மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இறையுதிர் காடு - 58

இறையுதிர் காடு
பிரீமியம் ஸ்டோரி
News
இறையுதிர் காடு

அன்று அது ஒரு அந்தி சாயும் வேளை... வெய்யக் கதிரவன் மேற்கில் மேகப்பொதிகளால் சிறை யிடப்பட்டிருந்தான்.

இறையுதிர் காடு - 58

தென்மேற்குப் பருவக்காற்று பருவமங்கையானவள் மஞ்சளைப் பூசிக் கொள்வதுபோல் கூதலைத் தன் புலப்படா மேனிமேல் பூசிக்கொண்டு அதிகவேகமின்றி வீசியபடியிருந்தது.

இவ்வேளையில் போகர் பிரானோடு சீடர்கள் அத்தனை பேரும் மலைப்பாறைகளின் மேல் ஒரு நேர்க்கோட்டில் நடந்துசென்ற விதமே காணக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. போகருக்குப் பின்னால் புலிப்பாணி இருந்தான். போகர் தான் கொணர்ந்திருந்த கங்கை நீரின் ஒரு பகுதியைப் புலிப்பாணி வசம் தந்து அவனை எடுத்துவரப் பணிந்திருந்தார். அவன் அதை ஒரு கலயத்தில் இட்டு, கலயக்கழுத்திற்கு வாழைநார்க் கயிற்றில் வளைமுடி போட்டு, தோளில் தொங்கும் வண்ணம் கட்டியிருந்தான். அவனுக்குப் பின்னே அஞ்சுகன், அவனுக்கும் பின்னே சங்கன், நாரணபாண்டி என்று அந்த வரிசை உருவாகிவிட்டிருந்தது.

இறுதியில் இருந்தனர் ஆழிமுத்துவும், செங்கனும். இருவரிடமும் பெரிதாய் உற்சாகமில்லை. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாது போய்விட்டதுபோல் ஓர் உணர்வு அவர்களுக்குள்... நடப்பது எதுவுமே தங்கள் கையில் இல்லை என்பது போலவும் ஒரு விசாரமான சிந்தனை. நாரணபாண்டியும் மருதனும் தங்களை ரகசியமாகப் பின்தொடர்ந்து வந்து எல்லாவற்றையும் கெடுத்துவிட்டதாகவே மனதும் கருதியது. இப்படி நினைத்துப் பார்க்கக்கூட அச்சமாக இருந்தது. தங்களுடைய எண்ண ஓட்டத்தை போகர் கண்டுபிடித்து வெளிப்படையாகக் கேட்டுவிடுவார் என்கிற பயமே இருந்தது.

இறையுதிர் காடு
இறையுதிர் காடு

நடந்து செல்வோர் ஓரிடத்தில் சற்று துர்நாற்றத்தையும், பருந்துகளின் கூட்டத்தையும் கண்டனர். வரையாடு ஒன்றைச் சிறுத்தை ஒன்று உண்டு துப்பியிருந்த மிச்சங்கள்தான் நாற்றத்திற்குக் காரணம். பருந்துகள் அந்த மிச்சங்களைத் தன் அலகுகளால் குத்திக்கிழித்தபடி உண்ண முயன்றுகொண்டிருந்தன.

வரிசையில் ஒரு கூட்டம் வருவதைக்கண்டு படபடத்துப் பறக்க முனைந்தன. ஒரு பருந்து வரையாட்டின் கண்களைத் தன் அலகால் கொத்திப் பிடித்தபடி விண்ணில் எகிறியது. அக்காட்சி போகர் உள்ளிட்ட சகலரிடமும் ஒரு இரக்க உணர்வோடு கூடிய பரிதவிப்பான உணர்ச்சியை உருவாக்கிற்று.

போகர் வரையாட்டின் இறைச்சியை உற்று நோக்கினார் அவருள் பெரிதாய் சிந்தனையோட்டம். அதைக் கண்ட புலிப்பாணி அவர் முகத்தைக் கூர்ந்து பார்த்தான்.

“என்ன பார்க்கிறாய்?”

“இக்காட்சி தங்களை வருத்துவதுபோல் உணர்கிறேன்.”

“வருத்தம் உனக்கில்லையா?”

“எல்லோருக்கும்தான் பிரானே...’’

“அதுதான் ஆறாவது அறிவின் வினைப்பாடு.’’

“தாங்கள் கூறவந்தது புரியவில்லை...”

“நீயும் இன்னமும் வாழ்வை அலசிப்பார்த்துச் சிந்திக்கவில்லை என்று எனக்குத் தெளிவாய்த் தெரிகிறது.”

“நீங்களெங்கே... நானெங்கே... ஒரு நூறைக் கடந்துவிட்டவர் நீங்கள், நான் இப்போதுதான் இளமைக்கே வந்துள்ளேன்...”

“அதுவும் சரிதான்... இக்காட்சி உங்களுக்குள் கேள்விகளை எழுப்பினால் கேட்கலாம். பதிவு செய்துகொள்ளக் கிழார் பெருமக்கள் இல்லாததுதான் ஒரு குறைபாடு.”

“அக்குறையை நான் போக்குகிறேன். தங்கள் திருவாய்க் கருத்துகளை ஞாபகமாய் சிந்தையில் கொண்டு கிழார்களைக் காண்கையில் அவர்களிடம் கூறிவிடுகிறேன்’’ என்று முன் வந்தான் அஞ்சுகன்.

