மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இறையுதிர் காடு - 51

இறையுதிர் காடு
பிரீமியம் ஸ்டோரி
News
இறையுதிர் காடு

அன்று கன்னிவாடி மலைக்குகைக்குள் இருந்த கிழார்களும், தான் அழைத்து வந்திருந்த நவமரும் கூடுதலாய் கருமார்களும் லிங்கத்தையே பார்த்தபடி மௌனமாகிவிட்டதை போகரும் கவனித்தார்.

இறையுதிர் காடு - 51

வருக்குள்ளேயும் குளத்து நீர் மேல் விழுந்த கல் துண்டு வட்டச் சரியைகளை உருவாக்கியதுபோல் ஒரு சலனம்.

‘லிங்கத்தைப் பெருமைப்படுத்து வதாகக் கருதி ரகசியமாகத் தொடங்க வேண்டியவற்றைப் போட்டு உடைத்து விட்டேனோ?’ தனக்குள் அவர் கேட்டுக்கொண்டே மெல்ல வெளியேறத் தொடங்கினார். குகை வாசல் வரை சென்றவர் கறுப்பு நிழலுருவம்போல தெரிந்த நிலையில் “எல்லோரும் உறங்கி ஓய்வெடுங்கள். நான் காலை சந்திக்கிறேன். உங்கள் அன்றாடச் செயல்பாடுகளில் எந்த மாற்றங்களையும் செய்துகொள்ள வேண்டாம். எப்போதும்போல் அதிகாலை கண்விழித்து, காலை கடன் முடித்து, தியானப்பயிற்சியையும் முடித்திருங்கள். நான் வந்துவிடுவேன்.”

சொல்லிவிட்டு வெளியேறினார். அவர் வெளியேறவும் உள்ளே இருந்த அவ்வளவு பேரிடமும் ஒரு தளர்ந்த தன்மை. கார்மேகக்கிழார் வயது மூப்பு காரணமாக குளிரை மிக உணர்ந்தபடியால், லிங்க உருவை வாட்டுவதன் நிமித்தம் கருமார்கள் மூட்டிய உலைக் கணப்பருகே சென்று, அதன் தீக்கங்குகளை வாயால் ஊதி கரித்துண்டுகளைச் சிவந்து எரியச் செய்து அதனால் உருவான வெப்பத்தைக் கைகளில் படும்படி கைகள் இரண்டையும் நீட்டிப் பிடித்தார்.

“அப்படியா குளிர்கிறது?” என்று கேட்டபடியே வந்தார் வேல்மணிக்கிழார்.

“வயதாகிவிட்டதல்லவா?”

“அப்படியானால் நீங்கள் இந்த லிங்கத்திடம் நித்ய இளமையைக் கேட்கலாம்… அது கிடைத்துவிட்டால் இதுபோல் குளிரெடுக்காது” என்று எடுத்துக் கொடுத்தார். வேல்மணிக்கிழார் அப்படிச் சொன்னதோடு அங்கே ஒரு விவாதத்தையும் மறைமுகமாய்த் தூண்டிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அதன் எதிரொலி “இளமையையெல்லாமா கேட்க முடியும்?” என்று வேல்மணிக்கிழாரை ஊன்றிப் பார்த்தான் ஆழிமுத்து.

“என்ன அப்படிக் கேட்டுவிட்டாய்… இது தெரியாதா உனக்கு?” என்று திருப்பிக் கேட்டார் வேல்மணிக்கிழார்.

“அது எப்படி போன காலம் திரும்ப வரும்?”

“அது வராது… ஆனால், நாம் அதை நோக்கித் திரும்ப முடியும்?”

“அதுதான் எப்படி?”

“அது சித்த ரகசியம்...”

“இப்படிச் சொன்னால் எப்படி?”

“அப்படித்தான்… ரகசியம் என்றால் உனக்குப் பொருள் தெரியாதா? எவருக்கும் தெரியாமல் இருப்பதற்குப் பேர்தான் ரகசியம்.”

“சித்த ரகசியம் என்றால் சித்தர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டுமல்லவா?”

“அவர்களுக்குத் தெரிந்திருப்பதால் அல்லவா அதற்கு சித்த ரகசியம் என்றே பெயர் வந்தது?”

“இப்படியே பந்து ஒன்றை மாறி மாறி உருட்டுவதுபோல் உருட்டிக்கொண்டிருந்தால் எப்படி? சற்று விளக்கமாகச் சொல்லுங்கள். போகர் பிரான் சொன்னதுபோல் இந்த லிங்கம் நம் விருப்பங்களையெல்லாம் நிறைவேற்றுமா?”

“சந்தேகமா?”

“ஏன் உங்களுக்கு அம்மட்டில் துளியும் சந்தேகமில்லையா?”

“இல்லை… இல்லவே இல்லை.”

“எதை வைத்து இவ்வளவு உறுதியாக நம்புகிறீர்கள்?”

“நம் குருவாகிய போகர் பிரானை வைத்துதான்...”

“விளக்கமாகச் சொல்லுங்கள்.”

“அதற்கு முன் நம் குருவின் வயதை உங்களில் யாராவது ஒருவர் சரியாகச் சொன்னாலும் நான் அவருக்கு அடிமை.”

``எதற்கு இவ்வலவு பெரிய வார்த்தை? நீங்கள் அடிமையாகத் தேவையில்லை. இந்த இரவில் உறங்கும் முன் நாம் விவாதிக்கவும் சுவையான விஷயம் அகப்பட்டுவிட்டது - அது போதும்.”

