
அன்று ஆழிமுத்து மெல்ல அந்த ஏட்டுக் கட்டருகில் சென்று அதை உற்றுப் பார்த்தான்.
“பார்த்ததுபோதும் - கையில் எடுத்துக்கொள்” என்றார் அந்த ஜடாமுடி நிர்வாணச் சித்தர்.
அவனும் எடுத்துக்கொண்டான்.
“இது ரசவாத ரகசியம் உள்ள ஏட்டுக்கட்டு. இதைப் படித்தால் கல்லோ மண்ணோ, இல்லை உலோகமோ, அதைத் தங்கமாக்கிப் பார்ப்பது எப்படியென்று தெரிந்துவிடும்...”

- அவர் அப்படிச் சொன்ன நொடி ஆழிமுத்துவிடம் பெரும் திகைப்பு. தன் பிரார்த்தனை இவ்வளவு சீக்கிரமா பலிக்கும்? அவன் முகம் அதை விரிந்த விழிகளுடன் பிரதிபலித்தபோதிலும் லேசாய் சலனமும் மூண்டது.
“என்ன குழப்பம் உனக்கு... ஏன் சலனிக்கிறாய்?”
- அந்த சித்தர் சரியாக உணர்ந்து கேட்டார்.
“எனக்கு படிக்கத் தெரியாதே சாமி...” என்றான்.
“ஆனால் ஆசைப்படத் தெரிந்திருக்கிறதே?”
- அவர் ஊசி ஏற்றினார்.
“படிப்பின் அருமையை நான் என் வாழ்க்கையில் இதோ இங்கே இப்போதுதான் உணர்கிறேன். உழைக்க மட்டுமே கற்றவர்கள் நாங்கள்...”
“உழைப்பும் ஒரு கல்விதான். ஆனால் வாசிக்கத் தெரிய வேண்டும். அது மானுடர்க்கு மிக முக்கியம். ஏடும் எழுத்தும் அனைவருக்கும் பொது... சுவாசிப்பு இதயத்துக்கு... வாசிப்பு மூளைக்கு... இரண்டும் இயங்கும் வரைதான் மனிதன்... ஒன்றிருந்து ஒன்றில்லாவிட்டாலும் அவன் குறைபட்டவனே!”
“இப்ப நான் என்ன செய்யட்டும் சாமி?’’
“அது எனக்குத் தெரியாது! நான் வரும் பௌர்ணமியன்று முக்திபெறப் போகிறேன். எனக்கு இப்போது நூற்று இருபது வயது ஆகிறது. இதற்கு மேலும் யோகம் பழக ஏதுமில்லை. உடம்புத் திசுக்கள் உறுதியாக இருந்தும் உள்ளத்தில் ஒரு தேக்கநிலை தோன்றி சலிப்புணர்வு ஏற்படத் தொடங்கிவிட்டது.
இனி இந்த உடலோடு வாழ்வதில் பொருளில்லை.
சூடான பால் பொங்குவது எப்படி அதன் காயும் பாட்டிற்கு முடிவோ, அதுபோல் சித்த மனம் சலிப்படையத் தொடங்குவது அதன் வாழும் பாட்டின் முடிவாகும். இனி இந்தத் தாய் தகப்பன் தயாரித்த சுக்லசுரோணித உடம்பும் எனக்குத் தேவையில்லை. விதேக உடம்பு எனப்படும் ஆத்ம உடலோடு இம்மண்ணில் சில காலம் சஞ்சரித்து கைலாயக் கதவு திறக்கும் சமயம் அங்கு நுழைந்துவிட முடிவெடுத்துவிட்டேன். எனவே என் வாழ்வின் தேடலாக நான் எழுதி வைத்தவற்றை என் கண்ணில் இன்று எவர் படுகிறாரோ அவர் வசம் ஒப்படைக்க எண்ணியிருந்தேன். உனக்கு வாய்த்திருக்கிறது அந்த வாய்ப்பு. இதை எடுத்துச் செல்... இதை எவரிடமும் தந்துவிடாதே! பேராசை வயப்பட்டு இறுதியில் அவர்கள் இறந்துபோவர். பின் அந்தப் பாவம் உன் கணக்கில் சேர்ந்து - நீ தொடர்ந்து பிறவிகள் எடுத்து அல்லாடிக்கொண்டே இருப்பாய்” என்று கூறிவிட்டு இணக்கமாய்ச் சிரித்த அவரை, பிரமிப்போடு பார்த்தான் ஆழிமுத்து. பார்த்தபடியேதான் இருந்தான்.
“ஏதாவது பேசு... இல்லை கேள்... வெறித்தால் என்ன அர்த்தம்?” - அவர் தூண்டிவிட்டார்.
“சாமி... யாரிடமும் காட்டாமல் படிக்கத் தெரியாத நான் இதை வைத்திருந்து என்னங்க பயன்பாடு?”
