மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இறையுதிர் காடு - 36

இறையுதிர் காடு
பிரீமியம் ஸ்டோரி
News
இறையுதிர் காடு

அன்று அந்த ஊளைச் சப்தம் கருமார்கள் இருவரையும் சற்றுத் திடுக்கிட வைத்தது.

ளைச் சப்தத்தின் தொடர்ச்சியில் யானை ஒன்று பிளிறும் சப்தமும் கேட்கத் தொடங்கியது. புலிப்பாணி கருமார்களைப் பார்த்தான்.

“பயப்படாதீர்கள்... இது மிருகங்கள் உலவிடும் வனப்பகுதிதான்... ஆனாலும் போகர் பிரானின் குகைக்குள் யாதொரு மிருகமும் நுழையாது. வாசக் கட்டு போடப்பட்ட வாசலை உடையது அந்த குகை! நாகதாளி வேர் மற்றும் சிறியாநங்கைச் செடியின் சாறு தெளிக்கப்பட்டு ஊர்ந்து வரும் வகையைச் சேர்ந்த பாம்பு, பல்லி முதல் அரணை, உடும்பு வரை எதுவும் உள் நுழையாதபடி அங்கே போகர் பிரான் தடைகளை உருவாக்கியிருக்கிறார்” - என்று அவர்களுக்கு தைரியமளித்தான்.

“எல்லாம் சரி... நாங்கள் குகையை விட்டு, கொள்ளவும் தள்ளவும் வெளியே செல்ல வேண்டி வருமே அப்போது என்ன செய்வது?” என்று கேட்டான் கருமார்களில் ஒருவனான செங்கான் என்பவன்.

“இதற்காக நீங்கள் வனப்பகுதிக்குச் செல்லத் தேவையில்லை. குகைக்கு மேலேயே நிறைய கற்சுனைகள் உள்ளன. அவற்றை ஒட்டி இலந்தை, நொணா முதலிய மரங்கள் வளர்ந்திருக்கும் மண்பரப்பு உள்ளது. அதில் குழிகள் தோண்டி கழிப்பு மலம் சேரவும் மண்ணைக்கொண்டு திரும்ப மூடிவிடலாம். மலவாசலை சுத்தம் செய்திட சுனை நீரை சருவங்களில் கொணர்ந்து பயன்படுத்தலாம். தாங்கள் நீராட விரும்பினால் ஓடைகளும், சிற்றருவிகளும் ஏராளமாக உள்ளன. உங்களுக்கான உணவினை நான் தினமும் கொண்டு வந்துவிடுவேன்...”

-புலிப்பாணி அவர்கள் கேள்வி கேட்க இடமேயின்றிப் பேசினான்.

“கூதைக் காற்று வீசுமோ?” - ஆழிமுத்து என்பவன் இக்கேள்வியைக் கேட்டான்.

“நிச்சயமாக... அதிலென்ன சந்தேகம்?”

“என்றால் அதிகாலையில் உறைபனியே இருக்குமே?”

“அவ்வளவு இராது. ஆயினும் திறந்தமேனி எனில் பற்கள் கிட்டிக்கொள்ளும்...”

“அதன் காரணமாய் நாங்கள் குகைக்குள் கணப்பு போட்டுக்கொள்கிறோம்.”

“தாராளமாக...”

-மூவரும் நடந்தபடியே குகையை நோக்கிச் செல்லும் ஒற்றையடிப் பாதையில் நடந்தனர். இருமருங்கிலும் ஏராளமான மலைத் தாவரங்கள். குறிப்பாய் அவுரி, கற்றாழை, அந்தி மந்தாரை அதிகம் கண்ணில் பட்டன.

இறையுதிர் காடு - 36

“நெடுந்தூரம் செல்ல வேண்டி வருமோ?”

“இல்லையில்லை... அதோ தெரிகிறது பாருங்கள் குகை..”

“அது சரி... தாங்கள் இந்த நீர்க்குடத்தைக் கீழே வைக்கக் கூடாதா...? சுமந்தபடியே இருக்கிறீர்களே?”

“புனித நீர் இது... லிங்காபிஷேகம் காணப்போகிறது... இதைச் சுமப்பது பாக்யம்..”

“நாங்கள் வந்து வணங்கலாமல்லவா?”

“இது என்ன கேள்வி... தங்கள் செயல்பாடு சிறப்பதற்கே இந்த அபிஷேகம். மேலாக சமீபமாய் பெரிய அளவில் மழையில்லை. எப்போதெல்லாம் மழை பொய்க்கிறதோ அப்போதெல்லாம் எங்கள் போகர்பிரான் இதுபோல் அபிஷேகம் புரிவார்... உடனே மழையும் வந்துவிடும்.”

“ஆச்சர்யமாக உள்ளதே... லிங்காபிஷேகத்திற்கும் மழைக்கும் என்ன தொடர்பு?”

“நாங்களும் இக்கேள்வியைக் கேட்டுள்ளோம். அதற்கு போகர்பிரான் அளித்த பதிலைக் கூறுகிறேன். உங்களால் புரிந்துகொள்ள முடிந்தால் புரிந்துகொள்ளுங்கள். விண்வெளி எங்கும் காற்றின் அழுத்தத்திற்கும் ஈர்ப்பு விசைக்கும் நடுவில் நம் எண்ண அலைகள் மற்றும் பலவித ஒலி ஒளி அலைகளும் உள்ளனவாம். இந்த அலைவரிசையில்தான் மழைக்கான தூண்டுதல் உள்ளது. மழை மேகங்களைக் கவர்ந்திழுப்பதுடன் காற்றோடு கூடி அளவாகவோ, இல்லை குறைவாகவோ மிதமாகவோ மழைப் பொழிவைத் தருவது இந்த அலைவரிசைதான்.

