
அன்று மான்தோல்பை நிறைய தங்கக்கட்டிகளைத் தருவதைப் பார்த்த நாரணபாண்டியும் மருதனும் விக்கித்து விடைத்திட, உள்ளே அந்த ஜடாமுடிச் சித்தர் ஆழிமுத்துவிடமும் செங்கானிடமும் விளக்கமளிக்கத் தொடங்கியிருந்தார்.
“நான் இன்றிரவு விடியற்கால பிரம்ம முகூர்த்த வேளையில் ஜீவசமாதியில் அமரப் போகிறேன். சமாதியில் நான் அமர்ந்த சில நாழிகைகளில் என் கபாலம் வழியே உயிரானது பிரிந்துவிடும்.

என் உடல் யோக உடல் - கல்பங்களால் செரிவான உடல் - அதை இந்த மண் தின்று விடல் ஆகாது. எந்த நிலையிலும் படுக்கை வாட்டில், திசைவழி என் உயிர் பிரிவதும் நன்றில்லை. வானம் பார்க்க நான் அமர்ந்த நிலையில் திசைக்கட்டு இன்றி வான்நோக்கி அது செல்ல வேண்டும். அதுவே உத்தம சன்யாசிகளுக்கு அழகு. அனைத்திற்கும் மேலாய் எமலோக விசையால் என் உயிர்பிரிவதும், விடுதலைபெற்ற என்போன்றோர்க்கு அழகல்ல. எனவே நானே என் பிராணனை உயிர்பிரிய வேண்டிய தருணமறிந்து வலிந்து பிரித்து வெளியேறி விடுவேன். இதனை அப்படியே அமர்ந்த நிலையில் பேணுவதனால், பிரிந்த உயிரின் ஒரு கூறு முக்திநோக்கியும், மற்றொரு கூறு இங்கேயே இருந்து சித்தநெறி சிறந்து விளங்கவும், தேடிவந்து பிரார்த்தனை புரிவோருக்கு உதவி வழிகாட்டவும் செய்யும்.
எனவே அதன்பொருட்டு எனக்கு நீங்கள் இருவரும் ஜீவசமாதி எழுப்ப வேண்டும் என்பதே என் விருப்பம். வரும் நாள்களில் சமாதிக்கு வருவோர் உண்டு பசியாறிச் செல்லவும் அன்னதானமும் நீங்கள் புரியவேண்டும். அதன்பொருட்டே நான் பரிசோதனை செய்து தங்கமாக்கியதை உங்களுக்குத் தந்திருக்கிறேன்.
வரும் நாளில் சித்தவிலாசம் பெற்று விடுதலை பெற்றிட விரும்புவோர்க்கெல்லாம் என் ஜீவசமாதி உற்ற துணையாக இருக்கும். என் விதேக ஜீவன் எனும் சூட்சம உடல் அவர்களுக்கு வழிகாட்டிடும். தினமும் விளக்கெரிவதும், கந்தம் கமழ்வதும் பசியாற்றுவதும் இங்கே பிரதானமாக நிகழ்த்த வேண்டும். மறந்துவிடாதீர்கள்...”
- அவர் சொன்ன செய்தி அந்த இரு கருமார்களையும் கண்களைக் கசியச் செய்தது.
“ஏன் அழுகிறீர்கள்?”
“இப்பதான் உங்கள பாக்கற பாக்யம் கிடைச்சிச்சு. அதுக்குள்ள போறேன்னு சொல்றீங்களே சாமி...”
“யாராக இருந்தாலும் ஒருநாள் போய்த்தானப்பா தீரவேண்டும். ஆனாலும் சித்தனால் மட்டுமே தன் உயிர்ப் பயணத்தைத் தன்விருப்பப்படி எனும் இறைவிருப்பப்படி நிகழ்த்த முடியும். ஒரு சித்தனுக்கு சீடனாக விரும்புகின்றவன் மரணத்தைக் கண்டு கலங்குதல் கூடாது. மரணம் ஒரு மாற்றம். அவ்வளவே!”
“நீங்க எவ்வளவு சொன்னாலும் எங்க வரைல சாவுங்கறது ஒரு பிடிக்காத விஷயங்க...எங்களால அழாம இருக்க முடியாது...”
“அப்படியானால் அழுதிடுங்கள். அழுவது மிகவே நல்லது!”
“ அழுவது நல்லதா... என்ன சாமி சொல்றீங்க..?”
“ஆமப்பா... அழுவது மிக நல்லது! கண்ணீர் கங்கை நீருக்கு சமமப்பா! அதுவும் உருகினால்தான் பெருகும் - இதுவும் நெஞ்சம் உருகினால்தான் பெருகும்! அழுவதில்தான் கர்மமும் கரைந்து போகிறது - வினைக் கணக்கு நேராகிறது... அழாத மன உறுதி கல்லுக்கு சமம். அழுதிடும் மன இளக்கம் கங்கைக்கு சமம்.
வாழ்வில் அழுத கட்டங்களே வாழ்வின் அர்த்தத்தைக் காட்டியிருக்கும். சிரித்த கட்டங்கள் மாயையையே கூட்டியிருக்கும்...”
ஜடாமுடிச்சித்தரின் உபதேச வார்த்தைகள் செங்கானையும் ஆழிமுத்துவையும் வழக்கம் போல் வெறிக்க வைத்தது.
“போகர்சாமி பேச்சும், உங்க பேச்சும் ஒண்ணாதாங்க இருக்கு. அவர் நாங்க எதிர்பார்த்த பதிலைச் சொன்னதேயில்லை. நீங்களும் சொல்லலை...”
