மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இறையுதிர் காடு - 45

இறையுதிர் காடு
பிரீமியம் ஸ்டோரி
News
இறையுதிர் காடு

அன்று தீ நாக்குகள் இடையே சுடப்பட்டுக்கொண்டிருந்த அந்த லிங்க உருவை, பெரும் உலோக இடுக்கியால் இறுக்கிப் பிடித்து, எல்லாப் பக்கங்களிலும் சம அளவு வெப்பம்படும்படி செய்வதில் செங்கான் மும்முரமாய் இருந்தான்.

ழிமுத்து மாட்டுத்தோலால் ஆன துருத்தியைக் கொண்டு காற்றை மடக்கிப் பிடித்து அது தீக்குழியில் சீறி வெளியேறும்படி செய்தபடி இருந்தான்.

இருவருக்கும் அந்த வெப்பம் இதமானதாக இருந்தது.

இருவருக்குள்ளேயும் `நம்மைச் செய்த கடவுளை நாமும் செய்கிறோம்' என்றும் ஒரு எண்ணம். எப்போதும் இதுபோன்ற உக்ரமான பணியின்போது பேசிக்கொண்டோ இல்லை பாடிக்கொண்டோ வேலை செய்தால் அலுப்போ களைப்போ தெரியாது.

"செங்கான்... இந்தச் சாமி இப்ப நம்மண்ட இந்தப் பாடு படுது... ஆனாலும் நாளைல இருந்து இதுக்கு தினம் அபிஷேகமும், பூசையும்தான்... இல்லியா?" - என்று ஆழிமுத்து ஆரம்பித்தான்.

"பொறவு.. பூட்டி வைக்கவா சாமி? ஏத்திக் கொண்டாடத்தானே?"

"எமட்டமோ சாமிகள நாம் செய்திருந்தாலும் எனக்கென்னவோ இந்தச் சாமி ரொம்ப விசேசமா மனசுக்குப் படுது. உனக்கு அப்படி ஏதும் தோணலுண்டா?"

- அவர்கள் இருவரும் தங்களுக்குள் தங்கள் பிராந்திய வழக்கில் பேசுகையில் ஒருவகை உறுமல் சப்தம் நடுவில் கேட்டது. காற்றுத் துருத்தி தான் சப்தமிடுகிறது என்று நினைத்து அதை நிறுத்தவும் மேலும் பெரும் சப்தம். இருவருமே ஒருசேர திரும்பி குகை வாயில் பக்கம் பார்த்தபோது நெஞ்சம் திக்கென்றானது. இமைகளிரண்டும் துடிப்பற்று விரிந்து அப்படியே நின்றுபோனது.

புலி
புலி

அவர்கள் பார்த்த குகை வாயில் பரப்பில் ஒரு வரிப்புலி! பிளந்த வாயும், இளைக்கும் நாவும் வெறித்த விழிப்புமாய் அந்தப் புலி அவர்கள் இருவரையும் பார்த்தபடி இருந்தது.

செங்கானும் ஆழிமுத்துவும் விதிர்க்கத் தொடங்கிவிட்டனர். `பாதுகாப்பான குகை... ஆபத்துக்கு இடமேயில்லை என்று புலிப்பாணி சொன்னதெல்லாம் பொய்யா?'

மனதுக்குள் கேள்வி ஓடினாலும் அருகிலிருந்த தீக்கங்கும் அதில் கிடந்த கிடுக்கியின் நெருப்புச் சிவப்பும் அவர்களுக்குச் சற்று தைரியமளித்தன. ஆழிமுத்து மெல்ல அந்த இடுக்கியைக் கையில் எடுத்துக்கொண்டான். செங்கான் அருகில்கிடந்த கடப்பாரை ஒன்றைக் கையில் எடுத்தான். பார்த்தபடியே இருந்த புலி ஒரு செருமிய உறுமலோடு முன் மூக்கைத் தன் நாவல் நக்கிவிட்டுக்கொண்டு அவர்களை நெருங்க ஆரம்பித்தது.

"செங்கான், உனுப்பாயிரு! பாஞ்சிச்சுன்னா செருகிடு..." என்று முணுமுணுத்த ஆழிமுத்து இடுக்கியைத் தன் மார்புக்கு முன்னால் குத்திவிடுவதுபோல் பிடித்தான். அதன் சிவந்த நிறம் சாம்பல் தட்டிக் கறுத்து, புகை பிரிந்தபடி இருந்தது. அந்தப் புலி அவர்கள் எதிர்க்கப் போவதை லட்சியமே செய்யாமல் தொடர்ந்து முன்னால் வந்து லிங்கம் கிடக்கும் நெருப்புக்குழிக்கு இரண்டடி முன்னால் அப்படியே உட்கார்ந்தது.

இருவருக்கும் அடுத்து என்ன செய்வதென்றே தெரியவில்லை.

"என்னா இது குத்தவெச்சிடுச்சி... குந்திப் பாயப் போவுதோ?" - ஆழிமுத்து சற்றே நடுங்கியபடி கேட்க "பாஞ்சாலும் பாயும்... பொல்லாப்புலி! வவுத்தப்பார் வத்திக்கிடக்கு. இரை சரியா கிடைக்கல போல இருக்கு" என்றான் செங்கான்.

