
“உடம்புதான் இங்க கிடக்குது. உயிர் இந்த மலைக்காட்டைத்தானே சுத்தி சுத்தி வந்துகிட்டிருக்கு?”
அன்று தன்னை வியப்போடு பார்த்த அவ்வளவு பேரையும் பெருமிதம் பொங்க பதிலுக்குப் பார்த்தான் ஆழிமுத்து! அவன் சகோதரனான செங்கானுக்கே அவன் அப்படிச் சொன்னது ஒரு பேராச்சர்யமாகப் பட்டது.
“ஆழி... நீ என்னவே சொல்லுறே? பிரார்த்தனை செய்துக்கறதுன்னா என்னன்னு உனக்குத் தெரியுமா?” என்று படபடப்பாகக் கேட்கவும் செய்தான்.
“நமக்கு வேணுங்கறது கேக்கறதுதானே செங்கா?” ஆழி திருப்பிக் கேட்கவும் கிழார்கள் அவனைத் தூண்டத் தொடங்கினர்.
“அப்படி என்ன பிரார்த்தனை செய்து கொண்டாய்?”
“எங்க அம்மை சொல்லும்... வேண்டிக்கிட்டத வெளிய சொல்லக் கூடாதுன்னு... அதனால நான் வெளிய சொல்ல மாட்டேன்.”
- ஆழிமுத்துவின் பதில் அவர்களைச் சோர்வடைய வைத்தது. கூடவே நிறையவே சிந்தனை வயப்பட்டனர். நவமரிடமும் ஒரு சலனம்.
“நாமெல்லாம் அந்த லிங்கத்தை ஒரு பொருளைப் பார்ப்பது போல்தான் பார்த்துக் கொண்டிருந்தோம். ஆழிமுத்து கெட்டிக்காரன். தனக்குத் தேவையானதைக் கேட்டுவிட்டான்...” என்றான் அகப்பை முத்து.
“நான் மனிதர்களிடமே எதையும் இதுவரையில் கேட்டதில்லை. அதனால் இந்தக் கல்லிடம் கேட்பது பற்றிய எண்ணமே எழவில்லை” என்றான் நாரண பாண்டி.
“கல் என்று மலிவாகச் சொல்லாதே... நம் குருபிரான் கூறியதுபோல் ஈரேழு பதினான்கு உலகங்களிலும் எங்கும் இல்லாத பாஷாண லிங்கம் அது... நம் குருவே வணங்கிடும் தெய்வம். ஆதலால் அது நம் தெய்வத்தின் தெய்வம்” என்றான் அஞ்சுகன்.
“சரியாகச் சொன்னாய்... அது தெய்வத்தின் தெய்வம். பூச்சு மண் உடைந்து லிங்கம் கண்ணில் படவும் எனக்குப் பிரமிப்பாக இருந்தது. பாஷாணங்கள் ஒன்று சேர்ந்தால் அவை கல்லையும் உருக்கையும் விட வலிவும் திடமும் கொண்டதாகும் என்பதும் புரிந்தது.”

“மிகச்சரியாக அந்தப் புலி வந்ததுதான் ஆச்சர்யம். அதைவிட ஆச்சர்யம் அதற்கு கிடைத்த விடுதலை!” என்றபடியே உயிரை விட்ட நிலையில் பிணமாய்க் கிடந்த புலியைப் பார்த்தனர். அதைச் சுமந்து வந்திருந்த கொட்டாரச் சீடர்கள் அவர்கள் பேச்சை யெல்லாம் ஆர்வமாய்க் கேட்டதோடு அந்தப் புலியுடல் அருகே சென்று உற்றுப்பார்த்தனர். அவர்களில் ஒருவன் “இதை நாம் இப்படியே சுமந்து செல்லுதல் கூடாது. ஒரு தூரி கட்டி அதை மூங்கிலில் பொருத்தி எடுத்துச் செல்வோம். பொதினிக் காட்டில் கஜமுத்து என்றொரு வேடன் உள்ளான். நமக்கு அவ்வப்போது தேன் எடுத்து வந்து தருபவன். அவனிடம் இதைக் கொடுத்துவிட்டால், அழகாய் உரித்து மாமிசத்தை நீக்கிவிட்டு பக்குவமாய்ப் பாடம் செய்து தருவான்” என்றான்.
கிழார்கள் மூவருமே தனியே ஒதுங்கிச் சென்று குகைக்கு வெளியே ஒரு பாறை மேல் தேங்கி நின்றனர். வானில் கதிரவன் உச்சிப்பயணம் செய்தபடி இருந்தான். மழை வந்தாலும் வரலாம் எனும்படியாக மேகப் பொதிகளில் பலத்த சாம்பல் வண்ணம்! மலைச்சரிவின் அடர் தாவரங்களிடையே வண்ணத்துப்பூச்சிகள் நிறைய தெரிந்து ஒரு பருவம் முடிந்து மறுபருவம் தொடங்கிவிட்டதை ருசுப்பித்தபடி இருந்தன. கரிக்குருவிகளின் அலட்டலான ‘ட்ரௌச்ச்... ட்ரௌச்ச்...’ என்கிற சத்தம் வேறு. வரையாடு ஒன்று ஒரு குட்டை நுணா மரத்தின் மீதேறி அதன் இலைகளைக் கடித்துக்கொண்டிருந்தது. வேடர்கள் பார்த்தால் அந்த வரையாட்டைக் கழுத்தில் பாணம் போட்டு விழச் செய்து பிடித்துவிடுவார்கள். ஒருவர் மட்டும் பிடிப்பதென்பது அசாத்தியம். சரிவுகளில் அது இழுத்துக்கொண்டு ஓடுவதோடு பிடித்தவனை முட்டி வீழ்த்தவும் செய்யும். அதையெல்லாம் நினைத்துக்கொண்டே, பாறைமேல் நின்று அந்த வரையாட்டைப் பார்த்த கிழார்கள் அடுத்து தாங்கள் என்ன செய்வது என்பதுபோல் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
“நல்ல வாய்ப்பை நழுவ விட்டுவிட்டோம். போகர் பிரான் அந்த லிங்கத்துடன் இவ்வளவு விரைவாக இங்கிருந்து செல்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை” எனப் பெருமூச்சுடன் பேச்சை ஆரம்பித்தார் வேல்மணிக்கிழார்.