“அப்படிக் கேள்... இந்தக் கேள்விதான் உன் வாழ்வை மாற்றப்போகும் கேள்வி. இதற்கு என் பதில் என்ன தெரியுமா?”
“சொல்லுங்க சாமி...”
“நீ எழுதப் படிக்கக் கற்றுக்கொள்...”
“சாமீ... இந்த வயசிலா?”
“அதிராதே... சாகும் வரை கற்கலாம் - கற்றுக் கொண்டுதானிருக்கிறோம்.”
“...”
“என்ன யோசனை... அருகில் வா! நான் தீட்சை தருகிறேன் உனக்கு. ஓர் எழுத்து எழுது முன் ஒன்பது உனக்கு வயப்பட்டுவிடும். அதேபோல் ஒரு பாட்டுப் பாடு முன், நூறு பாட்டுப் பாடிவிடுவாய்...”

“நெசமாவா சாமி..?”
“அனுபவித்துத் தெரிந்துகொள்...” என்றபடியே தலையை வருடி தீட்சை அளித்தார்.
“அப்ப எழுதப் படிக்கக் கத்துக்கிட்டாதான் என்னால தங்கம் பண்ண முடியுமா சாமி?’’ தீட்சை பெற்றபடியே ஆழிமுத்துவும் கேட்டான்.
“தங்கம் பண்ணுவதைவிட நீயே தங்கமாவது முக்கியம். உண்மையான சொர்ண ரகசியம் அதுதான்... இதை இப்போது எடுத்துக்கொண்டு புறப்படு...”
“சந்தோசம் சாமி... உங்களை நான் திரும்ப வந்து பார்க்கலாங்களா?”
“தாராளமாக... நீ அவசியம் வரத்தான் வேண்டும்.”
“சாமி...”
“சொல்...”
“என் சகோதரனைக் கூட்டிக்கிட்டு வரலாமா?”
“கூட்டிக்கொண்டு வா... உங்கள் இருவருக்கும் ஒரு கடமையும் உள்ளது...”
“அது என்ன சாமி?”
“அதை அப்போது சொல்கிறேன்.”
“சாமி...”
“இன்னமும் என்ன?”
“உங்க பேரு சாமி...”
“சங்கரதிகம்பரன்!”
“சங்கட... ச்சீ சங்கர திகம்பட... ச்சீ சித்கம்பகன்”
“சரியாகச் சொல்... நிதானமாகச் சொல்...”
“சங்கர திகம்பரன்.”
“அப்படிச் சொல்... நான் கோவணம்கூட வேண்டாத துறவி. என் புற உறுப்பு போன்றதே மறை உறுப்பும்! ஆயினும், பெண் மக்கள் நாணப்படுவர் என்பதால் ஊர் சஞ்சாரம் என் போன்றோர்க்கில்லை.”
``என்னென்னமோ சொல்றீங்க... போகர் சாமியும் அப்படித்தான். உங்களையெல்லாம் பார்க்கும்போது நாங்கல்லாம் ஏன் பொறந்தோம்னுதான் நினைக்கத் தோணுது.”
“பேசியது போதும் - புறப்படு - ஏடு பத்திரம்! ஆசையுள்ளோர் கையில் அகப்பட்டால் ஆபத்து...”
“உத்தரவு சாமி...”
ஏட்டுக்கட்டை இடுப்பில் செருகி, தலைப்பாகையை அவிழ்த்து அதை மறைப்பாகக் கட்டிக்கொண்டு புறப்பட்டான். அதே பாறை இடுக்கு... பார்க்க ஒரு கை நுழையுமளவுதான் இடைவெளி தென்பட்டது. ஆனால் உட்புகவும் வெளிவரவும் பாறை விலகி இடம் விடுகிறதோ என்று கருதத் தோன்றியது.
வெளியே வந்தவன் மண் கெல்லியைக் கையில் எடுத்துக்கொண்டான். காற்று தாவர இலைகளைக் கொடிகளாக்கி படபடக்கவிட்டுக் கொண்டிருந்தது... சிலீர் உணர்வு தோன்றி உள் வெப்பம் அப்போதுதான் புலனானது. நடக்கத் தொடங்கினான். எல்லாமே கனவுபோலக்கூடத் தோன்றியது.
ஆளரவமே இல்லாத மலைத்தொடர்! தாவரங்களின் ஈரம் படர்ந்த தன்மை... ஊளைக்காற்று! இங்கே கூட வாழ்க்கை மாறும் என்றால் எவரும் நம்ப மாட்டார்கள்! அவனுக்கோ அந்த தீட்சைக்குப் பிறகு எல்லாமே மாறி, மனதில் ஒரு சலனமில்லாத தன்மை... வழியில் மான் ஒன்று குட்டியை ஈன்று அதன் ஈர உடம்பை நாவால் நக்கிவிட்டபடி இருக்க, அதன் அருகே பனிக்குட நீரின் சொதசொதப்பு. ஆழிமுத்து பார்க்கவும் அதுவும் பார்த்து சற்று விடைத்தது. ஆழிமுத்துவுக்கோ `மான்குட்டியே, நல்ல தேன்கட்டியே...’ என்று கவிதையாய்த் தோன்றியது. பின் அதுவே அவன் வரையில் பெரும் ஆச்சர்யத்துக்குள்ளாகியது.