இந்த மனிதன்கூட 120 வருட காலம் எனும் அளவுக்கு விரிந்து சுருங்கும் உடற் கூறு கொண்ட ஒருவனே! அதற்கு மேல் வாழ்வது என்பது இவர்களில் சித்தநிலை அடைந்தவர்க்கே சாத்தியம்.

புலியிடம் சீரான சுவாச இளைப்பு... அதன் இயல்பான அசமந்தப் பார்வை... சில நொடிகளிலேயே செங்கானுக்கும் ஆழிமுத்துவுக்கும் அதன்மேல் ஏற்பட்ட பயம் மெல்லக் குறைய ஆரம்பித்தது.

"ஒருவேளை இது இந்த குகைக்குத்தான் தலசாய வருமோ? அப்படித்தான் இப்பவும் வந்துருக்குதோ?"

"ஒருவேளை கண்ணு தெரியாத கெழட்டுப் புலியோ... நம்பளத் தெரியலியோ...?"

- இப்படி இருவரும் தங்களுக்குள் மெல்லிய குரலில் பேசிக்கொண்டே அந்தப் புலியைப் பார்த்தனர். அதனிடம் எந்த மாற்றமுமில்லை. அவர்கள் இருவருக்கும் என்ன செய்வதென்றும் தெரியவில்லை. லிங்க உருவமோ ஒரு பக்கமாகவே வெந்துகொண்டிருந்தது. அந்த வேக்காட்டிற்கும் ஒரு அளவு உள்ளது.

மேலே மென் கறுப்பு படரும்போது வெளியே எடுத்துவிட வேண்டும். இல்லாவிட்டால் உள்ளே உள்ள மெழுகு உருக ஆரம்பித்து உருவம் வயப்படாமல் போய்விடும். அந்தக் கவலை வேறு இருவரையும் பற்றிக்கொண்டது.

"செங்கான்... உருவம் நொறுங்கப் போகுது - மெழுகும் உருகப்போகுது! போகர் சாமி வந்து கேட்டா என்னத்த சொல்ல? அவர் சொன்ன உச்சி நேரத்துல தானே நாம மெழுகால உருவத்தைப் புடிச்சோம்... ஒருவேளை நேரம் தப்பிடிச்சோ?"

- ஆழிமுத்து பதற்றமடையத் தொடங்கினான். அப்போது புலியிடமும் ஒரு மாற்றம். அது திரும்ப எழுந்து நின்று இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, வந்ததுபோலவே திரும்பிச் செல்லத் தொடங்கியது.

ஆழிமுத்துவுக்கும், செங்கானுக்கும் உயிர் மூச்சும் சீரானது. அவர்களும் வேகமாகி கிடுக்கியால் சிலையைப் பிடித்துத் தீக்குழியிலிருந்து வெளியே எடுத்து அருகிலுள்ள குகைப் பாறை மேல் வைத்தனர்.

மொத்த லிங்க உருவமும் வெப்பப் புகையை உமிழ்ந்தபடி ஒரு புதிய காட்சியைக் கண்களுக்குக் காட்டியது. அப்போது அதன் மேல் ஒரு மனித நிழல் படவும் திரும்பிப் பார்த்தனர். போகர் பிரான் நின்றிருந்தார்.

"சாமி... வந்துட்டீங்களா?"

"அதைத்தான் பார்க்கி றீர்களே... எதனால் உங்கள் குரலில் ஒரு நடுக்கம்... எல்லாம் நல்லபடியாகத் தானே சென்று கொண்டுள்ளது?"

- போகர் இதமாய் கேட்டபடியே ஆவி பறக்கக் காட்சி தரும் லிங்க சுதை உருவைப் பார்த்தார். முகத்தில் ஒருவிதப் பூரிப்பு.

"சரியாகக் கேட்டீங்க சாமி... இந்த குகைக்குள்ள எந்த ஆபத்துக்கும் இடமில்லன்னு புலிப்பாணி சொல்லியிருந்தார். ஆனா நாங்க கொஞ்சமும் எதிர்பார்க்காதபடி ஒரு புலியே உள்ள வந்துடிச்சி சாமி..!"

"அப்படியா?"

"என்ன சாமி அப்படி யான்னு சாதாரணமா கேட்கறீங்க. நல்ல பசிச்ச புலி. பாஞ்சிருந்தா அவ்வளவுதான்..."

"அதை எதிர்த்துப் போரிட்டீர்களா?"

"போரா..? ஒடுங்கிட்டோம்! நல்லவேளை உக்காந்து தீக்குழிக்குள்ள வெந்துகிட்டிருந்த இந்த லிங்க சுதையைப் பார்த்துட்டு எங்கள எதுவும் பண்ணாம திரும்பிப் போயிடிச்சு."

போகர் அதைக் கேட்டுச் சிரித்தபடியே லிங்க சுதையை நெருங்கி உற்றுப் பார்த்தார்.