“உன் நல்விழைவைப் பாராட்டு கிறேன்’’ போகர் தூண்டிவிட, கேள்விகள் பிறக்க ஆரம்பித்தன.

பிரானே... இப்படி சாதுவான ஒரு ஆட்டை அடித்துக் கொன்று விழுங்குகிறதே புலி... அதற்கு இறப்புக்குப் பின் நரகம்தானே சித்திக்கும்?”

“அடடே இப்படிக்கூட ஒரு கேள்வியா, சிறப்பு… அடுத்து?”

“புலி எதனால் ஆடுமாடுபோல் தாவர உணவை உண்பதில்லை?”

“உம்... இதுவும் நல்ல கேள்விதான். அடுத்து?”

“புலியைப்பற்றி நான் கேட்க பெரிதாய் ஒன்றுமில்லை. எனக்கு அதன் தோலும் வரிகளும்தான் ஆச்சர்யம். ஒரு ஈ எறும்புக்குக்கூடத் துன்பம் தரக்கூடாது என்று எண்ணுகிற ஒரு சன்யாசி எதனால் புலித்தோல் மேல் அமர்ந்தி ருக்கிறார்? அது சரியா?”

“உச்சம்... இது கேள்விகளில் உச்சம்... இன்னமும் யாராவது கேட்க விரும்பு கிறீர்களா?”

“என்னிடம் ஒரு கேள்வி உண்டு... எந்த ஒரு விலங்கையும் துணிந்து வேட்டையாடி உண்ணும் இந்தப் புலி எதன் அடிப்படையில் தன் இனப்புலிகளை வேட்டையாடு வதில்லை? இதனிடமும் தாய்ப்பாசம் இருப்பதும் குட்டிகளிடம் அது அன்பு காட்டுவதும் பெரும் வியப்புக்குரிய விஷயம். நமக்குப் பல விஷயங்கள் கற்பிக்கப்படுகின்றன. அதற்கென்று எழுத்தும் மொழியும் உள்ளது. அப்படி எதுவும் இல்லாத இவற்றுக்கு புணர்ச்சி முதல் பாச உணர்ச்சி வரை யார் சொல்லிக்கொடுத்தார்கள்?”

- இது மருதன் கேட்ட கேள்வி.

போகர் அவனருகே சென்று அவனது குடுமிச்சிரத்தை வருடிப் புன்னகைத்தார். பின்,

“நீ பெரிதாகப் பேசிட மாட்டாய்; பேசினால் சிறிதாகப் பேசிட மாட்டாய்!” என்று கூறியவர். மேகம் விலக்கி எட்டிப்பார்த்த கதிரவனின் மஞ்சள் கிரணங்களைத் தன் முகத்தில் வாங்கியவராக ஒரு பாறை மேல் அமர்ந்தார். அப்படியே பத்மாசனமி ட்டுக்கொண்டார்.

“எல்லோரும் ஆங்காங்கே அமர்ந்திடுங்கள்... எப்போதும் பொதினிக் கொட்டாரத்தில்தான் என் போதிப்பு இருக்கும். இன்று இந்தக் கன்னிவாடி மலைத்தொடருக்கு அது இடம்மாறியுள்ளது. இங்கே சற்று இளைப்பாறுவோம்...

எஞ்ஞான்றும் மலையுச்சி விரிந்த பார்வையைத் தரும். பஞ்ச பூதங்களோடு நாம் மிக நெருக்கமாகவும் முடியும். தரைப்பரப்பில் எப்போதும் நமக்கு அரைப் பார்வைதான்... அதில் அகப்படுபவையும் குறைவானவைதான். ஆனால் மலையுச்சி அப்படி அல்ல... அது நமக்கு ஏராளமான மலைகளைக் காட்டும் பாருங்கள். அதோ கன்னிவாடி நிலப்பரப்பு... இதோ இப்பக்கம் பொதினி ஊடாக சேர நாட்டின் வியாபகம். என் முதுகுக்குப் பின்னால் பாண்டிய மண்டலம் - இடக்கைப்புறம் திருவரங்கத்தையும் தஞ்சையையும் உள்ளடக்கிய சோழ சாம்ராஜ்யம். இதன் திசைகளை அறிந்து உணர அதோ மேற்கு வானக் கதிரவன் நமக்கு உதவிக் கொண்டிருக்கிறான். இவனில்லாவிட்டால் இந்த பூமிப்பந்தில் நீங்களும் நானும் உட்பட எவருமிருக்க வாய்ப்பில்லை.

இவன் என்று மானுடப்பதத்தில் அதிலும் ஆண்பாலில் நான் கூறுவது வழிவழி வழக்கத்தால் அல்ல... இந்த உலகில் எந்த ஒன்று இரு தன்மையற்று ஒன்றாக மட்டுமே உள்ளதோ அதை பரமபுருஷனாக பாவித்து அவன் என்பது இயல்பு. இக்கருத்து ஒன்றான சகலத்துக்கும் பொருந்தும்.

போகட்டும். இந்தப் புலிகுறித்த சிந்தனைக்கு வருகிறேன். `புலி இப்படிப் பிற உயிர்களைக் கொன்று தின்கிறதே அது பாவமில்லையா?’ என்பது முதல்கேள்வி.

