
அன்று அகத்தியர் பெருமான் தந்த வனஞான ஏட்டுக்கட்டினை பயபக்தியோடு பெற்று, தன் கண்களில் ஒற்றிக்கொண்டார் போகர்.

அவரருகே வந்த ராமதேவர் அந்த ஏட்டுக்கட்டைத் தன் வசமும் தரும்படி இரு கைகளை நீட்டிட, போகரும் தந்தார். ராமதேவரும் அதைக் கண்களில் ஒற்றிக்கொண்டார் - பின், வரிசையாக அதை அங்குள்ள சித்தர் பெருமக்கள் தங்கள் கண்களில் ஒற்றிக்கொடுக்கத் தொடங்கினர்.
“ராமதேவா, நான் கூறாமலே ஒரு நல்ல காரியம் செய்தீர். உங்கள் நேத்திர சக்தியை (தீட்சை) இந்த ஏட்டில் கூட்டியுள்ளீர். இதனால் இப்பூவுலகில் காடுகள் அழியாது வாழ்ந்திடப் போவது திண்ணம்” என்றார் அகத்தியர் பெருமான்.
“பெருமானே... தங்கள் கூற்றை உற்று நோக்கினால் காடுகளுக்கும் அழிவுண்டு என்பது போலொரு தொனிப்பு தென்படுகிறதே?” என்று இடையீடு செய்தார் காலாங்கி நாதர்.
“ஆம். காடுகளுக்கும் அழிவுண்டு! காடுகளுக்கு மட்டுமன்று, ஈசனின் படைப்பில் நம் ஆன்மாவைத் தவிர அனைத்தும் அழிந்துபட்டே தீரவேண்டும். சுருக்கமாய்க் கூறுவதானால், அசைபவை அனைத்தும் அழிந்துபடும். அசையாதவை மாறுபடும்!”
“சற்று விளக்க முடியுமா?”
“முயல்கிறேன். உயிரினம் என்றால் தொடக்கம் முடிவு என்று இரு நிலை உண்டு. இந்த இருநிலைக்கு இடைப்பட்டதையே வாழ்வு என்கிறோம். இம்மண்ணில் எவரும் மரணத்தை வென்று வாழ இயலாது. வாழ்ந்திடவும் கூடாது. அப்படி வாழ்ந்தால் அது வாழ்வாகவும் இராது.”
“இந்த உடம்பை உறுதிப்படுத்திக்கொண்டு நூறு, ஆயிரம் என்று ஒரு சித்தனால் கூடவா வாழ முடியாது...?”
“முடியும். ஆனால் அது வாழ்வென்றாகாது!”
“பின் என்னாகும்?”

“இதற்கு பதிலை நீங்கள் ரிஷ்ய மண்டலச் சருக்கம் சென்று பார்த்து அறிதல் நல்லது...”
“ரிஷ்ய மண்டலச் சருக்கமெனில்?”
“பூமியின் மையம் நாவல பூமி எனும் பரத கண்டம்! பூவுலக நிலப்பரப்பில் நூற்றில் ஐந்து பங்கே நானும் நீங்களும் நின்று பேசிடும் இந்த பரத கண்டமாகும். மீதமுள்ள தொண்ணூற்றைந்தில் பலப்பல கண்டங்கள் - அதன் நிலக் கூறுபாட்டிற்கேற்ப மானுடப் பிண்டங்கள்! அவ்வண்ணமே சிருஷ்டியும் அமைய இயலும்.
இதில் ஒருவன் கர்ப்பவழி பிறந்தவன் என்பதற்குச் சான்று அவனது தொப்புள்! தொப்புளற்றவர்கள் தேவ புருஷர்கள்... இவர்கள் பரம்பொருளின் மானச சிருஷ்டிகள். இந்த மானசர்களே பஞ்ச பூதாதியராய், அஷ்டதிக்கு பாலகராய் ஊனக் கண்களுக்குப் புலனாகாத தேவர்களாய் உள்ளனர். ஊனக்கண்ணுடையோர் இவர்களைக் காண தம் உடலின் விந்துவைக் கட்ட வேண்டும். திரவக் கூடான விந்து திடக் கூடாக வேண்டும். அப்போது உடம்பின் உயிரோட்டமும் இடவலம் என்பது மாறி, வல இடம் என்றாகும். அந்நிலையை அடைந்தவர்களே நீங்கள் எல்லாம்..! உங்களைப் போல ஆக ஏலாதோர் விதிப்பாட்டின்படி வாழ்வோர் எனப்படுவர். இவர்கள் உடலை மையமாக வைத்தே எதையும் சிந்திப்பர். அதன் இயக்க வினையை அறியாமல் அது எப்போதும் அழிவின்றி இயங்கியபடி இருக்கும் என்று கருதுவர். அதனால் வாழும் வேட்கை கொள்வர். ஆயிரம் கோடி என உள்ள மாயா இன்பத்தை அனுபவிக்கத் துடிப்பர். அதற்கே வாழ்வென்பர்! தங்கள் சிற்றறிவைப் பேரறிவாகக் கருதுவர். அதைக் கொண்டு உடல் சார்ந்த இன்பங்களைப் பெறவும், பேணவும் முயலுவர். அதற்கே வாழ்வு என்று நம்புவர்.
