மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இறையுதிர் காடு - 48

இறையுதிர் காடு
பிரீமியம் ஸ்டோரி
News
இறையுதிர் காடு

அன்று கற்பாறை இடுக்கின் கீழ் சுருண்டு கிடந்த அந்த நாகம் தன் பார்வையில் தொங்கியபடியே அசைந்தபடி இருந்த இரு கால்களைப் பார்க்கவும்.

னிச்சையான எச்சரிக்கைக்கு உள்ளாயிற்று. பாறைமேல் சங்கனும் அஞ்சுகனும் அமர்ந்ததால் உண்டான அழுத்தத்தில் தன் மொத்த உடலும் சற்று நசுக்கத்திற்கு ஆளாகிவிட்டதையும் அது உணர்ந்ததுபோல் உள்ளிருந்து வெளியேற முயன்றது.

கீழே ஒரு கரு நாகம் இப்படி ஒரு இக்கட்டில் இருப்பது தெரியாத நிலையில் பாறை மேல் சங்கனும் அஞ்சுகனும் அமர்ந்திருந்தனர். எதிரில் பச்சைக் கம்பளம் விரித்தாற்போல் வயல் பரப்பு - அதன்மேல் காற்றின் உசாவலும் அதன் காரணமான பயிரின் நெளிசலும் கண்களின் வழி புகுந்து மனதைப் பிடுங்கித் தின்றது.

ஆங்காங்கே அமர்ந்திருந்த கொக்குகளும் விண்ணார்ந்த எழும்பல்களும், பின் வயல் வெளிக்குள் அமர இடம் தேடும் தழைவுகளும் ஒரு தனி அழகாய்த் தெரிந்தன. ஊடாக தவளைகளின் செருமிய வறட்டுக்குரல் கச்சேரி! வானிலும் பிய்த்துப் போட்ட இலவம்பஞ்சுகள் போல் மேகப் பொதிகள் - அதன் விளிம்புகளில் மதியம் கடந்து மேற்கில் சரியும் கதிரவனின் கிரணங்கள் பொன் முலாம் பூச முற்பட்டிருந்தன.

நீலவானம், சாம்பல் மேகம், விளிம்பில் பொன் முலாம், பச்சை வயல், கரும்பாறைக்குன்றுகள் என்று, அமர்ந்த நிலையில் பல வண்ணங்களைக் காண முடிந்ததில் இருவரிடமும் ஓர் ஏகாந்தம் துளிர்த்த போதுதான் அந்தக் கருநாகமும் காலை உரசிக்கொண்டு வெளியேற முற்பட்டது. அதன் உரசலும் நெளிசலும் நொடிகளில் இருவரிடமும் பயத்தை உருவாக்கியதில் இருவருமே துள்ளிக்குதித்து விலகி ஓட முற்பட, அந்தக் குதிப்பில் சங்கன் கருநாகத்தின் வாலை மிதித்துவிட, அதுவும் விசையோடு திரும்பி ஒரு போடு போட்டுவிட்டு ஓடியே போனது. அதைப் பார்த்த அஞ்சுகன் வேகமாய் சங்கனை நெருங்கித் தாங்கிப் பிடித்தவனாய் ‘சங்கா... அஞ்சாதே... நான் இருக்கிறேன்...” என்று குனிந்து அமர்ந்து சங்கன் காலைப் பார்த்தான் அஞ்சுகன். கருநாகப் பல் தடயங்கள் இரு உதிரப்புள்ளிகளாய்த் தெரிந்திட அதைப் பார்த்த நிலையில் படபடப்புக்கு ஆளாகி,

“சங்கா... பாம்பின் பல் தடங்கள் ஆழமாய்ப் பதிந்துள்ளன. ஆசானின் கருத்துப்படி நாகதாளி வேரினைக் காலில் சலங்கைபோல் கட்டிக் கொள்ளாமலே வந்துவிட்டோம். இது அதனால் வந்த வினை...” என்றபடியே தன் வாயால் பல் பட்ட ரத்தப்புள்ளிகள் மேல் வாயை வைத்து விஷத்தை உரிஞ்சி எடுக்க முயன்றான் அஞ்சுகன்.

இறையுதிர் காடு - 48

சங்கன் தடுமாறியபடியே கீழே காலை நீட்டிக்கொண்டு அமர்ந்துவிட, அஞ்சுகன் ரத்தத்தை உறிஞ்சி, உறிஞ்சித் துப்பியும் பயனில்லை. அவ்வளவு வேகமாய் பாம்பின் விஷம் ரத்தத்தில் கலந்து அதன் சிவப்பணுக்களைச் சிதைத்து ஓட்டத்தையும் குலைக்கப் பார்த்தது. இதனால் உயிர்க்காற்றின் அளவு குறைந்து முகுளம் வலுவிழக்கவும், மனம் என்கிற ஒன்றே புகையானது கரைந்து மறைவதுபோல் இல்லாமல்போய் சங்கன் மயக்கத்திற்கும் ஆளானான்.

அஞ்சுகனுக்கு அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. இதுபோன்ற தருணங்களில் பயன்படுத்த வேண்டிய மூலிகை பற்றிய ஞானமும் அவன் வரையில் இல்லாததால், ஒரு விநாடி கலங்கியவன் அப்படியே சுதாரித்து போகர் பிரானைத் தீர்க்கமாய் மனதில் எண்ணத் தொடங்கினான்.

