மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இறையுதிர் காடு - 50

இறையுதிர் காடு
பிரீமியம் ஸ்டோரி
News
இறையுதிர் காடு

அன்று ஒருபுறம் செந்தாடுபாவை ரசம் பானையில் சேர்ந்தபடி இருக்க மறுபுறம் போகர் சொன்னதுபோலவே சீரான விசைப்பாட்டில் நவபாஷாணத்தை மருதனும் நாரணபாண்டியும் இடித்தபடி இருந்தனர்.

வையும் ஒன்றுடன் ஒன்று கலந்து ஒரு புதிய பாஷாணமாய் மாறிவிட்டிருந்தன. அந்த இடத்தில் பிடித்திருக்கிறது என்றும் பிடிக்கவில்லை என்றும் சொல்ல முடியாதபடி ஒரு வாசம் வேறு கமழத் தொடங்கியது. சிலருக்கு இறுமல் வந்தது. சிலர் தொண்டையைச் செருமிக்கொண்டனர். ஆனால், போகர் வரையில் அவரிடம் எந்த எதிர்வினையும் இல்லை. செந்தாடுபாவையை அவர் ஒருமூச்சில் கசக்குவதே புதுமாதிரியாக இருந்தது! கசக்கிய மூலிகைச்சக்கையை ஒரு மரக்கூடையில் போட்டபடி இருந்தார். அவர் பின்தோளில் மட்டும் லேசாய் இரண்டொரு வியர்வைத் துளிகள் தெரிந்தன.

ஆனால் மருதனும் நாரணபாண்டியும் வியர்வையில் குளித்ததுபோல் இருந்தார்கள். கிழார்கள் இதை ஆச்சர்யமாகக் கண்டனர். வேல்மணிக்கிழார் கேள்வியாகவே கேட்டார்.

இறையுதிர் காடு - 50

“பிரானே, வெகுநேரமாய் கசக்கிப் பிழிகிறீர்கள். ஆனால் உங்கள் வரையில் பெரிதாய் வியர்க்கவில்லையே?”

“ஆம்... பெரிதாய் வியர்க்காது... சக்தியை உள்ளங்கையில் மட்டும் பிரயோகிக்கிறேன். அதன் நிமித்தம் உடம்பின் சர்வாங்கத்தில் ஒரு விடைப்பு உருவாக நான் அனுமதிப்பதில்லை. சுருக்கமாய்ச் சொல்வதானால் பூப்பறிப்பதுபோல் இப்பணியைச் செய்கிறேன்.”

“சீடர்களைச் செய்யச் சொல்லலாமே?”

“சில செயல்களை நான் என் கைகளால் செய்வதே சரியானது. அதிலும் இந்த பாஷாண லிங்கம் ஒரு பரிசோதனை முயற்சி மட்டுமல்ல - இந்த உலகில் எந்த ஓர் உலோகத்தோடும் மற்றும் கற்களோடும் ஒப்பிட முடியாத ஒரு தனித்த கனிமமாக இது விளங்கப்போகிறது. இதை ஒருவர் நினைக்கும்போது மானசத்தொடர்பு உருவாகும் - இதை ஒருவர் நேரில் காணும்போது பார்வைத்தொடர்பு உருவாகும். அப்படித் தொடர்பு ஏற்பட்டுவிட்ட நிலையிலேயே இது இதை நினைப்பவர் மற்றும் காண்பவரின் எண்ணங்களில் தன் சக்தியைக் கலக்கத் தொடங்கிவிடும்.”

“அப்படிக் கலப்பதால் அவருக்கு என்ன பயன்?”

“அதை நான் வார்த்தைகளில் சொன்னால் நீங்களும் பரிசோதனையில் இறங்கிவிடுவீர்கள்...”

“ஏன் நாங்கள் அப்படி எதுவும் செய்துவிடக் கூடாதா?”

“ஆம்... நீங்கள் அப்படிப்பட்ட பரிசோதனைகளில் இறங்கினால் இப்போது இருப்பதுபோல் இருக்க மாட்டீர்கள்...”

“என்றால் எப்படி இருப்போம்?”

“இது நீங்கள் எதைக் கேட்டாலும் அதைத் தந்திடும்! எனவே உங்களில் ஒருவர் இதனிடம் நித்ய இளமையைக் கேட்கலாம், ஒருவர் அள்ளக் குறையாத செல்வம் கேட்கலாம், இன்னும் சிலர் கல்பம் போன்ற உடலைக் கேட்கலாம்... நீங்கள் ஆசைகளே துளியும் இல்லாத சித்த யோகிகளா என்ன?”

“பிரானே... தாங்கள் சொல்வது உண்மையா? தாங்கள் முதலில் உருவாக்கப்போகும் இந்த பாஷாணலிங்கம் அத்தனை சக்தி மிக்கதா?”

“ஒன்பது சக்திகளின் கலப்பு முதலில் நான் உருவாக்கப் போகும் லிங்கம்! அடுத்து தண்டபாணித்தெய்வம்...”

“என்றால் அமுதசுரபி அட்சய பாத்திரம், காமதேனு, கற்பக விருட்சம்போல் இதையும் கருதலாமா?”

“கிட்டத்தட்ட அப்படித்தான்.”

“அப்படியானால் கைலாயத்து அந்த ஈசனைவிட இது வலியது எனலாமா?”

