மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இறையுதிர் காடு - 46

இறையுதிர் காடு
பிரீமியம் ஸ்டோரி
News
இறையுதிர் காடு

அன்று போகர் வரவேற்றிட நவமரான `அஞ்சுகன், புலிப்பாணி, சங்கன், அகப்பை முத்து, மல்லி, மருதன், நாரண பாண்டி, பரிதி, சடையான்’ ஆகிய ஒன்பது பேரும் அந்த குகைக்குள் வந்து ஒரு புதிய சூழலைக் கண்டிடும் பிரமிப்போடு நின்றனர்.

நாரண பாண்டியும் சடையானும் மட்டும் நிற்க முடியாமல் திரும்ப உட்கார்ந்தனர்.

போகர் அவர்கள் இருவரையும் கூர்ந்து கவனித்தார்.

மெல்ல அவர்களை நெருங்கி அவர்கள் இருவரின் நாடியையும் பிடித்துப் பார்த்தார். அவர் கைப்பட்ட நொடி அவர்களிடம் ஒரு புதிய தெம்பு. பின் இருவரையும் திரும்பி அமரச் சொல்லி முதுகுத்தண்டுவடம்மேல் தன் ஆட்காட்டி விரலால் மேலிருந்து கீழும், கீழிருந்து மேலுமாய் சிலமுறை வருடிவிட்டார். இறுதியாக இரு கை விரல் நுனிகளும் ஒன்றோடொன்று தொட்டு நிற்கும் விதத்தில் இரு கைகளையும் கூரைபோல் வைத்துக்கொள்ளச் சொல்லி, நெற்றிப்பொட்டின் மேல் தன் கட்டை விரலை அழுத்தமாய் வைத்து, சில விநாடிகள் கண்களை மூடி மந்திரம்போல் ஏதோ முணுமுணுத்தார். அதன்பின் அவர்களிடம் பெரும் மாற்றம். இருவரிடமும் சுணக்கம் நீங்கி, ஒரு புதிய தெம்பு தோன்றத் தொடங்கிவிட்டது.

இறையுதிர் காடு - 46

மற்ற சீடர்கள் இதை ஆச்சர்யமாகப் பார்த்தனர்.

அந்த குகைக்குள் குளிர்ந்த சூழலும், அதே நேரம் கருமார்கள் இருவரும் போட்டிருந்த கணப்புச் சூடும் ஒருசேர இருந்து, மலை ஏறி வந்த களைப்பும் பெரிதாக எவரிடமும் இல்லை.

``பிரானே... தாங்கள் இப்போது நாரண பாண்டிக்கும் சடையானுக்கும் என்ன செய்தீர்கள் என்று நாங்கள் அறியலாமா?’’ என்று கேட்டான் சங்கன் என்பவன்.

``சொல்கிறேன். நான் இப்போது என் ஆத்மசக்தியை இவர்களுக்குக் கடத்தியிருக்கிறேன். நீங்களும் இதுபோல் செய்ய முடியும்! முன்னதாக உடம்பின் நாடி வாங்கி எது... நாடி தாங்கி எது... நாடி தூங்கி எது என்று தெரிய வேண்டும். இதில், `நாடி வாங்கி’ எனப்படும் இடத்தின் மேல் நம் விரலைவைத்து, நாம் நம் சக்தியை நோயுற்றவருக்குக் கடத்தலாம். நாடி வாங்கிப் பகுதியின் தலைவாசல் நெற்றிப்பொட்டு. இதன்மேல் நம் கட்டை விரல் நுனியை நாம் பதித்து, குறிப்பிட்ட மந்திரம் ஜெபித்திட அதன் காரணமான சப்த அதிர்வு நம் ஒளியுடம்பில் பரவி, அந்த ஒளியுடம்பின் மின் காந்தம், நாம் யாருக்கு சக்தியை வழங்க நினைக்கிறோமோ அவருக்குச் சென்று சேரும். இது, இருக்கிற ஒருவன், இல்லாத ஒருவனுக்கு ஒன்றைத் தருவது போன்ற செயல்பாடே...’’

``இப்படிக்கூடவா ஒரு முறை இருக்கிறது?’’

``இதற்கே வியந்தால் எப்படி... பார்த்தேகூட சிகிச்சை அளிக்க முடியும். பார்க்காமல் தொலைவில் இருந்தபடி நினைப்பாலும் சிகிச்சை அளிக்க முடியும்...’’

``பெரும் மாயமாக உள்ளதே?’’

``சித்தத்தில் மாயத்திற்கெல்லாம் இடமே கிடையாது. அந்த வார்த்தையே சித்த அகராதியில் கூடாது.’’

