிரி’ என்கிறது. ஒருபடி மேலே போய் இந்த நான்கு மலைகளும் நான்கு வேதமாகத் திகழ்வதாகவும் கருதுகிறது.

மலைகள் முழுக்க மூலிகைச்செடிகளின் பிரவாகம். `முசுமுசுக்கை, ஆடாதோடை, பெரும்தும்பை, பிரம்மதண்டு, சதை ஒட்டி, ஆடு தீண்டாபாளை, ஆவாரை, ஆத்தி, கரும்பூலா, செந்தொட்டி, பற்படாகம், விஷ்ணுக்ரந்தி, கன்னுபிளை, குமுலம், நீர்முள்ளி, நீலி, பீநாரி, கண்டங்கத்தரி, குன்றுமுத்து, நிலவாகை, நாயுருவி என்று ஒரே மூலிகைக்கூட்டம்! இதன் வேரிலிருந்து தண்டு, இலை பூ, காய், பழம் என எல்லாமே மருந்துதான்.

இறையுதிர் காடு - 44

இவற்றுக்கு நடுவே விண்முட்ட உயர்ந்து நிலாவைப் பிடிக்க எத்தனித்தபடியே இருக்கும் விருட்சங்கள் வேறு... `வெள்ளை வேம்பு, ஜோதி விருட்சம், கருநெல்லி, உரோமவிருட்சம், சுணங்க விருட்சம், ரத்தப்பலாசு, ஏரழிஞ்சி, சாயா விருட்சம், கொஞ்சி, உதிர வேங்கை, கைவளாக்கை, கருக்குவாச்சி, ஊக்குணா, பிரம்மதரு, தொனியா, பிராய், கெட்டிவஞ்சி, கருமருது, வசுவாசி, சுரபுன்னை, தேற்றா, கடுக்காய். பாதிரி, அகில், பாற்பட்டை, சோமவிருட்சம், சேங்கொட்டை, கருநாரத்தை, கணையெருமை, சோகி, அருநெல்லி, தில்லை விருட்சம், வெண்ணாவல், வேர்ப்பலா, கல்லத்தி, தேவதாரு, மருதம், வன்னி, குங்கிலியம், எட்டி, ஆச்சா, தும்புலா, ஆலம், பலுனி, பாற்சொரி, பாற்பட்டை’ என்று நாற்பத்தெட்டு விதமான பெயர்களில் விளைந்து நின்ற அந்த மலைவெளியில், அசுரர்கள் தாங்கள் விளையாடும்போது தூக்கி எறிந்தாற்போல் கிடக்கும் பாறைக்கற்கள் நடுவில் கீறிக்கொண்டு ஓடும் நீர்ப்பாம்பாய் ஓடைகள்!

இந்தப் பாறைகள் விழுந்து கிடக்கும் விதத்தாலேயே குகைகள் பல உருவாகி, அவற்றின் இடவாகுக்கு ஏற்றாற்போல தேனீக்கள் கூடு கட்டியிருக்க, அவற்றைத் தேடியபடி கரடிகள் சிலவும் அலைந்துகொண்டிருந்தன.

சில இடங்களில் நீர்வெளியானது அகன்று சமதளத்தில் சில நூறு அடிகள் ஓடி, பின் பாறை இடுக்குகளில் புகுந்து தடதடத்துக் கீழிறங்கிச் சென்றபடி இருக்க, இந்தச் சமதள நீர்ப்பரப்பில் யானைக் கூட்டம் ஒன்று உருண்டு புரண்டு நீர் பீய்ச்சிக்கொண்டும், பிளிறிக்கொண்டும் கிடந்தது. பெரு யானைகளைவிட குட்டிகளிடம் கும்மாளம் அதிகம் தெரிந்தது.

அதன் ஒரு முனையில் புலி ஒன்று சிணுங்கும் கண்களோடு நாக்கை நனைத்தால் போதும் என்பதுபோல் தன் உறுதியில்லாத, துவண்ட ரோஜா நிற நாக்கை, ஓடும் நீர்ப்பரப்பின் மேல் தொட்டுத் தொட்டு எடுத்தபடியே யானைக் கூத்தைப் பார்த்தபடி இருந்தது.

எங்கே போகிறோம், எதற்குப் போகிறோம் என்கிற இலக்கே இல்லாதபடிக்கு ஒரு மலைப்பாம்பு நீண்ட தன் குழலுடம்பை அந்த மலைத்தலத்தில் நெளித்தபடி இழுத்துச் சென்றுகொண்டிருந்தது.