‘உங்களால் ஏதும் செய்ய இயலாத நிலையில் என்னைத் தீர்க்கமாயும், தீவிரமாயும் எண்ணுங்கள். நீங்கள் எங்கே இருந்தாலும் அங்கே நான் சிறிது நேரத்தில் வந்துவிடுவேன்’ என்று போகர் பிரான் சொன்னதுதான் அவன் நினைவுக்கு வந்து அவனை தீவிரமாக போகரை நினைக்கச் செய்தது.

நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள்... கடவுளைவிட எல்லா வகையிலும் குருவே மேலானவர். குருவருள் இல்லாமல் திருவருளும் சாத்தியமில்லை!

“எம்பிரானே... ஆபத்தான தருணம்! தங்கள் சொற்படி நடவாமல் போனதில் ஒரு உயிரே போய்விடும் நிலை... உடனே வந்து உதவுங்கள். குருபிரான் சரணம்! போகர் பிரான் சரணம்! குருபிரான் சரணம்! போகர் பிரான் சரணம்! குருபிரான் சரணம்! போகர் பிரான் சரணம்!”

இறையுதிர் காடு - 48

- அஞ்சுகனின் தீர்க்கமான எண்ண அலைகள் விண்ணில் கலந்து பரவத் தொடங்கியது. இதுபோன்ற எண்ண அலைகளில் உடம்பின் மின்காந்தம் எவ்வளவு கூடுகிறதோ அந்த அளவிற்கு அது உரிய பிம்பத்தை வேகமாய்த் தேடிச் செல்லும். மிக உண்மையாக, மிக ஆழமாக, மிகத் தீர்க்கமாக எண்ணும் போதே மின்காந்தமும் எண்ண அலைகளோடு சேர்ந்து செயல்படும். முயன்று பார்ப்போமே போன்ற பரிசோதனைகளில் மின்காந்தம் பெரிதாகக் கசிந்து பரவாது... அதற்கு மிகுந்த வேட்கை முக்கியம். பலரின் சாபங்கள் பலிப்பது இந்த மிகுந்த ஆழத்திலும் வேட்கையிலும்தான். வாழ்த்துகள் பலிப்பதும் இதுபோல்தான்! நம் மனதுக்குள் ஆயிரம் யானை சக்தியை நம் எண்ணங்களால் உருவாக்கி அதைப் பயன்படுத்தவும் முடியும். உலகின் மிகப் பெரிய சக்தி மனமே... மிகப் பலவீனமானதும் அதுவே... எண்ணும் எண்ணங்களில் இருக்கின்றன பலமும் பலவீனமும் என்று போகர் பிரான் சொன்னதை அஞ்சுகன் செயல்படுத்திக் கொண்டிருந்தான்.

சங்கனின் உடலில் நீலம்பாரிக்கத் தொடங்கியிருந்தது. உதட்டுப் பிதுக்கலில் நுரை ததும்பிநின்றது. ஒரு பாம்பின் ஒரு துளி விஷம் ஆறடி உடலை அதன் அற்புத பாகங்களைச் செயலிழக்கச் செய்யும் ஒரு விசித்திரம் அங்கே அரங்கேறிக்கொண்டிருந்தது!

அஞ்சுகன் நீலம்பாரித்த உடம்பைக் காணவும் தீவிரமானான். அவன் அண்ட கோசங்களில் பரவிய அதிர்வில், ஆங்காங்கே உள்ள சுரப்பிகளில் சூடு கண்ட பால்போல் ஒரு பொங்குதல்... அதன் விளைவாய் உடம்பெங்கும் ரோமாஞ்சனச் சிலிர்ப்பு. விடைத்த முடிகளிடம் முள்ளின் கூர்மை. கன்னக்கதுப்புகளில் நாடகத்திரைபோல் அசைவு. நல்லவேளையாக அஞ்சுகனை அதிகம் சோதிக்காதபடி “அஞ்சுகா என்னாயிற்று?” என்றபடியே போகர் பிரான் அங்கே வந்தது தான் விந்தை! அவர் கையில் ஒரு மரப்பேழை. அவர் வரவும் தியானிப்பு கலைந்த அஞ்சுகன் அருகில் கிடந்த சங்கனைக் காட்டு முன் போகர் அவனை நெருங்கியவராய் அவன் மணிக்கட்டைப் பிடித்து நாடி துடிக்கிறதா என்று பார்த்தார். பின் மார்பில் காதை வைத்துப் பார்த்தவர், மிக வேகமாய் நிமிர்ந்து, படுத்திருந்த அவனைத் தூக்கி அமரச் செய்த நிலையில் ஒரு பாறை மேல் சாய்த்தார். அதே வேகத்தில் தன் மரப்பேழையை அருகில் வைத்துவிட்டு இடுப்பிலிருந்து ஐந்து ரசமணி உருண்டைகளை எடுத்து சங்கன் இடையாடையோடு சேர்த்துக் கட்டியவர், சங்கனின் உச்சந்தலை முடிக் கற்றையைப் பற்றி வெடுக் வெடுக்கென்று மூன்று முறை இழுத்து முடித்தவராய், நாலாபுறமும் பார்த்ததில் ஒரு தாழம்புதர் இருந்து அவர் கண்களை விரியச் செய்தது.

“சங்கன் அதிர்ஷ்டக்காரன்...” என்றபடியே அந்தத் தாழம்புதரை நெருங்கி, கூரிய முட்களோடு அரை வட்டமாய் சூரியக் கதிர் எழும்பி நிற்பது போல் விரிந்திருந்த தாழை மடல்களைப் பறிக்க முற்பட்டார்.