“இப்போது என்ன கெட்டுவிட்டது. கொட்டாரத்திற்குச் சென்றால் அந்த லிங்கம் அங்கே இருக்கத்தானே போகிறது. அதை அப்போது பார்த்து வேண்டிக்கொள்வோமே” என்றார் அருணாசலக்கிழார்.
“என்னால் இங்கு நடந்தவற்றை நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை... போகர் பிரானிடமிருந்து ஒரு விஷயத்தைக்கூடக் கற்கவும் முடியவில்லை. எவ்வளவு முயன்றாலும் அதற்கு சித்தம் புரிய வேண்டும் என்பது பதிலாகி விடுகிறது” என்று சற்றே சடைத்தார் கார்மேகக்கிழார்.
இப்படி மூவரும் பேசிடும் தருணம் இறந்த புலியின் உடலை ஒரு ஆடையைக் கொண்டு தூரிபோல் கட்டி அதை ஒரு மூங்கிலில் கட்டி கொட்டாரக் காரர்கள் இருவர் தங்கள் தோள்களில் சுமந்து சென்றனர். புலியின் வால் மட்டும் தூரிக்கு வெளியே தொங்கலாய் காட்சி தந்து ஆச்சர்யப்படுத்தியது.
“இந்தப் புலி ஒரு ஆச்சர்யப் பிறவி. இதனுள் முதலில் ஒரு மனிதன் ஆன்மா உள் புகுந்தது. இறந்த பிறகு தூரியில் செல்கிறது.
எந்த மிருகத்துக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை” என்று அங்கலாய்த்தார் வேல்மணிக்கிழார்.
அதற்குள் அவர்கள் கண்களை விட்டே மறைந்துவிட்டனர். நவமரும் கூட்டமாக வெளியே வந்தனர். கிழார்களை அடுத்து என்ன செய்யப்போகிறீர்கள் என்பதுபோல பார்த்தனர்.
“என்ன சீடர்களே... நீங்கள் அனைவரும் இங்கேயே இருக்கப் போகிறீர்களா?”
“ஆமாம் கிழாரே... சிவலிங்கத்துக்குச் செய்ததுபோலவே பாஷாணங்களை இடிப்பது, சலிப்பது, கலப்பது என்கிற பணிகள் உள்ளனவே?”
“ஒரு சிறுலிங்கத்துக்கே ஐந்தாறு நாள்களாகிவிட்டன. தண்டபாணித் தெய்வத்துக்கு மேலும் பல நாள்களாகலாம் எனக் கருதுகிறோம்.”
“ஆம்... வேகமாகவும், இன்னும் சிறப்பாகவும் செயல்பட வேண்டி, பாறை ஒன்றில் ஓரடி ஆழத்துக்கும் அகலத்துக்கும் குழியை உருவாக்கப்போகிறோம். பின் அதில் உளிப்பொளி செய்து அதில் பாஷாணங்களைப் போட்டு இடிக்கப் போகிறோம்.”
“உதக நீர் போதுமான அளவு உள்ளதா?”
“இல்லை... அதன் பொருட்டு மலைப்படு இனம் சார்ந்த தொந்தன், தோதன் என்னும் இருவரின் உதவியைக் கேட்டுப் பெறவுள்ளோம். அவர்களுக்கு அருகில் உள்ள கூகை வனக்காடும், பொதிகை நோக்கிய மலைத் தொடர்ச்சிகளும் மிகப் பரிச்சய மானவை... முன்புகூட அவர்களே உதவினர்!”
“மூலிகை ரசத்துக்கு என்ன செய்யப்போகிறீர்கள்?”
“எங்களில் மூவர் மெழுகுச் சிலை தயாரான நிலையில் அதைப் பறித்து வரச் செல்ல உள்ளோம். அது இருக்கும் இடம்தான் தெரிந்து விட்டதே?”
“உங்களுக்கான உணவும் தேடியே வந்துவிடும். கவலை இல்லை. கடமையைச் செய்ய வேண்டியது மட்டுமே உங்கள் பணி. இல்லையா?”

“ஆம்... அவ்வப்போது போகர் பிரானும் வந்து செல்வார்.”
“அதுவும் சரிதான்... அப்படி யானால் நாங்கள் இப்போது புறப்படுகிறோம். மிகச்சரியாக ஆறு நாள்கள் கழித்து வருகிறோம். இப்போது லிங்க தரிசனம் புரிந்தது போலவே தண்டபாணி தெய்வ தரிசனத் தையும் காண விரும்புகிறோம்.”