“சித்தர்கள் உருவத்தால் மட்டுமே வேறுபடுகிறோம். உள்ளம் ஒன்றுதான். போகட்டும்... முருகப்பெருமான் உருவம் எதுவரை வந்துள்ளது?”

“இப்பதான் மெழுகுச்சிலை உருவாகத் தொடங்கியிருக்கு. இனி களிமண்ணால் கவசமிடணும் - பாஷாணங்களை உருக்கி வார்க்கணும் - பக்குவப்படுத்தும் வேலையே இதுல மிக அதிகம்.”
“போகன் அசாதாரண காரியம் செய்ய இருக்கிறான். வரும் நாளில் உலகம் முழுக்க மனித சக்தியாலும், சுயம்புவாக தேவசக்தியாலும் கோயில்கள் அமையும் நிலையில், சித்த சக்திக்கென உள்ள ஒரு கோயிலாகப் பொதினி ஆலயம் திகழும்.”
“சக்தியிலகூட இப்படி வேற்றுமைகளா சாமி?”
“ஆம்... பஞ்ச பூதங்களால் இந்த வேற்றுமை உருவாகிறது. நீருக்கு ஒரு சக்தி, நிலத்துக்கு ஒரு சக்தி, நெருப்புக்கு, காற்றுக்கு என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு சக்தி. இதில் பஞ்ச பூதங்களைக் கலந்த சக்தியாக சித்த சக்தி திகழும்...”
“ சாமி... உங்களையும் நாங்க ரொம்பத் தாமதமா சந்திச்சிட்டோம். உங்ககிட்டயும் நாங்க தெரிஞ்சிக்க எவ்வளவோ விஷயங்கள் இருக்குது.”
“ எல்லாவற்றுக்கும் ஒரு கணக்கு இருக்கிறதப்பா. கணக்கில்லாமல் எதுவுமே இல்லை. நீங்கள் என் அந்திமத்தில் வர வேண்டும் என்பதெல்லாமும் ஒரு கணக்குதான். போகட்டும்... என் வசம் உள்ளதையெல்லாம் ஒப்படைத்துவிட்டேன். இதைக்கொண்டு நான் சொன்னபடி செயல்படுங்கள். ஏட்டினைப் பாதுகாத்து வைத்துக்கொள்ளுங்கள். என் விதேக சக்தியால் உங்களை வழிநடத்துவதோடு நான் அதையும் பாதுகாத்திடுவேன்.”
“இப்ப நாங்க இவ்வளவு தங்கத்தோட அந்தக் குகைக்குப் போக முடியாது சாமி. இது இங்கேயே இருக்கட்டும். நாங்க ராத்திரி வந்து உங்க விருப்பப்படி சமாதிக்குக் குழிதோண்டி உங்க விருப்பப்படி நடக்கிறோம்.”
ஆழிமுத்துவும், செங்காணும் சொன்னதைக் கேட்டுச் சிரித்த அந்த சித்தர், ``எனக்கு உதவிட இன்னும் இரண்டுபேர் வந்திருப்பது உங்களுக்குத் தெரியுமா?’’ என்று கேட்டார். இருவருமே அதைக் கேட்டுத் திகைக்கவும், சித்தர் பக்கவாட்டுப்பாறையை உற்றுப்பார்க்க, அது மெல்ல விலகி, புறத்தில் நின்றுகொண்டிருந்த நாரணபாண்டியும், மருதனும் தெரிந்தனர்.
அவர்களிடமும் பெருந்திகைப்பு.
சித்தர் அவர்களை உள்ளே அழைத்தார்...
“வாருங்கள்... இது என்ன கள்ளத்தனம்?’’ அவரது கேள்வி எடுத்த எடுப்பிலேயே இடித்தது. அவர்களும் உள்ளே வந்தனர். திருதிருவென விழித்தனர்.
“கள்ளத்தனம் செயல்பட்டாலே இயல்பு கெட்டுவிடும். தைரியமும் சுருண்டுவிடும். நீங்கள் அதற்கு உதாரணம்.”
“சாமி... நீங்க…”
“பதற்றம் வேண்டாம். போகனின் சீடர்கள்தானே நீங்கள் எல்லாம்?”
“ஆமாங்க சாமி...”
“கடமையை மறந்து இவர்களைப் பின் தொடர்ந்தீர்களோ?”
“அது வந்து... சாமி...”
“நீங்களும் எவரும் அறிந்து கொண்டுவிடக்கூடாது என்கிற எண்ணத்துடன் என்னைக் காண வந்தது தவறு. உங்களிடம் உருவான சுயநலம்தான் இவர்களிடமும் கள்ளத்தனமாய்ப் பின்தொடரச் செய்துள்ளது. நல்லதை நினைத்தால் நல்லதும், கெட்டதை நினைத்தால் கெட்டதும் என்று இதையே சொல்வர்” என்று செங்கானையும் ஆழிமுத்துவையும் பார்த்துச் சொன்னார் அவர்.
“மன்னிச்சிடுங்க சாமி...”
“இந்த வார்த்தையைப் பயன்படுத்தத் தேவையே இன்றி வாழ்பவனே முழுமையான மனிதன். போகட்டும்... இந்தக் கட்டையை ‘சங்கர திகம்பரன்’ என்று அழைக்கலாம். நான் இன்று சமாதியில் அமரச் சித்தம் கொண்டுள்ளேன். என் திருவுள்ளத்தை போகனிடம் கூறுங்கள், மற்றவை தானாக நடக்கும். எதையும் எவரிடமும் மறைக்காதீர்கள், வெளிப்படையாக இருங்கள். மறைப்பதால் அது மறைந்துவிடாது. இப்போது போய் போகன் சொற்படி வாருங்கள்...”