``அப்படியானால் இதற்கு என்னவென்று பேர்?’’

``இதுவும் ஒரு சிகிச்சை முறை... சித்த விஞ்ஞானம், அவ்வளவுதான்! ஆனால் இப்படி சிகிச்சை தர ஒரு சித்தன், உடம்பின் ரசாயனங்கள் குறித்த அறிவுகொண்டிருக்க வேண்டும். நான் முன்பே கூறியதுபோல் வாத, பித்த, சிலேத்தும உடல் பற்றிய தெளிவும் வேண்டும்.

இந்த உலகில் முதல் அதிசயம் நம் உடலே என்பதைத் தெரிந்துகொண்டு மனதில் வையுங்கள். புற உலகிலுள்ள அவ்வளவும் இந்த உடம்புக்குள்ளும் உள்ளன. அது என்ன... எங்கே உள்ளது அது... அதன் குணப்பாடு எத்தகையது என்பதைத் தெரிந்துகொள்வதே உடற் கல்வி. இப்போது அதுகுறித்தெல்லாம் பேச நேரமில்லை.

இறையுதிர் காடு - 46

நாரணபாண்டியும் சடையானும் களைத்துப்போகக் காரணம் அவர்கள் வைத்திருந்த பாஷாணமே! ஒன்பது பாஷாணங்களில் இரண்டு பாஷாணங்கள், அந்த பாஷாண குணம்கொண்ட நட்சத்திரங்களில் பிறந்தவர்களிடம்கூட எதிர்வினைதான் ஆற்றுகின்றன. அதைத்தான் இவர்களை வைத்து நான் புரிந்துகொண்டேன். மீதமுள்ள ஏழு பாஷாணங்களும் அவற்றுக்குரிய குணம் கொண்டவர்களிடம் இணக்கமாகச் செயல்படுகின்றன; எதிர்வினை ஆற்றவில்லை என்பதே உங்களைவைத்து நான் தெரிந்துகொண்ட முதல் உண்மை. இப்போது நான் ஓர் உண்மையையும் உங்களுக்குக் கூறப்போகிறேன். இந்த பாஷாணக் கலப்புள்ள பானம் ஒன்றை நீங்கள் அருந்தியிருப்பீர்கள். ஆனால் உங்களுக்கு அது தெரியாது! உணவருந்தும்போது உங்களுக்கு வழங்கப்பட்ட மிளகு ரசத்தோடு அது கடுகளவு சேர்க்கப்பட்டி ருந்தது. மொத்தத்தில் உள், வெளி என இரண்டாலும் நீங்கள் பாஷாணங்களோடு இருந்தீர்கள். அது உங்கள் ஆரோக்கியத்தை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. அடுத்து உங்கள் மனநலமும் கெடவில்லை. மொத்தத்தில் ஒன்பது பாஷாணங்கள் தனித்தனியே மனிதர்களோடு பெரிய எதிர்வினையின்றிச் செயல்படுகின்றன என்பதே முடிவு. இனி இதன் கலவை உங்களை என்ன செய்யப்போகிறது என்று பரிசோதிக்கப் போகிறேன், முதலில் உங்கள் வசமுள்ள பாஷாணக் கட்டிகளை வரிசையாகக் கீழே வையுங்கள்.’’

போகர் விளக்கத்தோடு இட்ட கட்டளைப்படி, அவர்களும் கைப்பிடி கொண்ட ஓரடி உயரமும் ஒன்றரை சாண் விட்டமும் உடைய தங்கள் மூங்கில் கூடைகளை வரிசையாகக் கீழே வைத்தனர்.

``உங்கள் இடுப்பில் கட்டியிருப்பதையும் அவிழ்த்து, கூடையில் போட்டுவிடுங்கள்...’’ என்றார் போகர்.

அவர்களும் அவ்வாறே செய்தனர். அதன் பின் போகர் அஞ்சுகனையும் சங்கனையும்தான் பார்த்தார்.

``பிரானே...’’

``நீங்கள் இருவரும் ஒரு காரியம் செய்ய வேண்டுமே...’’

``உத்தரவிடுங்கள்... காத்திருக்கிறோம்...’’

``இங்கிருந்து தெற்காக, மிகச்சரியாக ஒரு காக்கை இளைப்பின்றிப் பறக்க முடிந்த தூரமான அரை நாழிகை தூரத்தில் ஒரு மடுவும், மடுவை ஒட்டி யானைக் கூட்டங்களும் உள்ளன.’’

``நல்லது குருபிரானே!’’

