
அன்று போகர் அளித்த பிரமிப்பு குறையாமல் அஞ்சுகனும், சங்கனும் செந்தாடுபாவை என்கிற மூலிகை இலைகளைப் பறித்து வரப் புறப்பட்டனர்.
இதுபோல் ஒரு காரியத்தில் இறங்கும்போது குருவின் ஆசீர்வாதம் மிகவும் முக்கியம். எனவே அஞ்சுகனும் சங்கனும் போகர் முன் வந்து மண்டியிட்டுத் தாங்கள் புறப்படத் தயாராகிவிட்டதை உணர்த்தினர். அவரும் அவர்களின் சிரத்தின் மேல் கைவைத்து ``போய் வாருங்கள்... போகின்ற காரியம் சிறக்கட்டும்’’ என்றார்.
இருவருமே ஒன்றுக்கு நான்கு பிரம்புக் கூடைகளை எடுத்துக்கொண்டனர்.
``சங்கா... அஞ்சுகா... மூலிகை பறிக்கும் முன் வழிபாடு முக்கியம். தாவர துக்கத்துக்கு இடமளித்துவிடக்கூடாது’’ என்றார் போகர். ``நல்லது பிரானே...'' என்றபடியேதான் இருவரும் குகையை விட்டு விலகினர்.

போகரின் கவனம் அவர்கள் கொண்டு வந்திருந்த நவபாஷாணங்கள் பக்கம் திரும்பியது. கருமார்கள் வசம் ஒரு மண் தாழி இருந்து, அதில் கலங்கலாய் நீர் இருந்தது. அந்தத் தாழியை சுத்தம் செய்து வெயில் படும்படி வெளியே ஒரு பாறைமேல் வைக்கச் சொன்னார் போகர். அகப்பை முத்துவும், மல்லியும் அந்தத் தாழியைப் பக்குவமாய்ப் பிடித்துக்கொண்டு குகைக்கு வெளியே சென்று கலங்கலான நீரைச் சரித்து வெளியேற்றிவிட்டு, தாழியையும் ஒரு பாறைமேல் வெயில்படும் இடத்தில் வைத்தனர்.
இரண்டடி உயரம் கொண்ட குறு உலக்கை ஒன்றும் அங்கு இருந்தது. மருதனையும் நாரண பாண்டியையும் அருகில் அழைத்த போகர் ``நீங்கள் இருவரும்தான் ஒன்பது பாஷாணங்களையும் ஒன்றாகக் கலந்து இடிக்கப் போகிறவர்கள்’’ என்றபடியே குறு உலக்கையை மருதன் வசம் தந்தார்.
``வெயிலில் காய்ந்திடும் தாழியை எடுத்து வந்து அதில் இந்த பாஷாணங்களைப் போட்டு ஒன்றாகக் கலந்து நன்றாக இந்தக் குறு உலக்கையால் இடிக்க வேண்டும். ஒன்பது பாஷாணங்களும் ஒன்றோடொன்று நன்றாகக் கலந்துவிட வேண்டும். இடிக்கும்போது இடிக்கும் விதம் ஒன்றுபோல் இருக்க வேண்டும். பெரும் விசைப்பாடு கூடாது. சங்கனும் அஞ்சுகனும் செந்தாடுபாவைத் தழைகளோடு வந்திடும்போது நவபாஷாணக் கலவை தயாராக இருக்க வேண்டும்’’ என்றும் சொன்னவர், பரிதி, சடையான் இருவரையும் பார்த்து ``உதக நீர் தயாராக இருக்கிறதல்லவா?’’ என்றும் கேட்டிட அவர்களும் ஆமோதித்தனர். எருமைத் தோலால் தைக்கப்பட்ட ஒரு பையினுள் உதக நீர் தயாராக இருந்தது.
போகர் குளிர்ந்துகொண்டிருந்த மண் லிங்கத்தை நெருங்கி அதைத் தொட்டார். தாளமுடிந்த சூட்டில் இருந்தது அந்த லிங்கம். அதை உற்றுப்பார்த்தார். முகத்தில் பலவிதமான உணர்வு ஓட்டங்கள். கண்ணிரண்டும் அதைப் பிரதிபலித்தன! சீடர்கள் அவர் சொன்ன வேலைகளில் ஈடுபட்டிருக்க, செங்கானும், ஆழி முத்துவும் போகரின் உணர்வுப்பொதி மிகுந்த விழிகளைப் பார்த்து வியந்தவர்களாய் ``குருசாமி...’’ என்றனர், தங்கள் பாஷையில்... போகரும் அவர்களை ஏறிடலானார்.
``லிங்கத்தோட உயரமும் அகலமும் சரியாக இருக்குங்களா?’’
``சரியாக இருக்கிறது. ஒருவர் அமர்ந்து தியானிக்கும்போது அவர் மடிமேல் குழந்தை போல் இது பொருந்தி அமர வேண்டும் என்று விரும்பினேன். அதற்கு ஏற்பவே நீங்களும் வடிவமைத்துள்ளீர்கள்.’’