பாவம் இவர்கள்!
மனம் பற்றி மட்டும் இவர்கள் ஆழமாய் அறிய மாட்டார்கள்...”
“இதில் மனம் பற்றி அறிய என்ன உள்ளது?” - கோரக்கர் இக்கேள்வியைக் கேட்டார்.
“மனிதன்வரையில் மனம்தானே எல்லாம். உடலின் பசி தாகம் வலி சந்தோஷம் மயக்கம் என சகலத்தையும் உணர்ந்து செயல்படுவது மனம்தானே!
உண்மையில் மனித வாழ்வு எனப்படுவது மனத்தின் வாழ்வுதான்... மனம் இயங்கத் தேவைப்படும் கூடுதானே உடல்!”
“அதை அறிவோம்... இம்மனம் பற்றி ஆழமாய் அறிவது என்று ஏதோ கூறினீர்களே?” - இது கொங்கணர்
“கொங்கணா, நீ அறியாத பதிலையா நான் கூறிவிடப்போகிறேன்...”
“அறிந்திருப்பதை அறிவிக்கும் விதம் முக்கியமாயிற்றே? எங்களின் தலைமகனான உங்கள் நாவாலும் நாங்கள் அதை அறியும்போது ஒரு மகிழ்வும் அழுத்தமும் கிடைக்கிறதல்லவா?”
“தலைமகன் - மேல் கீழ் எல்லாம் சித்தம் தெளிந்தவர்க்கேது? உபசார வார்த்தைகள் உங்களுக்குள் ஒரு மனிதன் இன்னமும் சாவாதிருப்பதையே காட்டுகிறது... உங்களுக்குள் சாவாதிருக்கும் மனிதனைப்போல, புறத்திலும் சாகாதிருக்கும் மனிதர்கள் வாழுமிடம்தான் ரிஷ்ய சருக்கம்!”
“கேள்விப்பட்டிருக்கிறோம்... அவர்கள் சாகாவரம் பெற்றுவிட்டவர்களா?”
“சாகாவரத்துக்கு இணையான ஈராயிரம் ஆண்டுக்கால ஆயுளை ஒருவன் தனக்கும் தன் வம்சாவளிகளுக்கும் என்று கேட்டுப்பெற்றான். அவர்களே அங்கு உள்ளனர்.”
“அவர்களை எண்ணி, பாவம் இவர்கள் என்றீர்களே... எதனால் அப்படி?”
“அதைப் போய்ப் பார்த்து அறிந்துகொள்வதுதான் உங்களுக்குள் ஒரு தெளிவைத் தரும்...”
“இதை ஒரு வாய்ப்பாகக் கருதுகிறோம்.’’
``ஆம், சென்று கண்டு வாருங்கள். உங்கள் சித்தம் அதனால் புடம் போட்டது போல் ஆகும்...”
“ரிஷ்ய சருக்கம் இப்பூமண்டலத்தில் எங்குள்ளது?”
“பரத கண்டத்தின் வடகிழக்கில் பூமத்தியரேகைக்கு மேலே ஆயிரம் காத தூரத்தில் உள்ளது. பனிப்பொழிவு மிகுந்த பாகம். அதனால் இங்குள்ள தாவர சங்கமம் அங்கிருக்காது. பனி என்பது நீரின் திட வடிவம். நீராய் உள்ளவரை சலனமுண்டு. ஓட்டமென்னும் பயணமுண்டு - ஆவியாதல், மண்புகுதல், விளைவித்தல், தாகம் தீர்த்தல், வண்ணம் சேர்தல், உயிர்களுக்கு உதவுதல் என்கிற கடமைகள் அதற்குண்டு. அதே நீர் திட வடிவம் கொண்டு பனிக்கட்டியாகி விட்டால் சலனமில்லை - மேற்கண்ட கடமைகள் ஏதும் இல்லை. இதனாலேயே வெள்ளிப்பனிமலை ஈசனின் வீடு என்றானது. ஈசனை எண்ணும் மனமும் சலனத்திலிருந்து விடுபட்டுப் பனிபோல் தூய்மையானதாய், திடமானதாய் மாறும் என்பது அதன் குறியீடாகும்.