முன்னதாய் மூன்று முறை கை தட்டி அருகில் இருந்த ஒரு மரக் கொம்பை எடுத்து புதருக்குள் விட்டு ஓர் உலட்டு உலட்டினார். அடுத்த நொடி அதிலிருந்து இளம் பிஞ்சு நாகங்கள் ஒன்றுக்குப் பத்தாய் தெரித்து விலகி ஓடின. ஒரு சாண் அளவு கூட இல்லாத அந்த நாகங்களும் படம் விரித்துச் சீற முற்பட்டதுதான் பெரும் விந்தை.

இறையுதிர் காடு - 48

அஞ்சுகன் இமைக்கக்கூடத் தோன்றாது உறைந்துபோயிருந்தான். போகரோ அந்தக் குஞ்சுகளை லட்சியம் செய்யாமல் தான் பறித்த தாழை மடல்களின் கூரிய முள் பாகங்களை நகங்கண்ணால் வெட்டி, உள்ளங்கை நிறைய அதன் முட்களைச் சேர்த்துக்கொண்டு, அந்த முள்ளால் பின் கழுத்து, மணிக்கட்டு, பாதத்தில் கட்டை விரலுக்குக் கீழான தாங்கும் பகுதி என்று பாகம் பாகமாய் முட்களைக் குத்தி நிற்கச் செய்தார். இறுதியாக தான் கொண்டு வந்திருந்த மரப்பேழையைத் திறந்து உள்ளிருந்து சல்லிவேர்கள் ஒரு கொத்தனாற்போல் இருந்த வேர்க்கொத்து ஒன்றை எடுத்து சங்கன் தலை மேல் வைத்து, மேலே கையை அழுத்திப்பிடித்தார். அப்படியே அஞ்சுகன் இடுப்பில் இருந்த நெளிக்கட்டாரியை அவன் அனுமதியின்றி உருவி எடுத்து சங்கன் உடம்பின் அநேக பாகங்களைக் கீறியதில் ரத்தம் பீறிட்டு புரளாமல் சாந்துப் பதத்தில் செம்புழுக்கள்போல வடிவம் கொண்டு மெல்ல ஒழுகிடத் தொடங்கின.

அஞ்சுகன் பார்த்துக்கொண்டே இருந்தான். போகர் தலையில் வைத்திருந்த கையை விலக்கி அந்தச் சல்லி வேர்க் கட்டையும் எடுத்துத் திரும்ப தன் மரப்பேழைக்குள் வைத்துக்கொண்டவராய் அஞ்சுகன் பக்கம் பார்த்தார்.

“மிகவும் பயந்துவிட்டாய் போல் தெரிகிறதே?”

“ஆம் குருவே...”

“நம்மை அரவப்படுத்துவதால்தான் பாம்புக்கு அரவம் என்றும்பெயர். சொல்லப்போனால் பயத்தின் வடிவமே பாம்புதான்...”

“ஆம் குருவே... அஞ்சுகன் பிழைத்து விடுவானல்லவா?”

“இம்மட்டில் அளிக்க வேண்டிய சிகிச்சை அவ்வளவையும் அளித்துவிட்டேன். விஷமானது மேலேறாமல் கீறிய பாகங்களில் ரத்தத்தோடு கலந்து வெளியேற வெளியேற நாடித்துடிப்பும் சீராகி, பின் ரத்த ஓட்டமும் சீராகி, உயிர்க் காற்றும் போதிய அளவு கிடைத்து முகுளம் விழித்திட சங்கன் அரைக்கால் நாழிகைக்குள் எழுப்போவது திண்ணம்.”

“தாங்கள் தலையில் வைத்த அந்தக் கொத்தான வேர்?”

“கேட்க வேண்டிய கேள்வியைக் கேட்டு விட்டாய். இந்தப் பேழையில் இருப்பது சஞ்சீவி வேர். சஞ்சீவி என்றால் அழிவில்லாத ஜீவி அதாவது உயிர் என்று பொருள். உச்சந்தலையில் கபாலத் திறப்பின் வழிதான் உயிரானது செல்ல விழையும், ஞானியரிடம் இது சுலபமாய் நிகழும். அவர்கள் தங்கள் யோக சித்தியால், குண்டலினி யோகப் பயிற்சியால் கபாலத்தை வசீகர ஆற்றலோடு வைத்திருப்பர். அந்த ஆற்றல் சக்தியைப் பாதுகாக்கவே சிகைவளர்த்து அதைக் கூம்பு வடிவில் ஆக்கி, கலசம்போல் வடிவமைத்துக் கொள்கிறோம்.

சங்கனும் என் சீடன் எனும் வகையில் கூம்பு வடிவ சிகை கொண்டவன் என்பதால் அவன் கபாலமும் ஆற்றல் மிகுந்திருக்கும். எனவே உயிரானது இலகுவாக அதன் வழியே வெளியேற முற்படும். அதைத் தடுப்பதுதான் இந்தச் சஞ்சீவி வேரின் அரும் செயல். இது பூமியில் பெரிதாய் விளைவதில்லை - இமயம் இதன் உற்பத்தித் தளம். அதீதமான குளிருக்கு நடுவில் சிறிய வெப்பத்தில் விளைவது இது... இதன் ரசாயன ஆற்றல் அசாதாரணமானது. ராமாயணத்தில் ஆயிரக்கணக்கான வானரர்களை பிரம்மாஸ்திரம் வீழ்த்தியபோது இந்த மூலிகையே அவர்களை உயிர்ப்பிக்கச் செய்தது.

