மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இறையுதிர் காடு - 56

இறையுதிர் காடு
பிரீமியம் ஸ்டோரி
News
இறையுதிர் காடு

அன்று கூன் விழுந்த அந்தக் கிழவி, மௌனமாய் அமர்ந்திருந்த போகரை சற்றுக் கிளரத் தொடங்கினாள்.

“என்ன போகரே... என்ன யோசனை?”

“யோசனைதான்... யோசனை தான்... அந்த ஆதிப் பரம்பொருளின் சிருஷ்டியை என்னையும் மீறி வியக்கத் தொடங்கி விட்டேன்...”

“எங்களைப் பார்த்தால் வியக்கத் தோன்றாது. பயப்படத்தான் தோன்றும்...”

இறையுதிர் காடு - 56

“ஆம்... அச்சம் தொலைத்த என் மனதுக்குள்ளும் உங்கள் பேச்சு அச்சத்தை எட்டிப் பார்க்கச் செய்தது. எனக்குள் இனி அறிய ஏதுமில்லை என்றொரு எண்ணம் ஒரு ஓரமாய் இருந்தது. அது நீங்க வேண்டும் என்றே அகத்தியர் பெருமான் என்னை இங்கு சென்று வரப் பணித்ததாகக் கருதுகிறேன்...”

“ஓ... அகத்தியனா?”

“ஒருமையில் அழைக்கி றீர்களே.. அவரை நன்கறிவீரோ?”

“நாங்கள் தீர்க்க வம்சமெனில், முத்ர வம்சத்தவர்கள் என்பாரும் இம்மண்ணில் உண்டு. அவ்வம்சாவளிப் பெண்ணை மணந்து எங்களுக்கு மாப்பிள்ளை யாகிப் போனவர் அவர்!”

“லோபமுத்ரா தேவியைக் கூறுகிறீரோ?”

“ஆம் அவளேதான்... இயற்கையாய் இறந்தும் முக்தியை அடையாமல் அலைந்து திரிந்த அவரின் முன்னோர்களுக்கு ஈமக் கடன் செய்யும் ஒரு கடமை அவருக்கு இருந்தது. ஈமக்கடனை ஒரு சன்யாசியாக இருந்து செய்யக் கூடாது; ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து குடும்பத்தவனாக செய்தாலே அது முழுமை பெற்றிடும். எனவேதான் அகத்தியர் சன்யாசம் விடுத்து கிரஹஸ்தனாக அதாவது குடும்பத்தவனாக மாறினார். பல ரிஷிகளும் முனிகளும் கிரஹஸ்தாஸ்ரமர்களே... தன் உடலைத் தந்த பெற்றோர் கடனை அடைக்காமல் ஒருவர் தன் உடலிடம் இருந்து விடுபட முடியாது என்பது தானே தர்மம்?”

“ஆம்... சித்தவழி செல்லும் நாங்களும் அதன் பொருட்டும் ஒரு சித்தவம்சாவளி உலகில் தொடர்ந்து வாழ வேண்டும் என்று கருதியும் கிரஹஸ்தர் களாகத்தான் உள்ளோம்.”

“வம்சாவளிகள் தொடரலாம்... ஒரு பிறப்புக்கு ஏழு பிறப்பெடுத்துக்கூட வாழ்ந்து விடலாம். ஆனால், ஒரு பிறப்பே ஏழு பிறப்பின் ஆயுளோடு இருப்பது பெரும் கொடுமை!

திரும்பத் திரும்ப ஒரே காட்சி, ஒரே வகை உணவு, அதே காற்று, அதே மலை, அதே வானம், அதே மனிதர்கள்... மனது மரத்துப் போய்விட்டது!” அந்த முதுகிழவி சலித்த சடைப்பில் எச்சில் தெறித்தது.

“நன்றாகப் புரிகிறது. முதுமை என்கிற ஒன்றும் இல்லாமற் போனால் இன்னமும் மோசமாக இருக்கும். ஒரு தந்தை என்பவன் தன் மகள் பின் பெயர்த்தி, பெயர்த்தியின் பெயர்த்தி என்று இவர்களை எல்லாமும் மணந்து வாழும் நிலை தோன்றி உறவுக் குழப்பம் ஏற்பட்டு வம்சம், வழி, வர்க்கம், கோத்ரம், மூலம் என்கிற ஒழுங்கு உடைந்து இந்த உலகில் உட்காரக்கூட இடம் இருக்காது. எங்கு பார்த்தாலும் மனிதனே இருப்பான்! இருப்பதோடு மட்டுமா? இவன் தன் ஆறாம் அறிவால் பிற உயிரினங்களையும் தன் பசிக்காக அழித்துவிட்டிருப்பான்... அப்படி ஒரு உலகைக் கற்பனைகூடச் செய்துபார்க்க முடியவில்லை என்னால்...”

“சரியாகச் சொன்னீர்கள்... எங்களை எல்லாம் பார்த்தாவது மனிதர்கள் மரணத்தை வரவேற்றுப் பழக வேண்டும். மரணம்தான் உண்மையான விடுதலை. வாழ்க்கை, சந்தேகமே இல்லாமல் சிறை!”