``அப்படியானால் இது கோயிலில் நிலையாக இருக்கப் போவதில்லையா?’’

``இல்லை... இதற்கு ஓரிடம் கோயில் இல்லை! இது ஒரு கோளானது பூமியைச் சுற்றி வலம் வருவதைப்போல வலம் வரப்போகிறது.’’
``எதனால் அப்படி?’’
``அப்படித்தான்..! லிங்க சொரூபம் என்பது ஒரு வடிவ மில்லாத வடிவம். பரம்பொருளின் கணித சொரூபம் என்றும் கூறலாம். அதாவது, நீளம், உயரம், அகலம், வட்டம், சதுரம் என்னும் கணித வடிவம் அவ்வளவும் லிங்கத்திடம் மட்டுமே உண்டு. அதிலும் பாஷாணத்தால் உருவாகப்போகும் லிங்கம் இது ஒன்றுதான். இதே பாஷாணத்தால் உருவாகப்போகும் முருகன் என்னும் தண்டபாணி ஓரிடத்தில் நிலையாக நிற்கப்போகிறான். ஆனால் இந்த லிங்கமோ உலகையே சுற்றப்போகிறது.’’
இந்த லிங்கம் நான் முன்பே சொன்னதுபோல நீள அகல உயர சதுர வட்டம் எனும் அளவியல் அவ்வளவும் உடையது. இந்த அளவியல் ஒளி சார்ந்தது. அதாவது, கண்களுக்குப் புலப்படுவதைப் புரிந்துகொள்ள உதவுவது.
``இந்த லிங்கம் மட்டும் ஏன் இப்படி உலகைச் சுற்ற வேண்டும்? இந்த லிங்கம் தொடர்பாய் எங்களுக்குள் பல கேள்விகள்... கேட்கலாம்தானே?’’
``கேளுங்கள்... நன்றாகக் கேளுங்கள்! கேட்பவர்களையே சித்த உலகமும் பெரிதும் விரும்புகிறது. அதனால்தான் எவரையும் கேளப்பா என்றே ஒரு சித்தன் விளிப்பான்! அதே சமயம் எல்லாக் கேள்விகளுக்கும் விடை வார்த்தைகளிலேயே கிடைத்தும்விடாது. அதையும் மனதில் கொள்ளுங்கள்...’’
``நல்லது குருசாமி... எங்கள் வரையில் இந்த லிங்க வடிவமே ஒரு விசித்திரம்தான். மற்ற தெய்வங்கள் எல்லாம் நம்போல் மனித உருவில் இருக்க, ஈஸ்வரன் மட்டும் எதற்கு இப்படி லிங்கமாய் குழவிக்கல்போல் காட்சி தர வேண்டும்?’’
- ஆழிமுத்து கேட்ட கேள்விமுன் சிரித்த போகர் ``அய்யனே... தெளிவுற எப்போதும் பேச வேண்டும். லிங்கம் குழவிக்கல் போன்றதல்ல... குழவிக்கல்தான் லிங்கம் போன்றது, இதை முதலில் புரிந்துகொள்...’’
"எப்படிச் சொன்னால் என்ன சாமி - இரண்டும் ஒன்றுதானே?"
"ஒன்றல்ல... இப்படி மேலோட்டமாய் சிந்திக்காமல் கேள்வி கேட்கக் கூடாது. ஒரு தாய் ஒரு பிள்ளையைப் பெறுகிறாள். அந்தப் பிள்ளை அப்படியே அந்தத் தாயைப்போலவே இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். இருவரும் உருவத்தால் ஒன்றுபோல் இருந்தாலும் தாயிடம் இருந்து பிள்ளை பிறந்ததுபோல் பிள்ளையால் ஒரு தாயைப் பிறக்க வைக்க முடியுமா?’’
"அது எப்படி முடியும்?"
"அப்படித்தான் இதுவும்... அந்த ஈசன் பெரும் படைப்பாளி! குழவியால் எதைப் படைக்க முடியும்?’’
"இப்போது புரிகிறது. உருவ ஒற்றுமைக்காகவே அவ்வாறு சொன்னேன். இருப்பினும் ஈசனார் அவ்விதம் உருவமற்ற உருவமாய் இருக்க எது காரணம்?"
"ஈசன் என்றுகூடச் சொல்லாதீர்கள்... பரம் பொருள் என்றிடுங்கள். அல்லது, சர்வலோக மகாசக்தி என்றிடுங்கள். அந்த சக்திக்கு வடிவம் தந்தால் அது லிங்கம்போல் இருக்கும். இந்த லிங்கம் நான் முன்பே சொன்னதுபோல நீள அகல உயர சதுர வட்டம் எனும் அளவியல் அவ்வளவும் உடையது. இந்த அளவியல் ஒளி சார்ந்தது. அதாவது, கண்களுக்குப் புலப்படுவதைப் புரிந்துகொள்ள உதவுவது.