தனக்குள்ளா இப்படித் தோன்றியது என்றும் ஒரு கேள்வி.
குகையை அடைந்தபோது செங்கான் மட்டும் இருந்து மண்ணைச் சலித்தபடி இருந்தான். மற்ற யாரையும் காணவில்லை. செங்கானும் நிமிர்ந்து “ஜலவாதிக்கு இவ்வளவு நேரமா?” எனக் கேட்டான். ஆழிமுத்துவும் அந்தத் தருணத்தைப் பயன்படுத்திக்கொண்டு நடந்த அவ்வளவையும் கூறி ஏட்டுக்கட்டை எடுத்துக் காட்டினான்.
செங்கானிடம் ஒரு பிரமிப்பு.
நவமர் குளித்து ஆடைகளைக் கசக்கி வரச் சென்றிருந்தது வசதியாகப் போய்விட்டது.
“ஆழி... நடக்கறத எல்லாம் பார்த்தா பிரமிப்பா இருக்குது. இப்ப நம்ப கைல இந்த ஏடு இருக்கறது மட்டும் தெரிஞ்சிட்டா அவ்வளவுதான்... இல்லையா?”
“ஆமா செங்கான்... அந்தச் சாமியை நீ பாத்தா ஆடிப்போவே... சடாமுடியோடு சும்மா எப்படி இருக்காரு தெரியுமா?”
“இப்பவே நான் வாரேன்... போய்ப் பார்ப்போமா?”
“வேண்டாம் நாளைக்குப் போவோம்... அப்பால இந்த ஏடுபத்தி யாருக்கும் தெரியக் கூடாது. இதைப் பாதுகாப்பா வெச்சுக்கணும்...”
“கொண்டா... இதை நம்ப மடக்குப் பெட்டியில வெப்போம்...” என்று அந்த ஏட்டுக்கட்டை வாங்கி, அவர்களின் சிற்றுளி முதல் ஊசி வரையிலான நுண்பொருள்களை வைத்திடும் பெட்டிக்குள் வைத்து மூடினான்.
மிகச்சரியாக நவமரும் வரிசையாக, தோளுக்குப் பின்னே அவர்களின் துவராடை காற்றில் பறந்து காய்ந்துகொண்டிருக்க, தலை முடிக்கற்றைகளை நீவிவிட்டுக்கொண்டே வந்தனர்.
ஆழிமுத்துவும் செங்கானும் அவர்களைப் பார்க்காதவர்கள்போல் மண்சலிப்பில் ஈடுபடலாயினர்.

மீண்டும் சதுரகிரி! போகரின் ஆனந்தப் பிரவேசம். இரு கைகளும் நவபாஷாண லிங்கத்தை மார்பின் மேல் சாய்த்துப் பிடித்தபடி இருக்க, ‘நமச்சிவாயம் நமச்சிவாயம்’ என்றபடி வந்தவரை அகத்தியர் சருக்கத்து சித்தர்கள் ஆனந்தமாய்ப் பார்த்து வரவேற்றனர்.
“வரவேண்டும் போகர் பிரானே... வரவேண்டும்” என்று முழக்கமிட்டார் பிண்ணாக்கீசர்.
“மார்பு தழுவிய லிங்கத்துடன் மதிப்புறு காட்சி! வந்தனைக்குரியது நெஞ்சணையாக இருப்பதன் காரணம்?” -ராமதேவர்தான் இப்படிக் கேட்டவர்.
``இது பாஷாண லிங்கம். நம் சித்தத்தில் உதித்த முதல் பொருள்!”
“பரம்பொருள் என்றிடுங்கள்.”
“ஆம். பரம்பொருளும் ஒரு ஆலகாலன் என்பதால் நீர் பாஷாணத்தைப் பயன் படுத்தினீரோ..?” - இப்படிக் கேட்டவர் கமலமுனி.
“ஆலகாலன் மட்டுமா, ஆல விருட்சனுமல்லவா அவன்? கல்லாலின் புடை அமர்ந்து நான்மறை களைச் சொல்லாமல் சொன்னவனல்லவா?” என்றார் கொங்கணர்.
- சித்தர் பெருமக்கள் இப்படி சிலாகிப்பில் இருக்க, அந்தச் சூழலில் அழகிய ஒரு பூங்கொடியை ஒட்டி கைநீர்ச் சொரிவளவில் ஒரு ஓடைப் போக்கின் ஊடுபாறை மேல் தன் மார்பில் அணைந்திருந்த லிங்கத்தைக் கீழே வைத்தார் போகர் பிரான்.
