
எப்படி ஒன்றே தெய்வமோ - அப்படி ஒன்றே இதுவும்..!”
அன்று உறுமலோடு வந்து நின்ற புலியைப் பார்த்த அத்தனை பேரும் பயத்தில் விடைத்துப் போனார்கள். ஆனால் கருமார்கள் இருவரும் பயப்படவில்லை. அவர்கள் அந்தப் புலியை கூடு விட்டுக் கூடு பாய்ந்த ஒரு சித்தனின் மாணவனாக மட்டுமே பார்த்தனர். கொங்கண சித்தனின் சீடர்களில் ஒருவனான பார்த்திபனே இப்போது புலியாக வந்து நிற்கிறான் என்பதால் தங்கள் வாழ்நாளில் ஒரு புலியை மிகப் பரிவுடனும் பார்க்கத் தொடங்கினர்.

போகர் பிரானும் பார்த்தவராய் “வா பார்த்திபா... சரியான நேரத்துக்குத்தான் வந்திருக்கிறாய்!” என்றார். போகர் சகஜமாகப் பேசவும் எல்லோரிடமும் சற்றே பயம் தணியத் தொடங்கியது. அவர் புலியோடு பேசியது கிழார்களை ஆச்சர்யப்படவும் வைத்தது. பார்த்திபன் என்கிற அந்தப்புலியும் உள்ளே மெல்ல நடந்து வந்தது. நடையில் ஒரு சோர்வு... உருவத்தில் மட்டுமே புலி... மற்றபடி புலியின் எந்த வீரியமும் துளியும் இல்லை! அந்தப் புலி உள் வரவும் எல்லோரும் குகைக்குள் ஒரு மூலையாகப் பார்த்துக் கூடி நிற்கத் தொடங்கினர். அனிச்சையான பயம்.
புலியும் புதிய பாஷாணலிங்கம் முன்னால் நின்றது. உற்று நோக்கியது. போகரும் அதன் பொருட்டு பேசினார்.
“நன்றாகப்பார்... இது பாஷாணலிங்கம்! சித்த உலகின் வார்ப்பு. பரமனின் தத்துவச் சொரூபம். ஈரேழு பதினான்கு உலகிலும் இந்த சொரூபத்துக்கான பாஷாணம் கிடையாது. தனியே அறுபத்து நான்கு பாஷாணங்கள் உள்ளன. அதற்கு மேலும் இருந்து அவை இனி வரும் நாள்களில் தெரியவரலாம்.

ஆனால் உச்சபட்சமான ஒன்பதினை ஒன்றாக்கி அதோடு மூலிகை, சொர்ணம், உதகம் போன்ற ரசங்களைச் சேர்த்து இருளில், நிழலில், வெயிலில், தணலில் என்று பக்குவம் செய்து புத்தம் புது அணுக்கூறுகளை உருவாக்கி அவற்றை இணைத்துச் செய்தது இது.
எப்படி ஒன்றே தெய்வமோ - அப்படி ஒன்றே இதுவும்..!”
- போகரின் விளக்கத்தைக் கேட்டு, கிழார்கள் பிரமித்தனர்.
“இந்த லிங்கம் வேறு அந்தப் பரமன் வேறல்ல... இது கோளாதிக்கமற்றது. பஞ்ச பூதங்களாலும் இதை ஏதும் செய்ய முடியாது. தண்ணீரில் தூக்கிப் போட்டாலும் கரையாது - தன்னிலை திரியாது. நெருப்பாலும் இதைக் கருக்க இயலாது. பொன்கூட தன்னிலை மாறாவிடினும் உருகிவிடும். இது உருகவும் செய்யாது. கல்கூட உருகிக் குழம்பாகி விடும். இது அப்படியே இருக்கும்.
நீரால் நெருப்பால் மட்டுமல்ல, மண்ணாலும் இது மாறாது - இதை இன்று புதைத்து வைத்து ஆயிரம் வருடங்கள் கழித்து எடுத்தாலும் அப்படியேதான் இருக்கும். காற்றும் வெளியும் கூட இதோடு கைகுலுக்கும் - மொத்தத்தில் இந்த லிங்கம் ஒரு திட வடிவ பாஷாண பரமம்.”
- அந்தப் புலிக்குச் சொல்வதுபோல் எல்லோர்க்கும்தான் சொல்லிக் கொண்டிருந்தார் போகர். புலி மறுமொழி கூறுவதுபோல் சற்றே உறுமிவிட்டு அப்படியே பணிந்து வணங்குவதுபோல் மண்டியிட்டு அமர்ந்தது.
“பார்த்திபா... உன் கர்மவினைதான் நீ மனித உயிரும் புலியின் உடம்புமாகத் திகழக் காரணம். பரகாயப்பிரவேசத்தில் உட்புகத் தெரிந்த உனக்கு, வெளிவரத் தெரியவில்லை!
