மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இறையுதிர் காடு - 49

இறையுதிர் காடு
பிரீமியம் ஸ்டோரி
News
இறையுதிர் காடு

அன்று சங்கனும் அஞ்சுகனும் ஆச்சர்யமாகப் பார்த்திட, போகர் பிரான் செந்தாடு பாவையைச் சற்றுவேகமாய் கை நீட்டிப் பறித்தார். “உம், நீங்களும் வணங்கிவிட்டுப் பறியுங்கள்” என்றார்.

ருவரும் பறிக்கத் தொடங்கினர்.

“எவ்வளவு கிடைக்கிறதோ அவ்வளவும் எடுத்துக்கொள்ளுங்கள்... ஓரடி உயர லிங்க உருவத்திற்கு மட்டுமன்றி நான்கரை அடி உயர தண்டபாணி கடவுளுக்கும் இது பயன்பட வேண்டும்” என்று பறித்தபடியே அவர் சொன்னது அவர்களை வேகமாய்த் தூண்டியது.

அங்கே செந்தாடுபாவைபோல் எவ்வளவோ தாவரங்கள்! அவற்றின் பெயரோ அதன் குணமோ சங்கனுக்கும் அஞ்சுகனுக்கும் தெரியாது. அவர்கள் மனங்களில் இவையெல்லாம் எதற்கு என்றொரு கேள்வி எழும்பவுமே அது போகரின் மனதிலும் எதிரொலித்தது.

“என்ன சங்கா... அஞ்சுகா... மற்ற தாவரங்கள் பற்றியும் அறியும் ஆசை வந்துவிட்டதோ?”

“ஆம் பிரானே... இங்கேதான் எவ்வளவு தாவரங்கள். யார் இதற்கெல்லாம் விதை போட்டது? இதன் பயன்பாடு எப்படிப்பட்டது?”

“நல்ல கேள்வி. தாவரங்கள் மூன்று விதம். ஒன்று உழுபயிர், இரண்டாவது எழுபயிர், மூன்றாவது விழுபயிர்!”

கைகள் செந்தாடுபாவையைப் பறித்துப் பறித்து மூங்கில் கூடையில் போட்டபடி இருக்க, போகரும் செயலோடு பேசினார்.

“உழுபயிர் எழுபயிர் விழுபயிரா... விளக்கம் தேவை பிரானே.”

“மனிதன் தன் தேவை நிமித்தம் நிலத்தை உழுது சீர்செய்து, களை அகற்றி விளைவிக்கும் நெல், சாமை, கம்பு போன்றவை உழுபயிராகும். இவற்றில் எள்ளு, கொள்ளு, மொச்சை, கடலை என்கிற தானியங்களும் அடக்கம். இவையே உழுபயிர். எழுபயிர் என்பது நிலம் தட்ப வெப்பத்தால் தானாய் உண்டாக்கித் தருவதாகும், அறுகம்புல், தொட்டு குமுட்டி, குப்பைமேனி, சாரணை, நெருஞ்சி, நாயுருவி என்று இவற்றில் மட்டும் எங்கள் சித்தர் பெருமக்கள் ஈராயிரத்துக்கும் மேலான தாவரங்களைக் கண்டறிந்துள்ளனர்!

இதில் விழுபயிர் என்பது பறவைகள் எச்சமிடப்போய் அதன் கழிவில் இருக்கும் உயிர்ச்சத்துகளால் விளைபவை. இந்த விழுபயிரால் முளைத்தவையே பல நூறு காட்டுமரங்கள். ஆகையால் எங்கள் சித்த உலகம் தாவரங்களை சந்ததமாய் `விழு எழு உழு பயிர்கள்’ என்று பிரித்துள்ளது.”

``அருமை... `விழு-எழு-உழு’ எனும் சொற்களே தாவரத்தையும் அடையாளம் காட்டிவிடுகின்றன...’’

“ஆம்... அதற்கே நம் அறிவு அருளப்பட்டுள்ளது. இம்மூன்றைக் கடந்து நான்காவதாய் ஒரு தாவரமும் உள்ளது. அது என்னவென்று தெரியுமா?”

“மூன்று வகையைத்தானே சொன்னீர்கள்... நான்காம் வகை என்றால் அது எப்படி?”

இறையுதிர் காடு - 49

“அது அப்படித்தான்... இந்த நான்காம் வகைக்குப் பெயர் தொழுதாவரம் என்பதாகும்...”

“தொழுதாவரமா... விளக்கமாய்க் கூறுங்கள் பிரானே...”

“சொல்கிறேன்... பனிமிகுந்த இமயத்தில் மட்டுமே கிட்டும் சஞ்சீவினி, சாகசதாரிணி, சர்வமனோகரி, காளாமணி போன்றவையே தொழுதாவரங்கள் என்பவை... இவை விண்ணில் இருக்கும் தேவர்களால் மண்ணுக்கு வந்தவையாகும். சித்தர்களும் முனிவர்களும் தங்கள் தேவை நிமித்தம் தொழுது வணங்கி வரமாய்ப் பெற்றவை இவை.”