இந்தப் பனி கரையும் தன்மை கொண்டது தான். ஆயினும் இதன் கரைவு சூரியனின் வெப்பத்தால் சில மணி நேரமே நிகழும். அந்தக் கரைவும்கூட மண்குணம் கொள்ளாது விண்குணம் கொண்டதாய் இருக்கும். அதனால் தான் மலையிலிருந்து உற்பத்தியாகும் மண் சார்ந்த மற்ற நதிகளைவிட, பனிமலையிலிருந்து வெப்பத்தால் கரைந்து ஓடும் கங்கை மற்ற நதிகளிலும் மாறுபட்டும் புனித குணம் மிகுந்ததாயும் கருதப்படுகிறது. என் கமண்டலம் உதிர்த்த காவிரிக்கு மண்தன்மை மிகுதி. சிவச்சிரம் உதிர்க்கும் கங்கைக்கு விண்தன்மை மிகுதி. மண்தன்மை பற்றை வளர்க்கும்; விண்தன்மை அதைக் குறைக்கும். அதே சமயம் விண்தன்மை மிக்க இத்தலத்தில் உயிர்களுக்கு ஆயுள் அதிகம். இங்கு வாழ முடிந்த சகலமும் நம்மில் இருந்து மிக வேறுபட்டிருக்கும். இங்கே புலன்களை அடக்குவது சுலபமாய் நிகழும். அதிக அசைவுக்கு இடமில்லாததால் ஸ்திரம் மிக அதிகம். எனவே மண் சார்ந்த ஞானியர் விண் சார்ந்த இப்பகுதியை நாடி தவத்தில் ஆழ்ந்து, உடல் விடுபட, அதாவது முக்தி பெற முயல்வர். அவ்வாறு முயல்வோரை ரிஷிகள் என்போம். ரிஷிகள் மிகுந்த பாகமே ரிஷ்ய சருக்கம். இந்தச் சருக்கத்தில்தான் அந்த ஈராயிரம் ஆண்டு ஆயுள் வாழும் வரம் பெற்ற சந்ததியர் கூட்டமும் உள்ளது. இவர்களை தீர்க்க வம்சம் என்று அழைப்பர்.”
- அகத்திய பெருமான் ரிஷ்ய மண்டலச் சருக்கம் பற்றிச் சொல்லும் சாக்கில் ஈசன் குறித்தும், பனிமலைச் சிறப்பு, கங்கை காவிரியின் தன்மை ஆகியவற்றையும் கூறிட, அதனையறிந்த சித்தர்கள் மகிழ்வோடு அகத்தியர் பெருமானை வணங்கிட, போகர், “இப்போதே நான் அங்கே போய்ப் பார்க்கிறேன். கங்கை நீரை அபிஷேக நிமித்தம் கொண்டு வர வேண்டிய கடமையும் எனக்குள்ளது” என்றார்.
ரிஷ்ய மண்டலச் சருக்கம். தீர்க்க வம்சத்தினர் தோலாடைகள் தரித்த நிலையில் மான்களைத் தங்கள் வாகனங்களாகக் குதிரைகளைப்போலப் பயன்படுத்துபவர்களாக இருந்தனர். தலைப்பாகையாக குளிரின் நிமித்தம் முயல்களின் தோலையும், கரடிகளின் தோலையும் அணிந்திருந்தனர். மிகுந்த வெண்ணிறத்தோடும், பூனை விழிகளுமாய் மனிதக் கூட்டத்தின் இடையே மிக வித்தியாசமாய்த் தெரிந்த அவர்களின் சிலர் நாய்களோடும் மிக இணக்கமாய் இருந்தனர். நாய்கள் அவர்களை எங்கும் இழுத்துச் செல்லும் வண்ணம் ஒரு சிறு வாகனத்தை உருவாக்கி அதை நாய்களின் கழுத்தோடு கட்டி இழுக்கச் செய்து அதில் பயணித்தனர்.

பனிமலைக் காட்டின் இடையே நிலப்பரப்பை உருவாக்கி அங்கே பயிர்களை விளைவித்து அவற்றைப் பயன்படுத்தி வாழ்ந்திடும் கலையறிவும் அவர்களிடம் மிகுந்து காணப்பட்டது.
விண்மிசை பறந்து வந்த போகர் பிரான் தீர்க்க வம்சத்தவர் வாழும் பகுதியைப் பலவிதக் குறிப்புகளால் அறிந்து அங்கே அவர்கள் நடுவில் இறங்கினார். உடம்பை வென்ற கல்ப யோகியான அவர் உடல்கூட குளிர் நிமித்தம் நடுங்கிடவும், உடல் வெப்பத்தைக் கூட்டிக்கொள்ளும் யோக முத்திரை ஒன்றைச் செய்ததோடு பன்னிரண்டு பிராணாயாமத்தை நிறுத்தி நிதானமாய்ச் செய்து உடம்பைத் தளராது பார்த்துக்கொண்டதோடு, சில எளிய ஆசனப் பயிற்சிகளையும் செய்து முடித்தார்.
திரும்பிய பக்கமெல்லாம் வெண்பனிப்பொழிவு. கண்டுகண்டாய் திண்டுதிண்டாய் பனி மூட்டைகள்..! கொக்கின் இனம் சார்ந்த ஒரு பறவைக் கூட்டம் ஆங்காங்கே ஒடுங்கி அமர்ந்திருந்தது. எந்த வகை மரம் என்றே தெரியாத மரக் கூட்டம் இலைகளின்றிக் கூடுகளாய் பனி அடைகளுக்கு இடமளித்து விட்டதில் அவையும் பல வடிவங்களில் தொங்கிக் கொண்டிருந்தன.
மூச்சானது விடுபடும்போதெல்லாம் பனித்துகள்கள் பொடிந்து பரவி அப்பரப்பின் குளிர்மையை உணர்த்தின. இமைகளைக் கடந்து கண்களிரண்டும்கூடக் குளிரை உணர்ந்து ஒரு புதிய உணர்வை மூளை உணர்ந்தது.