“தவறான கேள்வி. ஈசனைவிட எதுவுமே எங்குமே எப்போதுமே மேலானதில்லை. அவன் பரம்பொருள். மகா சமுத்திரம் அவன். நாமெல்லாம் அந்தச் சமுத்திரத் துளிகள்!”

“அப்படியானால் ஈசனின் சக்தியில் இது சில பங்குகள் கொண்டது என்று கூறலாமா?”

“இதுவும் தவறான கேள்வி. அந்தப் பரம்பொருளின் சக்தியைப் பங்கிடவெல்லாம் முடியாது.”

“என்றால் இதன் சக்தியை எப்படி விளக்குவது?’’

“அந்த ஈசனின் சக்திக்கும் இதற்கும் துளியும் குறைவு கிடையாது.”

“அப்படியானால் தாங்கள் ஈசனையே படைக்க முடிந்தவர் என்றாகிறதே?”

“மாற்றிச் சொல்லுங்கள்... என்னுள் இருந்து அந்த ஈசன் தன்னை இப்பிரபஞ்சத்திற்கென லிங்க வடிவாய் தன்னைப் படைத்துக் கொள்கிறான்.’’

“எப்படிச் சொன்னால் என்ன... கடவுளையே படைக்க முடிந்தவர்தானே உண்மையில் பெரிய கடவுள்?”

“போதும்... இதற்கு மேல் எதுவும் பேச வேண்டாம். சில விஷயங்கள் ரகசியங்களாக நீடிப்பதே நல்லது...”

இறையுதிர் காடு - 50

- போகர் பிரான் சற்றுக் கோபமாகப் பேசியதைக் கிழார்கள் அப்போது கேட்கவும் லேசாக அதிர்ந்தனர். வெளியே இருள் கவிழ்ந்து விண்ணில் நட்சத்திரப்புள்ளிகள் தெரிந்தபடி இருந்தன. காற்றிடம் ஓர் உல்லாச ஆவேசம். குகைக்குள் தீப்பந்த ஒளியும், லிங்கத்தைச் சுடுவதற்கென உருவாக்கியிருந்த கரிக்கட்டி உலையின் அணையாத தீச்சுடர்களும் உள்கூடு முழுக்க மஞ்சளைக் குழைத்துப் பூசியதுபோல் சுற்றுப் பாறைச் சுவர்களில் மஞ்சளாய் ஒரு வித ஒளி மினுமினுப்பு.

போகர் பிரான் செந்தாடுபாவையை முழுவதுமாய்க் கசக்கிப் பிழிந்ததில் பானை நிரம்பிவிட்டிருந்தது!

“இதை அப்படியே தூக்கி ஒரு ஓரமாய் வையுங்கள். ரசத்தில் யாதொரு தூசுதுப்பும் படக்கூடாது. இந்த ரசம் காலம் செல்லச் செல்ல தன்னிலையில் மாற்றம் கொள்ளும்.”

“தன்னிலை மாற்றம் என்றால்?” கார்மேகக் கிழார் இப்போது கேட்டார்.

பகல் பொழுதில் நாம் நின்ற நிலையில்தான் எப்போதும் இருக்கிறோம். இரவுப்பொழுது நம் உடல் படுக்கை வாட்டம் கொண்டு மேல் கீழ் நிலை நீங்கி மண்ணின் சமநிலை சார்ந்ததாகிறது. எனவே பகலியக்க வினைப்பாட்டிற்கும், இரவியக்க வினைப்பாட்டிற்கும் அதன் செறிவுகளால் வேறுபாடு மிக உண்டு. ரத்த ஓட்டமும் படுக்கை நிலையில் விசைமாற்றம் பெற்றிருக்கும். அதற்கேற்ப உண்ண வேண்டும்.

“தன்னிலை மாற்றமெனில் இதனுள் இப்போது வேதிச்செயல் நிகழ்ந்தபடியுள்ளது. அரிசியானது தண்ணீரில் ஊறிடும்போது திடத்தன்மையை இழக்கும், வெந்நீரில் வேகும்போது இளக்கத்தை இழக்கும் - குழைவுக்கு ஆட்படும். குழைந்ததையே அன்னமெனச் சொல்கிறோம். நாவின் அண்ணங்களுக்கு இடைப்பட்டு அது ருசிக்கப் படுவதால் பொதுவாய் உண்ணுவதற்குரியவை அனைத்தும் அன்னம் என்று அழைக்கப் படுகின்றன. அவ்வாறு உண்ணப்படும்போது அது நசிந்து எச்சிலுடன் கலந்து சிதைந்து உள் சென்று அமிலங்களோடு கலந்து சக்தியாய் உருமாறும்.

