மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இறையுதிர் காடு - 60

இறையுதிர் காடு
பிரீமியம் ஸ்டோரி
News
இறையுதிர் காடு

``அற்புதம்... அனந்தம்... உன் வாழ்வும் ஒரு மகாத்மியமே!’’

அன்று சங்கர திகம்பரர் சந்தோஷமாகப் பேசினார்.

வாழ்வை முடித்துக்கொண்டு விடப்போகும் துக்கம் அவரிடம் துளியுமில்லை. எப்படி ஒரு மனிதனால் இப்படி இருக்கமுடிகிறது என்கிற கேள்விதான் எல்லோரிடத்திலும்.

போகர் பிரானும் அவரை நெருங்கிக் கட்டியணைத்து மகிழ்ந்தார். அப்படியே ``திகம்பரா... ஜீவன்முக்தி விஷயத்தில் நீ என்னை முந்திக்கொண்டுவிட்டாய். அதை எண்ணி மகிழ்கிறேன். வாழ்க உன் கொற்றம்... கிடைக்கட்டும் உனக்கு சாந்தி’’ என்றார்.

இறையுதிர் காடு - 60

``நாம் என்ன தாய் தந்தையற்ற அயோனிகளா? யோனிப் பிறப்பாளர்களாயிற்றே? அதனால் 28 பாட்டன் பாட்டி மக்களின் கர்மக் கணக்கைத் தீர்க்க எனக்கு இத்தனை நாளாயிற்று. திட்டமிட்டு பிரம்மச்சரியம் காத்தேன். ஒரு துளி விந்தைக்கூட என் வாழ்நாளில் உஷ்ணம்கொண்டு செல்லவிட்டதில்லை. இன்பக் களிப்பு எதனாலும் என் உடலுக்கு மகிழ்வைத் தரவுமில்லை. இப்போது என்னைத் தூக்கித் தீயில் போட்டாலும், இது வெந்து தணியப் பலகாலமாகும். உடலின் ஒவ்வொரு திசுவையும் வைராக்யமாக அடக்கி ஓர் உறுதிப்பாட்டை அளித்துவிட்டேன்.

நகங்கள் பவழத்துக்கு இணை... எலும்புகள் தந்தத்துக்கு இணை... சடாமுடி ஆலம் விழுதுக்கு இணை... மகாசமாதியில் ஆயிரம் ஆண்டுக்கு அணுவளவு பிறழ்ச்சியும் எனது இந்தப் பாகங்களுக்கு ஏற்படாது..!’’

``அற்புதம்... அனந்தம்... உன் வாழ்வும் ஒரு மகாத்மியமே!’’

``ஆனாலும் ஒரு வருத்தமில்லா வருத்தம் எனக்குள்..!’’

``தவறாயிற்றே... முக்திப்பாடும் இதனால் தடுமாறுமே?’’

``உன்னைப்போல உலகைச் சமநிலைப்படுத்தும் ஒரு தொண்டை நான் செய்யவில்லை. என்னை வெல்வதே பெரிதென்று இருந்துவிட்டேன். உன் செயலை அறிந்த நிலையில் எனக்கு இது தோன்றவில்லையே என்றே எண்ணி சற்றே வருந்தி, பின் இதெல்லாம் திருவுள்ளம் சார்ந்த செயல் எனத் தெளியவும் செய்தேன்.’’

``திகம்பரா... இம்மட்டில் நீ வேறில்லை, நானும் வேறில்லை. நாமும் சரி, இவர்களெல்லோரும்கூட ஓர் உடம்பின் பல பாக நுட்ப திசுக்கள்போல உலகின் திசுக்கள்தானே?

கைகள் தர்மம் செய்வதை அறிந்து தனக்கு வாய்ப்பில்லாது போனதே எனக் கால்கள் எங்காவது வருந்துமா? இல்லை, கால்கள் உடம்பைச் சுமப்பது கண்டு கைகள் நம்மால் இந்த உடம்பைச் சுமக்க இயலவில்லையே என்றுதான் வருந்துமா?’’

``ஆஹா... என்ன ஒரு எளிய விளக்கம்! இதுதானே இறைவனின் தட்சிணாமூர்த்தி கோலத்தின் சின்முத்திரை தத்துவம்? பிறரைச் சுட்டும் ஆட்காட்டி விரலும், தன்னை உணர்த்தும் கட்டை விரலும் ஒன்றாகி நிற்கும் அந்தச் சின்முத்திரை சொல்லாமல் சொல்வதும் நீ சொன்ன விளக்கத்தைத்தானே!

சீடர்களே..!

எங்கள் பேச்சை உங்கள் மனதில் மறவாமல் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இவை நீங்கள் தெளியவும் பயன்படும்.’’

``போகட்டும்... உனது ஜீவசமாதிக்கான இடத்தை நானே தேர்வுசெய்யவா?’’

இறையுதிர் காடு
இறையுதிர் காடு

``அவசியமில்லை... நான் எப்போதோ தேர்வுசெய்துவிட்டேன்... அதோ, அந்த மலைமுகட்டில் உள்ள குகைக்கு அருகில் வளர்ந்து நிற்கிறதே ஓர் ஆலம்... அதன் அடிநிழலில் இந்த உடம்பை உதிர்க்க விரும்புகிறேன்.’’