பார்க்கவே மிக ரம்மியமாக இருந்தது.
அவ்வேளை அகத்தியர் பெருமானும், தன் குகைப்புலம் நீங்கி வெளிவந்திட, அவரோடு மேலும் மேலும் எனப் பலப்பல சித்தர் பெருமக்கள்!
“பெருமானுக்கு வந்தனங்கள்” என்றார் போகர்.
“போகனா? நல்லாசிகள் உனக்கு... அடடே இதென்ன லிங்கம்... உளி படாததுபோல் தெரிகிறதே...?”
“ஆம் பெருமானே.. பாஷாண வார்ப்பு!”
“அற்புதம்... அமிர்தமும் அவன், விடமும் அவன்... அமிர்த லிங்கம் பூவுலகில் உள்ளது; இது பாஷாணத்திலா?”
“ஆம் பெருமானே... ஆயினும் அமிர்தம் தராத அமிர்தத்தை இது தரும் வண்ணம் நவ கோள்களை இதனுள் பிணைத்துள்ளேன்.”
“என்றால், இது உன் விசேஷ திருஷ்டியில் மலர்ந்தது என்று சொல்...”
“என் திருஷ்டியே பெருமான் உம் போன்றோர் குருவருளும் எம்பெருமானின் கருணையும் தானே?”
“நன்கு சொன்னாய். இந்தத் தெளிவும் பணிவுமே சித்தனின் இலக்கணம். வாழ்க உன் கொற்றம்.”
“போகர் பிரானே... தண்டபாணிச் சொரூபம் என்னாயிற்று?”
இடையிட்டுக் கேட்டார் பிரம்மமுனி.
“தயாராகிக்கொண்டிருக்கிறது. இது முன் சொரூபம்! அம்மையப்பன் முன்பு... பின்பே புத்திரன்...”
“அதுவும் சரிதான்... இதை எங்கே பிரதிஷ்டை செய்வதாய் உத்தேசம்?” யூகிமுனிதான் இப்படிக் கேட்டவர்.
“இது தலலிங்கமல்ல முனி... வலலிங்கம்! அதாவது உலகை வலம் வரப்போகும் லிங்கம்!”
நிலக்கூறு, நீர்க்கூறு, காலம் எனும் பருவக்கூறு, காடு வாழ் பறவைக் கூறு - இதோடு மண்புழு முதல் மத்தக யானை வரை காட்டுக்குள் வாழ்ந்திடும் உயிரினங்களின் எண்ணிக்கை என சகலமும் இதனுள் உள்ளன. இவற்றினுள்ளே தான் மறைவாகப் பரம்பொருளும் உள்ளது. இதனால் காடென்பது இலையுதிர்காடு மட்டுமன்று, இறையுதிர்காடும்கூட என்பதை யாம் நிறுவியுள்ளோம்.
“விளக்கமாகக் கூறுங்கள்...”
“பன்னிரு வருடங்களுக்கு ஒருவர் என்று கலிகாலம் உள்ளவரை இந்த லிங்கம் என் சீடர்களிடம் வலம் வர உள்ளது. இந்த பூமிப்பந்தில் இது அக்காலத்தில் எங்கும் சென்று வரும். அதே சமயம் நித்ய பூசனையுடன் நைவேத்யமும் அபிடேகமும் உறுதிப்படுத்தப்படும். இதனால் மண்ணில் பசி நீங்கும்; மழை தழைக்கும்...”
“நற்சிந்தனை... மானுடத்தை மறைமுகமாய் நெறிப்படுத்தி வழிநடத்தும் ஒரு சிந்தனை!” அகத்தியர் மையக்கருத்தைப் பளிச்சென்று கூறினார்.
“உண்மைதான் பெருமானே! குறிப்பாக இதை பூஜிப்போர் விருட்சங்களின் காவலர்களாகவும் திகழ வேண்டும் என்பதும் என் விருப்பம்... எனவே, பன்னிரு வருடங்கள் தம் பொறுப்பில் இதை பூஜிப்பவர் தினமும் ஒரு விருட்சத்தை யாவது நட வேண்டும்; தொழவும் வேண்டும் என்பது முதல் விதியாகும்.”
“அற்புதம்... உயிரினங்களைப் பஞ்ச பூதங்களின் துணைகொண்டு காப்பதே காடு. காடு வளர்ந்தாலே நாடுவோர் மிகு நாடும் நலமுறும்!”
- அகத்தியர் பெருமான் போகரின் கருத்தை உறுதிசெய்த கையோடு தான் எழுதிய `வன உற்சவம்’ எனும் ஏட்டுக்கட்டினை அந்த லிங்கம் முன் கொண்டுவந்து வைத்தார். அப்படியே “இந்த ஏட்டினில் தாவர சங்கமங்களின் வகை தொகை அவ்வளவும் எழுத்து வடிவில் உள்ளது. விதை பல்லாயிரம் விருட்சம் பன்னீராயிரம், மலர் நூறு, மகரந்தக் கூறுபாடு என்று ஒரு காட்டின் சகலமும் குறிப்பாய் உள்ளன.

