
அன்று போகர் பிரான் எப்போது பேசினாலும் அதில் ஒரு சாந்தம் மட்டுமே இருக்கும்.
அன்று போகர் பிரான் எப்போது பேசினாலும் அதில் ஒரு சாந்தம் மட்டுமே இருக்கும். `கோபம், தாபம், ஆயாசம் எள்ளல்’ என்று மனிதர்களிடம் தென்படும் உணர்வுகள் அறவே இருக்காது. அப்படிப்பட்டவர் எப்போதாவது கோபவயப்படும்போது அது பளிச்சென்று தெரிந்துவிடும். வந்த வேகத்தில் அந்தக் கோபம் சென்றுவிட்டாலும்கூட அவர் கோபப்பட்டார் என்பதே அதைக் கண்டவர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்திவிடும்.

நவமரும்கூட போகர் சற்று ரௌத்திரமாகப் பேசியதைக் கேட்டு ஆச்சர்யமும் அதிர்ச்சியும் கொண்டனர். போகரும் இன்னமும் ஏதாவது கேள்வி இருக்கிறதா என்பதுபோல் பார்த்தார். நவமரிடம் ஒருவகை மௌனம். போகரும் புரிந்துகொண்டார்.
``நீங்கள் செல்லலாம். உங்களின் அன்றாடப் பணியில் எப்போதும்போல ஈடுபடுங்கள். உங்கள் வசம் பாஷாணம் இருப்பதை மறந்து நீங்கள் செயல்பட வேண்டும். அவ்வப்போது அது ஞாபகத்துக்கு வந்தால் பரவாயில்லை’’ என்றவர், அனைவரையும் ஆசீர்வதிப்பதுபோலப் பார்த்தார். நவமரும் கலைந்தனர்.
அப்போது படபடவென்று சிறகசைத்தபடி `சிமிழி’ என்று போகர் செல்லமாக அழைத்திடும் மணிப்புறா போகர் முன் உள்ள சபரிக் கொடி பரவியிருக்கும் மூங்கில் வேலியின் மேல் வந்து அமர்ந்தது. அதன் கால்களில் பருமனாகச் செய்தி உருளி.
போகர் அதனருகில் சென்று, அந்தப் புறாவை அன்போடு பற்றி, காலில் கட்டப்பட்டிருந்த உருளியை அவிழ்த்து, அதன் மூடியைத் திறந்து உள்ளே பார்த்தார். உள்ளே திருநீறு நிரம்பியிருந்தது. உள்ளங்கையில் கொட்டவும் ஒரு சிட்டிகை இருந்தது. பன்னீரில் குழைத்து நெற்றியில் பூசிக்கொண்டால் மணக்கும்.அவ்வளவும் அகத்தியர் பெருமானின் யாக பஸ்பம்.
அவர் சீடர்கள்தான் அனுப்பியுள்ளனர் என்றால், பொதிகை மலையில் பெருமான் எழுந்தருளியிருக்கிறார் என்று பொருள்! அவர் பொதிகை வந்துவிட்டாலே பூவுலக நன்மையின் பொருட்டு வேள்விபுரிவது வழக்கம். அதில் பல சித்தர் பெருமக்கள் பங்கேற்பர். ‘திருமூலர், கொங்கணர், கருவூரார், பிண்ணாக்கீசர், பிரம்மமுனி, கோரக்கர், அகப்பேய் சித்தர், உரோமரிஷி, கடுவெளிச்சித்தர், காகபுஜண்டர், காலாங்கி’ என்று எல்லோருமே குழுமிவிடுவர். அதிலும் மார்கழி மாத காலகதியும், அதைத் தொடர்ந்து வரும் தை மாதமும் விசேஷமான நாள்களை உடையவை...
மார்கழி மாத துவாதசி திதி விஷமும் அமிர்தமாகும் நாள். மார்கழி மாத திருவாதிரைத் திருநாள் இயக்க சக்தியை உணர்ந்து தெளியும் நாள். பின்வரும் தை முதல் நாள் சூரிய கிரணங்களால் சகல உயிர்களும் புத்துணர்வு பெற்றிடும் நாள். அதன் பின்வரும் பூசத்திருநாள் சித்த நோக்கு சீர்மை பெற்றிடும் நாள்.

இந்நாள்களில் சித்த உலகின் தலைவராகக் கருதப்படும் அகத்தியர் பெருமானின் தரிசனமும், அவரது வழிகாட்டுதலும் சுலபமாக ஒரு சித்தனுக்குக் கிட்டிடும். இப்போதும்கூட அதற்கான ஓர் அழைப்புபோன்றதே சிமிழி கொணர்ந்த இந்த விபூதி. அதன் மணமும் நிறமும், அதன் இதமான சூடும் பொதிகை சித்தவெளியில் வேள்வி தொடங்கிவிட்டதை அவருக்கு உணர்த்தின. ஒரு விநாடி அங்கு சென்று வர எண்ணியவர், முன்னதாக கன்னிவாடி குகைப்புலம் சென்று கருமார்களைப் பார்த்துவிட எண்ணினார். அதன் நிமித்தம் தனது தியானக் கூடத்துக்குள் நுழைந்தவர், தான் வரைந்த தண்டபாணி தெய்வத்தின் திரைச்சீலையோடு பேழை ஒன்றில் கங்கை நீருக்குள் கிடந்த மேகமணிக் குளிகையைக் கையிலெடுத்தார். ஓர் இலந்தைப்பழ அளவில் வெண் சாம்பல் நிறத்தில் இருந்தது அது. ஈரம் சொட்டியது. அதைத் தன் காஷாய வஸ்திரத்தால் துடைத்தவர், பின் உள்ளங்கையில் வைத்து தியானித்துவிட்டு வாயில் போட்டுக்கொண்டார். விழுங்கினாற்போல்தான் தோன்றியது. அப்படியே கை இரண்டையும் கட்டிக்கொண்டு தன் தியானக் கூடத்தின் பின்புறமாகத் தெரியும் ஒரு சிறிய வனப்பரப்புக்குள் நடந்தார்.