``உன் முக்திக்குப் பின் உன்னை வழிபடுவோர்க்கு நீ வழிகாட்ட விரும்பவில்லையா?’’

``என்னை அறிந்தவர்களைவிட அறியாதவர்களே அதிகம். அறிந்தவர்க்கும் நான் கடன்பட விரும்பவில்லை. மாணிக்கவாசகன் கூறியதுபோல நான் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்துவிட்டேன். புல்லாய் பூண்டாய் புழுவாய் பாம்பாய் பறவையாய் மிருகமாய், அந்த மிருகத்திலும் இறுதியில் பசுவாய்ப் பிறந்து பின் இந்த மானுடப் பிறப்பை எடுத்தேன். ஒரு சுற்று என்பார்களே அந்த உயிர்ச்சுற்று முடிந்தது. இனி திரும்பப் பிறப்பது விளையாட்டாகக் கருத மட்டுமே முடிந்த ஒன்று. எனக்கு விளையாட விருப்பமில்லை.’’

போகர் ஓரிடத்தில் அமர்ந்து, அவர்கள் செயலைப் பார்த்தபடியே தன் நேத்ர வழி அவர்களுக்குச் சக்தியைப் பாய்ச்சியபடியே இருந்தார்.

சங்கர திகம்பரர் பேச்சில் பல புதிய செய்திகள். வாழ்வை ஒரு கடன்பாடாக அவர் நினைப்பது முதல், ஓர் உயிர் பல பிறப்பெடுக்கும் என்பது வரை பல செய்திகள். போகரும் அதன்பின் அவரிடம் அதிகம் பேச விழையவில்லை.

``உன் இறுதி மூச்சின் முடிவுகாலத்தைக் கூற ஏலுமா?’’ என்று கேட்டார்.

``இந்த உடலுக்கான கர்மக் கணக்கின்படி இந்த சுவாதி நட்சத்திர நாளின் ஆறாம் நாழிகையின் முடிவி லிருந்து தொடங்கும் அறுபதாவது விநாடியில்...’’

``அப்படியாயின் அதிகாலைப் பொழுதில் என்றாகிறது. இப்போதே சமாதிக்குழி வெட்டத் தொடங்கினால் சரியாக இருக்கும். நாங்கள் அங்கு சென்று அந்தப் பணியில் இறங்குகிறோம். நீ உன் விருப்பம்போல வந்துசேர். முன்னதாக ஒரு வேண்டுகோள்...’’

``அறிவேன் போகா... நானும் எட்டுச்சித்தியாளனே! இந்தக் கருமானுக்கு நான் தீட்சை வழங்க வேண்டும். அதுதானே?’’

``ஆம்... காலகாலத்துக்கும் வணங்கப்பட உள்ள தண்டபாணித் தெய்வத்தின் ஒளி ரூபத்துக்குள் இவன் பங்கும் உள்ளது. வரும் நாள்களில் பல ஆயிரமவர் மனநிலையில் ஒரு சமநிலையை உருவாக்கிடப்போகும் தண்டபாணியின் நிமித்தம் இவனுக்கான சமநிலை கிட்ட நீ உன் அருள்சக்தியை அளிப்பாயாக’’ என்று செங்கானை நோக்கிக் கை காட்டினார் போகர்.

செங்கானும் அவர் அருகில் சென்றிட, போகர்பிரான் ஆழிமுத்து சிரசில் கைவைத்துத் தன் அருட்கதிர்களைச் செலுத்தியது போலவே செலுத்தினார்.

ஆழி முத்துவைப் போலவே செங்கானும் சிலிர்த்தான். அதைக் கண்ட போகரின் சீடர்களான நவமரும் தங்களுக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிட்டாதா என்பதுபோல ஏக்கத்தோடு பார்த்திட, அவர்களுக்குப் பதிலளிப்பதுபோல, ``பொதினிக்குன்றில் நவபாஷாண தண்டபாணியாகிய முருகன் நிலைபெற்று நிற்கும் சமயம் உங்களுக்கெல்லாம் தீட்சை கிட்டும், கவலை வேண்டாம். அதன்பின் நானும் இதேபோல சமாதியில் ஆழ்ந்து இந்த யோனி உடலை உதிர்க்கச் சித்தம் கொண்டுள்ளேன். அதன்பின் என் ஒளியுடலே நடமாடும். ரத்தமும் சதையுமான இந்த உடல் அல்ல...’’

அவர்களிடம் ஒரு மெல்லிய மனச் சமாதானம். கூடவே இருள் உருவாகும் இரவுப்பொழுதில் இவர் சமாதியில் ஆழ்வது சரியா என்றும் கேள்வி.

``உங்கள் எண்ணம் புரிகிறது. நான் என்ன செய்வது? என் பிராணனின் முடிவு இரவுக் காலத்தில் அல்லவா அமைந்துவிட்டது’’ என்றார்.

``இதை நீங்கள் எவ்வாறு அறிந்துகொண்டீர் என்பதே எங்களுக்கு விளங்கவில்லை. நீங்கள் இருவர் பேசிக்கொள்வதும் பிரமிப்பையே எங்களுக்கு அளிக்கிறது’’ என்று, சங்கன் ஒரு தீப்பந்தம் கொளுத்திப் பிடித்தபடியே முன்வந்தான்.