இறையுதிர் காடு - 56

“நல்லது தாயே... நான் இங்கு மேலும் மூப்படைந்த மனிதர்களை உங்கள் மூலமாகவே கண்டு தெளிந்து, இந்த பிராந்தியம் விட்டு நீங்க விரும்புகிறேன்...”

“அதுசரி... எப்படி இவ்வளவு தூரம் வந்தீர்கள்? உங்கள் புரவிகள் எங்கே? வரும் வழியில் பனிக்குளிர் தாளாது இறந்து விட்டனவா?”

“இல்லை தாயே... எனக்கு இன்னொரு உயிரின் துணையோ, உதவியோ எப்போதும் தேவையில்லை! எனக்கு மட்டுமல்ல, என் போன்ற சித்தன் எவனுமே மானுடர்கள் உதவியையோ, இல்லை பிற உயிர்கள் உதவியையோ பெரிதும் நாடமாட்டார்கள்.

நான் என் பொருட்டே இதைக் கூறுகிறேன். ஒரு பொதுநலம் வேண்டுமெனில் அதில் சிலர் உதவியைக் கேட்பதில் பிழை இல்லை. இப்போதுகூட ஒரு பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். அதில் என் சீடர்களும், சில கருமார்களும் எனக்குப் பெரிதும் உதவியாக உள்ளனர். அப்படியிருக்க நான் எப்படி இவ்வளவு தூரம் பயணித்து வந்தேன் என்றால் அது என் அஷ்டமா சித்தியாலும், மேக மணிக் குளிகை என்னும் ஒரு மூலிகைப் பொருளாலுமே...”

“அஷ்டமா சித்தி... அஷ்டமா சித்தி..! கேள்விப்பட்டிருக்கிறேன் அணிமா, மகிமா, இலகிமா, கரிமா, வசியம், பிராகாமியம் ஈசத்வம் ஆகிய ஆற்றல்கள்தானே?”

“ஆம்... பிராப்தி என்கிற ஒன்றை விட்டு விட்டீர்களே?”

“நான் இவ்வளவு ஞாபகம் வைத்திருப்பதே பெரிதில்லையா?”

“பெரிதுதான்... பாராட்டுகிறேன்... நான் பிறரைக் காணச் செல்லலாமா?”

“வாருங்கள் போகலாம்... நீங்கள் இம்மட்டில் எனக்கொரு உதவி செய்ய வேண்டும். ஒரு நாய்ச்சறுக்குப் பலகையில் அமர்ந்தே நான் வர இயலும். நீங்களும் அதுபோல் வருவீர்களா?”

“அவசியமில்லை. ஒரு நாய்க்கு நான் கடன்பட விரும்பவில்லை. ஒரு கருமத்தால் அதுவே இப்பிறப்பெடுத்துள்ளது. அத்திடமா பங்கு போடுவது?”

“எனில் நாங்கள் அதனிடம் பங்கு போட்டுக் கொள்கிறோமா?”

“அதில் என்ன சந்தேகம், சார்ந்து வாழ்ந்திடும் வாழ்வே கர்ம வாழ்வுதானே..? ஒருவர் கர்மத்தை ஒருவர் பெற்று ஒரு வட்டச் சுழற்சியாக அது நிகழ்ந்துகொண்டே அல்லவா செல்லும்?”

“அதில் தவறேதும் உள்ளதா?”

“உலகில், உண்மையில் தவறென்றும் சரியென்றும் ஒன்று இல்லை தாயே! ஆனால் மாயைக்குள் அது மிக உண்டு. அது இருந்தாலே உலகமும் இயங்க முடியும்...”

“இதைத்தான் புரியாத சித்தன் பேச்சு என்கிறார்களா?”

“புரியவில்லை என்றால் அப்படிச் சொல்பவர் கர்மவாழ்வு வசம் மிக ஆழமாகச் சிக்கிக்கொண்டிருக்கிறார் என்று பொருள்...”

-போகர் சற்று நகைச்சுவையாகச் சொல்லி விட்டு “உங்களை நான் தூக்கிக்கொள்கிறேன், நீங்கள் வழிகாட்டுங்கள்... குறிப்பாக மிக வயதான அந்த மனிதரை நான் காண வேண்டும் - என்வரையில் அவர் ஒரு மானுட தேவர்...” என்றார்.

“தேவர்கள் எங்களைப்போல உடல் சுருங்கி நைந்தவர்களாகவா உள்ளனர்...”

“அமுதத்தால் அவர்கள் உடம்பை வென்று விட்டனர். நாங்கள் கல்பங்களால் பூ மண்டலத்தில் அதை ஓரளவு சாதித்துள்ளோம். மற்றவர்க்கு அசையும் அனைத்துத் திசுவும் மாற்றம் கண்டே தீரவேண்டும்... இது இயற்கை நியதி.”

“அந்தக் கல்பங்கள் எங்களுக்குப் பயன்படாதா? எங்களுக்கு அதைத் தாங்கள் தரக் கூடாதா?”

“இயலாதம்மா... சித்தம் தெளிந்தாலே கல்பம் பயன் தரும்!”