இறை அபிஷேகங்களின் போது மந்திர ஒலியாலும் பல்லோரது பக்திப்பரவசத்தாலும் உருவாகும் அலைவரிசை காற்றில் கூடிக் கலந்து மேகங்கள் மேல் மோதி விரைவாகவும் சீராகவும் கரைய வைக்கிறதாம்...”

“நம் மன உணர்வுகளுக்கு அப்படி ஒரு சக்தியா?”

“அதில் சந்தேகமே வேண்டாம். போகர் பிரான் உங்களுக்கு தீட்சை அளித்து விட்டபடியால் இனி உங்கள் எண்ண அலைகளும் மிக பலமானவையே. எனவே நீங்கள் இனி நினைப்பதெல்லாமும்கூட பலித்திடும்!”

“நினைப்பதெல்லாமே பலித்திடுமா... நம்ப முடியவில்லையே..?”

“வேண்டுமானால் பரிசோதனை செய்து பார்க்கலாமா?”

“பரிசோதனை எனும்போதே அங்கே ஒரு வகை சந்தேகமும் வந்துவிடுகிறது. பூரண நம்பிக்கையோடு நீங்கள் நினையுங்கள். நிச்சயம் பலிக்கும்.”

“நீங்கள் எவ்வளவு சொன்னாலும் துளியாவது சந்தேகம் இருக்கவே செய்யும்... அனுபவப்படாமல் நம்பிக்கை வரவே வராது.”

“சரி... உங்களைச் சொல்லும் நான் உங்களுக்காக நூறு சதவிகித நம்பிக்கையோடு உங்கள் விருப்பத்தை ஈடேற்ற சித்தமாயுள்ளேன். நீங்கள் விரும்பும் ஒன்றைச் சொல்லுங்கள்...”

-புலிப்பாணி அப்படிச் சொல்லவும் கருமார்கள் இருவருமே திகைத்துப்போய் என்ன கேட்பது, எந்த விருப்பத்தைச் சொல்வது என்று தடுமாறி சற்றே விளையாட்டாக,

“எங்களுக்கு இப்போது நன்கு பசிக்கிறது... நாங்கள் ருசித்து உண்ண அறுசுவை உணவு கிடைக்குமா?” என்று கேட்டனர்.

“உங்களைக் குகையில் தங்க வைத்துவிட்டு நான் போய் அதைக் கொண்டு வந்துவிடுவேனே! இது ஒரு விருப்பமா என்ன? வேறு ஒன்றைச் சொல்லுங்கள்...”

“வேறு... வேறு...” என்று தாடையைத் தடவியவர்கள் “ஆங்...” என்று பெரிதாய் முகம் மலர்ந்தவர்களாய் ``நாங்கள் கருவூர்ச் சித்தரைக் கண்டு எங்கள் குலத்தொழில் நிமித்தம் அநேக கருத்துகளைத் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். கருவூரார் ஆகமசாத்திரமும், கட்டடக் கலையும் கற்ற பெரும் நிபுணர் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். விண்ணில் இருந்து மண்ணுக்கு வந்த பிரம்ம சிருஷ்டிகளான விஸ்வகர்மாக்களின் மரபில் வந்தவர்களே நாங்களும்! மண், மரம், உலோகம், கல், ரசம் எனும் ஐந்தில் நாங்கள் உலோகப் பிரிவில் சென்றுவிட்டவர்.

மரத்திற்கு ஒரு பிரிவும், கல்லுக்கு ஒரு பிரிவும், மண்ணுக்கு ஒரு பிரிவும், ரசமாகிய ஓவியத்திற்கு ஒரு பிரிவும் என்று எங்களை வகைப்படுத்திவிட்டதாகக் கூறுவர். மொத்தத்தில் ‘கலா பஞ்சமர்’ என்று சுருக்கமாய்க் கூறி, தனியே எங்களுக்கு ‘உலோகக்கருமர்’ என்ற அடையாளம் அளித்தனர். காலத்தால் நாங்கள் அநேக மாற்றங்களைச் சந்தித்து இந்தச் சேரசோழ பாண்டிய மண்டலங்களில் பலவிதமாய் விளிக்கப் படுகிறோம். கொல்லன், கருமான், சிற்பி, வரைஞன், கொத்தன், தச்சன் என்று எங்களுக்குப் பலப்பல பெயர்கள்... இப்படிப்பட்ட எங்கள் கூட்டத்தில் இருந்தும் ஒரு சித்தன் உருவாகியிருப்பது எங்களுக்குப் பெருமை சேர்க்கும் விஷயம் அல்லவா?”

-ஆழிமுத்து நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு கேட்டான். அதைக் கேட்ட புலிப்பாணிக்குள்ளும் ஒரு மலர்ச்சி.

“அற்புதம்... அற்புதம்... இது உள்ளபடியே மிகச்சிறந்த விருப்பம். கருவூராரைப் பற்றி நான்கூடக் கேள்விதான் பட்டிருக்கிறேன். நேரில் கண்டதில்லை. தஞ்சை சோழனின் ஒரு சிவாலய நிர்மாணத்தில் அவர் பங்கு பற்றி போகர் பிரான் ஒரு சமயம் விரிவாகவே சொல்லியுள்ளார். தாயின் கருவில் இருக்கும்போதே ஆகமக்கலை ஞானத்தைப் பெற்றுவிட்டவராம் அவர்!