"என்ன குரு சாமி... எதுவும் சொல்லாம சுதைய பாக்கறீங்க?"

"அச்சம் வேண்டாம் உங்களுக்கு... அந்தப் புலி எதுவும் செய்யாது. அது என்னைக் காண வேண்டி வந்திருக்கும். நான் இல்லாததால் திரும்பிச் சென்று விட்டதுபோலும்."

"உங்களுக்கு அது பழக்கமா இருக்கறதால அதை எப்படி சாமி நாங்க பயமில்லாமப் பாக்க முடியும். புலி எப்பவும் புலிதானே? பசிச்சா புல்லையா தின்னும்? மாமிசம்தானே அதோட ஆகாரம்..?"

"நீங்கள் சொல்வதும் உண்மை - நான் சொல்வதும் உண்மை. சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன். பார்த்திபன் என்று உங்களைப்போல் ஒரு இளைஞன் - கொங்கண சித்தரின் சீடர்களில் ஒருவன்! அஷ்டமா சித்திகளை அடைவதற்காகவே கொங்கணரிடம் வந்தவன் அவன். அஷ்டமா சித்திகளில் ஆறாவது சித்தி தான் பரகாயப் பிரவேசம்! அதாவது கூடுவிட்டுக் கூடு பாய்வது என்பவர். அந்த வித்தையைச் சரியாகக் கற்காமல் ஒரு இறந்த புலியின் உடம்புக்குள் புகுந்துவிட்ட பார்த்திபனால் திரும்ப வெளிவர முடியவில்லை. பாவம்... உடலால் புலியாக, உள்ளத்தால் மனிதனாக இந்தக் கன்னிவாடி மலைக்காட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறான். அவ்வப்போது இங்கும் வருவான் - அப்படித்தான் இப்போதும் வந்து சென்றிருக்கிறான். மற்றபடி அவன் மிக நல்லவன் - நீங்கள் அச்சப்படாதீர்கள்."

- போகர் சொல்லச் சொல்லவே இருவரிடமும் பிரமிப்பு. சொல்லி முடிக்கவும் அதன் உச்சத்தில் இருந்தனர் இருவரும்.

"என்ன பேச்சைக் காணோம்... இதை நீங்கள் கற்பனைகூடச் செய்து பார்த்திருக்க மாட்டீர்கள் அல்லவா?"

"எப்படிக் கற்பனை செய்ய முடியும்? ஆனாலும் எங்கள் பாட்டி மார்கள் சொல்லும் கதைகளில்கூட இப்படி ஒரு விஷயத்தை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். விக்கிரமாதித்தன் கதையில் என நினைக்கிறேன்."

"ஆம்... இதெல்லாம்தான் சித்த விலாசம் எனப்படும். சித்த ஜாலம் என்றும் கூறலாம்."

"இது எப்படி சாத்தியம்... உயிர் என்பது நம் உடலில் எங்கிருக்கிறது என்பதே தெரியாத நிலையில் அதை நம் விருப்பத்திற்கு ஆட்டி வைக்க முடியுமா?"

"இந்த உலகில் உள்ள எந்த உயிரினத்தாலும் முடியாது. மேலான பிறப்பு எனப்படும் மனிதர்களாலும் முடியாது. ஆனால் மனிதத்தில் இருந்து சித்தத்துக்கு மாறிவிட்ட சித்தர்களுக்கு இது சாதாரண விஷயம்.."

இறையுதிர் காடு
இறையுதிர் காடு

"அது எப்படி?"

"இரண்டே இரண்டு சொற்களைக் கொண்டு அது எப்படி என்று கேட்டுவிட்டீர்கள்? இங்கே இப்படிக் கேட்பது மிக சுலபம். இதை நம்ப மறுப்பது அதைவிடச் சுலபம். ஆனால் எப்படி என்று விளக்குவதுதான் இந்த உலகிலேயே கடினமான செயல்.."

"அப்படியானால் நீங்கள் எங்களுக்குச் சொல்ல மாட்டீர்களா?"

"சொன்னால் புரிய வேண்டுமே?"

"புரியும்படி சொல்லுங்களேன்."

"வேண்டாம், உங்கள் வாழ்வின் திசை மாறிவிடும். ஒரு சித்த ரகசியத்தை இன்னொரு சித்தனாலேயே உணர முடியும். நீங்கள் கர்மப் பிறப்பெடுத்துவிட்டவர்கள். அறுசுவை உணவை உண்டு உடம்பின் கட்டுப்பாட்டில் உங்களை வைத்திருப்பவர்கள் நீங்கள். சித்தன் எனப்படுபவன் தன் கட்டுப்பாட்டில் உடலை வைத்திருப்பவன் ஆவான். எனவே இந்தப் பேச்சை இப்படியே விட்டுவிடுங்கள். நமது விஷயத்திற்கு வாருங்கள்."

- போகரின் பதில் இருவருக்கும் ஏமாற்றமளித்தது. மௌனம் சுமந்து வெறித்தனர்.

"ஏமாற்றமாக இருக்கிறதா?"