“சரி… வயதைச் சொல்லுங்கள் பார்ப்போம்” கார்மேகக் கிழார் கைகள் இரண்டையும் கணப்பில் காட்டியபடியே கேட்டார்.

“ஒரு அறுபது வயதிருக்குமா?” மருதன் முந்தினான். மறுப்போடு அசைந்தது கிழாரின் சிரம்.

“எழுபது..?” - இது மல்லி.

“இல்லை.”

“எண்பது?” - இது அகப்பை முத்து.

“பத்துப் பத்தாகவா கூட்டுவீர்கள்… இறுதி வாய்ப்பு! சரியாகச் சொல்ல முடிந்தால் சொல்லுங்கள். இல்லா விட்டால் நான் சொல்லிவிடுவேன்.”

“எங்களால் முடியாதென்றே தோன்றுகிறது - நீங்களே கூறி விடுங்கள்...”

“புத்திசாலிகள்… நம் போகர் பிரான் வயது அவர் கூறிய கணக்குப்படி நூற்றிருபது!”

“நூற்றிருபதா… நம்ப முடியவில்லையே..?”

“உண்மையில் நூற்றிருபதுகூட இல்லை… அந்த எல்லையை அவர் கடந்து பலப்பல ஆண்டுகள் ஆகி விட்டன. என் யூகம் சரியாக இருக்குமானால் நம் கணக்கிற்கு அவர் நூற்றைம்பதைக் கடந்துவிட்டிருக்க வேண்டும்.”

“என்ன சொல்கிறீர்கள், இது எப்படி சாத்தியம்?”

“அதுதான் சித்த ரகசியம்...”

“திரும்ப அதே பதிலா?”

“ஆம்... அவர் காயகற்பங்களால் தன் உடலை நிலை நிறுத்திக்கொண்டுவிட்டார்.”

“கற்பங்களுக்கு அப்படியொரு சக்தியா?”

“காயமாகிய உடம்பைக் கல்போல் உறுதி மிக்கதாய் ஆக்குவதால்தானே அதற்கு அந்தப் பெயர்…”

“அந்தக் கற்பம் நமக்கெல்லாம் கிடைக்குமா?”

“கிடைத்தாலும் பயன்படாது…”

“எதனால் அப்படி?”

“சித்த உடம்புக்கே அது பயன்படும்… நம் உடம்பெல்லாம் சாகப்போகும் செத்த உடம்பு...”

“சந்ததமாய்ப் பேசினால் எப்படி? நம் உடம்பு சித்த உடம்பாக என்ன வழி… உங்களுக்குத் தெரியுமா?”

“மனதை ஒருபுள்ளியில் நிற்க வைக்க வேண்டும். முடியுமா?”

“நிற்க வைப்பதென்றால்?”

“எந்த நினைப்பும் கூடாது. இதோ என் விரல் நகம் - இதைப் பார்த்தால் இது மட்டுமே மனதில் இருக்க வேண்டும். இயலுமா?”

“பயிற்சி செய்தால் நிச்சயம் முடியும் - போகர் பிரானே தினமும் நம்மை அதற்காகத் தானே தயார்படுத்துகிறார்?”

“அப்படியானால் அப்படி ஒரு முடிந்த நிலைக்கு வந்த பிறகு இந்த சித்த ரகசியம் பற்றிப் பேசுவோம். அப்போது கூட எவ்வளவு புரியும் என்று கூற முடியாது...”

“அப்படியானால் மனதை அடக்கினால்தான் அந்த ரகசியம் புரியுமா?”

“ஆம்...”

இறையுதிர் காடு - 51

“ஆனால் இந்தப் பாழும் மனம் அடக்க முற்படும்போதெல்லாம் அனல் பாத்திரப்பால் போல் பொங்கிப் பொங்கியல்லவா எழுகிறது?”

“எந்தக் காளை எடுத்தவுடன் ஒருவருக்குப் பிடிபட்டிருக்கிறது? அதை அடக்க நாம் முயல்வது போன்றதே மனவடக்கமும்...”

“அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்பதுபோல் இருக்கிறது.”

“எப்படி வேண்டுமானால் கூறிக்கொள்ளுங்கள்.”

“அதுசரி… இந்த லிங்கம் நாம் கேட்பதையெல்லாம் தரும் என்றாரே, அதை நாம் எப்படி எடுத்துக்கொள்வது?”

“அப்படியானால் லிங்கம் தராது என்பது உங்கள் கருத்தா?”

“ஒன்பது பாஷாணங்களால் ஆன ஒரு உலோகம்… அது எப்படி நம் இச்சைகளை நிறைவேற்றும்? பெரிய புதிராக அல்லவா உள்ளது?”

“லிங்கத்தை வணங்கி வழிபடுகின்றவர்களுக்கு முக்தி மோட்சமே கிடைக்கும்போது அற்பமான இந்த மண்ணில் ஆசைகள்தானா நிறைவேறாது?”

“இதை மாயம் எனலாமா?”

“சித்தத்தில் மாயத்திற்கெல்லாம் இடமில்லை.’’

“அது மாயமில்லை என்றால் வேறு என்ன?”

“இதே கேள்வியை நான் போகர் பிரானிடம் ஒரு சமயம் கேட்டபோது அதை அவர் சித்தச் செறிவு என்றார்...”

“சித்தச் செறிவா… இது என்ன புதிய சொல்?”

“புதிய சொல்லோ, பழைய சொல்லோ… மாயமில்லை, அதுமட்டும் உண்மை...”

சித்தச் செறிவு என்பதை எப்படிப் புரிந்துகொள்வது?