அந்த ஜடாமுடிச்சித்தர் நாரணபாண்டியையும் மருதனையும் பேசமுடியாதபடி கட்டிப் போட்டுவிட்டார். அவர்கள் அப்படித் திகழ தாங்களும் ஒரு காரணம் என்று ஆழிமுத்துவும் செங்கானும்கூட நினைத்து அவர்களை ஏறிட்டனர்.
“உம் புறப்படுங்கள்... உங்களுக்கு எதுவாழ்வு என்பது விரைவில் விளங்கட்டும்” என்று சொன்னதன் மூலம் அவர்களுக்கு வாழத் தெரியவில்லை என்பதை மறைமுகமாக அவர் குறிப்பிட்டதை அவர்களும் புரிந்து கொண்டனர்.
குகைப் பகுதி.
போகர் பிரானும் ரிஷ்யச்சருக்கத்திலிருந்து இமயம் வந்து, அங்கிருந்து கங்கை நீர்க்குடத்துடன் வந்துவிட்டிருந்தார். பதினொரு பேரில் நான்குபேர் இல்லாததை அவர் உணர்ந்தபோதிலும் அதைக் கேள்வியாக்கவில்லை.
மெழுகுச்சிலை முழுமையடையாமல் இருந்தது. உலை நெருப்பில் புகை பிரிந்துகொண்டிருந்தது. பாஷாண நெடி சடையனை இருமச்செய்து அவன் அதைக் கட்டுப்படுத்தியபடியே பாஷாணத்தைப் பொடித்தபடி இருந்தான். அவனை அருகில் அழைத்த போகர் உள்ளங்கையை நீட்டச் சொல்லி, அதில் இருதுளி நல்லெண்ணெய் விட்டு, மறுகையால் சூடு பறக்கக் கசக்கி மோந்துபார்க்கச் சொன்னார். இருமல் நின்றுபோனது.
“உனக்கு ஒவ்வாமை உள்ளது... அதுவே உன்னை வருத்தியது. ஒவ்வாமையிலிருந்து விடுபட உனக்கு ஒருவழிதான் உள்ளது. புளிப்பு உணவை நீ உட்கொள்ளாதே. உன் உடல் அறுசுவையில் ஒரு சுவையான புளிப்புக்கு எதிரானது. இதை இறுதிவரை பின்பற்று...” என்றார்.
சடையனும் தலையசைத்தான். அப்போது ஆழிமுத்து, செங்கான், மருதன், நாரணபாண்டி என்கிற நால்வரும் குகைக்குள் வந்து போகர் பிரான் நிற்பது கண்டு கைகுவித்து வணங்கியவர்களாய் மண்டியிட்டனர். அவர்கள் மண்டியிடவும் லேசாய் சிரித்த போகர் “என்ன தவறு செய்தீர்கள்?” என்று கேட்டார்.
நால்வரின் சார்பிலும் நாரணபாண்டியே நடந்ததைச் சொல்லி முடித்தான். விவரமாக எதையும் மறைவின்றிச் சொன்னான். ஆழிமுத்து மௌனமாக எழுந்துசென்று கருவிப்பெட்டி யிலிருந்து அந்த ஏட்டுக்கட்டை எடுத்துவந்து போகரின் முன் வைத்தான்.
மற்றவர்கள் முகங்களில் திகைப்பின் ரேகைகள்! ஒரு கடமை நிமித்தம் வந்த இடத்தில் கூட ரகசியமாய்ச் சில செயல்பாடுகள் நிகழ்ந்திருப்பதை அவர்கள் துளியும் எதிர்பார்த்திருக்கவில்லை.
போகரும் அவர்களிடம் கோபதாபம் கொள்ளவேயில்லை.
“அருமை சீடர்களே! ஒரு சித்தனுக்கு சீடனாவது மிகக் கடினம். அதனால்தான் என் சகாக்கள் தனித்தும் விழித்துமிருக்கின்றனர். உங்களைப் போன்ற சீடர்களும் ஆசை வயப்பட்டு தவறான நடத்தைக்குத் தள்ளப்பட்டுவிடுகிறீர்கள்.

நீங்கள் இப்படி நடந்துகொண்டது எனக்கும் ஒரு எச்சரிக்கை. பாஷாணலிங்கத்தின் சக்தி அவரவர் மட்டத்தில் நிரூபணமாகிவிட்டது. எனவே அந்த லிங்கம்வரையில் நான் சில கட்டுப்பாடுகளை உருவாக்காவிட்டால் முக்திநெறி என்பது ஆசாபாசவாழ்வின் இச்சா சக்தி நெறியாகிவிடும் என்பதை நான் உங்களால் உணர்ந்தேன்.
நீங்கள் ஒரு விஷயத்தைக் கட்டாயம் உணர்ந்தாக வேண்டும். மிக ஆழமாயும் உணர்ந்தாக வேண்டும். பூமியில் வாழப்படும் வாழ்வென்பது அரசவாழ்வாக இருந்தாலும் சரி, ஆண்டியின் வாழ்வாக இருந்தாலும் சரி, ஒன்றுமேயில்லை என்பதே அந்த விஷயம். மரணப்புள்ளியில் நிற்கையில்தான் பளிச்சென்று தெரியும், நாம் வேடமிட்டவர் என்று.