கருமார் இருவரும் பசியோடு இருப்பதாலும், முன்பே அவ்விருப்பத்தைச் சொல்லியிருந்ததாலும் குகையை உற்று நோக்குவதைவிட மரத்தடிச் சமையலைப் பார்ப்பதில் மிகுந்த நாட்டம் கொண்டனர்.

மண்குணம், கல்குணம், உலோகக்குணம், மரகுணம், தைலகுணம் என்று சகலத்தின் குணங்களையும் ஸ்பரிசத்தாலும் தட்டிப் பார்த்தும், மோந்து பார்த்தும், பரிசோதித்தும் அறிவதில் நிபுணர் என்பார் போகர் பிரான்..! ஒரு முறை போகர் பிரானிடம் யவ்வன காந்தி என்னும் மூப்பை வெல்லும் லேகியத்தைப் பெற்று அதை உண்டவரும்கூட. எனவே நமக்கு ஒரு நூற்றாண்டு என்பது அவருக்குப் பத்து வருடங்களுக்குச் சமம் என்பார் போகர் பிரான்..! அப்படிப்பட்டவர் இப்போது எங்கே இருக்கிறாரோ, எப்படி இருக்கிறாரோ தெரியாது. ஆனாலும் காசிக்குச் சென்ற இடத்தில் அவரைப் பார்த்ததாக போகர் பிரான் கூறியது எனக்கு நம்பிக்கை தருகிறது. எனவே அவர் தவத்திலோ, இல்லை ஜீவசமாதிக்குள்ளோ, அதுவுமன்றி இமயத்திலோ இருக்க வாய்ப்பில்லை. அநேகமாக அவர் பொதிகை மலைப்புறத்திலோ இல்லை பாண தீர்த்த அருவி மருங்கிலோ இருக்கக் கூடும்.

ரசவாதத்திலும் அஷ்டமாசித்திலும் அதிதேர்ந்தவர் எனவே உளமாற நான் இப்போது அவரை தியானிக்கப் போகிறேன். நிச்சயம் என் தியான வீச்சில் அவர் திரேக அலைத்தொடர்பு ஏற்பட்டு அவர் என் விருப்பமாகிய உங்கள் விருப்பத்தை அறிந்து இங்கு வருவார் என்று நம்புவோம்.

என் குருவாகிய போகர் பிரானின் தீட்சை என்பது இறையருளுக்கு இணையானது என்றால் இன்று நாம் கருவூர்ச் சித்தரைச் சந்திக்கப் போவதும் நிச்சயம்” - என்று உறுதிப்படக் கூறினான் புலிப்பாணி.

கருமார்கள் இருவர் முகத்திலும் ஒருவகை புளகாங்கித உணர்வு தென்பட ஆரம்பித்தது. அதேவேளை குகைவாயிலும் வந்துவிட்டது. மேலேறி வந்த முனைப்பில் மேனிமேல் வியர்வை துளிர்த்து மண்புழுக்கள் நெளிவதுபோல் அது நெளிந்தபடி இருக்க, சில்லென்ற காற்று மேனி வருடி, இதம் இதம் என்றது.

செங்கான் தன் தலைப்பாகையை அவிழ்த்துத் தோளையும் கழுத்தையும் துடைத்துக்கொண்டான். நல்ல கறுப்பு நிறத்தால் ஆன நீண்ட கூந்தல் அவனுக்கு... வீசும் காற்றில் வெடவெடத்துப் பறந்தது அது.

இறையுதிர் காடு - 36

“இதுதான் நீங்கள் அச்சினை வார்க்கப்போகும் குகை... உள்ளே இன்னமும் குளுமையாக இருக்கும்” என்ற புலிப்பாணி கையில் உள்ள செப்புக்குடத்தைத் தலைமேல் வைத்துக்கொண்டே குகைக்குள் நுழைந்து அவர்களுக்கும் காட்டினான்.உள்ளே மிகச் சுத்தமாய் இருந்தது. குகைகளில் பெரும்பாலும் கரடிகள் படுத்திருக்கும்; வவ்வால்களும் அடைந்திருக்கும். அவற்றின் கழிவு நாற்றம் மூக்கைச் சிணுப்பும். இங்கே அவ்வாறெல்லாம் இல்லை. சமதளமாய் இருந்தது, கீழ்பாகம்! மேலே திருவாச்சிபோல வளைவு. பக்கவாட்டில் அளவான பொந்துகள். அவற்றில் பீங்கான் கிண்ணங்கள், மண் கலயங்கள் கண்ணில்பட்டன. ஒரு கல் மேடை மேல் மயிற்பீலியால் ஆன புரிக்கட்டு காணப்பட்டது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஓம் என்கிற எழுத்தை எழுதி அதனூடே வேலையும் சரிவாக வரைந்திருந்தார் போகர். அதற்கு முன் உள்ள இடத்தில் கல்படுக்கை உளி கொண்டு வெட்டப்பட்டிருந்தது. படுக்கைக்கல்லில் கால் வைக்கவும் சிலுசிலுப்பு அப்பி எடுத்தது. குண்டலினி கபாலம் வரை அந்தச் சிலுசிலுப்பு உடம்பின் வழி மேலேறி மொத்த உடலையும் சிலிர்க்கச் செய்தது.