அதை, நீ இப்போதுள்ள நிலையில் என்போன்றவர்களால் உனக்குச் சொல்லித் தருவதும் சாத்தியமில்லை. புலியுடலின் இயக்க விசையும் நாடிகளின் துடிப்பும் மானுட உடம்பின் விசைக்கு எல்லா விதத்திலும் நேர்மாறானது. எனவே நீ இந்த உடலுக்குள் இருந்து ஒரு புலியாக வாழ்ந்தே அதைக் கண்டுணர முடியும். ஆனால் நீயோ புலியாக இருந்தும் புலியாக வாழ விரும்பாது பட்டினி கிடக்கிறாய். இந்த உடம்புக்கான இரையைக் கொன்று விழுங்க உன் மானுட மனம் விரும்பவில்லை. அதனால் நடமாடக்கூடச் சக்தியில்லாது போய்விட்டது உனக்கு. இப்படி ஒரு நிலையில் உனக்கு விமோசனம் கிடைக்கப் போகிறது. இந்த லிங்கம் உனது குறையைத் தீர்த்திடும். இதன் மேனிபட்ட விபூதியோ இல்லை பாலோ தேனோ உன் புலியுடம்போடு சம்பந்தப்பட வேண்டும். அந்த நிலையில் நீ இக்கூட்டில் இருந்தும் விடுபடும் வழியை இந்த லிங்கத்திடம் கேள். உன்னை இந்த லிங்கம் விடுவித்துவிடும். உனக்கான மிக நியாயமான தேவை இது. எனவே உன் பிரார்த்தனையைத் தொடங்கு. முன்னதாக இதன் விபூதிச் சங்கமம் உனக்கு ஏற்படட்டும்” என்று ஒரு நெடிய விளக்கமளித்த போகர் அந்த லிங்கத்தைக் குகை மையத்தில் பிரதிஷ்டை செய்து மேலே கையை உள்ளங்கை லிங்கத்தைப் பார்த்த நிலையில் நீட்டவும், கையிலிருந்து விபூதியானது கொட்டத் தொடங்கியது! சிறிது நேரத்தில் லிங்கம் சரிபாதிக்கு மூழ்கிப்போனது. பின் அந்த விபூதியை அள்ளியவராய் புலியை நெருங்கி அதன்மேல் தூவியபடியே நெற்றியிலும் பூசி விட்டார்.
அந்தப் புலியும் உடனேயே எழுந்து நின்று உடம்பை உதறிவிட்டுக் கொண்டதில் விபூதியானது ஒரு புகை மண்டலம்போல் எழும்பியது. எல்லோரும் வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி இருக்க, புலியானது லிங்கத்தை வலம் வரத்தொடங்கியது. அதைக் கண்ட போகரும், “இது எங்கும் இல்லாத சிறப்புடையது என்பதற்கு, இதை முதன் முதலில் ஒரு விலங்கு உருவமும் மனித ஆத்மாவும் இதை வணங்குவதே சாட்சி...” என்று பூரித்தார்.
மூன்று முறை வலம் வந்த அந்தப் புலி மீண்டும் மண்டியிட்டு அமர்ந்தது. அதன் கண்களிலிருந்து நீரும் வழியத் தொடங்கியது. ஒரு புலிகூட அழும் அதற்கும் துக்க உணர்வுண்டு என்பதைக் கண்ட கிழார்கள் பிரமிப்பில் புதைந்து கொண்டே இருந்தார்கள்! போகர் புரிந்ததுபோல் பேசினார்.

“பார்த்திபா... கவலைப்படாதே! உன் உடலை நீ எங்கே உதிர்த்தாயோ அங்கே செல் - நிச்சயம் உனக்கு இந்த உடம்பிலிருந்து விடுபடும் வழிமுறை தெரிந்துவிடும். மனித விருப்பம் என்பது உணர்வு, அறிவு என்னும் இரு சம்பந்தமுடையது. இதில் உடல் சார்ந்தது உணர்வு - எண்ணம் சார்ந்தது அறிவு. இதில் உடலின் மூலம் உன் தாய் தந்தை மற்றும் அவர்களைத் தொட்டு ஆறு பாட்டன் பாட்டிமார்கள் - இவர்களின் வினைத்தொகுப்பே ஓர் உடல். இவர்களில் எவர் கருமத்தால் உனக்கு இப்படி ஆயிற்றோ தெரியாது. ஆனால் எப்போது ஆதி சக்தியை நெருங்கி அதை வலம் வந்தாயோ அப்போதே உடல் சார்ந்த கர்மப்பதிவு நீங்கி விட்டது. இது அப்படியே அறிவுக்கும் பொருந்தும்.
நான் விளக்கிக்கொண்டிருக்கும்போதே உன் கர்மம் கரைவதைப் பார்க்கிறேன். நீ செய்த குரு சேவையின் பயனாலேயே புலியாக மாறியும் இங்கே இந்த தரிசனம் உனக்கு வாய்த்தது. இந்த உலகில் ஒரு மரத்தின் ஓர் இலை அசைவுக்குக் கூட காரணம் உண்டு எனும் பொழுது உனக்கு இங்கே கிட்டிய தரிசனத்திற்கான காரணம் உன் குருவான கொங்கணரின் அருளே! அதோடு ஆதிசிவனின் அருளும் சேர்ந்துவிட்டது. இனி நீ ஜீவன் முக்தன். சுருக்கமாகக் கூறுவதானால் என்னிலும் மேலான நிலையை அடைந்து விட்டாய். எனக்குப் பல கடமைகள் உள்ளன. அதோடு வருங்கால உலகின் மானுட நலத்தின் பொருட்டு அவன் விருப்போடு நான் உருவாக்கிய இந்த லிங்கம் இந்த உலகம் உள்ள அளவும் இருந்து உலகைச் சுற்றி வரவும்போகிறது... முன்பு தந்தையால் தனயன் உலகைச் சுற்றி வந்தான் - ஆனால் இங்கே தனயனால் தந்தை உலகைச் சுற்றப்போகிறார்” என்ற போகர், சுற்றி ஒரு பார்வை பார்த்தார். எல்லோரிடமும் அவர் பேச்சின் தாக்கம். அதன் விளைவாகப் பலபல கேள்விகள்.