இல்லை. பாவமும் புண்ணியமும் ஆறு அறிவு கொண்ட மனிதனுக்கு மட்டுமே. மனதால் பாவிப்பது அதாவது எண்ணுவது என்பதே பாவம் புண்ணியம் என்றாகிறது. எண்ணம் நல்லதானால் அது புண்ணியம். கெடுதலானால் அது பாவம்.

பரம்பொருளின் படைப்பில் புலியும் சிங்கமும் இல்லாவிட்டால் ஆடும் மாடும் மானும் குதிரையும் பெருகி, அதனால் தாவரங்கள் பெரிதும் அழிந்து, சம நிலை மாறி உயிர்வாழ்வில் தடுமாற்றம் ஏற்பட்டுவிடும். ஒரு காடு சமநிலையில் திகழ இப்படி ஒரு வடிவமைப்பு தேவை. இதை வடிவமைத்த பரம்பொருளின் பேரறிவைப் போற்ற வார்த்தைகளில்லை நம்மிடம். இப்படி நான் கூறுவதால் ஒரு சமாதானம் மனதுக்கு ஏற்படாது. பாவம் இந்தத் தாவர பட்சிணிகள் என்றுதான் நினைக்கத்தோன்றும். ஒரு மானையும், மாட்டையும் நினைத்து அவ்வாறு எண்ணத் தேவையில்லை. தாவர பட்சிணியானது தன் வாழ்நாளில் தான் ஒரு மாமிச பட்சிணிக்கு உணவாகும் போது மட்டுமே துன்பத்தை அடைகிறது. அதுவும் சிலபல நொடிகளே. அதன் மாமிச உடல் உண்ணும் விலங்கின் உடல்பாகமாகப் பின் மாறிவிடுகிறது. இதுதான் அறியா ஒரு தியாகம் என்றும் கூறலாம். நூறு மான்களின் கூட்டணியே ஒரு புலி எனலாம்.

இறையுதிர் காடு - 58

உயிர்களுக்கு இன்பமும் துன்பமும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இரண்டையும் ஒரு உயிர் உணர்ந்தாலே அது தன் பயணத்தில் அடுத்தடுத்த மாற்றங்களை அடையமுடியும். ஒரு துறவி புலித்தோல் ஆசனத்தைக் கொண்டிருப்பது தத்துவ அடிப் படையில்... ஒரு புலிக்குள் எல்லா உயிர்களும் அடங்கிவிடும். ஆனால் எது ஒன்றும் புலியை அடக்க முடியாது. இது மாமிச பட்சிணிகள் சகலத்துக்கும் பொருந்தும். இதில் மனிதன் புலியை வேட்டையாடி வீழ்த்துவதை இணைத்துப் பார்க்கக்கூடாது.

மனிதன் புலியோடு தன் உடல் பலத்தோடு எப்போதும் மோதுவதில்லை. தன் அறிவுத்திறத்தால் கருவியைக் கண்டறிந்து அதன்மூலமே மோதுகிறான். எனவே, புலியை சாதாரணமாய்க் கருதிவிடக்கூடாது. அது தன்னுள் சகலத்தையும் அடக்கிக்கொள்கிறது. பசித்தாலும் புல்லைத் தின்பதில்லை. ஒரு சன்யாசியும் தன்னுள் உலகை அடக்கிக்கொள்கிறான். எது நடந்தாலும் தன்னிலை மாறாது உறுதியோடிருக்கிறான். அதன் குறியீடே புலித்தோல். இதை ஒரு சன்யாசி ஒரு புலியைக் கொன்று அடைவதில்லை. இயற்கையாய் இறந்த புலியின் தோலையே பயன்படுத்துகிறான்.

புலித்தோல் பதம்செய்த நிலையில் ஒரு கல்பகாலம் அதாவது ஆயிரம் வருடங்களுக்குக்கூட அழிவின்றி இருக்கும். உலகின் கிழியா ஆடை இதுவெனச் சொல்லலாம்.

மேலான இன்னொரு காரணமும் உள்ளது. ஒரு புலி ரஜோ மற்றும் தமோ குணத்தின் வடிவம். மனிதனின் முக்திக்கு இந்த குணங்கள் உதவாது! எனவே அதை அழித்து மனதை சத்வ குணத்தில் நிலைப்படுத்தி இருப்பதையே புலித்தோல் ஒருவருக்கு உணர்த்துகிறது. இதன் தோல்தான் சிவனின் இடையாடை! அழித்துக் காப்பது சிவனருள். அதாவது செருக்கு, பற்று, காமம் என்பவற்றை அழித்து அவன் நம் ஆன்மாவைக் காக்கிறான். அதன் குறியீடே சிவபெருமானின் ஆடையாகப் புலித்தோல் இருப்பதன் காரணம்.

இப்படிப்பட்ட புலித்தோல் பதம்செய்த நிலையில் ஒரு கல்பகாலம் அதாவது ஆயிரம் வருடங்களுக்குக்கூட அழிவின்றி இருக்கும். உலகின் கிழியா ஆடை இதுவெனச் சொல்லலாம். இதன் கோடுகள் நமது ரேகைகளைப் போன்றவை. ஒரு புலிக்கு இருப்பதுபோல் இன்னொன்றுக்கு இருக்காது. கோட்டை வைத்தே இதை அடையாளம் காண முடியும். பிரம்ம சிருஷ்டியின் உன்னதம் நம்வரையில் நம் கைரேகை என்றால், புலியிடம் அதன் வரிகளே!’’