“இவை ஏன் இமயத்தில் இருக்க வேண்டும். வேறு எங்கும் கூடாதா?”

“முதலில் இமயத்திற்கான பொருளைத் தெரிந்துகொள்ளுங்கள். இடைப்படு மையம் எனும் சொல்லின் திரிந்த சொல்தான் இமையம்! பின்னர் அது மருவி இமயம் என்றானது. பூமியிலும் அகண்ட விட்ட பாகத்தில் வடக்கு தெற்கு எனும் இரு திசைகளும் மேல் கீழாயிருக்க, கிழக்கு மேற்கு எனும் இரு திசைகளும் இட வலமாய் இருக்க, பூமியின் மையத்தில் உயர்ந்தெழுந்து நிற்பதே இமய மலையாகும்! அதாவது ஏறத்தாழ பூமியின் இடைப்படு மையத்தில் முளைத்த மலை... அதனாலேயே அது இமயமலை எனப்படுகிறது.”

“ஓ... இமயம் எனும் சொல்லுக்குள்ளேயே பொருள் இருக்கிறதே?”

இறையுதிர் காடு - 49

“ஆம்... அதுதான் தமிழின் தனிச்சிறப்பு. ஓட்டை உடைத்துப் பருப்பை எடுப்பதுபோல் சொல்லை உடைத்துப் பொருளை எடுக்கலாம். உயிர், பயிர், மயிர், தயிர் எனும் சொற்களில்கூட ‘ர்’ எனும் எழுத்தை விடுத்து முன்னால் உள்ள எழுத்தை அதன் ஓடாகக் கருதி உடைக்க அதுவே பொருளுரைக்கக் காணலாம். உள்ளிருப்பதால் உயிர், பல்குவதால் பயிர், மண்டை மேலிருப்பதால் மயிர், தத்தளிப்பதால் தயிர். இப்படிச் சொல்லின் பொருளை நாம் உணரக் கற்க வேண்டும்... நான் இப்போது சொன்னதுகூடக் குறைவு. அகத்தியர் பெருமான்போல நான் இலக்கணம் கற்றவனில்லை. அவரிடம் கேட்டால் இதே சொற்களுக்குள் இன்னமும் பல பரிமாணங்களைக் காட்டுவார். நான் கண்டம் விட்டுக் கண்டமும் நாடு விட்டு நாடும் சென்றுவருபவன். அதனால் பலமொழி சப்தத்தை என் காதுகள் கேட்டுள்ளன. அந்த மொழிக்கலப்பும் என்னிடம் உண்டு. அதனால் என்னை ஒரு தூய தமிழ்ச்சொல்லாளன் என்று கூற முடியாது. அதனால்தான் தமிழ்ச்சான்றோர் என நான் கருதும் கிழார்களிடம் என் அறிவுச்செல்வத்தைப் பதிவு செய்யும் பொறுப்பை அளித்தேன்.”

கைக்குக் கை, வாய்க்கு வாய் என்று செந்தாடுபாவையைப் பறித்தபடியே போகர் பிரான் பேசிட, சங்கனும் அஞ்சுகனும் தங்களுக்கு நல்ல வாய்ப்பைக் காலம் அளித்ததாகக் கருதினர். அப்போது அவ்வழியே தொலைதூரத்தில் சிலர் வருவதும் தெரிந்தது. அவர்கள் நெருங்கிவரவும் அவர்கள் கிழார்கள் என்பது தெரிந்தது.

“போகர் பிரானுக்கு எங்கள் வந்தனங்கள்!”

“ஓ... கிழார் பெருமக்களா! வருக... வருக...”

இதன் பெயர் செந்தாடுபாவை... இதன் ரசம் பாஷாணங்களை உலோகம் போலாக்கிவிடும். அத்துடன் பாஷாண விஷத்தை இது முறிக்கும். இதனால் இரண்டுவித நன்மை: இது நாம் உருவாக்கும் ரூபத்தைத் திடமாக்குகிறது;

“பிரானே... தங்களைக் காணக் கொட்டாரத்திற்குச் சென்றோம். தாங்கள் நவமரோடு கன்னிவாடி குகைக்குச் சென்றுவிட்டதாக அடுமனைப்பணிக்காரர்கள் கூறினர். எனவே உங்களைக் காணவே வந்தபடி உள்ளோம்?”

``இப்படிக் கால்நடையாக நடந்தேவா வருகிறீர்கள்?”

“ஆமாம்... நடப்பது என்பது எங்களுக்குப் புதிதா என்ன?”

“அப்படியானால் புரவிகளைத் தாங்கள் பயன்படுத்துவதில்லையா?”

“இல்லை... அதைப் பராமரிப்பது எங்களுக்குப் பெரும்பாடாக உள்ளது. பெரும் பயணம் புரிபவர்க்குத்தான் அது ஏற்றது. குதிரைக்கு நீராட்டும், கொள் சேர்ப்பும்தானே முதல் ஆரோக்கியம்? கொள்ளைக்கூட சந்தையில் வாங்கிவிடலாம், நீராட்டின் நிமித்தம் சண்முக நதிக்கோ இல்லை இதுபோல் மடுக்கரைகளைத் தேடியோ செல்ல வேண்டியுள்ளது. தண்ணீருக்குள் நிறுத்தி வைக்கோல்வாரியால் கழுவிச் சுத்தப்படுத்து வதற்குள் புரவிகளும் அடங்கி நிற்காமல் திமிறுகின்றன. ஒருமுறை அதன் லாடக்கால்கள் பட்டு என் கால் விரல்கள் நைந்து போய் நடக்கவே படாத பாடுபட்டேன்.”