அந்த மலைவெளியெங்கும் மார்பு பருத்த மாவீரனால்கூடத் தாங்கவொண்ணா அளவில் பனிக்கலப்பு கொண்ட கூதல் காற்று வீசியபடி இருக்க, `வாலாட்டி, மரங்கொத்தி, கொவ்வைக் கிளி, சிறுகுருவி, சிங்காரி, பட்டு மைனா, வண்ணம் பாவி’ என்கிற பறவைக் கூட்டத்தின் குறுக்கோட்டங்கள் மலைத்தலம் முழுக்கக் கண்ணில்பட்டன.

இறையுதிர் காடு - 44

சர்வத்தையும் ரசிக்க இரு கண்கள் மட்டுமே என்பது ஒருவகை தண்டனைதான்! ஆனபோதிலும் அந்த மலையழகை ரசித்தபடியே விண்வழியே சிறகின்றிப் பறந்து அல்லது மிதந்து வந்த போகர் பிரான், புகை எழும்பியபடி யிருக்கும் `அகத்தியச் சருக்கம்’ என்னும் வில்வமும் வேம்பும் வேங்கையும் ஒதியமும் மிகுந்து கிடக்கும் இடத்திற்குச் சென்று சேர்த்தார்.

அந்தச் சூழல் முழுக்க நல்ல வாசப்பெருக்கு! கூடவே `நமச்சிவாயம் நமச்சிவாயம்’ என்கிற நாம ஒலி!

நடக்க நடக்கவே பல ஒற்றைநாடிச் சித்தர்கள் கண்ணில்பட்டனர், கோவணங்கூட பற்றின் மிச்சம் என, அதையும் துறந்து ஓரங்குலத்திற்குச் சுருங்கிவிட்ட தங்களின் இனக்குறி தெரியாதபடி அதைத் தங்கள் சடைமுடிகொண்டு மறைத்தபடி போகர் பிரானைப் பார்த்துப் புன்னகைத்தனர்.

அவர்கள் பலரின் கண்களில் ரசாயனத் துலக்கல்போல ஒரு புத்தொளி! புருவங்களில் அரிவாள்போல் வளைந்த முடிக்கூட்டம். தாடியில் வெள்ளியானது முடியாக வளர விரும்பியதுபோல் ஒரு பெரும் நீட்டம்.

போகரும் இணக்கமாய்ச் சிரித்தபடியே அகத்தியர் பெருமான் அமர்ந்திருக்கும் குகைக்கு முன் சென்று நின்றார். குகைக்கு வெளியே நசுங்கிய வட்டங்கள் போன்ற பல வடிவங்களில் பாறைகள்! அவற்றின்மேல் நிஷ்டையிலும், நீவலிலுமாய் பல சித்த புருஷர்கள். அவர்களில் கருவூராரும் ஒருவராய் இருந்து எழுந்து நின்று, ``வந்தனம் வந்தனம்’’ என்றார். அவர் சொன்ன வந்தனத்தால் கலைந்த கொங்கண சித்தர் ``அடடே போகரா... வருக வருக’’ என்றார். கொங்கணரின் குரல் கோரக்கர், பிரம்மமுனி உள்ளிட்ட பலரை போகரை நோக்கித் திருப்பியது.

அதற்குள் குகைக்குள்ளிருந்து அகத்தியரின் சீடர்கள் என்று வந்த இருவர் ``வந்தனாதி வந்தனம் போகர் பிரானே... தங்களைப் பெருமான் அழைத்து வரப் பணித்துள்ளார்’’ என்றனர்.

புன்னகை மாறா முகத்தோடு குகைக்குள் நுழைந்தார் போகர். உள்ளே வெளிச்சம் நிறைந்த ஒரு பெருவெளி... மூலிகைப் புகையின் மந்தமான வாசம்... அவ்வளவு குளிரில்லாத ஓர் இள வெப்பம். சற்றே மட்டமான பாறை ஒன்றின் மேல் பத்மாசனத்தில் காட்சி தந்தார் அகத்தியர்.

``தமிழ்முனிக்கு என் தண்ணார்ந்த வந்தனங்கள்’’ என்ற போகரைப் பார்த்த அகத்தியரும், ``அந்தத் தமிழுக்கே அணியாய், உயிராய் விளங்கும் முருகனை பாஷாணத்தில் படைக்க இருக்கும் உங்களுக்கு என் ஆசிகள்’’ என்றார் அகத்தியர்.

``ஆசிகளுக்கு என் நன்றிகள்...’’

``மகிழ்ச்சி போகரே... பணிகள் எந்த அளவில் உள்ளன?’’

``ஒன்பது பாஷாணங்களுக்கு ஒன்பது சீடர்களைத் தேர்வுசெய்து அவர்கள் வசம் பாஷாணத்தைச் சேர்த்து, அது ஒளியுடம்பை என்ன செய்கிறது என்கிற ஆய்வு நடந்தபடி உள்ளது...’’