கன்னிவாடி மலையின் குகை! கருமார் இருவரும் கச்சம் கட்டிய நிலையில் திறந்த மார்போடு தலைக்குத் துணிப்பாகை தரித்திருந்தனர். குகைப்பரப்பில் ஒரு துணியை விரித்து அதன் மேல் சலித்த வண்டல், சுண்ணாம்பு மசி, மைபோன்ற களிமண் கட்டிகள், வெட்டி எடுத்து வந்திருந்த தேன்மெழுகுக் கட்டிகள், கண்ணாடி சாடியில் திராவகம், முருங்கைப் பிசின், அரைச்சட்டிகள், காற்சட்டிகள், காரைத்தொட்டி என்று தங்கள் தேவை நிமித்தம் பல பொருள்களைப் பரத்தி வைத்திருந்தனர்.
இதுபோக வழிப்பான், துடைப்பான், குறிக்கட்டி, அடிக்கோல், மட்டக்கயிறு என்றும் பொருள்கள். குகைத்தரைப் பரப்பில் செங்காவியில் தோராயமாக ஓர் உருவத்தை வரைந்து பூசியிருந்தனர்.
ஓர் ஓரமாகக் கணப்பை உருவாக்கியிருந்தனர். அதில் ஓரடி உயரத்துக்குத் தீநாக்குகள் நெளிவுகளோடு தெரிந்தன. அந்தக் கணப்பை ஒட்டி சல்லடை, கடப்பாரை, மூங்கில் கூடை, கொத்து வெட்டி, சுத்தியல், அரிவாள், அரம், குத்தூசி, தோலால் செய்யப்பட்ட காற்றுத் துருத்தி, கரித்துண்டுகள் என்று பொருள்கள் கிடந்தன. குகைச் சுவரில் ஏழெட்டு பந்தங்கள் இலுப்பை எண்ணெயில் நனைந்து எரிந்து கொண்டிருந்தன. அதனால் பொன்னால் பூசியதுபோல உள்ளே வெளிச்சம்.
கருமார்களில் செங்கான் மண்டியிட்டு, தரைப்பரப்பில் செங்காவிகொண்டு உருவாக்கியிருந்த உருவத்தில் ஈரத்துணிகொண்டு திருத்தங்கள் செய்தபடி இருக்க, அதற்கான அடவுகளை ஆழிமுத்து சொன்னபடி இருந்தான். அப்போது இருவர் நாசியையும் ஒருவித விபூதி வாசம் ஈர்க்கத் தொடங்கியது. இருவருமே ஒருசேர ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டும், திரும்பி நாற்புறமும் பார்த்தனர். அப்போது குகைவாயிலில் போகர் பிரான் தெரிந்தார்!
காவி வேட்டி, மார்பின் மேல் போர்த்தினாற் போன்ற காவித்துண்டு, மலைக்காற்றில் படபடக்கும் தலைக்கேசம், நாபியைத் தொடவிழையும் தாடியின் கூரிய பாகம் என்று தியானக் கூடத்தை விட்டு வெளியேறிய அதே கோலத்தில் அங்கே நின்றுகொண்டிருந்தார். ஒரு கையில் திரைச்சீலை!
``குருசாமி நீங்களா?’’ என்று செங்கானும் ஆழிமுத்துவும் வேகமாக வந்து குனிந்து காலைத் தொட்டு வணங்கினர். போகர் புன்னகைத்தார். அப்படியே பார்வையால் குகை முழுக்கப் பார்த்தார். அவர்கள் செயல்படத் தொடங்கிவிட்டதை அவர் கண்ணில்பட்ட பொருள்கள் உணர்த்தின. அவர் தன் வசமிருந்த திரைச்சீலையை அவர்கள் தரைப்பரப்பில் வரைந்திருந்த செங்காவி உருவத்தின் அருகில் சென்று விரித்து, அருகில் இருத்தினார்.
கிட்டத்தட்ட இரு உருவமும் ஒன்றாகவே இருந்தன. நான்கரை அடி உயரம் ஒன்றரை அடி அகலம், அதனால் உருவான செவ்வகம் என்று பெரிய வித்தியாசமில்லை. அதைக் கண்ட போகர் முகத்தில் மேலும் புன்னகை கூடியது.