“இந்த இடம் எங்களுக்கு மிக இதமான உணர்வைத் தருகிறது. காலமெல்லாம் இங்கேயே இருந்து விடலாமா என்று கூடத் தோன்றுகிறது” என்றான் செங்கான்.

“போகர் பிரானின் ஆசைக்குரிய இடங்களில் இதுவும் ஒன்று. இங்கே அவர் தவம், தியானம், ஆசனம், யோகம், பயிற்சி வரைதல் என்று பலகாரியங்கள் புரிவார். அப்பழுக்கின்றி அச்சு அமைய இதுபோல் ஓர் இடமே மிகத்தோது என்றே இங்கே உங்களைப் பணித்துள்ளார்...”

“மிகவும் மகிழ்ச்சி. உங்களின் அடுத்த திட்டம்?”

“கீழே இருக்கும் மெய்கண்ட சித்தரின் குகைப்புலம் சென்று அங்குள்ள லிங்கத்துக்கு இந்த கங்கை நீரை அபிஷேகம் செய்வதுதான்..”

“நாங்கள் வரலாமல்லவா?”

“உங்களுக்காகத்தான் இந்த அபிஷேகமே. உங்களின் தொழிற்கருவிகளையும் கொண்டு வாருங்கள். அங்கு வைத்து வணங்கிவிட்டு பின் இங்கு வருவோம்.”

“மெய்கண்ட சித்தர் குகை வெகு தூரமா?”

“இல்லை... அருகில்தான் உள்ளது. அந்த வடமேற்கு மூலையிலிருந்து பார்த்தால் பருத்து வளர்ந்திருக்கும் வில்வ மரங்களோடு நன்கு தெரியும். ஹரிகேச பர்வதம் என்றும் இந்த மலைப்பகுதியைச் சொல்வார்கள்” - என்ற புலிப்பாணி, அந்த குகைக்கு வெளியே வடகிழக்கு மூலைக்குச் சென்று கீழே சரிவைக் காட்டினான். அந்த குகையும் மரமும் தெரிந்தது.

“மெய்கண்ட சித்தர் என்பவர்தான் அங்கு இருக்கிறாரா... அதனால்தான் அப்பெயரா?”

“ஆம். வாழ்வில் எது மெய் என்னும் உண்மையைக் கண்டறிந்துவிட்ட காரணத்தால் காரணப் பெயராகவே மெய்கண்ட சித்தர் என அவரை எல்லோரும் அழைக்கின்றனர்...”

“அவர் தரிசனமும் வாய்க்குமா?”

“அவரும் ஒரு மலைச் சஞ்சாரி... குறிப்பாக சதுரகிரி எனப்படும் பூலோகக் கைலாய மலைத்தலத்துக்குச் சென்றுவிடுபவர். நமக்குக் கொடுப்பினை இருந்தால் அவரது தரிசனமும் நமக்கு வாய்க்கலாம்.”

பேசிக்கொண்டே மலைச்சரிவில் இறங்கி, புதர்களைக் குடைந்து கடந்து ஒருவாறு மெய்கண்ட சித்தர் குகைப்புலத்தை அடைந்தனர். குகையே லிங்க வடிவில் தென்பட்டு ஒரு பரவச உணர்வை ஏற்படுத்திற்று.

ஒரு விவசாயக் குடியைச் சேர்ந்த குடும்பம் படையல் வழிபாட்டிற்கு வந்திருந்தது. வந்த இடத்தில் ஓரமாய் மரத்தடியில் படையல் உணவு தயாராகிக்கொண்டிருந்தது. வாசம் மூக்கைக் குடைந்தது. கருமார் இருவரும் பசியோடு இருப்பதாலும், முன்பே அவ்விருப்பத்தைச் சொல்லியிருந்ததாலும் குகையை உற்று நோக்குவதைவிட மரத்தடிச் சமையலைப் பார்ப்பதில் மிகுந்த நாட்டம் கொண்டனர்.

புலிப்பாணியும் புரிந்துகொண்டான். பசிவந்தால் பத்தும் பறந்து போய்விடும். பசி ஓர் உயிரின் நோய்க்கு நோய், மருந்துக்கு மருந்து! அதனால்தான் போகரின் கொட்டாரத்தில் அன்னசாலைக்கு பிரதான இடம். வயிற்றை நிறைத்துவிட்டால் பின் மனத்தை நிறைப்பது சுலபம். தானங்களிலும் தலைசிறந்த தானம் அன்னதானமே!

இதைப் புலிப்பாணி போகர் வழி நன்கு உணர்ந்திருந்தபடியால் கருமார்களிடம் “கவலைப்படாதீர்கள்... வழிபாட்டை முடித்து விடுகிறேன். பிறகு நாமும் உண்ணச் செல்லலாம்” என்று கங்கை நீரோடு பூஜிக்கத் தொடங்கியவன் - நீறெடுத்து நெற்றியில் பூசிக்கொண்டு சப்பணமிட்டமர்ந்து முத்திரை போட்டு சடங்குகள் புரிந்து பின் மெல்ல எழுந்து ஈசனுக்கான நாமாவளிகளைச் சொல்லிக்கொண்டே சென்று, வில்வமரத்தின் இலைகளைப் பறித்து வந்து லிங்கத்துக்கு அர்ச்சனை புரியும் முன் கங்கை நீரை லிங்கம் மேல் சொரிய விட்டான். பின் வில்வ இலைகளைத் தூவி அர்ச்சித்தான். இறுதியாக நெய்தீப விளக்கைக் காட்டியவன். “வழிபாட்டில் இறைவன் முன் காட்டப்படும் தீபத்தைக் காண்பதும் அப்போது பிரார்த்திப்பதும்தான் சிறப்பு. இவ்வேளை கண்களை மூடிக்கொள்ளக் கூடாது” - என்று விளக்கமளித்தான். இறுதியாக மூவரும் வலம் வந்தனர். அப்போது அந்த விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த முதியவர் அவர்கள் மூவரையும் நெருங்கி,