அடுத்து அந்த மகாசக்தியானது நம் சக்திபோல் ஓர் அளவிற்கு உட்பட்டதல்ல... பௌதிக வரம்புகளுக்கு அப்பாற்பட்டது! அதாவது அது எல்லையற்றது! அதனால்தான் இத்தனை பெரிய பூமியைப் படைத்து அதில் கோடானுகோடி உயிரினங்களையும் உருவாக்கி, அதற்கும் மேலாய் சூரிய சந்திரர் நட்சத்திரர், நவமர் என்றும் ஒரு பெரும் கோள் கூட்டத்தையும் படைத்து இதையெல்லாம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்து அதனால் நிர்வகிக்க முடிகிறது.
அவ்வளவு பெரிய சக்தியை நாம் நம்போல் மனித வடிவாய்க் காண்பது ஒரு விதம். அப்படிக் காண்பதே நமக்குச் சுலபமானதும்கூட... இருப்பினும் உண்மை என்னவென்றால் நாம் அந்த மகாசக்தியை நம்மைப்போல மனித வடிவில் பார்க்க முனைகையில் அதன் சக்தி நமக்கான அளவில் சுருங்கிவிடுவதையும் மறுக்க முடியாது. அதனாலேயே நம் இறை வடிவங்கள் மானிட உருவில் இருந்தபோதிலும் நம்மிடம் இல்லாத, நாம் விரும்பினாலும் அடைய முடியாத வடிவில் பல தெய்வங்கள் காட்சி தருகின்றன! நாரணனின் பாம்புப் படுக்கை, அவனது அஷ்டதசபுஜ கரங்கள், பிரம்மனின் சிரவரிசை; ஈசனின் சிரம் மேலேயே கங்கை, கழுத்தில் பாம்பணி; விநாயகப்பெருமானின் யானை முகம்... இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இதில் லிங்க சொரூபம் மிகுந்த பொருட்செறிவுடையது.
மனம் கொண்ட மனிதர்களான நமக்கு ஆசை, பாசம் என்கிற உணர்வோடு கூடுதலாய் ஆறாம் அறிவு என்பது அருளப்பட்டு மனிதன் மட்டுமே தான் வாழ்ந்திடும் வாழ்வு பற்றிய புரிதல் உடையவனாக உள்ளான். பிற உயிர்கள் எதற்கும் அந்தப் புரிதல் கிடையாது.

உயிர்வாழப் போதுமான அறிவோடும் உணர்வாலும் வாழ்பவையே மற்ற உயிரினங்கள். இதில் தான் வாழ்ந்திடும் வாழ்வு பற்றிய புரிதல் உள்ள மனிதனால் மட்டுமே எதற்கு இந்த வாழ்வு என்கிற கேள்வியை எழுப்ப முடியும். அப்படியே நான் யார், எதற்காக மனிதனாகப் பிறந்துள்ளேன், இந்தப் பிறப்பில் நான் என்ன செய்ய வேண்டும் என்கிற விசாரங்களெல்லாமும்கூட மனிதப் பிறப்புக்கே உரியவை.
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் சரியான விடை ஒன்றுதான். அது ஆத்மா பரமாத்மா என்பதாகும். ஆத்மாவாய் உள்ளவரை கணக்கில்லாத பிறவிகள் பிறக்க நேரிடும். பரமாத்மாவோடு கலந்துவிட்டால் மட்டுமே விடுதலை. இந்த ஆத்மா அவ்வாறு பரமாத்மாவோடு கலக்கத் தன்னையறிதலே முதல் தேவை. தன்னையறியும் முடிவில் பரமாத்மா புரியத்தொடங்கிவிடும். அந்தப் பரமாத்மாவை சிவமென்றும் விஷ்ணுவென்றும் பிரம்மமென்றும் தனித்த பெயர்களில் சொல்லி அவற்றுக்கொரு வடிவத்தையும் உருவாக்கி அந்த வடிவிலிருந்து விடுதலைக்கான பக்தியைத் தொடங்குவதுதான் மனிதப்போக்கு.
பக்திபுரிவது என்பதும் எளிதல்ல. பக்தியில் அறிவை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பது மிக முக்கியம். இந்த அறிவு ஒரு சமயம் பக்தி உணர்வையே சந்தேகித்து அது ஒரு மூடத்தனம் என்பதுபோல் காட்டும். தன் சந்தேகத்துக்கு வலுச்சேர்க்க அது ஏராளமான கேள்விகளைக் கேட்கும். அதில் முதல் கேள்வியே `நீ கடவுளைப் பார்த்திருக்கிறாயா - பார்க்காத ஒன்றை எப்படி நம்பலாம்?' என்பதாகும். அடுத்து `பார்க்காத கடவுளை நீ எப்படி மனித வடிவாக்கலாம். மனித வடிவைவிட மேலான ஒரு வடிவமும், அந்த கடவுள் இருந்தால், அவருக்கோ இல்லை அவனுக்கோ இல்லை அதற்கோ இருக்கலாமல்லவா?’ என்று கேட்கும். இப்படி இந்தக் கேள்விகள் விரிந்துகொண்டே போகும். அவ்வளவு ஏன், இப்படிப்பட்ட கேள்விகளால் தான் சித்தமும் திறக்கிறது. சித்தர்கள் உலகில் இதைவிட மேலான கேள்விகளைக் கேட்ட சித்தர்கள் பலர் உண்டு.