``நல்ல முன்னெடுப்பு... போகட்டும்... பாஷாணங்களால் முருகனின் ஸ்தூல உடலை உருவாக்க, பிரத்யேக காரணங்கள் ஏதுமுண்டா?’’

``பாஷாணம் என்னும் விஷம் அதை உண்ணும் சமயம் உயிராற்றலுக்கு எதிரானதாக, ஓர் உயிரைச் செயலிழக்கச் செய்வதாக உள்ளது... அதே சமயம் பாஷாணம் என்பது தனித்த நிலையில் பெரும் இயக்கத்திறன் கொண்டதாக உள்ளது. ஓர் இயக்கத்திறன் இன்னோர் இயக்கத் திறனை அதாவது உயிராற்றலை ஏன் ஸ்தம்பிக்கச் செய்கிறது... இது ஓர் ஆச்சர்யமல்லவா?’’

``ஆம் ஆச்சர்யம்தான்...’’

``அதே சமயம் பாஷாணங்கள் பல வகைகளாகவும், அவை ஒன்றோடொன்று கலக்கும்போது அதன் வினைப்பாடு புதிய இயக்கவிசை உடையதாகவும் மாறுகிறது.’’

``இது பிரம்ம சிருஷ்டியின் விநோதம்.’’

``அந்த மாற்றத்தைக் கண்டறிந்து அதை மருந்தாக மாற்றுவதே என் நோக்கம்...’’

``இந்த மருந்து எனும் சொல் எப்படி உருவானதென்று தெரியுமா?’’

``தமிழுக்கு, `அகத்தியம்’ என்ற இலக்கண நூலையே எழுதிய தங்களிடம் நான் எதையும் அறியவே விரும்புகிறேன். இம்மட்டில் நான் அறிந்தது என்று ஒன்று பெரிதாக இல்லை.’’

``தங்களிடம் `நான்’ என்கிற ஆணவம் அடங்கி விட்ட ஓர் ஆனந்தநிலையைக் காண்கிறேன். இம்மட்டில் நான் உணர்ந்ததைக் கூறுகிறேன். தமிழில், `மறந்து’ என்று ஒரு சொல் உண்டு. அதன் பொருள், `நாம் அறியப் பெற்ற ஒன்றை இழந்துவிடுவது’ என்பதாகும். இந்த மறதி தற்காலிகமானதாக இருந்து, ஞாபகம் மீண்டும் வரலாம். முற்றாகவும் மறந்து, ஞாபகம் இல்லாமலும் போகலாம். மொத்தத்தில் அறிந்த ஒன்றை இழந்துவிடுவது என்பதே `மறந்து’ எனும் சொல்லுக்கான பொருள். இதில் ஓர் எழுத்து சற்றுத் திரிந்து அதாவது `ற’கரம் `ரு’கரம் என்று மாறிவிடும்போது `மறந்து’, `மருந்து’ என்றாகிவிடுகிறது. ஆமல்லவா?’’

``ஆம் பெருமானே...’’

``மொத்தத்தில் இழந்துவிட்டதை அல்லது இழக்கவிருப்பதை நாம் திரும்ப அடைவதையே மருந்து குறிப்பிடுகிறது... ஆம்தானே?’’

``ஆமாம் பெருமானே...’’

``இம்மட்டில் நாம் மருந்தால் அடைவது ஆரோக்கியம் அல்லது ஆதர்ச சக்தி. அதுவுமில்லையேல் இழக்கவிருந்த உயிர்... இம்மூன்றையும் பெற்றுத்தருவதாய் மருந்துதானே உள்ளது?’’

``உண்மை... முக்காலும் உண்மை.’’

இறையுதிர் காடு - 44

``ஓர் எழுத்து மாற்றம் எப்பேர்ப்பட்ட பொருள் மாற்றத்தையே அளித்துவிடுகிறது என்பதை கவனித்தீரா..?’’

``ஆம்... இறைமொழி, இனியமொழி என்றெல்லாம் தமிழைச் சொல்வதன் பொருளை உடல், உயிர், உள்ளம் என்னும் மூன்றாலும் உணர்வது என்பது உண்மையில் பெரிய பாக்கியமல்லவா?”

``மருந்து என்று சொன்னவுடன் எனக்குள் இப்படிப் பல எண்ணங்கள். முருகப்பெருமான் பிறப்பே ஒரு மருந்துதானே... அசுரனான சூரபத்மனால் தேவர்கள் உலகமே அல்லல்பட்டபோது, அந்த அல்லல் போக்கும் மருந்தாக எம்பெருமானின் நெற்றிக்கண்ணின் சுடரிலிருந்து பிறந்த பிள்ளையல்லவா இந்த முருகன்...’’