ஓர் அரிசிக்கே இத்தனை மாற்றங்கள். அதே போலத்தான் உயிர்ச்சத்து மிக்கவை நொடிக்கு நொடி தங்களுக்குள் மாற்றங்களைக் கண்டபடி இருக்கும். அதிலும் இந்தச் செந்தாடுபாவை ரசம் பலவித குணப்பாடுடையது. ஒன்றும் ஒன்றும் கூடினால் எப்படி இரண்டாகிறதோ, இரண்டும் ஒன்றும் கூடினால் எப்படி மூன்றாகிறதோ அதுபோல் ஒரு தொடர் வினைமாற்றம் இதனுள் இப்போது நிகழ்ந்தபடியுள்ளது. சூரியக்கதிரின் தாக்கம் இல்லாத இரவின் மிசை ஒருவித மாற்றம் என்றால், பகல் பொழுதில் வேறு வித மாற்றம். இப்படி இரு மாற்றங்களுக்கும் இது ஆட்பட்ட நிலையில் இதன் திரவ நிலையில் சற்று குழம்பு நிலை உருவாகும். அந்தக் குழம்பு நிலையில்தான் இந்த ஒன்பது பாஷாணக் கலப்புள்ள கலவை அதோடு சேர வேண்டும். கூடவே உதக நீரையும் குறித்த அளவு சேர்த்து, குயவன் பானை வனையும் முன் ஒரு குழைந்த பதத்தில் களி மண்ணை உருவாக்குவதுபோல், இதையும் உருவாக்கி இதை வட்டமாய்த் தாமரை இலை அளவு தட்டி முதலில் வெயிலில் காய வைக்க வேண்டும். காய்ந்த பின் அதைப் பொடித்து, திரும்ப ரசமும் உதக நீரும் கலந்து தாமரை இலை அளவு தட்டி, இம்முறை நிழலில் காய வைக்க வேண்டும். காய்ந்த பின் திரும்பப் பொடியாக்கி, திரும்ப ரசமும் நீரும் கலந்து தாமரை இலை அளவு தட்டி, திரும்ப வெயிலில் காய வைத்து...

- போகர் பிரான் சொல்லி முடிக்கும் முன் எல்லோரிடமும் ஒரு ஆயாசம் மூச்சாக வெளிப்பட்டது.

“என்ன ஆயாசமாய் உள்ளதா?”

“ஆம் பிரானே... எதற்காக இத்தனை முறை?”

“அப்போதுதான் காலத்தால் அழிவுக்கு உள்ளாகாத, தன்னிலையும் துளியும் மாறிடாத அணுத்துகள்கள் உருவாகும்.”

“அந்த அணுத்துகள்கள் இப்போதும் அந்தக் கலவைக்குள் தானே உள்ளது?”

“அதிலென்ன சந்தேகம்?”

“இப்படிப் பன்முறை செய்தால் தான் அப்படி ஒரு அணுத்துகள்கள் உருவாகுமா?”

“ஆம்... நம் உடல்கூட இப்படிப் பன்முக வினையால்தான் உருவாகி நிற்கிறது.”

“இது என்ன, நவபாஷாணக் கலவையில் இருந்து நம் உடம்புக்கு வந்துவிட்டீர்கள்?”

“உடம்பும் அப்படிப்பட்டதே என்பதை வேறு எப்போது கூறுவது... இதுபோன்ற தருணங்களில்தானே கூற முடியும்?”

“விளக்குவீர்களா... இதைக் குறித்துக்கொள்ளலாமா?”

“விளக்குகிறேன்... முதலில் மனதில் குறித்துக்கொள்ளுங்கள். இன்றைய பாஷாண லிங்கப் பணிக்குச் சற்றே ஓய்வையும் அறிவிக்கிறேன். முன்னிராப்போதில் எப்போதும் எளிதில் ஜீரணம் ஆக முடிந்த, அதிக அமில குணமில்லாத, கொழுப்பும் இல்லாத சாமைக் குழம்பி, கம்புருண்டை, மிளகுரசம், நாரத்தை ஊறல், தேன் நெல்லித் துண்டுகள், மாப்பிரண்டையை உண்பதே தூய உடலுக்கு நன்மை மிகும்.

இறையுதிர் காடு - 50

பகல் பொழுதில் நாம் நின்ற நிலையில்தான் எப்போதும் இருக்கிறோம். இரவுப்பொழுது நம் உடல் படுக்கை வாட்டம் கொண்டு மேல் கீழ் நிலை நீங்கி மண்ணின் சமநிலை சார்ந்ததாகிறது. எனவே பகலியக்க வினைப்பாட்டிற்கும், இரவியக்க வினைப்பாட்டிற்கும் அதன் செறிவுகளால் வேறுபாடு மிக உண்டு. ரத்த ஓட்டமும் படுக்கை நிலையில் விசைமாற்றம் பெற்றிருக்கும். அதற்கேற்ப உண்ண வேண்டும். காலையில் மிகுதி, மதியம் பகுதி, இரவில் ஒரு விகுதி என்கிற கணக்கில் உணவை உட்கொள்ள வேண்டும். அதேபோல் உண்ணும் நேரத்தை மாற்றிக்கொள்ளக்கூடாது. உண்ணும் முன்பும் பின்பும் நீர் உண்ணக் கூடாது. அப்படி நீர் உண்டால் சதை உருவாகும். இத்துடன் மாதா மாதாம் ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது உடம்பின் உள்ளுறுப்புகள் ஓய்வுகண்டு பலத்துடன் திகழப் பெரிதும் உதவி செய்யும். துவாதசி உணவு மருத்துவ உணவாக நெல்லி, கீரை, நெய் என்றிருக்க முதுமையிலும் இளமைக்கான பலமிருக்கும். கிழார்களே... இதை உங்கள் கவிதைத் தமிழில் பாடலாக்கிடுங்கள். பாடல்கள் ஆனாலே அவை காலத்துக்கும் வாழ்ந்திருக்கும்.’’

- போகர் பிரான் சொல்லி முடித்த வேளை அந்தக் குகைக்குள் இரவு உணவினை ஒரு பெரும் மரச்சிப்பத்தில் பல்வேறு அளவிலான பானைகள் மற்றும் பீங்கான் சாடிகளில் வைத்து எடுத்து வந்திருந்தனர் கொட்டார அடுமனை ஊழியர்கள்.