`கடவுள் வெளியில் இல்லை - நான்தான் கடவுள்! நீ அதை நம்பாவிட்டால் அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நீ நம்பி என்னாகப் போகிறது? இல்லை யார் நம்பி என்னாகப் போகிறது? நம்பும் ஒன்றையே நம்பாமலும் போக முடியும்.. எனவே என் கருத்தை இன்று ஏற்காதோர் நாளை ஏற்பவர்களாவீர்' - என்று எங்களில் ஒரு சித்தன் சொன்னதை இப்போதும் உங்கள் முன் வைக்கிறேன்.

கடவுள் சிந்தனை இப்படி ஆத்மா பரமாத்மா என்று தொடங்கி, பரமாத்மா உண்மையானால் அதைப் படைத்தது யார் என்றும் கேட்டு, `கேள்விகள் கேள்விகள் கேள்விகள் கேள்விகள்' என்று கேள்விகளாகத் தொடர்ந்தபடியே இருக்கிறது. இவற்றுக்கொரு சரியான தெளிவான பதிலை லிங்க சொரூபமே கொண்டுள்ளது என்பதே என் முடிவாகும்.
நான் இப்போது சொன்ன எல்லாக் கருத்துகளோடும் லிங்க ரூபத்தைப் பாருங்கள். அது உருவமா உருவமற்றதா? அது நீளமானதா அகலமானதா உயரமானதா வட்டமானதா சதுரமானதா? அழிந்து மறையும் நிறம் கொண்டதா, இல்லை, உலகப் பொது நிறமான கறுப்பு நிறமானதா?
அதில் ஒன்றைச் சேர்க்க முடியுமா, இல்லை, மூடி மறைத்துப் பிரிக்கத்தான் முடியுமா? அது ஆணா, பெண்ணா, இரண்டுமற்றதா? அதற்குக் காலுண்டா, கையுண்டா? கண் காது மூக்கும் உள்ளதா, இல்லையா? இருக்கிறது என்றால் பொருத்திப் பார்க்கலாம் - இல்லை என்றால் நீக்கி நோக்கலாம்.
இந்த ரூபம் பிரத்யேகமாக ஒரு சிந்தனையை நீங்கள் செய்ய விடாது. இதை வைத்தே நீங்கள் சிந்தனையைச் செய்ய முடியும். இது எல்லாச் சிந்தனைகளையும் ஏற்படுத்தும். அதில் இது ஆண்குறி போல் இருக்கிறது என்பதும் ஒன்று. நீ எப்படி நினைக்கிறாயோ அல்லது சிந்திக்கிறாயோ அதற்கேற்ப உன்னுள் இது தன்னை விரித்துக் கொள்ளும். மொத்தத்தில் இந்த ரூபம் உன் மனதில் பலவாய் விரியும். சிறகை விரிக்கும் பறவைக்கு எப்படி திசைகள் கிடையாதோ அது போல் லிங்கம் குறித்த சிந்தனைக்கும் எல்லை கிடையாது.
இதைச் சிக்கெனப் பிடித்துத் தன்னை அறிந்தவர் உண்டு. எள்ளி நகையாடித் திரிவோரும் உண்டு. இரவு பகல் என்று இரண்டு நிலையில் பூமிப்பந்தே இருக்கும்போது, மனிதர்கள் மட்டும் ஒரே நிலையில் எப்படி இருக்க முடியும்? இப்படியும் அப்படியுமாகவே எல்லோரும் இருப்பர். இது பொதுவில் இருந்து அனைத்தையும் பார்த்தபடியே இருக்கிறது.
வடிவம் என்னும் வகையில், இப்படிப்பட்ட இந்த லிங்கம் சக்தி என்னும் வகையில் பஞ்ச பூத சக்திகளையும் தன்னுள் நவ பாஷாண வடிவில் கொள்ளப்போகிறது. இதன் சக்திக்கு இணையான ஒன்று இந்த உலகில் இருக்கப்போவதில்லை. இதன்மேல் படும் காற்று முதல் நீர் வரை சகலமும் மருந்து. இதைக் காணும் கண்களும் கூட குணப்பாடு அடையும். ஒரு இயற்கை அழகு எப்படி தான் இருந்த இடத்தில் இருந்துகொண்டு பார்ப்பவர் மனதில் பேரானந்தம் தருகிறதோ அதை இதுவும் தரும். ஒரு படி மேலே போய்ச் சொல்லட்டுமா?’’ - போகர் பிரான் லிங்கம் குறித்த விவரணத்தில் இறுதியாக இப்படிக் கேட்டு நிறுத்தினார்.
அவர் லிங்கம் பற்றிப் பேசியதை, தங்கள் பணிக்கு நடுவில் அவர் சீடர்களும் கேட்டுக் கொண்டிருந்த நிலையில் நெருங்கி வந்து நின்றனர்.