“நீங்கள் காண வேண்டியதும் அவசியம். அப்போதுதானே காலப்பதிவை உருவாக்க முடியும்?”
- நவமரோடு கிழார்கள் பேசியபடி இருந்த அவ்வேளை உள்ளே கருமார்கள் இருவரும் ஒருவருக்கொருவர் உரசியபடி இருந்தனர்.
“ஆழி... நீ அந்த லிங்கத்துக்கிட்ட பிரார்த்தனை பண்ணிக்கிட்டேன்னு சொன்னப்ப எனக்கு திக்குன்னு இருந்துச்சு. எனக்கு சாடை காட்டியிருந்தா நானும் எதையாச்சும் கேட்ருப்பேனில்ல...?”
“எனக்கு அதெல்லாம் தோணலை செங்கான். என் மனசெல்லாம் அந்த சாமி மேலயேதான் இருந்துச்சு.”
“சரி... அப்படி என்னத்த நீ அதுகிட்ட கேட்டே?”
“அதைதான் சொல்லக் கூடாதுன்னு சொன்னேன்ல?”
“நான் உன் ஒடம்பொறப்பு. என்கிட்ட சொன்னா என்ன... நாம ஒரு தாயி மக்க இல்லியா?”
“அப்ப சரி... உன்கிட்ட மட்டும் சொல்றேன். நீ யார் கிட்டயும் சொல்லிடாதே...”
“நீ முதல்ல என்ன வேண்டிக் கிட்டேன்னு சொல்லு.”
“சொல்றேன்... கல்லையும் மண்ணையும் கூட இந்த சித்தர் சாமிங்க ரசவாதம் பண்ணி தங்கமாக்கு வாங்களாமே? அந்த ரசவாத ரகசியம் தெரியணும்னு வேண்டிக்கிட்டேன்...”
“ஆழீ...! நீ பெரிய ஆளுவே! புளியம் கொம்ப பிடிச்சா மாதிரி, சரியான விசயத்தைத்தான் சாமிகிட்ட கேட்ருக்கே..!”
“மெல்லப் பேசு... நான் கேட்டுட்டேன் - ஆனா சாமிதான் எப்படி அதைத் தரப்போகுதுன்னு தெரியல...”
“அதையும் பாக்கத்தானே போறோம். ஒரு புலிக்கு நடந்ததையே கண்ணால பாத்தோமே... அப்ப நமக்குத்தானா நடக்காது?”
“அப்படி மட்டும் நடந்துட்டா இந்த போகர்சாமி அவர் பங்குக்கு முருகன் சாமியை பாஷாணத்துல பண்ணிக்கட்டும். நாம தங்கத்துலயே பண்ணுவோம். என்ன சொல்றே?”
“கட்டாயம் பண்ணுவோம். நமக்கெல்லாமும் முருவன்தானே கொல சாமி...?”
“சரி... கொஞ்ச நேரமாவே எனக்கு வயிறு சரியில்ல. கொஞ்சம் ஒதுங்கிட்டு வரேன். நீ அச்சு மண்ணை சலிச்சு வை. வந்துடறேன்...”
- ஆழிமுத்து அந்த குகைக்குள் ஓரமாய்க் கிடந்த மண்கெல்லியை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.
குகைக்கு வெளியே கெல்லியோடு அவன் வருவதைக் கண்டவர்களுக்கு அவன் எங்கே செல்கிறான் என்பது அவன் சொல்லாமலே புரிந்துபோயிற்று. கிழார்களும் புறப்பட்டு நெடுந்தூரம் போய்விட்டிருந்தனர். நவமர் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர்.
ஆழிமுத்து மறைவிடத்தைத் தேடி நடக்கலானான். வழிமறித்த செடி கொடிகளை மண்கெல்லியால் விலக்கிக் கொண்டே நடந்தான். நிறைய பொற்சீந்தல் கொடிகளும் சபரிக் கொடிகளும் தழைத்திருந்தன! சிறிய அளவில் வெண்ணாவல் மரம் ஒன்று தழைத்திருக்க அதன்மேல் வெள்ளைக் கழுத்துடைய கருடன் அமர்ந்திருந்தது. அதன் இரு காலிடையே ஒரு சிறு கட்டுவிரியன் பாம்பு சிக்கியிருந்து நெளிந்தபடி இருந்தது. அதன் உணவு!
ஆழிமுத்துவுக்கு வாகாக அமர்ந்திடத் தோதாக ஒரு இடம் கண்ணில் படவில்லை. அருகேயே நீரும் இருத்தல் அவசியம். அது சுனையாகவோ, ஓடையாகவோ, அருவியாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அந்தக் கரட்டுமலை ஆழிமுத்துவை அதிகம் தேடச் செய்தது.
ஓரிடம் நல்ல நிழலோடு ஒதுங்கத் தோதாக இருந்தது. ஆனால் அதுவரை நிலவிவந்த வயிற்று உப்புசம் சட்டென்று மாறி ஒரு இயல்பு நிலை தெரிந்தது. ஆழிமுத்துவுக்கே அது ஒரு ஆச்சர்யமாகப் பட்ட அத்தருணத்தில் மிக மெல்லிய குரலில் யாரோ ‘ஓம் நமசிவாய’ என்று முணுமுணுப்பது போலவும் காதுகளில் ஒரு சப்தம் கேட்டது.