“அதற்கு என்ன செய்ய வேண்டும்?”

“இப்படிப் பேசுவதை நிறுத்த வேண்டும். வெளியே பார்க்கக் கூடாது - கண்களை மூடி உள்ளே பார்க்க வேண்டும். சுவாசத்தைக் கணக்கிட வேண்டும் - எண்ணக் குதிரைகளை இழுத்துக் கட்டி அடக்கி நிறுத்த வேண்டும் - இதுபோல நிறைய உள்ளதம்மா.”

“அப்படியானால் எங்களுக்கு விமோசனமே இல்லையா?”

“ஏன் இல்லாமல்? ஒரு மண் புழுவிற்கும் அதற்கென்று ஒரு வாழ்வை அந்தப் பரம்பொருள் வழங்கியுள்ளது. நம் வாழ்வை வாழ விடாதபடி செய்பவை இரண்டுதான். ஒன்று ஆசை, அடுத்து தெளிவில்லாமை! தெளிவேற்பட்டால் ஆசை சீராகும். அது சீரானால்போதும், எதுவும் பெரிதில்லை சிறிதுமில்லை என்கிற புரிதல் தோன்றிவிடும்.”

“நீங்கள் இப்படிச் சொல்வதால் எனக்கொன்றும் புரிந்து விடப்போவதில்லை. என் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்? வருந்துவீர்களா, இல்லை, மகிழ்வீர்களா? பதில் கூறுங்கள்...”

“தவம் செய்வேன்!”

“என்ன, தவம் செய்வீரா?”

“ஆம். புலன்களை ஒடுக்கி தவம் செய்வேன். தவம் புரிவது என்பது ஒரு போர்க்களத்தில் கோடானுகோடிப் பேரை வெற்றி கொள்வதைவிடப் பெரிய செயல். தவத்தால் உங்களை முதலில் அடக்கி வென்றிடுங்கள். அதன் பின் இந்த உடம்பொரு வீடு மட்டுமே என்பது தெளிவாகி மனதால் ஏகாந்தமாய் வாழத் தெரிந்தவர் ஆகிவிடுவீர்கள்...”

மொத்தத்தில் பெரும் முனைப்புடன் எல்லோரும் பாடுபட்டபடி இருக்க, செங்கான் ஆழிமுத்துவைப் பார்த்து லேசாய் சைகை செய்தபடி எழுந்து வெளியில் சென்றான்.

“உங்கள் கருத்தை ஏற்கிறேன். இனி ஐயோ என வருந்த மாட்டேன். தவம் புரிவேன். புலன்களை அடக்குகிறேன். எனக்கு அதன் நிமித்தம் மந்திரோபதேசம் செய்வீர்களா?”

“தாராளமாக...”

“என்றால், வாருங்கள், முதலில் காண வேண்டியவர்களைக் காணுங்கள். பின் எனக்கு மந்திரோபதேசமும் செய்தி டுங்கள்...” போகர் அந்த முது கிழவியை ஒரு குழந்தையைப் போல் தூக்கிக்கொண்டார். அனல் புலத்தை விட்டும் அகன்றார்!

கன்னிவாடி குகைக்குள் தண்டபாணித் தெய்வத்தின் வரைபடத்தை வைத்துக்கொண்டு மெழுகாலே உருவத்தை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள் கருமார்கள் இருவரும்.

வெளியே ஒரு திறந்த பரப்பில் சமதளமான பாறை ஒன்றில் குழி ஒன்றை உருவாக்கி உரல்போல் வடிவமைத்துக் கொண்டிருந்தனர் நாரண பாண்டியும், மருதனும்... மறுபுறத்தில் ஒரு கல் மொழுவியைப் பொளித்தபடி இருந்தான் அகப்பை முத்து!

இறையுதிர் காடு - 56

சமதளப் பாறையில் காய்ப்புக்கான தளத்தைச் செவ்வக வடிவில் உருவாக்கி விளிம்பில் ஒரு விரல் பருமனுக்கான குழிவை அமைத்து அதில் நீரை விட்டபோது அந்தச் செவ்வகப் பரப்பு நீராழியால் அமைக்கப்பட்ட கோட்டை போலானது. அதனுள் காயப்போடும் செந்தாடுபாவை கொண்டு உருவாக்கப்பட்ட கலவை பாதுகாப்பாய் ஊர்வனவற்றால் தீண்ட முடியாதபடி இருக்கும்.

மற்றொரு புறத்தில் காய்ந்த மரத்துண்டுகள், சுள்ளிகள், பல்வேறு வடிவில் பானைகள், கலயங்கள், மூங்கில் கொண்டு வனையப்பட்ட சிப்பங்கள், தட்டுகள், கூடைகள் என்று பல விதப் பொருள்கள் அடுக்கப்பட்டு அவற்றுக்கு மேல் ஒரு பந்தல் அமைக்கும் முனைப்பில் இருந்தான் மல்லி. அவனுக்கு ஒத்தாசை சிவமணி.

இதுபோக மலைத்தாவரக் கொடிகள் கொண்டு உருவாக்கப்பட்ட கயிறு போன்ற வளைசுருள்களுடன், மூங்கில்களும், இரும்புச்சங்கிலிகளும்கூட அங்கு இருந்தன.