ஒரு படி மேலே போய் ஏதோ சொல்லப் போவதாகச் சொன்னாரே... என்ன அது? இவ்வளவு தூரம் சொன்னதைக் கேட்டே பிரமிப்பு அடங்கவில்லை. இதில் இதற்கு மேலும் சொல்ல என்ன இருக்கிறது?
அவர்கள் முகமெல்லாம் கேள்விகளின் ஓட்டங்கள்.
அவரும் திருவாய் மலர்ந்தார்.
``இந்த லிங்கம் சாவா நிலையைத் தரும்! கேட்பதை எல்லாமும் அமுத சுரபிபோல் அள்ளித்தரும். ஞானத்தை ஒரு நொடியிலும் தரும் - பல பிறப்பெடுக்கச் செய்தும் தரும். நற்கர்மம் கொண்டோருக்கு ஒரு நொடி... அல்லாதோருக்குப் பல பிறப்பு. எப்படித் தெரியுமா..? அவர்கள் கேட்டதை எல்லாம் தந்து அதில் அவர்கள் சிக்கி இறுதியில் எல்லாம் மாய அனுபவங்களே என்று உணரும்வரை...’’
- போகரின் முடிவான பேச்சு சீடர்களை பிரமிக்க வைத்தது மட்டுமல்ல - அவர்களில் சிலருக்குள் அப்படியானால் இதனிடம் நாம் எதைக் கேட்கலாம் என்கிற கேள்வியை இறக்கி விட்டது!
செந்தாடுபாவையைத் தேடிச் சென்றபடியிருந்த அஞ்சுகனும் சங்கனும் நடந்த களைப்பு நீங்க ஒரு முழங்கால் உயரப் பாறை மேல் சற்றே அமர்ந்து இளைப்பாறினர். போகர், அவர்களை நாகதாளிவேரைக் கால்களில் கட்டிக்கொள்ளச் சொன்னதை மறந்தே போயிருந்தனர். அப்படி மறக்கச் செய்வதே விதி. அதே விதி ஒரு கருநாக வடிவில் அந்தப் பாறைக்குக் கீழ் உள்ள இடுக்கில் ஆறடி நீள உடலோடு சுருண்டு படுத்திருந்தது.
இன்று கம்ப்யூட்டர் மானிட்டரைப் பார்த்தபடியே வந்த டாக்டர், ஜோதிடரையும் கணேசபாண்டியையும் வேகமாக விலக்கிக்கொண்டு ராஜா மகேந்திரனை நெருங்கி, கண்களின் கீழ் இமையைத் திறந்து பார்த்தார். பிறகு ஆக்சிஜன் மாஸ்க்கை நீக்கிவிட்டு கம்ப்யூட்டர் மானிட்டரின் ஒளிப்புள்ளியைப் பார்த்தார். அதன் வேகத்தில் மாற்றமில்லை. மாறாக அது மேலேறவும் செய்தது. அவர் உதடிரண்டும் அங்கிருப்போர் கேட்கும்படியாக `மிராக்கிள்' என்றது.
அந்த வார்த்தை காதில் விழவும் அரவிந்தன் திரும்பி பாரதியைப் பார்த்தான். அதில் பலவித அர்த்தங்கள். டாக்டர் உடனேயே அங்கிருந்து விலகி, சற்றுத்தள்ளி உள்ள ICU அட்டென்டரின் டேபிள் மேல் இருந்த இன்டர்காமில் யாருடனோ படபடப்பாகப் பேசிவிட்டுத் திரும்ப வந்தார்.
திரும்ப வந்த வரை ஜோதிடர் நந்தா கப்பென்று பிடித்துக்கொள்ளத் தொடங்கினார்.
"டாக்டர்... நல்ல இம்ப்ரூவ்மென்ட் தெரியுதுதானே?"
"யெஸ்... யெஸ்... பட் இட்ஸ் கொயட் நேச்சர்."
"என்ன நேச்சர்... எல்லாம் நான் வந்து ரசமணியைக் கட்டுனதால..."
"ரசமணியா... வாட் நான்சென்ஸ்! என்ன சொல்றீங்க?"
"அது ஒரு சித்த சமாச்சாரம். இப்ப அதைப்பத்திப் பேசவும் வேண்டாம். சார் இனி பிழைச்சுடுவார்தானே?"
"உடம்புல ஆர்கன்ஸ் ரெஸ்பாண்ட் பண்ணத் தொடங்கிடிச்சு. வி வில் ட்ரை... ப்ளீஸ் முதல்ல நீங்கல்லாம் கொஞ்சம் வெளில போங்க.."
"இது விசிட்டிங் அவர்தானே டாக்டர் ஜி?"
"நீங்க நார்த் இண்டியாவா?"
"அஃப்கோர்ஸ் உங்க அக்செண்ட் கேக்க வெச்சிச்சு. இப்ப இவரை நாங்க தியேட்டருக்குக் கொண்டு போகப் போறோம். அதுக்கு முந்தி சில ஃபார்மாலிட்டீஸ் இருக்கு... ப்ளீஸ்..."
"போறோம்... ஒரு ரிக்வெஸ்ட்! அவர் இடுப்புல இப்ப சில ரச மணிகளைக் கட்டியிருக்கேன். அதை ரிமூவ் பண்ணிடாம உங்க ட்ரீட்மென்ட்டைப் பண்ணுங்க."