ஆம், இது வேடம்... போக சித்தன் என் கதாபாத்திரப் பெயர். இதில் நாம் முனைந்து நடிக்கக்கூடத் தேவையில்லை. நம்மை நடிக்க வைக்க காலத்துக்கு நன்றாகத் தெரியும். இந்த உண்மையைப் புரிந்துகொண்டால் எதிலும் பற்றுவைத்து அதில் சிக்காதிருப்போம். எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும், வந்ததுபோலவே அது போய்விடும் என்றும் நம்பத் தொடங்குவோம். உண்மையில் வாழ்வென்பது நாம் வாழ்ந்திடும் மூச்சு விடும் இத்தருணமேயாம். எனவே தருணத்தைத் தவறவிடாமல் அன்போடும் கருணையோடும் இருப்போம். இதுவே உங்களுகெல்லாம் என் எளிய போதனை” என்ற போகர் பிரான்,
``சங்கர திகம்பரின் சமாதி யோக நிலைக்கு நாம் துணை நிற்போம். ஒரு மானுட உயிர் தன் மானுட அழுக்குகளை முற்றாக நீக்கிக்கொண்ட நிலையில், திரும்பப் பிறவாத ஒரு நிலைக்குச் செல்ல உள்ளது. அதன் நிமித்தம் உரிய இடத்தைத் தேர்வுசெய்து அதில் மகாசமாதி அமைப்போம். இது ஒரு அரிய நிகழ்வு. அதன் பின் இங்கே நம் பணிகளைத் தொடங்குவோம்’’ என்று கூறிட, சீடர்களிடம் மகாசமாதி தொடர்பாகப் பல கேள்விகள். குறிப்பாக அஞ்சுகன் போகர் முன் வந்தவனாய்,
“பிரானே... திரும்பப்பிறவாத ஒரு நிலைக்கு சங்கர திகம்பரர் செல்லவிருப்பதாய்க் கூறினீர்கள். அப்படியிருக்க, அவர் உடலை சமாதியிலிட்டு வணங்குவதால் நமக்கு அதில் என்ன பெரிதாய் நன்மை கிடைத்துவிடும்? உயிரற்ற உடல் அழுகும் மாமிசம்தானே, அதற்கு எதற்கு வணக்கமும் முறையும்?” என்று கேட்டான்.
“மிகச் சிறந்த கேள்வி இது. கேள்வி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். ஒரு யோகியின் உடல் அழுகும் மாமிசமல்ல... இதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். எந்த நிலையிலும் ஒரு யோகி, இல்லையாயின் ஒரு முனிவன், ஒரு சித்தன் இவர்களின் உடல் அழுகிடும் மாமிசமாக ஆகவே ஆகிடாது. அது ஒட்டிச் சுருங்கும், வற்றிக் காய்ந்துபோகும் எலும்புகளும் இரும்பின் உறுதிக்கும் மேலானதாய் இருக்கும். இரும்புகூடத் துருவேற்றம் கொள்ளும். ஆனால் இவர்களின் எலும்புகள் அப்படியேதான் இருக்கும். எத்தனை ஆயிரம் ஆண்டு ஆனாலும் இதில் மாற்றம் நிகழாது...”
“அதற்குக் காரணம்?”
“ரசாயன குணங்களற்ற உணவுப்பழக்கம், கல்ப மூலிகைகளால் உண்டான உறுதி, தளர்வுறாத நரம்புகள் என்று உடம்பெனும் வீட்டை உறுதிசெய்துகொண்டதுதான்... வேறென்ன?”
“அப்படியாயின் மிக உறுதியான சிதைவில்லாத உடல் என்று இதனைக் கூறலாம். இந்த உடலுக்குள் உயிரில்லாத நிலையில் இது ஒரு உறுதியான மலைப்பாறைக்கு வேண்டுமானால் சமமாகலாம். இதற்கு அருளும் சக்தியும், வழிகாட்டும் தன்மையும் எப்படி இருக்க முடியும்?”
“மலைப்பாறை என்று நீ கூறும் கல்லில் உருவம் சமைத்து, அதை பிரதிஷ்டை செய்து, அவ்வேளையில் அச்சிலையின் காலடியில் மருந்து சாற்றி, பின் அதன்முன் நின்று ஒலியெழுப்பிட (மந்திரங்கள் ஓதுதல்) அந்த ஒலி அக்கல்லில் பட்டுத்தெறித்து, விண்ணில் உள்ள அதன் மூலத்துடன் கூடிச் செயல்படத் தொடங்கும். அதன் முன் நாம் பரிவுடன் பக்தியுடன் உருக்கமான எண்ணங்களுடன் வணங்கி நின்றிட, நம் எண்ணங்கள் விண் தொடர்புடைய அதோடு இணைந்திடும். அதன் காரணமாக விண் தொடர்பு வணங்குவோர்க்கு ஏற்படும்.

மண்ணில் வாழ்வோனை விண்ணில் இணைக்கும் ஒரு சாதனமாகவே நடுவில் இறை உருவம் கல்லில் நிற்கிறது. இதனால் சப்த வடிவிலான மனம் சமநிலை அடையும். அவ்வாறு அது அடைவதையே நிம்மதி என்றும் சாந்தி என்றும் நாம் கூறுகிறோம். ஒரு கல்விக்ரகம் கோயிலில் இருந்து செய்வதை, ஒரு சித்தன் உடல் சமாதியில் இருந்து செய்திடும்! இந்தச் சித்தன் செயலைப் பதஞ்சலியார் தன் பாட்டாலே நமக்கு உணர்த்துகிறார். அந்தப் பாடலைச் சொல்கிறேன் கேளுங்கள். தன் சூத்திரத்தில் அவர் கூறியதை நான் எளிய சொல் கொண்டு உணர்த்துகிறேன்.
