மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இறையுதிர் காடு - 59

இறையுதிர் காடு
பிரீமியம் ஸ்டோரி
News
இறையுதிர் காடு

இப்படி ஒரு சூழலில், ஆழிமுத்துவின் பேச்சால் ஏற்பட்ட அமைதியை போகரே உடைக்கலானார்.

அன்று ஆழிமுத்து கேட்டவிதம் எல்லோ ருக்குமே ஒரு ஆச்சர்யம். அவன் அமர்ந்த நிலையில் எழுந்திருந்து ஆவேசமாய்க் குரலை உயர்த்திக் கேட்ட விதம் அப்படி.

இறையுதிர் காடு - 59

அவன் உடல்மொழியே போகருக்கு அவனது ஏமாற்றத்தை உணர்த்தி விட்டது. அங்கே அவன் நிமித்தம் ஒரு அமைதி.

இடையில் விசும்பலாய் ஒலித்திடும் காற்றின் விசை மட்டும்...

உச்சி வானில் இருந்தபடி ஒரு பருந்தும் கீழே பார்த்த படியேதான் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. அதன் சிறகிடம் துளியும் அசை வில்லை. அது மிதப்பது போலவும் இருந்தது - பறப்பது போலவும் இருந்தது. அதை யதேச்சையாகப் பார்த்த மருதன் மனதுக்குள் நம்மால் மட்டும் இப்படிப் பறக்க முடிவதில்லையே... இம்மட்டில் அப்பருந்தின் சிறகுகளென்ன அவ்வளவு சிறந்த ஒன்றா என்கிற கேள்வியின் துளிர்ச்சி.

இப்படித்தானே மனிதன் ஆய்வுக்குள் புகுகிறான்? இறுதியில் கண்டறியாதன கண்டறிகிறான்?

இப்படி ஒரு சூழலில், ஆழிமுத்துவின் பேச்சால் ஏற்பட்ட அமைதியை போகரே உடைக்கலானார்.

“ஆழி, வா இப்படி?”

அவனும் அவரருகில் சென்றான்.

“நெருக்கமாய் வா...”

நெருங்கி நின்றான்.

“மண்டியிடு...”

சற்றுத் தயங்கிவிட்டு மண்டியிட்டான்.

போகர் அவன் சிரசின் மேல் தன் கரத்தை வைத்துக் கண்களை மூடி தியானிக் கலானார்.

அது எதன்பொருட்டு என்று எவருக்கும் தெரியவில்லை. பொதுவாக ஒருவருக்கு தீட்சை வழங்கப்போகும்போது குருவானவர் இப்படித்தான் செய்வார். கைகளின் வழியாக அருள் சக்தியை அலைவடிவில் ஒரு மனிதனின் மூளை உள்ள பாகத்தின் வழியே புகச்செய்து, குழப்பம், கோபம் போன்ற உஷ்ணமான உணர்வுகளைக் குளிரச்செய்து, பின் அவனை ஆற்றுப்படுத்துவது என்பது இதன் மூலநோக்கம்.

இதுபோன்ற தருணங்களில், தான் கற்ற பல விஷயங்களையும் சில குருநாதர்கள் உட்புகுத்திவிடுவர். அப்படித் தான் ஆழிமுத்துவரையில் போகர் நடப்பதாய் புலிப்பாணி உட்பட எல்லோரும் கருதினர். அதன்பின் ஆழிமுத்துவிடமும் பெரும் மாற்றம்.

“மன்னியுங்கள் குருவே... நான் தேவையே இல்லாமல் பதற்றப்பட்டுவிட்டேன்...” என்று மிக நல்ல தமிழில் அவன் பேசவும் எல்லோரிடமும் ஆச்சர்யம்.

போகரும், “நீ கேட்ட கேள்விக்கும் நான் பதில் கூறி விடுகிறேன்’’ என்று எல்லோரையும் பார்த்தார். எல்லோரும் பதிலுக்கு மிக ஆவலாய் அவரைப் பார்த்தனர்.

“நான் உருவாக்கிய நவபாஷாணலிங்கம் ஒரு அதிசயம். தேவர்களும் அசுரர்களும் அமுதம் கடைந்த சமயம் பல அரிய வஸ்துகள் வெளிப்பட்டன.

உச்சை சிரவஸ் என்கிற வெள்ளை பறக்கும் குதிரை...

ஐராவதம் என்கிற வெள்ளை யானை…

காமதேனு என்கிற வெள்ளைப்பசு...

சிந்தாமணி என்கிற சிவந்த ரத்தினம்...

சமந்தகமணி என்கிற சிவந்த ரத்தினம்...

பாரிஜாதம், கற்பகம் என்கிற பச்சை விருட்சங்கள்…

சர்வ வண்ணங்களுடன் மகாலஷ்மி தேவி...