"ஆம்... முதலில் பிரமிப்பு - இப்போது ஏமாற்றம்."

"எல்லாம் போகப்போக சரியாகிவிடும். லிங்க சுதை தயாராகிவிட்டதுபோல் தெரிகிறதே?"

"ஆம்... பாஷாணக் கலவை வந்தால் அதைக் காய்ச்சி உருக்கி இதனுள் விட பாஷாண லிங்க உருவம் தயாராகிவிடும்."

"அதற்காக நவமரை நான் இங்கு வரப் பணித்துள்ளேன். புலிப்பாணி அழைத்து வந்தபடியுள்ளான். சிறிது நேரத்தில் அவர்கள் வந்துவிடுவார்கள்..."

"நவமர் என்றால்... அது யார்?"

"நவமர் என்றால் மொத்தம் ஒன்பதுபேர். அதுவல்ல... அவர்கள் என்றுசொல்..."

"ஒன்பது பேர் இப்போது இங்கே எதற்கு?"

"அவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு பாஷாணம் உள்ளது. அவர்களை நான் பல தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்துள்ளேன். அவர்கள் வசமுள்ள பாஷாணத்தை ஒன்றாக்கிக் கலந்தே முதலில் இந்த லிங்க உருவைச் செய்யப்போகிறோம். அதாவது முதலில் பிதா! பிறகே புத்திரன்!"

"ஒன்பது பாஷாணமும் ஒருவரிடமே இருக்கக் கூடாதா, எதற்காக ஒன்பது பேர்?"

"சரியான கேள்வி... தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். இந்த உலகில் பஞ்சபூதங்கள், தாதுக்கள், தாவரங்கள், உயிரினங்கள் என்பவற்றில் அசையும் உயிரினத்துக்கே வாழ்க்கை என்கிற ஒன்று உருவாகிறது. அதில் மனித இனத்திற்கு மட்டுமே காலம் என்பதும் உருவாகி தன்னை அறிவது முதல் சகலத்தையும் அறிவது என்பது சாத்தியமாகிறது.

இந்த மனிதன்கூட 120 வருட காலம் எனும் அளவுக்கு விரிந்து சுருங்கும் உடற் கூறு கொண்ட ஒருவனே! அதற்கு மேல் வாழ்வது என்பது இவர்களில் சித்தநிலை அடைந்தவர்க்கே சாத்தியம். சித்தனுக்குக்கூட உடல் என்பது விரிந்து சுருங்கும் ஒன்றே... ஆனால் மனிதர்களைப் போல அல்லாமல் அவரவர் யோக சக்திக்கு ஏற்ப 300 ஆண்டு 400 ஆண்டு என்று மாறுபாடுகள் கொண்டதாம். மொத்தத்தில் எவராக இருந்தாலும் இந்த பூமியில் மாற்றங்களைச் சந்தித்து, தன்னிலையை இழந்தே தீர வேண்டும்.

இந்த மாற்றத்தைத் தடுத்து அழியாத்தன்மை அளிப்பதுதான் அமுதம். இந்த அமுதத்தின் மறுபக்கமே விஷம் எனப்படும் பாஷாணம்!"

-போகர் பிரான் அந்த குகையில் வழக்கமாய் அமர்ந்து தியானம் செய்யும் இடத்தில் அமர்ந்தவராக அடர்த்தியாய் ஒரு விஷயத்தைக் கூறி, அமுதத்திடமும் பாஷாணத்திடமும் வந்து நின்றார்.

"சாமி... இப்படி நீங்க சொன்னா எப்படி... எங்களுக்கு எதுவுமே புரியல. தப்பா எடுத்துக்காம புரியும்படி சொல்லுங்க" அவர்கள் குழந்தனர். போகர் சிரித்தார்.

"நான் சுருக்கமாய்ச் சொன்னால் உங்கள் தரப்பில் கேள்விகள் மிகுதியாக இருக்கும். அதற்கு இடம் தராமல் விபரமாய்ச் சொன்னேன்.

போகட்டும். இப்போது நான் சொல்வது புரிகிறதா என்று சொல்லுங்கள்.

மனிதனின் ஆயுள் 120 வருட காலம், சித்தனின் ஆயுள் அதிகபட்சமாய் மனிதனைப்போல் நான்கு மடங்கு காலம். இந்த ஆயுள் காலத்தில் இரு தரப்புக்குமே உடம்பின் திசுமாற்றம் தவிர்க்க முடியாத ஒன்று. அமுதம் என்னும் ஒன்று இந்தத் திசு மாற்றத்தைத் தடுத்து நிறுத்தி, திசுவை உறுதிப்படுத்திவிடும். பாஷாணமோ இந்தத் திசுவையே அழித்து அதன் உட்கூறினை உடைத்து நொறுக்கி விடும். இம்மட்டில் 64 வகை பாஷாணங்கள் உள்ளன.

இதில் ஒன்பதே பிரதான பாஷாணம்!

அதே சமயம் இந்த பாஷா ணங்களையும் இதன் ஆற்றலையும் புரிந்துகொண்டு சேர்க்கின்ற விதத்தில் சேர்த்து இதோடு பஞ்ச பூதங்களைச் சேர்க்கும்போது இதுவே அமுதமாகவும் ஆகிவிடுகிறது.