போகர் பிரான் குளிருக்குப் புதியவரல்லர்... ஆயினும் இப்பரப்பின் குளிரும், வெண்ணிறச் சூழலும் அதன் மேல் சூரிய ஒளிபட்டுத் தகதகக்கும்போது உருவாகும் வெளிச்சமும் குளிர்விழிகளில் கூச்சம் பூசியது. போகர் பிரான் நடக்கத் தொடங்கினார். ஆங்காங்கே சில தவசிகள் கோவணம் மட்டுமே கட்டிய நிலையில் சின்னஞ்சிறு புற்றுபோல் தீக்குன்றுகளை உருவாக்கி நெளியும் தீ நாக்கின் மேல் கைகளைக் காட்டி, குளிர்காய்ந்தபடி இருந்தனர். அவர்களின் சிரம் மேலான கேச கோபுரம்கூட வெளுத்து அவர்கள் முதுமைக்குக் கட்டியம் கூறிற்று. இணக்கமாய் சிரிக்கமட்டும் செய்தனர்.
அவர்களில் ஒருவரிடம் தீர்க்க வம்சத்தவரின் இருப்பிடத்தை அறிந்துகொண்டு அவர்களை நோக்கி நடக்கலானார். சமதள நிலப்பரப்பும் உறைந்தும் உறையாத நீர்ப்பரப்பும், நீலவண்ண மலர்ப்பரப்பும் கண்களில் பட்ட நிலையில் அவர்களின் குடில்கள் கண்ணில் பட்டன. சில வீடுகளில் புகையோட்டம் காணப்பட்டது. புசுபுசுத்த நாய்க்கூட்டம் அருகிலிருந்த நெட்டை மரத் தண்டுகளில் கட்டப்பட்டிருந்தன. சிரம்மேல் முளைத்த வளைகொம்பு மலை எருமைகளை சிலர் கட்டியிருந்தனர். அவற்றின் கறுத்த முதுகின் மேல் பனித்துகள்கள் தூவினாற்போல் கிடந்தன.
ஒரு முதுகிழவி கூன் விழுந்த நிலையில், அந்த எருமைக்குப் பசும்பயிர்க் கட்டைப் போட்டு அதைச் சாப்பிடத் தூண்டினாள். போகர் வரவும் நின்று ஏறிட்டாள். போகர் புன்னகைத்தார் - அவள் பதிலுக்கு வணங்கினாள். வாருங்கள் என்று அழைத்து, அவிந்தபடி கிடந்த அக்னிக்குழி அருகே உள்ள நாற்காலி போன்ற ஆசனத்தில் அமரச் செய்து, அருகே தானும் அமர்ந்தவளாய் பேசலானாள்.
“தாங்கள்..?”
“போகன் என்பர் என்னை...”
“வசிப்பிடம்..?”
“பரத கண்டத்துப் பொதினி...”
“கண்டம் விட்டுக் கண்டம் வந்த ரிஷியோ?”
“இல்லையம்மா... நானொரு சித்தன்.”
“என்ன வேற்றுமை?”
“பிறப்பை வெல்லுதல் முனிக்கும் ரிஷிக்கும் நோக்கு; தன்னை வெல்வது சித்த நோக்கு...”
“புதிய விளக்கம்... தாங்கள் வென்று விட்டீர்களா?”
“தோற்கவில்லையம்மா...”
“என்ன ஒரு பதில்! ஆனால் நானொரு பாவி...”
“எதனால் இந்த விசாரம்?”
“அறுநூறு வருடங்களாகிவிட்டது எனக்கு. ஆறடி உயரத்தில் இருந்த நான் மூன்றடிக்குச் சுருங்கிவிட்டேன். இன்னமும் ஆயிரத்து நானூறு வருடங்கள் வாழ்ந்து முடிவதற்குள் எறும்புபோல் சுருங்கிப்போவேனோ என்னவோ?”
அந்தக் கூன் விழுந்த பெண்மணியின் பேச்சு போகருக்குள் ஒரு புதிய விழிப்பை மட்டுமல்ல, ஆட்டிற்கும் வாலை அளந்து வைத்த அந்தப் பரம்பொருளின் சிருஷ்டிச் சிறப்பை ஒரு முறை எண்ணிப்பார்க்கச் செய்தது.
“அனுபவித்து உடம்பை ஸ்திரப்படுத்தி வாழத் தெரியவில்லையா, முடியவில்லையா?”
“இரண்டும்தான்... என்னைப்போல் நூறுபேருக்கு மேல் இருக்கிறோம். தீயில் குதித்தாலும் உடல்தான் புண்ணாகிறது; உயிர் போக மறுக்கிறது! விஷம்கூட உடம்பைப் படுத்துகிறது; உயிரை விடுவிக்க மறுக்கிறது. என்ன செய்வது, என் முன்னோர் பெற்றுவிட்ட வரசித்தி அப்படி?”
“சாவைக் கண்டு அஞ்சுவோர் நடுவில் சாகாத தங்கள் வாழ்வு மேலானதில்லையா?”
“மேலானதா... எங்கள் வாழ்வா?”
“தவறாக ஏதாவது பேசிவிட்டேனா?”