‘மூடாமல் ஒன்பது வாசலையும் விட்டு
மூத்திரப் பாதைவழி மூச்சை விட்டு
சூடான மேகத்தால் வியாதி பூண்டு
தூங்கியல்லோ மாண்டார்கள் தொழும்பர் எல்லாம்
சூடாமல் கேசரமரம் மாயைபத்தி
அறிவுக்குள்ளாயிருந்து அஜபை எல்லாம்
ஓடாமல் சுழுமுனையைப் புரையிலூட்டி
உயிரடக்கும் பெரியோர்கள் உண்மைதானே?’
- இந்தப் பாடலுக்குள் நம் உடம்பினுள் அடங்கியிருக்கும் சூக்கும சரீரம் பற்றிய குறிப்பு உள்ளது. இந்த சூக்கும சரீரத்துடன் நாம் விடும் மூச்சுக்காற்றைத் தொடர்புபடுத்தி வெளிவரும் மூச்சை உள் விடுவதாய் மாற்றும்போது அந்த சரீரம் விண்தொடர்பில் இருந்து விலகாமலும் அதே சமயம் தனக்குள் சூக்கும சரீரத்தோடு இயங்கத் தொடங்கும்.
அது காற்று வடிவானதால் உடம்பை விட்டு நீங்கி அது நடமாடிடும். அதே சமயம் தன் பரு உடல் தொடர்பும் செயலாற்றும். இந்த சூக்கும உடலால் உரத்துப் பேசமட்டும் இயலாது. ஆனால் இது எங்கும் செல்லும், எவருள்ளும் புகும், அதோடு தொடர்புகொண்டு அதையும் இயக்கி, தன்னையும் இயக்கிக்கொள்ளும்.
ஞானியர், சித்தர் உடம்பின்றி இவ்வாறே இயங்குவர். சூக்கும உடம்பாலும் யோகத்தில் இளைப்பாறிடுவர். இவ்வேளை உங்களுக்கெல்லாம் நான் ஒரு கருத்தை அழுத்தமாகக் கூற விரும்புகிறேன்.
நானும் இவ்வண்ணமே என் உடலை உதிர்த்து சூக்கும உடலுடன் என் சமாதியில் யோகத்தில் ஆழ்ந்தும், நான் விரும்பும் சமயம் எங்கும் சென்று வரவும் முடிந்த ஒரு ஜீவனாய்த் திகழவே விரும்புகிறன். இப்போது நான் உரைத்த அவ்வளவும் இந்த உலகில் ஒரு புழுவுக்குக்கூட சாத்யம். இதில் மந்திர மாயம் ஏதுமில்லை. உண்மையில் மாயம் என்கிற ஒன்றே உலகில் இல்லை.
ஒரு காரியம் பிரபஞ்ச விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடந்தால் அது இயல்பு. அந்த விதிகளுக்கு அப்பாற்பட்டு மிக வேகமாய் நடந்தால் அது யோகம், யோகத்தையே மாயமாக உலகு கருதுகிறது.”
-போகர் பிரான் உடல் குறித்துக் கூறிய விளக்கங்களுடன் சங்கர திகம்பரனின் சமாதி நிலை காண அனைவரும் புறப்பட்டனர். போகர் அவர்களை வழிநடத்தி சங்கர திகம்பரரின் மலைக் குகை நோக்கி நடக்கலானார்.
இன்று ஜோதிடர் நந்தாவால் ஒரு லோக்கல் புள்ளி மூலம் ஏவி விடப்பட்ட அவர்கள் கூலிப்படையைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு இடப்படும் கட்டளையைத் துல்லியமாகச் செய்து முடிப்பவர்கள். அவர்கள்தான் இரும்புக்குழாய், கத்தி, குளோரோஃபார்ம் என்கிற ஆதிகால மயக்க மருந்து, ஆக்சா பிளேடு என்று தங்களுக்கான ஆயுதங்களுடன் அரவிந்தனின் அப்பார்ட்மென்ட் வாசலில் நின்றிருந்தனர். காலிங்பெல்லை அழுத்தினால் அவன்தான் வந்து கதவைத் திறப்பான். அப்போது தோதாக அடித்தோ இல்லை குளோரோஃபார்ம் கொண்டு அவனை மயங்க வைத்தோ உள்ளே நுழைந்து, அவன் வசம் உள்ள செல்போனில் இருந்து லேப்டாப் வரை சகலத்தையும் எடுத்துச் சென்று ஜோதிடரிடம் கொடுத்துவிட வேண்டும் என்பதே அவர்களுக்கான அசைன்மென்ட்.
அதன்பொருட்டு காலிங்பெல்லை அழுத்தவும் பவர்கட்டில் அந்த அப்பார்ட்மென்ட் இருந்ததால் அது சப்தம் எழுப்பவில்லை. உள்ளே அரவிந்தன் டைரியை முழுமையாக வாசிப்பதில் மும்முரமாக இருந்தான்.
பக்கத்துக்குப்பக்கம் தகவல்கள். பொடி எழுத்தைப் படிப்பது மட்டும் சிரமமாக இருந்தது. துணையெழுத்தும், கொம்பெழுத்தும் சாந்தப்ரகாசருக்குப் பரிச்சயமில்லாததுபோல் அதில் சொல்லாட்சி. டைரி எழுதும் பழக்கம் தனக்கு ஏற்பட்ட காரணத்தைக்கூட அவர் குறிப்பிட்டிருந்தார்.