இப்போது நான் சொன்னது புரிகிறதா?"

"இப்போதுகூட ஓரளவுதான் புரிகிறது."

"சரி இன்னமும் சுருக்கமாய், மிகப் பாமரமாய்ச் சொல்கிறேன். ஒரு மாம்பழம் பழுத்து உண்ணத் தயாராக உள்ளது. வாசமும் வீசுகிறது. இதை அமுதம் என வைத்துக்கொள்ளுங்கள்.’’

"சரி..."

"இதே பழம் அழுகிப்போய் நாற்றமெடுக்கும் போது இந்தப் பழம் பாஷாணமாகிவிடுகிறது. இப்போது புரிகிறதா?"

"புரிகிறது... அமுதமும் நஞ்சும் ஒன்றே! அமுதமே நஞ்சாகிறது."

"மிகச்சரி... அமுதம் நஞ்சாவது சுலபம், ஆனால் நஞ்சு அமுதமாவது சாத்தியமா?"

"அதாவது அழுகிய பழம் திரும்ப அழுகாத நிலையை அடைவதைச் சொல்றீங்களா?"

"ஆம்... நான் அதற்கே முயல்கிறேன்."

"முடியுமா?"

"முடியும். எல்லாமே ஒரு வட்டச் சுழற்சிதான். முன்னோக்கிய சுழற்சியை அப்படியே மாற்றிவிட வேண்டும்."

- போகர் இப்படி பாஷாணம் குறித்தும், அமுதம் குறித்தும் பேசியபடி இருக்க அங்கே நவமரும் குகை வாசலில் ஒட்டு மொத்தமாய் வந்து நின்றனர். அவர்களில் இரண்டு பேரால் நிற்க முடியவில்லை. குகை வாயிலில் பெருமூச்சோடு உட்கார்ந்துவிட்டனர். மற்றவர்கள் எப்போதையும்விடத் தெம்பாகவும் தெளிவாகவும் காட்சியளித்தனர். அவர்கள் தோள்களில் ஒரு மூங்கில்கூடை... அதில் அவரவர்க்கான பாஷாணங்கள்!

போகர் அவர்களை வரவேற்றார்!

இன்று அந்த நீலகண்ட பாஷாணலிங்கம் மேல் சாற்றியிருந்த சந்தனமும் அந்த சந்தனம் மேல் வைத்திருந்த குங்குமமும் ஏதோ சில மணி நேரத்திற்கு முன்பு வைத்ததுபோல் லேசான ஈரத்தோடு இருந்தன! அரவிந்தன் அதை மெல்லத் தொட்டுத் தூக்கினான். அப்போது யதார்த்தமாக பூஜை அறையில் கற்பூர ஆரத்தியைக் காட்டிய நிலையில் அந்தக் கற்பூரத் தட்டோடு உள்ளே வந்த முத்து லட்சுமி கற்பூரத் தட்டோடு அப்படியே ஸ்தம்பித்து நின்றாள்.

அந்தச் சூழலில் விபூதியோடு ஒருவகை மூலிகை கலந்த மிக இதமான வாசம் வேறு... பாரதியும் படபடப்போடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

அரவிந்தன் தான் பிடித்தபடி இருந்த லிங்கத்தை எங்கே வைப்பது என்று பார்த்து அறையின் அருகில் தரைமேல் முதலில் வைத்தான். அடுத்த நொடி திறந்திருந்த அறை ஜன்னல் வழியாக மேகம் விலகிய நிலையில் சூரியனின் கதிர் ஊடுருவி கச்சிதமாய் அதன் மேல் விழுந்தது!

முத்துலட்சுமி பிரமிப்பிலிருந்து விடுபட்ட வளாக, "நான் சொல்லலை... அதே லிங்கம்தான் இது! எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு... அதே லிங்கம்..." என்று தன் கைவசக் கற்பூரத்தைக் காட்டி லிங்கம் முன் அந்தத் தட்டை வைத்தாள்.

அரவிந்தன் தொடர்ந்து பெட்டியின் உட்புறம் பார்த்தான். ஏராளமான காய்ந்த வில்வ இலைகள். அதன் நடுவில் ஏட்டுக் கட்டுகள், 1, 2, 3, 4, 5, 6 என்று கட்டுகள், அதுபோக ஒரு நீல உறை கொண்ட அகண்ட டைரி. டைரியின் மேல் 1932 என்கிற வருடக் குறிப்பு உள்ளே முதல் பக்கத்தில் பிரமாண்ட ராஜ உடையார் என்கிற கையெழுத்து! அதன் மற்ற பக்கங்களை விசிறுவது போல் ஒரு புரட்டு புரட்டினான் அரவிந்தன். எல்லாப் பக்கங்களிலும் அழகிய கையெழுத்தில் அன்றைய நாட்குறிப்பு, சில பக்கங்களில் சில வரைபடங்கள்...

