மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இறையுதிர் காடு - 37

இறையுதிர் காடு
பிரீமியம் ஸ்டோரி
News
இறையுதிர் காடு

அன்று மனதில் தோன்றிய கேள்வியோடு கருமார்கள் இருவரும் அந்த விவசாயியின் வேண்டுகோளை நிறைவேற்றத் தயாராயினர்.

மதளமான பாறைப்பகுதிமேல் வாழையிலை விரித்து இருவருக்கும் பிரசாத விருந்துணவைப் படைக்கத் தொடங்கினாள் அந்த விவசாயியின் மனைவி.

காலில் அவள் அணிந்திருந்த தண்டை, கைகளில் அவள் அணிந்திருந்த ஐம்பொன் வளையல்கள், காதுப்பாம்படம், இவை எல்லாமே அவள் குனிந்து நிமிர்ந்து உணவு படைக்கும்போது சப்தமிட்டன. மஞ்சள் கலந்த அரிசிச்சோறும், மிளகுச்சாறும், பிரண்டைத் துவையலும், வெல்லப்பொங்கலும், சுட்டெடுத்த பலாக்காய்களும் என்று விவசாயியின் சக தர்மிணி தன் பெண் மக்களோடு கூடி அந்தத் திறந்தவெளியில் சமைத்திருந்த பதார்த்தங்கள் அந்த வேளையிலான பசிக்கு அமிர்தமாய்ருசித்தன.

இரு கருமாருமே சப்பணமிடாமல் குத்துக்காலிட்டுச் சாப்பிட முற்படவும், புலி அவர்களைத் திருத்தினான். “இனி இப்படி அமர்ந்து சாப்பிடாதீர்கள். சப்பணமிட்டு அமர்ந்து நன்கு முதுகை முன்புறம் வளைத்து உண்ணுங்கள். உண்ணும்போது விரல்கள் மட்டுமன்றி உள்ளங்கையும் சோற்றில் தோய வேண்டும். நன்கு பிசைந்தும் உருட்டியும், நிதானமாயும் கவனித்தும் ஆழ்ந்தும் அனுபவித்தும் உண்ண வேண்டும். அப்படி உண்ணும் உணவே உடம்பில் ஒட்டும்” என்று, போகர் பிரான் அவனுக்குச் சொன்னதை அவர்களுக்குச் சொல்லிட, அந்த விவசாயியும் அதைக் கேட்டு ‘`மாரே... நானும் ஒத்தக்கால் மடக்கிக் கொக்காட்டம் குந்தித்தான் திம்பேன். இனி சப்பணம் போட்டுச் சாப்பிடுதேன்...” என்றான்.

சாப்பிட்டு முடிக்கவும், செம்பில் நீர் கொண்டு வந்து தந்து ஒத்தாசித்தனர் விவசாயியின் மக்கள். இறுதியாக வெற்றிலை கொட்டைப்பாக்கு இத்துடன் ஒரு தென்னஞ்சிரட்டையில் சுண்ணமும் கொடுத்து மெல்லச் செய்த அந்த விவசாயி, திருநீற்றுச் சம்புடத்தைக் கொண்டு வந்து தனக்கும் தன் மக்களுக்கும் பூசி விட்டு ஆசி கூறச் சொன்னான். புலிப்பாணியும் “என் குருவின் பேராலே வாழ்த்துகிறேன். இந்த நிலம் விளங்க, உன் குலம் விளங்க நீ பெருவாழ்வு வாழ்வாயாக...” என்றான்.

இறையுதிர் காடு - 37

கருமார்கள் இருவரும் களிப்பில் இருந்தனர். அவர்கள் வாழ்வில் அன்றைய தினம் ஒரு அதிசய தினம். அவர்கள் எவ்வளவோ ஆசைப்பட்டிருக்கின்றனர். ஆனால் எந்த ஒரு விருப்பமும் உடனடியாக ஈடேறியதில்லை. அதிலும் இப்படி ஒரு பிரசாத உணவு வெற்றிலை பாக்கோடு கிடைத்ததை எப்படி எடுத்துக்கொள்வது என்றே தெரியவில்லை. அது அவர்கள் முகத்தில் நன்கு தெரிந்தது. புலிப்பாணி கங்கை நீர் கொணர்ந்த காலிக்குடத்தை எடுத்துக்கொண்டு, “நாம் குகைக்குச் செல்வோம்” என்றபடியே அவர்களைப் பார்த்தான்.

“தாராளமாய் செல்வோம்... உன்னை நாங்கள் பெயர் சொல்லி அழைக்கலாம் தானே?” - செங்கான் கேட்டான்.

“இது என்ன கேள்வி... அழைக்கத்தானே பெயர் உள்ளது.”

“உண்மைதான்... ஆனால் நாங்கள் உன் முன்னால் எங்களைத் தாழ்வாக உணர்கிறோம்” என்றான் ஆழிமுத்து.