“ஓரிருக்கை சக்கர வண்டியைப் பயன் படுத்தலாமே..?”

“அதைப் பெரும்பாலும் இளந்தாரிகளே பயன்படுத்துகின்றனர். மேலும், அதை ஒரு பந்தய வாகனமாகவும் ஆக்கி விட்டனர். கூண்டு வண்டிகள் எங்களுக்கு உகந்ததாய் இருப்பினும், அது பெரிதாகவும் மனதுக்குப் படுகிறது.”

அருணாசலக்கிழார் இயல்பாகச் சொன்னதைக் கேட்டபடியே குகை நோக்கி நடக்கத் தொடங்கினர். கார்மேகக் கிழார் சுற்றிலுமுள்ள தாவரங்களை மட்டுமன்றி, மூங்கில் கூடையில் உள்ள செந்தாடு பாவையையும் அது எந்த வகை மூலிகை என்பது போல் பார்த்ததோடு கேட்கவும் செய்தார்.

“போகர் பிரான் சீடர்களுடன் இவ்வளவு தூரம் தாங்களே மூலிகை பறிக்க வந்திருப்பது பெரும் ஆச்சர்யம். இந்தக் கூடையில் இருப்பதன் பெயரென்ன... இது எதற்கு என்று நாங்கள் அறியலாமா?” என்றும் கேட்டார்.

“இதன் பெயர் செந்தாடுபாவை... இதன் ரசம் பாஷாணங்களை உலோகம் போலாக்கிவிடும். அத்துடன் பாஷாண விஷத்தை இது முறிக்கும். இதனால் இரண்டுவித நன்மை: இது நாம் உருவாக்கும் ரூபத்தைத் திடமாக்குகிறது; அடுத்து மருந்தாக்குகிறது!”

இறையுதிர் காடு - 49

“பிரானே... இதைத் தாங்கள் எப்படிக் கண்டறிந்தீர்கள்?”

“பல பரிசோதனைகள் செய்துதான்...”

“இதற்கு இப்படி ஒரு பெயர் வைத்தது யார்?”

“என் போன்ற சித்தர் பெருமக்கள்தான்... வேறு யார்?”

“அவர்கள் வைத்த பெயர் எப்படிப் பரவியது?”

“படம் வரைந்து சுவடியில் எழுதி வைப்பர். பின் சுவடிகளைப் படிகள் எடுத்து அதைச் சித்த வைத்தியம் கற்போருக்கு அனுப்பி வைப்போம். இருப்பினும் ஒரு மூலிகை பலவாறு விளிக்கப்படுவதும் உண்டு. குமுட்டியைச் சில இடங்களில் கச்ச முட்டி என்பர். இன்னும் சில இடங்களில் வரிபூசணி என்பர். இது தவிர்க்க இயலாத ஒரு விஷயமே...”

“பிரானே... ஒவ்வொரு தாவரத்தாலும் ஏதோ ஒரு பயன் இருக்கிறதுதானே?”

“அதிலென்ன சந்தேகம்?”

“சில தாவரங்களை ஆடுமாடுகள் கூடத் தீண்டுவதில்லை. அப்படி இருக்க அதனால் ஒரு பயனும் இல்லை என்றுதானே கருத வேண்டியுள்ளது?”

``நாம் கசப்புணவை ஒதுக்குவது போல, விலங்குகளும் தனக்குப் பிடிக்காததை ஒதுக்கிவிடுகின்றன. ஆனால் அதிலெல்லாம் மருத்துவ குணம் மிகுதி. அது விலங்குகளுக்குப் புரிய வழியில்லை. ஆனால் நாம் அப்படி இல்லை. கசந்தாலும் மருந்தாகப் பயன்படுத்துகிறோம். உலகில் பயனில்லாத தாவரம் என்று ஒன்று இல்லவே இல்லை. நமக்குப் பயன்படுத்தத் தெரியவில்லை என்பதே உண்மை. அறுகம்புல்லுக்குக்கூட ஒரு தனிச்சக்தி உண்டு. இரு மண் உருண்டைகளை எடுத்துக்கொண்டு அதில் ஒன்றில் அறுகம்புல்லைப் பிடுங்கி நட்டும், ஒரு உருண்டையை நாம் ஏதும் செய்யாமல் பூச்சிகளும், வண்டுகளும் மிகுந்த இடத்தில் போட்டு வைக்கும் போதுதான் அறுகம்புல் சக்தி தெரியும். அந்த உருண்டையை எந்த ஒரு பூச்சியும் ஏதும் செய்யாது. புல் நடவாத உருண்டையை வண்டுகள் உருட்டியிருக்கும்.”