``அந்த லிங்க வடிவோடு நான் விரைவில் இங்கு வருவேன். அகத்தியர் பெருமானே அதன் முதல் வழிபாட்டைத் தொடங்கி வைத்து ஆசி கூற வேண்டும்.’’

``மட்டுமா... முற்பிறப்பில் பூரணமான பிரம்ம ஞானி... எல்லோரும் பிள்ளைவரம் பெற்றுப் பிள்ளையை அடைவார்கள். ஆனால் முருகனோ, தானே வரம் தந்து தானாய் முன்வந்து உதித்த பிள்ளையல்லவா?’’

``ஆம்... நன்கு சொன்னீர். முருகன் என்னும் மருந்து தேவர்கள் பொருட்டு தானாக அல்லவா வந்தது?’’

``அப்படி தேவர்கள் பொருட்டு நெற்றிச் சுடரிலிருந்து வந்தவனைத்தான், மாந்தர்கள் பொருட்டு நான் பாஷாணத்திலிருந்து பெற விரும்புகிறேன். அதிலும் நவசக்திகளோடு பெற விரும்புகிறேன்... அதற்கே நவபாஷாணங்கள்...’’

``நவகோள்களால் இயக்கப்படும் மனித உயிர்களுக்கு அந்தக் கோள்களின் அம்சமான பாஷாணங்களாலேயே புத்துயிர் அளிப்பதுதான் தங்கள் நோக்கம் என்று சொல்லுங்கள்...’’

``ஆம் பெருமானே..! கதிரவன் தன் உஷ்ணத்தால் மேனி தீண்டுவதுபோல், காற்று தன் குளிர்ந்த தன்மையால் தன்னை உணர்த்துவதுபோல், வாசமானது விழிகளுக்குப் புலனாகா விட்டாலும் நாசிக்குப் புலனாகிப் பரவசம் அளிப்பதுபோல், இந்த நவபாஷாண முருகன் `தண்டபாணி’ என்னும் திருநாமத்தோடு தன்னைக் காண்பவர் மேனியில் பல அரிய வேதியியல் மாற்றங்களைச் செய்யப் போகிறான்.’’

``மேலான இச்செயலுக்கு மனோன்மணியே உறுதுணையாக இருக்க அனைத்தும் நலமாக முடியும். கவலை வேண்டாம். உமக்கு எமது பூரண நல்லாசிகள்!’’

``மகிழ்வும் நன்றியும் பெருமானே!’’

``உமது மருந்து ஒரு புனிதத்தலமாகவே ஆவதாக... இதனால் காலத்தால் நரை திரை மூப்பை வென்று நீர் சிந்திக்கப்படுவீராக..!’’

- அகத்தியர் வாழ்த்தியருளிட, ஏனைய சித்தர் பெருமக்களும் அங்கு ஒன்றுகூடி வாழ்த்தியதோடு, ``போகர் பிரானே... பொதினியில் தண்டபாணித் தெய்வம் ஆலயம் காணும் சமயம் சித்தநெறி உயிர்த்துடிப்போடு திகழும் வண்ணம் அதன் தொடர்போடு கூடிய ஒரு செயலைச் செய்திட வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம்’’ என்று கருவூராரும் கொங்கணரும் ஒரு சேரக் கூறினர்.

``தாங்கள் கூற வருவது எனக்கும் புரிகிறது. நிலையாக ஓர் ஆலயம் உருவாகப் போவதைப்போலவே ஒரு நடமாடும் ஆலயத்தையும் நான் உருவாக்கம் செய்ய இருக்கிறேன். எம்பெருமானாகிய அந்த ஈசன், லிங்க வடிவில் அந்த நடமாடும் ஆலயத்து தெய்வமாக சித்தநெறியை விளங்கச் செய்வான். சித்தநெறியால் இந்த மலையும், மலையின் காடும், காட்டின் விருட்சங்களும் என்றும் பொலிவோடு திகழும்...’’ என்றார் போகரும்.

``அட... நாங்கள் விருப்பத்தைத்தான் கூறினோம். ஆனால் அது ஒரு செயல் வடிவாகவே உங்களிடம் காணப்படு கிறதே... மகிழ்ச்சி... மிக்க மகிழ்ச்சி...’’

``அந்த லிங்க வடிவோடு நான் விரைவில் இங்கு வருவேன். அகத்தியர் பெருமானே அதன் முதல் வழிபாட்டைத் தொடங்கி வைத்து ஆசி கூற வேண்டும்.’’