“சித்தனானால் புரியும்.”

“புரிந்தால் அல்லவா சித்தனாகவே முடியும்?”

“குழப்புகிறதே…”

இனிப்புச் சத்து அதிகரித்துவிட்டிருந்தால் கட்டை விரலை அடுத்த இரண்டாவது விரல் நகம் வரிகள் கொண்டு கொரகொரவென்றிருக்கும். அவ்வாறு இருந்தாலே போதும் உடம்பில் இனிப்புச் சத்து மிகத்தொடங்கிவிட்டது என்பது பொருள்.

“ஆம்… குழம்பத்தான் செய்யும்... கலங்கவும் செய்யும். இறுதியில் ஏற்படும் தெளிவுக்குள் இருப்பதே சித்த ரகசியம்...”

“இப்படிப் பேசினால் முடிவேற்படப் போவதில்லை. இதற்காக நாம் சித்தனாவதும் இப்போதைக்கு சாத்தியமில்லை...”

“ஒரே வழிதான் உள்ளது... இந்த லிங்கம் நம் விருப்பங்களை நிறைவேற்றுகிறதா என்று பார்த்துவிட்டு இதனிடமே எது அந்த சித்த ரகசியம் என்பதையும் கேட்டுத் தெரிந்து கொண்டுவிட வேண்டியதுதான்...”

இப்படிப் பலவாறு பேசியபடியே உறங்கிப் போனார்கள்.

மறுநாள்!

சூரியக்கதிரின் உள்வீச்சில் எல்லோரிடமும் ஒரு விதிர்ப்பு. கண்களைக் கசக்கிக்கொண்டு எழுந்தனர். கைகளைப் பரபரவென்று தேய்த்துவிட்டுக்கொண்டு பின் இரு கைகளையும் உற்றுப் பார்த்தனர். பின் “போகர் பிரான் திருவடிகள் சரணம் - போகர் பிரான் புகழ் வாழ்க” என்று பிறர் காதில் விழும்படி கைகளைக் கூப்பி வேண்டிக்கொண்டனர். எழுந்து வெளியேறி கருவேலங்குச்சி, வேம்புக்குச்சி, ஆலவிழுதின் புழு போன்ற நுனி விழுதுகளைத் தேடிப்பிடித்துப் பற்களைத் துலக்கி ஓடை நீரில் வாய் கொப்பளித்தனர்.

அப்படிக் கொப்பளிக்கையில் மல்லி என்பவன் மட்டும் வரிசையில் ஒன்றன் பின் ஒன்றாய் இரு யானைகள் நிற்கும் தூரத்திற்கு வாய் நீரை அரை வட்டமாய் உமிழ்ந்து தன் விசைச் சக்தியைக் காட்டினான்

அதன்பின் கைகளைச் சேர்த்து நீரை அள்ளிச் சென்று மலைத்தாவரங்களில் அதிகம் நீர் கிடைக்காத இடத்தில் முளை விட்டு வளரத் தத்தளித்தபடி இருக்கும் தாவரங்களுக்கு அந்த நீரை விட்டனர். இவை அன்றாடக் கடமைகள். அதேபோல மலம்கழிக்கச் சென்றால் கலயத்தில் நீருடன், கரத்தில் மண் கெல்லியும் எடுத்துச் செல்ல வேண்டும். மலத்தைப் பெருவெளியில் மேல் நிலத்தில் கழிக்கக் கூடாது. மண் கெல்லியால் ஒரு சாண் அளவிற்குக் குழி பறித்து அதில் கழிக்க வேண்டும். பின் கெல்லியால் தோண்டிய மண்ணைப் போட்டு மூடி விட வேண்டும். பிறகு கலய நீரால் சுத்தம் செய்துகொள்வதோடு இரு கால்களையும் சுத்தமாய்க் கழுவி சுத்தம் செய்துகொள்ள வேண்டும் இவ்வேளையில் ஒரு காலைக் கொண்டு இன்னொரு காலை நன்கு மிதித்தும் தேய்த்தும் குதிங்காலால் விரல்களின் மேல் அழுத்தமும் கொடுத்து உடம்பின் உள்ளுறுப்புகளைத் தூண்டிவிட வேண்டும். படுக்கை வாட்டில் செயல்பட்ட அவையெல்லாமே இப்போது நின்ற நிலையில் நன்கு செயல்படத் தொடங்கும்.

இவ்வேளையில் விரல் நகங்கள் வழுவழுவென்று பவழம்போல் இருக்க வேண்டும். கணையம், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகள் எல்லாமே சிலிர்த்தெழுந்து செயல்படத் தொடங்கும். நகங்களில் வழுவழுப்பு நீங்கி வரிகள் விழுந்தால் உள்ளுறுப்புகளில் சிக்கல் வந்து விட்டது என்று பொருள். குறிப்பாக இனிப்புச் சத்து அதிகரித்துவிட்டிருந்தால் கட்டை விரலை அடுத்த இரண்டாவது விரல் நகம் வரிகள் கொண்டு கொரகொரவென்றிருக்கும். அவ்வாறு இருந்தாலே போதும் உடம்பில் இனிப்புச் சத்து மிகத்தொடங்கிவிட்டது என்பது பொருள். இவ்வாறு கண்டமாத்திரத்தில் நித்ய கல்யாணிப் பூவைப் பறித்து வெந்நீரில் போட்டு வேக வைத்து அந்த நீரை ஒரு மண்டலம் குடித்து வரவும் பெரிய அளவில் இனிப்புச் சத்து உடம்பில் இருந்தாலும் நீங்கி, சமநிலை ஏற்பட்டுவிடும்.