போகரின் விளக்கத்தால் வியந்தவர்கள் கண்ணில் பட்ட மலையைக் காட்டி அதன் சரிவுகளில் அடர்த்தியாக வளர்ந்திருக்கும் மரங்களையும் காட்டி “இந்த மரங்களை இதனருகே சென்று வெட்ட வழியே இல்லை. இவை வளர்ந்த இடத்திலேயே சில காலம் இருந்துவிட்டு பெருமழையிலோ இல்லை காற்றிலோ விழுந்தால் மட்டுமே இதற்கும் அழிவு. அப்படியிருக்க இவற்றால்கூட ஒரு பயன் உண்டு என்பதை எப்படி அறிய முடியும்?” என்றும் கேட்டனர்.

“இதுபோல பசும் காடுகள் கொண்ட மலைகளை எங்கள் சித்த உலகில் அமிர்த கிரிகள் என்போம். இங்கே அமிர்தம் என நாங்கள் கூறுவது மழையை... இவைதான் மழையைத் தருகின்றன. இதுபோல் இல்லாத கற்களும் பாறைகளுமான மலைகளைக் கரடுகள் என்போம். கரடுகளால் வெப்பம் மிகும். அமிர்த கிரிகளால் மழை மிகும். அதே சமயம் வெப்பம் மிகுந்த கரடுகளில்தான் பிரண்டை முதல் கண்டங்கத்தரி வரையிலான உஷ்ணாதிக்க மூலிகைகள் விளையும். பூமியில் பயனில்லாத நிலப்பரப்பு என்றோ தாவரம் என்றோ ஒன்று இல்லவே இல்லை.

ஒரு புல்கூட விளையாத தரிசுநிலம்கூடப் புவியீர்ப்பு விசைச் சமன்பாட்டையும், தட்பவெப்ப நிலையை சமன் செய்யும் வினையையும் செய்தபடிதான் உள்ளது!”

போகர் பிரான் சொல்லச் சொல்ல அவர் ஒரு கலைக் களஞ்சியம் என்றே கிழார்களும், அந்த இரு சீடர்களும் கருதினர். எந்தக் கேள்வியைக் கேட்டாலும் அதற்கொரு தெளிவான பதிலைக் காரணகாரியங்களோடு அவர் அளித்ததில் அவர்களுக்கெல்லாம் பிரமிப்பும்கூட... அதை அஞ்சுகன் வெளிப்படுத்தவும் செய்தான்.

“பிரானே... தங்களின் பரந்துபட்ட இந்த உலக ஞானம் எங்களை பிரமிப்பில் ஆழ்த்துகிறது. இதற்குக் காரணம் தங்கள் தவமா கல்வியா, இல்லை, வேறு எது?” என்று அவன் கேட்ட கேள்வியின் பொருட்டு நடந்தபடியே இருந்த போகர் ஒரு விநாடி நின்றார். பின் புன்னகையோடு ``எல்லாவற்றுக்குமே ஒரு பங்கு உண்டு அஞ்சுகா... ஆனால் மூல காரணம் குரு பக்தியே...” என்றார்.

“குருபக்தி கடவுள் பக்தியைவிட மேலானதா?”

“ஆம்!”

“நம்ப முடியாத பதில்...”

“இதோ பார் உன் கோபம் ரொம்ப நியாயமானது. ஆனால் உன் கொலை முயற்சி ரொம்பத் தப்பானது. நீயும் கொலைகாரனாகி ஜெயிலுக்குத்தான் போக வேண்டியிருக்கும்...”

“உன் பதில்தான் நீ எப்படிப்பட்ட சிந்தனை வளம் உடையவன் என்பதைக் காட்டும். அந்த வகையில் நீ நிறைய ஆழம் காண வேண்டும் சீடனே!”

அப்போது வேல் மணிக்கிழார் இடையிட்டார்.

“பிரானே... குருதான் பெரியவர் என்றால், கடவுள்கூட அவருக்கு அடுத்தே என்றால் குருநாதர்களுக்கல்லவா கோயில்கள் கட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படித் தெரியவில்லையே?” என்றார்.

“நல்ல கேள்வியைத்தான் கேட்டுள்ளீர் கிழாரே! குருநாதர்களுக்கும் கோயில்கள் உண்டு. அவை ஜீவ சமாதி என்றும் அதிஷ்டானம் என்றும் பிருந்தாவனம் என்றும் அழைக்கப்படுபவை ஆகும். இந்த குருநாதர்கள் நமக்குக் கிடைக்கவே ஆலயங்கள்தான் காரணம். ஆலயங்கள் அனைவருக்கு மானவை. ஆனால், குரு என்பவர் அவரை அண்டியிருக்கும் சீடனுக்கு மட்டுமே கடமைப் பட்ட ஒருவராவார். யாரும் எடுத்த எடுப்பில் குருவை இனம் காணமுடியாது. அதற்கு அடிப்படை இறைபக்தி. அதை வளர்க்கக் காரணமானவை ஆலயங்களே... எனவே இறை பக்தியிலிருந்தே குருபக்தியை அடைகிறோம். குருபக்தியை அடைந்த நிலையில் தனியே இறைபக்தி தேவையில்லை. இருந்தால் தவறுமில்லை.”