- போகரின் கூற்றைக் கேட்டு அகத்தியர் பொலிந்த புன்னகையால் அதற்குச் சம்மதம் தெரிவித்திட, போகரும் மனதுக்குள் கருமார்கள் இருவரும் செய்யத் தொடங்கியிருக்கும் நவபாஷாண லிங்க வடிவை ஒரு விநாடி தன் மனக்கண்ணில் எண்ணிப் பார்த்தார்!

இறையுதிர் காடு - 44

கன்னிவாடி குகைக்குள் கருமார்கள் தேன் மெழுகாலேயே அந்த லிங்கத்தை அழகாய் வடிவமைத்து, அதன்மேல் களிமண்ணையும் பூசி அதைத் தீயிலிட்டு வாட்டியபடி இருந்தனர்.

தீநாக்குகளிடையே மண்ணாலும் மெழுகாலும் ஆன அந்த லிங்கம், `அண்டம் நான், அகிலம் நான், சர்வமும் நான்’ என்பதுபோல் ஜொலித்துக் கொண்டிருந்தது!

ஒரு கர்ட்டன் பின்னால் ஒளிந்தபடி உடம்பை வளைத்து நடக்கப்போவதை கவனிக்க இருந்தவள், பாரதி அழைக்கவும் ஓடி வந்தாள்.

இன்று அரவிந்தன் தான் எழுதியிருந்த எண் களைக் காட்டியவன், ``இதுல `ச’ங்கற எழுத்தோட மதிப்பு 2. `ங்’கற எழுத்தோட மதிப்பு 6. அதேபோல `க’ங்கற எழுத்தோட மதிப்பும் 2 தான். அடுத்து `ர.’ இதோட மதிப்பு 5. அப்புறம் `ம்.’ இதோட மதிப்பு 1. ஆக 26251.

இந்த மதிப்பை இந்தப் புத்தகத்தைப் படிச்சுக் கணக்கு போட்டுக் கண்டுபிடிச்சேன். `கடபயாதி’ங்கற இந்தப் புத்தகம் ஆயிரம் இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னால இருந்த ஒரு விநோதமான கணித முறை’’ என்று சொல்லி நிறுத்தியவனாக பாரதியையும், சாந்தப்ரகாஷையும், சாருபாலாவையும் ஆழமாகப் பார்த்தான்.

``அரவிந்தன்... உங்க விளக்கமெல்லாம் அப்புறம். இப்ப இந்த 26251ங்கற எண்ணைக்கொண்டு என்ன செய்யப் போறீங்க?’’ - மிக ஷார்ப்பாகக் கேட்டாள் பாரதி.

``இந்த மரப்பெட்டியில இந்த எழுத்துகளுக்குக் கீழே இருக்கற துவாரத்துக்குள்ள முடுக்கப்பட்டு, பூட்டப்பட்ட ஸ்க்ரூக்கள் இருக்கு. அதை வழக்குல `திருகாணி’ன்னு சொல்வாங்க. அந்தத் திருகாணிகள்தான் லாக் சிஸ்டமா இருக்கு. அந்தத் திருகாணிகளை முதல்ல அதோட முனை உள்ள இருக்கற லாக்கிங் சிஸ்டத்துக்குக் காரணமான உள்பரப்புல போய் முட்டற அளவு நாம திருப்புளியால திருகி முடிச்சிடணும். பிறகு `ச’ங்கற எழுத்துக்குக் கீழே இருக்கற துவாரத்துல இரண்டு முழுச் சுற்று மட்டும் பின்புறமாத் திருப்பணும். அதேபோல `ங்’கற துவாரத்துல ஆறு முழுச் சுற்று, திரும்ப `க’வுல இரண்டு முழுச் சுற்று, `ர’வுல ஐந்து, ஒண்ணுல ஒரு சுத்துன்னு சுத்திட்டுத் திறக்க முயற்சி செய்தா திறந்துடும்.’’

``அப்ப என்ன பேச்சு... முதல்ல திறங்க...’’ - பாரதி மிகவே வேகமானாள். அரவிந்தனும் திருப்புளியை எடுத்தவனாக முருகன் படத்தைப் பார்த்தான். இதற்குமேல் இந்தப் பெட்டியோடு அல்லாட முடியாது என்பதுபோல் பார்த்தவன், துவாரங்களுக்குள் திருப்புளியை நுழைத்துத் திருகாணியின் தலைப்பாகத்து காடியில் திருப்புளியின் கூரிய, அதே சமயம் தட்டையான பரப்பைப் பதியச் செய்து அவ்வளவு திருகாணிகளையும் முதலில் முட்டுமளவு திருகி முடித்தான். பின், பெயருக்குக் கீழுள்ள எழுத்துகொண்ட துவாரங்களில் அவன் கணித்த எண்ணிக்கைக்கு ஏற்பத் திருகினான்.