``அருமை... அற்புதம்... எங்கே உங்கள் உயரத்துக்கு உருவத்தை வரைந்துவிடுவீர்களோ என்று எண்ணியிருந்தேன். சிலா ரூபங்கள் தத்துவங்களையும், மறைமுகமாக அநேக செய்திகளையும் உடையவை. அதிலும் இந்த தண்டபாணி பன்னிரண்டு கரங்கள் கொண்டவன்போலப் பன்னிரு பிராயத்தவன்! பருவங்கள் ஏழில் மீளி என்னும் இரண்டாம் பருவத்தவன். மறவோன் என்னும் அடுத்த பருவத்தின் சாயல் ஆங்காங்கே தெரியலாம். ஆனால் மீளிப்பருவம் என்பதை மறந்துவிடக் கூடாது.’’
``ஓரளவு நாங்களும் இதுகுறித்து அறிவோம் குருவே... ஆனால் ஒரு சிற்பியளவுக்கு எங்களுக்கு ஞானமில்லை...’’
``அத்தகைய ஞானம் உங்களுக்கு வாய்க்க வேண்டுமெனில், சிற்ப சாஸ்திரம் குறித்த நூல்களைத் தகுந்த சிற்பியிடம் வாசித்துக் கற்க வேண்டும். `விஸ்வதர்மம், மிகுதாவட்டம், பாராசரியம், மானபோதம், கலந்திரம், மயன் மதம்’ என்று ஏராளமான நூல்கள் உள்ளன. இவற்றை வாசித்திட உங்களுக்கும் ஞானம் ஏற்படும். `வாஸ்து சாஸ்திர உபநிடதம்’ என்றொரு நூலும் உங்களைப் போன்றோர் வாசிப்பது அவசியம். அதேபோல் தேவபாஷையில் அமைந்த காமிகாகமம் எனும் நூலும் பிரதானம்...’’
``இவற்றையெல்லாம் குருகுலத்துக்குச் சென்றாலல்லவா கற்க முடியும்? நாங்கள் எங்கள் முன்னோர்களையே குருவாகக்கொண்டு இக்கலையில் பணிபுரிபவர்கள்.’’
``வழிவழியாக வருவதும் சிறப்பு மிக்கதே... ரத்தத்திலேயே கலையறிவு ஊறியிருக்கும். காலத்தால் மிகுந்த ஞானமும் ஏற்பட்டு, பேசும் சிற்பங்களையே படைக்க முடியும்...’’
``பேசும் சிற்பங்களா?’’
``ஏன் நம்ப முடியவில்லையா?’’
``ஆம்... கல் உருவம் கவர்ந்து வேண்டுமானால் இழுக்கும். எங்காவது பேசுமா?’’
``கந்த மாடன் என்றொரு சிற்பி. இவர் சாமுத்ரிகா லட்சணங்களை நன்கு அறிந்தவர். மொத்த சாமுத்ரிகா லட்சணங்கள் முப்பத்திரண்டு. இந்த லட்சணம் பிசகாமல் சிலை வடித்து இதன் காதில் ஜீவ மந்திரத்தை ஓதினால், இச்சிலைக்கு உயிர் வந்துவிடும் என்பர். இந்தச் சிற்பி அதுபோல் ஒரு நந்தி உருவத்தை ஒரு சிவாலயத்தில் செதுக்கினார். அந்தச் சிவாலயம் விடைப்பாடி எனும் ஊரில் உள்ளது. இப்போதும் அங்கு பௌர்ணமி இரவன்று சென்றால் நள்ளிரவில் அந்த விடை உயிர்த்தெழுந்து கோயிலுக்குள் நடமாடுவதைக் காணலாம்...’’
``நிஜமாகவா... கற்சிலைக்கு உயிர் வந்திடுமா?’’
``முப்பத்திரண்டு லட்சணமுள்ளவற்றுக்கு உயிர் வரும். ஜீவ மந்திரம் ஓதத் தெரிந்திருக்க வேண்டும்...’’
``இது என்ன... ஏதோ கண்கட்டுபோல் அல்லவா உணரத் தோன்றுகிறது.’’
``ஒரு கோணத்தில் அப்படித்தான். ஆனால், இம்மட்டில் பலகோணங்கள் உள்ளன. நம் உடலின் திசுக்கள் அசையும் தன்மையும் மாறும் தன்மையும்கொண்டவை. நொடிக்கு நொடி மாறிக்கொண்டிருப்பதே நம் தேகம். சிலா ரூபத்தில் அதுபோல் மாற்றங்களில்லை. பஞ்சபூதங்களின் உறைந்த திடத் தன்மையையே கற்கள் உணர்த்துகின்றன. அதே சமயம் இவை நல்ல ஒலி வாங்கிகள்! ஒரு கல்லானது அதன் முன் உருவாகும் சர்வ சப்தங்களையும் ஈர்த்துப் பிடித்துக்கொள்கிறது என்பதை நுண்யோகியாக ஒருவர் மாறும்போது உணரலாம். அதாவது, தன் உடம்பை நூறு சதவிகிதம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனே நுண்யோகியாவான். இவனால் ஒரு பூப்பூக்கும் ஓசையைக்கூடக் கேட்டுணர முடியும். அத்தகைய அதி தீவிர கேட்கும் திறனை உடைய செவிப்புலன்களால் இக்கற்களில் படிந்திருக்கும் சப்தத்தைக் கேட்டுச் சொல்ல முடியும். அப்படிப்பட்டவர்கள் அநேகர் இம்மண்ணில் உண்டு.’’
