
அன்று புறப்பட்டுவிட்ட புலிப் பாணியை ‘ஒரு நாழிகைப் போது நிற்பாயாக...’
என்ற போகர் திரும்பி சங்கனைப் பார்த்தார். சங்கனும் குரு ஏதோ கட்டளையிடப்போகிறார் என்றுணர்ந்தவனாக நெருக்கமாய் வந்தான்.
“சங்கா... நீ என் தவக்கொட்டாரம் சென்று அங்கே ஒரு செப்புக்குடத்தில் நான் கங்கையிலிருந்து கொண்டு வந்திருக்கும் கங்கை நீரை எடுத்துக்கொண்டு வா...” என்றார். சங்கன் உடனேயே புறப்பட்டான். அவன் விலகவும் போகர் புலிப்பாணியிடம் பேசத் தொடங்கினார்.
“புலி... சங்கன் கொண்டு வரும் கங்கை நீரால் கன்னிவாடி மெய்கண்ட சித்தர் குகையில் இருக்கும் லிங்க உருவுக்கு அபிஷேகம் செய்வாயாக. அந்த அபிஷேக நீரால் இவர்கள் சிரத்தையும் நனைத்து விடு. அர்ச்சனைக்கு வில்வம் போதும். ஈசனுக்குரிய நாமம் என்று நான் கூறியிருக்கும் நாமங்களைச் சொல்லி வில்வ இலைகளைப் பயன்படுத்து.
அபிஷேகம் மற்றும் அர்ச்சனையைத் தொடங்கும் முன் முத்திரை போட மறந்து விடாதே. அநேகமாய் அங்கே இப்போது கருவூராரோ, கோரக்கரோ, கொங்கணரோ இருக்க வாய்ப்பில்லை. கங்கை சென்ற சமயம் அங்கே அவர்களைக் கண்டேன். வேறு எவரேனும் மெய்கண்ட சித்தர் குகை முன் தட்டுப்பட்டால் நான் போகனின் மாணவன் என்றபடியே காலில் விழுந்துவிடு. அவர்கள் தவத்தில் இருந்தால் அதைக் கலைத்து விடாதே. மெய்கண்டலிங்க வழிபாட்டிற்குப் பிறகே நீ, நான் சவாசனம் புரிந்திடும் குகைப் பகுதிக்கு இவர்களை அழைத்துச் செல்ல வேண்டும்” என்றார். போகர் பேசிக்கொண்டிருக்கும்போதே சங்கன் கங்கை நீருள்ள செப்புக் குடத்தை எடுத்து வந்துவிட்டான். அதை அவன் போகர் பிரான் கைகளில் தரவும் அவர் அதைத் தன் மார்பின் முன் ஏந்திப் பிடித்தவராய் மனதுக்குள் பஞ்சாட்சரம் கூறத் தொடங்கி, பிறகே அதைப் புலிப்பாணி வசம் ஒப்படைத்தார். புலிப்பாணியும் அந்தக் குடத்தைத் தலைமேல் சுமந்தவனாய் கருமார்களோடு கிளம்பினான். அவன் விலகவுமே, கிழார்கள் காத்திருந்ததுபோல வாய் திறந்தனர்.
“பிரானே!”
“சொல்லுங்கள்...”
“கங்கை நதி வடக்கில் அல்லவா பாய்கிறது...”
“ஆம்... அதிலென்ன சந்தேகம்?”
“அப்படி இருக்க தாங்கள் எப்போது வடபுலம் சென்றீர்கள். பல காலமாகவே தாங்கள் இங்கேதானே உள்ளீர்கள்?”
அவர்கள் கேள்வி முன் மர்மமாய்ச் சிரித்தார் போகர் பிரான்.
“இப்படித் தாங்கள் சிரித்தாலே எங்களை அது இகழ்வதுபோல் நாங்கள் உணர்கிறோம்.”
“இகழவில்லை... இன்னமும் சித்தனின் பல விலாசம்பற்றி அறியாதவர்களாகவே இருக்கிறீர்களே... அதை எண்ணினேன், சிரிப்பு வந்துவிட்டது.”
``பல விலாசமா... தாங்கள் அஷ்டமா சித்திகளைக் குறிப்பிடுகிறீர்களா?”

“ஆமென்று என் வாயால் கூற வேண்டுமா? இந்த சித்திகள் உடையவர்க்கு பஞ்ச பூதங்கள் ஒரு பொருட்டில்லை என்பது உங்களுக்குத் தெரியாதா?”
“உண்மையைச் சொல்லப்போனால் தெரியவில்லை என்றுதான் கூற வேண்டும். தாங்கள் எவ்வளவுதான் விளக்கமளித்தாலும் தங்கள் வரையில் ரகசியங்கள் ரகசியங்களாகவே தான் உள்ளன.”
“ரகசியம் என்னும் சொல்லுக்கே பொருள் அதுதானே? ஒருவர் மட்டும் அறிந்திருப்பதே ரகசியம். இருவர் என்றானால்கூட அது ரகசியமில்லை... உடைந்துவிட்ட ரகசியம் என்று வேண்டுமானால் அதைக் கூறலாம்.”