வெளியே சலசலத்து ஓடிடும் அருவிப்பக்கமாய் ஒருவன் தீப்பந்தம் பிடித்தபடி நின்றுகொள்ள அங்கேபோய் கைகழுவி வாய்கொப்பளித்து வந்தனர். சிலுசிலுப்பு அப்பி எடுத்தது. மேல் வானில் மேகப் பொதியினூடே நட்சத்திர மினுமினுப்பு... மிக வித்தியாசமாய் உணர்ந்தனர் - திரும்பி வந்து குகைத்தளத்தில் வரிசையில் அமர்ந்த நிலையில் மண் கலயங்களைப் பெற்று அதில் நாரத்தை ஊறல் துண்டுகளுடன் கூடிய சாமைக் குழம்பியை முதலிலும், பின் தேன் நெல்லித்துண்டுகளையும் சுவைத்தனர். கருமார்கள் இவ்வேளையில் மது அருந்துவதுண்டு - கள் வடிவிலான மது அவர்கள் களைப்புக்கு மருந்தாகும். ஆனால் போகரிடம் கள்ளுக்கு அனுமதியில்லை.

மனதை ரசனையால் மயக்க வேண்டும் - புலன் தூண்டிகளால் மயக்கக் கூடாது என்பது போகரின் கொள்கை.

அனைவரும் போகரோடு சேர்ந்து உணவு உண்டதை ஒரு பெரும் சம்பவமாகவும் கருதினர்.

“இன்றைய இந்தச் சம்பவத்தை, அனைவரும் உணவு உண்ட நிகழ்வை இங்குள்ள பாறைச் சுவரில் உளிகொண்டு உருவங்களாய் வார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றார் அருணாசலக் கிழார்.

“இப்படித்தான் பதிவுகள் உருவாகின்றன. உங்கள் விருப்பப்படியே செய்யுங்கள். காலத்தால் நான், நீங்கள், நாம் நிச்சயம் அழிந்து அவரவர் கர்மப்போக்கில் பலவாறு மாறிவிடுவோம். ஒருவர் புல்லாகலாம் - இன்னொருவர் புலியாகலாம். அவ்வளவு ஏன், பிறவித்தளை அறுத்து பிரம்மமாகவும் ஆகிடலாம். ஆனால், இந்தக் கற்கள் அப்படியே இருக்கும். இது கொண்ட தடயங்கள் அப்படியே இருக்கும்.

ஒருவன் பெரிதும் முயன்று அழித்தாலன்றி அழியாத சிறப்புடையவை இந்த மலைப்பாறைகள் எனப்படும் கற்கள். வழக்கில் கல் என்போம். இந்தக் கல் என்னும் சொல்லுக்கு அறிவுக் கல்வி என்பதும் பொருளாகும். இந்தக் கல் எப்படி உறுதிமிக்கதோ அப்படியே கல்வியும் உறுதியானது, அழிவில்லாதது - உங்கள் ஆத்மாவில் தேங்கி நீங்கள் எடுக்கும் பிறவிகளிலெல்லாமும் உடன் வரும்.”

- போகர் பிரான் இதுபோல் பேசும் பேச்சுக்குள் பல அரிய செய்திகளைச் சொல்லிக்கொண்டே போனார்.

ஆனாலும் அவர்களில் சிலர் மனங்கள் அவரின் பொருள் நிறைந்த கருத்தைக் கேட்பதை விட்டுவிட்டு ஒரு பாறை மேல் வைக்கப்பட்டிருந்த கருமார்கள் உருவாக்கியிருந்த மண் மேனிகொண்ட மெழுகு லிங்கத்தின் மேலேயே இருந்தது.

இந்த லிங்கம் தரப்போகும் பாஷாணலிங்கம் காமதேனு, கற்பக விருட்சத்துக்கு இணையானது - கேட்பதைத் தருவது - அந்த ஈசனாரின் சக்திக்குத் துளியும் குறைவில்லாதது என்கிற கருத்திலேயே தேங்கியிருந்தது. சீடர்களிலும்கூட நாரண பாண்டி மனதில் ஒரு புலியைக் கொன்று வீரனாவதும், இளவட்ட உருண்டையைத் தூக்கிப் போட்டு தன் இனத்தைச் சார்ந்த சொக்கி என்னும் பெண்ணை மணப்பதும்தான் பெரு விருப்பம். இதனால் அந்த விருப்பம் ஈடேறுமா? என்கிற கேள்விக்குள் இருந்தான்.

மருதனுக்கோ தன் தந்தை கடல்வழி சென்று திரும்பாமல்போன துக்கம் - அவர் உயிரோடு உள்ளாரா - இல்லை கடற்கோள் அவர் உயிரைக் கொண்டு போனதா என்பது தெரியவில்லை. இந்த லிங்கம் என் தந்தையைத் திரும்பத் தருமா என்பது அவனுக்குள்ளான கேள்வி.

மல்லிக்கு நிலக்கிழார் ஆகி, பத்தாயிரம் மாடுகள் கொண்ட கொட்டடி கட்டி விளைநெல்லைக் கப்பலில் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பது விருப்பம். அஞ்சுகனுக்கு அஷ்டமா சித்தி வசப்பட வேண்டும் என்பது உள்ளக்கிடக்கை. சங்கன் தேரையர் போல் மகா வைத்தியனாக விரும்பினான். இது எதுவும் வேண்டாம், ரசவாத ரகசியம் தெரிந்தால் போதும் கல் மண்ணை எல்லாம் தங்கமாக்கி உலகையே அதன்மூலம் விலைக்கு வாங்கி விடலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தான் அகப்பை முத்து. இப்படி ஆளாளுக்கு ஒரு விருப்பத்துடன் அந்த லிங்கத்தைப் பார்த்தபடியே இருந்தனர்.