நார்ட்டன் துரை என்பவர் திருவல்லிக்கேணியில் ஆற்றிய ஒரு உரையைக் கேட்டதிலிருந்து தன் மனதில் மிகப்பெரிய மாற்றம் உண்டாகி, இந்த டைரி எழுதும் பழக்கம் வரப்பெற்றதாகக் குறிப்பிட்டிருந்தார்.
“துரையின் பேச்சுதான் இந்த டைரிப்பழக்கம் எனக்கு ஏற்படக் காரணம். துரையின் ஆங்கிலப் பேச்சு எனக்குப் புல்லரிப்பைக் கொடுத்தது. லண்டன் சென்று மேற்படிப்பு படிக்க வசதி வாய்ப்புகள் இருந்தும் நான் செல்லவில்லை. அதை நினைத்து வருத்தப்படுகிறேன்.

துரை சொன்ன ஒரு கருத்து என்னை மிகவே சிந்திக்க வைத்தது, நீங்கள் பெரும் பணக்காரராக இருப்பது பெருமையில்லை. அந்தப் பணத்தால் என்ன செய்கிறீர்கள் என்பது முக்கியம் என்ற துரையின் கருத்து எனக்கு மிகப் பிடித்துவிட்டது. கூடுதலாக, நீங்கள் ஒருவருக்குக் கீழ் வேலை பார்த்தால் தொழிலாளி. ஒருவருக்கு வேலை தந்தால் முதலாளி. நீங்கள் யார் என்பதை நீங்களே முடிவுசெய்துகொள்ளுங்கள் என்றார்.இந்தத் தொழிலாளி முதலாளி கருத்து அபாரம்.”
இப்படி ஒரு பக்கத்தில் தற்குறிப்பாக இருந்ததைப் படித்தவன், குறிப்பிட்ட ஒரு பக்கத்தில் சாந்தப்ரகாசர் தன் மகன் ஒரு திருநங்கை என்பதை உணர்ந்த கட்டத்தையும் படிக்கலானான்.
‘என் முருகு இன்று உதட்டுச்சாயம் பூசி, முகமெங்கும் முலாம் போட்டது போல சிலோன் முகபஸ்பத்தையும் தரித்துக்கொண்டு, அப்படியே அவன் தாயின் புடவையை எடுத்துக் கட்டிக் கொண்டு கண்ணாடி முன் அழகு பார்த்து நின்றதை நானும் பார்க்க நேர்ந்தது. என் இதயம் அப்போது அறுந்து என் வயிற்றுக்குள் விழுந்துவிட்டதுபோல் உணர்ந்தேன்.’
ஜோதிடர் நந்தாவால் ஒரு லோக்கல் புள்ளி மூலம் ஏவி விடப்பட்ட அவர்கள் கூலிப்படையைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு இடப்படும் கட்டளையைத் துல்லியமாகச் செய்து முடிப்பவர்கள். அவர்கள்தான் இரும்புக்குழாய், கத்தி, குளோரோஃபார்ம் என்கிற ஆதிகால மயக்க மருந்து, ஆக்சா பிளேடு என்று தங்களுக்கான ஆயுதங்களுடன் அரவிந்தனின் அப்பார்ட்மென்ட் வாசலில் நின்றிருந்தனர்!
‘என் முருகப்ரகாசத்தைப் பரிசோதித்த அந்த ஆங்கில மருத்துவர் ஒரு பாண்டிச்சேரிக்காரர். அவர் என்னிடம், அவனொரு திருநங்கை - இதை ஏதும் செய்வதற்கில்லை என்று கூறியதைக் கேட்டு நான் மட்டுமல்ல, சுந்தரவல்லிச் சிட்டாளும் நொறுங்கிப்போனாள். சிட்டாள் அப்போது படுக்கையில் விழுந்தவள்தான்... எழவே இல்லை. என்னுடைய முருகுவும் எதனாலோ எங்களோடு தங்கப் பிரியப்படவில்லை. பரந்துபட்ட எங்கள் பிரமாண்ட ஜமீனின் கோச்சு ஓட்டியான ராவுத்தன் உறவினன் ஒருவனும் திருநங்கையாம். முருகு அவனை எங்கே எப்படிப் பார்த்தானோ தெரியாது. அதன்பின் அவனோடுதான் திரியலானான். எனக்கு அந்த ராவுத்தன் உறவினனை எப்படி அழைப்பது என்றே தெரியவில்லை. அவனா? அவளா? ராம நவமி சமயம் எங்கள் ஜமீனின் ராமர் கோயிலில் பாகவத உபன்யாசம் நடைபெறும். அதுசமயம் விட்டல பாக்யதாசர் என்கிற ஒரு பாகவதர் ராமாயணக் கதையையும் பாரதக் கதையையும் விடிய விடிய சொல்வார். அப்படி அவர் சொன்ன சமயத்தில் பாரதத்தில் அர்ஜுனன் திருநங்கையாக வேஷம் போட்டு மறைந்து வாழ்ந்தானாம். அப்போது அவன் பேர்கூட பிருஹந்தளையோ என்னவோ... எனக்கு அந்த ஞாபகமெல்லாம்தான் வருகிறது.’
லேப்டாப் வழியே அரவிந்தன் வாசித்தபடியே இருக்க வெளியே காத்திருந்த அவர்களும் பொறுமை இழந்தவர்களாகக் கதவைத் தட்டி அரவிந்தனை அழைக்கத் தொடங்கினர்.