இறுதியாக, அமிர்தத்துடன் தன்வந்திரி பகவான் என்று வெளிப்பட்ட வஸ்துகளுக்கு இணையானது இந்த லிங்கம். அமிர்த கடைசலில் வெளிப்பட்டவை விண்ணில் தேவர்களுக்கு உரியவையாகி விட்டன. ஒன்றுகூட மண்ணில் இல்லை. அப்படியே ஒரு அதிசயமான வஸ்துவையாவது மண்ணில் வைக்கலாம் என்றால் ஆசையில்லாத மனிதன் என்று ஒருவன்கூட மண்ணில் இல்லை. இனி இருக்கப் போவதும் இல்லை. உடனே நீங்கள் என்னைப் பார்த்து, “நீங்கள் கூடவா?” என்று கேட்பீர்கள் என்பது எனக்குத் தெரியும்.

சன்யாசிக்கும் ஒரு ஆசை உண்டு - தான் எதன்மேலும் பற்று வைத்துவிடக்கூடாது என்கிற ஆசைதான் அது. மலையளவு ஆசையை ஒரு புள்ளியளவு ஆக்கலாம். அதுவே இல்லாதபடி செய்யவே முடியாது. செய்யத் தேவையுமில்லை! ஆசைக்கும் பாஷாணலிங்கத்துக்கும் என்ன சம்பந்தம் என்றும் கேட்கலாம். இதன் கதிர்கள் ஒரு மனிதனின் கோள்களின் கரங்களை மீறிச் செயல்படவல்லவை. ஒன்பது கோள்களின் கதிர்களுக்குள் உட்புகுந்து ஒரு மனிதன் விரும்பியதை அளிக்க இது அவன் மூலமே செயலாற்றும். இதன் செயலாக்கத்தை நான் விளக்க வேண்டுமென்றால் புவியீர்ப்புவிசையில் தொடங்கி காற்று வீச்சு, அதன் அழுத்தம், காலப்பொழுது - அதனுள் பரவிக்கிக்கும் நட்சத்திர மண்டல ஆதிக்கம், பின் திதி ஹோரை - இவற்றின் குணம் என்று நிறைய பேசவேண்டி வரும்.

இறையுதிர் காடு - 59

சுருக்கமாகக் கூறுவதானால், அபூர்வமானவை அபூர்வமான இறைரூபத்திடம் இருப்பதே அபூர்வமானவற்றுக்கும் பாதுகாப்பு. எனவே இந்த லிங்கத்துடன் எல்லா ஏடுகளும் இருப்பது என்பது ஒரு சிலையின்மேல் ஆபரணங்கள் இருப்பதுபோல்...

அதோடு இந்தச் சிலையும் இந்த ஏடுகளும் உரியவேளையில் உலகிற்குப் பயன்பட்டு உயிர்கள் தெளிவுறவும் இன்புறவும் காரணமாக இருக்கும்.

குறிப்பாக சமநிலை என்கிற ஒரு விஷயம் உலகில் உள்ளது. அது தவறும்போதெல்லாம் தடுமாற்றமும் தடமாற்றமும் ஏற்பட்டு மக்கள் துன்புறுவர். இந்த லிங்கமும் ஏடுகளும் அந்தத் தடுமாற்றத்தையும், தடமாற்றத்தையும் தடுத்து நெறிப்படுத்தும். அப்போது நானும் ஏதோ ஒரு வடிவில் உடன் இருப்பேன்” என்று நெடிய விளக்கமே அளித்தார் போகர்.

“நீங்கள் சொல்வதைப் பார்த்தால் ஆயிரமாயிரம் வருடங்கள் இந்த லிங்கமும் ஏடுகளும் அழிவின்றி இருக்கும் என்பதுபோல் ஒரு தொனி புலப்படுகிறதே...” என்று கேட்டான் அஞ்சுகள்.

“ஆம்... இது ஒரு பரிசோதனை முயற்சியும்கூட.”

“உங்கள் கருத்துப்படி பார்த்தால் உலகில் சமநிலை தவறிட வாய்ப்புள்ளது போலவும் தெரிகிறதே?”

“ஆம்… ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அதற்கு காரணமாகவும் மனிதனே இருப்பான். அவனது ஆசையே மறைமுகமான காரணமாக இருக்கும். குறிப்பாக மக்கள் தொகை பெருகிடும்போது ஊர்கள் நகரங்கள் ஆகும்.நகரங்கள் நாடுகள் ஆகும். நாடுகள் கண்டங்கள் ஆகும். கண்டங்களே உலகம் என்றாகும். அப்படி ஒரு உலகில் எல்லோரும் சுயநலத்தை முன்வைத்தே சிந்திப்பர். அதில் வெகுசிலரே பொது நலவாதிகளாய் இருப்பர். இந்த வெகுசிலரால்தான் உலகமும் நலமுடன் திகழும் அப்படிப் பட்ட வெகுசிலருக்கு இந்த லிங்கமும் ஓடுகளும் துணைநிற்கும்.”

“லிங்கம் அருள்வடிவம் - ஏடுகளோ பொருள் வடிவம். அப்படி இருக்க... எப்படி?”

“அருளும் பொருளும் சமமாய் உள்ளவரை சிக்க லில்லை. சமநிலை தவறும் போதுதான் சிக்கல் உருவாகிறது.”

“இதைச் சற்று விளக்க முடியுமா?”