நிலக்கூறு, நீர்க்கூறு, காலம் எனும் பருவக்கூறு, காடு வாழ் பறவைக் கூறு - இதோடு மண்புழு முதல் மத்தக யானை வரை காட்டுக்குள் வாழ்ந்திடும் உயிரினங்களின் எண்ணிக்கை என சகலமும் இதனுள் உள்ளன. இவற்றினுள்ளே தான் மறைவாகப் பரம்பொருளும் உள்ளது. இதனால் காடென்பது இலையுதிர்காடு மட்டுமன்று, இறையுதிர்காடும்கூட என்பதை யாம் நிறுவியுள்ளோம். லிங்கத்துடன் இதுவும் பயணப்படட்டும், அருளாளர் வசம் இந்த ஏடு விரிந்து வனஞானம் நாட்டில் நிலைக்கட்டும்” என்றார் அகத்தியர் பெருமான்.
இன்று அந்தக் காவல்காரத் தாத்தாவைப் பார்க்கவும் அரவிந்தனிடம் திகைப்பு... அவரோ சிரித்தார்.
“நீங்க...?”
“பிரமாண்டம் ஜமீனோட காவல்காரனுங்க... அதுக்குள்ள மறந்துட்டீங்களா?”
“எப்படி உள்ள வந்தீங்க?”
“கதவெல்லாம் திறந்திருந்தது. வந்தேன்...”
“சரி... என்ன விஷயம்?” - அரவிந்தன் கேள்வியோடு எல்லாப் பக்கமும் பார்த்தான். பூஜை அறைவிளக்கு எரிந்தபடி இருக்க, அதனுள்ளே முத்துலட்சுமி பூஜித்தபடி இருந்தாள். மற்றபடி யாருமே கண்ணில் படவில்லை.
எங்கே போனான் இந்தத் தோட்டக்காரன்?”
“யாரைத் தேடறீங்க... தோட்டக்காரனையா?” என்று கேட்டார் தாத்தா.
“அ... ஆமாம்... யாரையும் உள்ள விடக் கூடாதுன்னு சொல்லியிருக்கு. அவனை மீறிக்கிட்டு எப்படி வந்தீங்க?”
“தம்பி. நான் எங்க பெட்டியை எடுத்துக்கிட்டுப் போக வந்திருக்கேன். நீங்க பாக்க வேண்டியதை யெல்லாம் பாத்துட்டீங்களா?” - அவர் கேள்வியில் ஒரு சொடுக்கு...
“பார்க்க வேண்டியதையெல்லாம்னா..?” அரவிந்தனும் கூர்மையாகக் கேட்டான்.
“இல்லை, ரொம்பக் கஷ்டப்பட்டு இதைத் திறந்திருக்கீங்க. உள்ள என் எஜமானர் எழுதின டைரியில இருந்து எவ்வளவோ ஏடுங்கள்ளாம் இருக்குது. நீங்க படம்கூடப் புடிச்சி வெச்சிக்கிட்டிருக்கலாம்... யார் கண்டது?”
- தாத்தா கேட்டதைப் பார்த்தால் பக்கத்தில் இருந்து அவர் பார்த்ததுபோல்கூட இருந்தது. அரவிந்தன் உடனடியாக ஒரு பதில் கூற முடியாமல் விழித்தான்.
“சரி தம்பி... நான் எடுத்துக்கிட்டுப் போறேன். கொஞ்சம் பெட்டியை ஒப்படைக்கிறீங்களா?”
“அது... ஆமா அவங்க எங்க?”
“யாரு, எங்க எஜமான் பேரனுங்களா... அவர் இப்ப பங்களாவுலதான் இருக்காரு. பம்பாய்காரருக்கு வித்துட்ட பங்களாவைத் திரும்ப வாங்கிக்கற முஸ்தீபுல இருக்காரு. இன்னிக்கு எங்க எஜமான் சமாதியில பூசைக்கு ஏற்பாடாகி அம்மா அதுல மும்முரமா இருக்காங்க.”
“தயவுசெய்து அவங்கள வரச் சொல்லுங்க. உங்ககிட்டல்லாம் தரமுடியாது.”
“நீங்க இப்படிச் சொன்னா போன் போட்டுக் கொடுக்கச் சொன்னாரு... அவங்களே இப்ப உங்க கூட பேசுவாங்க. கொஞ்சம் இருங்க.”
- தாத்தா மின்னல் வேகமானார். சாந்தப்ரகாஷும் செல்போன் மூலம் அரவிந்தனிடம் ‘ஹலோ’ என்றான்.