“தவறான சிந்தனை... எங்கள் குருவின் பிரதான கருத்தே `எவரும் பெரியவரில்லை - எவரும் சிறியவருமில்லை’ என்பதுதான். எனவே எக்காரணம் கொண்டும் உங்களை எவர் முன்னாலும் நீங்களே தாழ்த்திக்கொள்ளாதீர்கள்.”

“அது எப்படி? உன் எண்ணத்தின் வலிமையை இதோ இப்போது நாங்கள் பார்த்துவிட்டோம். அறுசுவை உணவுக்கு ஆசைப்பட்டோம். அது இந்தக் கோயில் வெளியில் கிடைத்தது பெரும் அதிசயம்... உன்னால் எப்படி அவ்வளவு திடமாக நினைக்க முடிந்தது?”

“ஒரே காரணம்தான்... அந்தக் காரணம் என் குரு போகர் பிரான்.”

“நீ கொடுத்துவைத்தவன் - எங்களுக்கு இப்படி ஒரு குரு வாய்க்கவில்லையே.”

“இதுவரை வாய்க்காவிட்டால் என்ன? இனி அவரை நீங்கள் உங்கள் குருவாக ஏற்றுக்கொள்ளுங்கள்...”

“நாங்கள் ஏற்பது இருக்கட்டும் - அவர் ஏற்பாரா?”

“அதில் உங்களுக்குத் துமியளவு சந்தேகமும் வேண்டாம். அவர் விருப்பத்திற்கேற்ப தண்டபாணித் தெய்வத்தின் அச்சினைச் செய்யத் தாங்கள் வந்திருப்பதே ஒரு பாக்யமான விஷயம்தான். என் குரு கால காலத்திற்குமான, இல்லை யில்லை, யுகயுகத்திற்குமான ஒரு சாதனை புரியவிருக்கிறார். அந்தச் சாதனைக்குப் பின் எனக்கொரு சிறுபங்கு இருப்பது போல் உங்களுக்கும் ஒரு பங்கு இருக்கத்தான் போகிறது. எனவே உற்சாகமாய் இருங்கள். உங்கள் கரங்களே தண்ட பாணித் தெய்வத்தை வார்க்கப் போகின்றன...”

“நாங்கள் அநேக படைக் கருவிகளைச் செய்திருக்கிறோம். ரத சக்கரங்களைச் செய்திருக்கிறோம். பல்லக்கு, தேர், சப்பரம் என்று எங்கள் கரங்கள் எவ்வளவோ செய்துள்ளது. ஆயினும் இந்தத் தண்டபாணிப் பெருமானுக்கான அச்சை நாங்கள் செய்யப்போவதை எண்ணும்போது எங்களுக்கு அது பெரும் பரவசமான உணர்வையும் சிலிர்ப்பையும் தருகிறது.”

“உண்மைதான்... நீங்கள் அச்சினை வார்க்கப்போவதை நானும் காண விரும்புகிறேன். அது ஒரு பெரும் அறிவாற்றல்... இல்லையா?”

“பரம்பரை பரம்பரையாக வருகின்ற ஆற்றல் இது. பிரம்மதேவனையும், வாணியையும் வணங்கிவிட்டு எங்கள் குலகுருவான விஸ்வகர்மா விற்கும், மயப்ரஜாபதிக்கும் வந்தனம் செய்துவிட்டு, சுண்ணாம்புக்கலவை, தேன்மெழுகு, விளாம்பழச்சாறு, மாக்கல் கலவை என்று பொருள்களை அளவாய்ச் சேர்த்து வடிவத்தை முதலில் குழைத்துச் செய்வோம். இதில் நாங்கள் செய்யும் வடிவமே மூலவடிவம். இந்த வடிவமானது உலோகக் குழம்பை உருக்கி வார்த்திடும்போது கரைந்து வெளியேறி உலோகக் குழம்பு உள் தங்கி உருவம் உருவாகிவிடும்.”

இந்த உடல், அதாவது எனது உடல், உனது உடல், இவர்களது உடல், ஏன், ஈ எறும்பு என்று சகல உயிரினங்களின் உடலும் காமம் என்னும் இன்பத்தின் தொடக்கமே!

“அற்புதம்... போகர் பிரான் உலோகக் கரைசலுக்கு பதிலாக நவபாஷாணத்தைப் பயன்படுத்த இருக்கிறார். பாஷாணக்குழம்பு வெப்பமாக இருக்குமா என்று தெரியாது. உலோக வார்ப்புக்கு உங்கள் அச்சு இசைந்து கொடுக்கும். பாஷாண வார்ப்புக்கு இசைந்து கொடுக்குமா?”