“நேரமாகிவிட்டது. இருந்தாலும் சுருக்கமாய்க் கூறிவிடுகிறேன். புரிந்துகொள்ள முடிந்தவர் புரிந்து கொள்ளுங்கள். ஒரு ஊர் இருக்கிறது - அதில் நூறுபேர் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். இந்த நூறுபேருக்கும் ஒரே ஊர்க்காரர்கள் என்கிற ஒரு பொருத்தம்தான் இருக்கும். மற்றபடி ஆசாபாசங்கள் விருப்பங்கள் அறிவார்த்தங்கள் எல்லாம் வேறாகவே இருக்கும். இதனால் இவர்கள் எண்ணங்களும் போக்கும்கூட ஆளுக்கு ஆள் மாறுபட்டி ருக்கும். இதனால் பொருளாதார பேதம் முதல் உறவுகளின் அமைப்புவரை எல்லாமே ஆளுக்கு ஆள் வேறுபடும். ஒரு வீட்டில் எல்லாச் செல்வங்களும் இருக்கும். தாய் தந்தை முதல் தாத்தன் பாட்டி வரை எல்லா உறவுகளுமிருப்பர். இன்னொரு வீட்டிலோ இவர்களில் பலர் இல்லாமல் பொருட் செல்வமும் குறைவாக இருக்கக்கூடும். சுருக்கமாய்க் கூறுவதானால், ஏற்றத்தாழ்வுகள் கர்ம வாழ்வில் எப்படியோ வந்துவிடும். ஏற்றத்தாழ்வு வந்துவிட்டாலே சமநிலை போய்விடும். இந்நிலையில் சிலர் சில சித்தாந்தங்களை உருவாக்கி சமநிலையைக் கொண்டுவர முயல்வர். சிலர் அது இயலாத காரியம் என்பர். சிலரோ, மிக சுயநலமாய் தர்மநியாயமே பாராது தங்கள் வாழ்க்கையைத் தொடர்வர். இதில் இந்த மூன்றாவது ரகத்தவரே மிகுதியாக இருப்பர்.

சமநிலைக்கு முயல்பவர் சிலராகவே இருப்பர். அவர்களும்கூட தாங்களறிந்த அளவிற்கே முயல்வர். ஒரு மனிதனால் எவ்வளவு அறியமுடியும் என்பதற்கு ஒரு கணக்கு உள்ளது. அந்த அளவை மீறவே முடியாது. ஆனால் ஒரு சித்தன் அதைச் சாதாரணமாக மீறிவிடுவான். இந்த சித்தன் என்பவன் பரம்பொருளுக்கும் பாமரனுக்கும் இடைப் பட்டவன்; பாலம் போன்றவன். அப்படிப்பட்ட சித்தன் உலகில் எல்லாமும் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்று பொதுநலமாய் சிந்திப்பவர் தொடர்போடு, இந்த உலகில் இருப்பவர்கள் உணராதபடி அல்லது உணரத் தேவை யில்லாதபடி சமநிலையை உருவாக்கிடு வான்.”

போகர் பிரான் பேசியது சிலருக்கே புரிந்தது. பலருக்குப் புரிந்ததுபோல் இருந்தது. ஆனாலும் ஆழிமுத்து மட்டும் முழுவதும் புரிந்தவன்போல எதிர்வினையாற்றி போகருக்கு அதன் நிமித்தம் பதிலும் கூறலானான்.

“பிரானே... தாங்கள் கூற வந்ததை நான் நன்கு புரிந்துகொண்டேன். ஏற்ற இறக்கமுள்ள வாழ்வில் பெரிதும் சமநிலை கெடும் போது, பஞ்சங்கள் உருவாகி உயிர்கள் துன்பப்படும். இவ்வேளையில் ஒரு சமநிலைப்படுத்தும் செயலை சித்த புருஷர்கள் செய்வர் என்பதை இப்போது நான் உங்கள் மூலம் உணர்ந்தேன். அது எவ்வாறு என்று கூற முடியுமா?” என்று தேர்ந்த உச்சரிப்போடு கேட்டான். அவனா அப்படிக் கேட்டான் என்று மீண்டும் எல்லோரும் ஆச்சர்யமாகப் பார்த்தனர்.

போகரின் தீட்சை அவனைத் தலைகீழாக மாற்றி விட்டதையும் அவர்கள் புரிந்துகொண்டனர்.

“ஆழி, நீ விளங்கிக் கொண்டதில் எனக்கு மிகவும் நிறைவு. உன் கேள்விக்குச் சுருக்கமாய் பதில் கூறிவிடு கிறேன். மழையற்றுப்போவது என்பது முதல் பயிர்கள் விளையாதுபோவது, அவற்றைப் பூச்சிகள் அழிப்பது, களவாணியர் பெருகுவது, கொலைகள் மலிவது, அரசியலார் பண்பு கெடுவது என்கிற எல்லாமே சமநிலை தவறியதால் வருபவையே... மனிதனின் பேராசை, அச்சம், குழப்பமான எண்ணங்கள் இவற்றாலேயே இயற்கையும் சமன்கெட்டுத் தடுமாறும்.