``இப்படியெல்லாம்கூட அதிசயமான விஷயங்கள் உண்டு என்பதை நாங்களேகூட இப்போதுதான் கேட்கிறோம்...’’
``தெரியாதவரை எதுவும் அதிசயம்தான். தெரிந்துவிட்டால், ஒரு முறைக்குப் பலமுறை பரிச்சயமும் ஏற்பட்டுவிட்டால் அது எதுவாயினும் பத்தோடு பதினொன்றாகிவிடும்.’’
``நீங்கள் சொன்ன பரிச்சயங்கள் எதனாலோ எங்களுக்கு இதுவரை ஏற்படவே இல்லை. அது ஏன்?’’
``வாழும் முறையும் வாழ்விடமும்தான் அதற்குக் காரணங்கள்!’’
``அதற்கு நாங்கள் எப்படிப் பொறுப்பாக முடியும்?’’
``அறிவுபூர்வமாக நீங்கள் சொல்வதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் ஒவ்வோர் உயிரின் பின்னாலும் கர்மபூர்வம் என்கிற ஒரு விஷயமும் உண்டு. அதுதான் ஓர் உயிரின் பிறப்பைத் தீர்மானம் செய்கிறது. அதுதான் ஒருவனை அரசன் மகனாகப் பிறக்கச் செய்து தங்கத் தொட்டிலில் கிடத்துகிறது. அதுதான் ஒருவனை ஆண்டியாக ஆக்கித் தெருவில் விடுகிறது...’’
``கர்மத்துக்கு அப்படி ஒரு சக்தியா?’’
``அதிலென்ன சந்தேகம்?’’
``கர்மம் என்று தாங்கள் எதைச் சொல்கிறீர்கள்? அதுவே எங்களுக்குப் புரியவில்லை.’’
``உங்கள் செயல்பாடுகள் அவ்வளவுமே கர்மம்தான். இந்தச் செயல்பாடு நல்லவிதமானால் அது நற்கருமம். தீமை பயக்குமானால் தீய கருமம்...’’
``எது நல்லது, எது கெட்டது என்பதிலேயே தெளிவில்லாதபோது எப்படி குருவே ஒருவன் நல்வினையை மட்டுமே செய்ய முடியும்?’’
``தெளிவில்லாமல் புரியும் கெட்ட கர்மங்களுக்குப் பரிகாரங்களும் மன்னிப்பும் உண்டு - தெரிந்து செய்பவற்றுக்கு இரண்டும் இல்லை. அனுபவித்துத்தான் தீர வேண்டும்.’’
``குருவே... உங்களோடு பேசும்போது நேரம் போவதே தெரியவில்லை... ஒரே ஒரு வேண்டுகோள்...’’
``என்ன?’’
``ஓர் அதிசய அனுபவத்துக்காவது நீங்கள் எங்களை ஆட்படுத்த வேண்டும். நாங்கள் அதை அனுபவபூர்வமாக உணர வேண்டும்...’’
``அவ்வளவுதானே... விடைப்பாடி கல் நந்தி உயிர்த்தெழுவதை நீங்கள் காணச் செய்கிறேன். அதற்கு நாள்கள் உள்ளன. அதற்குள் நீங்கள் அச்சுருவத்தைச் செய்துவிட வேண்டியது முக்கியம்.’’
``ஒவ்வொரு நொடியும் நாங்கள் அதில்தான் கவனமாக உள்ளோம். மெழுகால் சிலை வடித்து, களிமண்ணைக் கரைத்துச் சிலைமேல் ஊற்றி, அதைச் சுட்டுக் காயச் செய்து, பின் சிலைக்குள் உலோகக் குழம்பை உருக்கி வார்த்திடும்போது உள்ளிருக்கும் மெழுகு உருகி வெளியேறிவிடும். உலோகம் உள்ளே தங்கிவிடும். பின் ஆறிவிட்ட நிலையில் மேலுள்ள மண்ணை உடைக்க, அவ்வளவு மண்ணும் அகன்று உள்ளே சிலாரூபம் காட்சி தரும்... இது உலோகச் சிலைக்கான நடைமுறை. தாங்களோ நவபாஷாணத்தால் சிலையைச் செய்ய விரும்புகிறீர்கள். பாஷாணக் கலவை உலோகம்போல இறுகுமா - இல்லை நெளிந்து கொடுக்குமா என்பதை நாங்கள் அறிந்திருக்கவில்லை. எனவே தாங்கள்தான் அதைப் பற்றிக் கூற வேண்டும்.’’
``சரியான கேள்வி... எனக்கேகூட இது புதுவித அனுபவம்தான். எனவே நான் முன்னதாக ஓரடி உயர சிவலிங்கம் ஒன்றைச் செய்ய விரும்புகிறேன். அநேகமாக பாஷாணக் குழம்புக்கு உலோக குணமே ஏற்படும் எனக் கருதுகிறேன். அதேபோல இந்த உலகில் இந்த நொடி கோடிக்கணக்கில் லிங்க சொரூபங்கள் இருக்கக்கூடும். ஆனால் நவபாஷாணலிங்கம் என்று ஒன்று இருக்க வாய்ப்பே இல்லை.