இதற்கு போகர்பிரான் ‘தன் வைத்தியம்’ என்று பெயர் சூட்டியுள்ளார். யாரெல்லாம் அதைப் பின்பற்றுகின்றனர் என்றும் பார்ப்பார். தனக்குத் தானே செய்துகொள்ளும் வைத்தியத்தையே போகர் பிரான் தன் வைத்தியம் என்பார். சிலர் அந்தக் காலைவேளையில் தன் வைத்தியமும் செய்துகொண்டிருந்தனர்.

அகப்பை முத்துவின் கண்களில் பீளை தட்டியிருந்தது. உடம்பில் உஷ்ணம் கூடியதோடு தூக்கத்தில் கனவுகள் மிகுந்தால் பீளை தட்டும். இதற்கு வில்வக் கொழுந்தையும் வேப்பங்கொழுந்தையும் காலை வெறும் வயிற்றில் நன்கு மென்று தின்றிட உஷ்ணம் குறைந்து பீளையும் விலகும். இதெல்லாம் சின்னச் சின்ன வைத்திய முறைகள். அகப்பை முத்து அதன் நிமித்தம் கீழேயுள்ள லிங்கக் குகை வரை சென்று அங்கு தல விருட்சமாய் வளர்ந்திருக்கும் வில்வக்கொழுந்தைப் பறித்து மென்று தின்றான்.

அப்போது, முதல் நாள் இறை படையலிட்டு நேர்த்திக்கடன் செலுத்திய உழவர் குடும்பத்தவர்கள் புல்கட்டிலிருந்து கயிறு திரித்தபடி இருந்தனர். அறுவடை நிலத்தின் வரப்பு வளைகளில் அந்த உழவர் குடும்பத்துச் சிறுவர்கள் நண்டுகளைப் பிடித்துப் பானையில் போட்டுக்கொண்டிருந்தனர். வளை நண்டுகள் மாமிச உணவில் மிக ருசியானவை. அகப்பை முத்து அதை நின்று கவனித்தான்! அவன் நாக்கில் எச்சில் ஊறியது. அவன் தாய் மாமிச உணவுகளைச் சமைப்பதில் நிபுணத்துவம் பெற்றவள். ஆனால் அகப்பை முத்து போகரின் மாணவனாகவும் ‘அதையெல்லாம் விட்டுவிட வேண்டும். சைவ நன்னெறியைப் பின்பற்ற வேண்டும்’ என்று சொன்னதோடு சத்தியமும் வாங்கிவிட்டார்.

இறையுதிர் காடு - 51

இப்படித்தான் மாமிச உணவின் நிமித்தம் ஆசைப்படுவதை அவர் உணர்ந்தால் கொட்டாரத்திலிருந்து வெளியேற்றக்கூடச் செய்யலாம். எனவே அதை கவனிப்பதை விடுத்து மீண்டும் குகையை நோக்கி நடக்கலானான்.

மாமிசம் என்பது மா இம்சம் என்பதன் சுருக்கம் என்பார் போகர். அதாவது பெரிய துன்பம் என்றும் கூறலாம். ஓர் உயிரின் கூடாய் இருந்த உடலை வெட்டிக் கூறு போட்டு உணவாக அதைக் கருதத் தொடங்குவது பண்பட்ட மனதுக்கு உகந்ததல்ல என்றும் கூறுவார். வெட்டப்பட்ட உடல் திசுக்களில் அதில் வாழ்ந்த உயிரின் துடிப்பும் தவிப்பும் வேறுவிதமாய்ப் படிந்திருக்கும். அதை நாம் உண்டிட நமக்குள் அது விரிவடையும். இதனால் நம் புலன்கள் நம்மால் கட்டுப்படுத்த இயலாத அளவுக்கு வலிமை மிக்கதாகிவிடும். எனவே புலனடக்கம் என்பது கடிதாகிவிடும். புலன்களை அடக்காமல் சித்தத்தில் எதையும் எவரும் அடைய இயலாது என்றும் கூறுவார். அடங்காப் புலன்கள் எளிதில் பாவங்கள் புரியும். எனவே புலன்களை மனோ பலத்தால் கட்டுக்குள் கொண்டு வர போராட வேண்டியிருக்கும் எனவும் கூறுவார். தாவரங்களுக்கும் உயிர் உண்டு! ஆனால் அவை நடமாடித் திரிபவை அல்ல… எனவே அவற்றுக்கு எண்ணப்பதிவுகள் கிடையாது. ஆயினும் இலைகளை உண்டு வாழ்வதை மனிதனின் மிகக் குறைந்த தீமைச் செயல் என்றும், இதற்கான பரிகாரமே விருட்சங்களை வளர்ப்பதும் அவற்றை வணங்குவதுமாகும் என்பார்.

அதை எல்லாம் நினைத்தபடி அகப்பை முத்து குகையை அடைந்தபோது மற்ற எல்லோருமே அன்றைய நாளுக்கான கடமையைச் செய்ய நெற்றியில் நீறுடன் தயாராக இருந்தனர். போகர் பிரானும் கச்சிதமாக வந்து சேர்ந்தார். அவரோடு கொட்டார உணவு வகைகளும் வந்திருந்தன.

இளநீர், பழத்துண்டங்கள், மிளகு வெள்ளரி, பணியாரம், இஞ்சித்துவையல், கம்பஞ்சோறு, கட்டித்தயிர், பனை வெல்லத்துண்டு, நீராகாரம், மலைவாழை’ என்று அநேக பதார்த்தங்கள்.