``அங்கே அநேக தாவரங்கள் உள்ளன. அவற்றில், `செந்தாடு பாவை’ என்றொரு மூலிகைத் தாவரம் உண்டு. அதை இனங்கண்டுகொண்டு பறித்துவர வேண்டும். எனக்கு அதன் ரசம் மூன்றுபடி வேண்டும்...’’

``அது எப்படி இருக்கும் பிரானே?’’

``நான் ஒரு சுவடி தருகிறேன். அதில் அதன் உருவம் வரையப்பட்டிருக்கும். அதனருகில் சென்று நாம் மூச்சுவிடும் பட்சத்தில் அது குழைந்துவிடும். இந்தக் குறிப்புகள் போதும் என்று கருதுகிறேன்...’’

``போதும் பிரானே... மீதத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்...’’

``அப்படியானால் புறப்படுங்கள். புறப்படும் முன் நாகதாளிவேர் வளையத்தை இரு கால்களிலும் கட்டிக்கொள்ளுங்கள்.’’

``நாகங்கள் மிகுந்த வனமா இது?’’

``ஆம்... தரைப்பரப்பில் நாகங்கள் மிகுதி. பொதுவாக நெல் வயலும் அருகில் மலையும் இருந்தால் உறுதியாக அங்கே நாகம் இருக்கும். நெல் வயல் என்பது தவளைக்குஞ்சுகள் பெருகிட உதவும் ஓர் இடம். தவளைக்குஞ்சுகள் மிகுந்த இடத்தில் நாகமும் மிகுதியாகும். அவை மலையடிவாரப் பகுதியில் பாறைகளுக்குக் கீழ் பதுங்கி வாழ்ந்திடும்.’’

இறையுதிர் காடு - 46

``அப்படியானால் ராஜாளிக் கழுகுகளும், பருந்து, கருடன் போன்றவையும்கூட இருக்குமல்லவா?’’

``உறுதியாக இருக்கும். சுருக்கமாகக் கூறுவதானால் மலையடிவாரம் என்பது குறிஞ்சி நிலமும் மருத நிலமும் கலந்து கிடக்கும் மருதாக்குறி நிலம் என்பதாம். இங்கே ஊர்வன, பறப்பன, மிதப்பன, நெளிவன, திரிவன என ஐவகை உயிரினங்களும் நிறைய இருக்கும். இவை ஒன்றுக்கு ஒன்று ஆதாரம்! ஊர்வதில் பாம்புகளும், பறப்பதில் பருந்து, கொக்கு முதலானவையும், மிதப்பதில் தவளை, தேரைகளும், நெளிவதில் புழுக்களும், திரிவதில் ஆடுமாடுகளும் அடக்கம்.

இது மிகுந்த இடத்தில் தாவரங்களும் செழிப்பாக இருக்கும். மூன்றடிக் குடைவில் மண்ணீர் பெருகியிருக்கும். இங்கே மனித இனம் பசியின்றி வாழ முடியும். இந்த மனிதர்களிலும் ஐவகைச் செயல்பாடுகளுடைய, `பஞ்சம வினையர்’ என்பர் இருப்பது ஒரு கிரமமாகும். அதாவது, `உழுவது, வேட்டையாடுவது, பாண்டம் செய்வது, வாணிபம் புரிவது, கலையாளுவது’ என்பவையே அந்த ஐவகை வினைப்பாடு. நிலத்தை உழுது பயிரிடுபவனால் நெல்லும் பிற பயிர்களும் கிட்டும். வேட்டைக்காரன் மற்ற உயிரினங்களை உணவின் நிமித்தம் வேட்டையாடுவதன் மூலம் அதன் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவான், பாண்டம் செய்வோரால் சட்டிபானைகள் மட்டுமன்றி இவர்களின் பிரிதோரே வீடு கட்டுவதும், கிணறு வெட்டுவதும் என்று வாழத் தேவைப்படும் பொருள் உற்பத்தி புரிவோராவர். இவர்களாலேயே கட்டில் முதல் ஆடை வரை கிடைத்திடும். இவர்கள் உழைப்பால் விளைந்ததை வாணிபம் புரிபவன் வாங்கி, விற்பான்.

நால்வகை வினைபுரியும் இவர்களுக்கு மனநலம் மிக முக்கியம். அதன்பொருட்டு இவர்கள் மகிழ்வின் நிமித்தம் ஆடல்பாடல் புரிவோரே கலையாளுபவர் ஆவார். இவர்களின் உட்பிரிவில்தான் ஆசிரியன், ஆசுகவி என்போரிலிருந்து கணக்காளன் முதல் காடு காப்பான் முதலோர் அடக்கம். மொத்தத்தில் இது ஒரு வரிசை... வரிசைக்கு இன்னொரு பெயர் கிரமம். கிரமமே மருவி, `கிராமம்’ என்றானது.’’