போகர் பெருமானின் புலி குறித்த விளக்கம் எல்லோரையும் ஒரு முறை பிரமிப்பில் ஆழ்த்தியது. இருப்பினும் இந்த விளக் கத்தை வைத்தே ஒரு கேள்வி மல்லியிடம் முளைவிட்டிருந்தது.

“பிரானே... ஒரு வரையாட்டின் சாவும், அதன் மாமிசமும் ஏற்படுத்திய தாக் கத்தால் சிருஷ்டியின் பல உன்னதங்கள் புரியவந்தன. மனிதன் எதனால் மேலானவன் என்பதும் தாங்கள் ஏதும் சொல்லாமலே புரிந்துபோனது. இருப் பினும் ஒரு கேள்வி நிரடுகிறது.

ஆறறி வில்லாத உணர் வால் வாழும் ஒரு புலிக்குள் தன் ஆத்மாவைப் புகுத்திக்கொண்ட ஒரு சீடன் எப்படி ஒரு மனிதனுக்கு இணையாகச் சிந்தித்துச் செயல்பட முடிந்தது. புலிக் குண்டான அளவுதானே செயல்பட முடியும்?’’ என்று கேட்டே விட்டான்.

“இதுவும் மிகச் சிறந்த கேள்வியே... கூடு விட்டுக் கூடு பாய்கையில் ஒரு மனிதனின் ஆத்ம உடல் சுவேத உடல் என்றாகி விடுகிறது. சுவேத உடல் நூறு சதவிகிதம் தூல உடலுக்கு இணை யானது. எனவே அது எந்த உடலுக் குள் நுழைந்த போதும் செய லாற்றும்...”

“இங்கே நான் ஒரு கேள்வியைக் கேட்க விரும்பு கிறேன் கேட்கலாமா?’’ அகப்பை முத்துவும் இடையீடு செய்தான்.

காலாங்கிநாதன் ‘காலப்பலகணி’ என்று ஒரு நூல் எழுதியுள்ளான். அதில் பிரளயம், பேரழிவு, மழைப்பொழிவு, உஷ்ணாதிக்கம், ஆட்சிமாற்றம், நாடாளுவோர் பெயர் என ஒரு தேசத்துக்கான நிகழ்வுகள் கூறப்பட்டுள்ளன.”

“தாராளமாய்க் கேள்...’’

“தாங்கள் ஒரு யாத்திரையின் போது ஒரு வேதியர் வீட்டுத் திண்ணையில் தங்கினீர்கள். அப்போது உள்ளே ஒரு வேத ஹோமம் செய்யப்பட்டுக் கொண்டி ருக்க, அவ்வேளை அந்த வேதியர் உங்களை வேறு திண்ணையில் போய் அமரச் சொன்னபோது அவர்களுக்குப் பணியாமல், அங்கு நடமாடிய ஒரு பூனையின் காதில் நீங்கள் வேதம் உபதேசித்து அதை அந்தப் பூனை திரும்பக் கூறியது இந்த வகையில்தானா?’’

“அடடே... என் வாழ்வில் எவ்வளவோ சம்பவங்கள். அதில் இதுதான் உங்கள் நினைவில் உள்ளதா?”

“ஆம் குருவே… நினைவில் மட்டுமல்ல, இது எப்படிச் சாத்தியம் என்கிற கேள்வியும் பலமாகவே உள்ளது.”

“மனிதனின் அறிவின் முன் சாத்தியமற்றது என்று எதுவும் இல்லை சீடர்களே... அதைச் செயல்படுத்த நாம் எதை இழக்கப்போகிறோம் என்பதில்தான் எல்லாம் உள்ளது. ஒன்றை இழக்காமல் ஒன்றைப் பெற இயலாது என்பதே உலகநியதி.இதுவே அடிப்படை விதி. வரும் நாள்களில் உங்களைப்போல கேட்பவர்கள் அதிகரித்திட மனிதன் தன் அறிவால் கண்டறியாதன எல்லாம் கண்டறிவான். மனிதக் கண்டுபிடிப்பில் இன்று நான் மகத்தானதாய்க் கருதுவது சக்கரத்தைத்தான். சக்கரம் ஒரு அதிசயம்; ஆச்சர்யம். இது வந்த பிறகே தூரம் சிறிதானது. பக்கத்து நாடுகள் பக்கத்து ஊர்களாயின. தரைமேல் நிகழ்ந்த இந்த மாற்றம் விண்ணிலும் நிகழும். பறக்கும் கருவிகள் முதல் நம் உருவத்தை அப்படியே பதிவு செய்யும் கருவிவரை பல புதியன பிறந்திடும். நான் அடிக்கடி சென்று வரும் சீனத்தில் புதிய கருவிகளுக்கான ஆய்வுகள் நடந்துவருகின்றன. கண்ணாடி கொண்டு ஒரு சிற்றெறும்பைப் பெரிதுபடுத்திப் பார்க்க இயலும். அதேபோல் ஒரு யானையைச் சிறிதாக்கிக் காணவும் முடியும்.