இறுதியாக `ம்’ என்ற எழுத்துக்கான ஒரே ஒரு சுற்றைத் திருகி முடித்த நொடி, பெட்டி பட்டென்று திறந்து கொண்டதுபோல் ஒரு சப்தம். அதே நொடி சாருபாலாவும் முகம் மாறியவளாக வாந்தி வந்துவிட்ட அறிகுறிகளோடு வேகமாய்க் கைகளை வாய்மேல் வைத்துப் பொத்திக்கொண்டவள் `உவ்வேவ்..!’ என்று சப்தமிட்டாள்! அரவிந்தன் கவனமும் வேகமாய் அவள்மேல்தான் சென்றது. சாந்தப்ரகாஷ் வேகமாய்ப் புரிந்துகொண்டு ``என்ன சாரு, திரும்ப வாந்தியா... வெயிட்... வெயிட்... ஆங் பாரதி மேடம், இங்கே பாத்ரூம் எங்க இருக்கு?’’ என்று வேகமாய்க் கேட்க, பாரதியும் மிக வேகமாய் ``பானூ...’’ என்றாள் பலத்த குரலில்.

ஒரு கர்ட்டன் பின்னால் ஒளிந்தபடி உடம்பை வளைத்து நடக்கப்போவதை கவனிக்க இருந்தவள், பாரதி அழைக்கவும் ஓடி வந்தாள்.

``மேடம்...’’

``முதல்ல இவங்களை பாத்ரூமுக்குக் கூட்டிக்கிட்டுப் போ...’’

``யெஸ் மேடம்...’’

- பானு ஆமோதிப்பதற்குள்ளாகவே மூடிய வாயை மீறிக்கொண்டு சில திவலைகள் தெறித்து சாருவின் மார்பில்பட்டு கெட்ட வாடையும் வீசத் தொடங்கிவிட்டது.

‘``கமான் கோ ஃபாஸ்ட்...’’

``தப்பா எடுத்துக்காதீங்க. என் மனைவி இப்ப கன்சீவ் ஆகியிருக்கா... இப்ப மூணு மாசம்...’’ என்று விளக்கமளித்தபடியே பானுவோடு சாந்தப்ரகாஷ் சாருவைப் பிடித்தபடி ஓடினான்.

ஒரு மரம்போல் நின்று பார்த்தபடியே இருந்த முத்துலட்சுமி மட்டும் நெருங்கி வந்து, ``பெட்டி திறந்துடுச்சா?’’ என்று ஹஸ்கி வாய்ஸில் கேட்டாள்.

அரவிந்தன் அடுத்த நொடி பெட்டிமீது பார்வையைப் பதித்தான். ஒட்டிக்கொண்டிருந்த மேல் மூடியும், அது படியும் பெட்டியின் மேல் பாகத்துக்கும் நடுவில் ஓர் எறும்பு புக முடிந்த அளவில் இடைவெளி உருவாகியிருந்தது!

``கமான் அரவிந்தன்... அந்த பானு திருட்டுத்தனமா பார்க்கறது தெரிஞ்சுதான் அவளைக் கூப்பிட்டு பாத்ரூம் பக்கம் அனுப்பினேன். கமான், திறந்துகிட்ட மாதிரிதான் தெரியுது. ஓப்பன் பண்ணுங்க முதல்ல...’’ என்று படபடக்கத் தொடங்கிவிட்டாள் பாரதி.

அரவிந்தனும் தொட்டுத் தூக்க முயன்றான். மேல் பாகம் ஓர் அங்குலம்வரை எழும்பி அதற்கு மேல் எழும்பாமல் சிக்கிக்கொண்டதுபோல் நின்றது.

``திறந்துடிச்சி... திறந்துடிச்சி..!’’ என்று உற்சாகமானாள் பாரதி. அரவிந்தனிடமும் படபடப்பு. காதின் கிருதாவை ஒட்டி வியர்வைப் பாம்பு. அப்படியே பெரிதும் முயன்று திரும்ப எத்தனித்தான்!

இப்போது அங்கே அவர்கள் இருவரோடு முத்துலட்சுமி மட்டும்தான் இருந்தாள். அவளும் மிக நெருக்கமாய் வந்து நின்றுகொண்டாள்.

``தம்பி திறப்பா சீக்கிரம்... அப்படி என்னதான் உள்ளே இருக்குன்னு பார்த்துடுவோம்’’ என்றாள்.

அரவிந்தனிடமும் அசுரப் பிரயாசை. திருப்புளியைக்கொண்டு நெம்பி அழுத்தம் கொடுக்கவும் இறுதியாக ஒருவித சப்தத்தோடு திறந்துகொண்டது. அடுத்த நொடி உள்ளிருந்து ஒரு சிறு கருவண்டு `ரொய்ங்ங்...’ என்கிற சப்தத்துடன் பறந்து வெளியேறியது.