அவற்றை வணக்கத்தோடு உண்டுவிட்டு போகர் இடும் கட்டளைக்கேற்பவும் செயல்படத் தொடங்கினர்.

ஒரு நாள்…

இரு நாள்…

மூன்று நாள்…

- என்று நாள்கள் கடந்து செந்தாடுபாவையும் நவபாஷாணமும் கலந்த கலவை காய்வதும் பின் பொடியாவதுமாய் மாறி மாறி வினைக்கு ஆட்பட்டு, இறுதியில் சிட்டிகைத் தங்கத்துடன் உதக நீர் கலப்புடன் குழம்பு நிலைகண்டு, பின் அதுவும் மெழுகு லிங்க துவாரத்துக்குள் புகுந்து மெழுகை உருக்கி வெளியேற்றி விட்டு, அந்த இடத்தில் தான் அடைந்துகொண்ட நிலையில் நவபாஷாணலிங்க வடிவம் மண் மூடிய அச்சாகக் காட்சி தந்தது. மூடிய மண்ணை உடைத்திட உள்ளே பாஷாண லிங்கமும் காட்சி தரும்!

அந்த நிகழ்வும் நடந்து பாஷாணலிங்கம் காட்சியளித்தபோது புலி ஒன்றின் உறுமல் சப்தம். குகைவாசலில் முன்பே வந்து சென்றிருந்த புலிதான் நின்றுகொண்டிருந்தது!

இன்று தனக்குள் தடுமாறி விட்டு இறுதியாக அந்த லிங்கத்தைப் பரிசோதிக்கத் தயாரானார் ஜெயராமன். அவரது மௌனம் மற்றும் யோசனையை பாரதியும், அரவிந்தனும் குழப்பத்தோடு பார்த்தனர். சாந்தப்ரகாஷுக்கும், சாருபாலாவுக்கும் ஏமாற்றமாய் இருந்தது. கோபமும் வந்தது. உடைத்துப் பேசிவிடுவது என்று முடிவுசெய்து வாயைத் திறக்கப் பார்த்த சாந்தப்ரகாஷை அந்த வாட்ச் மேன் தாத்தா முகபாவனைகளாலேயே கட்டுப்படுத்தி, ‘கொஞ்சம் அமைதியாக இருங்கள்’ என்றார்.

அதற்குள் ஜெயராமனும் மனதுக்குள் அந்த லிங்கத்தை உற்றுப்பார்த்தவராக ‘இங்கே இப்போது இந்தப் பெட்டியைக் கேட்டபடி நிற்கும் இந்த இரண்டு பேரும் நாங்கள் எதுவும் சொல்லாமலே நாங்கள் நாளைக்கு வருகிறோம் என்று கிளம்ப வேண்டும். அப்படிக் கிளம்பிவிட்டால் உனக்கு சக்தி இருக்கிறது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்’ என்று எண்ணி முடித்தார். அப்படி நினைத்து முடிப்பதற்குள் அவருக்கே போதும் போதுமென்று இருந்தது. வேறு எதை நினைப்பது, எதைக் கேட்பது என்பதிலும் குழப்பம்.

சாந்தப்ரகாஷும் சட்டென்று வாய் திறந்தார்.

“சார்… நீங்க யோசிக்க வேண்டாம். நான் நாளைக்கே வந்து இந்தப் பெட்டியை எடுத்துக்கறேன். நீங்க பெரிய மனசு பண்ணி கொடுத்தாதான் உண்டுன்னு எனக்கும் தெரியும். பாட்டியம்மா ஆசைப்பட்டபடி அவங்க ஆசை தீர பூஜை செய்துட்டே தாங்க… உங்களுக்கு எதுக்கு குறை?” - என்றான். சாருபாலாவிடம் எந்த மாற்றமும் பேச்சும் இல்லை.

“நல்ல முடிவு... காரணமில்லாம இந்த சாமி இங்க வரலை. இதெல்லாம் ஒரு கணக்கு. சுருக்கமா சொல்லப்போனா நல்லகாலம் இருக்கறவங்களுக்குத்தான் இந்த சாமி பத்தியே தெரியவரும். உங்களுக்கும் இனி நல்ல காலம் தான். நீங்க நல்லா கும்புட்டுக்குங்க... வேண்டிக்குங்க…” என்று வாட்ச்மேன் தாத்தாவும் கூறவும் ஜெயராமன் முகத்தில் பலமாய் ஒரு பிரகாசம்.

அவர்களும் கிளம்பிச் சென்றுவிட, தூக்கம் கலைந்து எழுந்து வந்திருந்த மருத முத்துவும், அடைக் கலம்மாளும் சற்று மந்த கதியில் பார்த்தனர்.

“என்ன, நல்ல தூக்கமா… பாதியில எழுப்பிட்டேனா?” - மெல்லிய கோபத்தோடு கேட்டாள் பாரதி.

“மன்னிச்சிடுங்கம்மா… இப்படியெல்லாம் தூக்கம் வரும்னு எனக்குத் தெரியாது...”

“ஆமாம்மா… அவர் கூட பேசும்போது தப்பாவே எதுவும் தோணலம்மா...”

“சரி சரி, போய் வேலைய பாருங்க. இன்னொரு தடவை இப்படி ஏமாந்து தூங்காதீங்க. உழைச்சுக் களைச்சுத் தூங்குங்க.” - பாரதியின் பேச்சு மன்னிப்பது போலவும் இருந்தது. கண்டிப்பது போலவும் இருந்தது. அவர்களும் விலகிக் கொண்டனர். முத்துலட்சுமி மௌனமாகப் பார்த்தபடியே இருந்தாள்.