- அஞ்சுகனையும், சங்கனையும் மூலிகைக்காக அனுப்பும் அந்தச் சமயத்திலும் எல்லோரும் அறிந்திடப் பல அரிய செய்திகளை போகர் கூறியதைக் கேட்டு எல்லோருமே வியந்தனர்.

கருமார்கள் இருவரும் போகரை மிக நெருங்கி, ``சாமி, ஆண்டே... நாங்க நிரந்தரமா உங்களோடவே இருந்திடுறோம். உங்களைப் பார்த்ததுல இருந்து எங்களுக்குள்ள எவ்வளவு மாற்றங்கள் தெரியுமா... ஒவ்வொரு நொடியும் ஒரு புதிய விஷயம் தெரியவருது. வாழ்வில் ஒரு அடி மேலேறுவதும் தெரிகிறது. இவ்வளவு நாள்களாகப் பசிக்குத்தான் வாழ்ந்திருக்கிறோம். ருசிக்கு இங்கேதான் வாழ்கிறோம்’’ என்றனர்.

போகர் புன்னகைத்தார்.

``அன்பர்களே! நீங்கள் நிரந்தரமாக என்னோடு இருப்பதில் எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. நான் எனது கொட்டாரத்தை ஓர் உலகளாவிய அறிவுக்கோயிலாக வைத்திருக்கவே விரும்புகிறேன். இந்த உலகில் நமக்குத் தேவையான சகலமும் உள்ளன. அவற்றை அடைய நமக்குத் தேவை அறிவு. இந்த அறிவிலும், `பகுத்தறிவு’ என்று ஒன்று உள்ளது. அதை, `நுட்ப அறிவு’ என்றும் கூறலாம். இந்த நுட்ப அறிவுக்கு ஏராளமான அனுபவங்கள் தேவை. அனுபவங்களே ஒருவனை ஆசானாக்கும். அந்த அனுபவங்களிலும் தோல்வியைத் தழுவும்போதுதான் அறிவு மிகக் கூர்மையாகும்.

நன்றாகவும் கவனமாகவும் கேட்டுக்கொள்ளுங்கள். உங்களை வலி ஒன்றுதான் வலிமைமிக்க வனாக்கும். எனவே, வலி ஏற்படும்போதெல்லாம் மகிழ்ச்சி அடையுங்கள். எந்த இன்பமும் நம்மை வளர்க்காது. துன்பமே வளர்க்கும். எனவே, துன்பம் வரும்போது ஆழ்மனதில் அதை வரவேற்று மகிழப்பழகுங்கள்.

எவன் ஒருவன் துன்பம் கண்டு அஞ்சாது அதை இன்பம்போல் கருதி அனுபவிக்கிறானோ, அவனே பெரும் தலைவனாவான். தலை இருப்பவர்கள் எல்லாம் தலைவனாகிவிட முடியாது. அந்தத் தலைக்குள் தலையானவை அவ்வளவும் இருக்க வேண்டும்!’’

போகரின் கருத்தை அங்குள்ள நவமரில் மீதமுள்ள ஏழு பேரும் கேட்ட வண்ணமிருக்க, போகர் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பதைக் கூறலானார்.

இதை நீங்கள் வலம் வரும்போது இதன் கதிர்வீச்சு உங்கள் மொத்தத் திசு உடலை ஊடுருவி, நோய்க்கான கிருமிகள் இருந்தால் அவற்றைச் செயலிழக்க வைக்கும். உடலிலுள்ள சுரப்பிகள் சரியாகச் சுரக்காமல் இருந்தால், அந்தச் சுரப்பிகள் பசுவின் பால்மடிபோல் சுரக்கத் தொடங்கும்!’

``சீடர்களே!