இவ்வேளை குழப்பத்தைத் தெளிவித்து, அச்சம்போக்கி ஆசை சீரமைத்து - இதன் காரணமாய் நிம்மதிப் பெருமூச்சை அதிகரிக்கும் போது விண்பரப்பும் குளிர்ந்து மழைப்பொழிவு உண்டாகும். ஒரு கோடிபேருக்கு ஏற்படும் நிம்மதி உணர்வை அந்த உணர்வின் அலைவரிசையை, இந்த பாஷாணலிங்கத்துக்கு ஒருவர் ஒருமுறை பூசனை நிகழ்த்தும் சமயம் இது அதனை உருவாக்கி விண்மிசை பரப்பும். இந்தச் செயலுக்குச் சில விருட்சங்கள் பக்க பலமாக இருக்கும். ஒரு விருட்சம் நூறு சித்தனுக்கு சமமான வலிமையுடையது என்பதை இவ்வேளை நான் கூறுகிறேன். இப்படி விருட்சங்கள் துணையுடன் உலக நலனை மட்டுமே மனதில் கொண்டு காரியமாற்றும்போது மெல்ல சமநிலை சரியாகி எல்லாம் ஒரு கட்டுக்குள் வரும்...” போகரின் இக்கருத்தை ஓரளவு எல்லோரும் புரிந்து கொண்டனர்.

“பிரானே... ஒரு கேள்வி மட்டும் கேட்டுவிடுகிறேன். உலகமோ மிகப்பெரியது. இந்த லிங்கமோ மிகவும் சிறியது. இது எப்படி ஒரு சமநிலைக்கு அந்த அளவிற்குப் பயன்படமுடியும்? இது ஒரு சிறு ஊருக்கு வேண்டுமானால் பயன்பட்டு மழையைத் தரலாம் அல்லது வேறுசில பயன்களைத் தரலாம். நாட்டுக்கும், கண்டத்துக்கும் இது அவ்வாறு தர ஏலுமா?”

இக்கேள்வியை சங்கன்தான் கேட்டான்.

“எந்த ஒரு பயணமும் அதன் முதல் அடியில் இருந்துதான் தொடங்குகிறது. இதற்கு இவ்வளவுதான் பதில். புரிந்துகொள்ள முடிந்தவர் புரிந்துகொள்ளுங்கள். எல்லாவற்றுக்கும் வார்த்தை களில் பதிலில்லை. ரத்தமும் சதையுமான அனுபவங்களால் பதில் பெற்றிடுங்கள். ஒரு வரையாட்டின் நசிந்த உடல் நிமித்தம் உருவான நமது தர்க்கம் இறுதியில் நம் நவபாஷாணலிங்கம் வரை வந்துவிட்டது. இதில் எனக்கு மகிழ்வே! சரி நாம் சங்கர திகம்பரனின் சமாதி வைபவத்துக்குச் செல்வோமா?” என்று கேட்டிட எல்லோரும் எழுந்து நின்றதோடு முன்போல வரிசையாக போகர்பிரானைத் தொடரவும் செய்தனர்.

இறையுதிர் காடு - 59

ஆழிமுத்து அவரை ஒட்டியே நடந்தான். அவன் செயல்பாடு செங்கானை மிகவே யோசிக்கவைத்தது. போகர் தன்னை மட்டும் விட்டுவிட்டு அவனுக்கு மட்டும் ஏதோ விசேஷ சித்தியைத் தந்துவிட்டதுபோல் கருதியவன் பொறுக்க மாட்டாமல் அவரை வேகமாக நெருங்கிச்சென்று,

“சாமி, என் தலைல கைவெச்சு எனக்கும் சக்தி தரமாட் டீங்களா?” என்று கேட்கவும் செய்தான். அதைக் கேட்டுச் சிரித்த போகர். “கவலைப் படாதே... உனக்கான தீட்சையை சங்கரதிகம்பரன் அளிப்பான். நீ அவன் சீடனாகிப் பெருவாழ்வு வாழப்போகிறாய்” என்றார்.

செங்கானுக்குள் அவர் பேச்சு மழையைப் பொழி வித்துபோல் இருந்தது. மேற்குவானில் சூரியனும் அமிழ்ந்து இரவு தொடங்கப் போவதன் அறிகுறிகள். போகர் சங்கரதிகம்பரரின் குகைமுன் சென்று நின்றவராய் ‘ஓம் நமசிவாய...’ என்றார். சீடர்கள் எதிரொலித்தனர். ‘ஓம் நமோ சக்தி’ என்றார் அடுத்து. திரும்பவும் எதிரொலித்தனர்.

சப்தம் குகைப் புலத்தி லிருந்தும் சங்கர திகம்பரரை வெளியே அழைத்து வந்தது. அவரின் சடாமுடியுடன்கூடிய நிர்வாண கோலம் சீடர்களை முதலில் பிரமிக்கச்செய்தது. தளராத உடல் - அதன் மேல் விபூதியின் மினுமினுப்பு நெற்றிமையத்தில் சக்தி குங்குமம் - வட்டத்திகிரியாய். கண்களில் தீட்சண்யம் - தாடை முழுக்க முடிக்காடு வெள்ளிக்கோடு. இப்படியான தோற்றத்துடன்,

“போகனே, நீ இப்படிக் கூட்டமாய் வருவாய் என்று தெரியும். நீயும் உன் சீடர்களும் வந்ததில் பெரும் மகிழ்வு. என் அந்திமம் உங்களால் சூர்யோதயமாக மாறப் போகிறது” என்றார் சங்கர திகம்பரர்!