உள்ளே காய்ந்த இலைச்சருகுகள்! அதனுள்ளிருந்துதான் அந்த வண்டும் பறந்து சென்றது. அது எப்படி காற்றுக்கூடப் புக முடியாத அந்தப் பெட்டிக்குள் சென்றது அல்லது வாழ்ந்தது? தொடக்கமே வியப்பைத் தர அரவிந்தன் அந்த இலைச்சருகுகளை அள்ளி எடுத்தான்.

பாத்ரூமில் சாரு பெரிதாய் வாந்தி எடுத்து முடித்திருக்க, சற்றுத் தள்ளி நின்றபடி இருந்த பானுவின் முகத்தில் ஓர் இனம்புரியாத படபடப்பு.

`சரியாகப் பெட்டியைத் திறக்கப்போன அந்த நேரம் பார்த்துத்தானா இவளுக்கு வாந்தி வர வேண்டும். அதற்கு என்னைத்தான் கூப்பிட வேண்டுமா என்ன?’

வாசலில் நின்றபடி இருந்த வாடகை காரின் பின்னால் சாருவின் உடலைக் கிடத்தி அப்படியே ஏறிக்கொள்ள காரும் புறப்பட்டது.

பானு அலமலப்போடு வெறித்தாள். சாந்தப்ரகாஷ் தன் கர்ச்சீப்பால் அவள் முகத்தைத் துடைத்தபடி, ``நத்திங் டார்லிங்... நல்லா இழுத்து மூச்சுவிடு’’ என்று சொன்னான்.

``சந்தா... ஐ வில் டேக்கேர்... நீ போய் அந்தப் பெட்டியைப் பார். அது நம்ம பெட்டி... பாழாப்போன வாந்தி இப்பத்தான் எனக்கு வரணுமா? உவ்வ்...!’’ என்று திரும்ப எக்கியவள் சுதாரித்து, ``கோ மேன்...’’ என்று கத்தினாள்.

``நோ பிராப்ளம்... அவங்க என்ன ஓடியா போயிடப் போறாங்க. நீ முதல்ல ஃப்ரீயாகு...’’ என்றான் சாந்தப்ரகாஷ்.

``அப்ப நீங்க நல்லா ரெஃப்ரெஷ் பண்ணிகிட்டு வாங்க...’’ என்று பானு செல்ல முயன்றாள். அதுவரை நின்று பேசிக்கொண்டிருந்த சாருவிடம் சட்டென்று ஒரு கிளுகிளுப்பு.

``சந்தா சம்திங் ராங்... எனக்குத் தலை சுத்துது...’’ என்றபடியே அவன் மேல் விழுந்தாள்.

``மேடம் ஹெல்ப்...’’ என்று, விலகிப்போன பானுவை சாந்தப்ரகாஷும் திரும்ப அழைத்தான்.

``ஐயோ என்னாச்சு?’’

``என்னன்னு தெரியலை. மயக்கமாயிட்டா... இப்படி ஆனா உடனடியா ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணச் சொல்லியிருந்தார் டாக்டர். லெட் வி கோ தேர்...’’ என்று அவளைத் தோளில் போட்டுத் தூக்கிக்கொண்டு சாந்தப்ரகாஷ் அங்கிருந்து ஹால் நோக்கிச் செல்ல, பானுவும் ஒரு கையால் பிடித்தபடி உடன் வந்தாள்.

ஹாலில் பெட்டி மூடப்பட்ட நிலையிலிருக்க அருகில் அந்த இலைச்சருகுகளும் இல்லை.

``என்னாச்சு?’’

``முதல்ல வாந்தி. இப்ப மயக்கம். நான் இம்மீடியட்டா டாக்டரைப் பார்க்கணும். ஐ ஆம் சாரி. உங்களை நான் தொந்தரவு பண்ணிட்டேன். பை த பை பெட்டியைத் திறந்துட்டீங்களா?’’ என்று தோளில் சாருபாலாவோடு அந்த நிலையிலும் கேட்டான் சாந்தப்ரகாஷ்.

``ஐ வில் ட்ரை... இன்னும் முழுசாத் திறக்கலை...’’

``வாவ்... என்ன ஒரு விபூதி வாசனை...’’

``எல்லாம் இதுலேருந்துதான்...’’