பார்த்தவரை அப்போதைக்குப் போதும் என்று டைரியை வைத்துவிட்டு உள்ளே இன்னும் என்ன இருக்கிறது என்று பார்த்தான். ஒரு சிறிய கட்டைச் செருப்பு, அதன் பின் ஒரு சிறு கைக்குள் அடங்கிவிடுகிற மரப்பெட்டி. அதைத் திறந்தால் உள்ளே கறுப்பாய் கோலி உருண்டைபோல் ஐந்து ரசமணி உருண்டைகள். சிறியதாய் ஒரு சாண் நீள வேல் ஒன்று, அதோடு உருத்ராட்ச மாலை, ஸ்படிக மாலை, பவழ மாலை என்று மூன்று மாலைகள். சிறியதாய் ஒரு டப்பி. அநேகமாய் வெள்ளி டப்பியாகத்தான் இருக்க வேண்டும். அதைத் திறக்க முனைந்தபோது அது முடியாது போல் தோன்றியது. நெடுநாள்கள் திறக்காததால் இறுகிவிட்டிருந்தது.

இறையுதிர் காடு
இறையுதிர் காடு

பாரதி அந்தப் பொருள்கள் அவ்வளவையும் ஏதோ தொடக் கூடாத ஒன்றைத் தொட்டு எடுப்பது போல் எடுத்துப் பார்த்தாள். குறிப்பாய் ஏட்டுக்கட்டுகள். கட்டின்மேல் உள்ள மரப்பட்டையில் எழுத்துகள் ஊசி கொண்டு செதுக்கியதுபோல் எழுதப்பட்டிருந்தன. ஒன்றில் சொர்ண ஜால மகாத்மியம் என்றிருந்தது, இரண்டாவதில் த்ரிகால பலகணி என்றிருந்தது. மூன்றாவதில் தசாபுக்தி பலன் என்றும், நான்கில் வன மகோத்சவம் என்றும், ஐந்தில் கருட பார்வை என்றும் இருந்தது. ஆறாவதில் ருணரண விமோசனம் என்னும் எழுத்துகள்!

"அவ்வளவும் சித்தர்கள் எழுதின ஏடுங்க...ஒவ்வொண்ணுமே பொக்கிஷம். இதையெல்லாம் பாக்கவே கொடுத்துவெச்சிருக்கணும்" என்ற முத்துலட்சுமி, பாரதி பார்த்துவிட்டு வைத்த கட்டுகளை எடுத்துக் கண்ணில் ஒற்றிக் கொண்டாள்!

உடம்புல பிரதான நாடின்னு ஏழு நாடி இருக்கு, அதுல ஒவ்வொரு நாடி அடங்கிக்கிட்டே போறதத்தான் சாவை நோக்கிப் போறதா சொல்வாங்க.

பெட்டியின் உள்ளே இனி எதுவுமில்லை!

எல்லாமே வெளியே வந்து கிடந்தது. அப்படியே பாரதியை ஏறிட்டான். அவன் என்ன நினைக்கிறான் என்றே தெரியவில்லை. பாரதியும் அதே போலத்தான் பார்த்தாள். அப்போது முத்துலட்சுமி அந்த ரசமணி உள்ள மரப்பெட்டியை எடுத்து ரசமணிகளை உள்ளங்கையில் கொட்டி அதை உற்றுப்பார்க்கலானாள். அந்த நொடி அவள் உடலில் ஒரு புதுத் தெம்பு. மொத்த உடம்பெங்கும் சிற்றெறும்புகள் ஊர்வதுபோல் ஒரு சன்னமான கிளர்ச்சி. அதை கவனித்த பாரதி "பாட்டி அதை அந்தப் பெட்டில போட்டுக் கீழ வை. என்ன ஏதுன்னு தெரியாம எதையும் தொட வேண்டாம்’’ என்றாள்.

"பாரதி... இதுல எந்த பயமுறுத்தற விஷயமும் இல்லை. அவ்வளவும் உன் பாட்டி சொன்ன மாதிரி பொக்கிஷங்கள்தான். நமக்குத் தெரிஞ்சே இது பல வருடமா பூட்டியே இருந்த ஒரு பெட்டி தான். அப்படி ஒரு பெட்டியைத் திறந்தா கெட்ட வாடைதான் அடிக்கும். ஆனால் இங்க பார், என்ன ஒரு வாசம். இன்ஃபாக்ட் எனக்கு லேசா தலைவலி இருந்தது. நான் அதைப் பெருசு படுத்திக்காம சமாளிச்சிக்கிட்டு இருந்தேன். ஆனா இப்ப ரொம்ப ஃப்ரெஷ்ஷா ஃபீல் பண்றேன் இதையெல்லாம் புரிஞ்சிக்கணும்னா இந்த டைரிய படிக்கணும். இது யாருக்குச் சொந்தமோ அவர் எழுதினது" என்ற அரவிந்தனுக்கு என்ன பதில் சொல்வது என்று பாரதிக்குத் தெரியவில்லை.

"என்ன யோசனை பாரதி?"

"இல்ல... இதுல ஏதோ மருந்து இருக்கலாம்னு சொன்னீங்களே..."