“என்ன பார்க்கிறீர்கள்... பழத்தின் பொருட்டு உலகைச் சுற்றிய முருகப் பெருமான் செயலைத்தான் சொன்னேன். அந்த முருகப்பெருமான் சுற்றாமல் சுழலாமல் இதேபோல் பாஷாண ரூபியாகப் பொதினி மலைமேல் நிற்கப்போகிறான். தந்தையான இந்த பாஷாண லிங்கமோ உலகைச் சுற்றப்போகிறது...” என்று சொல்லிமுடித்திட, அதுவரை நின்றிருந்த புலி ஒரு செருமல் செருமிவிட்டு வேகமாய் வெளியேறியது.
இந்தப் புலித்தோல் இப்போது ஓர் ஆடையைப் போன்றது. உயிருள்ள மிருகங்களை வேட்டையாடித் தன்னுள் அடக்கிக்கொள்வதே புலியின் செயலாகும்.
“நல்லது... உடல் கிடைக்கவும் திரும்ப வா... அப்படி வரும் சமயம் உனக்கு நல்விதிப்பாடு இருப்பதால் தண்டபாணிச் சொரூபத்தையும் கண்டு வணங்கிடலாம்” என்றார்.
ஒரு புலி வந்துவிட்டுச் சென்றதன் பின்னால்தான் எத்தனை சங்கதிகள்! கிழார்கள் மிரண்டுபோயிருந்தனர்.
“பிரானே...”
“என்னடா இன்னமும் வாயைத் திறக்கக் காணோமே என்று பார்த்தேன்... உம் கேளுங்கள்...”
“அந்தப்புலி ஒரு மனிதன் என்பதையே எண்ணிப்பார்க்க எங்களுக்கு வியப்பு தாள வில்லை. யார் அந்தப் பார்த்திபன்... ஏன் இந்த நிலை?”
“இந்தப் பார்த்திபன் ஒரு சீடன் - கொங்கணச் சித்தரின் சீடன். அஷ்டமாசித்துவைக் கற்கவென்றே ஆசையோடு கொங்கணரிடம் சேர்ந்தவன். அந்த எட்டு சித்துகளில் ஒரு சித்தே பரகாயப்பிரவேசம் எனும் கூடு விட்டுக் கூடுபாயும் கலை...
“அப்படியானால், ஒரு மனிதன் முயன்றால் விதி வழி வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே உடலை விட்டுப் பிரிந்திடும் உயிரை இடையில் பிரித்து வெளியேற்ற முடியுமா?”
“ஒரு மனிதன் முயன்றால் அது தற்கொலையில் தான் முடியும். ஒரு சித்தன் முயன்றாலே அது விடுதலையாய் விளங்கிடும்.”
“மனிதன் வேறு, சித்தன் வேறா?”
“பலமுறை இதற்குப் பதில் கூறிவிட்டேன்... உருவத்தால் ஒன்றாக இருப்பதால் மனிதனும் சித்தனும் ஒன்றாகிட முடியாது. சித்தன் என்பவன் கிட்டத்தட்ட சிவமாகிவிட்ட ஒருவன்...”
“சரி... அந்தப் பார்த்திபன் புலிக்குள் புகுந்து ஏன் வெளியேறாது புலியாகவே திரிகிறான்..?”
“புகமட்டும் கற்றதுதான் பிழையில் முடிந்து விட்டது. பாரதப்போரில் அபிமன்யு போல் என்றும் கூறலாம்.”
“இனி வெளியேறிட முடியுமா?”
“இன்னருள் கிடைத்துவிட்டதே... நிச்சயம் வெளியேறி, பழைய மானுட உடலுடன் திரும்ப வருவான்...”
“அந்த உடல் கெடாது இருக்குமா?”
“இமயப்பனிக்குள் எந்த உடற்கூறும் தன்னிலை சிதையாது.”
“அப்படியானால் இந்தப் பார்த்திபன் உடல் அங்கா உள்ளது?”
“நான்தான் கொண்டுசென்று ஒரு குகையில் கிடத்தியதே...”
“அதற்குப் பேசாமல், வெளிவரும் உபாயத்தைக் கற்பித்திருக்கலாமே..?”
“இயலாது... ஒருவன் தனக்குத்தானே கைவிலங்கு போட்டுப் பூட்டிக்கொண்டு சாவியைத் தானே விழுங்கி விடுவதைப்போன்றது இது. பரகாயத்தை முழுமையாகக் கற்றபிறகே முயல வேண்டும். முழுமையாகக் கற்றிட மனித உடலுக்கே சாத்தியம். அது பிணமாகிவிட்ட நிலையில் எப்படிக் கற்பிப்பது?”
“எவ்வளவோ பிணங்களைத் தாங்கள் எழுப்பியுள்ளீர்களே..?”
“இல்லை... நீங்கள் தவறாகச் சொல்கிறீர்கள். உடம்பின் பிரதான நாடிகளில் ஒரு நாடியாவது துடித்தபடி இருந்தாலே பிழைக்க வைக்க முடியும். எல்லா நாடிகளும் அடங்கிவிட்ட உடம்பைப் பிழைக்க வைக்க முடியாது. நான் பிழைக்கச் செய்தவர்கள் முழுமையாக இறந்தவர்களில்லை... அதனால் சாத்தியமாயிற்று... பார்த்திபன் உடலில் எல்லா நாடிகளும் அடங்கிவிட்டிருந்தன...”
“அப்படியானால் அந்த உடலில் அவனால் இப்போது மட்டும் புக முடியுமா என்ன?”
“முடியும்... ஏனென்றால், அவன் இப்போது பரமன் கருணைக்கும் அருளுக்கும் பாத்திரமாகிவிட்ட ஒருவன்.”
“அது சரி... இங்கிருந்து இமயத்துக்கு இந்தப் புலியால் எப்படிச் செல்ல முடியும்?”