“மாரே... வயல்ல நல்ல வெள்ளாமை கண்டதால இந்த ஆகாசம் பார்த்த லிங்கத்துக்கு படையல் பூசை வெச்சோம். அப்படியே பொங்கிச் சாப்பிட்றது எங்க வழக்கம். அப்ப சிவனடியார்களுக்குத்தான் முதல் இடம். இப்ப யாரும் காணோமேன்னு கலங்கி நின்னேன். அந்த ஈசுவரன் உங்களை அனுப்பி வெச்சுட்டான். எங்க பூசை விருந்தை ஏத்துக்கிட்டு எங்க உச்சி தீண்டணும் (ஆசீர்வதிக்கணும்)” என்றார்.

- கருமார்கள் இருவரிடமும் பிரமிப்பு. சற்று முன் மனதில் தோன்றிய ஒரு விருப்பம். இதோ நிறைவேறப்போகிறது! அப்படியானால் கருவூராரையும் சந்திப்பது சாத்தியம்தானோ?

அவர்கள் இருவருக்குள்ளும் பிரமிப்பும் திகைப்புமாய் கேள்வி...

இன்று எப்போதும் பெரிதாய் படபடப்ப வளில்லை இந்த பாரதி. ஜெயராமனை பாரதி மிகவே யோசிக்கவும் வைத்துவிட்டாள்.

“சார்...”

“யெஸ் பாரதி.”

“என்ன சார் மௌனமாயிட்டீங்க?”

“ஒண்ணுமில்லை... நீ சதி நடக்கறதா சொன்னதை எப்படி எடுத்துக்க றதுன்னு எனக்குத் தெரியல... ஆமா நீ எப்ப பழநில இருந்து வந்தே?”

“இப்பதான் ஒரு ஒன் அவர் ஆகுது...”

“சரி... முதல்ல நல்லா வெந்நீர்ல குளி! கொஞ்சம் ஃப்ரெஷ் பண்ணிக்கோ. நான் நேர்ல வரேன்...”

“சார்... நிஜமாவா சொல்றீங்க?”

“முதல்ல ஏதாவது ஒரு காபி ஷாப்ல சந்திக்கலாம்னுதான் நினைச்சேன். அந்தப் பெட்டி, அப்புறம் வாள், இதைப் பாக்கணும்னா உன் வீட்டுக்கு வந்தா தானே பாக்க முடியும்?”

“நிச்சயமா நீங்க என் வீட்டுக்கு வர்றது எனக்கும் பெருமை சார்...”

“நீ டூ மச்சா ஃபீல் பண்றே? இப்ப மணி ஏழேகால்... நான் எட்டு மணி டின்னரை முடிச்சிட்டு எட்டரைக்கு உன் வீட்ல இருக்கேன். ரைட்?”

“டின்னரை என் வீட்ல வெச்சுக்கலாமே சார்...”

“இன்னிக்கு வேண்டாம். ஒரு நல்ல காபி கொடு போதும். அப்புறம் நீ கேக்க நினைக்கற கேள்விகளை க்ரிஸ்ப்பா தயார் பண்ணிக்கோ... பை.”

நான் இந்த ஆவி ஆத்மாவை எல்லாம் நம்பற ஒருத்தன்தான். ஆனா அதுக்காக அது இப்படி ஆஸ்பத்திரிக்கெல்லாம் வந்து மிரட்டும்கறத என்னால நம்ப முடியல.

- அழகாய் கட் செய்தார் ஜெயராமன். வெளியே வரவும் போர்ட்டிகோவில் கார் தயாராய் நின்றுகொண்டிருந்தது. பிரின்டிங் செக்ஷன் சீனியர் ஆப்பரேட்டர் பக்தவத்சலம் நைட் டியூட்டி நிமித்தம் உள் நுழைந்துகொண்டிருந்தார். சபரிமலைக்கு மாலை போட்டிருப்பது தோற்றத்தில் தெரிந்தது.

“நமஸ்காரம் சார்..”

“என்ன பக்தவத்சலம் நைட்ஷிப்டா?”

“ஆமாம் சார்...”

“எப்போ மலைக்கு?”

“அடுத்தவாரம் சார்..”

“ரொம்ப வருஷமா போறீங்க இல்ல?”

“ஆமாம் சார் - இது முப்பதாவது மலை.”

“குட்.” - சொன்னபடி காரில் ஏறவும் அந்த முப்பது வருஷ பக்தியும் ஈடுபாடும் ஜெயராமனுக்குள் பலவித எண்ணங்களை உருவாக்கத் தொடங்கியது. பக்தவத்சலத்தை இருபது வருடங்களாகத் தெரியும். ஒரே சீரான வாழ்க்கை! ஜெயராமன் வரையிலும்கூட அப்படித்தான்... ஐயப்பனை நம்புவதால் ஒரு சிறப்பென்றோ, ஐயப்பனையே சிந்திக்காததால் ஒரு குறை என்றோ நினைக்க எதுவுமேயில்லை. அப்படியானால் இதெல்லாம் பழக்க வழக்கம் சார்ந்த ஒன்றுதானா? அதற்கும் மேல் என்றால் அது என்னவாய் இருக்கும்?