``இதற்கான விடையை நீங்கள் திருமூலனின் திருமந்திரத்தை வாசித்துத் தெரிந்துகொள்ளுங்கள். அவனொரு பாட்டாகவே பாடியுள்ளான். மூவாயிரம் பாடல்களில் முத்தானது அது!

`தன்னையறிந்திடும் தத்துவ ஞானிகள்

முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பார்கள்

பின்னை வினையைப் பிடித்தும் பிசைவர்

சென்னியிலே வைத்த சிவனருளாலே!’ - என்பதே அப்பாடல்.’’

இப்படிக் கூறிய சங்கர திகம்பரர், ``உங்களில் சிலரின் பிறவித் தொடர்ச்சியிலும், வம்சாவளித் தொடர்ச்சியிலும் வரும் மாந்தர்க்கு மட்டும் நான் எனும் சுவேத உடல் அருளுதவி செய்திடும். என் பொருட்டு குழிதோண்டி என்னை சமாதியிலாழ்த்தும் தங்கள் வினைக்கு, நான் காட்டும் நன்றியாகும். நன்றிக்கடன் என்றும் கூறலாம்’’ என்றும் கூறியவர், தன் சொத்து என்று வெண்கலக் கமண்டலமும் பாதிரி மர திவ்ய தண்டமும், ஆயிரத்தெட்டு ருத்ராட்சங்களால் ஆன மாலைகளையும் முன்வைத்ததோடு, ஒரு ரசமணி உருண்டையையும் முன்வைத்தார். அப்படியே தங்கம் உள்ள அந்த மான்தோல் பை! சீடர்கள் அதற்குள் தங்கள் பங்குக்குத் தீப்பந்தங்களைக் கொளுத்திட, அது அணையாது எரிந்திட, ஆழிமுத்துவும் செங்கானும் தாங்கள் முன்பே கொண்டுவந்திருந்த இலுப்பை எண்ணெயை அதில் விட்டனர்.

திகுதிகுத்தன பந்தங்கள்! காற்றில் தீச்சுடரும் நாட்டியமாடியது. பரவிய வெளிச்சத்தின் ஊடே இரவும் கலந்து வந்திட, உடம்பின் நிழல்கள் தரைப்பரப்பில் பந்தங்களின் அசைவுக்கேற்ப எல்லாப்புறத்திலும் விழுந்தன. காற்றிடம் விசும்பொலி... சமயத்தில் ஊளை! இரவு வந்தாலே எங்களுக்கு விழிப்பு என்பதுபோல சுவர்க்கோழிகளும் ரீங்காரமிட ஆரம்பித்தன.

அந்த மலைப்பரப்பில் விசித்திர தெள்ளுப்பூச்சி களும், ஈசல் உள்ளிட்ட சிறுவண்டுகளும் கறுத்த இரவின் குளிர்ந்த வானில் திக்குத் திசை தெரியாது திரியத் தொடங்கின. அப்படித் திரிவதே அதன் வாழ்வுமாகும். அந்த சப்தங்களையெல்லாம் கேட்டபடியே போகர் முன்செல்ல அவர்கள் பின்தொடர்ந்தனர்.

அந்த ஆலமரத்தை அடைந்திடச் சில நாழிகைகள் ஆகலாம். அங்கே அவர்கள் குழியைத் தோண்டி முடிக்க மேலும் பல நாழிகைகள் ஆகலாம். தட்டையான பட்டியக்கல்லையும் செதுக்க வேண்டும். அதை மேலே மூடி, பின் அதன்மேல் மண்ணைப் பரத்தி அதற்கும் மேலே சுட்ட செங்கல் கொண்டு மாடம் எழுப்பி, அதில் துளசியை நட்டு வளர்ப்பது என்பதெல்லாம், சீடர்கள் தங்கள் பொருட்டு செய்துகொள்வதாகும். அந்தச் சூழலில் விளக்கும் எரியத் தொடங்கிவிட்டால், அங்கே ஒரு கோளின் கதிர்கள் நுழைய இயலாத அருள் சூழல் உருவாகிவிடும்.

இச்சூழலுக்குள் வருவோர்க்கு கோள் பிடியிலிருந்து விடுவிப்பு கிடைக்கும். அப்படிக் கிடைத்தாலே மனதை ஒரு புள்ளியில் அடக்கிடவும் முடியும். அப்படி அடக்கினாலே, தாங்கள் யார் என்பது முதல் தங்கள் ஆதியந்தத்தையும் அறிந்துகொள்ள முடியும். ஜீவசமாதிகள் புவியில் அமைவதன் நோக்கமே புலனடக்கம் புரிய விரும்புவோர்க்கு உதவிடத்தான். அவசியம் ஏற்பட்டால் சமாதியில் அடங்கியிருக்கும் சித்தரின் ஜீவாத்மா அவர்கள் முன் தோன்றவும் செய்யும். இதெல்லாம் சமாதி நோக்கி வருவோரின் கர்மக் கணக்கின்படியே நடந்திடும்.