- இப்படிப் பேசியபடியே குகையை வந்தடைந்தனர். போகர் பிரான் தனித்து வந்திருந்தால் மேகமணிக்குளிகை மூலம் பறந்தே வந்திருப்பார். சீடர்களுடனும் கிழார்களுடனும் வந்ததால் நடந்து வந்தார். வந்த உடனேயே செந்தாடுபாவை இலைகளைப் பிரித்து இரு கைகள் நடுவில் வைத்துக் கசக்கி சாறு பிழியத் தயாரானார். அதன் நிமித்தம் வெண் கலிங்கத்தால் கட்டப்பட்ட சுத்தமான பெரிய பானை ஒன்றும் தயாரானது. போகர் பிரான் அந்தத் தழைகளைக் கசக்கிய விதமே அலாதியாக இருந்தது.இலைச்சாறு கசிந்து ஒழுகிக் கலிங்கத்தில் கசடு தேங்கிட, ரசம் பானையை நிரப்பத் தொடங்கியது!

இன்று அதிர்ந்த அரவிந்தன் “ஏய் மிஸ்டர்... யார் நீ... நேர்ல வா, இது என்ன போன்ல முதுகுக்குப் பின்னால மிரட்டிக்கிட்டு...” என்று அவனுக்கொரு பதில் தந்தான்.

“முதுகுக்குப் பின்னால, முன்னாலன்னு டயலாக்கெல்லாம் பேசாதே தம்பி. நான் பாதிக்கப்பட்டவன் - நீங்கல்லாம் அசுரக் கூட்டம்! உங்க முன்ன வந்து உங்ககிட்ட சிக்க நான் என்ன கேனப்பயலா?” அவன் பதிலும் அனலாயிருந்தது.

“இதோ பார்... நீ எங்கள சரியா புரிஞ்சுக்கலை. குறிப்பா பாரதிய பத்தி உனக்கு சுத்தமா தெரியல. அவ உங்க குடும்பத்துக்கு உதவி செய்யத்தான் போராடிக்கிட்டு இருக்கா..”

“இனி என்ன செஞ்சு என்ன பிரயோஜனம்? போன உயிர் திரும்ப வருமா?”

“அதுக்காக எம்.பி-யும் சாகணும்கறதுதான் உன் முடிவா?”

இறையுதிர் காடு - 49

“ஆமாம்... இவன்லாம் திருந்தற ஆளே கிடையாது. நீங்க ரசமணி, ரசமில்லாத மணின்னு அந்த ஜோசியனை வெச்சுக்கிட்டு காப்பாத்தறதால எல்லாம் எம்.பி வாழ்ந்திடப்போறதில்லை... வாழவும் விடமாட்டேன். ஆமா உங்களுக்கு எங்க இருந்து கிடைக்குது இதெல்லாம்? ஒரு ஏழைக்கு இப்படிக் கிடைக்குமா?”

“இதோ பார் உன் கோபம் ரொம்ப நியாயமானது. ஆனால் உன் கொலை முயற்சி ரொம்பத் தப்பானது. நீயும் கொலைகாரனாகி ஜெயிலுக்குத்தான் போக வேண்டியிருக்கும்...” அரவிந்தன் அவன் கேள்விக்கு பதில் சொல்லும் போதே அந்தத் தொடர்பு கட் ஆனது.

``ச்சை!’’அரவிந்தனும் சலித்தான். கவனித்த படியே இருந்த பாரதி ``என்னாச்சு அரவிந்தன்?” என்றாள்.

``பாதில கட் பண்ணிட்டான்...”

“அந்த நம்பரை வெச்சு திரும்ப ட்ரை பண்ணிப் பாருங்களேன்.”

“வேஸ்ட்... அவன் நம்மை நல்லா கவனிச்சிக்கிட்டே இருந்திருக்கான். ரசமணி பத்தி எல்லாம் அவனுக்கும் தெரிஞ்சிருக்கு! இந்த போன்கூட நிச்சயம் யாரோ ஒருத்த ரோடதாதான் இருக்கும்.”

“ட்ரை பண்ணிப் பாருங்களேன்.”

அரவிந்தனும் முயன்றான். யாரோதான் பேசினார்கள். “இப்ப ஒரு நிமிஷத்துக்கு முந்தி இந்த போன்ல பேசினது யாரு?”

“எனக்குத் தெரியாதுங்க. `ரொம்ப அவசரம், என் செல்போன்ல சார்ஜ் இல்ல’ன்னு சொல்லிக் கேட்டாருங்க , கொடுத்தேன்.”

“இனிமே இப்படி யாராவது கேட்டால்லாம் கொடுக்காதீங்க. மீறிக் கொடுத்தா அவங்களை நல்லாத் தெரிஞ்சிக்கிட்டுக் கொடுங்க” என்று கோபமாக அவருக்கொரு அட்வைஸையும் செய்த அரவிந்தன் “பாரதி... இனியும் போலீசுக்குப் போகாம இருக்கறது எனக்கு சரியாப் படலை. உங்கப்பாவுக்கும் செக்யூரிட்டி அலெர்ட்டை அதிகப்படுத்தணும். அடுத்து நம்ம ஆள் ஒருத்தர் எப்பவும் அவர் கூடவே இருக்கணும்.