“நல்ல கேள்வி... போகர் பிரானிடம் பேசிவிட்டு இதுகுறித்து நாங்கள் திட்டமிடுவோம். எதுவாயினும் தண்டபாணித் தெய்வம் உருக்கொள்ள எப்படிச் செயல்பட வேண்டுமோ அப்படிச் செயல்படுவோம்” பேசியபடியே நடந்து குகை வாயிலை அடைந்தபோது அவர்களுக்கு ஓர் ஆச்சர்யம் காத்திருந்தது. உள்ளே ஒருவர் பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் தியானத்தில் இருந்தார்! கூம்பி முடிந்த சிகை, நெற்றியில் விபூதிப்பந்தல், கழுத்தில் கணக்கில்லாத ருத்ராட்சங்கள் கொண்ட மாலைகள் - அதில் சிவச்சம்புடம். கையில் மூட்டுக்கு மேலும் ருத்ராட்ச வளையம். காதில் பச்சை மரகதக்கல் மின்னிடும் கடுக்கன், இடையில் கச்சத்துவராடை - கைவிரல்களிலும் மோதிரங்கள், அவற்றில் பவழமும் கோமேதகமும் பளிச்சென்று தெரிந்தன. அருகில் தண்ட கமண்டலம் - ஏட்டுக்கட்டுகள்..!

‘யார் இவர்?’ - மூவரும் வினாவோடு ஊன்றவும், மெல்லக் கண் மலர்ந்தார் அவர். அப்படியே ஒரு பார்வை பார்த்தவர் லேசாகப் புன்னகைத்தார். பின் இதழ் மலரத் தொடங்கினார்.

“என்ன புலிப்பாணி... உன் இதயக்குகைக்குள் வைத்து என்னைக் காண விரும்பித் தியானித்துவிட்டு இப்போது நான் வரவும் திருதிருவென விழிக்கிறாய்... என்னைத் தெரியவில்லையா?”

- அவர் கேட்ட மறுவிநாடியே ‘`கருவூராரே... தாங்களா! சரணம்... சரணம்... சரணம்... சரணம்!” என்று கீழ்விழுந்து வணங்கிப் படபடத்தான் புலிப்பாணி. கருமார்களோ விக்கித்துப்போய் கைகளைக் கூப்பி அவனைப்போல் சரணம் சொல்லாமல் மௌனமாய் வணங்கி நின்றனர்.

“பெருமானே... இவர்கள் பொருட்டே நான் உங்களை தியானித்தேன். என் விருப்பத்தை ஈடேற்றிக் கருணை செய்துவிட்டீர்கள் - உங்கள் வருகைக்கு நன்றி.” - என்று கருமார்களைக் கைகாட்டினான். அவர்களும் முகம் குழைந்தனர்.

“தங்கள் வசிப்பிடம்?”

“கருவூர்தான் எஜமானரே...”

“நான் எஜமானன் அல்ல... நமக்கெல்லாம் ஒரு எஜமான்தான்... அவன் அந்த ஈசன்! என்னை குருவாய்க் கொள்ளுங்கள்...”

“உத்தரவு குருவே... நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்...”

“ஆம்... அதில் சந்தேகமே தேவையில்லை.. ஒரு சித்தனை ஒரு மானுடன் சந்திக்கக் கொடுப்பினை கட்டாயம் வேண்டும். முன்பிறப்பில் குருவுக்கு ஒப்பானவரின் கால் பிடித்து சேவை செய்திருந்தாலோ, இல்லை, தாய் தந்தையரை முதுமையில் தாங்கிப் பிடித்திருந்தாலோ, அதுவுமில்லை, ஊருக்கென ஒரு கேணியோ குளமோ வெட்டித் தந்திருந்தாலோதான் ஒருவருக்கு மறுபிறப்பில் குருவின் உற்ற துணையும் வழிகாட்டுதலும் வாய்த்திடும்...”

“தங்களின் தொடக்கமே பெருந்தகவல்கள் கொண்டதாக உள்ளது. நாங்கள் பல ஆகம விஷயங்களையும், சிற்பங்கள் குறித்த ரகசியங்களையும் அறியவே தங்களை தரிசிக்க ஆவல் கொண்டோம்.”

“இவ்வளவு வெளிப்படையாகவா பேசுவீர்கள்? உங்கள் பேச்சில் என் தரிசனத்தைவிட, என்னிடம் உள்ள விஷயங்கள் பெரிது என்று நீங்கள் நினைப்பதாகத் தெரிகிறது. அது ஒரு உண்மை - ஆயினும் விஷயங்களைவிட, அதைச் சொல்பவரே பெரியவர்! இந்தத் தவற்றை நீங்கள் வேறு யாரிடமும் செய்துவிடக் கூடாது - அதனாலேயே உங்களைத் திருத்துகிறேன்.”

“மிகவும் மகிழ்ச்சி... நாங்கள் கல்வி கற்காதவர்கள். எங்கள் தொழிலே எங்களுக்கான கல்வி... எங்கள் தகப்பன் பாட்டன் முப்பாட்டனே குருநாதர்கள் - ஆகையால் குருவின் வலிமையும் பெருமையும் எங்களுக்குத் தெரியவில்லை. மன்னிக்கவும்.”