ஒருபுறம் பாஷாணத்தைத் தூக்குத் தராசில் எடையிட்டுக் கொடுக்கும் சங்கன், அதை ஒன்றாக்கி மரவாளிகளில் போட்டுக் கலக்கும் அஞ்சுகன் என்று எல்லோருமே பெரும் முனைப்புடன் இருந்தனர்.

ஒரு கண்ணாடிக் குடுவையில் பாதரசம் இருந்தது. வெயில் படவும் அது கண் கூசுமளவு பளீரிட்டது. ரசமும் சரி, கண்ணாடிக் குடுவையும் சரி, அவர்கள் வரையில் அங்கு இருப்பதிலேயே அபூர்வமான பொருளாகும். குறிப்பாக கருமார்களான ஆழிமுத்துவுக்கும் செங்கானுக்கும், கண்ணாடியை எப்பாடு பட்டாவது ஒரு உலை அமைத்து உருவாக்கி விடும் எண்ணம் இருந்தபடியேதான் இருந்தது. போகர் பிரான் அதை அவர்களுக்குக் கற்றுத்தர சித்தமாக இருந்ததை எண்ணி அவர்களும் மகிழ்வில் இருந்தனர்.

மொத்தத்தில் பெரும் முனைப்புடன் எல்லோரும் பாடுபட்டபடி இருக்க, செங்கான் ஆழிமுத்துவைப் பார்த்து லேசாய் சைகை செய்தபடி எழுந்து வெளியில் சென்றான். வெளியே சென்றவன் மண்கெல்லியை எடுத்துக்கொண்டு குகைக்குப் பின்புறமுள்ள பாறைகள்மேல் ஏறிச் செல்லலானான். அவன் போவதை வெளியே குழியை உருவாக்கியபடி இருந்த நாரணபாண்டியும், மருதனும் பார்த்தனர். சில நொடி வித்தியாசத்தில் ஆழிமுத்து பின் சென்றதையும் பார்த்தனர். கையில் மண்கெல்லியோடு சென்றாலே அது இயற்கை உபாதைக்குத்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். ஒரே சமயத்தில் இருவரும் சென்றது மட்டும் மருதனைக் குடையத் தொடங்கியது.

“நாரணா...”

“ஏ மருதா?”

“இந்த ஆழியும் செங்கானும் எங்க போறாங்க?”

“நான் பாக்கலையே... ஆமாம் எதுக்குக் கேக்கறே?”

“எனக்கென்னமோ ஐயரவமாவே இருக்கு - இவங்க ஏதோ ரகசியமா செய்யறாங்க...”

“ரகசியமாவா?”

“ஆமா... நடு ராத்திரி எழுந்திரிச்சி இரண்டு பேரும் வெளிய போய்ப் பேசிட்டு வாராங்க. அவ்வப்பம் கருவிப்பெட்டியைத் திறந்து திறந்து பாக்கறாங்க...”

“நான் தூங்கிட்டதால இதை உணரல...’’

“இப்பகூட ரகசியமாதான் எங்கேயோ போறாங்க. வா - நாமளும் போய்ப் பாப்பம்.”

“பணிய விட்டுட்டா?”

“இப்ப என்ன... வந்து வெரவா பாப்போம். அட வான்னா...”

- நாரணபாண்டியும் மருதனும் கருமார்கள் போன வழியில் பின்தொடரத் தொடங்கினர். பாறைகள்மேல் ஏறி ஏறிச் செல்வது நன்றாகத் தெரிந்ததால் பின்தொடர்வது சுலபமாக இருந்தது. ஒரு போக்காய்ப் போய், குறிப்பிட்ட இடமொன்றில் நின்று பார்த்தபோது எங்கும் யாரையும் காணவில்லை.

எங்கே போனார்கள்?

இருவரும் நாலாபுறமும் பார்த்த சமயத்தில் ஒரு பச்சோந்தி பாறை ஒன்றின் மேல் அதன் நிறத்திற்கேற்ப மாறியதோடு முன்னிரண்டு கால்களை மட்டும் உயர்த்திக்கொண்டு, பாயப்போவதுபோல் பார்த்தது. ஏராளமான பிரண்டைச் செடிகளோடு நாயுருவியும், கண்டங்கத்திரியும் தழைத்திருக்க அதில் ஒரு பச்சைப்பாம்பு மிக உற்றுப்பார்த்தால் மட்டுமே கண்டுபிடிக்க முடிந்த விதத்தில் தொங்கிக்கொண்டிருப்பதுபோல் தெரிந்தது.

அப்படியே ஒரு பெரும் மான் தோலால் செய்த பை ஒன்றில் தங்கக் கட்டிகள் இருக்க, அதையும் தருவதைப் பார்க்கவும், இருவரிடமும் மேலும் திகைப்பு!

அங்கங்கே விலங்குகளின் எச்சங்களும் காணப்பட்டன.

“மருதா, என்னவே மாயமாயிட்டாங்க. இந்தப் பக்கம்தானே வந்தாங்க..?”