“மேலானது என்றீரே... அதை எண்ணியே அவ்வாறு கூறினேன். நாங்கள் எல்லோருமே மன இருளில் கிடப்பவர்கள் என்பது உங்களுக்குத் தெரியாது. எதற்கு வாழ்கிறோம் என்பதும் தெரிய வில்லை. ஏதோ பேச முடிகிறது என்னால்... இதுவும் எவ்வளவு காலத்திற்கோ...? உள்ளே என் முப்பாட்டனார் ஒருவர் உள்ளார். அவர் ஆயிரமாவது ஆண்டைத் தொடப்போகிறார்... மிகவே பாவம் அவர்... அவரால் சரியாகப் பேசமுடியவில்லை. திரவ ஆகாரம்தான் எடுத்துக் கொள்கிறார். ஒரு பச்சிலைச் சாற்றைக் குடித்தால் மூன்று மாதம் தூங்கலாம். அதைக் குடித்துவிட்டு ஒரு மரப் பெட்டிக்குள் புழுவைப்போல் சுருண்டு கிடப்போர் இங்கே பலர்.’’
“எல்லாமே விநோதமாக உள்ளதே?”
“ஆம்... விநோதம்தான்... தீர்க்க வம்சம் என்கிற எங்கள் வம்சமே விநோதம்தான்! வாழ்வென்பது ஒரு நூறாண்டுதான் இருக்க வேண்டும். அதற்கு மேல் வாழத்தேவையில்லை என்பதே இந்த உடலும் உலகமும் உணர்த்தும் பாடங்கள்.
அறிவில்லாமல் என் முன்னோர் ஒருவர் பெற்றவரத்தால் நாங்கள் பாடாய்ப் படுகிறோம்...”
“அவர் இருக்கிறாரா?”
“ஏன் இல்லாமல்...? ஆனால் கண் தெரியாது - காதும் கேட்காது. ஓரடி உயரமே உள்ள அவரை அக்னிப்பேழைக்குள் வைத்துப் பாதுகாத்து வருகிறோம். அவர் இதயத்துடிப்பு அடங்கும் நாளை ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதை வைத்து எங்கள் கணக்கை முடிவு செய்துகொண்டு தவத்தில் ஈடுபட்டு இறையருளுக்குப் பாத்திரமாகி இந்தக் கொடிய நெடிய ஆயுளிடமிருந்து விடுபட விரும்புகிறோம்...”
-அந்தக் கூன் விழுந்த பெண்மணியின் பேச்சு போகருக்குள் ஒரு புதிய விழிப்பை மட்டுமல்ல, ஆட்டிற்கும் வாலை அளந்து வைத்த அந்தப் பரம்பொருளின் சிருஷ்டிச் சிறப்பை ஒரு முறை எண்ணிப்பார்க்கச் செய்தது.
இன்று அந்த இனோவா பின் தொடர்ந்ததை, காருக்குள் இருந்த ஆசிரியர் ஜெயராமனோ, எழுத்தாளர் அரவிந்தனோ உணரவில்லை. பின் தொடர்ந்த காருக்குள் பானுவும் ஜோதிடர் நந்தாவும் இருந்தனர்.
நந்தாவின் முகத்தில் கசங்கல்! பானு அழுது முடித்தவள் போலிருந்தாள். கன்னத்தில் அறைபட்டது போல் தழும்பு.
காரை நந்தாவின் நம்பிக்கைக்குரிய டிரைவர் ஒருவன்தான் ஓட்டிக்கொண்டிருந்தான். அப்போது நந்தாவின் போனில் அழைப்பொலி லதா மங்கேஷ்கர் குரலில் சத்யம் சிவம் சுந்தரம் என்கிற பழைய இந்திப் பாடல் அவர் ஒரு ராஜ்கபூர் ரசிகர் என்பதை உணர்த்திட, பாதியில் அது துண்டாகி மறுபுறத்தில் கணேச பாண்டியின் குரல்.
“ஜோசியர்ஜி...”
“என்னா கணேஸ் பாண்டி?”
“ஐயா பேசணும்கறாரு...”
“கொடு... கொடு...” - கைமாற்றம் நிகழ்ந்து முடிந்திட,
“என்னாச்சுங்க ஜோசியரே - எல்லாம் நல்லபடி முடிஞ்சுச்சா?”
“இல்லேஜி... நான்தான் சொன்னேனே? உங்களுக்கு உங்க பேட்டிதான் சத்ரு. நான் வரதுக்குள்ள பெட்டிய தூக்கிக் கொடுத்துடுச்சு.”
“மைகாட்... பானுவையும் அனுப்பியிருந்தேனே.”
“அதுவும் லேட்டா போயிடிச்சு. கேட்டா ட்ராஃபிக்ஜாம்ல மாட்டிக்கிட்டேங்குது. உட்டேன் ஒரு அறை. வேற என்னா நான் செய்ய முடியும்..?”

“அது எப்படி ஜி? பாரதியும் அந்த எழுத்தாளர் பையனும் எடுத்துகிட்டு அவங்க பங்களாவுக்குப் போயிட்டாங்களா?”