வாள்கொண்டு போர் செய்யும் முறை ஒழிந்து விசைசக்தியைப் பயன்படுத்திப் போர் செய்யும் நாள் வரும். மருத்துவத்திலும் வாயால் உண்ணும் அவசியமின்றி மருந்தானது நேராக ரத்தத்தோடு கலக்கப்படும் முறை ஊசிகளால் நிகழும். அப்படிப்பட்ட ஊசிகளில் நுண்துளையிடும் வித்தை சீனத்தில் தோன்றத் தொடங்கியுள்ளது.

விண்மின்னலை மண்ணகப்படுத்தி அந்த மின்னல் சக்தியைப் பயன்படுத்தும் அறிவுத்திறனை நோக்கி ஒரு பயணம் தொடங்கிவிட்டது.

சித்த ஞானத்தில் தூரதிருஷ்டி என்றொரு ஆற்றல் உண்டு. அதைக் கொண்டு ஒரு சீனயோகி வருங்கால நிகழ்வுகளை முன் கணிப்பாகக் கூறி அதை எழுத்து வடிவாக்கியுள்ளார். அவர் கணிப்புப்படியே அடுத்தடுத்து எல்லாம் நடந்து வருகின்றன. அவருக்கு இணையாக இத்தமிழ் மண்ணில் கோள்களின் சஞ்சாரத்தை வைத்து எண்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு கணித முறையை காலகண்டரிஷி என்பவர் உருவாக்கியுள்ளார். இவரின் சீடரான காலாங்கி நாதர் அக்கணித முறையைப் பயன்படுத்தி நம்வாழ்வின் அடுத்தடுத்த நடப்புகளைக் கூறிவிடுவார். நம்மைப்பற்றி நாமேகூட இக்கணித முறையால் அறிந்துகொள்ள முடியும். அதற்கு நம் பிறந்த நேரம், நாள், வருடம், கிழமை, நட்சத்திரம் எனும் ஐந்தும் தெரிய வேண்டும்.

இந்த ஐந்து அம்சங்களைக் கொண்டு நம் புலிப்பாணியேகூட உங்கள் வருங்காலத்தைக் கூறிவிடுவான்; கூறியும் வருகிறான். ஆனாலும் ஒரு மனிதனுக்கே கூறிடும் இவன் ஆற்றலைப் பன்முகப்படுத்திக் காலாங்கிநாதன் ‘காலப்பலகணி’ என்று ஒரு நூல் எழுதியுள்ளான். அதில் பிரளயம், பேரழிவு, மழைப்பொழிவு, உஷ்ணாதிக்கம், ஆட்சிமாற்றம், நாடாளுவோர் பெயர் என ஒரு தேசத்துக்கான நிகழ்வுகள் கூறப்பட்டுள்ளன.”

- போகர் பிரான் பேசப்பேச எல்லோரிடமும் பெரும் பிரமிப்பு.

“பிரானே... அதனால் ஒருவனின் மரணத்தை எப்போதென்று அறிய முடியுமா?’’ என்று கேட்டான் அகப்பை முத்து.

இறையுதிர் காடு - 58

“தாராளமாய்க் கூற முடியும். ஒரு கல்லை எடுத்து எறியும்போது எப்படி அதன் விசைக்கேற்ப அதன் தூரமும், அது சென்று விழும் இடமும் தீர்மானமாகிறதோ அப்படி ஒரு கணக்குதான் பிறப்பும் இறப்பும். கணிக்கத் தெரிவதில்தான் அது உள்ளது. கணிக்கத் தெரிந்தவன்வரை அது ஒரு விஷயம் மட்டுமே. தெரியாதவன் வரைதான் அது ரகசியம்.”

“பிரானே... அந்தக் காலப்பலகணி எக்காலத்திற்கும் பயன்படுமா?”

“பயன்படும்... பயன்படவேண்டும் என்றே காலாங்கி நாதர் அதை எழுதியுள்ளார்.”

“இப்போது அது எங்குள்ளது?”

“நான் செய்த பாஷாணலிங்கத்தோடு அது சேர்க்கப்பட்டுவிட்டது. வரப்போகும் பிரம்மமுகூர்த்த வேளையில் சமாதியாகப் போகும் இந்த சங்கர திகம்பரன் எழுதிய ‘சொர்ணஜாலம்’ என்னும் ரசவாத ரகசியமும் அச்சிவலிங்கத்தோடு சேர்ந்திடும்...’’

“அதை எதற்காக அந்த லிங்கத்தோடு சேர்க்க வேண்டும்?’’

- இந்தக் கேள்வியைக் கேட்டது யாரோ அல்ல... ஆழிமுத்துதான் கேட்டான். அதுவும் சற்றுக் கோபமாய்.

இன்று சாந்தப்ரகாஷ் மிகக் கூர்மை யாக சாருவைப் பார்த்தான்.

“என்ன சந்து... நான் சொல்றது உனக்குப் புரியவில்லையா?” அவளும் திருப்பிக் கேட்டாள்.

“புரியுது... ஆனா எதனால இப்படி அவசரப்படறே சாரு?”

“பிகாஸ் ஆஃப் சித்ரா பௌர்ணமி...”

“அதனால..?’’