“இங்கனதான் எங்கேயோ அவங்க இருக்கணும்” எனும்போது தொம் தொம் என்று ஒரு தோல்பறை ஒலி கேட்டது. அதைத் தொடர்ந்து ‘ஓம் நவசிவாய’ என்கிற பஞ்சாட்சர ஒலியும் ஒலிக்கத் தொடங்கவும் சப்தம் வந்த திக்கைப் பார்த்தனர். மெல்லிய ஒரு கை மட்டுமே நுழைய முடிந்த பாறை இடுக்கு வழியே இருந்துதான் சப்தம்!

முன்பு ஆழிமுத்து நின்று கவனித்த அதே இடம். உள்ளே அவன் அந்த ஜடாமுடி சித்தரிடம் செங்கானைக் காட்டி ஏதோ பேசியபடி இருக்க, மெல்லிய அந்த இடுக்கு வழியே பால்சாம்பிராணிப் புகையும் ஆவி பறப்பதுபோல் வெளிப்பட்டு அவர்கள் இருவர் மனத்தையும் மெய்ம்மறக்கச் செய்தன.

காட்சியின் உச்சமாய் ஜடாமுடி சித்தர் தன் கழுத்தில் கிடந்த ஒரு ருத்ராட்ச மாலையைக் கழற்றி செங்கான் கழுத்தில் போடுவதும் தெரிந்தது. அப்படியே ஒரு பெரும் மான் தோலால் செய்த பை ஒன்றில் தங்கக் கட்டிகள் இருக்க, அதையும் தருவதைப் பார்க்கவும், இருவரிடமும் மேலும் திகைப்பு!

இன்று யோகி திவ்யப்ரகாஷ் முகத்தில் ஒரு இனம் புரியாத சலனம். அவர் முன்வழியாக வந்திருக்கவில்லை. பின்புற மதில் சுவரைத் தாண்டிக் குதித்து சமாதிக்கு வழிபட வந்து செல்லும் பக்தர்களில் ஒருவரைப் போலத்தான் வந்திருந்தார். எங்கே அவர்களில் யாராவது தன்னைப் பார்த்துவிடுவார்களோ என்று ஒரு பயமும் அவரிடம் தெரிந்தது. மிகச்சன்னமாக மழைத்தூறல்!

அதற்குள் சாந்தப்ரகாஷும், சாருபாலாவும் தரையில் சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்குவது தெரிந்தது. அதைத் தொடர்ந்து படம் விரித்த சர்ப்பமும் அப்படியே தழைந்து சமாதியின் பின்புறத்தில் இருந்த புதரில் புகுந்து போய்விட்டது. தாத்தா சாந்தப்ரகாஷிடம் “இது சர்ப்பமில்ல... என் முதலாளி... குரு... உங்க தாத்தா...” என்று சொல்வதெல்லாம் காதில் விழுந்தது. துரியானந்தமும், குமரேசனும் அப்படியே உறைந்துபோயிருந்தனர். பேச்சோடு பேச்சாக பெட்டியைத் தூக்கிக்கொண்டு திரும்பிச் செல்லத் தொடங்கினர்.

அவர்கள் முற்றாய் விலகவும் திவ்யப்ரகாஷ் சமாதி நோக்கி மெல்ல நடந்தார். அப்போது அவர் கைப்பேசியிடம் ஒலிப்பு. திரையில் எடிட்டர் ஜெயராமன் பெயர்.

“திவ்யப்ரகாஷ் ஜி... உங்களோட கொஞ்சம் பேசணும். உங்க இடத்துக்கு நான் வரலாமா?”

“ப்ளீஸ் கம்... எனக்கும் உங்ககிட்ட பேச நிறைய விஷயம் இருக்கு...”

“அப்ப சரி... நான் வரும்போது போன் பண்ணிட்டு வரேன்” - அந்த பதிலைக் கேட்டபடியே சமாதி நோக்கி நடந்த திவ்யப்ரகாஷ் சமாதியை உற்றுப் பார்த்தார். சமாதியினுள் அமர்ந்த நிலையில் ஒரு எலும்புக்கூட்டும் அதன் கழுத்தில் சில ருத்ராட்ச மாலைகளுடன், ஒரு ஸ்படிக மாலையும், தங்கத்தில் சிவலிங்கமும், ஐம்பது பவுனில் ஆன ஒரு தங்கச் சங்கிலியும் சேர்ந்து தெரிந்தன. அந்த எலும்புக் கூட்டின் தலை பாகத்தின் உச்சியில் ஒரு பிளவும் சிறு துவாரமும்கூடச் தெரிந்தன.

நவதுவாரங்களில் கண் வழியாக உயிர் பிரிவது மத்திமம், வாய் முதல் மலத்துவாரம் வரை என்பது அதமம், கபாலம் பிளக்க உயிர்க்காற்று உடலைப் பிரிவது என்பது உத்தமம். இந்தக் கபாலவழி என்பது பழுத்த சன்யாச யோகிகளுக்கே சாத்யம். இவர்கள் பூ உலகில் சமூகக் கடன் பட்டவர்கள், அதை அடைக்க விதேக உடம்புடன் (புலனாகாத காற்றுடல்) நடமாடுவர். இந்த உடம்புக்குரிய ஆத்மாவானது பிற உயிர்களுக்குள் புகுந்தும் காட்சிப்புலனாகி நடமாடும். ஜீவ சமாதிக்கு வந்து வணங்குவோரின் வினைகளை சீர்படுத்தி அவர்களுக்கு அருள்வதன் மூலம் காலத்தால் சமூகக் கடனும் நீங்கி, முற்றாய் முக்தி நிலையை அடைவர்.