“மிஸ்டர் அரவிந்தன்... தயவுசெய்து பெட்டியை பெரியவர் கிட்ட கொடுத்து விட்டுருங்க. இனியும் தாமதம் வேண்டாம். அவர் ஒரு பிளாங்க் செக் தருவார். உங்க அமௌன்டை நீங்க போட்டுக்குங்க. எனக்கு வேற ஒரு அசைன்மென்ட், அதான் நேர்ல வர முடியல.”
“ஐ ஆம் சாரி... பெட்டி விஷயமா முடிவெடுக்க வேண்டியது பாரதிதான். பாரதி இப்ப இங்க இல்லை...”
- அவன் அப்படிச் சொல்லும்போதே பாரதி வேகமாய் உள் நுழைந்தாள். கூடவே ஜெயராமனும் வந்தார். பாரதியைப் பார்க்கவும் அரவிந்தனிடம் திணறல்.
“என்ன அரவிந்தன்... இது யார்? ஓ நீங்க அந்த பங்களா வாட்ச்மேன் இல்ல...” - பாரதி கேட்பது அரவிந்தன் பிடித்திருந்த போன் வழியே சாந்தப்ரகாஷுக்கும் கேட்டது.
“மிஸ்டர் அரவிந்தன்... அவங்க பக்கத்துல தான் இருக்காங்க போல இருக்கு - தயவுசெய்து போனை அவங்ககிட்ட தரீங்களா?”
- அதற்குமேல் அவனாலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை. போனை பாரதியிடம் நீட்டினான். பாரதியும் சாந்தப்ரகாஷிடம் “இதோ இப்பவே கொடுத்துடறேன்” என்று போனை முடக்கியவளாய் ``கொஞ்சம் இருங்க தாத்தா...” என்று அரவிந்தனை ஏறிட்டாள். அவனிடம் தடுமாற்றம்.
“என்ன அரவிந்தன்... பெட்டி ரூம்லதானே இருக்கு?”

“ஆமாம்...”
“கொடுத்துடுவோம் அரவிந்தன்... முதல்ல கொடுத்துடுவோம். எப்ப என் அப்பா குறி வெச்சுட்டாரோ அப்ப அது கட்டாயமா இங்க இருக்கக் கூடாது. அது யாருக்குச் சொந்தமோ அவங்களுக்குப் போய்ச் சேரணும். கமான்.”
- அவள் அறை நோக்கி நடந்தாள். சில அடிகள் நடந்தவள் திரும்பி வந்து பூஜை அறை நோக்கித் திரும்பினாள். அரவிந்தன் ஜெயராமனைப் பார்த்தான். அவர் கண் ஜாடையில் அமைதியாக இருக்கச் சொன்னார்.
பூஜை அறையில் அந்த லிங்கம் முன்னால் முத்துலட்சுமி ஆழ்ந்த தியானத்தில் இருந்தாள். பாரதி அவளைத் தொந்தரவு செய்யாமல் லிங்கத்தைக் தொட்டுத் தூக்கினாள் அதன்மேல் பூக்களின் இதழ்கள் - புதிதாய் இடப்பட்ட சந்தன குங்குமம். மாறாத அந்த விபூதி வாசம்! தொட்டுத்தூக்கி மார்போடு வைத்து நடக்கும் அத்தருணங்களில் உடல்கூட்டில் ஒரு இனம்புரியாத பரவச உணர்வு!
அந்த உணர்வோடு அறைக்குள் சென்று பெட்டிக்குள் லிங்கத்தை வைத்து உள்ளே மற்ற ஏட்டுக்கட்டுகள் முதல் எல்லாம் சரியாக இருக்கிறதா என்றும் பார்த்தாள். வில்வ இலைகள் பொடிந்துபோயிருந்தன. பூவிதழ்களும் நசிந்து விட்டிருக்க, மற்றபடி எந்த ஒரு மாற்றமும் இல்லை. பின் மூடியவள், தூக்க முயன்றாள். முடியவில்லை. பாரமாக இருந்தது.
“நீ விடும்மா நான் பாத்துக்கறேன்...” என்று, பின்தொடர்ந்து வந்திருந்த தாத்தா குனிந்து பெட்டியைத் தூக்கித் தன் தலையில் வைத்தபடி, கண்களில் கனிவோடு பாரதியைப் பார்த்தார்.
“புறப்படுங்க... ஒரு நிமிஷம்கூட இனி நீங்க இங்க நிக்கக் கூடாது. வெளிய நிக்கற கார் உங்க கார்தானே?”
“ஆமாம்மா...இனி நான் பாத்துக்கறேன். ஒண்ணுமட்டும் உறுதிம்மா - நீ நல்லாருப்பே - இனிதான் நீ வாழவே போறே... வரட்டுமா?” என்று சொன்னபடியே தாத்தா விறுவிறுவென நடந்தார்.