இதன் ஆதிமூலத்தைத் தேடிய சித்த புருஷர்கள் பலராவர். ஆனால் இது எல்லோருக்கும் அவ்வளவு சுலபத்தில் கிடைத்துவிடுவதில்லை. நானே இதைப் பெரும் தேடலுக்குப் பின் அகத்திய முனியின் வழிகாட்டுதலில் அடைந்தேன். இன்று இது சங்கனுக்கும் கை கொடுத்துவிட்டது.

இனி சங்கன் சஞ்சீவினி பட்டதால் சாகாவரம் பெற்றவர்களுக்கு இணையானவன்” என்று போகர் பிரான் கூறிடும்போது சங்கனிடமும் அசைவு... மெல்லிய முனங்கல் சப்தம் வேறு... அஞ்சுகன் வேகமாக நெருங்கி “சங்கா... சங்கா...” என்று தோளைத் தொடவும், மெல்ல கண் மலர்த்தினான்.

“அஞ்சுகா... நீ ரத்தக் கீறல்களுக்கு மருந்தான குப்பைத் திருமேனியைப் பறித்து அதன் சாற்றைப் பூசு. அந்தக் காயங்களும் விரைந்து ஆறட்டும். அப்படியே இந்த நாகதாளியையும் காலில் கட்டிக்கொள்ளுங்கள். இனி என் பேச்சை எக்காலத்திலும் மறவாது பின்பற்றும் ஒரு உறுதியான நிலைப்பாட்டிற்கும் வாருங்கள்” என்ற போகர், அதே மரப்பேழையில் இருந்து சில வேர் வளையங்களை எடுத்து நீட்டவும், முதல் காரியமாக தான் அணிந்துகொண்டு சங்கனுக்கும் அணிவித்ததோடு வயல் வரப்பை ஒட்டி சிறு பூக்களோடு தழைத்து வளர்ந்திருந்த குப்பைத் திருமேனிச் செடியை வணங்கிவிட்டு, பறித்து அதை உள்ளங்கையில் வைத்துக் கசக்கி, கீறல்கள் மேல் சாற்றினை விட்டான்.

மறுபடியும் தாழம்பூ முட்களை போகரும் நீக்கினார். அஞ்சுகனிடம் இப்போது மேலும் ஒரு கேள்வி.

“குருபிரானே... நாகம் எதனால் இந்த வேரைக் கண்டு அஞ்சுகிறது என்று நான் அறியலாமா?’ எனக் கேட்டான்.

“இதுவும் நல்ல கேள்வி... இந்த வேர் பெரிதாய் எந்த வாசமும் இல்லாதது. அதே சமயம் இதற்கும் ஒரு ஒளியுடம்பு உண்டு. நாகம் நோக்கிடும் மற்ற தாவரங்களில் இல்லாத அந்த ஒளி இந்த நாகதாளி வேர் மேல் ஒளிர்ந்த படியே இருக்கிறது. எனவே நாகங்கள் இதைத் தீயெனக் கருதிப் பின்வாங்கும்.”

“நம் கண்களுக்கு ஏன் அந்த ஒளி புலனாவதில்லை?”

“பல காரணங்கள் அதற்குண்டு. நாகம் பூனை பருந்து ஆந்தை நாய் இவற்றின் கண் அமைப்பும், இவற்றின் உடல் ரசாயனமும்தான் இதற்குக் காரணம். இப்போது இதுகுறித்துப் பேச அவகாசமும் இல்லை.

வாருங்கள் அருகேதான் நான் குறிப்பிட்ட அந்த மடுவும் உள்ளது. செந்தாடு பாவையை மாலை ஒளியில் நன்கு அறிய முடியும். ஆளுக்கொரு கூடையில் பறித்துக்கொண்டு குகைக்குச் செல்வோம்.” என்று அவர்களுடன் அவரும் சேர்ந்துகொண்டார். அவரோடு இணைந்து நடக்கும்போது சங்கனுக்கும் அஞ்சுகனுக்கும் ஒரே பூரிப்பு.

“குருபிரானே... என் உயிரைக் காப்பாற்றி உயிர்ப் பிச்சை இட்ட கடவுளாகவும் தாங்கள் ஆகிவிட்டீர்கள். என்வரையில் இனி நீங்கள் குரு இல்லை - கடவுள்” என்றான் சங்கன்.

“வேண்டாம். என்னைக் கடவுளாக்கி விடாதே... உனக்குத்தான் அது கேடு. நான் குருவாக இருந்தாலே உனக்கானதை நான் கவனித்து அளிக்க முடியும். கடவுளாகிவிட்டால் உன் விதிப்படி நடப்பதை வேடிக்கைதான் பார்ப்பேன். நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள்... கடவுளைவிட எல்லா வகையிலும் குருவே மேலானவர். குருவருள் இல்லாமல் திருவருளும் சாத்தியமில்லை.” பேசிக்கொண்டே மலையடிவாரத்துப் புல்பொசிந்த பாதைகளில் நடந்தனர். மடுவும் கண்ணில் பட்டது. பன்னீராய்த் தண்ணீர்! உள்ளோட்டத்தில் ஏராளமான கயல்கள். மடுவின் ஒரு பாகத்தில் தாமரைகள் மலர்ந்து மொட்டவிழ்ந்திருந்தன. சில தாமரை இதழ்கள் உதிர்ந்து இலைகள் மேல் கிடந்தன. அதைப் பார்க்கையில் அந்த மடுவே அர்ச்சிக்கப்பட்டது போல் இருந்தது. மடுக்கரை முழுக்கப் பலவிதமான தாவரங்கள் - நீர்க் கொடிகள். அதில் போகர் பிரான் செந்தாடு பாவையை ஒரு பாறையையொட்டிக் கண்டறிந்தார்.