“பிரானே... தாங்கள் எப்போது கங்கைப் புலத்திற்குச் சென்று இந்தச் செப்புக்குடத்தில் நீரை எடுத்து வந்தீர்கள்?”
“கடந்த திங்கள்கிழமையன்று அதிகாலை நான் காசிநகர் சென்று கங்கை நீராடி விசுவநாத வழிபாடு செய்து இந்த நீரையும் கொணர்ந்தேன்.”
“ஒரு பறவையாக இருந்து பறந்து சென்றால்கூடப் பல நாள்கள் ஆகுமே?”
“ஆம்... அது பறவைக்கு மட்டுமே பொருந்தும். பறவை தானொரு பறவை என்பதையே அறிந்திராத ஓர் உயிரினம். உணர்வால் வாழ்கின்ற ஒன்று. சிறகின் தன்மைக்கும், உடம்பின் சதைக்கும் ஏற்ப அதன் வேகம் அமையும். ஒரு சித்தன் அறிவு ஞானம் மற்றும் உலகின் பேராற்றல்களைப் பயன்படுத்தத் தெரிந்தவன். நமக்கிடையே உள்ள இடைவெளிக்குள் உலா வரும் காற்றினுள் தீக்கங்குகளும் உள்ளன. அதைக் காட்டட்டுமா?” - என்று கேட்ட போகர் அருகில் கிடந்த இரு கற்களை எடுத்து உரசவும் தீப்பொறிகள் வெளிப்பட்டன.
“இதே இடைவெளிக்குள் நீரும் உள்ளது... எடுத்துக் காட்டவா?” என்ற போகர் பிரான் இரு கைகளைப் பந்துபோல் மூடிக்கொண்ட நிலையில் விரல் இடுக்கில் சிறு துவாரம் ஏற்படுத்தி அதனுள் மிகுந்த விசையோடு வெப்பக் காற்றை ஊதியவராய், சில விநாடிகள் சென்ற நிலையில் கையை விடுவிக்க உள்பாகம் வியர்த்து நீர் ஒழுகிற்று. தொடர்ந்து ஒரு கோலை எடுத்தவர் அதை மெல்லச் சுழற்றினார். கோல் வட்ட வடிவம் காட்டிச் சுழன்றது. வேகம் கூடக் கூட, கோல் மறைந்து வட்ட வடிவமும் மறைந்து கோல் இருப்பதே கண்களுக்குப் புலனாகவில்லை. பின் வேகம் குறையவும் கோல் புலனானது.
“நீங்களும் மிக வேகமாய்ச் சுழல முடிந்தால் கண்களுக்குப் புலப்பட மாட்டீர்கள் - அதற்காக நீங்கள் இல்லாமல்போகிறீர்கள் என்று பொருள் இல்லை. நான் இங்கே செய்து காட்டிய எதுவும் மாயமில்லை. இது ஒரு வகை அறிவியலே!”
- போகரின் விளக்கத்தால் மிரட்சியடைந்து விட்டிருந்த கிழார்களும் சீடர்களும் பிரமித்து நின்றனர்.
“நீங்கள் நுட்ப அறிவு கொண்டிருந்தால் ஒன்றின் சக்தியை அறிந்து அதைப் பயன்படுத்த இயலும். உதாரணத்திற்கு இங்கே ஒரு ஜடப்பொருள் செயல்பாட்டைச் செய்து காட்டுகிறேன் பாருங்கள்” என்ற போகர் ஒரு மூங்கில் பட்டையை எடுத்தவராய் “இதற்குள் ஒரு சக்தி இருப்பதை இதை வளைத்தால் உணரலாம்” என்றவராய் வளைத்தார். பின் வளைத்த பிடியை விடவும் அது விசையோடு முன் வந்து பழைய நிலையை அடைந்தது.
“எப்போதும் இந்த மூங்கில் பட்டைக்குள் இந்த விசைப்பாடு இருக்கவே செய்கிறது. இந்த விசையைத்தான் வில்வடிவில் பயன்படுத்தி விசைச் சக்தியால் பாணம் எய்தி வேட்டைக்குப் பயன்படுத்துகிறோம்” என்றவர்,
“ஒரு சித்தன் வசப்படுத்தி வைத்திருக்கும் அஷ்டமாசித்திகளும் இதுபோல் பிரபஞ்ச சக்தி தான்... அதை அடையும் பிரயத்தனங்கள் மட்டும் பிரத்யேகமானவை - ரகசியமானவை...” என்றார்.
“இப்போது நெருப்பைக் காட்டியதுபோல், நீரைக் காட்டியதுபோல் வெளிப்படையாக அதைக் காட்டக் கூடாதா?”