“யெஸ்... நாம இப்பவே கமிஷனரைப் பார்ப்போமா?”

“அதுக்கு முந்தி கணேச பாண்டிக்கும், பானுவுக்கும் இந்த த்ரெட் பத்தித் தெரியணும். கமான் அவங்களுக்கு முதல்ல தெரியப்படுத்துவோம்.”

அடுத்த சில நொடிகளில் வார்டுக்கு வெளியே கணேச பாண்டி, பானு என இருவரையும் அழைத்து அந்தக் குமாரசாமி ஜெராக்ஸ் விஷயத்தைக் கூறவும், அவர்கள் இருவருமே வெலவெலத்துப்போயினர்.

“சார்... இது என்ன சார், புதுசா கத்தி போய் வாலு வந்த கதையா?”

“தப்பு... கத்தி போய் வாலு இல்ல... பட்டாக்கத்தியே வந்திருக்கு...”

“ஐயோ... சாருக்குத் தெரிஞ்சா கோமாவுக்கே திரும்பிப் போயிடுவாரே..?”

“அவருக்குத் தெரியக் கூடாது. தெரியவே கூடாது.”

“சரி... அவனை என்ன செய்யப்போறோம்?”

“போலீஸ் கம்ப்ளெயின்ட் கொடுக்கப் போறோம். இங்க செக்யூரிட்டியை அதிகப்படுத்தி விசிட்டர்ஸ் வந்தா செக் பண்ணிதான் உள்ள விடணும். அப்பகூட சாரைப் பார்க்க யாருக்கும் அனுமதி கிடையாது...”

“இந்த மாதிரி ஆளுங்க சினிமால வர்ற மாதிரி டாக்டரா, கம்பவுண்டரா, ஸ்ட்ரெட்சர் அட்டென்டரா பல விதத்துலயும் வருவாங்களே சார்...”

“ஆமாம்... இவன் கட்டாயம் வருவான். நாம தான் கவனமாப் பார்த்துக்கணும்.”

“ஆமா எங்க அந்த ஜோசியர்...?”

“சார்கிட்ட கதை உட்டுக்கிட்டிருக்காரு... இனிமே உங்களுக்கு யோகம்தான்... கண்டம்லாம் கழிஞ்சிடிச்சின்னு சும்மா அளந்து உட்டுக்கிட்டிருக்காரு...”

“என்ன கணேச பாண்டியன், அவராலதான் சார் உயிர் பிழைச்சாருன்னு இப்பதான் பெருமையா சொன்னீங்க, இப்ப பல்டி அடிக்கிறீங்க?”

“அதுவும் உண்மைதானே சார்...?”

“அண்ணே... எனக்கு அந்த ரசமணி வேணும். அது என்னன்னு அப்புறமா நான் லேப்ல கொடுத்து ஆராயப் போறேன். அதை ஒரு அறிவியலாதான் நான் பார்க்கறேன். அதை ஜோசியர்தான் எடுத்துக்கப் பார்க்கறாரு... நாம அதுக்கு இடம் கொடுத்துடக் கூடாது...” என்றாள் பாரதி.

“சரிங்க பாப்பா... அதை நான் பார்த்துக்கறேன். நீங்க கவலைப்பட வேண்டாம்.”

“இப்ப நாங்க நேரா கமிஷனரைப் பார்த்து கம்ப்ளெயின்ட் கொடுத்துட்டு வீட்டுக்குப் போய்ட்டு வரோம். பாட்டி வேற கேட்டுக்கிட்டே இருக்காங்க. நான் திரும்ப வரும்போது அவங்கள கூட்டிக்கிட்டு வரேன்”

- என்ற பாரதி புறப்படும் முன் ஒரு பார்வை பார்த்திடத் திரும்பி ராஜா மகேந்திரன் படுக்கை நோக்கிச் சென்றாள். ஜோதிடர் அளந்து கொண்டிருந்தார்.

“ஜி... நீங்க அடுத்த வருஷம் இதே நாள் சென்ட்ரல் மினிஸ்ட்டரா இல்லாட்டி நான் என்பேரை மாத்தி வெச்சுக்கறேன். எல்லாம் கச்சிதமா நடந்துகிட்டு வருது...” என்கிற அவர் பேச்சு ராஜா மகேந்திரன் முகத்தில் ஓர் ஒளியை உருவாக்கியிருந்தது. வாய் திறந்து பேச முடியா விட்டாலும் அவர் கண்களின் பிரகாசம் அதை நிரூபித்தது.

பாரதி, அரவிந்தன், கணேசபாண்டியன், பானு என்று நால்வரும் வரவும் ஜோதிடர் நந்தா அளப்பை நிறுத்திக்கொள்ள, ராஜா மகேந்திரன் கண்மணிப் பாப்பாவை மட்டும் உருட்டி அவர்களைப் பார்த்தார்.