இன்று அரவிந்தன் கூறியதைக் கேட்டுச் சிலிர்த்த ஜெயராமனிடம் ஒருவகை அமைதியும் உருவாகி ஒரு கனத்த மௌனத்துக்கும் அவர் ஆட்பட்டார். அவர் தான் சொன்னதன் பொருட்டு யோசிக்கிறார் என்பது அரவிந்தனுக்கும் புரிந்தது. அவனும் சற்று மௌனித்த வனாய் மெல்ல,

“சார்... ” என்று கலைந்தான்.

“யெஸ் அரவிந்தன்...”

“என்ன சார்... நம்பறதா வேண்டாமாங்கற குழப்பமா?”

“இல்ல அரவிந்தன். தொடக்கத்துல அப்படி இருந்தது... இப்ப அப்படி யெல்லாம் இல்லை...”

“அப்ப இதப்பத்தி உங்க கருத்து?”

“இது ஒரு அபூர்வமான அனுபவம். இந்த மாதிரி அனுபவங்கள் எல்லாருக்கும் கிடைக்காது. எத்தனை கோடிபேர் இந்த உலகத்துல இருந்தாலும் ஒரு சிலருக்குத் தான் சாத்தியம். நிலாவுல முதல்ல கால்பதிச்ச ஆர்ம்ஸ்ட்ராங். போர் விமானத்துல இருந்து எதிரியோட இடத்துல விழுந்து அதன் பிறகும் உயிரோடு வந்த அபிநந்தன், இப்படி சில உதாரணங்கள்தான் என் நினைவுக்கு வருது.”

“நீங்க சொல்ற எல்லாமே விசிபிள். அதாவது பார்க்க முடிஞ்சவை. இன்விசிபிள்ங்கற உணரமட்டுமே முடிஞ்ச ரகமான அனுபவங்கள்தான் சார் எப்பவும் உலகத்துல நம்ப முடியாத ஒண்ணா இருக்கு.”

“அது அப்படித்தான் இருக்கும். உலகம் அதை யெல்லாம் நம்பணும்னு நாம எதிர்பார்க்கறதுதான் இதுல பிழை...”

“இது எப்படி சார் பிழையாகும்?”

“பிழைதான் அரவிந்தன்... காட்சிப்பிழை மாதிரி இது அறிவுப்பிழை. நம்மளையே எடுத்துக்கங்க... நம்மால நம் எதிர்ல இருக்கறதைத்தான் பார்க்கமுடியும். நாம ஒரு காட்சியைப் பார்த்துக் கிட்டிருக்கும்போதே பார்க்க முடியாத ஒரு மறுபக்கம் நம் முதுகுப்பக்கமா இருக்கு. அதைத் திரும்பிப்பார்க்க முனையும்போது, முதல்ல பார்த்த விஷயம் மறைஞ்சிடுது. மறைஞ்சிடுதுன்னா, மாயமா யிடல. அது அங்கேயே தான் இருக்கு... இது உணர்த்தற விஷயம் என்னன்னா எப்பவும் நிலத்துல ஒருவர் நிற்கும்போது ஒரு பாதிதான் பார்க்க முடிஞ்சதா இருக்கும். மறுபாதி பார்க்கமுடியாததா தான் இருக்கும். அதைப் பார்க்க முடியலங்கறதுக்காக அது இல்லவே இல்லன்னு நாம சொல்றோமா... சொல்ற தில்லையே..?”

“உங்களோட விளக்கம் புதுக் கோணமா இருக்கு சார்... நான் பாரதி இல்லை. என்கிட்ட நீங்க இவ்வளவு தூரம் விளக்கமளிக்கத் தேவையு மில்லை.’’

“அதிசயங்களுக்கு வாழ்க்கைல இடமுண்டுன்னு நம்பற ஒரு அகந்தை இல்லாத மனிதன் தான்நான்...”

“உண்மைதான்... நான் என்கிற அகந்தைதான் மனிதனோட பெரிய பிரச்னையே, நான் ஏமாறத் தயாரா இல்லை... நான் இளிச்சவாயன் இல்லை, நான் முட்டாள் இல்லை, நான் மேதாவி, நான் யார் தெரியுமான்னு இந்த `நான்’ நமக்குள்ள போட்ட நங்கூரத்தாலதான் பல பேர் வளர்றதில்லை.

இறையுதிர் காடு - 59

‘நானை’ வெற்றி கண்டவர்கள் அந்த நொடியே பேரமைதிக்குப் போயிடறாங்க. திருவண்ணாமலை ரமண மகரிஷி பற்றிய ஒரு கட்டுரை இன்னிக்கு என் பார்வைக்கு வந்தது. அவர் ஆஸ்ரம வாசல்ல உக்காந்திருக்கும்போது ஒருத்தர் அவர்கிட்ட வந்து இங்க ரமணர்ங்கறது யாருன்னு கேட்டாரு. தெரியல, அதைத்தான் இவனும் தேடிக்கிட்டிருக்கான்னு தன்னைக் கைகாட்டிச் சொல்றார் ரமணர். அந்த பதில்ல அவர் எனக்குள்ள கடத்தின விஷயங்கள் மிக அதிகம்.”