“இதற்கு நான் ஓர் உதாரணத்தைச் சொல்லி மட்டுமே விளக்க முடியும். நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள். இந்த உலகில் வெளிப்படையாக, காட்சிப்புலனாகத் தெரிந்துகொள்ள முடிவது ஒரு பாதி என்றால், விளைவின் பயனாகத் தெரிந்துகொள்வது மறுபாதி. காட்சிப்புலன் என்பது நம்மைப்பெற்ற தாயைப்போன்றது. அவள் நம்மைச் சுமந்தது, பெற்றது என்று அனைத்தையும் உலகம் பார்க்க முடியும். நம்மை நம் தந்தையால்தான் உருக்கொள்ளச் செய்தாள் என்பது நாம் நம்பி ஏற்க வேண்டிய ஒன்றே...”
சித்த செயல்பாடுகளை நம்பித்தான் ஏற்க வேண்டும். மாட்டேன் என்றால் சித்தனுக்கு ஒரு குறைவும் நேரிடாது. மாட்டேன் என்பவர்க்கே குறைவுண்டாகும்.”
“நல்லது... இந்த கங்கை நீரைத் தாங்கள் சங்கனிடம் கொடுத்த காரணம்?”
“கன்னிவாடி மலையில் உள்ள மெய்கண்ட சித்தர் குகையில் இருக்கும் லிங்கத்துக்கு அபிஷேகம் புரியவே...”
“அப்படி என்ன இந்த கங்கை நீருக்குச் சிறப்பு?”
“இதுவரை நீங்கள் கேட்ட கேள்விகளிலேயே இதுதான் சிறந்த கேள்வி. நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள். பஞ்ச பூதங்களில் பெரியது ஆகாயமே... அந்த ஆகாயத்தில் சுழலும் ஒரு பந்து தான் இந்த பூமி. இந்த பூமியில் பெரியது காற்று! இது இந்த பூமிப்பந்தை நூறு காத உயர அளவுக்குச் சுற்றி வளைத்துச் சுழன்றபடியே இருக்கிறது. அடுத்த பூதம் நீர் - பிறகே நிலம். இறுதியாகவே நெருப்பு. இந்த ஐவகையில் நீர் நடுவில் இருந்து ஆகாயம் மற்றும் காற்றோடு ஒரு புறமும், நிலம் மற்றும் நெருப்போடு ஒரு புறமும் இணைந்து கிரியை புரிந்து ஆறு நிலைகளைத் தன்னுள் கொண்டுள்ளது.
அதனால்தான் ஓடும் நீருக்கே இங்கே ஆறு என்று எண் பெயர் உண்டாயிற்று. கடல் நீரானது ஆவியாவது முதல் நிகழ்வு, ஆவி மேகமாவது அடுத்த நிகழ்வு, மேகம் மழையாவது மூன்றாம் நிகழ்வு, மழை மண் மேல் விழுவது நான்காம் நிகழ்வு, இதில் மலைமேல் விழும் மழையே சரிந்து அருவியாக விழுந்திடும். இது ஐந்தாம் நிகழ்வு..! அப்படி விழுந்தாலே ஓட்ட விசை உருவாகி அந்த அருவி ஆறாகப் பெருகி இறுதியில் கடலை அடையும்.
“பாம்புக்குக் காது கிடையாது - அது அதிர்வாலதான் எதையும் உணரும்னு சயின்ஸ் சொல்லுது. அப்புறம் எப்படி மகுடிக்கு அது பிடிபடும்?”
மண் மேல் நேராக விழும் மழை நீர் ஏரி, குளம், குட்டை, கிணறு என ஓடும் சக்தியற்று அழுத்தம் மட்டுமே கொண்டிருக்க, ஆறு மட்டுமே ஓடும் சக்தி கொண்டிருக்கும் ஒன்றாக உள்ளது. இதில் கவனிக்க வேண்டிய ஒரு பெரிய நுட்பமும் உள்ளது. அது எந்த ஆறாக இருந்தாலும் அதன் ஒரு முனை உயரமான மலையாகவும் மறுமுனை ஆழமான கடலாகவுமே இருக்கும். அவ்வாறு இருந்தாலே அது ஓட இயலும். அப்படி ஓடும் போது ஒரு விசையும் அதனுள் இருக்கும். இதனால் ஆற்றில் மூழ்கும் நாம் அதனுள் மூழ்கியிருக்கும் நிலையில் மிக உயரமான நிலை, சமமான நிலை, மிக ஆழமான நிலை என்று மூன்று நிலைகளோடு தொடர்பு கொண்டவர் களாகவும் ஆகிறோம். இந்தத் தொடர்பு ஏரி, குளத்தில் நமக்கு ஏற்படுவதில்லை. அடுத்து ஆற்றில் குளிக்கையில் ஒரு முறை நம்மேல் பட்ட நீர் மறுமுறை படுவதில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக நீருக்கு ஒலியை உள்வாங்கும் ஆற்றல் உண்டு. அப்படி தான் வாங்கிய ஒலியை அது மெல்ல விடுவித்தபடியே இருக்கும். இதனால்தான் நம் வாழ்வில் உயிர் ஆதாரத்திற்காக மட்டுமன்றி, ஆத்ம வெளிச்சத்துக்கும் நீரைப் பயன்படுத்தும் ஒரு வழிமுறையை நம் சான்றோர்கள் ஏற்படுத்தினர்.