யாரது, எங்கிருந்து வருகிறது இந்த சப்தம் என்று அவன் கூர்மையாகி நாலாபுறமும் பார்த்ததில், இருபாறை நடுவில் ஒரு கை மட்டுமே நுழைய முடிந்த இடுக்குக்குள் இருந்துதான் அது கேட்டது.
உடனேயே அங்கு சென்று அதன் வழியே உள்ளே பார்க்கவும் ஒரு நிர்வாணச் சித்தர் தலைகீழாக சிரசாசனம் புரிந்த நிலையில் மிக விபரீதமாகக் கண்ணில் பட்டார். அந்தக் காட்சியும் கோலமும் ஆழிமுத்து கற்பனைகூடச் செய்து பார்த்திராத ஒன்று!
ஆழிமுத்துவால் வைத்த விழிகளை எடுக்க முடியவில்லை. `யார் இவர்? இதென்ன கோலம்?’ அவனுக்குள் கேள்வியின் ஓட்டம்.
அவர்மேல் ஏதோ ஒரு விதத்தில் சூரிய வெளிச்சமும் பட்டதில் அவர் முகம் நன்கு தெரிந்தது. அது அவனைப் பார்த்தது. அதில் உள்ளே வரச்சொல்லி அழைப்பு!
“உடம்புதான் இங்க கிடக்குது. உயிர் இந்த மலைக்காட்டைத்தானே சுத்தி சுத்தி வந்துகிட்டிருக்கு?”
ஆனால் எப்படி உள் நுழைவது? ஒரு கை மட்டும் நுழைய முடிந்த அதன் வழியே எப்படி நுழைய முடியும்? வேறு வழி ஏதாவது இருக்கிறதா என்று அவன் யோசிக்கும் போதே அந்தப் பாறை அவன் நுழைய முடிந்த அளவு மெல்ல விலகுவது போல் அவனுக்குத் தோன்றியது.
துளிகூட சப்தமில்லை! ஆனால் உள் நுழையப் போதுமான இடமிருந்தது. அவனும் நுழைந்தான். பாறையைக் கடந்து உள்ளேயும் நுழைந்துவிட்டான். அந்த சித்தரும் சிரசாசன கோலத்தில் இருந்து நேரானார். அவர் உயரத்திற்குச் சடை போட்டிருந்தது கிட்டே சென்ற பிறகே தெரிந்தது.
அவர் சிரித்தார்! கண்களில் ஒரு அசாத்திய வெளுப்பு. பார்வையின் தீர்க்கம் எவரையும் கட்டிப்போட்டுவிடும்! ஆழிமுத்து கையில் அந்த மண்கெல்லி இல்லை. அதை வெளியேயே விட்டுவிட்டிருந்தான். கைகள் இரண்டையும் கூப்பி வணங்கினான்.
“சாமீ...!” என்றான் பக்திபூர்வமாய்.. “என்ன... ஈஸ்வர தரிசனம் பண்ணின போல இருக்கு?” - அவர் மிக இதமாய்க் கேட்டார். ஆழிமுத்துவுக்கு அவர் கேள்வி முதலில் புரியவில்லை.
“சாமி என்ன கேட்டீங்க?” எனத் திருப்பிக் கேட்டான்.
“லிங்க தரிசனமாச்சான்னு கேட்டேன்.”
“ஆச்சுசாமி... ஆச்சு... அது எப்படி உங்களுக்குத் தெரியும் சாமி?”
“உடம்புதான் இங்க கிடக்குது. உயிர் இந்த மலைக்காட்டைத்தானே சுத்தி சுத்தி வந்துகிட்டிருக்கு?”
“அப்ப நீங்களும் பாத்தீங்களா?”
“ஆமாம்... ஆனா நான் பார்த்தது போகனுக்குக்கூடத் தெரியாது.”
“இங்க இந்தக் குகைக்குள்ள என்ன செய்யறீங்க சாமி?”
“என்னை அடக்கி என்னை ஜெயிக்க எனக்குள்ள நான் என் கூடவே போராடிக்கிட்டிருக்கேன்.”
-அவர் தத்துவமாய் பதில் சொன்னார்.
“என்ன சொல்றீங்க சாமி - புரியல எனக்கு.”
“புரியவேண்டியது புரிஞ்சிருந்தா தான் அந்த லிங்கம் கிட்ட மோட்சத்தைக் கேட்ருப்பியே... இப்படியா தங்கம் பண்ற அல்பமான ரசவாத ரகசியத்தைக் கேப்பே?”
“ரசவாத ரகசியம் அல்பமா சாமி?”
“வேற எப்படிச் சொல்ல... அது ஒரு உலோகம்! கருக்காத உலோகம். அவ்வளவுதான்! பசிச்சா அதைச் சாப்பிட முடியுமா? நம்ப பசிதான் ஆறிருமா? ஒரு விதை நெல்லுக்கு ஒரு மலையளவுத் தங்கமும் ஈடாகாது... தெரிஞ்சுக்க.”
“ஆனா அது மட்டுமிருந்தா அதை வெச்சுப் பணம் பண்ணி ஊருக்கேகூட சோறு போடலாமே?”
“இதுவரை எத்தனை பேர் போட்ருக்காங்க... இனி நீ போட்றதுக்கு?”
“சாமி நீங்க என்ன சொல்ல வரீங்க?”