“உனக்கு நான் தனியா சொல்லணுமா?”

“சொல்ல வேண்டியத சொல்லலியேடி...”

“என்ன சொல்லணும்?”

“உங்கப்பன் இப்ப எப்படி இருக்கான்?”

“ஓ… அதுவா - ஐ ஆம் சாரி - நல்லாருக்கார் பாட்டி.”

“பேசறானா?”

“இல்ல… ஆனா கூடிய சீக்கிரம் பேசிடுவார். இனி உயிருக்கெல்லாம் எந்த ஆபத்தும் இல்லை...”

“அப்ப அந்த ரசமணி தன் சக்தியைக் காமிச்சிடிச்சின்னு சொல்லு...”

“அதெல்லாம் தெரியாது… உன் பிள்ளை நல்லா இருக்கார்… ஆஸ்பத்திரிக்குப் போகும்போது கூட்டிக்கிட்டுப் போறேன்...”

“ரொம்ப சந்தோஷம்… அப்புறம்...”

“என்ன அப்புறம், விழுப்புரம்..?”

“இந்த லிங்கத்தை பூஜை அறைக்குக் கொண்டு போய் வெச்சு பூஜை செய்திடட்டுமா?”

தயங்கித் தயங்கித்தான் கேட்டாள் முத்துலட்சுமி. “நீங்க எடுத்துகிட்டுப் போங்கம்மா...” என்று இடையிட்டான் அரவிந்தன். அடுத்த நொடியே ஒரு குழந்தையைத் தூக்குவதுபோல் அந்த லிங்கத்தைத் தூக்கிக்கொண்டாள் முத்துலட்சுமி. பூஜை அறை நோக்கியும் வேகமாய் நடந்தாள்.

பாரதியிடம் இனம்புரியாத ஒரு சலிப்புணர்வு. அரவிந்தன் பெட்டியை மெல்ல மூடிவிட்டு ஜெயராமனைப் பார்க்க, அவர் நடந்து சென்று சோபாவில் அமர்ந்தார். இருவரும் எதிரில் அமர்ந்துகொண்டனர்.

“என்ன சார் ரொம்ப நேரமா அமைதியாவே இருக்கீங்க, போன்ல அந்த திவ்யப்ரகாஷ் வந்த மாதிரி தெரிஞ்சதே?”

“ஆமாம் அரவிந்தன்… அவரே தான்..!”

“என்ன சொன்னார் சார்… இங்க வந்து பெட்டியைத் திறந்ததெல்லாம் அவர்தானாமா… ஏத்துக்கறாரா?”

“ஏத்துக்கறார்… எதையுமே மறுக்கல! பக்தி மிகுதியில செய்திட்டதா சொல்றார்...”

“ஏதோ ஒரு சால்ஜாப்பு...”

“இல்ல அரவிந்தன்… அவர் பொய்யெல்லாம் எதுவும் பேசலை. அவர் மட்டும் போன் பண்ணலேன்னா இந்தப் பெட்டியும் லிங்கமும் இப்ப நம்மை விட்டுப் போயிருந்திருக்கும்...”

“விளக்கமாச் சொல்லுங்க சார்...”

- ஜெயராமனும் சொல்லி முடித்தார்… பாரதி எழுந்து ஜன்னலருகே நின்றுகொண்டு வெளியே தெரிந்த தோட்டத்தைப் பார்க்கத் தொடங்கினாள்.

“அப்ப நீங்க வேண்டிக்கிட்டதாலதான் அந்த சாந்தப்ரகாஷ் சாருபாலா அப்படிச் சொல்லிட்டுப் போனாங்களா?”

“ஆமா… கொஞ்சம்கூட டயம் எடுத்துக்கல… மளமளன்னு சொல்லிட்டுப் போயிட்டாங்க… எனக்கு இப்ப நினைச்சாலும் திகைப்பா இருக்கு...”

- அதைக் கேட்டபடியே திரும்பி வந்த பாரதி, “சார்… நீங்க கூடவா கவுந்துட்டீங்க..?” என்று கேட்டாள்.

“கவுர்றதா?”

“பின்ன என்ன சார்… நாம கேட்டதுல இருக்கற நியாயம் புரிஞ்சு ஜென்டில் மேனா நடந்துகிட்டிருக்கார் அந்த சாந்தப்ரகாஷ். இதை ஒரு அதிசயமா நினைச்சு சொல்றீங்களே…?”

“பாரதி… உன்னை எனக்கு நல்லாத் தெரியும். எல்லோர் பார்வையும் ஒரு மாதிரின்னா, உன்னோட பார்வை ரொம்பவே ஸ்பெஷலா இருக்கும். அதனாலதான் உன்னை நான் இன்டர்வியூவுல டைரக்டா தேர்ந்தெடுத்தேன். இந்தத் துறைக்கு உன் மாதிரி பார்வையும் சிந்தனையும் கொண்டவங்கதான் வேணும். அப்படி உன்னைத் தேர்வு செய்த நான்தான் இப்ப சொல்றேன். உன் பிடிவாதமான போக்கு எனக்கு சரியா படலை. உன்கிட்ட மாற்றம் வேணும்...”

“சார்… ஒரு கெட்டது நல்லதா மாறணும் சார்… நல்லது எதுக்கு சார் மாறணும்?”

“இதோ பார்… இந்தப் பெட்டி இதுல இருக்கற ஏடுகள் அப்புறம் அந்தப் பாம்பு… எதுவும் வழக்கமான விஷயமில்ல… அதே சமயம் இதுல பித்தலாட்டம் இருக்கற மாதிரியும் தெரியல...”