நீர் தாகம் தீர்க்கவும், உணவு தயாரிக்கவும் மட்டுமன்றி, நம்மை நாம் மேம்படுத்திக் கொள்ளவும் பயன்படும் ஓர் உயிரி. அதனால்தான் நம்மில் புனித நீராடுவது என்பது முதல் ஆலயங்களில் நீரை பிரசாதமாகத் தருவது என்பது வரை அதைப் பயன்படுத்துகின்றனர். ஒரு சன்யாசி தன் சக்தியைத் தன் கமண்டல நீரில்தான் பாதுகாக்கிறான். நீர்பூதம் மிகப் பொதுவானது. பயன்படுத்துபவர்க்கு ஏற்ப பயன் தரும். இதை அசுத்தமும் படுத்தலாம் - பிரசாதமும் ஆக்கலாம். அசுத்தப்படுத்தினால் நோயைத் தரும் - பிரசாதப்படுத்தினால் ஆரோக்கியம் தரும்.
நம் நல்லெண்ணத்திற்கும் நீருக்கும்கூடப் பெரும் தொடர்புண்டு. நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணி ஒரு குவளை நீரைக் குடிக்கக் கொடுத்தால் குடிப்பவர் நிச்சயம் நன்மை அடைவார். இது நாசமாய்ப் போக வேண்டும் என்பதற்கும் பொருந்தும். நம் உடம்பின் எண்ண அலைகளும் உயிரோட்ட மின் காந்த அலைகளும் விரல்கள் வழியாகத்தான் வெளிப்படுகின்றன. நீரோடு நாம் தொடர்பு கொள்ளும்போது அந்த நீரில் அவ்வளவு அலைகளும் கலந்துவிடுகின்றன. எனவே நீரை மிக கவனமாகவும் மதிப்போடும் அணுக வேண்டும்.
நீரோடு பேசலாம் - உறவாடலாம். நீரால் பிரபஞ்சப் பேராற்றல்களைத் தன்வயப்படுத்தலாம். இது மிதமான வெப்பத்தில் சலனம் கொள்ளும். உறைந்துவிட்டாலோ திடவடிவம் கொண்டுவிடும் - சலனம் நீங்கி விடும். உறைந்த பனிவடிவே இமயம் - இமயத்தில் கோயில் கொண்டிருப்பவனே சிவன். இவனை நாம் தியானிக்க தியானிக்க நம் வாழ்க்கைச் சலனங்களும் உறைந்து திடத்தன்மை கொண்டு விடும். இதை உணர்த்தும் விதமாகவே பனிமலை இடையே அவன் கைலாயகிரி உள்ளது.
நீரின் நிகர்த்த உணவு வடிவம் பால். இதுதான் சகல உயிர்களுக்கும் முதல் உணவு. இந்த உணவால் உறுப்புகள் வளர்ந்த பிறகே பிற உணவு! இந்தப் பாலையே கடலாகக் கொண்டு அதில் பாம்பணை மேல் கிடப்பவன் விஷ்ணு! இவனை வணங்குவதால் உணவுண்டு வாழும் வாழ்வில் குறைகள் ஏற்படாது. உணவை ஒருவன் பெற மனித சமூகத்தில் செல்வம் வேண்டும். எனவேதான் செல்வத் தொடர்புடைய லட்சுமி தேவி விஷ்ணு சம்பந்தம் கொண்டுள்ளாள்.
நீரைத் தொட்டு இதுபோல் நாம் அறிந்து கொள்ள நெடிய சங்கதிகள் பல உண்டு. இதில் கங்கை நீர் புனிதமானது என்று பிறநீரைக் காட்டிலும் பெரிதாகக் கருத நுட்பமான காரணம் ஒன்று உண்டு.
பிற ஆற்று நீர் மலைமேல் விழுந்து மண்ணில் பரவி, மண்ணின் குண சம்பந்தத்தோடும் தாவர மூலிகை சம்பந்தத்தோடும்தான் வரும். கங்கை நீர் பனியின் கரைவாகும். காரணம் சூரிய வெப்பமாகும். எனவே சில்லென்ற அந்த நீரில் நெருப்பின் தொடர்பு ஒளிந்துள்ளது.
நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள். வெப்பம் நீருள் ஒளிந்தால் அது பனி - வெப்பம் காற்றில் ஒளிந்தால் அது நெருப்பு. எனவே வெப்பம் ஒளிந்த நீராகவும், மண் தொடர்பற்றதாகவும் உள்ள நீராக கங்கை நீர் திகழ்வதால் - குறிப்பாக இமயக்கரைவாய் கருதப்படுவதால் சிவசம்பந்தமும் கீழே பாற்கடல் நாயகனான விஷ்ணுவின் பாத சம்பந்தமும் கொள்வதால் கங்கை நீர் மற்ற நீரினின்றும் வேறுபட்டும் விசையாற்றல் மிகுந்ததாகவும் உள்ளது. அதைக் கொண்டு பக்திச்சிலிர்ப்பு எனும் உணர்வை நாம் கலந்து அபிஷேகம் புரியும்போது அங்கே பேராற்றல் பரவுகிறது. அதை நாம் கூப்பிய கரம் மற்றும் கூர்த்த பார்வை வழியாக நம் உடலில் நிரப்பிக்கொள்கிறோம். இது ஒரு வழிப்பாடு... அதாவது வழிமுறைச் செயல். வழிப்பாடே வழிபாடு என்றானது. இதைத்தான் நான் சங்கனைக் கொண்டும், புலிப்பாணியைக் கொண்டும் செய்யச் சொன்னேன்.
நானும் நாமும் சாதிக்கப்போவது ஒரு பெரும் செயலை! கால காலத்திற்கும் வாழப்போகும் ஒரு செயலை! அதற்கு அருள்பலமே முதல் தேவை. பொருள் பலம் உடல் பலம் எல்லாம் பிறகே! அந்த அருள்பலத்தின் நிமித்தமே கங்கை நீர் அபிஷேகம்...
போதுமா... இன்னமும் விளக்கம் வேண்டுமா?” - போகர் பிரான் கங்கை நீர் நிமித்தம் அளித்த விளக்கத்தில் நீர் எனும் பூதத்தையே அவர் ஒட்டுமொத்தமாய் விளக்கிவிட்டதில் சகலரிடமும் ஒரு பிரமிப்பு!
கன்னிவாடி மலையின் ஒருபுறம் சிவலிங்க வடிவில் காட்சி தந்துகொண்டிருந்தது. கையில் உள்ள கங்கை நீர்க்குடத்தைக் கீழே வைத்து விட்டு இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி ஒரு பெரும் கும்பிடு போட்டான் புலிப்பாணி. அவன் கும்பிடுவதைப் பார்த்து கருமார்களும் கும்பிட்டனர்.

காற்று முரடாக திபுதிபுவென காதில் அதன் சப்தம் கேட்கும் வண்ணம் வீசியபடியிருந்தது. மலைக்குக் கீழே சோமலிங்க புரம் எனும் சிற்றூர். புலியும் கருமார்களும் புரவிமேல் ஏறி வந்திருந் தனர். அவை மரநிழலில் கட்டியிருக்க, அவற்றின்மேல் கருமார்களின் கருவி மூட்டைகளும் இருந்தன. கருமார்கள் புலியிடம், கன்னிவாடி மலைத்தொடரைப் பார்த்தபடியே “நெடிய இம்மலைத்தொடரில் நாங்கள் எங்கே தங்கி அச்சினை வார்க்கப் போகிறோம்?” என்று கேட்டனர்.
“சிறிது தொலைவில் குகை ஒன்று உள்ளது. போகர்பிரான் அங்கேதான் சவாசனம் புரிந்து உடம்பை விடுவித்துக்கொண்டு உயிரைப் பிற உயிரற்ற உடம்புக்குள் புகுந்து கூடு பாய்தல் நிகழ்த்துவார். அந்த குகையில்தான் தாங்கள் தங்கி அச்சினை உருவாக்கப் போகிறீர்” என்றான்.
“அங்கே மிருக பயம் இருக்காதே?” - ஒரு கருமான் கேட்டபோது ஓநாய் ஒன்றின் ஊளை சப்தம் கேட்கத் தொடங்கியது!
இன்று எதிர்பாராமல் வந்துவிட்ட வாந்தியை சாலையென்றும் பாராமல் எடுத்துவிட்டாள் சாருபாலா. சாந்தப்ரகாஷ் உடனே அவளைத் தாங்கிப் பிடித்தவனாக “சாரு என்ன இது... கன்ட்ரோல் யுவர் செல்ஃப்” என்றான். அவள் சைகையில் தண்ணீர் கேட்டாள். வேகமாய் கார் கதவைத் திறந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து தந்தான். சற்றே பெருமூச்சோடு அதை வாங்கிக் குடித்தவள் திரும்பவும் வாந்தி எடுத்தாள். இம்முறை புத்தகக் கடைக்கு அப்பால் சென்று சாலை ஓரமாக எடுத்தாள். இருட்டி விட்டதில் பெரிதாய் யாரும் கவனிக்கவில்லை.
ஒருவாறு சமாளித்து நிமிர்ந்தவள் “லெட் வீ மூவ்” என்றாள் பெருமூச்சோடு.
“டாக்டர்கிட்ட போவோமா?”
“நோ... இது மசக்கை வாந்தி. கொயட் நேச்சர் சந்து! லெட் வி மூவ் ஃபர்ஸ்ட். ஐ நீட் பெட்ரெஸ்ட்.”
“அப்ப இந்தக் கடைக்காரனை நாளைக்குப் பார்த்துக்கலாமா?”
“யெஸ்... நாளைக்கு வந்து விசாரிப்போம்.”