“அதோ அங்க இருக்கு பார் ஒரு ஏடு...” - அவர் கைகாட்ட, ஆழிமுத்து பார்த்திட, சற்றுத் தொலைவில் ஒரு பாறைமேல் ஓர் ஏட்டுக்கட்டு! அதன் நடுநெற்றியில் பிள்ளையார்சுழிக்குக் கீழே ‘சொர்ண ரகசியம்’ என்னும் தலைப்பெழுத்துகள்!
இன்று அந்த வயதான பரதேசி மனிதர் சென்றுவிட, ஜெயராமன் பிரமிப்பில் ஆழ்ந்திட, பாரதி காரை வேகமாக இயக்கத் தொடங்கியிருந்தாள்.
‘யார் இந்த மனிதர்? ஏதோ மிகப் பரிச்சயப்பட்டவர்போல எந்தப் பொருளில் பேசிவிட்டுச் செல்கிறார்?அமானுஷ்ய செயல்பாடுகள் என்பவை இப்படித்தான் எந்தவிதமான முன்பின் தொடர்பும் இன்றி நடக்குமா? ‘காட்டுக்குள் சந்திக்கிறேன்’ என்றாரே?அப்படியானால் நான் காட்டுக் கெல்லாம் போகப் போகின்றேனா? அங்கு எனக்கு என்ன வேலை?’
ஜெயராமன் தனக்குள் கேள்விகளாய்க் கேட்டுக்கொண்டே பாரதியைப் பார்த்தார். அவள் அந்தப் பரதேசி மனிதரைப் பற்றி எதாவது பேசக்கூடும் என்று எதிர்பார்த்தவரை பாரதி மிகவே ஏமாற்றினாள். அவள் கவனமெல்லாம் சாலைமேல்தான் இருந்தது.
அவரைப் பற்றி ஒரு கேள்விகூடக் கேட்கவில்லை.
ஆனால் பானு முகத்தில் ஒரே பரபரப்பு.
“சார்..!”
“சொல்லும்மா.”
“இப்ப உங்களோட பேசினவர்...?”

“தெரியலம்மா... ஆனா ரொம்பத் தெரிஞ்சவர் மாதிரி பேசிட்டுப் போறாரு...”
“பேராசைப் பட்டு கண்டதைக் கேட்டுடாதீங்கன்னு ஏதோ சொன்னாரே சார்?”
“ஆமாம்ல... எதை யார்கிட்ட நாம கேட்கப் போறோம்? எனக்குப் புரியல... உனக்குப் புரியுதா?”
- ஜெயராமன் பானுவிடம் மிக நெருக்கமாகவே பேசத் தொடங்கிவிட்டார். மழைத்தூறல் வலுத்து பாரதியும் வைப்பரை வேகமாய் இயக்கி, சற்றுத் தடுமாற்றத்துடன் காரை ஓட்டலானாள்.
“அந்த சிவலிங்கத்துக்கிட்ட பிரார்த்தனை செய்துக்கறதைத்தான் சொல்லியிருக்கணும்னு நான் நினைக்கறேன்” என்றாள் பானு.
ஜெயராமன் பதிலேதும் சொல்லவில்லை!
இடையில் அவரது கைப்பேசிக்குப் பத்திரிகை அலுவலகத்திலிருந்தே அழைப்பு. நியூஸ் எடிட்டர் ரங்கராஜன் பேசினார்.
“சார் கரன்ட் இஷ்யூவுக்கான தலையங்கம் பெண்டிங்குல இருக்கு... எப்பவும் உங்ககிட்ட இருந்து வந்துடும்.”
“ஓ... ஐ ஆம் சாரி ரங்கராஜ்! நான் மறந்தே போயிட்டேன்.”
“உங்க வரைல இது ஆச்சர்யமான பதில் சார். ஏதாவது டெலிகேட் சிச்சுவேஷனா சார்...?”
“ஆமாம். இதை டெலிகேட்னுல்லாம் சொல்ல முடியாது. ரொம்ப பெக்கூலியர்... இன்ஃபாக்ட் இதை எப்படிச் சொல்றதுன்னே எனக்குத் தெரியல.”
“இப்ப என்ன சார் பண்ணட்டும் - நீங்க எப்ப ஆபீஸ் வருவீங்க?”
“நான்... நான்... தெரியல ரங்கராஜ்.”
“அப்ப தலையங்கம்?”
“ஏன் நீங்க எழுதக் கூடாது?”
“ஷ்யூர் சார்... வேணும்னா ட்ராஃப்டை உங்களுக்கு அனுப்பவா?”
“யெஸ்... எழுதி எனக்கு மெயில் பண்ணுங்க... ஒரு பார்வை பாத்துடறேன். பை த பை எந்தப் பிரச்னையை, அதாவது எதைத் தொட்டு எழுதப் போறீங்கன்னு ஏதாவது ஐடியா இருக்கா?”
“அஃப்கோர்ஸ் ஒரு பெரிய மழை இருக்குன்னு ஃபோர் காஸ்ட் நியூஸ் சொல்லுது. வெதர்மேன்கற ஒருத்தரும் புயல், வெள்ளம் எல்லாம் நிச்சயம்னு பிரெடிக்ட் பண்ணியிருக்கார். அதற்கேற்ப சைக்ளோனும் ஃபார்ம் ஆகியிருக்கு. ஆகையால இந்த மழை நீரைச் சேகரிக்கறது தொடர்பா எழுதினா பொருத்தமா இருக்கும்னு தோணுது. பல ஏரி, குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கு. நம்ப பொதுப்பணித்துறையும், சமூக நல அமைப்புகளும் ஒண்ணா சேர்ந்து செயல்பட்டா எல்லா ஏரி குளமும் நிரம்பிட வாய்ப்பு இருக்கு சார்.”