எல்லோருக்கும் இங்கு வரத் தோன்றாது. வந்தாலும் புலனடக்கத் தோன்றாது, வரும் விதிப்பாடு, புலனடக்கும் நோக்கம் கொண்டவருக்கே இந்தச் சமாதிவெளி பயன்படும். ஒரு குளத்தைப் பயன்படுத்தத் தெரிவதுபோல, ஜீவசமாதிகளையும் பயன்படுத்தத் தெரியவேண்டும். அதற்கு வாழ்வறிவும் அனுபவ அறிவும் பழுத்த ஞானமுதிர்வும் புண்ணிய பலமும் வேண்டும்.

இறையுதிர் காடு - 60

ஆயினும் ஜீவசமாதிக்கு வந்து விளக்கேற்றுவது ஏற்றுவோரின் கர்மக் கணக்கில் ஒன்றிரண்டைத் தீர்க்கும். சமாதி வெளியில் அன்னதானம் செய்திட, பசி வாதனை தலைமுறைக்கே ஏற்படாது. இதெல்லாம் ஜீவசமாதியின் பலா பலன்கள்.

போகரும் சீடர்களும் தீப்பந்தம் தாங்கி அந்த இருளிலும் தயக்கமின்றி வெட்டுக் கருவிகளுடன் ஒற்றையடிப் பாதை வழி நடந்து செல்வதைக் கண்டபடி இருந்த சங்கர திகம்பரரும், தன் குகைக்குச் திரும்பச்சென்று தான் வழக்கமாகக் கிடக்கும் இடத்தில் உடம்பைக் கிடத்தி குக்குடாசனத்தில் அமர்ந்தார்.

அருகில் ஜோதி விருட்ச இலையால் திரி செய்து ஏற்றப்பட்ட விளக்கு. அதன் புகையில் மூலிகை வாசம். ஒரு பூச்சிகூட அதன் வாச நிமித்தம் அங்கு பறக்கவில்லை. சற்று அருகில் இரண்டு மலை வாழைப்பழங்கள் இருந்தன. அதன் சுவைக்கு மட்டும் நாவுக்கு அலுப்பு ஏற்படவேயில்லை. தோலை உரித்துவிட்டு பழத்தைச் சுவைத்தார்.

இறுதி உணவு... இறுதிச் சுவை!

அப்படியே கண்களை மூடியவர், தான் விடும் பன்னிரண்டு அங்குல சுவாசத்தை மெல்லக் குறைத்து ஓர் அங்குல அளவில் நிறுத்தி, சிலை போல அமர்ந்துவிட்டார்.

அவன் தனி மனுஷன் இல்லே மேடம். ஒரு கூட்டமே அவன் பின்னால இருக்கு.

குக்குடாசனச் சிலை!

வமர் ஒன்பது பேரும் வெகு அழகாய் ஒன்பது அடி ஆழத்துக்கும் ஒன்பது அடி அகலத்துக்குமாகத் தோண்டிய சதுரக் குழியில், மிகச்சரியாக ஒன்பது அடிக்குக் கீழே கற்பாறை. முயன்றாலும் இனி தோண்ட முடியாது. ஒருபுறம் செங்கானும், ஆழிமுத்துவும் பத்தடி நீல அகலத்துக்கு ஒரு சதுரப் பாறையை இரண்டங்குல தடிப்பில் செதுக்கி முடித்திருந்தனர்.

இதுபோன்ற பணியைப் பகல்பொழுதில் செய்தால்கூட மூன்று நாள்களாகும். ஆனால், இங்கே ஓர் இரவின் சில மணி நேரத்தில் அவர்கள் சாதித்திட, தோண்டி எடுத்த மண்ணானது ஒருபுறம் குன்றுபோலக் குவிந்திருந்தது. அவர்களில் எவரிடமும் பெரிதாகக் களைப்புமில்லை. போகர் ஓரிடத்தில் அமர்ந்து, அவர்கள் செயலைப் பார்த்தபடியே தன் நேத்ர வழி அவர்களுக்குச் சக்தியைப் பாய்ச்சியபடியே இருந்தார்.

இவ்வேளையில் போகர்பிரான் சில பாடல்களைப் பாடினார். அவை எல்லாம் அவரையொத்த சித்தர் பெருமக்கள் பாடிய பாடல்கள்! அப்படியே அவர் பாலா என்னும் வாலைக் குமரியையும் எண்ணிக் கைகுவித்துப் பாடியபோது அங்கோர் அதிசயமும் நடக்கலாயிற்று.

பட்டுப் பாவாடை சட்டையில் ஒரு தீச்சுடரே உடம்பானதுபோல கால் கொலுசு சப்திக்க அங்கே ஒரு சிறுமி வந்தாள். அவள் கரத்தில் ஒரு சிறு கமண்டலம். அவளைப் பார்த்த நவமர்க்கு விழிகளில் தெறிப்பு.

‘இப்படி ஒரு அழகா? இப்படி ஒரு ஒளியா? யார் இவள்?’ இப்படியான கேள்விகளில் மனம் கட்டிக்கொள்ள, அவளோ ``ம்... இரு கைகளையும் எல்லோரும் கழுவிக்கொண்டு வாருங்கள்’’ என்றாள்.