நானே முதலில் அதைச் செய்து பார்த்து, அதன் உறுதியைத் தெரிந்துகொண்டு பிறகு தண்டபாணி விக்ரகத்தைச் செய்ய விரும்புகிறேன்...’’
``நல்ல கருத்து... பாஷாணத்தைப் புரிந்துகொள்ள இது ஒரு நல்ல வழிதான்...’’

``ஆம்... அந்த ஈசனும் பாஷாணன்தான்! அதனால்தான் அவனுக்கு, `நீலகண்டன்’ என்று பெயர். எனவே, நான் முதலில் செய்யும் பாஷாண லிங்கத்துக்கு, `நீலகண்ட லிங்கம்’ என்பதே பெயராகும்...’’
``கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது. அந்த நீலகண்ட லிங்க மாதிரி லிங்கத்தை நாங்கள் இப்போது செய்யத் தொடங்கிவிடவா?’’
``ஆம்... முதலில் அதையே செய்யுங்கள். நாளை திருவாதிரை நட்சத்திர நாள் - திங்கள்கிழமை - அமாவாசையும் வருகிறது. இது ஓர் அபூர்வ இணைப்பு. இப்படிப்பட்ட நாளை, `அமாசோம நாள்’ என்போம். இந்நாளில் அரசமரத்தைச் சுற்றிட உடம்பின் சர்வ நாடிகளும் சுத்தமாகும். சுரப்பிகள் சீராகச் சுரக்கும். அது மட்டுமல்ல, பெண் மக்கள் இப்படி ஒரு நாளில், `அரசப்ரதட்சணம்’ எனும் அரசவலம் வந்தால், கர்ப்பப்பை வலிமை பெற்று, பிள்ளைப்பேறு உறுதியாகும். பிறக்கும் குழந்தையும் ஆணாக அமையும். நாளைய தினத்துக்கு அப்படி ஒரு வலிமையை இயற்கை இறையருள் வடிவில் வழங்கியுள்ளது. எனவே, நாளை மதியம் உச்சிவேளையில் அபிஜித் முகூர்த்த காலத்தில் அந்த மாதிரி நீலகண்ட லிங்கத்தை நீங்கள் செய்து வையுங்கள். நான் நவபாஷாணக் கலப்போடு வருகிறேன். முன்னதாக பொதிகை மலைக்குச் சென்று அகத்தியர் பெருமானிடமும் ஏனைய சித்தர் பெருமக்களிடமும் ஆசி பெற்றுக்கொள்கிறேன்...’’ - என்ற போகர் அவர்கள் இருவர் சிரத்தின் மேலும் கரம் பதித்து ஆசி கூறிவிட்டுப் புறப்படலானார்!
இன்று சாந்தப்ரகாஷையும் சாருபாலாவையும் பார்த்த பாரதியிடம், `யார் இவர்கள்?’ எனும் கேள்வி. அரவிந்தனும், `கடப யாதி’ எனும் அந்தப் புத்தகத்திலிருந்து நிமிர்ந்து அவர்களைப் பார்த்தான். சாந்தப்ரகாஷ் சம்பிரதாயமாக கைநிறையப் பழங்கள் வாங்கி வந்திருந்தான். அச்சிட்ட ஒரு துணிப்பை பார்த்த மாத்திரத்தில் அதை உணர்த்தியது.
``வெரி குட்மார்னிங்’’ என்று சாந்தப்ரகாஷிடம் ஓர் இதமான தொடக்கம். பதிலுக்கு ``குட்மார்னிங்’’ என்ற பாரதியிடம் சாந்தப்ரகாஷ் பழங்களை நீட்டினான்.
``என்ன இதெல்லாம்?’’
``ஜஸ்ட் ஃப்ரூட்ஸ். முதல் முதலா சந்திக்கும்போது பூ பழம்னு சந்திக்கறதுதானே வழக்கம்...’’
``நீங்க?’’ - பழங்களை வாங்கிக்கொண்டே கேட்டாள். பின் அதை ஒரு சோபாமேல் வைத்தாள்.
``என் பேர் சாந்தப்ரகாஷ். ஷி ஈஸ் மை வைஃப் சாருபாலா... நாங்க யூ.எஸ்ல இருந்து வந்திருக்கோம். நான் அங்க ஒரு கூரியர் சர்வீஸ் இண்டஸ்ட்ரி நடத்தறேன். நாங்க பல்லாவரம் பிரம்மாண்ட ஜமீனோட வாரிசுகள்...’’