இறையுதிர் காடு - 50

இன்று லிங்கம்மேல் விழுந்த தோடு அல்லாமல் வளைத்துக்கொண்டு படமும் விரித்த அந்த நாகத்தைப் பார்த்த ஜெயராமன் பெருத்த அதிர்வுடன் பின்னால் சென்றார். தன்னை மறந்து அரவிந்தன் முதுகுப்புறமாய் அவனை ஒட்டிக்கொண்டு நின்று பார்க்கத் தொடங்கினாள் பாரதி. அரவிந்தனிடமும் விதிர்ப்பு.

பாம்பிடமும் பெரும் சீற்றம்.

அப்போது கார் ஒன்று வந்து நிற்கும் அரவம்.

காரிலிருந்து சாந்தப்ரகாஷும், சாருபாலாவும் ஜமீன் பங்களாவின் வயதான வாட்ச்மேன் தாத்தாவோடு இறங்கி வந்தபடி இருந்தனர்!

உள் நுழையும்போதே தாத்தா, பெட்டியையும் பெட்டியின் மேல் பாம்பையும் பார்த்துவிட்டு அப்படியே ஓடி வந்து பெட்டி முன், ‘`சாமீ நீங்களா... பெட்டிக்குக் காவலா இங்கையே வந்துட்டீங்களா?” என்றபடியே நெடுஞ்சாண் கிடையாக விழுந்தார். சாந்தப்ரகாஷும், சாருபாலா வுக்கும்கூட அந்தக் காட்சி அதிர்ச்சியைத்தான் முதலில் தந்தது. அதற்குள் விழுந்து எழுந்த தாத்தா,

“அம்மா... உங்க கொள்ளுப் பாட்டன்மா.. உழுந்து கும்புடுங்க. நீங்க கொடுத்து வெச்சவங்கம்மா... கொடுத்து வெச்சவங்க” என்றிட, சாருபாலா தயங்கி சாந்தப்ரகாஷைப் பார்த்தாள். அவன் சம்மதத்தை முகபாவனையில் தந்திட அவள் மண்டியிட்டு வணங்கினாள். சாந்தப்ரகாஷும் வணங்கினான்.

“நீங்களும் கும்பிடுங்க” என்று பாரதி, அரவிந்தனிடமும் சொன்னார் தாத்தா. பாரதி பதிலுக்கு முறைத்தாள். அரவிந்தனோ சற்று அசடு வழிந்திட, ஜெயராமன் மட்டும் அவரிடம் “நீங்க யார்... எதுக்கு இப்படி ஒரு விஷ ஜந்துவைக் கும்பிடச் சொல்றீங்க?” என்று கேட்க, சாந்தப்ரகாஷ் அதற்கு பதில் சொல்லத் தொடங்கினான்.

“இவர் எங்க பங்களா வாட்ச்மேன்... பிறந்தது, வளர்ந்ததெல்லாம் எங்க ஜமீன்லதான்... இப்பவும் எங்க பங்களாவுலதான் இருக்கார்” என்றான். அப்போது அந்த நாகமும் லிங்கத்தை விட்டுக் கீழிறங்கியது. அப்படியே ஊர்ந்து ஜன்னல்வழியாக வெளியேறவும் தொடங்கியது.

“அய்யா... சாமி... எங்க போறீங்க?” என்று பின்னாலேயே அந்த வாட்ச் மேன் தாத்தா சென்றும் பயனில்லை. பாம்பு தோட்டத்துப் புல்வெளியில் ஊர்ந்து மதில்சுவரைக் கடந்து போயே போய்விட்டது.

அவர்கள் அவ்வளவு பேருக்குமே ஒருவித இறுக்கம் தளர்ந்து அப்பாடா என்று ஆயிற்று. அரவிந்தன் அடுத்த நொடி லிங்கத்தைத் தொட்டுக் கீழே வைத்துவிட்டு உள்ளே பெட்டி மூடியைத் திறந்து பார்த்தான். ஏட்டுக் கட்டுகள், காய்ந்த வில்வ இலைகள், டைரி என்று எல்லாமே அப்படியே இருந்தன. அரவிந்தன் முகத்தில் ஒரு வெளிச்சம்.

“என்ன அரவிந்தன்... எல்லாம் சரியா இருக்கா?” என்று பாரதியும் கேட்டாள்.

“எல்லாம் இருக்கு... ஆனா பெட்டியை நான் லாக் பண்ணிட்டுதான் வந்தேன். எப்படித் திறந்ததுன்னுதான் தெரியல. யாரோ வந்து திறந்திருக்காங்க.”

“முதல்ல இந்த மருதமுத்து, பாட்டி, அடைக்கலம்மான்னு அவ்வளவு பேரையும் எழுப்பி என்ன நடந்ததுன்னு கேப்போம்” என்றபடியே பாரதி முத்துலட்சுமியை நோக்கி உள்ளே சென்றிட, அரவிந்தன், சாந்தப்ரகாஷ் தம்பதியரை சோபாவைக் காட்டி அமரச் சொன்னான். வாட்ச்மேன் தாத்தா உட்காராமல் அவர்களை ஒட்டி நின்றுகொண்டார்.

“நீங்களும் உட்காருங்க.’’