“ஃபென்டாஸ்ட்டிக்... சில சமயங்கள்ல ஒரு ஆயிரம் பக்க புத்தகம் நமக்குப் புரிய வைக்கமுடியாததை ஒரு வார்த்தை புரிய வெச்சிடுது சார்...”

“ஆமாம்... பைதபை இதைத்தொட்டு நாம அரட்டை அடிக்க இப்ப காலமில்ல. ஆமா உங்க வீட்ல நீங்க ஒருத்தர் மட்டும்தானா?”

“அம்மா அப்பா நார்த் இண்டியா டூர் போயிருக்காங்க சார். அக்கா கல்யாணமாகி ஜம்மு காஷ்மீர்ல இருக்கா...”

“ஜம்மு காஷ்மீர்லயா?”

“ஆச்சர்யமா இருக்குல்ல..? என் அக்கா புருஷன் ஒரு ஏர் ஃபோர்ஸ் ஆபீசர் சார்!”

“அப்ப நீங்க தனியாதான் இருக்கீங்க... அப்படித்தானே?”

“ஆமாம்...”

“அப்படின்னா உடனேயே துணிமணியோடு என்வீட்டுக்குப் புறப்பட்டு வந்துடுங்க. அட்ரஸை எஸ்எம்எஸ் பண்றேன். வேண்டாம்... வேண்டாம்... ஹோட்டல் சோமர் செட்டுக்கு வந்துடுங்க...”

“ராஜா அண்ணாமலை புரத்துல இருக்கே அதானே சார்?”

“எக்ஸாக்ட்லி...”

“ஸ்டார் ஹோட்டல் ஆச்சே சார்...”

“பெரிய ஸ்டார் ஆகப்போற உங்கள நான் பாதுகாப்பா வெச்சிருக்க விரும்பறேன்...”

“அங்க வந்து...”

``பாரதியையும் வரச்சொல்றேன்.”

“அப்புறம்?”

“உங்களோடு நானும் சேரப்போறேன். நீங்க சொன்ன அந்த சித்ரா பௌர்ணமி த்ரில் இந்த முறை நமக்கு...”

“சார்...”

“யெஸ்... இந்த சான்ஸை விடக்கூடாது. நாம அந்தப் பொதிகை மலைச் சித்தன் பொட்டலுக்குப் போறோம். போகர் வராரான்னு பாக்கப்போறோம்...”

“நான் போறதுன்னு எப்பவோ முடிவெடுத்துட்டேன். நீங்க கூட வர்றதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். ஆனா பாரதி வருவாளா சார்?”

“நிச்சயம் வருவா! அவதான் நமக்கெல்லாம் மூலம்...”

“இவ்வளவு நடந்தும் அவ நம்பாமலே இருக்கறதுதான் சார் எரிச்சல் தருது...”

“அந்த அளவுக்கு ஆன்மிக அழுக்குவாதிகள் அவளை பாதிச்சிருக்காங்க... எல்லாம் போகப்போக சரியாயிடும்.”

“சரிசார்... நான் எப்ப புறப்படட்டும்?”

“இப்பவே... பயணம் ஒண்ணும் லேசானதா இருக்கும்னு எனக்குத் தோனலை. இந்த விஷயத்துல யோகி திவ்யப்ரகாஷ்கூட நம்ம கூட வரக்கூடும்...”

“சா...ர்”

“அவர்கிட்ட இருக்கற ஸ்பெஷல் பவருக்கு நாம போற மலைக்காட்டுலதான் அரவிந்தன் நிறைய வேலை இருக்கு...”

“அவர் எதுக்கு சார்... அவர் ஒரு...”

ஒரு புதையல் கிடைச்சும் இழந்துட்டம்மா நீ... உன் கட்டத்துல இருக்கற கேது உன்னை எப்பவும் நெகட்டிவ் மைண்டோடுதான் வெச்சிருப்பான். ஆனா அதெல்லாம் இன்னும் சில வாரம்தான். வரும் 27ம்தேதி சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு பல பார்வை மாற்றங்கள் இருக்கு.

“நாம அவரைத் தவிர்த்தாலும் அவரும் அங்க வருவார். மனுஷன் விடாம நம்மைச் சுத்தி வந்துகிட்டிருக்கார்... நம்ம மனசுல இருக்கறத எப்படியோ தெரிஞ்சிக்கிற அந்த ஆற்றலும் அவர்கிட்ட இருக்கறத நாம மறுக்கமுடியாது.”

“அதைத்தான் நாம பல கட்டங்கள்ல பார்த்துட் டோமே..?”

“இருந்தாலும்...”

“அரவிந்தன், நீங்க மர்மக்கதை எல்லாம் எழுதின தில்லல்ல?”

“இல்ல சார்...”

“எழுதுங்க... அப்பத் தெரியும். எப்பவும் எதிரிக்கு பலம் சேர அனுமதிக்கக்கூடாது. இவரை நாம விட்டா, அந்த எம்.பி இழுத்துடுவார் தன் பக்கம்.”

“ஓ அப்படி ஒரு ஆபத்து இருக்கோ..?”