“ஆன்மாவிற்குப் பஞ்சபூதத் தடைகள் கிடையாது. நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் இருக்க முடியும். இது உங்கள் ஆத்மாக்களுக்கும் பொருந்தும்.”
“அப்படியானால் புலியின் உடலில் இருந்து ஆத்மா விடுபட்டு அதன் பிறகல்லவா இமயமே செல்ல முடியும்?”
“என் யூகம் சரியாக இருக்குமானால் இந்த நொடி பார்த்திபன் உடம்பை உதிர்த்து வெளியேறியிருப்பான்... வெளியே சென்று பாருங்கள். புலியின் உடல் பிணமாக எங்காவது கிடக்கக் கூடும்” போகர் பிரான் அப்படிக் கூறிடும் சமயம் அந்தப் புலியைப் பிணமாய்த் தோளில் சுமந்தபடி கொட்டார அடுமனை ஊழியர்கள் குகைவாசலில் தெரிந்தனர்.
எல்லோரிடமும் திரும்பவும் பேராச்சர்யம்!
அவர்களும் வணங்கியபடியே உள்ளே வந்து,
“பிரானே... நாங்கள் நமக்கெல்லாம் உணவு கொண்டு வரும் சமயம் ஒரு மரத்தடியில் இந்தப் புலியானது இறந்து கிடந்தது. இதன் தோல் சன்யாசிகள் அமர்ந்து தவம் புரிந்திட மிக ஏற்றது என்பதால் இதை நாங்கள் சுமந்து வந்தோம்.
இது தானாய் உயிரை விட்டுவிட்டது போலவும் தெரிகிறது. உடம்பிலும் ஒரு வகை விபூதி வாசம். எனவே இதன் தோலானது நிச்சயம் உங்களுக்குப் பயன்படும் என்றே சுமந்து வந்தோம்” என்றனர்.
போகர் சிரித்தார் - கிழார்களை அர்த்தத்தோடு பார்த்தார்.
“பிரானே... இவற்றையெல்லாம் அறிவதன் மூலம் எங்களுக்கு ஏதோ ஒரு புதிய உலகத்திற்குப் போய் வந்தது போல் உள்ளது.நம்பவும் முடியவில்லை - நம்பாமலிருக்கவும் முடியவில்லை...” என்றார் கார்மேகக் கிழார்.
“அப்படியாயின் நம்பாதீர்கள். உங்களை யார் நம்பச் சொன்னது?” போகர் அப்படித் திருப்பிக்கேட்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.
“தவறாகக் கருதாதீர்கள்... நாங்கள் சாமான்யப்பட்ட மானிடர்கள்.”
“நான் உங்களை வேறு மாதிரியாகவெல்லாம் நினைக்கவுமில்லை, சொல்லவுமில்லையே..?”
“பல தருணங்களில் இப்படிச் சொல்லியே எங்கள் வாயை மூடிவிடுகிறீர்களே?”
“போதும்... இனி நாம் அடுத்து ஆக வேண்டியதைப் பார்ப்போம். இந்த லிங்கம் கேட்டதைத் தரும் என்பது நிரூபணமாகிவிட்டது. இதோ இந்தப் புலியுடல் சாட்சி, இதன் உயிர் இமயம் சென்றிட, இதன் தோல் சித்தாசனமாகப் போகிறது...”
“மாமிச உணவு, மதுப்பழக்கம், களவு, சூது, பொய் இவையெல்லாமே சித்த வழி நடப்பவர்களுக்குக் கூடவே கூடாது என்று கூறும் தாங்கள், ஒரு மிருகத்தின் தோலையா உரித்து எடுத்து அதன் மேல் அமர்வீர்?”
“இந்தப் புலித்தோல் இப்போது ஓர் ஆடையைப் போன்றது. உயிருள்ள மிருகங்களை வேட்டையாடித் தன்னுள் அடக்கிக்கொள்வதே புலியின் செயலாகும். ஆயினும் புலியை எந்த ஒரு மிருகமும் வேட்டையாடாது. இத்தோல் தன்னுள் பல்லுயிரை அடக்கிக்கொள்வதன் குறியீடாகும். இதன்மேல் அமர்பவனும் அனைத்தையும் தன்னுள் அடக்க முடிந்த ஒருவனாவான்... இந்தத் தோல் கொன்றெடுக்கப்பட்டதல்ல... கொடுத்தெடுக்கப் பட்டது! ஒரு புலி தன் விதிக்கேற்ப மரணித்து உடம்பை மண்ணில் விட்டுச் சென்ற நிலையில் எடுக்கப்படவிருப்பது. எனவே தெளிவாகத் தெரியாமல் பேசக்கூடாது...”
“புரிந்துகொள்ளத்தானே கேள்விகளைக் கேட்கிறோம்? புரிந்துகொண்டால்தானே குழப்பமின்றிப் பதிவு செய்யவும் முடியும்?”
“அதனால்தான் நானும் சளைக்காமல் பதில் சொல்லி வருகிறேன்.”
“இந்த லிங்கம் குறித்துக் கேட்கலாமா?”
“எவ்வளவோ கேட்டுவிட்டீர்கள்... இன்னமுமா கேள்விகள் உள்ளன?”
“இப்போதுதான் நிறைய உள்ளது...”
“உங்கள் எல்லாக் கேள்விகளையும் நாம் கொட்டாரம் சென்ற நிலையில் அங்கு கேளுங்கள். இங்கே கருமார்கள் தண்டபாணி உருவ அச்சினைச் செய்து முடிக்கட்டும்” என்று கூறிய போகர், அந்த நவபாஷாண லிங்கத்தைத் தூக்கித் தன் தலைமேல் வைத்துக்கொண்டவராய் ``நான் முன் செல்கிறேன், நீங்கள் பின்னால் வாருங்கள்” என்றவராய் வெளியேறினார்.