கழுவிட தண்ணீருக்கு எங்கே போவது என்று எண்ணும்போதே அவள் நின்ற இடத்தில் ஒரு நீருற்று ஓரடிக்குப் பொங்கி எழுந்து, பக்கமாகச் சரிந்து விழுந்து ஓடலாயிற்று. இது என்ன விந்தை, அவள் காலடிக்கு அப்படி ஒரு சக்தியா என்று கேள்விக்குள் விழுந்து, கைகளைக் கழுவிக் கொள்ளவும் அவளது கமண்டலம் அவர்களுக்குப் பாலைக் கொட்டத் தொடங்கியது.

``ம்... அருந்துங்கள். களைப்பெல்லாம் போய்விடும் காமதேனுவின் பால் இது’’ என்ற அவள் குரலின் ஓசையில், தங்கமணியின் நாத இசை! வாயெல்லாம் வழிந்திட, மார்பெல்லாம் நனைந்திட, அவர்களும் பாலை முண்டி முண்டிக் குடித்தனர். பார்த்த வண்ணமிருந்த போகரின் விழிகளில் பனிப்பு. இறுதியாக, ``என்ன போகப்பா, உனக்கு வேண்டாமா?’’ என்கிற அவளின் நாதக் குரல், அவரையும் இரு கைகோத்து விரித்து ஏந்தச் செய்தது. அதில் குதித்துத் தேங்கியது நுரைத்துத் ததும்பிய பால்.

தாடி முடியெல்லாம் அதன் ஈரக் கசிவோடு அவரும் குடித்துக் களித்தார். இறுதியாகக் குழிக்குள்ளும் பாலைக் குதித்து விழச்செய்த அந்த வாலைக்குமரி, தன் ஒற்றைப்பின்னல் சடையை இழுத்து முன்னால் போட்டுக்கொண்டு, ``சங்கரனுக்கும் சாந்தி உண்டாகட்டும்!’’ என்றவளாய் வந்ததுபோலவே திரும்பலானாள்.

அவளது சின்னஞ்சிறு கமண்டலத்திலிருந்து அத்தனை பேருக்கும் எப்படி அவ்வளவு பால் வந்தது என்பதில் தொடங்கி, இந்த இரவில் இந்த மலைமுகட்டில் எப்படி இவள் வந்தாள் என்பது வரை அவர்களுக்குள் பற்பல கேள்விகள். அப்படியே பெரும் புத்துணர்ச்சி. அவர்கள் கேட்குமுன் போகரே அவர்களுக்குப் பதில் அளிக்கலானார்.

இறையுதிர் காடு - 60

``சீடர்களே, உங்களுக்கெல்லாம் பாலாவின் தரிசனம் வாய்த்துவிட்டது. சித்த உலகின் அதிதேவதை அவள். அழைத்த மாத்திரத்தில் வருபவள். இன்று நீங்கள் செய்த தொண்டின் நிமித்தம் உங்களுக்குச் சக்தி தரவே அவள் வந்தாள். நான் அவளைத் தியானித்த நொடியே வந்து அவள் வழங்கிய பால், ஒரு பசுவின் மடிச்சுரப்பு மட்டுமல்ல… சக்தித் தாயின் ஞானச்சுரப்பும்கூட. இனி உங்கள் வாழ்வில் எல்லாமே மேலானதாக அர்த்தமுடன் நிகழும். உங்களிலிருந்து பல சந்ததிகள் தோன்றும். அந்தச் சந்ததியினர் சித்த நெறியையும், நாம் கட்டவிருக்கும் தண்டபாணி ஆலயத்தையும் காத்துப் பராமரிப்பர். இதனால், ஆறாறு முப்பத்தாறு தலைமுறை உங்களால் உருவாகும்’’ என்று போகர்பிரான் கூறியதைக் கேட்டு அவர்களுக்குள் பெரும் வியப்போடு மகிழ்வும்.

ஊடாக `ஓம் நமசிவாய...’ என்கிற குரலொலியோடு தன் சடைமுடி தரை புரண்டிட, சங்கர திகம்பரரும் அங்கு வந்துநின்றார்.

குழியையும் கல்லையும் கண்டவர், அத்தனை பேரையும் புன்னகையோடு பார்த்துக் கைகளை உயர்த்தி ஆசீர்வதித்தார். அவர்கள் ஒரு புறமாய்க் கூடிநின்றனர். ஆலமர விழுதுத் தண்டுகளில் தீப்பந்தத்தைச் செருகியதில், அதன் சுடரொளியில், அந்தச் சூழலே மிக ரசமாயிருந்தது.