- சாந்தப்ரகாஷ் சொல்லி முடிக்கவும் பாரதியும் சற்றே புன்னகைக்கு மாறியவளாக, ``வாங்க உக்காருங்க’’ என்றாள். அந்த இடைப்பட்ட நேரத்தில் சாருபாலா ஹாலில் முருகன் படத்துக்குக் கீழ் வைக்கப்பட்டிருந்த பெட்டியைப் பார்த்துவிட்டிருந்தாள். அவள் முகத்தில் அலமலப்பு. பாரதி உட்காரச் சொன்னதைக் கேளாதவள்போல அதனருகில் சென்று உற்றுப் பார்க்கத் தொடங்கினாள். சாந்தப்ரகாஷும் அவளை நெருங்கி, பெட்டியைப் பார்க்கலானான். பாரதியும் அவர்களை நெருங்கினாள்.
``இந்தப் பெட்டி?’’
``எதுக்குக் கேக்கறீங்க?’’
``இது எங்க ஜமீன் பங்களாவுலேருந்து எடுத்துகிட்டு வந்ததுதானே?’’
``சாரி... நான் இதை ஒரு ஆன்டிக்ஸா விலைக்கு வாங்கினேன்...’’
``அந்த பிளாட்ஃபாரக் கடை துரியானந்தம்கிட்ட இருந்துதானே?’’
``அ... ஆமாம்...’’
``நாங்களும் அவன் மூலமாத்தான் உங்க அட்ரஸைத் தெரிஞ்சிகிட்டு வந்திருக்கோம். இது எங்க குடும்ப பிராபர்ட்டி. என் கொள்ளுத் தாத்தாவோ, எள்ளுத் தாத்தாவோ வெச்சிருந்தது.’’
``ஐ.சீ... வாங்க, முதல்ல உக்காருங்க...’’ - பாரதி அவர்களை சோபா நோக்கிக் கைகாட்டி அழைத்தாள். அவர்களும் வந்து அமர்ந்தனர். ஆனால் சாருபாலா பார்வை அதன்மேலேயே இருந்தது.
சாந்தப்ரகாஷ் மட்டும் பாரதியைப் பார்த்துப் பேசினான்.
``இது எங்க குடும்பச் சொத்து... இதுக்காகத்தான் நாங்க யு.எஸ்ல இருந்தே வந்திருக்கோம்’’ என்று சாந்தப்ரகாஷ் கூறவும் அரவிந்தனுக்குள் நேற்று இரவில் பழநியிலிருந்து ரிப்போர்ட்டர் செந்தில் சொன்னதுதான் நினைவுக்கு வந்தது. `இந்தப் பெட்டிக்காக இரண்டு பேர் வருவார்கள்’ என்று அந்தப் பண்டாரச் சித்தர் சொல்லியிருந்தாரே?
அந்த ஞாபகத்தோடு புத்தகத்தை மடித்து வைத்துவிட்டு அவனும் பாரதி அருகில் வந்து அமர்ந்தான்.
சாந்தப்ரகாஷ் முகத்தில் ஒரு நான்கு நாள் தாடி, கண்களில் லேசான கலக்கம் - ஆனால் உடையில் உயர்தர பிராண்டடு முத்திரையும் நேர்த்தியும்... பாடிஸ்ப்ரேகூட லோக்கல் இன்றி அவன் ஒரு ஃபாரினர் என்பதை அழுத்தமாக உணர்த்தவும் பாரதிக்கு என்ன பேசுவது என்பதில் குழப்பம்.
அப்போது சாருலதா யதார்த்தமாகப் பெட்டிக்கு அருகில் ஒரு விரித்த வண்ணத் துணிமேல் கலைப்பொருள்போல் வைக்கப்பட்டிருந்த வாளையும் பார்த்துவிட்டு, எழுந்து அதனருகே சென்றாள்.
``சாரு... எங்க போறே - ஸ்ட்ரெய்ன் பண்ணாதே.’’
``இல்லீங்க... இந்த வாளை நான் எங்கேயோ பார்த்திருக்கேங்க...’’ என்றபடியே அருகில் சென்று அதைக் கையில் எடுக்கவும் செய்தாள்.
``அதுவும் ஒரு ஆன்டிக்ஸ் ஐட்டமா அந்த துரியானந்தம்கிட்ட வாங்கினதுதான்’’ என்றபடியே பாரதியும் வேகமாக அவளை நெருங்கி, எங்கே அவள் வாளை உருவிவிடப் போகிறாளோ என்று பயந்தாள்.
சாருபாலா உற்றுப் பார்த்தபடியே விழியை விரித்தவளாக, ``இது எங்க குலதெய்வமான சுடலை மாடசாமிக்கு நேர்த்திக்கடனா செலுத்தற நேர்த்திக்கத்தி மாதிரியே இருக்கு’’ என்றாள்.
பாரதிக்கும் அரவிந்தனுக்கும் திக்கென்றது.
அவள் சொன்னது சரி என்பதற்கு ஆதாரமாக அந்த வாளிலேயே `எட்டுத்திக்கும் காவல் காக்கும் சுடலை முனிக்கு இட்டமுடன் சமர்ப்பணம்’ எனும் வரிகள் இருப்பதை இருவருமே எண்ணிப் பார்த்தனர். சாருபாலாவோ தன்னை மறந்து சுடலை முனியை நினைத்தவளாக உறையிலிருந்து வாளை சரக்கென்று உருவினாள். ஆனால் யாருக்கும் எந்த வெட்டுக் காயமும் ஏற்படவில்லை.