நவமருக்கும் கிழார்களுக்கும் பெரிதும் ஏமாற்றம், அந்தப் புலியைப்போல் லிங்கத்தை வலம் வந்து பிரார்த்தனை செய்துகொள்ளுமுன் தூக்கிச் சென்றுவிட்டாரே என்று.
ஆனால் ஆழிமுத்து மட்டும், “நல்லவேளை... நான் பிரார்த்தனை செய்துகொண்டேன்...” என்றான்!
எல்லோரும் அவனை வியப்பாகப் பார்த்தனர்!
இன்று உள்ளே வந்த பானு நேராக பாரதி அருகில் வந்தாள்.
“குட் ஆஃப்டர் நூன் மேடம்.”
“குட் ஆஃப்டர் நூன்... நான் உன்னை ஆஸ்பத்திரியில்ல இருக்கச் சொன்னேன் பானு...?”
“முக்கியமான விஷயம் மேடம்.”
“போன் பண்ணலாமே?”
“இல்ல... சார் தன் பர்சனல் டைரி பீரோவுல இருக்கு, அதை எடுத்துட்டு வான்னு சொன்னார்... அதான்!”
“அப்பா பேசிட்டாரா?”
“பேசிட்டார் மேடம். சரளமா பழைய மாதிரியே பேசறார்...!”
“சந்தோஷம். கணேச பாண்டியன் அங்க அப்பா கூடதானே இருக்காரு?”
“ஆமாம் மேடம்... அப்புறம் அஞ்சாறு போலீஸ்காரங்களும் வந்திருக்காங்க...”
“வந்துட்டாங்களா... அப்ப செக்யூரிட்டி அலர்ட் ஒர்க் ஆக ஆரம்பிச்சிடிச்சுன்னு சொல்...”
“ஆமாம்... எல்லாரையும் செக் பண்ணித்தான் விடறாங்க. சார் பேசறார்னு தெரியவுமே மாவட்டத்தலைவர்ல இருந்து பல கட்சிக்காரங்க போன் பண்ணி அப்பாவைப் பார்க்க வரலாமான்னு கேட்டாங்க. இன்னும் இரண்டு மூணு நாள் போகட்டும்னு சொல்லிட்டேன் மேடம்.”

-பானு பாரதியோடு பேசினாலும் பார்வை ஜெயராமன் சாரும், அரவிந்தனும் பூஜை அறை நோக்கிச் சென்றதன் மேலேயே இருந்தது. பாரதியும் கவனித்தவளாய்,
“என்ன... வீட்ல நாங்க என்ன பண்றோம் - பெட்டி என்னாச்சுன்னு பார்த்துட்டு வரச் சொன்னாரா அந்த ஜோசியர்?” - என்று கீறி விட்ட மாதிரி கேட்கவும், சற்றுத் தடுமாறிப்போனாள் பானு.
“போய் சொல்... பெட்டி நாளைக்கே அதுக்கு அசல் சொந்தக்காரங்க யாரோ அவங்ககிட்ட போய்டும்னு... அவரையும் நல்ல நேரத்துல ஊருக்குக் கிளம்பிப் போகச் சொல்...”
“மேடம்...”
“என்ன..?”
“ஜோசியரை நீங்க தப்பாவே நினைக்கறீங்க. அவர் டுபாக்கூர் ஜோசியர் இல்லை. நம்ப சார் வரைல சொன்ன எல்லாமே அப்படியே நடந்திருக்கு.”
“இப்ப எதுக்கு இதை எல்லாம் என்கிட்ட சொல்றே?”
“காரணமாத்தான் மேடம்... அந்த ஜோசியர் பெட்டி பத்தி சார்கிட்ட சொல்லவும் சார் ரொம்ப எக்ஸைட் ஆயிட்டார். தான் வீட்டுக்கு வந்துபாக்கணும்னு துடிக்கத் தொடங்கிட்டார்...”
“நாங்க இந்தப் பக்கம் வரவும் இதெல்லாம் நடந்திருக்கா... ஆமா நீ அப்பாவுக்கு பி.ஏவா, அந்த ஜோசியருக்கா?”
“கோபப்படாம கொஞ்சம் சொல்றத கேளுங்க. நான் டைரிய எடுத்துக்கிட்டுப் போகமட்டும் வரலை. அந்த லிங்கத்துகிட்ட நாம ப்ரே பண்ணிக்கிட்டா அது அப்படியே நடக்குமாம். அதனால ஜோசியர்தான் என்கிட்ட, அந்தக் குமாரசாமி பிரதர் மிரட்டல்ல இருந்து நாம நல்லவிதமா தப்பிக்க என்னை வேண்டிக்கச் சொன்னார்.”
“சுத்த பைத்தியக்காரத்தனம். ஆமா நீ ஒரு கிராஜுவேட் தானே... எப்படி இதையெல்லாம் நம்பறே?”
“என் வரைலயும் அவர் சொன்னதெல்லாம் அப்படியே நடந்துச்சு மேடம்... சாருக்கும் சொன்னதெல்லாம் அப்படியே நடந்திருக்கு... அப்புறம் எப்படி நம்பாம இருக்க முடியும்?”
“என்ன நடந்திருக்கு? இப்ப ஒருத்தன் அப்பாவைக் கொல்லாம விடமாட்டேன்னு புறப்பட்டுருக்கான். இரண்டு பேரை அவன் போட்டும் தள்ளிட்டான். ஒரு ஏழையோட நிலத்தை அபகரிக்க நினைச்சா அது இப்படி விபரீதங்கள்ள முடியும்னு அவர் சொன்னாரா?”