“இருக்கட்டும் தம்பி... எஜமானர் முன்னால உக்கார்ரதெல்லாம் தப்பு.”

“அதெல்லாம் அந்தக் காலம்... இப்ப உக்காரலைன்னாதான் தப்பு. உக்காருங்க...”

“இல்ல... என் சாமி பேரனும் எனக்கு சாமிதான்... பாத்தீங்கல்ல என் சாமிய? சர்ப்ப வடிவத்துல இப்பவும் நடமாடுறத..!”

- அவர் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்பதில் அரவிந்தனிடம் குழப்பம். ஜெயராமனோ மிக ஆழமான சிந்தனையில் இருந்தார்.

சாந்தப்ரகாஷும் அரவிந்தனிடம் பேச ஆரம்பித்தான்.

“சார் இந்த லிங்கம் இந்தப் பெட்டிக்குள்ளதான் இருந்ததா?”

“ஆமாம் சார்...”

“பெட்டியைத் திறந்தது நீங்கதானா?”

“யெஸ்... யெஸ்...”

“வெரி சாரி... சாருவுக்கு வாந்தியும் தலை சுத்தலும் ரொம்ப ஹெவியா இருக்கவும் டாக்டர் கிட்ட போக வேண்டியதாப் போச்சு. நௌ ஷி ஈஸ் ஆல் ரைட். இந்தப் பெட்டியை ஐடென்டிஃபை பண்ணத்தான் இவரையும் போய்க் கூட்டிக்கிட்டு வந்தோம்...”

“நீங்க இவர் கூட வரலைன்னாலும் பிரச்னை இல்லை. இந்தப் பெட்டி உங்க குடும்பச் சொத்துங்கறதுல எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. அதே சமயம் இந்தப் பொட்டி வந்ததுல இருந்து இங்க நடந்த சம்பவங்களை அதிசயம்னு சொல்றதா, இல்லை, சாதாரணம்தான்னு சொல்றதான்னு எங்களுக்குள்ள பெரிய குழப்பம்.”

“இங்க எங்க குடும்பத்துலயும் கிட்டத்தட்ட அதே மாதிரிதான் சார்... எங்களுக்கு 18 வயசுல ஒரு பையன் இருக்கான். ஆனா அவன்...” - சாந்தப்ரகாஷ் பேச்சுப் போக்கில் அவன் ஒரு திருநங்கையாக மாறிவிட்டதைச் சொல்ல முனைய, மிக வேகமாய் அவன் தோளைப் பற்றித் தடுத்த சாருபாலா, “இப்ப எதுக்கு அந்தப் பேச்செல்லாம்... நம்ம பெட்டிய வாங்கிட்டுக் கிளம்புவோங்க...” என்றாள்.

“இரு சாரு... நீ கன்சீவ் ஆகியிருக்கறது ஒரு ஆச்சர்யமான விஷயம்தானே... அதைச் சொல்ல வந்தேன்...” என்று சாந்தப்ரகாஷும் சமாளித்தான்.

இவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருந்தபோது தாத்தா மெல்ல நகர்ந்து சென்று அந்த வாளைப் பார்த்துவிட்டுத் திரும்பி வந்தவராய், “அம்மா... நம்ம குல தெய்வத்து வாளும் இங்க இருக்கும்மா... பெட்டிக்கு நம்ம சாமி மட்டுமில்ல - குல தெய்வமும் காவலா இருந்திருக்கு...” என்றார்.

“ஆமாங்கய்யா.. நான் போன முறை வந்தப்பவே பாத்துட்டேன். பாழாப்போன மசக்கை என்னை இப்ப பாடாப் படுத்துது. இல்லேன்னா இந்தப் பெட்டியை எடுத்துக்கிட்டுப் போய் அடுத்து என்ன செய்யணுமோ அதைச் செய்திருப்பேன் நான்...”

“எல்லாம் நல்லதுக்குத்தாம்மா.. ஒரு பிள்ளை இல்லாமப்போனாலும் இன்னொண்ணு முளைச்சிருக்கறதே நீங்க நம்பிக்கையோட இங்க வந்திருக்கறதாலதான்..! இதைக் காட்டுக்குக் கொண்டு போய் ஒப்படைக்கணும்னு சாமி சொன்னதை நான் கேட்டிருக்கேன்... பூஜையும் இல்லாம, காட்டுக்கும் போகாம பாதாள அறைலயே இது தங்கிட்டதாலதான் பல தப்புங்க நடந்திருச்சி... இனி அதுக்கு இடமில்லம்மா... இது சாதாரண லிங்கம் இல்லை... கேட்டதைக் கொடுக்கற லிங்கம்.’’

இறையுதிர் காடு - 50

‘`இதைப் பத்தித் தெரிய வர்றதே பெரிய புண்ணியம். அதைவிடப் பெரிய புண்ணியம் இதைப் பாக்கறது... அப்புறம் இதை பூஜிக்கறது! இது போகர் சாமி தன் கையால செய்த லிங்கம். அவர்தான் இதை நம்ம சாமி கிட்ட, அதாவது உங்க பாட்டன்மார்கிட்ட கொடுத்தாராம். அப்ப கூடவே ஒன்பது மரக்கன்றுகளையும் கொடுத்து விட்டாரு!’’