“இதில் மன்னிக்க ஏதுமில்லை.. தவறு செய்யாமல் ஒரு நல்ல கல்வியையோ பாடத்தையோ ஒருவர் கற்கவே முடியாது. அதே சமயம் ஒரு முறை செய்த தவற்றை மறுமுறை செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.”

- கருவூரார் மிக இதமாய் மனதுக்கு மிக நெருக்கமாகப் பேசத் தொடங்கினார்.

“அமருங்கள்... என்னிடமிருந்து எதையெல்லாம் அறிய விரும்புகிறீர்களோ அதற்கான கேள்விகளைக் கேளுங்கள்” என்றவராய், அவர்களை அமர வைத்தார்.

புலிப்பாணி ``நான் நின்றபடியே இருக்கிறேன்’’ என்று நிற்கத் தொடங்கினான்.

“உம் கேளுங்கள்... நீங்கள் எதை அறிய விரும்புகிறீர்கள்?” - மீண்டும் தூண்டினார் கருவூரார். புலிப்பாணியே முதல் கேள்வியைக் கேட்கலானான்.

“பெருமானே! நீங்கள் கருவூர் பசுபதீஸ்வரர் சந்நிதியிலேயே இந்தத் தூல உடலோடு இறைவனுடன் கலந்துவிட்டதாக எல்லோரும் கூறக் கேட்டோம். அப்படியிருக்க, தாங்கள் தூலம் கெடாமல் இங்கு எழுந்தருளியுள்ளது எப்படி?”

“புலிப்பாணி... இப்போது நீ ஒரு அரைச்சித்தன்! அதனாலேயே இப்படிக் கேட்டிருக்கிறாய். உனக்காக மட்டுமன்றி உலகுக்காகவும் இப்படிக் கேட்டிருப்பதாகக் கருதி உனக்கு நான் பதில் கூறுகிறேன். ஆனால் அவ்வளவு சுலபத்தில் புரிந்துவிடாது.

இந்த உடல், அதாவது எனது உடல், உனது உடல், இவர்களது உடல், ஏன், ஈ எறும்பு என்று சகல உயிரினங்களின் உடலும் காமம் என்னும் இன்பத்தின் தொடக்கமே! அதாவது ஆணும் பெண்ணும் ஒருவருள் ஒருவர் இரண்டறக் கலந்ததன் விளைவே இந்த உடல்! ஊசிமுனையளவு சுக்கிலமும் சுரோணிதமும் இரண்டறக் கலந்ததன் விளைவு என்றும் கூறலாம். எப்படி ஒரு கடுகளவு விதைக்குள் ஒரு மாபெரும் ஆலமரம் ஒளிந்து கிடக்கிறதோ அப்படித்தான் இந்த சுக்கில சுரோணிதமுள்ளும் நாம் ஒளிந்து கிடக்கிறோம். அப்படி ஒளிந்து கிடக்கும் நாம் படிப்படியாக உருவம் கொள்கிறோம். இப்படி உருவம் கொள்ளும் பின்புலத்தில் காலம் என்று ஒன்று உள்ளது. இது காலத்தால் மட்டுமே நிகழும். இந்தக் காலகதி உயிரினங்களுக்கேற்ப மாறுபடும். இப்போது நான் சொன்ன எல்லாமே பால பாடங்கள். நீங்கள் முன்பே அறிந்திருப்பீர்கள்.

இப்படிக் காலத்தால் உருவாகும் உடல் ஒரு கட்டத்தில் தாயைப் பிரிந்து தானே வளரத் தீர்மானிக்கும்போது பிரசவம் நிகழ்ந்து ஒன்று இரண்டாகிறது. இரண்டாகிவிட்ட உடம்பைப் பஞ்சபூதங்கள் பார்த்துக்கொள்கின்றன. அதாவது காற்று சுவாசம் தரும், நெருப்பு காட்சி தரும், மண் உணவு தரும். நீர் தாகசாந்தி தரும், வெளி அசைவு தரும். அசையத் தொடங்கவுமே வாழ்வு தொடங்கிவிடுகிறது. அசைவுதானப்பா வாழ்வு! நன்றாகக் கேட்டுக்கொள்... அசையத் தொடங்கி விட்ட பின் இரு நிலைகள் வந்துவிடும். நான் சொல்வது புரிகிறதா?”

- கருவூரார் சற்று இடைவெளி விட்டு ஏறிட்டார். எதிரில் உள்ள மூவருமே விழித்தனர்.

அவர் குறிப்பிட்ட இரு நிலைகள் என்பது புரியவில்லை. `அது எது?’ என்கிற கேள்வியை முகத்தில் தேக்கிப் பார்த்தனர்.

“என்ன விழிக்கிறாய்... புலி, உனக்குக்கூடவா இருநிலை எது எனத் தெரியவில்லை...”