ஓர் உயிரின் பிரிவு இவ்வுலகில் சோகத்தில்தான் நடந்திருக்கிறது. எதிர்பாராமல்தான் நடத்திருக்கிறது. ஆனால், இப்போதோ அது இன்பமான உணர்வுகளுடன் எதிர்பார்த்த நிலையில் நடக்கப்போகிறது. சங்கர திகம்பரர், போகரை நெருங்கி, திரும்ப ஒருமுறை கட்டித் தழுவிக்கொண்டார். பின், சீடர்களை அருகில் அழைத்துத் தீர்க்கமாகப் பார்த்து, அவர்கள் சிரங்கள்மீது கை வைத்து ஆசீர்வதித்தவராய் அண்ணாந்து வானம் பார்த்தார். நட்சத்திரக் கூட்டம் நன்கு தெரிந்தது. அதில் மிருக சீரிஷ நட்சத்திரமானது, மான் கொம்புபோல மிகத் துல்லியமாகத் தெரிந்தது. அவர் சடாமுடிக்குள் ஒரு மணற்கடிகை இருந்தது. அதில், ஒருபுறத்திலிருந்து மறுபுறத்தினுள் மணல் விழுந்தபடி இருந்தது. அது முற்றாய் விழுந்து முடிக்கையில், அவர் உடல் அடங்கிவிடும். உயிரும் உடலைப் பிரிந்துவிடும். ஆனாலும், உடல் சூடு அடங்க ஒன்பது நாள்களாகும். அது குளிர்ந்து சுருங்க மாதங்களாகும். வெம்பிச் சிதைய மேலும் சில காலங்களாகும். கூடு மாத்திரம் அப்படியே இருக்கும்!

இன்று பாரதியின் காதில் விழுந்த அந்தக் குரல் பளிச்சென்று அந்தக் குமாரசாமியின் தம்பியைத்தான் ஞாபகமூட்டியது.

``ஏய், யார் நீ?’’ - பதற்றமாகக் கேட்டாள் பாரதி. ஆனால், மறுபக்கம் ரிசீவரை வைக்கும் சப்தம் மட்டுமே கேட்டது. திரையில் ஒரு பப்ளிக் பூத்தின் லேண்ட்லைன் எண்.

‘சவுக்கில் சொடுக்கினாற்போலப் பேசிவிட்டு போனையும் வைத்துவிட்டானே, யார் இவன்?’ - மனதில் முண்டிய கேள்வியுடன் அந்த ஹாஸ்பிடலின் ஆளரவமில்லாத இடம் நோக்கிச் சென்றவள், அடுத்த நொடி கைப்பேசி வழியாக, அந்தக் குமாரசாமியின் தம்பியைப் பிடித்துச்சென்ற இன்ஸ்பெக்டருக்கு போன் செய்தாள்.

``சார்… நான் எம்.பியோட டாட்டர் பாரதி பேசறேன்.’’

``சொல்லுங்க மேடம்…’’

``இப்போ அநாமதேய போன் ஒண்ணு... `உங்க அப்பாவை எப்படி வழிக்குக் கொண்டுவர்றதுன்னு எனக்குத் தெரியும் பாப்பா’ன்னு சொன்னான். அப்படியே `நான் யார்னு உனக்குத் தெரியுதா?’ன்னும் கேட்டான் அவன். எனக்கொரு டவுட். நீங்க அரெஸ்ட் பண்ணின அந்த நபர் உள்ளேதானே இருக்காரு?’’

``புழல் சிறை விசாரணைக் கைதியாக, உள்ளேதாம்மா இருக்கான். அவன் குரல் மாதிரியா இருந்தது?’’

``எனக்குச் சொல்லத் தெரியல சார். ஆனா, நிச்சயம் அவனோ, அவன் ஆளோதான். பப்ளிக் பூத்ல இருந்து பேசினான்.’’

``இன்னும் என்ன சொன்னான்?’’

``அதுக்குமேல ஒரு வார்த்தை பேசல சார். எனக்கு பயமா இருக்கு சார்.’’

``அவன் தனி மனுஷன் இல்லே மேடம். ஒரு கூட்டமே அவன் பின்னால இருக்கு. பல கோடீஸ்வரர்களை மிரட்டியும், ஆளைக் கடத்திப்போய் பிளாக்மெயில் பண்ணியும் நிறைய பணம் பார்த்த கூட்டம். இப்பகூட எவ்வளவு உதைச்சும் வாயையே திறக்கலை இவன். ரொம்ப அழுத்தமானவங்க.’’

``இப்ப என்ன சார் பண்ண?’’

``நீங்க தைரியமா இருங்க, ஆஸ்பத்திரியில எந்தத் தப்பும் நடக்காது. அப்படி ஒரு புரொடக்‌ஷன் கொடுத்திருக்கோம். உங்க வீட்டுக்குப் பாதுகாப்பு வேணும்னாலும் ஏற்பாடு செய்றேன்.’’

``அவங்களுக்கு அப்பாதான் குறி. எனக்கு எந்தப் பயமும் இல்லை.’’

இறையுதிர் காடு - 60

``இருக்கலாம். அதேசமயம் உங்களைக் கடத்திப்போய் உங்க அப்பாவை பிளாக்மெயில் பண்ணி, அவங்க நினைச்சதை சாதிக்க இடமிருக்கு இல்லையா?’’

``வாட்?’’ - அதிர்ந்தாள் பாரதி. அவள் கற்பனை செய்து பார்த்திராத கோணம் அது. அப்படியே சற்றுமுன் ஜோசியர் மிரட்டலாகச் சவாலாகச் சொன்னதும் உள்ளே ஓர் ஓட்டம் ஓடியது. அதன் காரணமாக ஒரு மௌனம்.

``மேடம்…’’

``யெஸ் சார்…’’

``உங்களுக்கு நான் இம்மீடியட்டா ஒரு எஸ்கார்ட் போடறேன். வேண்டாம்னு சொல்லாதீங்க.’’