‘`நம்ப ஜமீன் பங்களா தோட்டத்துலதான் அதுகளும் மரமா இப்பவும் இருக்கு. ஒரு மரம்கூடப் பட்டுபோகவோ இல்ல கெட்டுப் போகவோ இல்லை. அதுல ஒண்ணு தேவதாரு! அந்த மரத்துல பாத ரட்சை செஞ்சு அதைப் போட்டுக்கிட்டு நடந்தா மூட்டு வலி காணாமப்போயிடும். எனக்கு வலி வந்தப்போ அய்யா, ஒடிஞ்சு விழுந்த ஒரு கிளைல இருந்து எனக்கு செருப்பு செஞ்சு கொடுத்து போட்டு நடக்கச் சொன்னாரு... சொன்னா நம்ப மாட்டீங்க... அதுக்கப்புறம் எனக்குக் கொஞ்சம்கூட வலியே இல்லை.”

- அந்த வாட்ச்மேன் தாத்தா பேச்சில் சொன்ன ஒவ்வொரு விஷயமுமே நம்ப முடியாதவைதான். ஆனால் அவர் பொய் சொல்லவில்லை என்று அரவிந்தன் மட்டுமல்ல, ஜெயராமனும் நினைத்தார்.

அப்போது முத்துலட்சுமி, மருதமுத்து, அடைக்கலம்மா மூவருமே பாரதியுடன் வந்தனர். வரும்போதே பாரதியிடம் ஆவேசப் புலம்பல்.

“அரவிந்தன்... அந்த திவ்யப்ரகாஷ்தான் நாம இல்லாதப்ப வந்திருக்காரு. இவங்களை யோகத் தூக்கத்துல தூங்க வைக்கறேன்னு தூங்க வெச்சிட்டு பெட்டியை அவர்தான் திறந்திருக்காரு...” என்றாள்.

அரவிந்தன் பதிலுக்கு முத்துலட்சுமியைப் பார்த்திட “ஆமாம் தம்பி... அவர்தான் வந்தாரு. கைய கால ஆட்டி என்னவோ பண்ணுனாரு - நான் நல்லாத் தூங்கிட்டேன். எங்களையெல்லாம் அவர் தூங்க வெச்சதே பெட்டிக்காகன்னு பாரதி சொல்லித்தான் தெரியும்...” என்று அப்போதும் கொட்டாவி விட்டாள் முத்துலட்சுமி.

“அது சரி... அவர் எப்படிப் பெட்டியைத் திறந்தார்... அது அவ்வளவு சுலபமில்லையே?” - என்று அரவிந்தன் உடனேயே கேட்க “அதுதான் அவருக்குன்னு ஒரு மைண்ட் பவர் இருக்குதே... எதிர்ல இருக்கறவங்க மனசுல இருக்கறதை அப்படியே சொல்றதுல அவர்தான் கில்லாடியாச்சே. பெட்டியைப் பார்த்து நடந்ததைத் தன் பவரால தெரிஞ்சுகிட்டு பெட்டியைத் திறந்திருக்கலாம்’’ என்றாள் பாரதி.

“அப்படித் திறந்தவர்தான் லிங்கத்தை எடுத்து மேல வெச்சிருக்கணும். அப்ப பாம்பு வந்து அவரை மேற்கொண்டு செயல்பட விடாமத் தடுத்திருக்குமோ?”

“இருக்கலாம்... சரி இப்ப இவங்க வந்திருக்காங்க, நாம என்ன செய்யப்போறோம்?”- அரவிந்தன் நேராக விஷயத்துக்கு வந்தான்.

“முதல்ல தூக்கிக் கொடுங்க. இவங்க எடுத்துக்கிட்டுப் போகட்டும். - துளியும் தயக்கமின்றிச் சொன்னாள் பாரதி. ஆனால் அரவிந்தன் சற்றுத் தயங்கினான். ஜெயராமனைப் பார்த்தான்.

“என்ன அரவிந்தன்... என்னைப் பாக்கறீங்க?”

“நீங்க எதுவுமே சொல்லாம மௌனமாவே இருக்கீங்களே சார்...”

“சத்தியமா இல்லை. அந்தப் பெட்டி ஒரு பொக்கிஷம். அதோட பணமதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேலே... அதை தயவு செய்து சாருபாலாவோட குடும்பம் கைல பாரதி கொடுத்துடப்போறா! அப்படிக் கொடுத்தா, அதை வேடிக்கை பார்த்தா நீங்க ஒரு புத்திசாலி பத்திரிகை ஆசிரியராகவும் இருக்க முடியாது.தயவுசெய்து எழுந்து வெளிய வாங்க.”

“எனக்கு என்ன சொல்றதுன்னுதெரியல அரவிந்தன்.”

“நான் ஒண்ணு சொல்லட்டுமா சார்...”

“சொல்லுங்க...”

இவங்க இந்தப் பெட்டிய நாளைக்கு வந்து எடுத்துக்கட்டும். அதுவரை இங்கயே இது இருக்கட்டுமே?”

“ஒரு நாள் இந்தப் பெட்டி இருக்கப்போறதால நமக்கு என்ன பெருசா நன்மை ஏற்பட்டுடப் போகுது?”

ஜெயராமனும் பாரதியின் முடிவுக்கு சாதகமாகக் கேட்டிட, அரவிந்தன் அடுத்து முத்துலட்சுமியைத்தான் பார்த்தான்.

“பாட்டிம்மா... நீங்க பூஜை செய்ய ஆசைப்பட்டீங்க இல்ல...” என்று கேட்டான். அவளுக்கும் புரிந்தது.