“நை சாப்...” என்ற நந்தா வேலைக்காரத் தாத்தா வந்து பெற்றுச் சென்றதை பானு சொன்னதைப் போலவே சொல்லி முடிக்கவும், ராஜாமகேந்திரன் எம்.பி-யிடம் ஒரு அடர்வான மௌனம்.
“ஜீ... ஆர் யூ ஹியரிங் மை வாய்ஸ்?”
“யெஸ்... யெஸ்... கைக்கு எட்னது இப்படி வாய்க்கு எட்டாமப்போச்சேன்னுதான் எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு ஜி...’’
“டோன்ட் ஒர்ரி... எல்லாம் இந்த ஆறுபிளேனட்ஸ் ஒரு வீட்டுக்குள்ள வர்ற எஃபெக்ட்! பாருங்கோ மழை ஸ்டார்ட் ஆயிடிச்சு. தமிழ்நாட்ல வெள்ளம் நிச்சயம்! ஒண்ணுமே இல்லாததெல்லாம் டிமாண்டுக்கு ஆளாகும். நான் வெங்காயத்தைச் சொல்றேன்... உரிச்சா அதுல எதுவுமே இல்லையில்லையா?
ஆனா அது கிலோ டூ ஹண்ட்ரட்! அரிசி, பருப்பு, எண்ணெய், சக்கரை, வெல்லம்னு எல்லாம் பிலோ டூ ஹண்ட்ரட்! இது டூ ஹண்ட்ரட். நான் போன மாசமே சொன்னேன். நம்ப பார்லிமென்ட் கெஸ்ட் ஹவுஸ்ல நீங்க போண்டா ஆர்டர் பண்ணப்ப அதுல இருந்த வெங்காயத்தைக் காட்டிச் சொன்னேன், ஞாபகம் வருதா?”
“நல்லா ஞாபகம் வருது ஜி... நீங்க சொன்ன எல்லாமே அப்படியே நடக்குது. அதெல்லாம் நடக்குது - ஆனா, இது கைய விட்டுப் போயிடிச்சே?”
“போகலே... போகவும் விடமாட்டேன்! அந்த எழுத்தாளன் எல்லாத்தையும் தன் செல்போன்ல போட்டோ எடுத்து ஃபைல் பண்ணிட்டான்னு பானு சொன்னா. அவங்க இப்ப வீட்டுக்குப் போய்க்கிட்டிருக்காங்கோ. நாங்க ஃபாலோ பண்ணிக்கிட்டிருக்கோம். நான் விடமாட்டேன். அந்த செல்போனை நாங்க எப்படியாவது அவன் கிட்ட இருந்து வாங்கி, அந்த ஃபைலை என் போனுக்கு டவுன் லோடு பண்ணிடுவேன்.”
“நோ... இந்த டவுன்லோடெல்லாம் தலைய சுத்தி மூக்கைத் தொடற வேலை. அந்த ஃபைல் நம்ப கிட்ட மட்டும்தான் இருக்கணும். அப்புறம் அவன் அதைப் படிச்சுப் பார்த்துட்டு எதாவது செய்வான். அந்த எடிட்டர் வேற ஒரு விவகாரம் பிடிச்ச ஆளு. காந்திக்குப் பேரன்கற மாதிரி எதையாவது எழுதி எங்களை டென்ஷன் பண்ணிக்கிட்டே இருப்பான். அதுக்குத் தகுந்த மாதிரி எதையாவது செய்யுங்க...”
“பிளான் பண்றோம் ஜி. நீங்க தைரியமா இருங்க. நான் பாத்துக்கறேன்.”
“நல்ல பதிலைச் சொல்லுங்க. ஜாக்ரதையா பிளான் பண்ணுங்க!”
- ராஜா மகேந்திரன் சொல்லி முடிக்க, கார் அண்ணாசாலையிலுள்ள பத்திரிகை அலுவலக வாயிலை எட்டிட சரியாக இருந்தது. காரில் இருந்து ஜெயராமன் இறங்கி உள் செல்வது தெரிந்தது. காரிடம் திரும்பவும் ஓட்டம்.
காரில் இப்போது அரவிந்தன் மட்டும்தான். அவன் வீட்டுக்குள் மாறுவேடத்தில் புகுந்து அவனை அடித்துப் போட்டுவிட்டுக்கூட போனைத் திருடலாம்!
இந்த டவுன்லோடெல்லாம் தலைய சுத்தி மூக்கைத் தொடற வேலை. அந்த ஃபைல் நம்ப கிட்ட மட்டும்தான் இருக்கணும். அப்புறம் அவன் அதைப் படிச்சுப் பார்த்துட்டு எதாவது செய்வான். அந்த எடிட்டர் வேற ஒரு விவகாரம் பிடிச்ச ஆளு.
நந்தா யோசித்தபடியே காரைப் பின் தொடர்ந்தார்.
பிரம்மாண்டம் ஜமீன். வாட்ச்மேன் தாத்தா பெட்டியோடு வந்த கார் உள்புகுந்து நின்றது. ஒரு ஷாமியானா பந்தலுக்குக் கீழே நாற்காலியில் அமர்ந்திருந்த சாந்தப்ரகாஷும் சாருபாலாவும் நிமிர்ந்தனர். தாத்தா பெட்டியை டிக்கியைத் திறந்து சற்று சிரமத்துடன் தூக்கி வந்து அவர்கள் முன் வைத்தார்.