“சந்து, அந்த சித்ரா பௌர்ணமி இரவுங்கறது ஊர் உலகத்துக்கு ஒரு வழக்கமான பௌர்ணமி நாளா இருக்கலாம். ஆனா நமக்கு அப்படி இல்லை. நீ போகர்ங்கற சித்தரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கியா?”

“பழநியிலகூட அவர் சமாதி இருக்குல்ல?”

“எக்ஸாக்ட்லி... நாம அவரைப் பாக்கப் போறோம்...”

“வாட்... போகரைப் பார்க்கப் போறோமா? இட் ஈஸ் ஹைலி ஹிலேரியஸ். அவர் சமாதியாகிப் பல நூறு வருஷங்கள் ஆயாச்சு.”

“மனுஷன்தான் புதைக்கப்பட்டா மண்ணாகிப் போவான். ஆனா ஒரு சித்தன் அப்பதான் பலம் அதிகமானவன் ஆகறான்.”

“நீ இப்படியெல்லாம் பேசமாட்டியே சாரு...”

“நான் பேசல... இந்த டைரியில உங்க கொள்ளுத்தாத்தா எழுதியிருக்காரு.’’

“விவரமா சொல்லு...”

“அதுக்கு முந்தி நீயும் நானும் செய்ய வேண்டிய காரியம் ஒண்ணு இருக்கு...”

“என்ன அது?’’

“தாத்தா...’’ - சாரு வாட்ச்மேன் தாத்தாவைப் பார்த்தாள்.

“என்னம்மா?”

“எனக்கு ஒன்பது மரக்கன்றுகள் உடனே வேணும் தாத்தா.”

“அதுக்கென்னம்மா, வாங்கிட்டு வந்துடறேன்.”

“ஈட்டி, தோதகத்தி, மகிழம், மருது, ஜோதிவிருட்சம், வேப்பம், பன்னீர், அரசு, செம் மரம் - இதுதான் அந்த ஒன்பது மரக்கன்றுகள்...’’

நீங்க பெட்டியோடு ஹோட்டலுக்கெல்லாம் போயிடாதீங்க... இங்கையே இருங்க. யார் வந்தாலும் அய்யா இருக்காரு... அவர் பாத்துக்குவாரு...’’

“ஐயோடா... இதுல ஏழு நம்ம தோட்டத்துலயே இருக்கும்மா... ஜோதி விருட்சமும், செம்மரமும் பெரும்பாலும் தட்டையான நிலப்பரப்புல வராதும்மா. மலைக்குத்தான் போகணும்.”

“நாங்க இந்தப் பெட்டியோடு புறப்படுறதுக்கு முந்தி இந்த ஒன்பது மரங்களை நட்டு அதுக்கு நவதான்யம் கலந்த நீர்விட்டு நவதான்யத்தையே உரமாகவும் போட்டு மூடணும். இந்தப் பயணத்துக்கு வனமேல்பாடுன்னு பேர். நான் சொல்லலை; தாத்தா இதுல எழுதியிருக்காரு.”

“வனமேல்பாடு... வனமேல்பாடு... எனக்கு இப்ப ஞாபகம் வருது. எங்கப்பா எஜமானரோடு துணைக்குப் போனாரு. வந்து அவர் இந்த ஒன்பது மரங்களை நட்டாரு. ஆனா அதுல பல மரங்கள் எழவேயில்லை... மரங்கள் மட்டுமல்லம்மா - எங்க குடும்பமும் எழவேயில்லை. இப்ப நான் மட்டும்தான் மிச்சமிருக்கேன் தனிமரமா!’’

“தாத்தா, பேச நேரமில்ல... என்ன செய்யலாம்? கூகுள்ள போய்ப் பார்த்தா தெரியுமா, இல்ல, நம்ம தமிழக அரசே இதைத் தன் கார்டன் சொஸைட்டில விக்குதா?”

“கார்டன் சொஸைட்டியா... இங்க அப்படி எதுவும் இல்லம்மா. கூகுளோ பாகுளோ எனக்கு அதுபத்தியெல்லாம் தெரியாதும்மா... மலைப்பக்கம் போனா கட்டாயம் கிடைச்சிடும்.”

“அப்ப போய்ட்டு வரீங்களா... ப்ளீஸ்...’’

“கெஞ்சாதீங்கம்மா... நீங்க உத்தரவு போடணும்; நான் அதைச் செய்யணும். நான் சாகாம இருக்கறதே இதுக்காகத் தானம்மா?”

“ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க?”

“உள்ளதைச் சொன்னேம்மா... நான் இப்பவே கிளம்பறேன்... வந்தா அந்த ரெண்டு கன்னுகளோடுதான் வருவேன். வரட்டு ங்களா?’’

“இருங்க... வழிச்செலவுக்கெல்லாம் பணம் வேண்டாமா? வாங்கிட்டுப் போங்க...’’

“தாங்கம்மா... அதே சமயம் நீங்க பெட்டியோடு ஹோட்டலுக்கெல்லாம் போயிடாதீங்க... இங்கையே இருங்க. யார் வந்தாலும் அய்யா இருக்காரு... அவர் பாத்துக்குவாரு...’’

வாட்ச்மேன் தாத்தா குரலில் அபார நம்பிக்கை.

அந்தப் பேச்சு சாருவை நெகிழ்த்தி விட்டது.

தாத்தாவும் கிளம்பினார். சாந்தப்ர காஷுக்கு ஒன்றும் புரியவில்லை.