"ஐயோ... வாட்ஸ் தட்... ப்ளீஸ் ஷோ மீ?"
"அதான் இடுப்புல இருக்குன்னு சொன்னேனே..."
உடனே டாக்டர், இடுப்பருகே நெருங்கி அவரது இளக்கமான ஆடையை விலக்கிப் பார்த்தார். தொப்புளுக்கு கீழே வரிசையாக அந்த ரசமணி உருண்டைகள். ஒன்றைக் கையில் எடுத்து கண்முன் பிடித்துப் பார்த்தார். முகத்தில் பலமான மாற்றங்கள். அதே மாற்றம் அங்கே கணேசபாண்டி, பானு என்று அவர்களுக்கும் ஏற்பட்டது.
“என்ன இது கோலிகுண்டு மாதிரி! ஹவ்கேன் இட் ஆக்டிவேட் த பாடி..." என்றார். அதற்குள் மற்ற டாக்டர்கள் வந்துவிடவும், அவர் கவனம் அந்த ரசமணியைக் கையில் பிடித்தபடியே அவர்கள் பக்கம் சென்றது.
ஜோதிடரிடம் படபடப்பு.
"டாக்டர் முதல்ல அதை இடுப்புல வைங்க... இதைப் பத்தி அப்புறம் பேசலாம். இதைத் தூக்கிப் போட்டுடாதீங்க. இதுக்குப் பின்னால பல ஆயிர வருஷம் சரித்திரம்லாம் இருக்கு" என்று பலமான குரலில் சொன்னதை மற்றவர்களும் கேட்டனர்.
"சார், ஆபரேஷன் தியேட்டருக்குப் போகும் போது தாயத்து, கறுப்புக் கயிறு, அப்புறம் இந்த மாதிரி மேஜிக் ஐட்டமெல்லாம் நாட் அலவ்டு. அது ரேடியேஷன் ஏரியா... அண்டர் ஸ்டாண்ட்?"
- ஒரு டாக்டர் சொல்ல, அரவிந்தன் துரிதமானான்.
"மிஸ்டர் நந்தா... விடுங்க நாம வெளிய போய் நிற்போம். அதான் அழுத்தமா சொல்லிட்டீங்களே... டாக்டர் எனக்கென்னமோ உங்களுக்கு ஒரு நல்ல சான்ஸ் கிடைச்சிருக்கற மாதிரி தெரியுது... எங்க சார் உயிர் இப்ப உங்க கைல" என்று பேசிவிட்டு நந்தாவையும் இழுத்துக்கொண்டு கணேசபாண்டியோடு வெளியே வந்தான்.
ஜோதிடரிடம் படபடப்பு குறையவேயில்லை.
"யூ நோ... அந்த ரசமணி, போகர் தன் கைப்படச் செய்தது. உங்க தமிழ்ல என்ன சொல்வீங்க.. உம் மானுஷ்... நோ... நோ... அமானுஷ்! யெஸ் அமானுஷ்... அமானுஷ்..."
"மிஸ்டர் நந்தா கொஞ்சம் அமைதியா இருங்க. எதுக்கு இந்தப் படபடப்பு..?"
"நான் சொன்னப்போ நீங்க கேக்கல. நம்பல. இப்ப பார்த்தீங்களா..? அஞ்சு நிமிஷத்துல அது ஆர்கன்ஸைத் தூண்டி விட்டதை..?"
"அஃப்கோர்ஸ்... முதல்ல நம்ம எம்.பி நார்மல் கண்டிஷனுக்கு வரட்டும். அப்புறம் எல்லாம் விரிவா பேசுவோம்.’’
"நான் சொல்றேன். அவருக்கு சாவு இப்ப கிடையாது. ஆனா கண்டம் உண்டு. இதை நான் டெல்லில அவருக்கு ஒரு நோட்ல எழுதியே கொடுத்துட்டேன். என் கணிப்பு பொய்யே ஆனதில்ல. பிகாஸ் ஆஃப் போகர் மஹராஜ் அண்டு புலிப்பாணி மஹராஜ். அவங்க ப்ளஸ்ஸிங்ஸ் எனக்கு நிறைய இருக்கு சார். நிறைய இருக்கு. பை த பை அந்த பாக்ஸ் சேஃபாதானே இருக்கு..."
"யெஸ்.. யெஸ்... லாக் பண்ணிட்டுதான் - வந்திருக்கேன்.."
"பட் வெரி கேர்ஃபுல்... அந்த பெட்டி திருட்டு போக நிறைய சான்ஸ் இருக்கு..." - ஜோதிடர் இப்படிச் சொன்னதை அரவிந்தன் சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. பதிலுக்கு பாரதியைப் பார்த்தான். மௌனமாக நடப்பதை எல்லாம் பார்த்தபடியே இருந்த பாரதி வேகமாக அங்கிருந்து ஒதுங்கி, தன் கைப்பேசி வழியாக முத்துலட்சுமியை அழைக்க முனைந்தாள். பானுவும் அதை ஒட்டுக் கேட்கத் தயாரானாள்!