இறையுதிர் காடு - 51

“அப்படின்னா?”

“இதுவரை நடந்த எதுவும் ஒண்ணுமேயில்ல… இனிமேதான் பல நம்ப முடியாத அதிசயங்கள் நடக்கப்போறதா நான் நினைக்கறேன்...”

“ஆமாம் சார்… என்னோட கருத்தும்கூட அதேதான். ஆனா பாரதியால துளிகூட இந்த மிஸ்ட்ரிகளை ஜீரணிக்க முடியல...” அரவிந்தன் இடையிட்டு ஆமோதித்தான்.

“சார்… என்வரைல என் அப்பாவை அந்தக் குமாரசாமி பிரதர்கிட்ட இருந்து நான் எப்படிக் காப்பாத்தப்போறேன்கறதுதான் சார் என் முன்ன இருக்கற விஷயம். இந்தப் பெட்டி, அப்புறம் பாம்பு இதெல்லாம் எதாவேணா இருந்துட்டுப் போகட்டும். இந்த அமெரிக்கக் காரங்க வரலைன்னாலும் நான் இதைத் தூக்கிப் போட்ற எண்ணத்துக்கு எப்பவோ வந்துட்டேன் சார்...”

“நோ… ஒரு விலைமதிப்பில்லாத சித்த அனுபவத்தை அலட்சியப்படுத்தாதே...”

“எனக்குப் பிடிக்கல சார்… இப்படியெல்லாம் மிஸ்டிக்கா நடக்க முடியும், அதுதான் சித்த சக்தின்னா நம்ப நாடு இப்படி ஏன் சார் இருக்கணும்? இந்த சித்தா பவர் இந்த நாட்டோட முன்னேற்றத்துக்கும், அமைதிக்கும் பயன் படலாமே? திருவள்ளுவரெல்லாம் பிரச்னைக்குரியவர் ஆகறாரே சார்!

கோடி கோடியா ஊழல் பண்றவங்களை இவங்க கண்ட்ரோல் பண்ணலாமே? ஒரு சித்தரால கட்டப்பட்டதுங்கற பழநியில, சந்நிதானத்துகிட்டயே என் ஹேண்ட்பேக்கை ஒருத்தன் திருடிட்டு ஓட்றான். அங்க விக்கற பஞ்சாமிர் தத்துலயும் கலப்படம்… மலைப்படி முழுக்க ஒரே பிச்சைக்காரங்க… இந்த சக்தி உலகத்துக்கு எதையும் கிழிக்க வேண்டாம் - அந்த இடம் தூய்மையா ஏற்றத்தாழ்வில்லாத ஒரு இடமா இருக்கலாம்தானே? சுத்தி சுத்தி இப்ப இங்க வர்ற இந்தப் பாம்பு என் அப்பா இந்த வீட்ல ஒரு தப்பானவரா நடமாடினப்ப வந்திருக்கலாமே?

தப்பு பண்ணினே, ஒரே போடா போட்டுத் தள்ளிடு வேன்னு மிரட்டியிருக்கலாமே? அவரைக் காப்பாத்தத்தானே அந்த சக்தி பயன்பட்டிருக்கு… இது என்ன சார் பெரிய சித்த சக்தி? இந்தச் சித்தர்கள், அப்புறம் இவங்க கணிப்புகளை எல்லாம் நான் தெய்விகமாவே பார்க்கல சார்! ஒரு மெஜீஷியன், ஸ்டேஜ்ல மேஜிக் காட்றான் - இவங்க ஸ்டேஜ்ல காட்டல, அவ்வளவுதான் வித்தியாசம்...” -பிளந்துகட்டினாள் பாரதி. ஜெயராமனாலும் எந்த பதிலையும் சொல்ல முடியவில்லை. அரவிந்தனும்கூட அவளை பிரமிப்போடுதான் பார்த்தான்.

“என்ன எழுத்தாளர் சார்… என்ன பாக்கறீங்க?”

“யூ ஆர் ரைட்… நீ என்னை பிரமிக்க வெச்சுகிட்டே போறே பாரதி...”

“அரவிந்தன் இப்படி என்னைப் பாராட்றத விடுங்க. நீங்க எவ்வளவு பெரிய எழுத்தாளர் - எவ்வளவு பொறுப்புணர்வு இருக்கணும் உங்களுக்கு?”

“நீ என்ன சொல்ல வர பாரதி?”

“நான் கேட்ட கேள்விகளை எல்லாம் நீங்க கேட்டிருக்க வேண்டாமா அரவிந்தன்?”

“வாஸ்தவம்தான்… நான் கேட்டிருக்கணும் - ஆனா சத்தியமா நான் இந்த மிஸ்டிக்ஸ்ல மயங்கல பாரதி! இது எப்படி சாத்தியம்கற கேள்வியோடும், இதை விளங்கிக்கற முயற்சியோடும்தான் நான் இருக்கேன்.”

“வேண்டாம் அரவிந்தன்… இந்தக் குழப்பமான மூடு மந்திரமான விஷயம் நமக்கு வேண்டாம். அந்த யோகி திவ்யப்ரகாஷ், அப்புறம் அந்த ஜோசியர் இவங்களே இதையெல்லாம் கட்டிக்கிட்டு அழட்டும். என் அப்பாவைக்கூட நான் சும்மா விடப்போறதில்ல. அவர் வீட்டுக்கு வரட்டும். இருக்கு கச்சேரி...”