இறையுதிர் காடு - 36

சென்னையின் திணறலான ட்ராஃபிக்கில் ஊர்வலம் போவது போல் அவர் கார் சென்றிட, அவருக்குள் அன்றைய பத்திரிகைத் தேவைகளைக் கடந்த ஒரு மாறுபட்ட சிந்தனை!

ஹாஸ்பிடல்!

பானுவோடு திரும்ப வந்த கிருஷ்ணகுமார் நந்தா கணேசபாண்டி வரையில் ஆச்சர்யமளித்தார்.

“சாரோடநிலை எப்படி இருக்கு பாண்டி...”

“அப்படியேதான் இருக்கு ஜோசியரே... ஏதோ ஒரு ஊசிமருந்து சிங்கப்பூர்ல இருந்து வரணுமாம். அதை வர வைக்க பாடாய்ப் பட்டுக்கிட்டு இருக்காங்க..” - என்ற பாண்டி அடுத்து பானுவிடம்தான் ஊன்றினார்.

“என்னப்பா... பொசுக் பொசுக்குன்னு காணாமப்போயிட்றே? ஒத்த ஆளா நான் இங்க எவ்வளவு பேரை சமாளிக்கறது?”

“அண்ணே மணி இப்ப எட்டாகப்போகுது... காலைல ஒன்பது மணிக்கு வந்தேன். நானும் ஒண்ணும் சும்மா இல்லண்ணே?”

“உடனே இந்த எட்டு மணி நேர வேலைய எல்லாம் ஞாபகப்படுத்தாதே... உன்னை வேலைக்கு எடுக்கும்போதே ஐயா என்ன சொன்னார்னு ஞாபகம் இருக்குல்ல..?”

“இப்ப நான் என்ன செய்யணும்... அதைச் சொல்லுங்க...”

“இப்ப வீட்டுக்குப் புறப்படு... நாளைல இருந்து கொஞ்சம் இங்கையே இரு... ஆமா பாரதி பாப்பா வந்திடுச்சா?”

“வந்துட்டாங்கண்ணே... அங்க வீட்ல அந்தப் பெட்டியோட ஒரே ரகளை... பாம்பு வேற பாடாய்ப் படுத்திடிச்சு.”

“ஹும்... எல்லாம் ஒரே கண்கட்டா இருக்கு. நான் சொல்றதக் கேக்கதான் ஆள் இல்ல...”

“ஆனா ஜோசியர் எல்லாம் நல்லதுக்குத் தான்னு சொல்றார்... பாரதி மேடமோ இடத்தைக் காலி பண்ணுங்கன்னு கறாரா சொல்லிட்டாங்க.”

“பாரதி தங்கமான பொண்ணு... ஆனா இந்த மாதிரி விஷயத்துல அனுபவம் இல்லாததால நம்ப வேண்டியதை நம்ப மாட்டேங்குது...”

“நான்கூட கொஞ்சம் மேடம் மாதிரி தாண்ணே... ஆனா எப்ப அந்தக் குமாரசாமி ஆவிய பார்த்தேனோ, அப்ப இருந்தே நான் மாறிட்டேன். இப்பகூட பயத்தோடதான் வந்திருக்கேன். ஜோசியர் மந்திரிச்ச கயிறு ஒண்ணைக் கொடுத்து, கட்டிக்கச் சொன்னார். பாருங்க...”

- அவள் தன்வலக் கையைக் காட்டினாள். அதில் ஒரு கறுப்புக் கயிறு!

அப்போது சூழலில் ஒரு அதீத பரபரப்பு... திபுதிபுவென சிலர் ஓடினர் - போலீஸ்காரர்கள் சிலர் ஓரமாய் ஒதுங்கி கைப்பேசியில் பரபரப்பாகப் பேசத் தொடங்கினர். கடந்து போன ஒரு நர்ஸை நிறுத்தி கணேச பாண்டியன் கேட்கத் தொடங்கினார்.

“என்னம்மா விசயம்... ஏன் எல்லாரும் ஓடறாங்க?”

“அந்த சப் இன்ஸ்பெக்டர் இறந்துட்டாருங்க...”

“யாரும்மா... ஆக்ஸிடென்ட் ஆனவரா?”

“ஆமாம்...”

“நல்லாதானே ரெகவர் ஆகிக்கிட்டிருந்தார்?”

“சடன் அட்டாக்... சாகும்போது குமாரசாமி, குமாரசாமின்னு ஏதோ சொல்ல வந்திருக்காரு. ஆனா அதுக்குள்ள உயிர் போயிடிச்சு..”

-நர்ஸ் பீதியைக் கிளப்பி விட்டு விலகிக் கொள்ள குமாரசாமி விஷயம் பற்றிக்கொள்ள ஆரம்பித்தது. கணேச பாண்டியனுக்குள்ளேயும் உதறல்... அந்த சப்இன்ஸ்பெக்டர், எம்.பி.யான ராஜா மகேந்திரனுக்கு உதவி செய்த நபர். குமாரசாமியை ஓவராய் மிரட்டியவரும்கூட... அவருக்கே இந்த கதி என்றால் ரவுடி வேங்கையனையும், எம்.பி-யையும் அந்தக் குமாரசாமி ஆவி சும்மா விடுமா என்ன?