இந்த நவபாஷாணங்களை நான் செந்தாடு பாவை மூலிகைச் சாற்றில் கலந்து, லேகியப் பதத்துக்குக் கலவையை உருவாக்கி, அதைத் தாமரை இலையளவுக்கான வட்டமாகவும், நம் நகத்தினளவு பருமனோடும் தட்டி வெயிலில் காயவைக்கப் போகிறேன். வெயிலில் காய்ந்த பாஷாணக் கலவையைப் பின் பொடியாக்கி, அதன்பின் மீண்டும் செந்தாடு பாவை மூலிகை ரசத்தில் கலவையாக்கி, அதை மீண்டும் வெயிலில் காயவைக்கப் போகிறேன். அதேபோல் இன்னொரு முறை என்று நவபாஷாணமும் - செந்தாடு பாவைச் சாறும் கலந்த கலவை காய்ந்து, பின் இறுதியில் பொடியாக ஆக்கப்படும். பின் இதை எடையிட்டு ஒரு பலத்துக்கு அதாவது நூறு மிளகு அளவுக்கான எடைக்கு ஒரு மிளகளவு தங்கம் என்று இதன் எடையளவுக்கான தங்கத்தையும் இதோடு சேர்த்து, இறுதியாக மலையிலிருந்து பெற்று வரப்பட்ட உதக நீரில் இந்த நவபாஷாணத் தங்கம் கலந்த பொடியைக் கலந்து, திரும்ப லேகியப் பதத்துக்கு மாற்ற விழையும்போது இது உலோக குணம்கொண்ட ஒரு குழம்பாக ஆகிவிடும்.

அந்தக் குழம்பை இதோ இந்த லிங்க சுதைக்குள் ஊற்றிட, அது இறுகி உறுதியாகிவிடும். பின் மேலுள்ள மண் பூச்சை உடைக்கவும் நீலகண்ட பாஷாண லிங்கம் நமக்குக் கிடைத்துவிடும்.

இந்த நீலகண்ட பாஷாண லிங்கம் கதிர்வீச்சு மிக்க ஒன்றாக இருக்கும். இதன் எதிரில் அமர்வோரும் இதன் கதிர் வீச்சுக்கு ஆளாவர். அந்த வீச்சு அபரிமிதமான ஆற்றல் தரும். மனம் ஒருமைப்படும். புரியாததெல்லாம் புரியவரும். நம்மைத் தீயசக்திகள் ஆட்கொண்டிருந்தால் அவை நம்மை விட்டு விலகிவிடும்’’ என்றபடியே சீடர்களைப் பார்த்தார். அவர்கள் பிரமிப்போடு பார்த்தபடியே இருந்தனர்.

``என்ன பார்க்கிறீர்கள்... இதை நீங்கள் வலம் வரும்போது இதன் கதிர்வீச்சு உங்கள் மொத்தத் திசு உடலை ஊடுருவி, நோய்க்கான கிருமிகள் இருந்தால் அவற்றைச் செயலிழக்கவைக்கும். உடலிலுள்ள சுரப்பிகள் சரியாகச் சுரக்காமல் இருந்தால், அந்தச் சுரப்பிகள் பசுவின் பால்மடிபோல் சுரக்கத் தொடங்கும்!’’

``அப்படியானால் இது மருந்து எனப்படுவதா?’’

``ஆம்... உடல், உள்ளம் இரண்டுக்கும் இதுவே மருந்து. உடம்பைக் கற்கோட்டை யாக்கிக்கொண்டு, மனதையும் சூரியசந்திரர்போல் ஒளிப்பிழம்பாக்கிக்கொண்டு, தீர்க்க முடியாத பிரச்னைகளையெல்லாம் தீர்க்கலாம். மொத்தத்தில் அமிர்தம் குடித்த தேவனாக இது ஒவ்வொருவனையும் ஆக்கிவிடும்...’’

- போகர் கண்களில் ஒளி பொங்கச் சொன்னவிதமே பெரும் பிரமிப்பை அளிப்பதாக இருந்தது!

இன்று அந்தப் பெட்டியைத் திரும்ப தன்னால்தான் திறக்க முடியும் என்பதுபோல் அதை மூடிவிட்டு வேகமாக பாரதியோடு ஆஸ்பத்திரிக்குப் புறப்பட்டான் அரவிந்தன். பாரதியும் ஓடிப் போய் ஒரு ரப்பர்பேண்டில் தன் கூந்தலைக் கட்டியவாறு, ஹேண்ட்பேக்கை எடுத்துக்கொண்டு வந்து சேர்ந்தாள். பானு பார்த்துக்கொண்டே இருந்தாள். அவளை ஒரு விநாடி கூர்ந்து பார்த்த பாரதி, ``பானு... நீயும் எங்ககூடப் புறப்படு...’’ என்றாள்.

பானு அதை எதிர்பார்க்கவில்லை. பின் அவளும் வேகமாகப் புறப்பட்டாள்.