- என்றபடி காரில் சாருபாலா ஏறிக்கொள்ள, காரும் புறப்பட்டது. சொல்லி வைத்த மாதிரி அவர்கள் விலகவும் துரியானந்தம் வரவும் சரியாக இருந்தது. பேல்பூரிக் கடைக்காரன் துரியானந்தத்திடம் ‘`கொஞ்சம் முந்தி வந்திருக்கக் கூடாது? ஒரு பெரிய பார்ட்டி கார்லயே வந்திருந்தாங்க. வெயிட் பண்ண நேரமில்லாம போயிட்டாங்க” என்றான்.
துரியானந்தம் முகத்திலும் ஏமாற்ற ரேகை ஓட ஆரம்பித்தது!
அந்தப் பிடாரன் தன் மகுடி மூலம் பங்களா முழுக்கச் சுற்றி வந்துவிட்டான். ஒரு பிரயோஜனமும் இல்லை! முத்துலட்சுமிகூட மகுடி சப்தம் கேட்டு எழுந்து வந்து மலங்க மலங்கப் பார்த்தாள். தோட்டக்கார மருதமுத்து ஒரு புறம், சமையல்கார ஆரோக்ய மேரி என்கிற அடைக்கலம்மா ஒரு புறம், பானு ஒரு புறம், அந்த ஜோதிடர் ஒரு புறம் என்று ஆளாளுக்கு ஒரு புறத்தில் நின்று கூர்ந்து பார்த்தபடியே இருந்தனர். ஆனால் பாம்பு இருந்தால்தானே அகப்படுவதற்கு?
``ஒரு சன்யாசி தன் சக்தியைத் தன் கமண்டல நீரில்தான் பாதுகாக்கிறான். நீர்பூதம் மிகப் பொதுவானது. பயன்படுத்துபவர்க்கு ஏற்ப பயன் தரும்.’’
இறுதியில் பிடாரன் இளைத்த மார்போடு மூச்செறிய ஜோதிடரிடம் வந்து “அது இப்ப இந்த வீட்டுக்குள்ள எங்கேயும் இல்லை. ஏதாவது பாதாளக் குழி வழியா வெளியேறியிருக்கும். உள்ள இருந்திருந்தா என் மகுடிக்கு அது வந்தே தீரணும்” என்றான். மௌனமாயும் ஆழமாயும் பார்த்தபடி இருந்த பாரதி, பிடாரன் அருகில் வந்தவளாக “பாம்புக்குக் காது கிடையாது - அது அதிர்வாலதான் எதையும் உணரும்னு சயின்ஸ் சொல்லுது. அப்புறம் எப்படி மகுடிக்கு அது பிடிபடும்?” என்று ஆரம்பித்தாள்.
அந்தக் கேள்வி பிடாரனை எதுவும் செய்ய வில்லை. ஆனால் ஜோதிடர் கிருஷ்ணகுமார் நந்தா முகம் கசங்கினார். பிடாரனோ “இத்தால எம்புட்டுப் பாம்புங்கள எல்லாம் பிடிச்சிருக்கேன் தெரியுமா... இல்லாட்டி என்னைக் கூப்புடுவாங்களா?” என்றான்.
“என்ன மிஸ்டர் நந்தா... என் கேள்விக்கு இதுவா பதில்?” என்று பாரதி அவர் பக்கம் திரும்பினாள்.
“மேடம் ஜி... இப்ப இந்தக் கேள்விய எதுக்குக் கேக்கறீங்க... உங்களுக்கு இவன் மேல நம்பிக்கை இல்லாட்டி விட்டுடுங்க.”
“சரி விட்டுடறேன்... ஆமா உங்களுக்கு ஏன் இந்தப் பொட்டி மேல இவ்வளவு அக்கறை?” - மிக நிதானமாய் ஆனால் மிகுந்த அழுத்தமுடன் கேட்டாள்.

“அக்கறை... அக்கறை... குச்நஹி! ஒரு காமன் இன்ட்ரஸ்ட்! ஒரு பாம்பு ஒரு பொட்டியைச் சுத்தி வருதுன்னா சம்திங் ஈஸ்தேர் அதான்..!”
“நிஜமா அவ்வளவுதானா?”
“யெஸ்... தட்ஸ் ஆல்!”
“அப்ப பாம்புக்கும் பொட்டிக்கும் சம்பந்தம் இருக்குதா?”
“டெஃபனட்லி..”
“இது ஒரு ஆன்டிக்ஸ் ஐட்டம். பாம்பு நடமாட்டமும் செடிகொடியுள்ள ஒரு வீட்டுல சகஜம். நீங்க எதை வெச்சு ரெண்டையும் கனெக்ட் பண்றீங்க?”
“நோ... இது ஆன்டிக்ஸ் ஐட்டம் இல்ல... பாம்பும் வழக்கமான பாம்பு இல்லை மேடம் ஜி...”
“பழைய புத்தகக் கடைல வாங்கினவ நான்...”
“அப்படித்தான் டைம் வேலை செய்யும்...”