பெட்டியை நேரில் பார்க்கவும் ஒரு பெரும் பரவசம் இருவரிடமும்.
“ரொம்ப தேங்க்ஸ் பெரியவரே! உங்கள ரொம்பவே கஷ்டப்படுத்திட்டோம். வெரி ஸாரி...” என்றான் சாந்தப்ரகாஷ்.
“பெரிய வார்த்தையெல்லாம் எதுக்குங்க. வாங்க சமாதிக்குப் போவோம்.”
“விடுங்க, நான் தூக்கிட்டு வரேன்.”
“அதுவும் சரிதான். இதுவும் சாமி சப்பரமும் ஒண்ணு. தூக்குங்க. யாரெல்லாம் தூக்கறாங்களோ அவங்களுக்கு நல்லதே நடக்கும்!”
- வாட்ச்மேன் தாத்தா கை மாற்றிவிட பேன்ட் ஷர்ட் அணிந்து மேலே கோட்டும் தரித்திருந்த நிலையில் சாந்தப்ரகாஷ் அதைச் சுமந்துகொண்டு வாட்ச்மேன் தாத்தாவுடன் நடந்தான். சற்றுத் தடுமாற்றமுடன் புடவையால் வாயை மூடிக்கொண்டு சாருபாலாவும் பின் தொடர்ந்தாள். மசக்கை அவளை விடுவதாயில்லை.

வழியில் அந்த உயர்ந்த மரங்கள் - அது உருட்டும் அதன் நிழலில் அவர்கள் நடந்து செல்வதை மரத்தின் மேலிருந்து ஒரு கிளியொன்று பார்த்தபடி இருந்தது.
“ஆமா... அந்தப் பொண்ணு ஒண்ணும் தரமாட்டேன்னு அடமெல்லாம் பிடிக்கலையே?” - நடந்தபடியே கேட்டான் சாந்தப்ரகாஷ்.
“சேச்சே... போன நிமிஷம் தூக்கிக் கொடுத்துடுச்சு. தங்கமான பொண்ணு...”
“ஆமாம் அந்த வாள்?” - சாருபாலாதான் கேட்டாள். தாத்தாவிடம் உடனே தடுமாற்றம்.
``அடடே... அதைக் கேட்க மறந்துட்டேனே...”
“என்ன பெரியவரே நீங்க... அது எங்க குல தெய்வத்தோட வாள்...” - சடைத்தாள் சாரு.
“ஒண்ணும் பிரச்னை இல்லைம்மா. திரும்பிப் போய்க் கேட்டா அந்தப் பொண்ணுகொடுத்துடப் போகுது.”
நான் சொல்றேன். இது எங்க குடும்பச் சொத்து. தெரியாம நீங்க தூக்கிட்டுப் போய் ஆன்டிக்ஸ்னு விக்கவும் செய்துட்டீங்க. கடைசில அந்த பாரதிப் பொண்ணு வீட்டுக்குப் போய் ஒரு பிளாங்க் செக்கைக் கொடுத்துட்டு எடுத்துக்கிட்டு வந்துட்டோம்.
“சரி, இனி நாங்க என்ன செய்யணும்?”
“முதல்ல பெட்டிய ஐயாவோட சமாதில வெச்சு கற்பூரம் ஏத்திக் கும்புடுவோம். இந்த பங்களாவைப் பழையபடியே கட்டி அப்படியே வெச்சுக்கறத மனசுல நினைச்சுக்கிட்டுக் கும்புடுங்க.
அம்மாவுக்குக் குழந்தை பிறக்கற வரை இங்க இருந்து போகாதீங்க. இங்க இருக்கறதுதான் வயித்துப் பிள்ளைக்குப் பெரிய பாதுகாப்பு...”
- தாத்தா தன் மனதில் பட்டதையெல்லாம் சொல்லிக்கொண்டே வந்தபோது ஒரு ஆட்டோ வந்து நிற்கும் சப்தம் கேட்டது. திரும்பிப் பார்க்கவும் பழைய புத்தகக் கடை துரியானந்தமும் அவன் மகன் குமரேசனும் இறங்கி வந்து கொண்டிருந்தனர்.
“நாம போன் பண்ணவும் வந்துட்டாங்க பாருங்க...” என்றார் தாத்தா. ஒட்டுமொத்தமாய் எல்லோரும் சமாதியை அடையவும் பெட்டி கீழ் இறங்கியது.
சாந்தப்ரகாஷிற்கு அதற்குள்ளாகவே வியர்த்து விறுவிறுத்துவிட்டது. துரியானந்தமும் குமரேசனும் பெட்டியைப் பார்க்கவும் சற்று விடைத்தனர்.
அதுவரை பெய்தபடி இருந்த மழை நின்று ஓர் ஏகாந்தச் சூழ்நிலை. இன்னும் சற்று நேரத்தில் முழுவதுமாய் இருட்டிவிடக்கூடும்.