அப்படி ஒரு முக்தராகத்தான் பிரம்மாண்ட ஜமீன் சாந்தப்பிரகாச பூபதியும் இருந்திருக்கிறார் என்பது திவ்யப்ரகாஷுக்குள் தெளிவாகி விட்டது.

கூடுதலாய் ஒரு விஷயம்!

இந்த திவ்யப்ரகாஷ் யாரோ இல்லை... இவரும் சமாதியில் அடங்கியிருக்கும் சாந்தப்ரகாஷ பூபதியின் பேரன்களில் ஒருவர் தான்!

துரியானந்தம் கையில், அவன் எடுத்துச் சென்ற மர ஐட்டங்களுக்கான விலையை ஒரு செக்காய்ப் போட்டு மேலே பெயரை எழுதாமல் கொடுத்தான் சாந்தப்ரகாஷ்!

இறையுதிர் காடு - 56

“நாங்க இதை சேட்கிட்ட கொடுத்துட்டு அவ்வளவு மரத்தையும் கொண்டு வந்து இறக்கிடறோம். ஒண்ணு ரெண்டு வித்திருந்தா மன்னிச்சிடுங்க. அதுக்கு நாங்களே பொறுப்பெடுத்து வேற ஒரு ஆசாரியைக் கொண்டு செய்து கொடுத்துடறோம். எங்க வரைல இது ஒரு அதிசயம். ஒரு கட்டடத்தை உடைச்சு எடுத்துட்டு, திருப்பிக் கொடுக்கற இந்த விஷயம் எங்கேயும் நடந்திருக்காது” என்றான் துரியானந்தம்.

“அஃப்கோர்ஸ்... என்னென்னமோ நடந்திடுச்சு. நான் ஒண்ணு நினைச்சேன். ஆனா நாம என்ன நினைச்சாலும் நடக்கறதுதான் நடக்கும் - அதுதான் வாழ்க்கைங்கறத நான் இப்ப புரிஞ்சிகிட்டேன். நீங்க புறப்படுங்க” என்றான் பெருமூச்சுடன்...

அவன் கண்களில் கண்ணீர் துளித்து விட்டது. சாருவும் அதைப் பார்த்துக் கலங்கினாள்.

பங்களாவை மும்பை புளூ ஸ்டார் கார்ப்பரேட்டுக்கு விற்று வந்த பணத்தில் உறவுகளுக்கெல்லாம் பங்கும் கொடுத்தாகி விட்டது. ஆனால் அவர்களிடம் இப்போது திரும்பக் கேட்டால் அவர்கள் தரமறுக்கலாம். பேசாமல் தனக்கே சொந்தமாக்கிக்கொண்டு விடுவதுதான் ஒரே வழி... அமெரிக்க டாலர்களை எல்லாம் இந்திய ரூபாயாக்க வேண்டும். எதையும்விட வாழ்வில் மன நிம்மதி மிக முக்கியம்!

- சாந்தப்ரகாஷ் இனி அந்த நிம்மதி கிடைத்துவிடும் என்று நினைத்தவேளை பெட்டியின் மேல் பாக மூடியைத் திறந்து உள்ளே பார்த்தாள் சாருபாலா.

கும்மென்ற விபூதி வாசத்தோடு பெட்டி கற்பூர மரத்தாலானது என்பதும் அப்போதுதான் அவளுக்குத் தெரிந்தது. இந்த மரத்துக்கு ஒரு ஈ எறும்புகூட உள்ளே வராது. துர்தேவதைகள் அண்டாது - பல்லிகூட இதன்மேல் ஏறாது - விலகிச் சென்றுவிடும்.

இதெல்லாம் சாருபாலாவுக்குத் தெரியாது. அவளை வாசம் கிறங்கடித்தது. மசக்கை உணர்வுகளுக்கு மிக இதமாய் இருந்தது. மெல்லத் தொட்டு லிங்கத்தைக் கையில் எடுத்தாள். அருகில் இருந்த வாட்ச்மேன் தாத்தா படபடவென்று கன்னத்தில் போட்டுக்கொண்டு, “அம்மா இது பாஷாணலிங்கம்மா. போகர் செய்ததுன்னு எஜமானர் சொல்லியிருக்காரு. இதை பூசை செய்துகிட்டே இருக்கணும். இப்படிப் பெட்டியில வெச்சுப் பூட்டி உள்ள வெச்சதாலதான் தப்புத்தப்பா பல விஷயம் நடந்திடுச்சம்மா...” என்று சொல்ல, உற்றுப்பார்த்தாள் சாருபாலா!