“ஆமாமா... அபூர்வமான, தேடி வந்த இந்த லிங்கத்தை இன்னும் யாரும் இங்க பூஜிக்கவே இல்லை. முதல்ல இப்ப அதைத்தான் செய்யணும்” என்றாள்.

அப்போது ஜெயராமன் போனில் திவ்யப்ரகாஷ்!

ஜெயராமனே அதைத் துளியும் எதிர்பார்க்கவில்லை.

“சொல்லுங்க ஜி... என்ன விஷயம்?”

“ரொம்ப முக்கியமான விஷயம்தான். நீங்க இப்ப பாரதி வீட்ல இருக்கறதும் தெரியும். அங்க ஒரு பெட்டி இருந்து அதைப் பாத்துதான் பேசிக்கிட்டிருக்கீங்க. சரியா?”

“இது என்ன கேள்வி ஜி, நீங்கதான் மைண்ட் ரீடிங் கிங் ஆச்சே? கொஞ்சம் முந்தி இந்த வீட்டுக்கும் வந்து பெட்டியைத் திறக்கத் திட்டமிட்டிருந்திருக்கீங்க போல இருக்குதே?”

“நீங்களே போன் பண்ணிக் கேப்பீங்கன்னு எதிர்பார்த்துக்கிட்டிருந்தேன். பண்ணல! அதான் நானே பண்ணிட்டேன். ஐ ஆம் சாரி. என்னை ஒரு திருடன் மாதிரி இப்ப அங்க பாரதி நினைச்சுக்கிட்டிருக்கலாம். ஆனா நான் அப்படிப்பட்டவன் கிடையாது. எந்த நிலைலேயும் ஒரு நல்ல யோகி ஈனத்தனமான வேலைகளைச் செய்ய மாட்டான்.”

“அப்ப பெட்டியைத் திறந்து லிங்கத்தை எடுத்ததெல்லாம் என்ன செயல்? அதுக்கு முந்தி எல்லாரையும் தூங்க வெச்சது என்ன செயல்?”

“பக்தி... அதைத் தவிர வேறு எதுவுமில்லை.’’

இறையுதிர் காடு - 50

“பக்தியா, என்ன உளறல் இது?”

“ப்ளீஸ்... கொஞ்சம் யாரும் இல்லாத இடத்துக்கு வந்து என்கூடப் பேசுங்க. நான் சில விஷயத்தை உங்ககிட்ட பகிர்ந்துக்கணும்.”

“சும்மா பேசுங்க... இங்க வில்லங்கமா யாரும் இல்லை.”

“திரும்பவும் சொல்றேன். தனியா வாங்க! பல உயிர்கள் இனி போகப்போகுது. இதை நான் ஸ்பீக்கர் போன்ல எல்லாருக்கும் கேட்கும்படி பேச முடியுமா?”

“மிரட்டாதீங்க ஜி...”

“சத்தியமா இல்லை. அந்தப் பெட்டி ஒரு பொக்கிஷம். அதோட பணமதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேலே... அதை தயவு செய்து சாருபாலாவோட குடும்பம் கைல பாரதி கொடுத்துடப்போறா! அப்படிக் கொடுத்தா, அதை வேடிக்கை பார்த்தா நீங்க ஒரு புத்திசாலி பத்திரிகை ஆசிரியராகவும் இருக்க முடியாது.தயவுசெய்து எழுந்து வெளிய வாங்க.”

- திவ்யப்ரகாஷ் கெஞ்சினார். ஜெயராமனும் எழுந்து, ‘‘ஒன்மினிட்’’ என்று தனியே ஒதுங்கினார்.

“சொல்லுங்க.”

“குட்...”

“பாராட்டெல்லாம் பிறகு. நீங்க எவ்வளவு பெரிய மனிதர், இப்படியா கீழ்த்தரமா நடந்துக்குவீங்க?”

“நான் எப்பவும் கீழ்த்தரமால்லாம் நடக்கறவன் கிடையாது. ஒருகோணத்துல நான் செய்தது தப்புதான். ஆனால் பல கோணங்களில் சரி. என்னை உடையார் தொடர்ந்து பார்க்கவிடலை! அவர் காவல் இருக்கிறதும் நல்ல விஷயம்தான்.”

“தயவுசெய்து விஷயத்துக்கு வாங்க!”

“வர்றேன். அதுகிட்ட நீங்க இப்ப எதையாவது கேளுங்க. எதை வேணும்னாலும் கேளுங்க. உடனே கிடைக்கும். இல்லைன்னாலும் கிடைக்கிற வழியாவது தெரியும். அதன்பிறகு பெட்டியை சாருபாலா குடும்பத்துகிட்ட கொடுக்கற முடிவுக்கு உங்களால வர முடிஞ்சா வாங்க... எனக்கு ஆட்சேபனையில்லை.”

- திவ்யப்ரகாஷ் பேச்சை முடித்துக்கொள்ள, ஜெயராமன், பந்து இப்போது தன் கையில் இருப்பதை உணர்ந்தபடியே திரும்பி வந்தார். பெட்டி மேல் உள்ள லிங்கம் அருகிலும் போய் நின்றார். மனதுக்குள் என்ன கேட்கலாம் என்று ஒரு கேள்வி. கூடவே ஒரு கல்லிடம்போய் பரிசோதனைக்காகக் கேட்பதுகூட இழிவு என்பதுபோல் ஓர் எண்ணம்.

இறுதியாக ஜெயராமன் ஒரு முடிவுக்கு வந்தார்! அது..?

- தொடரும்