“டைம் வேலை எல்லாம் செய்யாது. டயத்துக்குள்ள நாமதான் வேலை செய்யணும்.”
“ஓ.கே. மேடம் ஜி... நான் ஓப்பன் சேலஞ் பண்றேன். இந்தப் பெட்டியை உடைக்க நீங்க பர்மிஷன் கொடுங்க. இதுக்குள்ள பல அபூர்வமான விஷயங்கள் இருக்குது. அதை வெச்சு உங்க அப்பாவை நான் காப்பாத்திக் காட்டுறேன்.”
“அது எப்படி உங்களுக்குத் தெரியும், அதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க...”
“சொல்றேன்... இந்த மாதிரி பெட்டி ரொம்ப அபூர்வம். இதோட லாக்கர் சிஸ்டம்கூட ரொம்ப அபூர்வம். காத்துகூடப் போக முடியாதபடி இப்ப இது லாக் ஆகியிருக்கு. ஃப்ரிட்ஜ்ல ஒரு பொருளை வெச்சா எப்படிக் கெட்டுப்போகாதோ அப்படி இதுக்குள்ள ஒரு குளிர்ச்சியும் பாதுகாப்பும் இருக்குது. பெரும்பாலும் இதை சித்தர்கள்தான் வெச்சிருந்தாங்க. நான் சித்தர் புத்தகம் படிச்சுதான் ஜோசியனானேன். அதனால எனக்கு இதைப் பத்தி நல்லா தெரியும். இது ஒரு சித்தன் பெட்டி! சித்தன் பெட்டில தங்கம் வைரம்லாம் இருக்காது. நிச்சயமா மருந்து, குளிகை ரசமணி, அப்புறம் இந்த மாதிரி பெட்டிங்கறதால ரசவாத தைலம், மருத்துவ ஏடுகள் இருக்கும். வற்றாத விபூதி வாசனை அடிக்கறதால நான் சொல்றது நிச்சயம்!”
“சரி... இதைத் திறக்கற வழி இப்ப எங்களுக்குத் தெரியும். இந்தப் பெட்டியோட பேர்லதான் அந்த வழிமுறை ஒளிஞ்சிருக்கு. ஆகையால இதை உடைக்காமலே திறக்கறதுதான் எங்க நோக்கம். அப்படித் திறந்து பார்த்துட்டு நான், நீங்க சொன்னது சரியா தப்பான்னு உங்களுக்குச் சொல்றேன். இப்ப நீங்க கிளம்புங்க.”
- பாரதி மிக நேராக, சுற்றி வளைக்காமல் பேசிய பேச்சு ஜோதிடர் கிருஷ்ணகுமார் நந்தாவை லேசாக அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. சற்றே திணறலுடன் பார்த்தார். புருவத்தில் வளர்ந்திருந்த அரிவாள் முடி இப்படியும் அப்படியும் ஆடியது.
பானு மௌனமாகப் பார்த்தபடியே இருந்தாள். பலத்த இறுக்கம் அவளிடம். ஆனால் ஜோதிடர் நந்தாவிடம் அசைவே இல்லை.
“என்ன ஜோசியரே... நான் சொன்னது உங்க காதுல விழலையா?”
“நல்லா விழுந்துச்சு. இதை எப்படித் திறக்க முடியும்னு நம்பறீங்க...”
“நீங்க எதுக்கு இப்ப அதைக் கேட்கறீங்க?”
“இல்ல... உங்களால முடியும்னா, இப்பவே திறக்கலாமே. நானும் இருக்கேன்... நான் சொன்னபடி எல்லாம் இருந்தா அப்புறம் என் பேச்சைக் கேட்பீங்கதானே?”
“மிஸ்டர் நந்தா... நான் நல்லதை யார் சொன்னாலும் கேட்கறவ. மற்றபடி யார் எது சொன்னாலும் கேட்கறவ கிடையாது. குறிப்பா ஜோதிடர்களை நான் மதிக்க விரும்பல. உங்களுக்குப் புரியும்னு நம்பறேன். ப்ளீஸ் லீவ் மீ...”
- சற்றுக் கடுமையான குரலில் பாரதி சொன்ன விதம் கிருஷ்ணகுமார் நந்தாவைச் சற்று ஸ்தம்பிக்கவே வைத்தது.
“இப்ப சொல்றேன் மேடம்ஜி, இந்தப் பெட்டிலதான் உங்கப்பாவுக்கு மருந்து இருக்கு. அவர் கட்டாயம் பிழைப்பார். அதை நான் சாதிப்பேன். ஆனா உங்களால இந்தப் பெட்டியை வெச்சு எதுவும் செய்ய முடியாது. உங்கப்பா பிழைக்க மாட்டார்னு டாக்டர்கள் சொல்லிட் டாங்க. 75 பர்சன்ட் சான்ஸ் இல்லை. 25 பர்சன்ட் தான் சான்ஸ்... அதுவும் குறைஞ்சு கிட்டேபோகும்... உங்க பிடிவாதத்துனால அப்பாவை மிஸ் பண்ணிடாதீங்க. நான் சொன்ன மாதிரி இருந்தா தயவு செய்து என்னைக் கூப்பிடுங்கோ.” - என்று வேகமாய்ப் புறப்பட்டார் அந்த ஜோதிடர். பானுவிடம் தவிப்பு. மெல்ல அவளும் பின்தொடர்ந்தாள். செல்லும்போது ஜோதிடர் பார்வை வாளின் மேலும் சென்றது. நெருங்கிச் சென்று உற்றுப் பார்த்தவர்.