உடம்பில் இனம்புரியாத பரவசம். அதுவரை நிலவிய மசக்கையில் இருந்து எல்லாமே காற்றாய்ப் பறந்துவிட்டது போலவும் ஓர் உணர்வு!

“அம்மா... அதை சாதாரணமா கீழ வெச்சிடாதீங்க.. அப்படியே பெட்டியிலயே இருக்கட்டும். நான் போய் சந்தன குங்குமத்துல இருந்து பூஜை சாமானை எல்லாம் வாங்கிட்டு வரேன்.

நீங்க இங்கேயே இருங்க. இனி நடக்கற எல்லாம் நல்லதா மட்டும்தாம்மா நடக்கும்” என்று சொல்லிக்கொண்டே தாத்தா சென்றுவிட, சாருலதா லிங்கத்தை உள்ளே வைத்து விட்டு, உள்ளிருந்து புத்தக வடிவிலான ஒரு டைரியை எடுத்தாள். ஏட்டுக்கட்டுகள் விரல்களில் உரசியதில் ஒரு மெல்லிய கூச்சம்! அவை அவசரமாகக் கட்டப்பட்டதும் தெரிந்தது. அதுவே அதையெல்லாம் பிரித்துப்படித்து விட்டதை உணர்த்திவிட்டது அவளுக்கு.

“எல்லாத்தையும் அந்தப் பொண்ணு எடுத்துப் பார்த்திருக்கா சந்தா...” என்றாள்.

“அதுசரி... அவ்வளவு கஷ்டப்பட்டுத் திறந்துட்டு, பாக்காம இருப்பாளா?”

“எனக்கென்னவோ இதெல்லாம் ரொம்பவே வேலிடான ஒரு விஷயமாத்தான் தெரியுது.”

“நானும் அப்படித்தான் நினைக்கறேன். என் கொள்ளு தாத்தா ஒரு சித்தர்னு கேள்விதான் பட்ருக்கேன். ஆனா அந்தப் பாம்பைப் பார்த்ததுல இருந்து எனக்குள்ள ஒரு ஹெவி த்ரில்.”

“உனக்கு இப்பதான் அப்படி ஒரு ஃபீல்... எனக்கு எப்ப உன் தாத்தா என் கனவுல வந்து கூப்புட்டாரோ அப்பவே நான் த்ரில்லாயிட்டேன். கமான், டைரிய திற, என்ன எழுதியிருக்கார்னு பார்ப்போம்.”

- சாரு பாலாவும் வெளிச்சம் படும் இடமாய் வந்து நின்றபடியே டைரியை விரித்தார்.

அழகிய சாந்தப்ரகாஷ் பூபதியின் பெயர் முதல் பக்கத்தில்... அலைகோடு போட்ட மாதிரி ஒரு கையெழுத்து - சாந்தப்ரகாஷ் கையெழுத்தும் இதே மாதிரிதான் இருக்கும்!

“அப்படியே உன் கையெழுத்து... சாரி... உனக்கு உன் தாத்தாவோட கையெழுத்து..”

“பின்ன... தாத்தா சொத்து மட்டுமா பேரனுக்கு? இந்த மாதிரி ஜெனடிக்ஸும் தான்ங்கறது உனக்குத் தெரியாதா?”

“வாவ்... என்ன ஒரு வே ஆஃப் ஸ்டைல்! அப்படியே இந்த டைரி வாசம் சொக்க வைக்குது சந்து.”

“இன்று சித்ரா பௌர்ணமி. பொதிகை அகத்தியர் சருக்கத்திற்கு நான் திட்டமிட்டபடி சென்றுவிட்டேன். என்னை அழைத்துச் சென்றவர்கூட ஒரு சித்த புருஷர்தான்.

“பழைய டைரி... பாசம் பிடிச்சிருக்கும் - பார்த்து உனக்குவேற அலர்ஜி... இதான் சாக்குன்னு சளிப்பிடிச்சிடப்போகுது!”

“நோ... நோ... நான் ரிச்சா ஃபீல் பண்றேன் சந்து. டோன்ட் அஃப்ரைட்... கொஞ்சம் இரு... ஆமா இது யார்?”

- அவள் விரித்த பக்கம் ஒன்றில் ஒரு சிறு கறுப்புவெள்ளைப் புகைப்படம். அதில் தாத்தாவின் அருகில் சிட்டாள் என்கிற சுந்தரவல்லி. மூக்கில் புல்லாக்குடன் சுந்தரவல்லிப்பாட்டி ஒடுக்கமாய் இடுப்பில் ஒட்டியாணமுடன் பட்டுச்சேலையில் காட்சி தந்திட, புகைப்படம் எடுக்கையில் பாட்டி கண்களைப் பாதிக்கு மேல் மூடியிருந்தாள். அதனால்தானோ என்னவோ தூக்கியெறிய மனம் இல்லாமல் புகைப்படம் உள்ளே... அதில் தாத்தாவின் உருவமும் சாந்தப்ரகாஷின் உருவமும் தொண்ணூறு சதவிகிதம் ஒத்துப்போய் ஒரு பிரமிப்பைத் தந்தது.

“அப்படியே உருவமும் நீதான்!”