``இல்ல… நான் ரொம்ப எம்பாரஸ்டா ஃபீல் பண்றேன். எனக்கொரு நண்பர் இருக்கார். நானும் தனியா இருக்க மாட்டேன். அதனால எஸ்கார்ட் எல்லாம் வேண்டாம்.’’

``இல்ல மேடம்... அவரால உங்களுக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது. சிவில் டிரெஸ்ல தூரத்துலதான் இருப்பார். வேண்டாம்னு சொல்லாதீங்க’’ - இன்ஸ்பெக்டர் அழுத்தம் கொடுக்க, பாரதியும் சம்மதித்தாள்.

``இப்ப ஹாஸ்பிடல்லதானே இருக்கீங்க?’’

``ஆமா’’

``அங்கேயே இருங்க. அதிகபட்சம் 30 நிமிஷத்துல ஒருத்தர் வந்து இன்ட்ரொட்யூஸ் பண்ணிக்குவாரு.’’

``ஓகே…’’

சம்மதம் சொல்லிவிட்டுத் திரும்பியவள் எதிரில் கணேச பாண்டியன்.

``பாப்பா’’

``என்னண்ணே?’’

``உங்ககூட தனியாவே பேசமுடியல. அய்யா இப்படி எழுந்து உட்கார்ந்து பேசிக்கிட்டிருக்கற விஷயம், பிரதம மந்திரி காது வரை போயிருக்குது. ஜோசியர் காட்டுல ஒரே மழை.’’

``……….’’

``என்ன பாப்பா… அய்யா அந்தக் குமாரசாமி குடும்பத்துக்கு உதவ முடியாதுன்னு சொன்னது வருத்தமா?’’

``உங்களுக்கு இல்லையாண்ணே?’’

``அது இல்ல பாப்பா, அந்தப் பொட்டிய நீங்க தூக்கிக் கொடுத்துட்டதை அவர் எதிர்பார்க்கல. உங்க மேல உள்ள கோபத்தைத்தான் அப்படிக் காட்டிட்டாரு.’’

``பொய்… அவர் மறுத்ததுக்குப் பிறகுதான் நான் பெட்டியைக் கொடுத்தேன். நீங்க சமாளிக்காதீங்க. இன்னொரு முக்கியமான விஷயம். அந்தக் குமாரசாமி பிரதர் ஜெயில்ல இருந்தாலும், அவனோட ஆட்கள் ஆபத்தானவங்களாம். எதை வேணா எப்ப வேணா செய்வாங்களாம். அப்பாவுக்கு ஆபத்து இன்னும் விலகலேண்ணே.’’

``என்னம்மா இது, வாலு போய் கத்தி வந்த கதையா?’’

``இவர் திருந்தாத வரை எதுவேணா வரும்ணே.’’

``அதெல்லாம் சரி பண்ணிடலாம்மா. ஆமா, அந்தப் பொட்டிய திரும்ப வாங்க முடியாதா பாப்பா?’’

``என்ன, உங்கள விட்டு என்னை ஆழம் பார்க்கறாரா உங்க எம்.பி?’’

``இல்லம்மா… ஆனா, இவரும் ஜோசியரும் ஏதோ திட்டம் போட்டுருக்காங்க. ஜோசியருக்கு உதவி செய்யச் சொல்லி போலீஸ் கமிஷனர், சென்ட்ரல் மினிஸ்டர், தலைமைச் செயலாளர்னு எல்லார்கிட்டயும் பேசியிருக்காரும்மா. அதுல ஏதோ ஒரு ஏடு இருக்காமே... அதுல அடுத்த பிரதமர் யார்? அடுத்த உலக மகாயுத்தம் எப்போ? அடுத்த தேர்தல்ல யார் ஜெயிப்பான்னு எல்லாக் கேள்விகளுக்கும் பதில் இருக்குதாமே?!’’

``ஓ… இவ்வளவு விலாவரியாவே பேச்சு ஓடிக்கிட்டிருக்கா?’’

``அப்படி ஒண்ணு இருக்குன்னா யாருக்குத்தான் பாப்பா ஆர்வம் ஏற்படாது? அதுலேயும் செத்துட்டாருன்னு முடிவு கட்டிட்ட நிலையில, நம்ம அய்யா பொழச்சதே எவ்வளவு பெரிய உண்மைன்னு சொல்லாம சொல்லும்போது, வாழப்பழத்துல ஈ மொய்க்கிற மாதிரி அதிகார மட்டமே வரத்தானே செய்யும்?’’

``அப்படி என்ன திட்டம் போட்ருக்காங்க?’’

``என்ன… அந்த ஜமீன் வாரிசைப் போய்ப் பார்த்து பொட்டிய திரும்பக் கேட்பாங்க. அவங்க மறுத்தா எத்தனை லட்சமானாலும் தரோம்னும் சொல்வாங்க. அதுக்கும் மறுத்தா நாலு தட்டு தட்டிட்டு பொட்டிய தூக்கிட்டு வந்துருவாங்க. அவங்க பிரச்னை பண்ணுனா, பொய்க் கேஸ் போட்டு அவங்களையே குற்றவாளியாக்க நம்ம போலீஸுக்குச் சொல்லித் தரணுமா என்ன?’’