"ஆமாம்... ஆனா இதுல இப்ப மருந்து இருக்கற மாதிரி எனக்குத் தெரியல. இருந்தாலும் இந்த ஏட்டுல இருக்கலாம்கற மாதிரி தோணுது" என்றபடியே `ருண ரண விமோசனம்' என்கிற ஏட்டைக் கையிலெடுத்தான் அரவிந்தன்.

"அரவிந்தன்... இதை முதல்ல படிச்சு, அப்புறம் புரிஞ்சிகிட்டு மூலிகைகளைத் தேடி அலையவெல்லாம் இப்ப யாருக்கு நேரம் இருக்கு? இதை என்னால ஒத்துக்கவும் முடியல, மறுக்கவும் முடியல - பிராக்டிகலா இதெல்லாம் சரியா வராது.

எனவே... இது எதுவும் நமக்குத் தேவையில்லை... தேடிவந்த அந்த யு.எஸ் ஜோடிகிட்ட கொடுத்துடுவோம். அவங்க என்னமோ பண்ணிட்டுப்போகட்டும். என்ன சொல்றீங்க..?"

"உன்னோட விருப்பம்தான்... ஆனா, பழநி சித்தர் சொன்னபடிதான் எல்லாம் நடந்திருக்கு. அதன்படி பார்த்தா உன் அப்பா குணமடையணும். அது இதாலதான் நடக்கணும்."

"போதும் அரவிந்தன்... இந்தப் பெட்டிமேல ஒரு சின்ன க்யூரியாசிட்டி இருந்தது. இப்ப அது என்வரைல தீர்ந்துபோச்சு. இதை உங்களப்போல பொக்கிஷம் பொடலங்காய்னு நான் சொல்லப்போறதில்லை. இது எப்படி வேணா இருந்துட்டுப் போகட்டும்" பாரதியின் அலட்சியமான பேச்சு முத்துலட்சுமிக்குக் கோபத்தை வரவழைத்தது.

"பாரதி... நீ நல்ல பொண்ணுதான் - ஆனா பிடிவாதமா நீ சில நேரம் நடந்துக்கறத பாக்கும் போது எனக்கு உன் அப்பன் ஞாபகம்தான் வரும். அவனும் இப்படித்தான். நீ எதுல அவனைக் கொண்டிருக்கியோ இல்லையோ, பிடிவாதத்துல, தான் நினைக்கறதுதான் சரிங்கறதுல அப்படியே அவனைக் கொண்டிருக்கே... இதோட மதிப்பு உனக்குத் தெரியல... உன்னைச் சொல்லிக் குத்தமில்ல - உன் வயசு அப்படி, நீ வளர்ந்த விதமும் ஒரு காரணம்" முதல் தடவையாக முத்துலட்சுமி சீறினாள். பாரதிக்கே அது ஆச்சரியம்தான். அப்போது "நான் வரலாமா’ என்றொரு குரல்.

திரும்பிப் பார்த்தபோது அறை வாசலுக்கு அப்பால் அந்த டெல்லி ஜோசியர் நந்தா, கூடவே மருதமுத்து. அவரைப் பார்க்கவுமே வெகுவேகமாய் அவரை நோக்கி நடந்தாள் பாரதி. நெருங்கி வந்தவளிடம் "அம்மா சொல்லச் சொல்ல கேட்காம வந்துட்டாரும்மா..." என்றான் மருதமுத்து, ஹாலில் பானுவும் வந்து நின்றிருந்தாள்.

"என்ன சார் விஷயம்... எதுக்கு இப்படி விடாமத் துரத்தறீங்க?" - பாரதியிடம் காட்டமான ஆரம்பம்.

"கோபப்பட வேண்டாம் மேடம். நீங்க அந்தப் பெட்டியைத் திறந்துட்ட விஷயம் எனக்குத் தெரியும். அதுலதான் உங்கப்பாவுக்கு மருந்து இருக்குன்னு நான் நேத்துகூடச் சொன்னேன். இப்பவும் சொல்றேன். கொஞ்சம் ஜல்தியா செயல்பட்டா நிச்சயம் உங்கப்பா பொழச்சிக்குவார். அவர் ஜாதகம் எனக்குத் தெரியும். நான் சொல்றத கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்க. ப்ளீஸ்..." ஜோதிடரிடம் உச்சபட்சக் கெஞ்சல்.

"அது சரி... பெட்டிய நாங்க திறந்தது உங்களுக்கு எப்படித் தெரியும்?"

"அது இப்ப எதுக்கு? டைம் இல்ல மேடம்! உங்கப்பாவுக்கு இப்ப ஓடிக்கிட்டிருக்கற நட்சத்திரத்துலதான் நல்லது செய்ய முடியும். சில மணி நேரத்துல அடுத்த நட்சத்திரம் வந்துடுது. அது ஹெல்ப் பண்ணாது."

"இதெல்லாமே ஹம்பக்... ஐ டோன்ட் பிலீவ் ஆல் தீஸ் ப்ளடி திங்க்ஸ். நட்சத்திரம் நல்ல நேரம், கெட்ட நேரம் எல்லாம் சும்மா... புத்தில தெளிவு இருந்தா எல்லா நேரமும் காலமும் நல்ல நேரம் தான்..."