“இரு நிலைகள் எனத் தாங்கள் குறிப்பிடுவது இப்படி அப்படி என்று கூறுவார்களே, அதையா?”

“அருகில் வந்துவிட்டாய்... இப்படி அப்படிதான்! சற்று மெருகேற்றிக் கூறுவதானால் இடது வலது!”

“இடது வலதா?”

“ஆமாப்பா... அசையும்போது ஒரே பக்கமாகவாக நாம் அசைவோம்..? இப்படியும் அப்படியுமாக அதாவது நமக்கு இடப்புறம் வலப்புறம் என்று இருபுறமாகத்தானே அசைந்து செயல்படுவோம். அப்படித்தானே செயல்படவும் முடியும்?”

“ஆம்... அதில் எனக்கு சந்தேகமில்லை..”

“இந்த இடது வலது என்பதுகூட நிரந்தரமானதில்லை. ஒன்றிலேயே நாம் இருந்துவிடுவதில்லை அல்லவா?”

“பெருமானே! என் கேள்வியை விட்டு, தாங்கள் எங்கோ சென்றுவிட்டதுபோல் தெரிகிறது. இந்த இடது வலது குறித்த சிந்தனை இப்போது அவசியமா?”

“உன் கேள்விக்கு நான் விடையளிக்கத்தான் பேசிக் கொண்டிருக்கிறேன். உன் கேள்விக்கான விடை ஒருவார்த்தையில் இல்லையப்பா... இருந்தாலும் கூறுகிறேன்! இது தூல உடல் அல்ல; ஒளியுடல்! என்னைத் தொட்டுப் பார், குழம்பத் தொடங்குவாய்...”

தனக்கு துரோகம் செய்தவனை மிரட்டிப் பழிவாங்க முடியும்னா, என் அப்பா குமாரசாமிக்குச் செய்த துரோகத்தைவிடப் பல மடங்கு துரோகம் செய்தவங்க நூத்துக்கணக்குல வாழற நாடு சார் இது...

- கருவூரார் கூறிட, புலிப்பாணி அருகில் சென்று கருவூராரின் தோளைத் தொட்டான். ஆனால் தொட்ட உணர்வே இல்லை. வெட்டவெளியில் கை இருப்பது போல்தான் உணர முடிந்தது. அவர் இறுதியாகக் கூறியது போலவே குழம்பத் தொடங்கிவிட்டது அவன் மனது.

இன்று வாளை உருவி வெளியே எடுத்த ஜெயராமன் அதை முகத்துக்கு நேராகப் பிடித்தபடி அதை உற்றுப் பார்த்தார். அரவிந்தன் மட்டும் எங்கே அது வெட்டிவிடுமோ என்று சற்று பயந்தான். பாரதியோ கணேச பாண்டியனோடு போனில் பேசத் தொடங்கி ஒதுங்கியிருந்தாள்.

“பாப்பா... அந்த சப் இன்ஸ்பெக்டர் செத்துட்டான் பாப்பா...”

“எந்த சப் இன்ஸ்பெக்டர்ணே?”

“நம்ப அய்யா பேச்சைக் கேட்டு அந்தக் குமாரசாமியை மிரட்டினாரே அந்த சப் இன்ஸ்பெக்டர் பாப்பா...”

“ஓ... அவரும் ஆக்சிடென்டாகி அந்த ஆஸ்பத்திரிலதான் அட்மிட் ஆகியிருந்தாரு... அவரா?”

இறையுதிர் காடு - 37

“அவரேதான்...”

“எப்பண்ணே... இப்பதான் பாப்பா தகவல் வந்துச்சி. ஆஸ்பத்திரில திரும்பின பக்கமெல்லாம் இப்ப போலீஸ்தான்!”

“ஆக்சிடென்ட்ல காப்பாத்த முடியாத அளவு காயங்களா?”

“காயம் ஒரு பக்கம்... ஆவியா அலையற குமாரசாமி இன்னொரு பக்கம்...”

“என்னண்ணே திரும்ப ஆரம்பிச்சிட்டீங்களா?”

“பாப்பா... ஏன்னு தெரியல - அந்தக் குமாரசாமி ஆவி என் கண்ணுல மட்டும் படலை. ஆனா பானு பாத்துட்டா! குறிப்பா அந்த சப் இன்ஸ்பெக்டர்... பயத்துலதாம்மா உயிர் போயிருக்கு.”

“போதும் நிறுத்துங்க... எல்லாம் இல்லூஷன்! தமிழ்ல சொன்னா மனப் பிரமை... சரி, இதைச் சொல்லத்தான் கூப்பிட்டீங்களா?”

“இதுக்காக மட்டுமில்ல... நம்ப அய்யா வரைலகூட எந்த முன்னேற்றமும் இல்ல. சில விஐபிங்க பாக்க வந்தப்போ உங்கள கேட்டாங்க. இப்பதான் வீட்டுக்குக் கிளம்பிப் போனதா சொல்லிச் சமாளிச்சேன். எனக்கே இங்க இருக்க என்னவோ மாதிரி இருக்குதும்மா. அய்யாவைக் காப்பாத்தறதும்...”