“மர்மக்கதை எழுதியிருந்தா இதெல்லாம் நான் சொல்லாமலே பிடிபட்டி ருக்கும். நான் உங்களை மாதிரி எழுத்தாளன் இல்லை. ஆனா நல்ல பத்திரிகையாளன். உங்களைவிட பல விஷயங்கள தெரிஞ்சிக்கற வாய்ப்பு எனக்கு அதிகம். என்னோட அந்த அனுபவத்தை நம்ப ரைடுல நீங்க உணரப்போறீங்க...”

“கடைசியா ஒரு கேள்வி... அந்த எம்.பி தன் பக்கம் இழுத்துடுவார்னு சொன்னீங்க. அப்படின்னா?”

“அவர் அடங்கறவர் இல்லை அரவிந்தன். மறுஜென்மம் எடுத்தும் அவர் திருந்தாம திமிறா பேசினதைக் கேட்டீங்கதானே?”

“ஆமாம் சார்... இப்பகூட ஜீரணிக்க சிரமமா இருக்கு...”

“அப்படியெல்லாம் இருக்கறவங்களாலதான் இப்ப இருக்கற அரசியல்ல குப்பை கூட்ட முடியும். ஜீவாவுக்கும் கக்கனுக்குமான காலமில்ல இது. நிச்சயம் அவரும் அந்த ஜோசியனும் நம்மை விடமாட்டாங்க.”

“இப்போதைக்கு இந்த ரகசியம் நமக்கு மட்டும்தானே சார் தெரியும்?”

இறையுதிர் காடு - 59

“என்ன அரவிந்தன் பச்சக் குழந்தை மாதிரி பேசறீங்க... அதெல்லாம் மோப்பம் பிடிச்சி வந்துடுவாங்க பாருங்க. முதல்ல அந்த ஹோட்டலுக்குப் புறப்படுங்க. உங்க செல்லை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிடுங்க. புது சிம்மோட நான் வரேன். இப்பல்லாம் நம்ம உயிர் நம்ம இதயத்துடிப்புல இல்ல. செல்லோட ரிங்க்டோன்லதான் இருக்கு... நமக்கு இந்த 21ம் நூற்றாண்டுல எழுத்தால ஒரு பெயர்னா, எண்ணால ஒரு பெயர். இந்த எண் எப்பவும் மேல இன்சாட் தொடர் போடவே இருக்கு. எழுத்துப் பெயர்கூட பலருக்கு இருக்கக்கூடும். எண் நமக்கே நமக்கு மட்டும்தான். அதனால இந்த எண் தெரிஞ்சாபோதும், நீங்க எந்தக் கிரகத்துல இருந்தாலும் ஒரு கட்டைவிரல் அழுத்தலில் உங்கள நான்பிடிச்சு உங்களுக்குள்ள நுழைஞ்சிடுவேன். மத்த வங்களும் நுழைஞ்சிடுவாங்க. நீயும் நானும் ஒண்ணுதான்கற மெய்ஞ்ஞான சின் முத்திரை தத்துவத்தை, விஞ்ஞான சிம் முத்திரை முந்திடிச்சு.”

“சார்... உங்க க்ளாரிட்டி எனக்கு பிரமிப்பைத் தருது.”

“தமிழ்வாணி ஆசிரியரா கொக்கா... சும்மா விளை யாட்டுக்குச் சொன்னேன். முதல்ல புறப்படுங்க. முடிந்தவரை நாம ரகசியமாவே நம்ம முயற்சிகளைச் செய்வோம். அப்புறம் போகர் விட்ட வழி...”

“போகரா?!”

“யெஸ்... அவர்தான் இனி நமக்கு எல்லாம்...”

ஜெயராமன் உற்சாகமாய்ப் பேசிமுடிக்க அரவிந்தனும் சோமர்செட் நோக்கிப் புறப்படத் தயாரானான்!

(ஆஸ்பத்திரிக்குள் முத்துலட்சுமியும் பாரதியும் நுழைந்தபோது ஜோதிடர் நந்தா உணர்வுபூர்வமாக ஏதோ பேசிக்கொண்டிருந்தார். ராஜாமகேந்திரன் சாய்ந்து அமர்ந்திருந்தார்.

முத்துலட்சுமியால் அதை நம்பவே முடியவில்லை. இருவர் வரவும் ஜோதிடர் தேங்கினார். கணேச பாண்டியன் யாரோ ஒரு அரசியல்வாதியுடன் பேசியபடி இருந்தார். அவர் கைகளில் அந்த அரசியல்வாதி வாங்கி வந்திருந்த பழக்கூடை.

பாரதி ஜோதிடரைப் பார்வையாலேயே துளையிடலானாள். புருவ வளைவே, ‘போய்யா அந்தப்பக்கம்’ என்றது. இடையில் முத்துலட்சுமியின் ஆலாபனம்.

இப்பல்லாம் நம்ம உயிர் நம்ம இதயத்துடிப்புல இல்ல. செல்லோட ரிங்க்டோன்லதான் இருக்கு... நமக்கு இந்த 21ம் நூற்றாண்டுல எழுத்தால ஒரு பெயர்னா, எண்ணால ஒரு பெயர். இந்த எண் எப்பவும் மேல இன்சாட் தொடர்போடவே இருக்கு. எழுத்துப் பெயர்கூட பலருக்கு இருக்கக்கூடும். எண் நமக்கே நமக்கு மட்டும்தான்.