கணேச பாண்டியனை நெருங்கிய பானு

“அண்ணே...” என்று கலைத்தாள்.

“சொல்லு பானு..”

“என்னண்ணே இது... பயமா இருக்குண்ணே..”

“அதான் ஜோசியர் கறுப்புக் கயிறு கட்டியிருக்காரே... எனக்கும் ஒரு கயிற்றைக் கட்டி விடச் சொல்லு” என்று சலனமிகுதியோடு சொன்னபோது ஜோதிடர் வட்டக்கண்ணாடி வழியாக ICU வுக்குள் இருக்கும் ராஜாமகேந்திரனைப் பார்த்தபடி இருந்தார்.

இருவரும் அவரை நெருங்கி ஒரு ஓரமாக ஒதுங்கினர்.

கணேச பாண்டியிடம் இப்போது பலப்பல கேள்விகள்.

“ஜோசியரே... நான் இந்த ஆவி ஆத்மாவை எல்லாம் நம்பற ஒருத்தன்தான். ஆனா அதுக்காக அது இப்படி ஆஸ்பத்திரிக்கெல்லாம் வந்து மிரட்டும்கறத என்னால நம்ப முடியல. நடக்கறத பார்த்தா நம்பாம இருக்கவும் முடியல.”

“நீங்க நம்பறதும் நம்பாததும் வேற விஷயம். ஒண்ணு மட்டும் நிச்சயம் - ஒரு சத்யமான மனுஷனை, நம்ப எம்.பி தப்பா தொட்டுட்டாரு. எனக்கு அதுல சந்தேகமே இல்லை.”

“அதுல எனக்கும் சந்தேகமே இல்லை.

எம்.எல்.ஏ ஆறதும் எம்.பி ஆறதுமே கோடி கோடியா சம்பாதிக்கத்தான்னு ஆகிப்போச்சு... அவ்வளவும் மக்கள் பணம். ஆனா இப்படி மத்த யாருக்கும் நடந்த மாதிரி தெரியலியே ஜோசியரே..?”

“சத்யமான மனுஷன்னு சொன்னேனே... கவனிக்கலியா?”

“குமாரசாமி மாதிரி நிறைய சத்யமான மனுஷங்கள நான் பாத்திருக்கேன் ஜோசியரே... எவ்வளவோ பேர் ரேப் பண்ணப்பட்டெல்லாம் செத்துப்போறாங்க. ஆனா அப்படி செத்த யாரும் ஆவியா வந்ததா தெரியலியே? அப்படி வந்தா கூட உண்மையில நல்லா இருக்கும். ரேப் பண்ண நினைக்கறவனுக்கும் ஒரு பயம் வரும்ல?”

“பாண்டி... இந்த விஷயத்துல ஒரு கணக்கு இருக்கு. சிலர் செத்தபிறகு ஆவியா அலையணும்னு ஒரு விதியமைப்பு இருக்கு. அப்படிப்பட்டவங்கள்ள ஒருத்தன்தான் இந்தக் குமாரசாமி...”

“அது ஏன் சிலர் கண்ணுக்கு மட்டும் அந்த ஆவி தெரியுது?”

“மனுஷப் பிறப்புல தேவ கணம், ராட்சஸகணம், பூதகணம்னு பல அடிப்படை இருக்கு. அதேபோல தாயோட வயிற்றுல கருக்கொள்ளும்போது இருக்கற நட்சத்திர கதி, கிரகநிலைகள்னு இந்த விஷயத்துக்குப் பின்னால சூட்சுமமா நாம உணர நிறைய விஷயங்கள் இருக்கு.

மூணு வயசுல மூவாயிரம் பக்கங்களை ஞாபகம் வெச்சுக்க முடிந்த சக்தில இருந்து, மின்சாரம் தாக்கினாலும் எதுவும் ஆகாத உடம்பு வரை மனிதப் பிறப்புல விதிவிலக்கான அதிசயம்னு நினைக்க வைக்கற பலர் இருக்காங்க. அந்தப் பட்டியலைச் சேர்ந்த சிலர்தான் ஆவிகளைப் பார்க்க முடிஞ்சவங்களும்...”

“என்னென்னமோ சொல்றீங்க... போகட்டும். நம்ம எம்.பி பொழைச்சிடுவாருன்னு இப்பவும் நம்பறீங்களா?”

“எனக்கு அதுல எந்த சந்தேகமும் இல்லை.”

“இல்ல... சப் இன்ஸ்பெக்டர் போயிட்டாரு! அவரு நம்ப ஐயா பேச்சைக் கேட்டுத் தப்பு பண்ணவரு. இதே மாதிரிதான் அந்த வேங்கையனும்... குமாரசாமி இவங்க கண்ல பட்டு பயத்தை உண்டாக்கியே கொல்றதாதான் நான் நினைக்கறேன். இப்ப இங்க உங்ககூட நான் இப்படிப் பேசறதைக்கூடக் கேட்டுகிட்டு இருக்கலாம்... நானும் ஒரு பயத்தோடதான் பேசறேன். நல்லா யோசிச்சு சொல்லுங்க.. ஐயா பொழச்சுக்குவாரா?”