-அதற்கு மேல் பேசாமல் கணேச பாண்டி பேச்சை மென்று விழுங்கிட...

“என்ன சொல்ல வர்றீங்க... இப்ப நான் அங்க வரணுமா?”

“வந்தா நல்லா இருக்கும் பாப்பா” எப்ப வேணா, எது வேணா நடக்கும்கற மாதிரி இருக்கு நிலை...”

“சரி போனை கட் பண்ணுங்க. நான் எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வரேன்...”

- பேசிவிட்டு பாரதி திரும்பியபோது ஜெயராமன் வாளைப் பிடித்தபடியே பார்த்துக் கொண்டிருந்தார்.

“சார்ர்ர்..!”

“என்ன பாரதி... ஏன் எக்ஸைட் ஆகறே?”

“உங்களுக்கு எதுவும் ஆகலையா?”

“என்ன ஆகணும்?”

“இந்நேரம் ரத்தக்காயம் ஏற்பட்டிருக்கணுமே?”

“அப்படி எல்லாம் எதுவும் நடக்கல. நீ ரொம்பவே குழம்பிப் போயிருக்கேங்கறது சரிதான்...”

“உண்மைதான் சார்.. உங்களுக்கு எதுவும் ஆகலேங்கறது எனக்கு இப்ப எவ்வளவு சந்தோஷத்தைத் தருது தெரியுமா? ஆனா இந்த வாளோடயே ஒரு கெட்ட சக்தி இருக்கறதாவும், அது ரத்தம் பார்க்காம விடாதுன்னும் ஒரு ஜோசியர் பீலா விட்றான். அது உண்மையோன்னு நினைக்கற மாதிரி பலபேருக்கு ரத்தக்காயம்! அதனாலதான் எனக்கும் குழப்பம்...”

“எல்லாத்த பத்தியும் பேசுவோம். எந்த ஒரு சார்புமில்லாமல், சலனமில்லாமல் சிந்திச்சாலே போதும். நிச்சயம் தெளிவு ஏற்படும்.”

இறையுதிர் காடு - 37

- பேச்சோடு வாளை உறையில் போட்டுப் பெட்டி மேல் வைத்த ஜெயராமன் விபூதி வாசத்தை ஆழ்ந்து உணர்ந்தவராக ‘குட் ஸ்மெல்’ என்றார்.

“இந்த வாசனை கூடவுமில்லை. குறையவு மில்லை சார்... ஒரே அளவுல இருந்துகிட்டே இருக்கு...”

“வா உட்கார்ந்து பேசுவோம்... ஆமா யார் போன்ல?”

“ஹாஸ்பிடல்ல இருந்து அப்பாவோட உதவியாளர் கணேச பாண்டியன்தான் பேசினார்.

“ஏதாவது முக்கிய விஷயமா?” - கேட்டபடியே வந்து ஹாலில் சோபாவில் அமர்ந்தார். எதிரில் அவர்களும் அமர்ந்தனர் - இடையில் அடைக்கலம்மாள் காபியை வைத்துவிட்டு ஒதுங்கிச் சென்றாள்.

“ஆமாம் சார்... இப்ப அந்த ஹாஸ்பிடல்ல என் அப்பா மட்டுமில்ல.. அப்பாவோட கூட்டாளிகள் லிஸ்ட்ல இருக்கற ஒரு சப் இன்ஸ்பெக்டர், அப்புறம் அந்த ரவுடி - இவங்ககூட ஆக்சிடென்ட் ஆகி அங்கதான் அட்மிட் ஆகியிருக்காங்க!

“வெரி இன்ட்ரஸ்ட்டிங்... தப்பு பண்ணுனவங்க ஒரே மாதிரி பாதிப்புக்குள்ளாகி ஒரே ஆஸ்பத்திரியில. அட்மிட் ஆகியிருக்காங்களா..? ரியலி இது ஒரு ஆச்சர்யமான விஷயம்தான்...” என்று, காபியை உறிஞ்சினார் ஜெயராமன்.

“சார்... இதுல அந்த எஸ்.ஐ. இறந்துட்டாராம்... ரவுடியும் அப்பாவும் மட்டும் போராடிக்கிட்டிருக்காங்க...”

-பாரதியின் இந்த பதில் ஜெயராமனை மட்டுமல்ல, அரவிந்தனையும் சுரீர் என்று தைத்தது.

“ஓ... ஒரு நபர் அவுட்டா... இது எந்த மாதிரி கோ இன்சிடென்ட்டுன்னு தெரியலியே...

“இது கோ இன்சிடென்ட் இல்ல... குமாரசாமி ஆவி செயல்னு கணேசபாண்டி சொல்றாரு சார்.”