“அதோ... அதுதான் செந்தாடுபாவை சேர்ந்தாடுபாவை என்றும் கூறுவர். இது மனித நடமாட்டமில்லாத இடத்தில்தான் பெருகும். அருகில் நாம் செல்லச் செல்ல அசைந்து எதிர்ப்பைத் தெரிவிக்கும் பார்” என்றார். அதே போல் அதன் அருகில் செல்லச் செல்லவே பருத்தி இலைபோல முக்கூம்பாய் இருந்த அதன் இலைகள் ஆட ஆரம்பித்தன!

கை நீட்டவும் என்னைத் தொடாதே என்பது போல் பின்னே சென்றபடியே இருந்தது!

சங்கன், அஞ்சுகன் இருவரிடமும் பேராச்சர்யம். இது தாவரமா இல்லை உயிரினமா?

இன்று அந்த நாகத்தின் சீற்றமும் அதன் நீண்ட குழலுடம்பும், கருமணி போன்ற விழிகளில் வெறிப்பும் திவ்யப்ரகாஷ்ஜியின் வயிற்றில் அமிலத்தைப் பீறிடச் செய்தது.

திறந்த பெட்டியை மூடிவிட்டு கைகளைக் கட்டிக்கொண்டு பயத்தோடு பார்த்தார். ஒருபுறம் அனிச்சையாக பயம் ஏற்பட்ட போதிலும், யோகிகளுக்கே உண்டான விழிப்பும் அந்த யோக சக்தியும் அவரை தைரியமாக அந்தப் பாம்பை உற்று நோக்க வைத்தன.

இறையுதிர் காடு - 48

ஜன்னல் கம்பிகளை வளைத்திருந்த அந்த நாகமும் அங்கிருந்து சீறிக்கொண்டே வந்து பெட்டியின் மேல் ஏறி சிம்மாசனத்தில் அமர்ந்த ராஜாபோல் அமர்ந்துகொண்டது.

திவ்யப்ரகாஷ்ஜி மெல்ல கைகளைக் கூப்பத் தொடங்கினார். அப்படியே மனிதர்களிடம் பேசுவது போலவே அதனிடம் பேசவும் தொடங்கினார். அது வடிவில்தான் பாம்பு, மற்றபடி அது ஒரு தெய்வ சக்தி என்பதோடு, அவரின் யோகப் புலன்களுக்குள் பிரமாண்ட ராஜ உடையார் என்கிற பெயரும் எதிரொலித்தது.

“உடையார்... பிரமாண்ட ராஜ உடையார்... மகத்தான சித்த யோகி நீங்க... எதுக்கு இந்த சர்ப்ப வடிவம்? இந்தப் பெட்டிக்குக் காவல் காக்கவா?” என்று அவர் கேட்க, பதிலுக்குப் பாம்பிடமும் சீற்றம்.

“நான் தப்பான நோக்குல இந்தப் பெட்டிய திறக்கல. இந்த லிங்கம் பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கேன். போகர் பிரான் நவபாஷாணத்தால செய்த முதல் தெய்வ சொரூபம். இதை என் மடிமேல வெச்சு ஒரு மணி நேரம் நான் தியானிச்சாலும் போதும்... என் ஆத்ம சக்தி அளப்பரிய சக்தியா மாறி நான் உலகத்துக்கே வழிகாட்ட முடியும். அதோட எந்த நோய் நொடியுமில்லாம, சாகும் வரை கண் பார்வைக் குறைபாடுமில்லாம வாழமுடியும். அதுக்காகத்தான் இதைத் திறந்தேன்” என்ற அவர் விளக்கம் எதனாலோ அந்த நாகத்தை மிகவே சீறச் செய்தது.

“கோபப்பட வேண்டாம். நான் யோகக் கலையைக் காசுக்கு விக்கற ஒரு கார்ப்பரேட் சாமியார் இல்லை. மெய்யான ஆன்மிக நாட்டமும், யோக ரகசியங்கள் மேல பெரிய ஈடுபாடும் கொண்ட ஒருத்தன். பாரதி என்னைச் சந்திச்சுட்டுப் போன நொடி உங்களப் பற்றி, இந்தப் பெட்டி அப்புறம் லிங்கம் பற்றியெல்லாம் தெரிஞ்சுகிட்டேன். அந்த நொடிலதான் நான் கத்து வெச்சிருக்கறதெல்லாம் எவ்வளவு அல்பம்னு தெரிய வந்தது. எப்பாடுபட்டாவது இந்த லிங்கத்தை தரிசனம் பண்ணவும் பூஜிக்கவும் ஆசை ஏற்பட்டது. இதை ஒரு முறை பூஜிக்கறதும், ஒருத்தன் ஒரு சிவாலயத்தை லட்சம் முறை சுத்தறதும் ஒண்ணுன்னா இது எவ்வளவு மகத்துவம் உள்ளதா இருக்கணும்?