“சாரு... டைரில அப்படி என்னதான் எழுதியிருக்கார் தாத்தா. டைரிங்கறது அந்தக் காலத்துப்பதிவு. அது எப்படி இப்ப நமக்கு யூஸ் ஆகமுடியும். கொஞ்சம் விவரமா சொல்லு...”

“இரு, அதுக்கு முந்தி நான் ஒரு காரியம் பண்றேன்” என்ற சாருபாலா மிகவேகமாய்ப் போய் கிணற்றடியில் நின்று, தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும் பம்ப்செட் மோட்டரைப் போட்டு தன் சுடிதார் நனையக் குளித்தாள்.

ஈரம் சொட்டச் சொட்ட நடந்து வந்தவள் கைகளில் செம்பருத்தி, நந்தியாவட்டை, ரோஜா என்று தோட்டத்துப் பூக்கள்... அவ்வளவையும் பெட்டிமேல் போட்டவள், அதன் முன் இருபுறமும் இருவிளக்கினை ஏற்றி வைக்கலானாள். அப்படியே மண்டியிட்டு வணங்கவும் செய்தாள். சாந்தப்ரகாஷ் அமைதியாகப் பார்த்தபடியே இருந்தான். மெல்ல அவனை நெருங்கி வந்தவள்.

“சந்தா, நாம ரொம்ப ரொம்பக் கொடுத்து வெச்சவங்க. இந்த உலகத்துல யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு நமக்குக் கிடைக்க ப்போகுது. கடவுளை யாரும் பார்த்தது கிடையாதுன்னு சொல்வாங்க. ஆனா நாம பாக்கப்போறோம்! இதையெல்லாம் எந்த அளவு நம்பறதுன்னு தெரியலேங்கற ஒரு அமைப்புல இருக்கற பல சித்தர்களையும் நாம பாக்கப்போறோம். எல்லாத்துக்கும் மேலா, ஜீவாம்ருதம்ங்கிற மருந்து நமக்குக் கிடைக்கப் போகுது. இந்த ஜென்மத்துல இனி நமக்கு ஒரு இருமல் தும்மல்கூட வராது. வயசும் பெருசா ஆகாது. நாம விரும்பினாதான் நமக்கு சாவுன்னா பாத்துக்கோயேன்.”

- சாரு சாந்தப்ரகாஷ் கைகளைப் பற்றிக் கொண்டு சொன்ன விதம் சாந்தப்ரகாஷைச் சற்று அச்சுறுத்தியது.

“சாரு, ஆர் யூ இன் நார்மல் கண்டிஷன்?” மிக சந்தேகமாய்க் கேட்டான்.

“ஐ யம் வெரிவெரி நார்மல். அந்த மசக்கையெல்லாம் இப்ப கொஞ்சம்கூட இல்லை. நான் ஒண்ணும் அருள் வாக்கு சொல்லலை சாந்தா... நான் சொல்றதெல்லாம் சத்தியம்.”

- சாருபாலா கொடுத்த அழுத்தம் சாந்த ப்ரகாஷை அவள் மீதம் சொல்ல விருப்பதைக் கேட்கத் தயார் செய்தது.

அரவிந்தனின் ஃப்ளாட்.

அந்த இரு போலீஸ்காரர்கள் ஹாலில் அமர்ந்து டி.வி பார்த்தபடி இருந்தனர். அவர்களுக்கு டீ போட்டுக் கொடுத்திருந்தான். கப் அண்ட் சாஸர் காலியாக இருந்தன.

உள்ளே லேப்டாப்பை மூடியவனாக யோசித்துக்கொண்டிருந்தவனை ஜெயராமன் கூப்பிட்டுக் காதில் இயர் போனை மாட்டச் செய்தார்.

“என்னாச்சு அரவிந்தன்... போலீஸ்காரங்க இருக்காங்கதானே?”

“இருக்காங்க சார்... எதுக்கு சார் இவங்கவரை போனீங்க... எனக்கு எதுவும் ஆகாது சார்.’’

“நோ... உங்கள பாக்க ரெண்டுபேர் வந்துட்டுப் போயிருக்காங்க. அதுவும் போலீஸ் வரவும் வந்ததே தெரியாத மாதிரி திரும்பிப் போயிருக் காங்க. நான் உங்க அபார்ட்மென்ட் வாட்ச்மே னோடு பேசிக் கிட்டேதான் இருக்கேன்.”

“அவன் நம்பர்?”

“உங்க செகரட்ரிகிட்ட கேட்டு வாங்கினேன்... செகரட்ரிய கூகுள்ளபோய் உங்க அபார்ட்மென்ட்ல காலியா இருக்குற ஒரு வீட்டு விளம்பரத்தை வெச்சுப் பிடிச்சேன். நல்ல இங்கிலீஷ், ஒரு ஆண்ட்ராய்டு போன், கொஞ்சம் புத்திக்கூர்மை இருந்தா ட்ரம்ப் கிட்டகூடப் பேசிடலாம். உங்களுக்குத் தெரியாதா?”

சாந்தப்ரகாஷ், சுந்தர வல்லிச்சிட்டாள் இவங்க இரண்டு பேரும் பிரமாண்ட ஜமீனோட ராஜா ராணி சார். ஜமீன் ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்தப்ப இல்லாமப்போன ஜமீன்ல இதுவும் ஒண்ணு.