பாரதியின் பங்களாவில் முத்துலட்சுமி படுக்கையில் இருக்க, அவளுக்கு யோகி திவ்யப்ரகாஷ் டச் தெரஃபி முறையில் சிகிச்சை அளித்தபடி இருந்தார்.
"இப்ப எப்படி இருக்கு... கொஞ்சம்கூட தலைல வலி இருக்காது. தூக்கமும் நல்லா வரும் பாருங்க" என்று சொல்லும்போதே தூங்கிப் போனாள் முத்துலட்சுமி. அப்போதுதான் அவள் கைப்பேசியிடமும் அழைப்பு. அதில் பாரதி பெயர் தெரிந்தது.அதைப்பார்த்துச் சிரித்த திவ்யப்ரகாஷ்ஜி அதன் மேல் ஒரு தலையணையை வைக்கவும் சப்தம் வெளியே கேட்காமல் அடங்கிப்போனது. ஹாலில் இருந்து தவிப்போடு பார்த்தபடியே இருந்தாள் அடைக்கலம்மாள். அவளைப் பார்த்தபடியே ஹால் பக்கமாய் நடந்தார். அவள் கூட ஒரு வசியத்துக்குக் கட்டுப்பட்டவள் போல்தான் பார்த்தாள்.
"என்னம்மா... இப்ப எப்படி இருக்கு? அந்தக் கை வலி பரவாயில்லையா?"
"வலியே இல்லைங்க... ஒரே அதிசயமா இருக்கு. அது எப்படிங்க மருந்து மாத்திரைகூட இல்லாம என்னோட வலியைப் போக்கினீங்க?"
"அதுக்குப் பேர்தான் டச் தெரஃபி. அதுக்குக் காரணம் என் ஆத்ம சக்தி. கவர்னரே எதாவது ஒண்ணுன்னா இப்ப என்னதான் கூப்புட்றார்."
அரவிந்தனைத் தீர்க்கமாய் எண்ணவும் அவன் சங்கரம் என்கிற பெயருக்கான எண்களைக் கொண்டு திறந்த காட்சி உள்ளே எதிரொலித்தது. அவர் கரங்களும் பெட்டியை அதேபோல் திறக்கத் தொடங்கின.
"ரொம்ப ஆச்சர்யா இருக்குங்க. அது சரிங்க - என் பொண்ணு நிஜமா நல்லபடியா கல்யாணமாகி வாழ்வாளா?"
"சந்தேகமே வேண்டாம். இந்த யோகி வாக்கு தேவவாக்கு. உங்க பாஷைல சொல்லணும்னா கர்த்தர் வாக்கு."
"பிதாவே.. அது போதுங்க எனக்கு! பாவங்க அது... கல்யாணமானதுல இருந்து கொஞ்சம்கூட சந்தோஷமில்ல அதுக்கு. மாமியார்காரின்னு ஒருத்தி... பிடுங்கித் தின்னுட்டா."
"அதெல்லாம் முடிஞ்ச விஷயம்... இனி எல்லாம் நல்லதே நடக்கும். ஆமா உங்களுக்கும் ஆனந்தத் தூக்கம் வேணுமா?"
"ஆனந்தத் தூக்கமா, அப்படின்னா..?"
"இப்பதான் உள்ள மேடத்தைத் தூங்க வெச்சேன். வாங்க படுங்க... உங்களையும் தூங்க வைக்கறேன்."
"ஐயோ அடுப்படில நிறைய வேலை இருக்குங்களே..."
"நோ பிராப்ளம். ஒரு பதினைஞ்சு நிமிஷம் தூங்கறதால எதுவும் ஆயிடாது. தூங்கி எழுந்த பிறகு ரொம்ப சுறுசுறுப்பா செயல்படுவீங்க..."
"அப்படியா?"

"அனுபவிச்சுப் பார்த்துட்டுச் சொல்லுங்க.." - திவ்யப்ரகாஷின் வார்த்தைகள் அடைக்கலம்மாவையும் தூங்க வைத்திட, அடுத்து தோட்டக்காரர் மருதமுத்து. அவரையும் நேத்திரத்தில் பார்த்த நொடியே கட்டிப் போட்டிருந்தார். அவனையும் அழைத்தார் "என்ன பேர் சொன்னே?"
"மருதமுத்துங்க..."
"நல்ல பேர்... முருகன் பேர்... கவலப்படாதே, உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. இங்க உனக்கு என்ன சம்பளம் தர்றாங்க?"
"ஒம்பதாயிரம் சாமி... ஆனா எல்லா வேலையையும் நான் பார்க்கிறேன். தண்ணி மோட்டார் ரிப்பேரானா நானே சரி பண்ணிடுவேன்."
"நீ நல்ல வேலைக்காரன்... அப்புறம் உன் எஜமானிக்கு போன் பண்ணி அங்க எப்படி இருக்காங்கன்னு கேக்கறியா?"