``பாட்டி... நாங்க போயிட்டு வர்றோம். ஆஸ்பத்திரி நிலையை போன் பண்ணிச் சொல்றேன். அப்புறம் இந்தப் பெட்டி பத்திரம். அந்த அமெரிக்க ஜோடி திரும்ப வந்தா எனக்கு போன் பண்ணு. பெட்டி பத்திரம்! நான் அதைத் தூக்கிக் கொடுக்கற வரை அது நம்ப சொந்தம்கறதை மறந்துடாதே...’’ என்று உறுதியாகச் சொல்லிக்கொண்டே வெளியே கார் நோக்கி நடந்தாள்.

அரவிந்தன் காரில் ஏறி அமர்ந்து அதை ஸ்டார்ட்டும் செய்துவிட்டிருந்தான். பானுவும் பாரதியும் ஏறிக்கொள்ளவும் பாயத் தொடங்கியது அது! மருதமுத்துவும் பார்த்துக்கொண்டேயிருந்தான்.

கார் அந்த பங்களாவை விட்டு விலகிய சில நொடிகளில் இன்னொரு கார் உள் நுழைந்தது. அந்தக் காரில் யோகி திவ்யப்ரகாஷ்ஜி!

இறையுதிர் காடு - 46

பட்டு ஜிப்பா, பத்து சவரனுக்குக் குறையாத புலிப்பல் பொருத்தப்பட்ட தங்கச்சங்கிலி, விரலில் நவரத்தின மோதிரம் என்று ஒரு நாதஸ்வர வித்வான்போல் காரிலிருந்து இறங்கினார். மருதமுத்து ஓடி வந்து அவரைப் பார்த்தான். ``யார் சார் நீங்க?’’

``நீ மருதமுத்துதானே?’’ - அவரிடம் தொடக்கமே அதகளம்.

``ஆமாம் சார்...’’

``என்ன ரொம்பக் குழம்பிப் போயிருக்கியா..?’’

``அ... ஆமாம் சார்... நீங்க?’’

``நான் இந்த வீட்ல எல்லாருக்கும் தெரிஞ்சவன்தான். ஆமா, முத்துலட்சுமியம்மா இருக்காங்களா?’’

- திவ்யப்ரகாஷ்ஜி கேட்கும்போதே முத்துலட்சுமியும் வாசல்பக்கமாக வந்துவிட்டாள். திவ்யப்ரகாஷைப் பார்க்கவும் அவளிடம் ஒரு மெல்லிய பரவசம்.

இந்த நீலகண்ட பாஷாண லிங்கம் கதிர்வீச்சு மிக்க ஒன்றாக இருக்கும். இதன் எதிரில் அமர்வோரும் இதன் கதிர் வீச்சுக்கு ஆளாவர். அந்த வீச்சு அபரிமிதமான ஆற்றல் தரும். மனம் ஒருமைப்படும். புரியாததெல்லாம் புரியவரும்

``அடடே... நீங்களா?’’

``நானேதான்... எப்படிம்மா இருக்கீங்க..?’’

``நல்லா இருக்கேன் - உள்ள வாங்க...’’

- முத்துலட்சுமி அழைத்திட திவ்யப்ரகாஷும் தடையின்றி உள்ளே நுழைந்தார். நுழையும்போதே பளிச்சென்று கண்ணில்பட்டது அந்தப் பெட்டி. நின்று, தீர்க்கமாக ஒரு பார்வை பார்க்கும்போதே அவரின் விசேஷ சக்தி, அரவிந்தன் அதைத் திறந்து உள்ளிருந்து எடுத்துப் பார்த்த சகலத்தையும் அவருக்குள் காட்சிப்படுத்திவிட்டது.

ஒரு சிரிப்போடும் சிலிர்ப்போடும் அதனருகே சென்று கும்பிட்டபடி நின்றார். முத்துலட்சுமிக்கு ஒரே ஆச்சர்யம்.

``இந்த பெட்டியோட ஒரே ஓரியாட்டம்! உங்களுக்கும் இதைப் பத்தித் தெரியுமா?’’ என்று ஆரம்பித்தாள்.

``தெரியுமாவா? என் ஜென்மமே இதுக்காகத்தான்னா பார்த்துக்கங்களேன்...’’ என்றார்.

முத்துலட்சுமிக்கு அது பக்தியா இல்லை சுயநலமா என்று தெரியவில்லை.

``நீங்க என்ன சொல்றீங்க?’’ - என்று சந்தேகமாய் இழுத்தாள்.

``இது பூஜைக்குரியதுன்னு சொல்ல வந்தேன். என்ன உள்ளே ஒரு லிங்கம் இருக்குதா?’’

``ஆமாம்... இந்த லிங்கத்தை நான் சின்னப் பெண்ணா இருக்கும்போதே தரிசனம் செய்திருக்கேன்.’’