அதனாலதான் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாதபடி, அதே சமயம் யாருக்கும் தெரியாதபடி இந்தப் பெட்டியைத் திறந்தேன். ஆனா உங்கள கொஞ்சம்கூட எதிர்பார்க்கல...”

- திவ்யப்ரகாஷின் விளக்கத்தைத் தான் கேட்க விரும்பவில்லை என்பதுபோல அந்த நாகம் சீற்றமாய்ச் சீறியது. அப்போது யாரோ வருவது போல சப்தம். திரும்பிப் பார்த்தார். அவரது கார் டிரைவர் வந்துகொண்டிருந்தான். அவன் கண்களிலும் பீதி.

“ஏய் நீ எங்க வரே... போ... போய் கார்ல இரு. நான் இப்ப வந்துட்றேன்” என்றவரைக் கடந்து அவனும் பெட்டியையும் நாகத்தையும் பார்த்தான். அதன் சீற்றம் அவனையும் மிரட்டி நிற்க வைத்தது. அவனைப் பார்த்தவர் “போய்யா... வரேன்... போ... போ...” என்றார். அந்த நாகமும் போகிறாயா இல்லையா என்பதுபோல் பெட்டியை விட்டு இறங்கியது.

திவ்யப்ரகாஷ்ஜிக்குத் தெளிவாகப் புரிந்துவிட்டது. தன் விருப்பத்துக்கு அங்கே அனுமதி இல்லை. ஏமாற்றமாக இருந்தது.

என் கர்மாவுல இப்ப இடமில்லையா? நான் இதை தரிசிச்சா என்ன குறைஞ்சிடும்? பொருளைத் திருடினாதான் பாவம். அருளைத் திருட்றதுல என்ன தப்பு? வடக்கே கபீர்தாசர் அப்படித்தானே குருவருளை அடைஞ்சாரு... நான் அடையக் கூடாதா?”

“ரியலி இட் ஈஸ் எ வெரி பிக் மிராக்கிள். அவருக்கு இனி எந்த ஆபத்தும் இல்லை. ஹார்ட் பீட், கிட்னி, பான்க்ரியாஸ் எல்லாமே ஃபங்ஷன் பண்ணத் தொடங்கிடிச்சு!

- பின்னே சில அடிகள் சென்று நின்றுகொண்டு வாதம் புரிபவர் போல் பேசிப் பார்த்தார். நாகம் தொடர்ந்து முன் சென்று சீறவும் “சரி... போயிட்றேன் உடையார்... போயிட்றேன். ஆனா இதை நான் என் மடிமேல வெச்சு ஜென்ம சாபல்யம் அடையாம விட மாட்டேன். இதை வெச்சே போகர் பிரானையும் தரிசிப்பேன். என்னோட இந்தப் பிறப்பு லட்சியமும் நோக்கமும் இப்ப இதுமட்டும்தான்” என்றபடியே வெளியேறத் தொடங்கினார்!

நாகமும் வாசல் வரை சென்று ஒரு வாக்கிங் ஸ்டிக் தரை மேல் நிற்பதுபோல் நிமிர்ந்து நின்று பார்த்துவிட்டு, திரும்ப பெட்டியிடம் சென்றது. முத்து லட்சுமியிடமோ, அடைக்கலம்மாவோ, மருதமுத்துவோ யாரும் எழுந்திருக்க வேயில்லை!

அதனால் என்ன, நானிருக்கிறேன் என்பது போல் பெட்டியின் மேல் ஏறி அமர்ந்து கொண்டது அந்த நாகம்!

ஹாஸ்பிடல்!

ஒரு டாக்டர் பட்டாளமே ராஜா மகேந்திரனைப் பரிசோதித்து முடித்ததோடு கூடிக் கூடிப் பேசியபடியே இருந்தனர்.

அவர்களில் ஒரு டாக்டர் நெற்றியில் விபூதி குங்குமம் எல்லாம் வைத்திருந்தார். அவர் மட்டும் விலகி பாரதி, அரவிந்தனை நோக்கி வந்தார். கூடவே ஜோதிடர் நந்தா, கணேசபாண்டியனும்...

“நீங்கதானே எம்.பி. சார் ஃபேமிலி?”

“யெஸ் டாக்டர்... அப்பாக்கு இப்ப எப்படி இருக்கு?” கேட்டாள் பாரதி.

“ரியலி இட் ஈஸ் எ வெரி பிக் மிராக்கிள். அவருக்கு இனி எந்த ஆபத்தும் இல்லை. ஹார்ட் பீட், கிட்னி, பான்க்ரியாஸ் எல்லாமே ஃபங்ஷன் பண்ணத் தொடங்கிடிச்சு. ஹார்ட் பீட் டெம்ப்பரேச்சர்னு எல்லாமே வெரி நார்மல். ஆக்சிஜன் இல்லாமலே சார் நார்மலா இருக்கார். எங்க மெடிக்கல் ஹிஸ்ட்ரில எப்பவாவது இப்படி அதிசயங்கள் நடக்கும். எங்களுக்கும் இந்த மாதிரி அதிசயங்கள்தான் பெரிய ஆப்பு. இல்லன்னா நாங்களும் சும்மா இருக்க மாட்டோமே! நாங்கதான் நடமாடும் கடவுள்னு டிக்ளேரே பண்ணிடுவோமே..?” - அவர் வேடிக்கையாகவும் பேசினார்.

“தேங்க்யூ டாக்டர்... தேங்க்யூ ஸோ மச்...”