“அப்பா... இப்ப நீங்க பெட்டரா ஃபீல் பண்றது நல்லா தெரியுது. நான் போய் பாட்டியைக் கூட்டிட்டு வரேன். அவங்க துடிச்சிக்கிட்டு இருக்காங்க. உங்களை இப்ப பார்த்தா அழுதுடுவாங்க...” என்றாள் பாரதி. அதே சமயம், “நோ ப்ராப்ளம்... நீங்க போய் தாராளமா கூட்டிட்டு வாங்க. இனி நம்ப எம்.பிஜிக்கு எந்த ஆபத்துமில்லை” என்று ஜோதிடர் கூறவும் ஒரு முறை முறைத்தாள் பாரதி.

அப்படியே பானுவை அழைத்து மெல்ல விலகியபடியே “உன் ஜோசியர்கிட்ட அந்தக் குமாரசாமி பிரதர் பத்தி மெதுவா சொல்லு. நான் வேண்டாம்னாலும் நீ சொல்வேன்னு எனக்குத் தெரியும். ஆனா அப்பாக்கு மட்டும் எதுவும் தெரியக் கூடாது. பீ கேர்ஃபுல். அது மட்டுமில்ல... உங்க இரண்டு பேரை நம்பித்தான் நான் போறேன். தப்பா எது நடந்தாலும் சரி சும்மா விட மாட்டேன்” என்ற பாரதியின் அந்தச் சும்மா விட மாட்டேனில் ஒரு உணர்ச்சி முறுக்கு!

அடுத்து சீஃப் டாக்டர் முன் சென்று நின்றவள் அவரிடமும் கூறி சி.சி.டி.வி கேமராவில் ஒருவர் நிரந்தரமாகக் கண்காணித்தபடி இருப்பதோடு, ஆஸ்பத்திரிக்குள் தொடர்பில்லாத நபர்கள் நடமாட உடனே தடைவிதிக்கும்படியும் சொல்லி விட்டு அரவிந்தனுடன் புறப்பட்டாள்.

காருக்குள்...

அரவிந்தன் காரைச் செலுத்தியபடியே பேசினான்.

“பாரதி... போலீஸ் கம்ப்ளெயின்ட் கொடுக்கறதோட நாம அந்தக் குமாரசாமி வீட்டுக்குப் போறதப் பத்தியும் வேகமா முடிவு செய்யணும்...”

“நிச்சயமா அரவிந்தன்... அதுக்கு முந்தி நம்ம எடிட்டரைக் கலந்துக்கறதும் நல்லதுன்னு நினைக்கறேன்...”

“அவர் இப்ப வரேன்னு சொல்லியிருக்காருல்ல..?”

“ஆமாம்... கொஞ்சம் வேகமாப் போங்க...”

“இந்த ட்ராஃபிக்ல காரை நகர்த்தறதே பெரிய விஷயம். இதுல ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரியே சரிஞ்சு கார் விற்பனை அப்படியே பாதிக்குப் பாதி குறைஞ்சுபோச்சுன்னு புலம்பல் வேற... சரிவுல இருக்கும்போதே இந்த ட்ராஃபிக்... நிமிர்ந்தா என்னாகும்னு யோசிச்சுப் பார்...”

“அரவிந்தன், இப்ப எந்த உலக விஷயத்தையும் பேசற நிலைல நான் இல்லை. எனக்கு இப்ப என் அப்பாவைவிடப் பெரிய விஷயம் அந்தக் குமாரசாமி விஷயம்தான். அவங்க கால்ல கைல விழுந்தாவது பிரச்னையோட தீவிரத்தைக் குறைக்கணும். அவனையும் பிடிக்கணும்.”

“எல்லாம் நல்லபடியா நடக்கும் பாரதி... நாம சரியான திசைலதான் போய்க்கிட்டிருக்கோம்... அதே சமயம் என் மனசெல்லாம் இப்ப அந்தப் பெட்டிமேலதான் இருக்கு.”

“அதைத்தான் அந்த சாந்தப்ரகாஷ்... அதானே அவர் பேர்?”

“யெஸ்... சாந்தப்ரகாஷ், சாரு பாலா!”

“அவங்க கிட்ட பெட்டியக் கொடுத்து முதல்ல அந்தக் குழப்பமான மேஜிக்ல இருந்து வெளிய வரணுங்கறதுதான் என்னோட விருப்பம் அரவிந்தன்.”

இறையுதிர் காடு - 49

“நீ இப்படித்தான் சொல்வேன்னு எனக்குத் தெரியும். ஆனா இனிதான் நமக்கு நிறைய த்ரில்லான எக்ஸ்பீரியன்ஸ் காத்திருக்கிறதா எனக்குள்ள ஒரு குரல் சொல்லிக்கிட்டே இருக்கு பாரதி.”

“என்ன சொல்றீங்க... இதுக்கு மேல ஒரு த்ரில்லிங் எக்ஸ்பீரியன்ஸா?”

“யெஸ்... சமீபமா அந்தப் பாம்பும் எங்க போச்சுன்னு தெரியல... அதை யோசிச்சியா?”