“குட்... நல்ல ஆலோசனைதான்! கோ அஹெட்...”
“அப்புறம் எழுத்தாளர் அரவிந்தன் சாரோட தொடர்கதை சம்பந்தமாவும் கொஞ்சம் பேசணும் சார்...”
“ஓ... அவர்கிட்ட இருந்து சேப்டர் இன்னும் வரல இல்ல?”
“ஆமாம் சார்.”
“எனக்குத் தெரிஞ்சு இந்த வாரமும் வர வாய்ப்பு இல்லை. நீங்க வேற யாரையாவது இந்த முறை எழுத வெச்சிடுங்க. அரவிந்தன் அடுத்து எழுதட்டும்.”
“உங்ககிட்ட ஏதாவது பேசினாரா சார்..?”
“ஆங்... கொஞ்சம் முந்திகூட பார்த்தேன். அநேகமா அவர் எழுதப்போற தொடர் உண்மை அனுபவங்களின் தொடர்புடைய ஒரு அமானுஷ்ய படைப்பா இருக்கலாம். அதையெல்லாம் நான் நேர்ல பேசும்போது சொல்றேன். இப்ப நீங்க தலையங்கத்தை முடிச்சு மெயில் பண்ணுங்க.”
-ஜெயராமன் பேசி முடித்திட ஆஸ்பத்திரிக் குள் கார் நுழைய சரியாக இருந்தது. பாரதி அமைதியாகவே காரை விட்டு இறங்கி ஜெயராமனுடன் நடந்தாள். பானு அவர்களைப் பின்தொடர்ந்தாள். முன்பைவிட அதிக அளவில் போலீஸ்காரர்கள் தென்பட்டனர். அவள் தன்னையும் சோதனைக்கு உட்படுத்திக்கொண்டாள்.
மிரட்டல் மனிதர் கைதாகிவிட்டதற்காக இங்கே எந்தத் தளர்ச்சியும் இல்லை. பாரதியை ஒரு பெண் ஆய்வாளர் கண்டுகொண்டு தொடர்ந்தார்.
“அரெஸ்ட் ஆன நபர் பின்னால ஒரு கூட்டம் இருக்கற மாதிரி தெரியுதும்மா. அவங்க யாராவதுகூட பிரச்னை பண்ணலாம்னு டிபார்ட்மென்ட்ல ஃபீல் பண்றாங்க. அதனால செக்யூரிட்டி சிஸ்டம் ஃபுல் டைட்லதாம்மா இருக்கு” என்று சொல்லிக்கொண்டே ராஜாமகேந்திரன் வார்டு வரை வந்தார் அந்தப் பெண் போலீஸ் அதிகாரி.
பாரதிக்குக் கொஞ்சம் சுருக்கென்றது.
மழை விட்டும் தூவானம் விடாத மாதிரி இது என்ன புதுச் சிக்கல்? வேறு யாராவதுகூடக் கொல்ல வருவார்களா? - மனதில் கேள்வியோடு வார்டுக்குள் நுழைந்தபோது அந்த ஜோதிடர் இல்லை. கணேசபாண்டி மட்டும் இருந்தார்.
“வாங்க பாப்பா... சார் கேட்டுகிட்டே இருந்தாரு?”
“நல்லா பேசறாராண்ணே?”
“பேசறார்மா... டாக்டருங்க வாய பொளக்கறாங்க. சீஃப் டாக்டர் நம்ப ஜோசியரைத் தன் வீட்டுக்கே கூட்டிக்கிட்டுப் போய்ட்டார்னா பாத்துக்குங்களேன்..”
- பேச்சோடு பேச்சாகக் கதவைத் திறந்துகொண்டு ஜெயராமன் சாரை முதலில் உள்விட்டு, பின்னால் பாரதி, ராஜா மகேந்திரன் முன் சென்று நின்றாள். அவர் நெற்றியில் நிறையவே விபூதி, குங்குமம், கையில் கறுப்பாய் ஒரு கயிறு வேறு... ஜோசியர் வேலை?
“அப்பா...” என்றாள் மிக சகஜமாய்.
“வாடா...!” பாசத்தோடு அழைத்து ஆச்சர்யத்தை அதிகரித்தார் எம்.பி.
“அப்பா எங்க எடிட்டர் சாரும் வந்திருக்கார்...’’ என்று ஜெயராமனைப் பார்த்தாள். பதிலுக்கு ராஜா மகேந்திரன் வணங்குவதுபோலப் பார்த்தார்.
“ஸ்ட்ரெய்ன் பண்ணாதீங்க. உங்களுக்கு இப்ப தேவை நல்ல ஓய்வு மட்டும்தான்...” என்றார் ஜெயராமன்.
பதிலுக்கு மிக சன்னமாக சிரித்தார் ராஜாமகேந்திரன்.
“அப்பா...” பாரதி அவரைத் தன் பக்கமாய்த் திருப்பினாள். அவரும் விழிகளை உருட்டிப் பார்த்தார்.