“அதைத்தான் ஜெனடிக்ஸ்னு சொன்னேன்.”

“ஜெனடிக்ஸ்னு சயின்ஸ் ஒரு பக்கம்... கூடவே பாம்பு, சில சாபங்கள்ங்கற மிஸ்ட்ரி... வேடிக்கையா இல்லை?”

“ஆமா... நம்ப லைஃப் இப்ப வேடிக்கை தான்! நான் இந்த பங்களாவை வித்ட்ரா பண்ணப்போறது தெரிஞ்சா பல பேர் சிரிப்பாங்க. அப்ப வேடிக்கைதானே?”

“பரம்பரைச் சொத்தை விக்கறதுதான் சந்து தவறு. மீட்டது சாதனை...”

இறையுதிர் காடு - 56

“பேசினது போதும் டைரிய படி... எனக்கு தமிழ் படிக்கறதுக்குள்ள வேர்த்துக் கொட்டிடும்!”

“ஒன் செகண்ட்!”

- சாருலதா பிரித்த பக்கத்தில் கண்ணில் பட்ட எழுத்துகளை வாசிக்கலானாள்.

“இன்று மனதைக் கல்லாக்கிக்கொண்டு முருகப்ரகாஷை அலி மாதாவிடம் ஒப்படைத்தேன். இந்த மாதா எனக்கும் சிட்டாளுக்கும் திருஷ்டி கழித்தவளாகி, நான் அவள் கழுத்தில் போட்ட தங்கச் சங்கிலியோடு முருகப்ரகாஷுடன் புறப்பட்டாள். அவள் போவது சிட்டாளுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. முருகப்ரகாஷும் அந்த அலி மாதா பின்னாலேயே தயக்கமின்றிச் சென்றான். என் ஜாதகத்தில் காணப்பட்ட பித்ரு தோஷம் என்கிற ஒரு விஷயமும், பெண் சாபமும் என்னை நன்றாகவே பழி வாங்கி விட்டன. முருகப்ரகாஷ் இனி என் பரம்பரை வாரிசேயல்ல! அவன் இனி அலி மாதாவின் சொந்தம். அவனிடமும் எங்களைப் பிரியும் வருத்தமே இல்லை.

எனக்குக் கொள்ளி வைத்து என்னை பித்ரு நரகம் போக விடாதபடி செய்ய இனி எனக்கு வழி இல்லை! பிள்ளையும் இல்லை! சிட்டாள் மயங்கிவிட்டாள்..!”

- அதுவரை படித்து வந்த சாருலதா, சிட்டாள் மயங்கிவிட்டாள் என்கிற நொடியில் “ஐயோ அம்மா” என்று கண்ணீர் விடத் தொடங்க, சாந்தப்ரகாஷ் அதைத் துளியும் எதிர்பாராதவன்போல் “ஒய் சாரு, ஒய் ஆர் யூ க்ரையிங்...” என்று கண்ணீரைத் துடைக்கவும்,

“சந்தா உருவ ஒற்றுமை எழுத்து ஒற்றுமை மட்டும் இல்லை. வாழ்க்கைலேயும் அதே ஒற்றுமை” என்று விசும்பி அழத்தொடங்கி விட்டாள். அதே வேளையில் பரந்த அந்த ஹாலின் இருண்ட ஒரு பாகத்தில் இரண்டு பேர் முகத்தை கர்ச்சீப்பால் மறைத்துக் கட்டிக்கொண்டு கையில் ஒரு ஸ்ப்ரேயர் சகிதம் ஒளிந்திருந்தனர். ஒருவன் கையில் ஸ்ப்ரேயர் - இன்னொருவன் கையில் துப்பாக்கி.

அரவிந்தனும் தன் வீட்டு அறையில் கம்ப்யூட்டர் திரையில் அதே டைரியைத்தான் படித்தபடி இருந்தான்.

“இன்று சித்ரா பௌர்ணமி. பொதிகை அகத்தியர் சருக்கத்திற்கு நான் திட்டமிட்டபடி சென்றுவிட்டேன். என்னை அழைத்துச் சென்றவர்கூட ஒரு சித்த புருஷர்தான். நான் தற்கொலை செய்துகொள்ளத்தான் இருந்தேன். என் விதிக்கு நூறாண்டுவாழ்ந்திடும் விதி அமைப்பு உள்ளதோ என்னவோ? எந்த மரத்தில் தூக்கில் தொங்க விரும்பினேனோ அந்த மரத்தின் ஒரு கிளையில்தான் இருந்தார் அந்த விபூதிச்சித்தர். அவர் என்னைப் பார்ப்பது எனக்குத் தெரியாது. நான் கழுத்தில் கயிற்றை மாட்டித் தொங்க முனையவும் அந்தக் கிளை முறிந்து ஒடியவும் சரியாக இருந்தது. நான் பிழைத்தேன் - என் எதிரில் அந்த விபூதிச் சித்தர் - மிக இளக்காரமாய் சிரித்தார்.”

- அரவிந்தன் படித்தபடி இருக்க அவன் அப்பார்ட்மென்ட் வாசலில் பெரிய இரும்பு பைப்புடன் இருவர்!

- தொடரும்