“நீங்க என்ன அந்தப் பாம்பை அந்தப் பெட்டியோட எஸ்கார்டாவே முடிவு பண்ணிட்டீங்களா?”

“இல்லையா பின்ன?”

“நோ... என்னால அப்படி எல்லாம் நினைக்க முடியல. கோழிக்குஞ்சுகள் அதிகம் வளர்ற இடத்துக்கு இரை தேடிப் பாம்புகள் வர்ற மாதிரி, அந்தப் பெட்டியோட விபூதி வாசம் இல்ல சம்திங் வேற ஏதாவது பிசிக்கல் ரீசன் இருக்கலாம்.”

“இன்னுமா உனக்கு மிஸ்ட்ரி மேல நம்பிக்கை வரலை?”

“மிஸ்ட்ரின்னாலே பொய்... இல்லேன்னா இல்லூஷன். தட்ஸ் ஆல்!”

“பழநி சித்தர் சொன்னபடியே கடபயாதி புத்தகம் கிடைச்சதையும், அதை வெச்சு நான் பெட்டியைத் திறந்ததையும், அதைத் தேடிச் சிலர் வருவாங்கன்னு அந்தச் சித்தர் சொன்னது போலவே அந்த சாந்தப்ரகாஷ், சாரு பாலா வந்ததையும், பெட்டில மருந்து இருக்குன்னு நான் நம்பினதுபோலவே ரசமணி இருந்து அது உன் அப்பாவை உயிர்ப்பிச்சதையும் நீ வழக்கமா நடக்கற விஷயம்னா இன்னமும் நினைக்கறே?”

- காரை ஓட்டிக்கொண்டே அரவிந்தன் கோவையாகக் கேட்ட கேள்வி, பாரதியைக் குழப்பிட, கச்சிதமாய் போனில் அழைப்பொலி. திரையில் ஆசிரியர் ஜெயராமன் பெயர்.

“யெஸ் சார்...”

என்னால அப்படி எல்லாம் நினைக்க முடியல. கோழிக்குஞ்சுகள் அதிகம் வளர்ற இடத்துக்கு இரை தேடிப் பாம்புகள் வர்ற மாதிரி, அந்தப் பெட்டியோட விபூதி வாசம் இல்ல சம்திங் வேற ஏதாவது பிசிக்கல் ரீசன் இருக்கலாம்.

“என்னம்மா பங்களாக்கு வந்துட்டியா? நான் இப்ப வந்துகிட்டே இருக்கேன்.”

“நாங்களும் வந்துகிட்டுதான் சார் இருக்கோம். வழில கமிஷனரைப் பார்த்து கம்ப்ளெயின்ட் ஃபைல் பண்ணணும் சார். எகெய்ன் அந்தக் குமாரசாமி பிரதர்கிட்ட இருந்து மிரட்டல் போன் சார்.”

“ஓ... சரி நீங்க கம்ப்ளெயின்ட் கொடுத்துட்டு வாங்க. விரிவா நேர்ல எல்லாத்த பத்தியும் பேசுவோம். நான் நம்ப ஆபீஸுக்குப் போய்ட்டு வரேன், சரியா இருக்கும்.” போன் கட் ஆனது. பாரதியிடம் படபடப்பும் கூடத் தொடங்கியது.

“சார் என்ன சொன்னார்?’’

“கம்ப்ளெயின்ட் கொடுத்துட்டு வரச் சொன்னார்..”

“குட்...” - அந்த பாசிட்டிவான சொல்லோடு ஆக்ஸிலேட்டரை அழுந்த மிதிக்கத் தொடங்கினான். காரிடமும் ஒரு அசாதாரண சீற்றம்!

பங்களா... பாரதியும் அரவிந்தனும் கமிஷ்னரிடம் புகார் கொடுத்துவிட்டு உள்ளேவந்தபோது முத்துலட்சுமி அடைக்கலம்மா, மருதமுத்து என்று மூவரும் உறக்கத்தில் இருந்தனர். பதற்றத்தோடு பெட்டியைப் பார்த்ததில் அது திறந்திருந்தது. பதைப்போடு திறந்து பார்க்க உள்ளே எல்லாமே இருந்தன. சிவலிங்கத்தையும் ஏடுகளையும் எடுத்துப் பெட்டி மேலேயே வைத்து முன்பு பார்த்த அதேதானா என்று சுற்றி வந்து பார்த்தனர். அதே நேரத்தில் கச்சிதமாய் ஜெயராமனும் வந்து அந்த லிங்கத்தையும் ஏடுகளையும் வியப்பாகப் பார்த்தார். மணக்கின்ற வாசம்... ஜெயராமன் ஆழ்ந்து சுவாசித்து “வெரி கிரேட் ஸ்மெல்... நான் ரொம்ப பிரிஸ்க்கா ஃபீல் பண்றேன். இதெல்லாம்தான் உள்ள இருந்ததா?” என்று கேட்டபடியே லிங்கத்தைத் தொடக் கைநீட்டியபோது, காத்திருந்ததுபோல் மேலிருந்து லிங்கம் மேல் விழுந்து வளைத்துக்கொண்டு நிமிர்ந்து நின்றது அந்த நாகம்!

- தொடரும்