ஆனாலும் பாரதியிடம் படபடப்பு.
``ஐயோ, என்ன மேடம் நீங்க உருவிட்டீங்க... அது வெட்டிடும்க...’’ என்றாள் மிக வேகமாக.
``என் குலசாமிங்க... கும்புட்டுட்டுத்தானே வெளிய உருவினேன். பாருங்க இதுல எழுதியிருக்கறதை... இது எங்க குலசாமி நேர்த்திக்கத்தியேதான்...’’
- சாருபாலா சற்றுத் தெம்பாகச் சொல்ல, அந்த ஹாலில் முத்துலட்சுமி, அடைக்கலம்மா, தோட்டக்கார மருதமுத்து என்று எல்லோரும் வந்து குழுமியவர்களாக அங்கு நடப்பதை ஆர்வமாகப் பார்த்தபடி இருந்தனர். கச்சிதமாக பானுவும் தோளில் ஒரு லெதர் பேக்குடன் உள்வந்தபடி இருந்தாள்.
கடிகாரத்தில் மணி பத்தை நெருங்கிக்கொண்டிருந்தது! பானு, பாரதிக்கு முதல் காரியமாக `குட்மார்னிங்’ சொன்னாள்.
``வெரி குட்மார்னிங்...’’
``நான் ஹாஸ்பிட்டல்ல இருந்துதான் வர்றேன். சாருக்கு அப்படியேதான் இருக்கு. உங்களை உடனே பாக்கணும்னு சொன்னார் டாக்டர்...’’ என்ற பானு பேச்சின் நடுவே வாளும் கையுமாக நிற்கும் சாருபாலாவைச் சற்று பீதியோடும் பார்த்தாள்.
``நீ ஆபீஸ் ரூமுக்குப் போ... இங்க இப்ப வேற ஒரு விஷயம் நடந்துகிட்டிருக்கு’’ என்றாள் பாரதி. பானுவும் மெல்ல அந்த பங்களாவில் அவளுக்கென, எம்.பியாக இருக்கும் ராஜாமகேந்திரன் ஒதுக்கியிருந்த அறை நோக்கி நடந்தாள். அப்படியே அறை வாசலில் மறைவாக நின்றுகொண்டு பார்க்க ஆரம்பித்தாள்.
சாருபாலாவிடம் திடீரென்று ஓர் உற்சாகம். ``சாந்தா... இந்த வீட்ல ஒரே சமயத்துல உங்க வீட்டுப் பெட்டியும், எங்க குலதெய்வ வாளும் இருக்கறது எனக்கு ஆச்சர்யமா மட்டுமல்ல, ரொம்ப சந்தோஷமாவும் இருக்கு சாந்தா... உங்க தாத்தா கனவுல வந்து சொன்னது, இப்ப இங்க நடக்கறதுன்னு எல்லாமே ஒரு கோ ரிலேட்டடா இருக்கில்ல..?’’ என்று கேட்கவும், சாந்தப்ரகாஷும் ஆமோதிப்பாகச் சிரித்தான்.

பாரதிக்கு விஷயம் புதிதாக விரிவதில் ஓர் ஆச்சர்யம். அதே சமயம் குழப்பம் - இடையில் அப்பா ராஜாமகேந்திரன் குறித்த எண்ணம் வேறு.
``எக்ஸ்க்யூஸ்மீ... நீங்க எதுக்கு வந்திருக்கீங்கன்னு சொன்னா நல்லா இருக்கும். நான் இப்ப ரொம்ப நெருக்கடியான ஒரு நிலைல இருக்கேன்...’’ என்றாள்.
``ஐ ஆம் சாரி... சாரு அந்த வாளை அப்படி வை. கமான் வந்து முதல்ல உக்காரு... மேடம் நீங்க பாரதிதானே?’’
``யெஸ்...’’
``வெரி ஹேப்பி டூ மீட் யூ... நான் விவரமா எல்லா விஷயத்தையும் சொல்றேன். கொஞ்சம் எல்லாரையும் விலகி இருக்கச் சொல்றீங்களா?’’
- சாந்தப்ரகாஷ் சுற்றி முத்துலட்சுமியிலிருந்து மருதமுத்துவரை ஒரு பார்வை பார்த்தான். பாரதி பதிலுக்கு அவர்களைப் பார்க்கவும் மருதமுத்துவும், அடைக்கலம்மாவும் விலகிக்கொள்ள முத்துலட்சுமி அது தனக்கில்லை என்பதுபோல் மனக்குழப்பத்தோடு நின்றாள். பானு கண்ணில்படாதபடி ஒளிந்துகொண்டாள்.
சாந்தப்ரகாஷ் தன் மகன் ஓர் அரவாணியாக மாறிவிட்டதிலிருந்து, தங்கள் குடும்பத்தில் அரவாணிகள் ஏதோ ஒரு வகையில் தொடர்வதைச் சொல்லி, இந்தப் பெட்டியில் எல்லாப் பிரச்னைகளுக்குமான தீர்வு தன் தாத்தாவினால் சொல்லப்பட்டிருக்கிறது என்பதுவரை மெல்லிய குரலில் சொல்லச் சொல்ல பாரதி, அரவிந்தன் இருவரிடமுமே விக்கிப்பு.