``கொடுத்து வெச்சவங்க...’’

``நானா... அடப் போங்க ஜி! என் மகனை நினைச்சா என் நெஞ்சே படபடங்குது.’’

``அவர் பொழச்சிக்குவார்... கவலைப்படாதீங்க...’’

``நிஜமாவா?’’

``இங்கே துக்கம் ஏற்பட வாய்ப்பு இல்லை. அப்படி இருந்தா என் திருஷ்டியில தெரிஞ்சிருக்கும்.’’

``வாங்க... உக்காந்து பேசுவோம்...’’

- முத்துலட்சுமி அழைத்தபடியே ஹாலில் கிடந்த சோபாவில் சென்று அமர்ந்தாள். அவரும் தொடர்ந்து நடந்தார். வீட்டின் சகல பாகங்களையும் நடக்கும்போதே பார்த்து முடித்தார். அடைக்கலம்மா கண்ணில்பட்டாள். மருதமுத்துவும் பக்கவாட்டில் ஜன்னல்வழியாகப் பார்த்தபடி இருந்தான்.

``காபி சாப்பிடறீங்களா?’’ - இதமாகக் கேட்டாள் முத்துலட்சுமி.

``மோர் இருந்தா கொடுங்க. நான் சில கட்டுப்பாடுகள் உடையவன்... ஆமா எங்கே பாரதி?’’

``இப்பதான் ஆஸ்பத்திரிக்குப் புறப்பட்டுப் போயிருக்கா. அங்கே என் மகன் நிலை ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு மாதிரி இருக்கு. இப்போதைக்குப் பிழைக்க மாட்டான்கறதுதான் நான் புரிஞ்சிகிட்டிருக்கற உண்மை...’’ முத்துலட்சுமியின் கண்களிலும் கசிவு!

``அப்படிச் சொல்லாதீங்க... அவருக்கு இப்போதைக்கு மரணமில்லை. நம்புங்க...’’

``உங்க வார்த்தையை நான் நம்பறேன். உங்க சக்தியைத்தான் பழநியிலேயே பார்த்துட்டேனே...’’

- அப்போது மோரும் வந்தது. காதில் விழுந்ததை வைத்தே அடைக்கலம்மா எடுத்து வந்திருந்தாள்.

``பரவால்லியே... நீங்க சொல்றதுக்கு முந்தி எடுத்துகிட்டு வந்துட்டாங்களே...’’ என்று கைநீட்டி மோர் கிளாஸை வாங்கிக்கொண்டார். அடைக்கலம்மா முகத்தில் பதிலுக்கு எந்த உணர்வுமில்லை.

``பாவம் இவங்க... மகள் புருஷனை இழந்த துக்கத்துல இருந்து மீள முடியாம இருக்காங்க... கவலைப்படா தீங்க. அப்படி நடக்கணும்கறது விதி. நடந்து முடிஞ்சிடுச்சு. இனி என்ன நடக்கும்கறதுதான் எதிர்காலம். அந்த எதிர்காலம் ரொம்ப நல்லா இருக்கு. உங்க மகளுக்கு இன்னொரு கல்யாணம் நடந்து, அவங்க ரொம்ப நல்லா இருப்பாங்க. டோன்ட் வொர்ரி...’’

- திவ்யப்ரகாஷ் அப்படிச் சொன்ன நொடி மின்னல் வேகத்தில் அடைக்கலம்மாவிடம் ஒரு மாற்றம். முகத்திலும் இருள் விலகி, ஒரு புது வெளிச்சம்பட்டதுபோல் ஓர் உணர்ச்சி.

``உங்க வாய் முகூர்த்தம் பலிக்கட்டும்’’ என்றாள்.

``ஆமா ஆஸ்பத்திரிக்கு இந்தப் பெட்டியிலிருந்து எதையாவது எடுத்துக்கிட்டுப் போனாங்களா?’’ - போட்டுவாங்கத் தொடங்கினார் திவ்யப்ரகாஷ்ஜி.

``ஆமாம்... ஏதோ ரசமணியாம். அதை இடுப்புல கட்டினா நல்லதாமே?’’

``அப்படியா... ரசமணியோட போயிருக்காங்களா?’’

``உங்களுக்கு ரசமணி பத்தி ஏதாவது தெரியுமா?’’

``நல்லாத் தெரியுமே... அது ஒரு மருந்துக்கலவைதான்... ரொம்ப நல்லா வேலை செய்யும்.’’

``அப்படித்தான் அந்த ஜோசியரும் சொன்னார்.’’

``ஓ... அந்த ஜோசியர் வேற வந்துட்டாரா?’’