மெயின் கேட்டைக் கடந்து வெளியே நின்றபடி இருந்த காருக்குள் பெட்டியை வைத்து டிக்கியை அவர் மூடியபோது பானு ஒரு ஆட்டோவிலிருந்து இறங்கியவளாய் தாத்தாவைப் பார்த்தாள். தாத்தா காரில் ஏறிக்கொள்ள காரும் புறப்பட்டது. பானு முகத்தில் இனி எல்லாம் அவ்வளவுதான் என்பதுபோல் ஒரு சலிப்புணர்வு! உள்ளே ஜெயராமனும் அரவிந்தனும் சோபாவில் அமைதியாக அமர்ந்திருக்க “இப்பதான் எனக்கு நிம்மதியாயிருக்கு” என்று அவர்கள் எதிரில் அமர்ந்தாள் பாரதி.
அவர்கள் இருவரும் பதிலுக்கு அவளை ஊடுருவினர்.
“ஆமா... அதை எல்லாம் ஸ்கேன் பண்ணிட்டீங்களா அரவிந்தன்?” என்று அடுத்துக் கேட்டாள். அரவிந்தனும் மௌனமாய் ஆமோதித்தான். அப்போது பானுவும் உள்ளே வந்திருந்தாள். பாரதி அவளைப் பார்த்த மாத்திரம் “பெட்டிய கொடுத்துட்டேன். அந்த மேஜிக் பாக்ஸ் வீட்டை விட்டுப் போயிடிச்சு... என்னைத் தடுத்து நிறுத்தச் சொல்லி உன்னை அனுப்பினாரா?” என்று கேட்ட விதத்தில் கோபம் மின்னியது. மெல்ல தோட்டக்கார மருதமுத்துவும் எட்டிப் பார்த்தான்
“என்ன மருதமுத்து... வா உள்ள?”
- அவனும் மெல்ல உள்ளே வந்தான்.
“பெட்டிய கொடுத்துட்டேன். இனி பாம்பு, தேள்னு எதுவும் வராது. வரவும் கூடாது. போதும் ஒரு பத்து பதினைஞ்சு நாளா நாம பட்ட பாடு. இந்த பங்களாவுல இனி எந்த மிஸ்ட்ரிக்கும் இடம் கிடையாது.” - அவனுக்குச் சொல்வது போல் எல்லோருக்கும் சொன்னாள்.
மெல்ல அடைக்கலம்மாவும் எட்டிப் பார்த்தாள்.
“அடைக்கலம்மா... ஸ்ட்ராங்கா நாலு காபி கொண்டுவாங்க” என்றாள். மருதமுத்து ஏதோ சொல்ல விரும்புவது போலவே பார்த்தான்.
“என்ன மருதமுத்து, எதாவது சொல்லணுமா?”
“ஆமாம்மா...”
“சொல்லு... புதுசா ஒரு பிரச்னைய மட்டும் சொல்லாதே.”
“இல்லம்மா. ஆனா...”
“என்ன ஆனா ஆவன்னா..?”
“அந்தப் பாம்பு...”
“திரும்பப் பாம்பா... என்ன சொல்றே?”
“நான் தோட்டத்துல கவாத்து பண்ணிக்கிட்டிருந்தப்ப அது கண்ணுல பட்டுச்சும்மா...”
“எப்ப... இப்பவா?”
“அ... ஆமாம்மா...”
“நான் என்னையுமறியாம கையெடுத்துக் கும்புட்டேன். பொதுவா நல்ல பாம்பு முன்னால கற்பூரம் கொளுத்திக் கும்புட்டா எதுவும் செய்யாமப் போயிடும்கறதால, நானும் தயாரா வெச்சிருந்தத எடுத்துப் பத்த வெச்சு உழுந்து கும்புட்டேன். அதுவும் அப்படியே விலகி வெளிய போச்சு. எனக்கும் அப்பாடான்னு இருந்துச்சு. மெல்ல அதுபோன தடத்துலயே போய் மதில் சுவருக்கு அப்பால எட்டிப் பார்த்தேன்...”

- மருதமுத்து மிடறு விழுங்கி சற்று பேச்சை நிறுத்தினான்.
“சொல்லு... அப்புறம் என்ன?”
“தலைல பெரிய தலப்பாவோட பளபளங்கற உடுப்போட ஜமீன்தார் மாதிரி ஒருத்தர் நின்னுகிட்டிருந்தார்! நம்ம பின் பக்க இடம் காலி இடம் - உங்களுக்கே தெரியும். அங்க அப்படி ஒருத்தரைப் பாக்கவும் எனக்கு ஒண்ணும் புரியல.நீங்க யாரு... இங்க என்ன பண்றீங்கன்னு கேட்டேன். சிரிச்சிகிட்டே எதுவும் சொல்லாமப் போயிட்டாரும்மா” என்று சொல்லி முடித்தான்.