"அப்ப உங்களால உங்கப்பாவை ஏன் எதுவும் செய்ய முடியல..?"

"இது என்ன பேச்சு... எல்லா முயற்சியும் நடந்துகிட்டுதானே இருக்கு?"

"எங்க நடந்துகிட்டிருக்கு... எம்.பி சார் இப்ப கிட்டத்தட்ட டெட் பாடி. இன்னும் டிக்ளேர்தான் பண்ணலை" ஜோதிடரின் பதில்முன் ஒரு விநாடி பாரதி மடங்கித் தேங்கினாள். அரவிந்தன் குறுக்கிடத் தொடங்கினான்.

உள்ளிருந்து அங்கு வந்தவன் ``மிஸ்டர் ஜோசியர்... பெட்டில மருந்துன்னு ஒண்ணு தனியா இருக்கற மாதிரியே தெரியல. எல்லாமே ஏடுகள், அப்புறம் ஒரு சிவலிங்கம், கட்டச்செருப்பு, காஞ்சவில்வ இலைகள்... இவைதான்!" - என்றான்.

"இல்ல... இன்னும்கூட சில விஷயங்கள் இருக்கணுமே?"

"அப்படி எதுவும் இல்லை... நீங்க என்ன சூரணம் பஸ்பம் இப்படி ஏதாவது சொல்றீங்களா?" அரவிந்தன் கேட்க, முத்துலட்சுமி அந்த ரசமணி கொண்ட பெட்டியோடும் கையில் 5 ரசமணி உருண்டைகளை வைத்துக்கொண்டும் வந்தவளாய் "தம்பி, இதுவும் பெட்டிலதானே இருந்திச்சு. இதை விட்டுட்டீங்களே" என்றாள். அடுத்த நொடி ஆவேசமாய் முத்துலட்சுமி கையில் இருந்த ரசமணி உருண்டைகளைப் பறித்த ஜோதிடர் நந்தா அதை உற்றுப் பார்த்தபடியே "இதுதான் அந்த மருந்து... இதுதான் அந்த மருந்து... என் கூட வாங்க, வந்து நடக்கப் போற அதிசயத்தைப் பாருங்க" என்று அதோடு புறப்படப் பார்த்தவரை, பாரதி பலமான குரலில் தடுத்து நிறுத்தினாள்.

இறையுதிர் காடு - 45

"மிஸ்டர் நந்தா... ஸ்டாப் இட்! அதை முதல்ல இப்படிக் கொடுங்க. என்ன இது இன்டீசன்டா பிஹேவ் பண்ணிக்கிட்டு... இது ஏதோ கோலி மாதிரி இருக்கு. இதைப் போய் மருந்துங்கிறீங்க?"

``ஐயோ மேடம்... இது ரசமணி. இதை இடுப்புக் கிட்ட வெச்சா இதுல இருந்து உருவாகற ரேடியேஷன் தொப்புள் வழியா போய் டோட்டல் பாடி முழுக்கப் பரவும். உடம்புல பிரதான நாடின்னு ஏழு நாடி இருக்கு, அதுல ஒவ்வொரு நாடி அடங்கிக்கிட்டே போறதத்தான் சாவை நோக்கிப் போறதா சொல்வாங்க. இது நாடிகளை அடங்க விடாது. கொஞ்சமா இது ரத்த ஓட்டத்தையும் தூண்டும். அப்ப நாம வெளிய இருந்து கொடுக்கற மருந்து ரத்தத்துல கலந்து ஓடி உயிரைக் காப்பாத்தும்.

இதால மட்டும் ஒரு உயிரைக் காப்பாத்த முடியாது. ஆனா இதால உயிர் அடங்கிடாம தடுக்க முடியும்."

"அப்படின்னா ஏன் மெடிகல் ரிசர்ச்லையோ இல்ல சைன்ஸ்லயோ இப்படி ஒரு விஷயமே இல்லை?"

"இது முழுக்க முழுக்க சித்த விஞ்ஞானம். பைத பை உங்க கிட்ட இனி பேசி நேரத்த வீணடிக்க நான் தயாரில்லை. உங்கப்பா பிழைப்பார். பிழைச்சா நீங்க என்கூட பேசுங்க. இல்லையா, செருப்பாலகூட அடிங்க வாங்கிக்கறேன். நான் இப்ப கிளம்பறேன்."

- ஜோதிடர் நந்தா அந்த ரசமணிகளோடு புயல்போலப் புறப்பட்டார். அரவிந்தனும் பாரதியிடம் "கமான் பாரதி... அவருக்கு ஒரு சான்ஸ் கொடுத்துதான் பார்ப்போமே" என்றவன், ஓடிச்சென்று பெட்டிக்குள் திரும்ப எல்லாவற்றையும் வைத்து மூடியவன், ஞாபகமாய் திருப்புளியால் உள்பாகம் தட்டும் வரை திருகி மூடினான்!

- தொடரும்