“இதுகூடவே ஒரு துர்தேவதை இருக்கு. அதுக்கு ரத்தம்தான் ரொம்ப இஷ்டம்! ஒரு காட்டுக் கடவுளோட ஏவல் சக்திதான் அந்த துர்தேவதை... எப்ப யார் இந்த வாளை அந்தக் கடவுளை வணங்காம வெளிய எடுத்தாலும் இந்த துர்தேவதை ரத்தம் பார்த்துடும். மற்றபடி அப்படி ரத்தம் பார்க்கலைன்னா எடுத்தவங்க ரொம்ப நல்லவங்கன்னு அர்த்தம். நான் சொல்றது சரியாங்கறத இப்பவேகூடப் பரிசோதனை பண்ணிப் பார்க்கலாம்” என்ற ஜோதிடர் பிடாரனை அழைத்து வாளை வெளியே எடுக்கச் சொல்ல, அவனும் தயங்கியபடியே வெளியே உருவினான். அப்படியும் வாள் முனை அவன் வயிற்றில் உரசி ரத்தம் தெறித்தது!
முத்து லட்சுமிக்கு அதைப் பார்க்க மயக்கமே வரும்போல் இருந்தது. இப்போது ஜோதிடரே வாளை உறைக்குள் போட்டுவிட்டு, திரும்ப உருவ விழைந்தவராக ‘இது எந்த சாமிக்குச் சொந்தமோ அந்தச்சாமிக்கு என் பரமநமஸ்காரம்!’ என்ற படியே வாளை உருவினார். எந்தக் காயமும் இன்றி வாள் அவர் கையில் மின்னியது.
“இந்த வாளாலயும் பல நல்ல காரியங்கள் சாதிக்கலாம். ஆனா நான் சொல்றத நம்பணும். நம்புவீங்க.. போகப்போக நம்புவீங்க.. வரேன்” என்று வெளியில் நிற்கும் தன் படகு கார் நோக்கி நடந்தார். பாரதியிடம்கூட ஸ்தம்பிப்பு!
தமிழ் வாணி அலுவலகம்!
மணி ஏழைக் கடந்துவிட்ட நிலையில் ஆசிரியர் ஜெயராமன் புறப்பட முனைந்தபோது கைப்பேசி வழி அவரின் காதில் பாரதியின் குரல்.

“அடடே பாரதியா, உன் காலுக்காகத்தான் பாரதி காத்துக்கிட்டிருந்தேன்... என்னாச்சு, உன் அப்பா உடம்பு திரும்ப சீரியஸ்னும், நீ பழநி போயிட்டேன்னும் கேள்விப்பட்டேன்? ரைட்டர் அரவிந்தன்கூட உன்கூட வந்து உதவி செய்துகிட்டி ருக்காராமே... ஈஸ் இட்?”
“சார்... நான் இப்ப என் பங்களால இருந்துதான் பேசறேன். ரொம்பவே குழப்பமான ஒரு சூழ்நிலைல இருக்கேன். உங்ககூட பேசினா தெளிவு கிடைக்கும்னு தோணுது. உங்க அப்பாய்ன்மென்ட் வேணும், கிடைக்குமா?”
எப்ப யார் இந்த வாளை அந்தக் கடவுளை வணங்காம வெளிய எடுத்தாலும் இந்த துர்தேவதை ரத்தம் பார்த்துடும்.
“இப்பவே பேசணுமா பாரதி...”
“ஆமாம் சார்..”
“அரவிந்தன் கூட இருக்காரா?”
“இல்லை. அவர் பழநியிலிருந்து வந்துகிட்டிருக்காரு. நான் முன்னால வந்துட்டேன்.”
“அப்ப... இப்ப வீட்ல உன்கூட யார் இருக்கா?”
“என் பாட்டி, நான், வேலைக்காரங்க... அப்புறம் மிஸ்டிகலா ஒரு பொட்டி, ஒரு வாள், எப்பவேணா வரலாங்கற நிலைல ஒரு பாம்பு.”
“வாட்... பொட்டி, வாள், பாம்பா?”
‘`ஆமாம் சார்... ஆன்டிக்ஸ்னு வாங்கின ஐட்டம் மிஸ்டிக்கா மாறிடிச்சு. என்னைச் சுத்தி பெருசா ஒரு சதி நடக்கற மாதிரி எனக்குத் தோணுது சார்...”
- பாரதி படபடத்தாள்!
- தொடரும்