“இப்படி விவரமா சொல்லலை... ஆனா காலேஜ் கட்டுற முயற்சியால நிறைய சிக்கல் வரும். அதனால உயிருக்கும் ஆபத்து வரும்னு சொன்னார் மேடம்.”
“அவரை இவ்வளவு நம்பற அப்பா, அதை மட்டும் ஏன் கேக்கல?”
“தன் செல்வாக்குல சமாளிச்சிடலாம்னு நம்பினார். குமாரசாமி செத்துப் போவார்னுல்லாம் நம்ம சார் கொஞ்சம்கூட நினைக்கல. பயமுறுத்தினா பயந்துபோய் நிலத்தை வித்துட்டுப் போயிடுவார்னுதான் நினைச்சார்.”
“நீ என்ன சொன்னாலும் சரி... என்னால இந்த ஜோசியம் ஜாதகத்தையெல்லாம் ஒத்துக்கவே முடியாது. இவர் அவ்வளவு பெரிய புலின்னா நாம விட்ட ராக்கெட் ஏன் சந்திரன்ல லேண்ட் ஆகலை? உலகமே பார்த்ததே... நம்ம சைன்ட்டிஸ்டுகளுக்குச் சொல்லியிருக்கலாமே?”
-பாரதி தன் பாணியில் ஆக்ரோஷமாகப் பேசிட, பிரார்த்தனை முடிந்து ஜெயராமனும், அரவிந்தனும் திரும்பியிருந்தனர். பானுவிடம் பாரதி பேசுவதை வைத்தே புரிந்துகொண்ட ஜெயராமன் “என்னம்மா... என்ன விஷயம்?” என்று கேட்டார். பானுவும் சொல்லி முடித்தாள்.
“இது ரொம்ப சின்ன விஷயம்... இதுக்கு எதுக்கு இவ்வளவு பேச்சு பாரதி? ஆக்சுவலா நீ உணர்ச்சி வசப்படாம பானுவை வெச்சு டெஸ்ட் தான் பண்ணணும். பானு நீங்க போய்ப் பிரார்த்தனை பண்ணிட்டு டைரிய எடுத்துக்கிட்டுப் புறப்படுங்க. உங்க பிரார்த்தனை பலிக்கட்டும்...” என்றார் ஜெயராமன்.
பானுவும் வேகமாய் பூஜை அறை நோக்கி ஓடினாள்.
“பாரதி... தயவு செய்து எந்தக் கருத்துலயும் ஃபிக்ஸ் ஆயிடாதே. அப்படி ஆயிட்டாலே மறுபக்கங்களைப் பார்க்கத் தோணாது. பானு சொன்ன பிறகுதான் எனக்கும் தோணுச்சு இப்படி ஒரு பிரார்த்தனையை நாமளும் பண்ணிக்கிட்டிருக்கலாம்னு” - பாரதி பதிலுக்கு மௌனத்தை பதிலாக வைத்திட,
“சார் நம்மோட அடுத்த திட்டம் இப்ப என்ன சார்?” என்று அரவிந்தன் இடையிட்டான்.
“நான் சொன்னதுதான்... பெட்டியில இருக்கற எல்லாத்தையும் எடுத்து வீடியோ எடுத்து வெச்சுப்போம். அப்படியே ஏடு, டைரின்னு எதையும் விடாம காப்பி பண்ணிப்போம்.”
“அப்புறம் சார்...?”
“என்ன அப்புறம்... இதைவிட முக்கியம் அந்தக் குமாரசாமி வீட்டுக்குப் போய் அவங்கள சமாதானப்படுத்தறது... சொல்லப்போனா அதுதான் இப்ப என் முதல் அசைன்மென்ட்” - உணர்ச்சிவயப்பட்டாள் பாரதி.
“அதுவும் சரிதான்... ஆமா உங்கப்பாவைப் பார்த்துப் பேச வேண்டாமா?”
“பேசணும் சார்... கட்டாயம் பேசணும் சார். அவர் தப்பு அவருக்குத் தெரியணும். நாம இப்ப படுற கஷ்டமும் தெரியணும் சார்.”
பூஜை அறைக்குப் போய் அந்த லிங்கத்துகிட்ட எல்லாக் காரியங்களும் நாம விரும்பற மாதிரியே நல்லபடியா முடியணும்னு பிரார்த்தனை பண்ணிக்குங்க.
“அப்ப முதல் விஷயம் எது?”
“குமாரசாமி வீட்டுக்குப் போய் நிலப்பிரச்னை தீர்ந்துபோச்சுன்னு சொல்றது மட்டுமல்ல... உரிய நஷ்ட ஈடும் தர்றதுதான்...”
“எதுவா இருந்தாலும் உன் அப்பாவுக்குத் தெரியாம உன்னால பண்ண முடியாதே? பணத்துக்கு அவர்கிட்டதானே போகணும்?”
“அதனால?”
“அப்பாவை முதல்ல பார். நடந்ததைப் பக்குவமா சொல். இதெல்லாமே டாக்டர்கள் அனுமதிச்சாதான்... அதுக்குப் பிறகு குமாரசாமி வீட்டுக்குப் போகலாம்...”
- ஜெயராமன் சொல்லி முடிக்க, இடி இடிக்கும் சப்தம் காதில் கேட்டது. சட்டென்று அவரிடம் ஓர் அமைதி! அரவிந்தனுக்கும் புரிந்தது.
“சார் நம்ம பிரார்த்தனை பலிச்சிடும் போல இருக்கே சார்...” என்றான் ஆச்சர்யம் மின்ன...