“பை த பை... இதெல்லாமே ஏதோ ரசமணின்னு ஒண்ணை இடுப்புல கட்டப் போய்த்தான்னு இங்க யார் சொன்னது?”

- அவர் கேட்ட இக்கேள்வி முன் நந்தா முன் சென்றார். சென்றதோடு “ஏன் டாக்டர் - அதுலே உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? பரவால்ல.. நீங்க நம்பி எதுவும் இனி ஆக வேண்டியதில்ல. ஜரூர் கா வாபஸ் தேகோ... எங்க அது?”

“நோ நோ... எதுக்கு இந்தப் படபடப்பு... நான் ஒரு அலோபதியா இருந்தாலும் சித்தா மேலயும் ஈடுபாடு உள்ளவன். எங்க அலோபதி எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கறதால ஒரு பிரயோஜனமும் கிடையாதுன்னு சொல்லுது. ஆனா குளிச்சா எப்படித் தூக்கம் வருதுன்னு குளிக்கறவங் களுக்குத் தானே தெரியும்?”

“டாக்டர் நீங்க என்ன சொல்ல வரீங்க...”

“சம்திங் அதுல ஏதோ இருக்கு. இல்லன்னா இப்படி ஒரு இம்ப்ரூவ்மென்ட்டுக்கு சான்ஸே இல்லைன்னு பர்சனலா நான் நம்பறேன். இதை மிச்சமிருக்கற சீரியஸ் பேஷன்ட் கிட்டயும் வெச்சு டெஸ்ட் பண்ணிப் பார்க்க விரும்பறேன். ஆனா மத்த டாக்டர்கள் வேண்டாம். அந்தப் பேச்சையே எடுக்காதீங்க. அது காக்கா உக்கார பனம் பழம் விழுந்த கதைங்கறாங்க.”

“நோ... அதை தயவு செய்து திருப்பிக் கொடுத்துடுங்கோ ப்ளீஸ்... இட் ஸ் நாட் எ டெஸ்டிங் மெட்டீரியல். அது பூஜிக்க வேண்டிய ஐட்டம்.” - நந்தா ஏதோ அது தன் சொந்தம் என்பது போலவே பேசிட, அதுவரை பொறுமையாக இருந்த பாரதி “டாக்டர், மத்த டாக்டர்கள் சொல்றதுதான் சரி. ப்ளீஸ் கெட் பேக்... அதை என்கிட்ட கொடுங்க. அப்புறம் அப்பாவை நாங்க இப்ப பார்க்கலாமா?”

“தாராளமா... இன்ஃபாக்ட் அவர் பேசினாலும் பேசலாம். பை த பை, ஒரே ஒரு நாள் அதை நான் வெச்சிருந்துட்டு நாளைக்குத் தரட்டுமா... இட் ஈஸ் மை பர்சனல் ஆப்ளிகேஷன்.”

அந்தக் குரல் செத்துப்போன குமாரசாமியின் ஒட்டிப்பிறந்த ஜெராக்ஸின் குரல். பாரதிக்கு திக்கென்றாகவும் கை நழுவியது அந்த செல்போன்.

- அதற்குமேல் பாரதி அவரிடம் வாதிட விரும்பவில்லை. ஆனால் நந்தா விடுவதாக இல்லை. இந்தப் போராட்டம் பானு கணேச பாண்டி இருவருக்குமே ஒரு ஆச்சர்யத்தோடு, அடுத்து என்ன நடக்குமோ என்கிற ஆர்வத்தையும் அதிகரித்த நிலையில், பானுவின் போனுக்கு ராஜாமகேந்தி ரனின்அரசியல் வட்டங்களிலிருந்து போன் கால்கள் வரவும் அவள் ஒதுங்கிட, கணேச பாண்டியன் வேகமாக எம்.பி.யைக் காணத் தயாராகிட, அரவிந்தனும், பாரதியும் அவரோடு இணைந்து நடந்தபோது, ஒருவர் பாரதி மேல் மோதிய நிலையில் ‘சாரி...’ என்றபடி செல்ல, பாரதியும் அதைப் பொருட்படுத்தாமல் அப்பாவைக் காண ஓடினாள்.

யாரும் பெரிதாகத் தடுக்கவில்லை. புன்னகையோடு பேசிக்கொண்டே பாரதி, அரவிந்தன், கணேச பாண்டி மூவருக்கும் வழிவிட்டனர். ராஜா மகேந்திரனின் மார்பு மேலும் கீழும் சீராக ஏறி இறங்கிக் கொண்டிருக்க, புதிய சலைன் பாட்டில் மாட்டப்பட்டிருந்தது. அதுவும் வேகமாய் இறங்கிக் கொண்டிருந்தது.

கம்ப்யூட்டர் மானிடர் ஆஃப் செய்யப் பட்டிருந்தது. பாரதி போய் அப்பாவின் தோள் அருகே நின்று கூர்ந்து பார்த்தவளாய் தோளில் கை வைத்தாள். மளுக்கென்று கண்களைத் திறந்தார் ராஜாமகேந்திரன்.

நிஜமாலுமே திக்கென்றிருந்தது பாரதிக்கு.

“அப்பா...”

“...”

``நௌ யூ ஆர் வெரி நார்மல்... இனி எந்த ஆபத்தும் இல்லேன்னு சொல்லிட்டாங்கப்பா..!”

- அவர் கண்களில் அந்த நிலையிலும் ஒரு பரவசம் தெரிந்தது.