டொக்... டொக்... டொக்...
அரவிந்தன் காதில் இயர்போனை மாட்டியிருந்ததால் சப்தம் கேட்கவில்லை. அப்பார்ட்மென்ட் முகப்பில் திடீரென்று சிறு பரபரப்பு. இரு போலீஸ்காரர்கள் தங்கள் மோட்டர் பைக்கில் வந்து இறங்கியிருந்தனர்.
‘இங்க அரவிந்தன்கிறவர் ஃப்ளாட் எது?’ என்று வாட்ச்மேனிடம் கேட்டவர்களாய் லிப்ட் அருகே அவர்கள் செல்வதை மேலிருந்தபடியே ஒரு ‘தம்’ பற்றவைக்க ஒதுங்கிய சமயம் அந்த அடியாட்களில் ஒருவன் பார்த்தான். அவர்கள் பேச்சைக் கேட்கவும் நொடியில் பதற்றம் அவனைத் தொற்றிக்கொண்டது.

வேகமாய் கதவருகே நிற்கும் சகாவிடம் வந்தவன் “மாப்ள.... டானாகாரங்க வர்றாங்க... உம் ஜூட்...’’ என்று, புகையை உமிழ்ந்தபடியே லிப்டைக் கடந்து படிகளில் இறங்கினான். நூலிழையில் அவர்கள் படிகளில் மறையவும், லிப்டைத் திறந்துகொண்டு போலீஸ்காரர்கள் வரவும் துல்லியமாக இருந்தது.
சாருபாலா தொடர்ந்து டைரியைப் படிக்க இயலாதவள் போல ஈரக் கண்களை மூடிக் கொண்டு தன் மார்பின் மேல் டைரியை விரித்து வைத்திருந்தாள். பழுப்பேறிய, எறும்பு ஊர்வது போன்ற எழுத்துகள் கொண்ட பக்கங்களைப் பார்த்தபடியே அவள் அருகில் வந்து தலையை வருடிவிட்ட சாந்தப்ரகாஷ் டைரியை எடுத்து மடித்து அருகில் வைத்திட அவளும் விழி மலர்ந்தாள்.
“என்னடா... படிக்க முடியலையா?”
“ஆமாம் சந்தா... இன்னிக்கு நாம அனுபவிக்கற இந்த வேதனையை அன்னிக்கு உன் கொள்ளுத் தாத்தா அனுபவிச்சிருக்காரு. நாமகூட பரவாயில்லை. நம்ப ஆகாஷ் சந்தோஷமா யு.எஸ்ல அவ்வளவா வெளிய தெரியாதபடிதான் இருக்கான். ஆனா உன் கொள்ளுத் தாத்தாவுக்குப் பிறந்த முருகப்ரகாஷ் சமஸ்தான மானத்தையே வாங்கியிருக்கான்...’’
“ஹூம், ப்ரகாஷ் ப்ரகாஷ்னு பேருலதான் எல்லாருக்கும் வெளிச்சம் இருக்கு. யாருமே பெருசா சந்தோஷமா இல்லை போல...’’
“உண்மை. பைதபை இதன் மூலமா ஒரு பெரிய உண்மை தெரியவந்திருக்குது...’’
“என்ன சாரு அது...”
சாந்தப்ரகாஷ் கேட்க, சாரு சொல்ல வாயைத் திறந்தவேளை, உள்ளே ஒளிந்திருந்த அந்த இரண்டு பேரும் முகத்தை வெளியே தெரியாதபடி மூடிக்கொண்டு, மறைவான அந்த இருண்ட அறையிலிருந்து வெளிப்படத் தொடங்கியிருந்தனர். அவர்களை சாந்தப்ரகாஷும் சாருபாலாவும் துளியும் எதிர்பார்க்கவேயில்லை.
“ஏய் யாருடா நீங்க… இது என்ன வேஷம்?’’ என்று சாந்தப்ரகாஷ் கேட்கும்போதே ஒருவன் ஸ்ப்ரேயரை சாந்தப்ரகாஷ் முகம் நோக்கி அமுத்த முற்பட, கச்சிதமாக ஸ்ப்ரேயைப் பற்றியிருந்த கையின் மேலேயே கூரை மேலிருந்து விழுந்து சீற்றமெடுத்தது அந்த நாகம்.
ஸ்ப்ரேயர் தெறித்து விழ நாகமும் தரையில் விழுந்து படம் விரித்து நிமிர்ந்தது. ஒரு கைத்தடியைத் தரையில் நட்டு வைத்த மாதிரி அது மூன்றடி உயரத்துக்கு எழும்பி நின்று சீறியதில் அவர்கள் இருவரிடமும் பலத்த வெலவெலப்பு!
சாரு எழுந்து சாந்தப்ரகாஷைக் கட்டிக்கொண்டு நிற்கத் தொடங்கினாள். அவர்கள் நின்று சாந்தப்ரகாஷை நெருங்க முயன்றபோதெல்லாம் அந்தப் பாம்பின் சீற்றம் அவர்களை மிரட்டியது. சாந்தப்ரகாஷும் தாமதிக்காமல் தன் கையிலிருந்த செல்போனை இயக்கியவனாக “போலீஸ் ஸ்டேஷனா?’’ என்று கேட்கவும் அவர்கள் அப்படியே பின்புறமாக ஓடி, பெயர்த்து எடுக்கப்பட்டிருந்த ஒரு ஜன்னல் துவாரம் வழியாக எட்டிக்குதித்து ஓடத் தொடங்கினர்.