“என்ன, ஏதாவது கனவு கண்டியா?” என்று பாரதி பதிலுக்கு ஆவேசமாய்க் கேட்கவும் ஜெயராமன் வேகமாய் இடையிட்டார்.
“நீ போய் வேலைய பாருப்பா... பாரதி, நீ கொஞ்சம் அமைதியா உட்காரு” என்றவர் பானுவைப் பார்த்து, “எம்.பி எதாவது சொல்லி விட்டாரா?” என்று கேட்டார்.
“பெட்டிய வீட்ல அவர் ரூம்ல வெச்சுப் பூட்டி வைக்கச் சொன்னார். ஆனா நான் பாம்பை நினைச்சு பயந்தேன். அதை ஜோசியர் பாத்துக்குவாருன்னார்...”
“ஓ... இப்ப எங்க அந்த ஜோசியர்?”
“சீஃப் டாக்டர் குணசேகர் வீட்டுக்கு ஜாதகம் பார்க்கப் போனவர் இன்னும் வரலை சார்...”
“தலைல பெரிய தலப்பாவோட பளபளங்கற உடுப்போட ஜமீன்தார் மாதிரி ஒருத்தர் நின்னுகிட்டிருந்தார்! நம்ம பின் பக்க இடம் காலி இடம்- உங்களுக்கே தெரியும். அங்க அப்படி ஒருத்தரைப் பாக்கவும் எனக்கு ஒண்ணும் புரியல.நீங்க யாரு... இங்க என்ன பண்றீங்கன்னு கேட்டேன்.
“சரி... இப்ப இங்க நடந்ததையெல்லாம் பார்த்தேதானே?”
ஆமோதித்தாள் பானு.
“அவர்கிட்ட போய் நடந்ததை அப்படியே சொல்லு. குமாரசாமி விஷயத்துல அவர்கிட்ட நல்ல மாற்றமும் இல்லை. அவர் இப்ப மருந்துகளால தப்பியிருக்கலாம். ஆனா அவருக்கான த்ரெட் அப்படியேதான் இருக்கு. அவர் மனசாரத் திருந்தினா மட்டும்தான் எல்லாம் சரி ஆகும். இல்ல, எது எப்படி நடக்கும்னு சொல்ல முடியாது. இப்போதைக்கு இதை மட்டும் சொல்.. புறப்படு...” என்றார். பானுவும் எதுவும் பேசாமல் கிளம்பினாள். எதிரே அடைக்கலம்மாள் காபியோடு வரவும் “காபி சாப்ட்டுட்டுப் போம்மா...” என்றார்.
“பரவால்ல சார்...” என்று பானு வெளியேறினாள்.
அப்போது முத்துலட்சுமியும் பதற்றமாய் பூஜை அறையில் இருந்து வந்தாள்.
“பாரதி, எங்க அந்த லிங்கம்?” என்று கேட்க, “அது அந்தப் பெட்டியோடு யார்கிட்ட போகணுமோ போயிடிச்சு. நீ உடனே புலம்பாதே. நீ அதுக்குப் பூஜை செய்ததெல்லாம் போதும்...” என்றாள் சிடுசிடுப்பான குரலில். முத்துலட்சுமி பதிலுக்கு ஏதோ சொல்ல முனைய ஜெயராமன் இங்கும் இடையிட்டார்.
“அம்மா, நீங்க போய் ரெஸ்ட் எடுங்க. உங்க மகனும் நல்லா குணமாகிக்கிட்டு வரார். சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுவார்” என்றார். முத்துலட்சுமி அரைமனதாய் விலகினாள்.
ஜெயராமன் நிதானமாக காபியைக் குடிக்கலானார். அரவிந்தன் அவரைத் தொடர்ந்தான். பாரதி குடிக்காமல் ஜெயராமன் முகத்தைப் பார்த்தாள்.
“நீ குடிக்கலையா பாரதி?”
“பிடிக்கல சார்.”
“சரி, போய் ரெஸ்ட் எடுத்துக்கோ. நாளைக்கு நாம திரும்ப சந்திப்போம்.”
“ஓகே சார்... நானும் நாளைல இருந்து டியூட்டில ஜாய்ன் பண்ணிடறேன்.”
“நீ இப்பவே டியூட்டிலதான் இருக்கே பாரதி. நமக்கு இப்ப தேவை ஒரு நல்ல ஓய்வு. பிறகுதான் மத்த விஷயமெல்லாம்” - ஜெயராமன் சொன்ன விதத்தில் ஒரு சின்ன மர்மம். பாரதியும் அதற்கு மேல் அவரிடம் வாதிடவில்லை. அதன்பின் அரவிந்தனும் ஜெயராமனும் புறப்பட்டு வெளியே வந்தபோது மழையிடம் திரும்பவும் தீவிரம். அதோடு காரில் ஏறினர். சாலையில் இறங்கிய அவர்களின் காரை ஒரு இன்னோவா பின்தொடர ஆரம்பித்தது!
-தொடரும்