- திவ்யப்ரகாஷ்ஜி முகத்தில் பலவித மாற்றங்கள். பின் தியானிக்கும் முயற்சியும்.

``என்ன செய்யறீங்க?’’ - முத்துலட்சுமி கேட்டாள். அவரிடமோ பதில் இல்லை! முத்துலட்சுமியிடம் அதிர்ச்சி...

ஹாஸ்பிடல்!

ஒரு பறவை பறந்து வந்ததுபோல் மிக வேகமாக வந்திருந்த ஜோதிடரை கணேச பாண்டியன் பார்த்து ஆச்சர்யப்பட்டார். அத்தனை வியர்வை, விறுவிறுப்பு...

``என்ன ஜோசியரே... என்ன நடந்தே வந்தீங்களா?’’

``இல்லை கணேசபாண்டி. ஆமா, எம்.பி இப்போ எப்படி இருக்கார்?’’

``என்னத்தைச் சொல்ல... எனக்கே நம்பிக்கை போயிடிச்சு.’’

``நம்பிக்கை இழக்காதே கணேசபாண்டி. எம்.பி இப்ப எங்கே இருக்கார்?’’

``எங்கே இருப்பார்... எல்லாம் ஐசியூவுலதான்...’’

``முதல்ல இப்போ அங்கே போவோம்... அவரைக் காப்பாத்தற மருந்து கிடைச்சிடுச்சு...’’

இறையுதிர் காடு - 46

``என்ன சொல்றீங்க?’’ - நடந்தபடியே பேசிக்கொண்டனர். மருந்து வாடை மூக்கைக் குடைய ஐசியூ கதவைத் திறந்து உள் நுழைந்தனர். அது உறவினர் அனுமதி நேரம்! எனவே, தடைகளில்லை. ராஜா மகேந்திரன் மூக்கு வாயெல்லாம் டியூபோடு படுத்திருந்தார். அருகில் டெலிவிஷன் பெட்டி போன்ற மானிட்டரில் ஓர் ஒளிப்புள்ளி மெல்ல ஓடியபடி இருந்தது. அருகில் எவருமில்லை.

ஜோதிடர் கைகளை ஆட்டிச் சொன்னபடியே ஹார்ட்பீட் மானிட்டரைப் பார்த்தார். அதில் மெல்லச் சென்றபடி இருந்த ஒளிப்புள்ளியிடம் ஒரு வேகம் தெரியத் தொடங்கியது!

``என்னய்யா யாரையும் காணோம்?’’

``அதான் சொன்னேனே... டாக்டர்களும் நம்பிக்கை இழந்துட்டாங்க...’’

``அதுக்காக இப்படியா?’’

- கேள்வியோடு ராஜா மகேந்திரனை நெருங்கித் தன்வசமிருந்த ரசமணியை எடுத்து அவர் இடுப்பில் கட்டத் தொடங்கினார். அப்போது பின்னாலேயே பாரதியும் அரவிந்தனும்கூட நுழைந்திருந்தனர்.

அவர்கள் வரவும் ஜோதிடர் அந்த உருண்டைகளைக் கட்டி முடிக்கவும் சரியாக இருந்தது.

``என்னத்தக் கட்னீங்க ஜோசியரே?’’

``அவ்வளவும் ரசமணி...’’

``அதை இப்பவா கட்றது?’’

``இந்த ரசமணியே சாகறவனைப் பிழைக்க வைக்கறதுக்காகத்தான் போகரால் செய்யப்பட்டது. அது தெரியுமா உனக்கு?’’

``நீங்க மருந்து மருந்துங்கவும் ஏதோ தேன்ல குழைச்சு நாக்குல தடவப் போறீங்கன்னு நினைச்சேன். இப்படி கோலி உருண்டையைக் கட்றதால என்ன பிரயோஜனம். இது எப்படி வேலை செய்யும்?’’

``செய்யும் பார்... கொஞ்சம் பொறு...’’

- ஜோதிடர் கைகளை ஆட்டிச் சொன்னபடியே ஹார்ட்பீட் மானிட்டரைப் பார்த்தார். அதில் மெல்லச் சென்றபடி இருந்த ஒளிப்புள்ளியிடம் ஒரு வேகம் தெரியத் தொடங்கியது!

பாரதியும் அரவிந்தனும்கூடப் பார்த்தனர்..! ஒரு டாக்டரும் பார்த்தபடியே வந்தார். அவரிடம் ஓர் இனம்புரியாத பரபரப்பு... காரணம் அந்த மானிட்டர்!

- தொடரும்