இடையில் பானுவின் செல்போனில் விளிப்பொலி. மறுமுனையில் அந்த டெல்லி ஜோதிடர் நந்தா!
``பானு இப்ப எங்க இருக்கே? என்ன நடந்துகிட்டிருக்கு?’’ என்று கேட்க, பானுவும் சாந்தப்ரகாஷ் சொல்வது காதில் பெரிதாகக் கேட்காத நிலையில், ``பெட்டியைத் தேடிக்கிட்டு புதுசா ரெண்டு பேர் வந்திருக்காங்க ஜீ. அவங்களுக்குத்தான் அந்தப் பெட்டி சொந்தமாம். இங்க இருக்கிற வாள்கூட அவங்க சொந்தம் மாதிரிதான் தெரியுது. குசுகுசுன்னு ஏதோ பேசிகிட்டிருக்காங்க...’’ என்று சொல்லத் தொடங்கினாள்.
``பெட்டியத் திறந்துட்டாங்களா?’’
``திறந்த மாதிரி தெரியலை...’’
``தப்பு பண்றாங்க. அதுக்குள்ளதான் நம்ப எம்.பிக்கு மருந்து இருக்கு...’’
``நான் என்ன பண்ண முடியும் ஜீ. பாரதி மேடம் கண்ணாலயே பேசறவங்க. என்னை இப்ப அவங்க பாக்கற பார்வையே சரியில்லை. இப்பகூட ஹாஸ்பிடல்ல டாக்டர் கூப்பிட்டதைச் சொன்னேன். அவங்ககிட்ட பதிலுக்கு எந்த ரியாக்ஷனும் இல்லை.’’
``போனைக் கொஞ்சம் பாரதிகிட்ட கொடுக்கிறியா. நான் சொல்லிப் பார்க்கறேன்...’’
``ஐயோ வேண்டாம். நீங்க நேராப் பேசுங்க. கொஞ்ச நேரம் கழிச்சுப் பேசுங்க...’’
``நேரம் போய்க்கிட்டே இருக்கு... சாரைக் காப்பாத்த சில மணி நேரம்தான் இருக்கு. அடுத்து வர்ற நட்சத்திரம் அவருக்குப் பொருந்தாத நட்சத்திரம். மாத்திரை மருந்தை உடம்பு அப்ஸார்ப் பண்ண அந்த நட்சத்திரம் விடாது.’’
``புரியுது ஜி... கொஞ்சம் பொறுங்க - அங்க ஏதோ நடக்கப்போகுது... நானே உங்களை அப்புறமா கூப்பிடறேன்’’ - என்று போனை கட் செய்த பானு ஒரு திரைச்சீலை ஓரம் சென்று, கால்களை உயர்த்தி, உடம்பை வளைத்து ஹாலில் நடப்பதைப் பார்க்க ஆரம்பித்தாள்.
அரவிந்தன் புத்தகத்தைக் கையில் வைத்தபடி பேசத் தொடங்கியிருந்தான்.

``மிஸ்டர் சாந்தப்ரகாஷ்... இது உங்க ப்ராப்பர்ட்டியா இருக்கலாம். ஆனா நாங்களும் விலைக்கு வாங்கிட்டதால எங்களுக்குத்தான் எல்லா உரிமையும்! நாங்க பெரிய மனசு பண்ணி உங்களுக்கு இதைத் தரலாம்... நடுவுல இதுக்குள்ள என்ன இருக்குன்னு பார்க்கத்தான் நான் இந்த புக்கை படிச்சுக்கிட்டிருந்தேன். உங்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் இந்தப் பெட்டியால பல மிராக்கிள் எக்ஸ்பீரியன்சஸ்... அதையெல்லாம் சொல்ல இப்ப நேரமில்ல. ஆனா இதைத் திறந்தா உங்க தேவை, எங்க தேவைன்னு எல்லாம் பூர்த்தியாகும்னு மட்டும் தோணுது. கத்தி எதனால இதோட சேர்ந்ததுன்னும் இப்பப் புரிய ஆரம்பிச்சிருக்கு. இதை உடைச்சுத் திறக்கறது நல்லதில்லைன்னுதான் இதை முறைப்படி திறக்க இந்த புக்கை நானும் படிச்சேன். இது வந்தவிதம்கூட மிஸ்ட்ரிதான்! இதைத் திறக்கணும்னா இந்தத் திருப்புளி சங்கரம்கிற வார்த்தைக்கான கவுன்ட் தெரியணும். அதை நான் கண்டுபிடிச்சிட்டேன்... எப்படிக் கண்டுபிடிச்சேன்கிறதெல்லாம் அப்புறம். சரியான நேரத்துக்குத்தான் நீங்களும் வந்திருக்கீங்க... உங்க முன்னாலயே நான் ட்ரை பண்றேன்’’ - என்ற அரவிந்தன் திருப்புளியைக் கையில் எடுத்துக்கொண்டான்.
முன்னதாக ஒரு தாளில் சங்கரம் என்கிற எழுத்துக்கு மேல் 26251 என்கிற எண்கள்! அந்த எண்கள் எதைச் சொல்கின்றன?
- தொடரும்