“எப்ப அந்தப் பெட்டி எம்.பி பங்களாவுக்கு வந்திச்சோ அப்பவே எம்.பி-க்கு ஆபத்து இல்லைன்னுதான் அர்த்தம்...”

“அதுல உங்க நம்பிக்கைப்படி மருந்து இருக்குன்னே வைப்போம். அதை இப்ப எம்.பி-க்கு, இந்த ஆஸ்பத்திரில இருக்கற நிலைல கொடுக்க முடியுமா? டாக்டருங்க கொடுக்க விடுவாங்களா?”

“எனக்கு அதெல்லாம் தெரியாது... எம்.பி. ஜாதகப்படியும் அல்ப ஆயுள் ஜாதகம் கிடையாது. அவர் நிச்சயம் பிழைப்பாரு... நான் உயிரோட இருக்கற வரை இது நடந்தே தீரும். அலையற குமாரசாமியோட ஆத்மசாந்திக்கும் பெட்டில பரிகாரம் இருக்கும். எனக்கு அதுல சந்தேகமில்லை... அதை நான் செய்து காட்டுவேன்.”

-கிருஷ்ண குமார் நந்தாவின் தீர்க்கம் கணேசபாண்டியனை அதற்கு மேல் பேசவிடவில்லை. ஆனால் பானு பேச ஆரம்பித்தாள்.

“ஜோசியரே! என் கண்ணுக்கு குமாரசாமி தெரிய என்ன காரணம்... நான் நீங்க சொல்ற மாதிரி விசேஷப் பிறப்பா?”

“ஆமாம்... நீ மட்டுமில்ல, நானும் விசேஷமானவன்தான். நாம இனிமேதான் பல விஷயங்கள சாதிக்கப் போறோம். அப்ப தெரியும். அறிவியலுக்கும் ஆத்மீகத்துக்கும் பெரிய வித்யாசம் இல்லை பானு...”

- நந்தாவின் உறுதியான பேச்சு ஒருபுறமிருக்க மறுபுறத்தில் சப் இன்ஸ்பெக்டர் உடலைப் பார்க்க பலர் வந்த வண்ணமிருந்தனர்... பலமான அழுகுரல்கள் பலவிதமாய் ஒலிக்கத் தொடங்கின!

பங்களாவுக்குள் ஆசிரியர் ஜெயராமன் கார் நுழைந்த அதே நேரம் அரவிந்தனின் காரும் பிரவேசித்து நின்றது. மருதமுத்து இரண்டு காருக்கும் கதவைத் திறந்து விட்டு ஒத்தாசை செய்தான். அரவிந்தன் ஜெயராமனை ஹக் செய்து மகிழ்ந்தான். முகத்தில் அதீத பயணக் கலைப்பு!

இறையுதிர் காடு - 36

“என்ன அரவிந்தன், இப்பதான் வர்றீங்களோ?”

“ஆமாம் சார்... உங்களை இப்ப நான் எதிர்பார்க்கல..”

“நானும் இப்ப இங்க வர்ற பிளான்ல இல்லை. பாரதிதான் போன் பண்ணி, பேசணும்னு சொன்னா...”

- உள் நுழைந்தபடி பேசினர். ஹாலில் அமர்ந்திருந்த பாரதி இருவரையும் பார்த்து விட்டு எழுந்து வேகமாய் முன் வந்தாள்.

“வெல்கம் சார்...”

“தேங்க்யூ... நான் சொன்ன மாதிரியே குளிச்சிட்டு பிரிஸ்க்கா இருக்க போல இருக்கே..?”

“ஆமாம் சார்... உக்காருங்க... காபி சொல்லட்டுமா? அடைக்கலம்மா...” - தெம்பாய்க் குரல் கொடுத்தாள்.

“வணக்கம் சார்...” என்ற குரலோடு முத்துலட்சுமியும் உள்ளிருந்து வந்தாள்.

“வணக்கம்மா...”

“என் பேத்தி கொஞ்சம் குழப்பத்துல இருக்கா... என் மனசும் சரி இல்லை. பழநிக்குப் போய்ட்டு வந்ததுல மண்டை உடைஞ்சதுதான் மிச்சம்... இங்க ராஜாவுக்கும் சீரியஸ்னு சொல்றாங்க. வீட்லயும் நிறைய குழப்பங்க...” முத்துலட்சுமி விழிகளில் கண்ணீர் எட்டிப்பார்த்தது.

“நீங்க பதற்றப்படாதீங்க. வாழ்க்கைல சில நேரங்கள்ல நம்மைச் சுத்தி இப்படிதான் என்னென்னவோ நடக்கும். நாமதான் அதை எல்லாம் புரிஞ்சி பக்குவமா நடந்துக்கணும்... கவலைப்படாதீங்க. அரவிந்தன் இருக்காரு - நானும் வந்திருக்கேன். என்னன்னு பாக்கறோம்...”

-ஜெயராமன் இதமாகப் பேசியபடியே எழுந்து சென்று பெட்டி வாள் இரண்டையும் பார்க்கத் தொடங்கினார். வாளை குனிந்து கையில் எடுத்து அதன் என்க்ரேவ் செய்யப்பட்ட எழுத்துகளை வாசித்தவர், வாளை உறையிலிருந்து உருவத் தயாரானார். கச்சிதமாய் பாண்டி பாரதிக்கு போன் செய்ததில் பாரதி கவனம் அப்போது போனில் செல்ல, ஜெயராமனின் கை வாளை உருவி வெளியே எடுத்தது.

- தொடரும்