“ராஜா... சத்தியமா உன்னை நான் இப்படித் தெம்பாப் பார்ப்பேன்னு நினைக்கல. உனக்கு நூறு வயசு...” என்று கன்னம் வருடி திருஷ்டி கழித்தாள். எம்.பி-யின் பார்வையோ பாரதியின் மேல்...

“என்ன பாரதி... அந்தப் பெட்டிய தூக்கிக் கொடுத்துட்ட போலத் தெரியுதே?” அவரிடமும் ஆரம்பம்.

“அது அவங்க பிராப்பர்ட்டி. அதான் அவங்ககிட்ட கொடுத்தேன். இப்பவும் அந்த ஞாபகம்தானா?”

“உனக்கு அதோட மதிப்பு தெரியல.”

“உங்களுக்குத்தான் உண்மையோட மதிப்பு தெரியல. அதுக்கு முன்னால எதுக்கும் எந்த மதிப்பும் கிடையாது.”

“போதும் நிறுத்து... வயசுக்குத் தகுந்த பேச்சு பேசு. உண்மையாம் உண்மை... நீ எந்த உண்மைய பாத்துருக்கே... அதுக்காக இப்படி வக்காலத்து வாங்கறே?”

“நான் இப்ப சண்டைபோட வரலை. உங்களைப் பாக்கவும் பிடிக்கல. இவங்கதான் கூட்டிட்டுப் போன்னு அடம் பிடிச்சதால கூட வந்திருக்கேன். என்வரைல நீங்க ஒரு டர்ட்டி மேன். அந்தக் குமாரசாமி விஷயத்துல ஒரு நியாயம் உங்களால கிடைக்கறவரை நானும் சரி, என் எடிட்டரும் ஓயமாட்டோம்...

அதமட்டும் ஞாபகத்துல வெச்சுக்குங்க... பாட்டி, நீ கொஞ்சிட்டு வா. நான் வெளிய வெயிட் பண்றேன்...”

வெடுக் வெடுக்கென்று பேசிவிட்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தவள் அடுத்து ஜோதிடரைத்தான் பார்த்தாள். அவர் போனில் யாரிடமோ காரசாரமாகப் பேசிக்கொண்டிருந்தார். பானுவைக் காணவில்லை.

வெளியே திடீர் என மழையின் கும்மாளம். அவள் நின்றிருந்த இடத்திற்கு அருகிலுள்ள டி.வியில் மழை குறித்த சிறப்புச் செய்தி ஸ்க்ரோலிங்கிலும் காட்சி யாகவுமே ஓடிக்கொண்டி ருந்தது.

‘இந்த ஆண்டிற்கான பருவமழை வழக்கமான அளவைவிட இருமடங்கு கூடுதலாக இருக்க வாய்ப் பிருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சென்னையை மீண்டும் ஒரு அசுரவெள்ளம் ஆட்கொள்ளும் அபாயமும் இருக்கிறது. இது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நிமித்தம் அதிகாரிகளோடு அமைச்சர் ஆலோசித்து வருகிறார்’ என்று காதில் விழுந்த செய்தி ஆசிரியர் ஜெயராமனையும், அவர் லிங்கத்திடம் வேண்டிக் கொண்டதையும் தான் ஞாபகப்படுத்திற்று.

இறையுதிர் காடு - 59

ஜோதிடரும் நெருங்கி அவள் அருகில் வந்தார். எந்த நெருடலும் இன்றிப் பேசத்தொடங்கினார்.

“ஒரு புதையல் கிடைச்சும் இழந்துட்டம்மா நீ... உன் கட்டத்துல இருக்கற கேது உன்னை எப்பவும் நெகட்டிவ் மைண்டோடுதான் வெச்சிருப் பான். ஆனா அதெல்லாம் இன்னும் சில வாரம்தான்.

வரும் 27ம்தேதி சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு பல பார்வை மாற்றங்கள் இருக்கு. அப்ப நீ இப்ப இருக்கற மாதிரி இருக்க மாட்டே. என் பேச்ச நம்பாத உன்கிட்ட நான் ஒரு சேலஞ்ச் பண்றேன். அதிகபட்சம் 24 மணி நேரத்துல உன் உயிருக்கு ஒரு பெரிய ஆபத்து இருக்கு. நீ தப்பிக்கறது அந்த பாஷாணலிங்கம் கைல மட்டும்தான் இருக்கு. இந்த அனுபவம் உன்னைத் தலைகீழா மாத்திடும்... அப்புறம் பேசறேன்” என்று அவர் விலக, கச்சிதமாய் அவள் செல்போனும் அமட்ட, காதைக் கொடுத்தவள் காதுக்குள் ஒருவன் பேசினான்.

“உங்கப்பனை எப்படி வழிக்குக் கொண்டுவரதுன்னு எனக்குத் தெரியும் பாப்பா... நான் யார்னு உனக்குத் தெரியுதா?”

- தொடரும்...