இடைப்பட்ட அந்த நேரத்தில் சாருவுக்குள்ளும் ஏராளமான அதிர்வு. நல்ல வேளையாக ஒருபுறமாக வாட்ச்மேன் தாத்தா ஒரு கையில் காபி பிளாஸ்க்குடனும், இன்னொரு கையில் கேரி பேக்கில் நிறைய பிஸ்கட், கேக் அயிட்டங் களுடனும் வந்து கொண்டிருந்தார்.
ஸ்ப்ரே வாடை சாந்தப்ரகாஷை பக்கத்து சோபாவில் அமர்ந்து தலையை உசுப்பச் செய்தபடியே இருந்தது. தரைமேல் கிடந்த அந்தப் பாம்பு நெளிந்து ஒருபுறமாய்ச் செல்லத் தொடங்கிட, சாரு அது போவதையே வெறித்துப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள்.
தாத்தாவும் அதைப் பார்த்துவிட்டார்.
“அடடே, சாமி வந்துட்டுப் போறார் போல’’ என்று பரவசமானார்.
“ஆமாம் தாத்தா... யாரோ ரெண்டுபேர் முகமூடியோட வந்து இவரை மயக்கமடைய வைக்கப் பார்த்தாங்க. நல்லவேளையாக இந்தப் பாம்பு அவங்க கைமேலயே விழுந்து அவங்களைத் தெறிச்சு ஓடவெச்சிடுச்சு.”
“ அப்படியா... முருகா என்ன இது சோதனை..!”
வாட்ச்மேன் தாத்தா முணுமுணுத்திட சாருவிடம் சட்டென்று ஒரு ஆவேசம். வேகமாக சாந்தப்ரகாஷை நெருங்கி அவன் முன் தரையில் மண்டியிட்டு அமர்ந்தவள்,
“சந்து... நாம உடனடியாக ஒரு காரியம் செய்யணும்’’ என்றாள்.
“என்ன சாரு?”
“நாம ரெண்டு பேரும் இந்தப் பெட்டியோட பொதிகை மலைக்கு உடனே புறப்படணும்.”
“வாட்...”
“யெஸ்... வி மஸ்ட் கோ தேர்...”
“வேர்?’’
“பொதிகை ஹில்... இந்த டைரில அப்படித்தான் இருக்கு.’’
“எதுக்கு அங்க, ஏன் போகணும்?’’
“போகணும்... போயேதீரணும்... இந்த சிவலிங்கம் நமக்குச் சொந்தமில்லை... இது போகரோட சொத்து... ஒரு 12 வருஷம் வெச்சு வணங்கச் சொல்லித்தான் போகர் இதை உன் தாத்தாகிட்ட கொடுத்திருக்கார். ஆனா உன் தாத்தாவால அதை நிறைவேத்த முடியாம அந்த 12 வருஷம் முடியறதுக்குள்ள அவர் செத்துட்டாரு...”
“என்ன சாரு சொல்றே நீ... எதுவுமே புரியல எனக்கு. போகர் அது, இதுன்னு ஏதோ சொல்றே?”
“விவரமா சொல்றேன்... முதல்ல நாம கிளம்புவோம்...’’
“நீ இப்ப யாருங்கறத மறந்துட்டியா... யூ ஆர் கேரியிங்...”
“ஐ நோ... ஆனா எனக்கு எதுவும் ஆகாது. இன்னும் சொல்லப்போனா, இதைச் செய்யத்தான் நாமளே இண்டியா வந்திருக்கோம்...”
“ஓ சாரு... இப்படி க்ளாரிட்டி இல்லாமப் பேசினா எப்படி?’’
“சொல்றேன்... கார்லபோகும்போது விவரமாச் சொல்றேன். நாம இங்க தொடர்ந்து இருந்தா நம்ம உயிருக்குக்கூட ஆபத்து ஏற்படலாம். அதுக்கு சாட்சிதான் இப்ப வந்துட்டுப்போன அந்த முகமூடிக்காரங்க...’’
சாரு பேசுவதைக் கேட்ட வாட்ச்மேன் தாத்தாவும், “எஜமான்கூட பொதிகை மலைக்குத்தான் அடிக்கடி போய்ட்டு வருவார். பல வருஷம் அவர் அங்கே இருந்துதான் சாமியாராவே ஆனார்” என்றார்.
“தாத்தா, இப்ப இங்க ரெண்டுபேர் கொள்ளைக்காரங்க மாதிரி வந்தாங்களே, அவங்க யார், எதுக்கு வந்தாங்கன்னு உங்களுக்கு ஏதாவது தெரியுமா?’’
“தெரியல தம்பி. ஆனா ஒண்ணு, இந்த சிவலிங்கத்துக்கு அப்பவே பலகோடி ரூபா தர ஆசைப்பட்டவங்க உண்டு...”
“அப்படி இதுல என்ன இருக்கு?’’
“சந்து... நான் விவரமா எல்லாத்தையும் சொல்றேன். இந்த டைரி எனக்கு எல்லாத்தையும் சொல்லிடிச்சு. திரும்பவும் சொல்றேன், நாம வந்திருக்கிறதே இதுக்காகத்தான். குறிப்பா, வரப்போற சித்ரா பௌர்ணமி நாள் நம்ம வாழ்கையோட உச்சக்கட்டமான நாள்... அன்னிக்கு நமக்கு பல அதிசயங்கள் காத்திருக்கு...” சாருவின் பேச்சு சாந்தப்ரகாஷை கத்திமுனைக் கூர்மைக்கு மாற்றியது.
- தொடரும்