- பாரதி சொல்ல, அரவிந்தனும் ஆமோதித்திட, ஜெயராமன் வெறித்தார்.

“என்ன சார்… உங்களுக்கு ரொம்ப ஏமாற்றமா இருக்கா?”

“ஆமாம் அரவிந்தன்… நீங்க என்ன அப்படியே பாரதி பக்கம் சாஞ்சிட்டீங்க?”

“தப்பு சார்… உண்மை பக்கம் சாஞ்சிட்டேன்னு சொல்லுங்க.”

“உங்க இரண்டு பேர் கிட்டயுமே நான்கிற ஈகோ இருக்கு. அதுதான் இப்படிப் பேச வைக்குது...”

“ஈகோவால தப்பா செயல்பட்டாதான் அது குற்றம். நாங்க நேர்மையா நடக்க ஆசைப்படறது எப்படி சார் குற்றமாகும்?”

“அரவிந்தன்… அவசரப்படாதீங்க… நுனிப்புல்லும் மேயாதீங்க. நேர்மையா நாணயமா இருக்கறதுங்கறது வேற… நம்பிக்கையோட பக்தியா இருக்கறதுங்கறது வேற… நான் இப்ப ஒரு பத்திரிகையாளனா பேசறேன். என் பத்திரிகை அட்டைல நான் பாரதப்பிரதமர் படத்தையும் போடுவேன், வீரப்பன் போல சிம்ம சொப்பனமா இருக்கறவங்களையும் போடுவேன். பல தியாகம் செய்தவனையும் போடுவேன், நூறு கொலை செய்தவனையும் போடுவேன். அங்க எனக்கு என் விருப்புவெறுப்புக்கெல்லாம் இடம் கிடையாது. யார் மையம்கறதுதான் கணக்கு.”

எல்லோர் பார்வையும் ஒரு மாதிரின்னா, உன்னோட பார்வை ரொம்பவே ஸ்பெஷலா இருக்கும். அதனாலதான் உன்னை நான் இன்டர்வியூவுல டைரக்டா தேர்ந்தெடுத்தேன். இந்தத் துறைக்கு உன் மாதிரி பார்வையும் சிந்தனையும் கொண்டவங்கதான் வேணும்.

“நான் அதை மறுக்கலையே சார்...”

“அப்ப உங்க சுய விருப்புவெறுப்பை மூட்டை கட்டிட்டு இதுல இறங்குங்க… என்கிட்ட கேட்ட கேள்விகள அந்த சித்தர்கள் கிட்ட கேளுங்க. வந்துட்டுப் போகுதே பாம்பு… அதுகிட்ட கேளுங்க. இந்த மிஸ்ட்ரியோட ஆதிமூலத்தைத் தேடுங்க… எல்லாம் பொய்னு கையை உதறாம, அது எப்படிப்பட்ட பொய்னு கண்டுபிடிச்சு அதோட முகமூடியைக் கிழியுங்க…”- ஆவேசமாக ஜெயராமன் பேசி முடிக்கவும் இம்முறை பாரதியிடம் தேக்கம். அரவிந்தன் மட்டும் கேட்டான்.

இறையுதிர் காடு - 51

“சார், இனி நாங்க என்ன செய்யணும்னு எதிர்பார்க்கறீங்க?”

“முதல்ல இதுல இருக்கற ஏடு, டைரி இதை எல்லாம் ஸ்கேன் பண்ணி காப்பி பண்ணுங்க. இந்தப் பெட்டியை அந்தத் தம்பதிகள்கிட்ட ஒப்படையுங்க. அவங்க என்ன செய்யப் போறாங்கன்னு பாருங்க...”

“அப்புறம் சார்...”

“இந்த லிங்கம் நம் பிரார்த்தனைக்கு பலனளிக்கறதா திவ்யப்ரகாஷ் சொன்னார். சுயநலமா இல்லாம ஊருக்குப் பொதுவா ஒரு வேண்டுகோளை வெச்சு நம்ம பரிசோதனையைத் தொடங்குவோம். நான் செய்த பிரார்த்தனை பலிச்சாலும் அதுமேல ஒரு சந்தேகம் இருக்கு. அப்படி சந்தேகத்துக்கு இடமில்லாதபடி ஒரு பொதுவான பிரார்த்தனை செய்வோமா?”

“நல்ல கருத்துதான்… ஊருக்குப் பொதுவான்னா எப்படி சார்?”

“சென்னை இப்ப கடுமையான தண்ணிப் பஞ்சத்துல இருக்கு. ஏன் தமிழ்நாடே பஞ்சத்துலதான் இருக்கு. அந்தப் பஞ்சம் நீங்கற அளவு மழைபெய்யணும். அதுவும் இன்னிக்கே பெய்யத் தொடங்கணும். போதும்போதும்கற அளவுக்குப் பெய்யணும். அழுக்குக் கூவம் அழகுக்கூவமா ஓடணும். பிரார்த்திப்போமா?”

``நான் தயார் சார்.’’

``பாரதி, நீ..?’’

``மன்னிக்கணும் சார். உங்க பேச்சைக் கேட்கறேன். ஆனா இதுக்கு நான் வரலை. எனக்கும் சேர்த்து நீங்களே பிரார்த்தனை பண்ணிக்குங்க.’’

- பாரதி அப்போதும் மடங்காமல் அவள் அவளாகவே இருந்திட ஜெயராமனும் அரவிந்தனும் மட்டும் பூஜையறை நோக்கிச் சென்ற நிலையில், பானு உள்ளே நுழைந்தபடியிருந்தாள்.

- தொடரும்