“நானும் அதைத்தான் யோசிச்சேன்” என்றார் ஜெயராமனும். பானுவும் முத்துலட்சுமியும் ஒருசேர அங்கே அப்போது வந்தனர்.
“என்னம்மா, உன் பிரார்த்தனை முடிஞ்சதா?” ஜெயராமன் கேட்க, “ஆச்சு சார்... இந்தக் குமாரசாமி பிரதர் போலீஸ்ல மாட்டணும்னு வேண்டிக்கிட்டிருக்கேன் சார். அவன் அகப்பட்டாதான் சாரும் சீக்கிரம் வீட்டுக்கு வருவார். இல்லேன்னா பயந்து பயந்தே சாக வேண்டியிருக்கும்...”என்றாள் பானு.
“என்னோட பிரார்த்தனையும் இப்ப அது தான். `சாமி... அவன் கைதாகணும் - என் பையன் சீக்கிரம் வீடு வரணும்’கறதுதான்” என்றாள் முத்துலட்சுமி.
“பார்ப்போம் என்ன நடக்குதுன்னு... அரவிந்தன், நீங்க நான் சொன்னதைச் செய்யுங்க. நானும் பாரதியும் ஹாஸ்பிடலுக்குப் போய் எம்.பி-யைப் பார்த்துப் பேசிட்டு, அப்படியே அந்தக் குமாரசாமி வீட்டுக்கும் போய்ட்டு வந்துடறோம்...” என்றிட, அரவிந்தனும் தயாரானான்.
“பானு நீயும் எங்க கூட வா...” என்று பாரதி அவளையும் அழைத்துக்கொண்டு வெளியிலுள்ள காரில் ஏறி அமர்ந்த நொடி அவள் கைப்பேசியில் சிணுங்கல்.
காதைக் கொடுத்தவள் முகத்தில் விக்கிப்பு!
“பாரதி, யார் போன்ல... என்னாச்சு?”
“....”
“பேசு... எனிதிங்க் சீரியஸ்?”
“இல்ல சார்... குட் நியூஸ்தான்!”
“என்ன?”
“அந்த மிரட்டல் மன்னனை போலீஸ் பிடிச்சிடிச்சு சார்...”
“என்ன... அதுக்குள்ளேயா?”
“கமிஷனர் ஆபீஸ்ல இருந்து கமிஷனர் பி.ஏவே பேசினார் சார். தீவிரவாதிகள் லிஸ்ட்ல அவன் பேரும் இருந்திருக்கு. நம்ம கம்ப்ளெயின்டுக்கு முன்பே அந்த நபர் ஒரு தேடப்படுற நபர்தானாம்! மாம்பலம் பஸ் ஸ்டாண்டுல யாரையோ பார்க்க வந்தப்ப சி.சி.டி.வி கேமராவுல விழுந்து க்ரைம் பிராஞ்சுக்கு உடனே தகவல் போய் ஃபாலோ பண்ணி பிடிச்சதா சொல்றார் சார்...”
“என்ன ஒரு மிராக்கிள்... பானு உங்க பிரார்த்தனை பலிச்சிடிச்சு பார்த்தீங்களா?” என்று அவள் பக்கம் திரும்பினார் ஜெயராமன். படபடவென்று மழைத்தூறல்கள் விழ ஆரம்பிக்கவும் தன் பிரார்த்தனையும் பலிக்கத் தொடங்கிவிட்ட ஒரு சந்தோஷம் அவர் முகத்தில், பாரதி எதுவும் பேச முடியாமல் அதே சமயம் அங்கே இருக்கவும் பிடிக்காமல் வேகமாய் காரைக் கிளப்பினாள்.
ஜெயராமனுக்கு அவள் தவிக்கத் தொடங்கி விட்டது புரிந்தது. “பாரதி... இந்தப் பெட்டி, லிங்கம் இரண்டும் நிச்சயமா சொல்றேன் - ஒரு அதிசயமான விஷயம்தான். எனக்கு நீ நம்பறது நம்பாததைப் பத்தியெல்லாம் இனி கவலையில்லை. திவ்யப்ரகாஷ்ஜி சொன்னபடி பார்த்தா பல ஆயிரம் கோடி மதிப்பு அந்தப் பெட்டிக்கு... அப்ப அது எப்படின்னு நமக்குச் தெரிஞ்சே ஆகணும்...”
- ஜெயராமன் பேச்சோடு பேச்சாகத் தன் போனில் அரவிந்தனைக் கூப்பிட்டார்.
“அரவிந்தன் அந்த மிரட்டல்காரனை போலீஸ் பிடிச்சிடுச்சு...”
“இப்பதான் என் போனுக்கும் தகவல் வந்தது சார்?”
“பெட்டி சாதாரணப் பெட்டி இல்ல... உள்ள இருக்கற விஷயங்களும் அசாதாரணமானதா தான் இருக்கணும்.”
“ஆமாம் சார்... அதனாலதான் நான் பெட்டியை இப்ப பானு ரூமுக்குக் கொண்டு வந்து வெச்சு கதவை எல்லாம் சாத்திட்டு என் செல்போன் கேமராவுலயே படம் பிடிக்கத் தயாராயிட்டேன்.”
“குட்... இங்க மழையும் பெருசா பெய்யத் தொடங்கிடிச்சு. நீங்க ஒரு காரியம் பண்ணுங்க முதல்ல... பூஜை அறைக்குப் போய் அந்த லிங்கத்துகிட்ட எல்லாக் காரியங்களும் நாம விரும்பற மாதிரியே நல்லபடியா முடியணும்னு பிரார்த்தனை பண்ணிக்குங்க.”