“இங்க நீங்க இப்படி இருக்கக் காரணம் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன்... இப்ப நான் அதிகம் பேச விரும்பல. பேசற இடமும் இது இல்லைன்னு எனக்குத் தெரியும்.
நான் இப்ப இங்க இருந்து நேரா அந்தக் குமாரசாமி வீட்டுக்குத்தான் போகப்போறேன். அவர் நிலத்துக்கு இனி எந்தப் பிரச்னையும் இல்லைன்னும் சொல்லப்போறேன். அப்படியே 25 லட்ச ரூபாயை நஷ்ட ஈடா தந்தா ரொம்ப நல்லதுன்னும் நான் நினைக்கறேன்” என்று தெளிவாகப் பேசினாள். பதிலுக்கு பாரதியை வெறித்துப் பார்த்த ராஜா மகேந்திரன், “நான் கொஞ்சம் கஷ்டம் கொடுத்தேன் - பதிலுக்கு அங்க இருந்தும் எனக்குக் கஷ்டம் கொடுத்து ட்டாங்க! இனி அதைப் பத்தியெல்லாம் பேச வேண்டாம்மா... எனக்கு இனி எதுவும் ஆகாது. இப்ப நீ எனக்காகச் செய்ய வேண்டியது ஒண்ணே ஒண்ணுதான்” என்று அவரும் மிகத் தெளிவாகப் பேசினார். பாரதி மட்டுமல்ல, ஜெயராமனும் கூர்மையானார்.
“ஒரு பெட்டி நம்ப வீட்ல இருக்காம்ல?” - அவர் பெட்டியைப்பற்றிக் கேட்கவும் பாரதியிடம் திகைப்பு.
“அதுக்கென்னப்பா?”
“அது பத்திரம்மா.. அது சாதாரணப் பெட்டி இல்ல...”
“ஓ... அந்த ஜோசியர் உங்ககிட்ட எல்லாத்தையும் உளறிட்டாரா?”
“என்னம்மா அப்படிச் சொல்றே... உனக்கு நம்பிக்கை இல்லைன்னா ஒதுங்கிக்கோ - மத்தபடி நான் சொல்றபடி கேள்...”
“நோ... உண்மைல அதுக்கு உரியவங்க அதைக் கேட்டு வந்து நானும் தர்றதா சொல்லிட்டேன்.அது வந்ததுல இருந்து நானும் நானா இல்லை. இன்னும் கொஞ்ச நாள் அது இருந்தா எனக்குப் பைத்தியமே பிடிச்சாலும் பிடிச்சிடும்.” -பாரதி படபடத்திட, ராஜாமகேந்திரனிடமும் படபடப்பு தொற்றத் தொடங்கி கண்கள் அகன்று விரிந்தன. ஜெயராமனுக்குள் ஒரு பட்சி அலறத் தொடங்கியது.
“பாரதி... அப்பாகிட்ட இப்படி எல்லாம் பேசாதே! சார் நீங்க கவலைப்படாதீங்க - அந்தப் பெட்டி பத்திரமா இருக்கு. இனியும் இருக்கும்” என்றவர் “அந்தக் குமாரசாமி ஃபேமிலிக்கு பாரதி விருப்பப்பட்ற மாதிரி ஒரு 25 லட்சத்தைக் கொடுத்து சமாதானம் செய்யறதும் இப்ப முக்கியம். இதைக் காதும் காதும் வெச்ச மாதிரி செய்துடலாம். நீங்க இதுக்கு சரின்னு சொல்லுங்க. பெட்டி விஷயத்துல பாரதியும் தலையிடாதபடி நான் பார்த்துக்கறேன்” என்றார்.
வேகமா வீட்டுக்குப் போ... அந்தப் பெட்டியை எடுத்து என் பர்சனல் ரூம்ல வெச்சுப் பூட்டிடு. பாரதி கேட்டா என்கிட்ட பேசச் சொல்.
பதிலுக்கு ராஜாமகேந்திரன் பார்த்த விதமே சரியில்லை. ஜெயராமன் இப்படிப் பணயம் வைத்து சமாதானம் செய்வதும் சுத்தமாகப் பிடிக்கவில்லை. பாரதிக்கும் ஜெயராமன் அப்படிப் பேசியது சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவரை அப்போதே எதிர்க்கவும் தயக்கமாக இருந்தது.

“ஆமா... அந்தக் கொலைகாரனை போலீஸ் பிடிச்சிடிச்சுதானே?” - ராஜாமகேந்திரன்தான் பாய்ன்ட்டாகக் கேட்டார்.
“ஆமாம்... அப்படித்தான் தகவல் வந்தது.”
“அவனைச் சும்மா விடக் கூடாது. கமிஷனர்கிட்ட நான் பேசிக்கறேன். 25 லட்சமெல்லாம் ரொம்ப அதிகம். அந்த இடத்தை அவங்க விக்கறதா இருந்தா யோசிப்போம். இடமும் கிடையாது, பணமும் தரணும்னா தட்ஸ் இம்பாசிபிள். எடிட்டர் சார்... இப்படி நான் இருக்கறதுக்கு எனக்கு நஷ்ட ஈடு யார் தருவா? யோசிச்சீங்களா?”
- அந்த எம்.பி-யிடம் துளியும் திருத்த மில்லை. தன் செயலுக்கான வருத்தமுமில்லை. அது ஒவ்வொரு வார்த்தையிலும் எதிரொலித்தது. பாரதிக்கு நின்ற இடத்தில் தான் எரிவதுபோல் தோன்றியது. ஜெயராமனும் அதற்கு மேல் பேசவில்லை.