“இது என்ன புதுக் குழப்பம்?”

“குழப்பமா... நான் எனக்குள்ள என்னை எவ்வளவு உறுதியா பிடிச்சுகிட்டிருக்கேன் தெரியுமா? எங்க என் பிடியை நானே விட்டுட்டு எனக்கு எதாவது ஆயிடுமோன்னு ஒரு பயம் எனக்கு வந்திடுச்சி சார்...”

“நோ... நோ... பேனிக் ஆகாதே! மனுஷ வாழ்க்கைல எவ்வளவோ அனுபவங்கள். அதுல இது ஒருவிதமான அனுபவம்... அதுக்குமேல இதைப் பத்திப் பெருசா நினைச்சு பயப்படக் கூடாது!”

“எனக்கும் புரியுது சார்... இப்பகூட உங்களோடு மனம்விட்டுப் பேசமுடியாத நிலை... கணேச பாண்டியன் ஆஸ்பத்திரிக்குக் கூப்பிட்றாரு. நானும் பழநில இருந்து நேரா வீட்டுக்கு வந்துட்டேன். இங்க அந்தப் பாம்பால ஒரே ரகளை...”

“இப்ப அந்தப் பாம்பு எங்கே?”

“தெரியல சார்... பலமுறை கண்ல பட்டுடுச்சு. ஆனா யாரையும் கடிக்காததால உயிர் பயம் யாருக்கும் இல்லை. பெட்டிக்குள்ளதான் பெருசா ஏதோ இருக்குன்னு தோணுது. ஏன்னா, அதுபெட்டியைத்தான் சுத்தி சுத்தி வந்துச்சு. அந்த ஜோசியன் பெட்டியைத் திறக்க இருந்தான். பாம்பு இருந்ததால அது முடியாமப்போயிடிச்சு.”

“அப்ப இந்த இரண்டும்தான் நீ வாங்கின ஆன்டிக்ஸ் ஐட்டங்களா?”

“ஆமாம்... நான் இந்த மாதிரி நிறைய வாங்கியிருக்கேன். அதோ அந்த பெண்டுல கடிகாரம், பெயின்டிங், தாழிப்பானை - எல்லாமே ஆன்டிக்ஸா வாங்கினது தான். இது எதுலயும் வராத பிரச்னை இந்தப் பெட்டியாலயும் வாளாலயும் வந்திருக்கறதுதான் ஆச்சர்யம்.”

- பாரதி சொல்லி முடிக்க, அரவிந்தன் ஆரம்பித்தான்.

“சார்... இந்தப் பெட்டிக்கும் ஹாஸ்பிடல்ல இருக்கற இவங்க அப்பாவுக்கும் ஒரு தொடர்பு இருக்கற மாதிரியும் தெரியுது சார். இது அடுத்த கட்ட ஆச்சர்யம்!”

“அப்படியா?”

“அது மட்டுமில்ல சார்... நீங்க பத்திரிகைக்காக பாரதிய பழநிக்குப் போகச் சொன்னது, அந்த யோகா மாஸ்டர் திவ்யப்ரகாஷ் பழநிக்கு பாரதி போவான்னு சொன்னது, அதே மாதிரி பாரதி போனது - அவளோட நானும் சேர்ந்துகிட்டது இதெல்லாம்கூட, தற்செயலுக்கு அப்பாற்பட்ட ஒரு ஆச்சர்யம்தான் சார்...”

“அப்ப எதுவும் தற்செயல் இல்லேங்கறது உங்க கருத்தா அரவிந்தன்?”

“நிச்சயமா சார்... இது எல்லாத்துக்கும் மேல பழநியில எனக்கு நிறைய அனுபவங்கள். எல்லாமே ஆச்சர்யத்துக்கே ஆச்சர்யம் தர்ற அனுபவங்கள்...”

“அப்படின்னா, நடக்கற எல்லாத்தையும் வெச்சு உங்களுக்கு ஒரு செய்தி கிடைச்சிருக்கணுமே?”

“யெஸ் சார்...”

“என்ன அது?”

“ஏதோ ஒரு சக்தி ஆட்டி வைக்குது... சதுரங்க விளையாட்டுல ஒவ்வொரு காயா நகர்த்தி ராஜாக்கு செக் வைக்கற மாதிரி, பாரதியைச் சுற்றி, பாரதியோடு இருக்கற நான், நீங்க, நம்மளச் சுற்றி ஒரு விஷயம் நடந்துகிட்டே இருக்குது சார்.” - அரவிந்தன் முடித்த நொடி பாரதி சிலிர்த்தாள்.

“அது எப்படி சார் முடியும்? இதைக் கேட்கும் போதே எனக்கு எரிச்சலும் கோபமும்தான் சார் வருது.”