“அப்ப உங்க ஆபீஸ்லகூட என் நினைப்பு தானா?”

“ஆமாம்... நான் பாரதி மாதிரி ஒரு அவர்ஷனோட நடக்க விரும்பலை. ஒரு ஜர்னலிஸ்ட்டுக்கு ஓபன் மைண்ட் ரொம்ப முக்கியம்.”

“நிச்சயமா சார். அப்ப நான் கண்காணிக்கப் பட்டுக்கிட்டு இருக்கேனா சார்...”

“ஆமாம். அந்த எம்.பி படுத்துக்கிட்டே எலெக்‌ஷன்ல ஜெயிச்சிருக்கலாம். இப்ப நம்ம விஷயத்துல ஜெயிச்சிடக்கூடாது. பைதபை, படிச்சீங்களா அந்த டைரியை… ஏதாவது தெரிய வந்ததா?”

“நிறைய சார்… ஆனா வெளிய சொன்னா யாராலையும் நம்ப முடியாது...”

“வாட்ஸ் தட்..?’’

“சுருக்கமா சொல்றேன் சார். சாந்தப்ரகாஷ், சுந்தர வல்லிச்சிட்டாள் இவங்க இரண்டு பேரும் பிரமாண்ட ஜமீனோட ராஜா ராணி சார். ஜமீன் ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்தப்ப இல்லாமப்போன ஜமீன்ல இதுவும் ஒண்ணு. ஆனா 1930கள்ல பல்லாவரம் பகுதியே இவங்க கட்டுப்பாட்டுலதான் இருந்திருக்கு. இவங்களுக்கு முருகப்ரகாஷ்னு ஒரே வாரிசு. துரதிர்ஷ்ட வசமா இந்த வாரிசு ஒரு திருநங்கையா தன் பதினைந்து வயசுல மாறவும் சாந்தப்ரகாஷ் ஜமீன் அப்படியே நொறுங்கிப்போய்ட்டார்.

இறையுதிர் காடு - 58

இந்த ஜமீன்ல ஒரு தலைமுறை விட்டு ஒரு தலைமுறை இந்த மரபு தொடர்ந்து வந்துகிட்டே இருந்திருக்கு சார். தன் தலைமுறைல வரவும் நொறுங்கினவர், வாழ்க்கை வெறுத்துப்போய் குற்றாலம் பக்கம்போய் அங்க ஜமீனுக்குச் சொந்தமான பங்களாவுல தங்கி இருந்திருக்காரு. ஒரு ராத்திரி சுந்தரவல்லிச்சிட்டாள் தூங்கிட்டிருக்கும்போது எழுந்துபோனவர் அதன் பிறகு ஏழு வருஷம் கழிச்சு ஒரு சன்யாசியா தான் பல்லாவரம் ஜமீனுக்கு வந்திருக்கார். அப்படி அவர் வந்தபோது கொண்டு வந்தது தான் சார் நாம பார்த்த பெட்டி.

பெட்டியில இருந்த சிவலிங்கம் பழநிமலைல இருக்கிற போகர்ங்கற சித்தர் செய்தது சார்... அதுவும் பழநி முருகனைச் செய்யறதுக்கு முந்தி பரீட்சார்த்தமா செய்த லிங்கம் சார்…”

“என்னது… அது நவபாஷாணலிங்கமா - போகர் சித்தர் செய்ததா?”

“ஆமாம் சார். அப்படித்தான் டைரியில தெளிவா எழுதியிருக்கார். அதுமட்டுமல்ல, உடன் இருக்கிற ஏடுகள் எல்லாம்கூட பல சித்தர்கள் தங்கள் ஞான திருஷ்டியைக் கொண்டு எழுதினதுதான். அதுல ஒண்ணு காலப்பலகணி. இதுமட்டும் கைல இருந்தா இந்த உலக நடப்பை உக்காந்த இடத்துல கணக்குப் போட்டுச் சொல்லலாம் சார். காலகண்டரிஷிங்கறவர் அதை எழுதியிருக்காரு...”

“வாவ்... வாவ்! அப்பறம்?”

“எல்லாமே அசாதாரணமான விஷயங்கள்தான். பலகோடி மதிப்புன்னு சொன்னதெல்லாம் பெரிய உண்மை சார்.”

“ஆமாம்... இல்லன்னா அந்த ஜோசியன் அடியாளை அனுப்புவானா... பைதபை நீங்க ரொம்பவே இனி ஜாக்கிரதையா இருக்கணும் அரவிந்தன்.’’

“முக்கியமான ஒரு விஷயமே இனிதான் சார் இருக்கு. வரப்போற சித்ரா பௌர்ணமி அன்னிக்கு இந்தப் பெட்டி போகர் கைக்குத் திரும்பப் போயாகணும். பொதிகை மலைக்காட்டுல சித்தன் பொட்டல்ங்கிற இடத்துக்கு 12 வருஷத்துக்கு ஒரு முறை போகர் ஜீவ சமாதில இருந்து வருவாராம். அப்படி அவர் வரப்போற சித்ரா பௌர்ணமிதான் சார் இது.’’

- அரவிந்தன் கூற, ஜெயராமனிடம் சிலிர்ப்பு.

- தொடரும்