“ஆமாம்யா... உங்களுக்கு இனி எந்த ஆபத்துமில்லை. ஜோசியர் சொன்ன அவ்வளவும் அப்படியே பலிச்சிடிச்சு. இப்ப நீங்க பிழைக்கக்கூட நம்ப ஜோசியர்தான்யா காரணம்” - என்று கணேச பாண்டி இடையில் புகுந்து பேசியது பாரதிக்குப் பிடிக்கவில்லை. அப்போது அவள் போனிலும் அழைப்பொலி - திரையில் ஆசிரியர் ஜெயராமன் பெயர்.

“எடிட்டர் சார்... ஒன் மினிட் டாட்” என்று அங்கிருந்து, பேச உகந்த இடம் நோக்கி நடக்க, அரவிந்தனும் தொடர்ந்தான்.

“என்ன பாரதி... உன் போனுக்காகத்தான் காத்திருக்கேன். என்ன நடந்துகிட்டிருக்கு?”

“எல்லாமே ஓ.கே சார்... அப்பாவும் அபாயக் கட்டத்தக் கடந்துட்டாரு. பெட்டியையும் திறந்து உள்ள என்ன இருக்குன்னு பார்த்துட்டோம்.”

“ஓ... பரவால்லியே... பயப்படவோ பதற்றப்படவோ இனி எதுவுமில்லையே..?”

இறையுதிர் காடு - 48

“அப்படிச் சொல்ல முடியல சார். U.S-ல இருந்து ஒரு ஜோடி பெட்டி எங்களோட சொந்தம்னு வந்து நிக்கறாங்க. நானும் கொடுத்துடலாம்னுதான் இருக்கேன். ஏதோ ஏடுகள், அப்புறம் காஞ்ச வில்வ இலை, சிவலிங்கம்னு எனக்கு சம்பந்தமேயில்லாத விஷயங்கள்தான் அவ்வளவும்.”

- பாரதியின் பதிலுக்கு இடையீடு செய்யத் தொடங்கினான்.

“நோ பாரதி... இவ்வளவுக்குப் பிறகும் நீ உன் பழைய ஸ்டேண்ட்ல இருக்கறது சரியில்ல. அந்தப் பெட்டி, சிவலிங்கம், ஏட்டுக் கட்டுகள் எல்லாமே விலை மதிப்பில்லாதவை. ரசமணிகளைக்கூட நான் நம்பறேன். அவற்றுக்கு நிச்சயமா ஏதோ சக்தி இருக்கு.”

- அவன் குரல் ஆசிரியர் ஜெயராமன் காதிலும் விழுந்து எதிரொலித்தார்.

“பாரதி... எனக்கும் அரவிந்தன் சொல்றதுதான் சரின்னு படுது. பை த பை இப்ப பெட்டி வீட்ல தானே இருக்கு...”

“ஆமாம் சார்.”

“நான் வரேன்... நேர்ல பாக்கறேன்... அப்புறமா முடிவெடுப்போம்..?”

“எனக்கொண்ணும் ஆட்சேபனை இல்லை சார்.”

“சரி நான் இப்பவே கிளம்பி வரேன். இங்க நான் வந்த வேலை முடிஞ்சது. உன் விஷயத்துல பாதில வந்துட்டமேன்னு ஒரு சலனம் இருந்து கிட்டே இருக்கு. அந்தப் பெட்டிக் குழப்பம் நீங்கினாதான் ஒரு தெளிவே பிறக்கும்...”

“நிச்சயமா சார்... வாங்க சார்... நேரில பேசுவோம்” என்று போனை கட் செய்தவள் அரவிந்தனை நீங்களுமா அரவிந்தன் என்பது போல பார்த்தாள்.

“என்ன பாரதி... நான் சொன்னது பிடிக்கலையா?”

“ஆமாம். ரொம்ப சீக்கிரம் மயங்கிட்றீங்களே...”

“நானா...?”

“பின்ன... ஒரு ஜடப் பொருளுக்கு அளவுக்கு அதிகமா முக்கியத்துவம் தரோமோன்னு தோணுது.”

‘`அப்ப உங்க அப்பா அந்த ஜோசியர் சொன்ன மாதிரி பிழைச்சது எப்படி?”

“பதற்றமில்லாம ஆழமா யோசிச்சா அதுக்கும் பதில் கிடைச்சிடும் அரவிந்தன்.”

- அரவிந்தன் அந்த பதிலைக் கேட்டுச் சிரித்த போது திரும்பவும் பாரதியின் போனுக்கு அழைப்பு. திரையில் பார்த்த போது அன்நோன் நம்பர் எனும் சொற்கள்.

தயங்கிவிட்டுக் காதைக் கொடுக்கவும்.

“என்ன பாப்பா... அப்பா பிழைச்சுக்கிட்டார் போலத் தெரியுதே... ஜோசியக்காரனும் ரொம்பவே சந்தோஷமா இருக்கான்போல இருக்கே?”

- அந்தக் குரல் செத்துப்போன குமாரசாமியின் ஒட்டிப்பிறந்த ஜெராக்ஸின் குரல். பாரதிக்கு திக்கென்றாகவும் கை நழுவியது அந்த செல்போன். வேகமாக எடுத்து அரவிந்தன் தன் காதில் வைத்தபோது “உங்கப்பனை நான் கொல்லாம விடமாட்டேன். ஞாபகத்துல வெச்சுக்க...” என்று முடிந்தது. அரவிந்தனிடமும் அதிர்வு!

- தொடரும்