``உங்கள பெக் பண்ணிக் கேட்டுக்கறேன். இதை எங்ககிட்ட ஒப்படைச்சிடுங்க. நீங்க எவ்வளவு பணம் கேட்டாலும் தர்றேன்... இங்கே இப்போ இப்படி ஆகும்னு நான் நினைக்கலை... நான் இப்போ போயிட்டு பிறகு வர்றேன்’’ என்று அவளைச் சுமந்தபடியே வாசல் நோக்கி நடந்தான். அரவிந்தனும் உடன் சென்றான்.

இறையுதிர் காடு - 44

``மிஸ்டர் சாந்தப்ரகாஷ்... முதல்ல இவங்க உடம்பை கவனியுங்க. இந்தப் பெட்டி பத்தின கவலையை விடுங்க’’ என்று, அவர்கள் இருவரும் செல்வதுதான் நல்லது என்பதுபோல் நடந்துகொண்டான்.

வாசலில் நின்றபடி இருந்த வாடகை காரின் பின்னால் சாருவின் உடலைக் கிடத்தி அப்படியே ஏறிக்கொள்ள காரும் புறப்பட்டது.

அந்த நொடி `அப்பாடா...’ என்றிருந்தது அரவிந்தனுக்கு. பானு பார்த்துக்கொண்டே இருந்தாள். அரவிந்தன் திரும்பப் பெட்டியருகே வந்தான்.

``பாரதி... நாம ரூமுக்குப் போய் என்ன ஏதுன்னு பார்ப்போம்...’’ என்றபடியே பெட்டியை ஒரே தூக்காய்த் தூக்கினான்.

பானு முகத்தில் பலத்த ஏமாற்றம்.

``பானு... நீ போய் உன் வேலையைப் பார்... வாங்க அரவிந்தன்...’’ என்று பாரதியும் அங்கிருந்து அவள் அறை நோக்கி ஓடினாள்.

`இவர்கள் திறந்து பார்த்துவிட்டனர்... உள்ளே மதிப்புமிக்கதாய் ஏதோ இருக்கிறது... அதை யாரும் பார்ப்பதை பாரதி விரும்பவில்லை’ என்று மளமளவென்று கணக்கு போட்ட பானுவிடம் பெரும் படபடப்பு.

முத்துலட்சுமியோ பூஜை அறையில் விளக்கு ஏற்றிக்கொண்டிருந்தாள்.

`இங்கே என்னதான் நடந்தது... இது விளக் கேற்றும் நேரமில்லையே..?’ பானு சலனத்தோடு நடக்கையில் திரும்பவும் அவள் செல்போனில் அழைப்பொலி.

அந்த டெல்லி ஜோசியர்தான்...

``பானு... என்னாச்சு... திறந்துட்டாங்களா?’’

``திறந்தாச்சுங்க ஜீ. ஆனா என்னாலதான் எதையும் பார்க்க முடியலை. அந்த அரவிந்தனும் பாரதி மேடமும் ஏதோ பிளான் பண்றாங்க. இப்போ பார்த்து, `அந்தப் பெட்டி எங்க சொந்தம்’னு சொல்லிக்கிட்டு வந்தவங்களும் வாந்தி மயக்கம்னு வெளியே போயிட்டாங்க...’’

இறையுதிர் காடு - 44

``அப்படியா?’’

``ஆமாம் ஜீ... இப்பகூட பெட்டியோட தனியா ரூமுக்குள்ள போயிட்டாங்க. உள்ளே நிச்சயம் பெருசா ஏதோ இருக்கு ஜீ...’’

``அதுல எது வேணா இருந்துட்டுப் போகட்டும். `சொர்ண ஜால மகாத்மியம்’னு ஒரு ஏட்டுக் கட்டு நிச்சயம் இருக்கும். அது எனக்குக் கிடைச்சா போதும். கூடவே `த்ரிகால பலகணி’ன்னு ஒரு ஏட்டுக்கட்டும் இருக்கும். இந்த இரண்டும் எனக்குக் கிடைச்சா நான்தான் இந்த உலகத்துல குபேரன்...’’

``என்னென்னவோ சொல்றீங்க... எனக்குத்தான் என்ன பண்றதுன்னு தெரியலை...’’

``நீ எதுவும் பண்ண வேண்டாம். நான் வர்றேன். அவங்களை எப்படிக் கட்டிப் போடறேன்னு பார்...’’ - டெல்லி ஜோதிடர் நந்தாவின் குரல் அடங்கியது. பானுவிடமும் அதிர்வு!

அறைக்குள்!

மீண்டும் பெட்டியை அரவிந்தன் திறந்து உள்ளே பார்த்தபோது அந்த ஜோதிடன் சொன்ன ஏட்டுக்கட்டுகள்... அதன் நடுவில் அந்த லிங்கம்! போகரின் அதே நீலகண்ட பாஷாண லிங்கம்..!

- தொடரும்