“என்ன பாக்கறீங்க?”- தாத்தா ஆரம்பித்தார்.
“எதுக்கு பெருசு அவசரமா புறப்பட்டு வரச் சொன்னே, இந்தப் பெட்டி திரும்பவந்துடிச்சா?”
- இரு கேள்விகளை ஒருசேரக் கேட்டான் துரியானந்தம்.
“நான் சொல்றேன். இது எங்க குடும்பச் சொத்து. தெரியாம நீங்க தூக்கிட்டுப் போய் ஆன்டிக்ஸ்னு விக்கவும் செய்துட்டீங்க. கடைசில அந்த பாரதிப் பொண்ணு வீட்டுக்குப் போய் ஒரு பிளாங்க் செக்கைக் கொடுத்துட்டு எடுத்துக்கிட்டு வந்துட்டோம். இது திரும்ப வந்த மாதிரியே நீங்க பேத்து எடுத்துக்கிட்டுப் போன ஜன்னல், வாசல் கதவு, நிலைக்கால் எல்லாம் எங்களுக்குத் திரும்பி வரணும்.”
- சாந்தப்ரகாஷ் சொல்லும்போதே பெரியவர் பூஜையைத் தொடங்கிவிட்டார். பெட்டிமேல் பூமாலைபோட்டு சந்தனம் தெளித்து அதையும் ஒரு சாமி போலவே பாவித்து அவர் பூஜைசெய்திட, அதைப் பார்த்தபடியே “அது எப்படிங்க முடியும். எல்லாம் சேட்டு குடோன்லல்ல இருக்கு..?” என்று கேட்டான் குமரேசன்.
“போய்க் கொண்டு வாங்க...”
“ஏலம் எடுத்திருக்கோங்க...”
“தெரியும். நீங்க ஏலத்துல எடுத்த பணத்தோடு கூடுதலா நீங்க கேட்டதைத் தரோம்.”
“அப்ப இந்த பங்களா?”
“ஐ ஹேவ் டு கெட் பேக்... புரியலியா - நான் திரும்ப வாங்கிடப் போறேன்.”
“ஏங்க?”
“டோன்ட் ஆஸ்க் கொஸ்டீன்ஸ். டூ வாட் ஐ சே...”
“எல்லாமே விநோதமா இருக்குதுங்க. அதுலயும் இந்தப் பெட்டி என்னை ஒரு பாடுபடுத்திடிச்சு. ஆஹா... இதைத் திறந்துட்ட மாதிரி தெரியுதே?”
“ஆமா... இதுக்குள்ளதான் எங்க முன்னோர் கும்புட்ட சாமி இருக்கு...”
“அப்படிங்களா... ஆனா ஒண்ணுங்க! இது வந்துட்டுப்போனதுல இருந்து எல்லாமே நல்லதாதான் நடக்குது. அந்த மரத்தை எல்லாம் எப்படி நல்ல விலைக்கு விக்கப்போறோமோன்னு நினைச்சேன். இப்ப நீங்களே வாங்கிக்கறேன்னுட்டீங்க. என் பெண்டாட்டியும் முழுவாம இருக்கா. குடிசை மாற்று வாரியத்து ஊடு ஒண்ணுக்கு மனு போட்டு வெச்சிருந்தோம். ஒரு ஊடும் ஓகே ஆகியிருக்குது. தபால்ல தகவல் வந்திருக்கு.”
- குமரேசன் பொங்கிப் பரவசமானான்.
தாத்தாவோ பூஜையில் மும்முரமாய் மணியை அடிக்கத் தொடங்கியிருந்தார். எல்லோர் கவனமும் சமாதி மேலும் முன் உள்ள பெட்டி மேலும் குவிந்திட, அவரும் கற்பூர ஆரத்தி காட்டிட, தளர்ந்த உடல்நிலையோடு சாருபாலா கண்கள் கலங்கக் கன்னத்தில் போட்டுக்கொண்டு வணங்க, சாந்தப்ரகாஷும் வணங்கிட, துரியானந்தமும் குமரேசனும்கூட வணங்கினர்.
அப்போது சமாதியின் பின்புறத்தில் இருந்து அந்தச் சர்ப்பமும் நிமிர்ந்து எழுந்தது.
எல்லோரிடமும் பெரும் விடைப்பு.
‘`சாமி, வந்துட்டிங்களா?”
- வாட்ச்மேன் தாத்தா எரிகிற கற்பூரத்தட்டைக் கீழே வைத்துவிட்டு, கன்னத்தில் போட்டுக் கொண்டார். அப்படியே ‘`வெளியே போனது போன மாதிரியே திரும்பி வந்துடிச்சிங்கய்யா, இந்த பங்களாவும் திரும்பப் போவுதுய்யா. எல்லாம் திரும்பி நல்லதே நடக்க ஆசீர்வாதம் பண்ணுங்கய்யா...” என்று சொல்லிப் புலம்பிட, அந்தக் காட்சியை, தொலைவில், உடைந்த காம்பவுண்ட் சுவரின் பின்புறமிருந்து பார்த்துக்கொண்டிருந்தார் யோகி திவ்யப்ரகாஷ்.
- தொடரும்