புறப்படத் தொடங்கினாள்.
“வாங்க சார் போகலாம்...” என்று முன்னால் நடந்தாள். ஜெயராமனும் பின்தொடர்ந்தார். கணேசபாண்டியும், பானுவும் மட்டும் நின்றபடி இருக்க ராஜாமகேந்திரனின் பார்வை அடுத்து பானுமேல்தான் விழுந்தது.
“பானு?”
“சார்...”
“வேகமா வீட்டுக்குப் போ... அந்தப் பெட்டியை எடுத்து என் பர்சனல் ரூம்ல வெச்சுப் பூட்டிடு. பாரதி கேட்டா என்கிட்ட பேசச் சொல். பேசாம ஒருவேளை கோவிச்சுக்கிட்டு வீட்டை விட்டுப் போனா போகட்டும். நான் டிஸ்சார்ஜ் ஆகி வந்து எல்லாத்தையும் சரி செய்துக்கறேன்.”
“சார்...”
“என்ன?”
“அது அவ்வளவு சுலபமில்ல சார். பாம்பு ஒண்ணு எப்பவும் அதுக்குக் காவலா இருக்கு சார்...”
“ஜோசியர் அதையும் சொன்னார். பாம்பைச் செயலிழக்க வைக்க ஏதோ வழி இருக்காம். அவர் பார்த்துக்குவார். நீ கவலைப்படாதே. அவரும் நம்ம பங்களாவுலயே தங்கி இருக்கட்டும்.”
அப்ப ஜோசியர் கிட்டயே எல்லாத்தையும் செய்யச் சொல்றேன். அவர்தான் சரி...
- எல்லாக் கேள்விக்கும் எம்.பி. ராஜாம கேந்திரிடம் ஒரு பதில் இருந்தது. ஆனாலும் பானுவிடம் தயக்கம்.
“என்ன யோசனை.. உனக்கு பயமா இருந்தா ஒதுங்கிக்கோ... கணேசபாண்டி நீ கிளம்புய்யா... நான் சொன்னதைச் செய்?”

- எம்.பி-யின் கட்டளைக்கு கணேச பாண்டியிடமும் தயக்கம்.
“அப்ப ஜோசியர் கிட்டயே எல்லாத்தையும் செய்யச் சொல்றேன். அவர்தான் சரி... அவருக்கு போனைப் போடு. நீங்கல்லாம் திங்கத்தான் லாயக்கு...”
பானு உடனே ஜோதிடருக்கு போன் செய்யலானாள்.
“அச்சா பானு..”
“சார் பேசணுமாம்.”
“கொடு கொடு.”
-போனும் கை மாறிட
“நந்தாஜி...”
“சொல்லுங்கோ சாப்...”
“எங்க இருக்கீங்க?”
“சீஃப் டாக்டர் குணசேகர் சார் வீட்ல...”
“அவருக்கும் பெட்டி பத்தித் தெரிஞ்சு போச்சா?”
“ஏ... க்யா சாப்! அது டாப் சீக்ரெட் - நான் வெளிய பேசுவேனா?”
“குட்... நீங்க உடனே கிளம்பி வீட்டுக்குப் போங்க. என் பொண்ணு போக்கும் நீங்க சொன்ன மாதிரி சரி இல்லை. காந்திக்குப் பேத்தி மாதிரி பேசறா! அந்தப் பெட்டியை அவ தூக்கிக் கொடுத்துடக் கூடாது. அதுல இருக்கற ஒரு தூசி கூட என் வீட்டை விட்டுப் போகக் கூடாது.ஆமா அதுலதானே அந்த பலகணியோ தலகாணியோ இருக்கறதா சொன்னீங்க?”
“காலப்பலகணி..! நாஸ்டர்டாமஸ் ப்ரெடிக்ஷன்லாம் இது முன்னால ஒண்ணுமில்ல.”
“அதையெல்லாம் நான் பாக்கணும். எனக்கு மந்திரி பதவி கிடைக்குமான்னு முதல்ல தெரியணும். தெரியும்தானே?”
“நல்லா தெரியும். நான் கணக்கு போட்டுச் சொல்றேன். எனக்கும் இப்ப பஹூத்குஷி. சாப் பழைய மாதிரியே ஆயிட்டீங்கோ. அதே பேச்சு - அதிகாரம்... பஹூத் அச்சா!”

“சரி சரி சீக்கிரம் கிளம்புங்கோ... என் பொண்ணு எடமொடக்கா ஏதாவது பண்ணி வைக்கப்போறா...” - போனை கட் செய்தவர் பானுவைப் பார்க்கவும் அவளும் வேகமாய்ப் புறப்பட்டாள்.
பாரதியின் பங்களா!
தனி அறைக்குள் அரவிந்தன் எல்லா ஏடுகளையும் தன் செல்போனில் கேம் ஸ்கேனரில் படம் பிடித்து, தனி ஃபைல் ஒன்றில் சேமித்து முடித்த நொடி, கதவு தட்டப்படும் சப்தம். திறந்தவன் எதிரில் பல்லாவரம் ஜமீன் பங்களாவின் அந்த வேலைக்கார தாத்தா! கம்பீரமாய் கையில் தடியோடு ஒரு காவல்காரனைப்போல நின்றிருந்தார்!
- தொடரும்