இறையுதிர் காடு - 37

“எனக்குள்ளேயும் இந்தக் கேள்வி இருக்கு சார். ஆனா நான் இதைப் புரிஞ்சிக்க முயற்சி செய்யறதால கோபம் வரலை. பாரதிக்கு இந்த மாதிரி விஷயங்கள் ஒரு அலர்ஜியாவே ஆகிட்டதால கோபப்படறா...”

“சார்... நீங்க சொல்லுங்க! இதெல்லாம் நடைமுறைல சாத்தியமா..?” - பாரதி திரும்ப இடையீடு செய்தாள்.

“வெயிட் பாரதி... வெயிட்... நாம இப்ப நடந்ததைப் பத்திப் பேசிக்கிட்டுதானே இருக்கோம். எந்த முடிவுக்கும் வந்துடலியே?”

“அதுக்கில்ல சார்... தப்பான டைரக்ஷன்ல போகத் தொடங்கிட்டா அப்புறம் அதுவே ஒரு பெரிய தப்பா ஆயிடாதா?”

“சரி... அரவிந்தன் ஒரு சக்தி ஆட்டி வைக்குதுன்னு தன் கருத்தைச் சொல்லிட்டாரு. நீ என்ன சொல்ல வரே?”

“எனக்குத்தான் குழப்பமா இருக்குன்னு சொல்லிட்டேனே சார்.”

“அப்ப உன் பதிலைவிட அரவிந்தன் பதில்தான் எனக்கு சரியானது. குழப்பம் எதுக்கும் பயன்படாது.”

“அப்படி இல்ல சார்... குழப்பம் எனக்கு மாய் மாலமா நடக்கற இந்த விஷயங்கள்ள மட்டும் தான். மற்றபடி என்னைச் சுத்தி ஒரு சதி நடக்கறதாதான் சார் நான் நினைக்கறேன்...”

“சதி... இதை நீ ஏற்கெனவே சொல்லிட்டே. அது யாரா இருக்கும்னு நினைக்கறே?”

“செத்துட்ட குமாரசாமி குடும்பத்தச் சேர்ந்த யாரோதான் சார் செய்யணும். என் அப்பாவால ஏற்பட்ட பாதிப்புக்காகப் பழிக்குப் பழி வாங்க அவங்கதான் ஏதோ செய்யறாங்கன்னு தோணுது... அப்பாவுக்கு நிறைய எதிரிங்க இருக்கலாம். ஒரு அரசியல்வாதிக்கு எதிரிகள் நிறைய இருக்கறதுல ஒண்ணும் ஆச்சர்யமும் இல்லை. அதுல எனக்குத் தெரிஞ்ச எதிரின்னா அது இறந்துட்ட குமாரசாமி குடும்பம்தான். அப்பாவோட அதிகாரத்தோட மோதி ஜெயிக்க முடியாத நிலைல, தந்திரமாவும் புத்திசாலித்தனமாவும் நடந்து ஒரு பீதியை உருவாக்கறாங்களோன்னு நான் நினைக்கறேன் சார். மற்றபடி குமாரசாமி ஆவி தெரியுது - அது சிலர் கண்ணுக்குத் தெரியுது - சிலர் கண்ணுக்குத் தெரியலங்கறது எல்லாம் ஆகாச புருடா!

அப்படி மட்டும் ஒரு மனுஷன் ஆவியா வர முடியும், தனக்கு துரோகம் செய்தவனை மிரட்டிப் பழிவாங்க முடியும்னா, என் அப்பா குமாரசாமிக்குச் செய்த துரோகத்தைவிடப் பல மடங்கு துரோகம் செய்தவங்க நூத்துக்கணக்குல வாழற நாடு சார் இது... அப்படிப்பட்டவங்களால இறந்துபோன எல்லாரும் வந்து துரோகிகளை ஒழிச்சுக்கட்டியிருப்பாங்க. அதைப் பார்த்து இந்த உலகமே துரோகம்னாலே நடுங்க ஆரம்பிச்சிருக்கும். கோர்ட், நீதிபதி, ஜெயில், தூக்குமேடை எதுவுமே நமக்குத் தேவையும் இருக்காது. ஆனா, இங்க அப்படியா இருக்கு? உங்களுக்கே நல்லா தெரியுமே சார், இங்க எப்படியெல்லாம் துரோகிகள் இருக்காங்கன்னு...”

பாரதியின் கேள்விக்கு ஜெயராமனால் ஒரு பதிலை உடனே சொல்ல முடியவில்லை. ஏனென்றால், அது அப்படி ஒரு சரியான கேள்வி. அதேவேளை பாரதிக்குத் திரும்பவும் தொலைபேசி அழைப்பு. இம்முறையும் கணேசபாண்டிதான் பேசினார்.

“பாப்பா... அந்த ரவுடிப்பயலும் செத்துட்டான் பாப்பா. அடுத்து நம்ம அய்யாதான்கற மாதிரி எனக்குத் தோணுது..!”

- பாரதிக்கு உடல் நடுங்க ஆரம்பித்தது!

- தொடரும்