“ஷ்யூர் சார்... இப்பவே போறேன்.”
“குட்... நான் ஹாஸ்பிடலுக்குப் போய்ட்டு கூப்பிடறேன்...”
போனை கட் செய்தவரை, பாரதி ஒரு மாதிரி பார்த்தாள், காரை ஓட்டியபடியே...
“என்ன பாரதி, என் பேச்சும் செயலும் உனக்கு ஆச்சர்யத்தோடு அதிர்ச்சியாவும் இருக்கா?”
“ஆமாம் சார்... எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல.”
“இன்னுமா உனக்கு சந்தேகம்?”
“ஆமாம் சார்...”
“பிரார்த்தனைங்கறது எப்பவுமே ரொம்ப நல்ல விஷயம் பாரதி. அது பலிக்கக் கொஞ்சம் தாமதமாகலாம். ஆனா இங்க மின்னல் வேகத்துல பலிக்குது - அதுதான் எப்படின்னு கண்டுபிடிக்கணும். சித்தர்கள் விஷயம்னாலே அது ரொம்ப மிஸ்டிக்காதான் இருக்கும்னு நான் கேள்விப்பட்டிருக்கேன். ஆனா இப்ப அனுபவ பூர்வமாவே பார்க்கறேன்.. எல்லாத்துக்கும் விடை அந்த டைரி, ஏடுகள்ள இருக்கலாம்னு நினைக்கறேன்” என்றபடியே பானுவைப் பார்த்தார் ஜெயராமன்.
“ஆமாம் சார்... அதுல ஒரு ஏட்டுக்கட்டுல உலக அளவுல நடக்கப்போற சம்பவங்கள் பத்தி எல்லாமும் இருக்குதாம். அடுத்த பிரதமர், அடுத்த ஜனாதிபதி, அடுத்த சுனாமி, அடுத்த தமிழ்நாட்டு முதல்வர்... இப்படி எல்லாக் கேள்விகளுக்குமே விடை இருக்காம். அது மட்டும் என் கைல இருந்தா நான் ஐ.நா. சபையையே என் வீட்டு வாசலுக்கு வரவெச்சுடுவேன்னு சார்கிட்ட சொல்லிக்கிட்டிருந்தார் ஜோசியர் நந்தா.”
“அப்ப திவ்யப்ரகாஷ்ஜி பல்லாயிரம் கோடி மதிப்புடைய பெட்டின்னு சொன்னது சரிதான்...”
“அது எப்படி சார் சாத்தியம்? நம்ம சயின்ஸேகூட இந்த உலகத்துல இருக்கறதத்தான் கண்டுபிடிக்க முடியும்னு சொல்லுது. ஆனா அடுத்து ஒரு விஷயம் எப்படிப் போகும், எப்படி நடக்கும்கறதுக்கு எந்த அடிப்படையும் இல்லை. ஒரு செயல்பாட்டுக்குப் பின்னால பல பேரோட சம்பந்தங்கள் இருக்கு. ஒவ்வொருவர் எண்ணப்போக்கும் ஒவ்வொரு விதம். அப்படி இருக்க, ஒரு காரியம் இப்படித்தான் நடந்து முடியும்னு எப்படிச் சொல்ல முடியும்? சான்ஸே இல்லை...”
- பாரதி மறுத்துப் பேசினாலும் முன் போன்ற கோபமோ பெரிய கொதிப்போ இல்லை.
“உண்மைதான்மா... ஆனா உன் கேள்விகளுக்கெல்லாம் சித்த விஞ்ஞானத்துல விடை ஒருவேளை இருக்கலாம். என்னன்னுதான் பார்த்துடுவோமே... ஆனா ஒண்ணு... ஒரு லைஃப் டைம் அசைன்மென்ட் நமக்குக் கிடைச்சிருக்கு. இதை விட்டுடக் கூடாது...”
- ஜெயராமன் சொல்லி முடிக்கவும் காரின் குறுக்கில் ஒரு வயதானவர் குறுக்கிட்டதில் பாரதி பிரேக் பிடிக்கவும் சரியாக இருந்தது.
க்ரீச்ச்...!
கார் தேய்ந்து தோய்ந்து நின்றது!
குறுக்கிட்ட அந்த வயதானவர் பார்க்க தாடியும் மீசையுமாக இருந்தார். நெற்றியில் சுண்ணாம்படித்ததுபோல விபூதி பூசியிருந்தார்.
பாரதி கார்க் கண்ணாடியை இறக்கி விட்டு அவரைப் பார்த்துக் கத்தத் தொடங்கினாள்.
“இப்படியா ஒரு ரோட்ல குறுக்க போவீங்க - நான் பிரேக் போடலன்னா என்னாயிருக்கும்?”
“ஒண்ணும் ஆகியிருக்காதும்மா - எனக்கு ஆயுசு கெட்டி. அதனால நீ பிரேக் போட்டே தீருவே...” என்று சற்றுப் புதிர் போலப் பேசியவர், உள்ளே அவளுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த ஜெயராமனைப் பார்த்து “கொடுத்து வெச்சவர் நீங்க... நான் பார்க்கத் தவிச்சுக்கிட்டிருக்கேன். ஆனா நீங்க தவிக்காமலே பார்த்துட்டீங்க போல! பார்த்து நடந்துக்குங்க. பேராசைப்பட்டு கண்டதைக் கேட்டுடாதீங்க. கவனமாவும் இருங்க. உங்கள நான் அப்புறமா காட்டுக்குள்ள சந்திக்கறேன்” என்றார். ஜெயராமனிடம் அதிர்ச்சி கலந்த பிரமிப்பு!
- தொடரும்