"நானே கேக்கணும்னுதான் இருந்தேன். ஆனா எப்பவும் அவங்கதான் போன் பண்ணுவாங்க. அவசரம்னாதான் நாங்க பண்ணுவோம். இல்லாட்டி பானு திட்டும்."
"பரவால்ல இப்ப கேள். இங்க எல்லாம் எப்படி இருக்குன்னு கேட்டா எந்தப் பிரச்னையும் இல்லன்னு சொல்."
- அவர் சொல்ல, அவனும் ஏதோ மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவன்போலச் செயல்படத் தொடங்கினான்.
"அம்மா.."
"யாரு மருதமுத்துவா?"
"நான்தாம்மா.. அய்யாக்கு இப்ப எப்படிம்மா இருக்கு?"
"நல்ல இம்ப்ரூவ்மென்ட்... ஆமா பாட்டி என்ன பண்றாங்க - நான் போன் பண்ணா எடுக்க மாட்டாங்களா?’’
"அவங்க அசந்து தூங்கிட்டாங்கம்மா.."
"தூங்கறாங்களா... இப்பவா?"
"ஆமாம்மா..."
"அது சரி. அடைக்கலம்மா என்ன பண்றாங்க?"
"அவங்களும் அசந்துட்டாங்கம்மா..."
"என்ன மருதமுத்து இது...இது தூங்கற நேரமா? நானும் இல்லை... பெட்டி வேற இருக்கு - ஜாக்கிரதையா இருக்க வேண்டாம்? நல்லவேளை நீயாவது முழிச்சிகிட்டு இருக்கியே..."
"கவலப்படாதீங்கம்மா... நான் இருக்கேன்மா - இங்க எந்தப் பிரச்னையும் இல்ல..."
``அந்த அமெரிக்காகாரங்க திரும்ப வந்தா அப்புறமா வரச் சொல். யாரையும் உள்ள விடாதே..."
"சரிங்கம்மா..."
"வெச்சுடறேன்"
-மறுமுனையில் பாரதி முடித்துக்கொள்ள மருதமுத்து திரும்பினான். சற்று இறுக்கத்துக்கு மாறி அவனையுமறியாமல் அவன் பேச்சைத் தன் சக்தியால் கட்டுப்படுத்திக்கொண்டிருந்த திவ்யப்ரகாஷ் அந்த இறுக்கம் தளர்ந்து சிரித்தார். அதில் ஆயிரமாயிரம் அர்த்தங்கள்.
"சாமி... பேசிட்டேன்."
"சந்தோஷம். கவலப்படாதே - எம்.பி. பொழைச்சுக்குவார். அவருக்கு ஆயுசு கெட்டி."
"அப்படிதான் அந்த ஜோசியரும் சொன்னார்..."
"பரவால்லியே... போகட்டும் உனக்கும் ஆனந்தத்தூக்கம் தூங்க ஆசையா இருக்கா?"
"அப்படின்னா?"
"பாட்டியம்மாவும், சமையக்காரம்மாவும் தூங்கறாங்களே... அதுதான்!"
"இது தூங்கற நேரமா சாமி?"
"இல்லதான். ஆனா இந்தத் தூக்கம் நீ தூங்கற வழக்கமான தூக்கம் இல்லை. உடம்புல இருக்கற எல்லா உறுப்புக்கும் சக்தி கொடுக்கற தூக்கம்."
"அப்படியா?"
"தூங்கிப் பார்த்துட்டு சொல்.."
"இப்ப படுத்தால்லாம் தூக்கம் வராதுங்களே..."
"படு... நான் வர வைக்கறேன்..."

- திவ்யப்ரகாஷின் ஒவ்வொரு சொல்லும் அவனைக் கட்டிப் போட்டது. படுத்தான்... தூங்கியும் போய்விட்டான். திவ்யப்ரகாஷின் விரல்கள் அவன் நெற்றிமேல் நாட்டியமாடி முடித்த நிலையில் அவன் தூங்கவும் முகத்தில் ஒரு நிறைவு.
அந்த நிறைவோடு பார்வை அப்படியே பெட்டி பக்கம் திரும்பியது. மெல்ல அதை நெருங்கினார். அருகிலேயே இருந்தது திருப்புளி. எடுத்தவர் அரவிந்தனைத் தீர்க்கமாய் எண்ணவும் அவன் சங்கரம் என்கிற பெயருக்கான எண்களைக் கொண்டு திறந்த காட்சி உள்ளே எதிரொலித்தது. அவர் கரங்களும் பெட்டியை அதேபோல் திறக்கத் தொடங்கின. துளியும் இடையூறு இன்றிப் பெட்டியும் திறந்துகொண்டது.
கம்மென்று கமழ்ந்த விபூதி வாசத்தை ஆழ்ந்து இழுத்தபடியே பெட்டியின் மேல் பாகத்தைத் தூக்க முனைந்தபோது ஸ்ஸ்ஸ் என்கிற சப்தம்!
சப்தம் வந்த திக்கில் திறந்திருந்த ஜன்னல் கம்பிகளை வளைத்துப் பிடித்து படமெடுத்த நிலையில் அந்த நாகம்!
- தொடரும்