அந்த ஜமீன்தார் பேரனுக்கு போன் பண்ணி அந்த லிங்கத்துக்கிட்டயே தங்களைக் காப்பத்தும்படி வேண்டிக்கச் சொல்லுங்க.

``இதெல்லாம் அராஜகம். நான் என் பத்திரிகையில அப்படியே புட்டுப்புட்டு வைப்பேன். டி.விக்குப் பேட்டி கொடுப்பேன்.’’

``மெல்லப் பேசுங்க பாப்பா. உணர்ச்சிவசப்படற அளவுக்கு உங்களுக்கு யோசனை இல்லையே. என்னா நீங்க?’’

``என்னண்ணே, நீங்க என் பக்கம் பேசறீங்களா இல்லே, அப்பா பக்கமா... முதல்ல அதைச் சொல்லுங்க.’’

``எனக்கு ரெண்டு பேரும் முக்கியம். அதனாலதான் இதை உங்ககிட்ட சொன்னேன். அந்தப் பொட்டியில ஏதோ லிங்கம் இருக்குது. அது கேட்டா கேட்டதைக் கொடுக்கும், நினைச்சா நினைச்சது நடக்குமாமே?’’

``அதெல்லாம் சுத்த ஹம்பக். அது ஒரு மருந்து. அதுக்குமேல அதுல எதுவுமில்லை.’’

``நீங்க சொன்ன மாதிரி அது வெறும் மருந்தா இருந்தா அவ்வளவுதான். ஒருவேளை இவங்க நம்பற அளவு சக்தி படைச்சதா இருந்தாதான் இப்ப நல்லது. அந்த ஜமீன்தார் பேரனுக்கு போன் பண்ணி அந்த லிங்கத்துக்கிட்டயே தங்களைக் காப்பத்தும்படி வேண்டிக்கச் சொல்லுங்க. அது சக்தி உள்ளதுன்னா காப்பாத்தி அவங்களைக் கரை சேர்க்கட்டும். இல்லே வெறும் மருந்துதான்னா இப்போ சொல்றேன் பாப்பா, நம்ப அய்யாதான் ஜெயிப்பாரு. நீங்க வருத்தப்பட்டு பிரயோஜனமில்லே.’’ வெறும் மருந்துதான்னா இப்போ சொல்றேன் பாப்பா, நம்ப அய்யாதான் ஜெயிப்பாரு. நீங்க வருத்தப்பட்டு பிரயோஜனமில்லே.’’

கணேச பாண்டி சொல்லிவிட்டுத் திரும்பிச் செல்ல, பாரதிக்கு ஒரே தவிப்பாகிவிட்டது. சாந்தப்ரகாஷுக்கு போன்செய்து கணேச பாண்டி சொன்னதுபோல சொல்லத் தயக்கமாக இருந்தது. வேறு மாதிரி சொல்லி எச்சரிக்கவும் தோன்றியது. அவனுடைய எண்களை அழுத்த ஆரம்பித்தாள்.

பிரமாண்ட பங்களா!

ஒருபுறம் துரியானந்தமும் குமரேசனும் பெயர்த்து எடுத்துப் போயிருந்த மரச்சட்டம் மற்றும் கதவுகளை இறக்கிக்கொண்டிருக்க, பின்புறம் சமாதியை ஒட்டிய காலி நிலப்பரப்பில் இருபதடி இருபதடி இடைவெளியில் இரண்டடி ஆழக் குழியினை வெட்டி, அதில் அந்த ஒன்பது மரக்கன்றுகளை சாருபாலா நட்டுக்கொண்டிருக்க, அவளுக்கு உதவிக் கொண்டிருந்தான் சாந்தப்ரகாஷ்.

வாட்ச்மேன் தாத்தா அருகிலிருந்து நவதானியம் கலந்த தண்ணீரோடு தானியங்களையும் அந்தக் குழியில் போட்டு மூடிட, அதற்கு குமரேசனோடு வந்த ஒரு கூலிக்காரனும் உதவிக்கொண்டிருந்தான்.

உள்ளே பரந்த ஹாலில் ஒரு மோடா மேல் சாந்தப் ப்ரகாஷின் செல்போன் அடித்தபடியே இருக்க, அந்த சப்தம் ஜன்னல் சட்டத்தோடு கடந்து சென்ற துரியானந்தத்தை நிரடியது. முதல்முறை பொருட்படுத்தாத துரியானந்தம் இரண்டாம்முறையும் ஒலிக்கவும், ``குமரேசா... இதை எடுத்துட்டுப்போய் அய்யாகிட்ட கொடுத்துட்டு வா. என்ன அவசரமோ விடாம அடிக்குது பார்’’ என்றான்.

குமரேசனும் அந்த செல்போனுடன் பின்புறம் நோக்கி ஓடினான். நடுவில் திரையைப் பார்த்தான். பாரதி பெயரைப் போட்டு சாந்த ப்ரகாஷ் பதிவுசெய்திருந்தான். அந்தப் பெயரைப் பார்க்கவும், பேசினால் தவறில்லை என்று கருதிய குமரேசன், ஆன் செய்து குரல் கொடுக்கத் தொடங்கினான்.

“அம்மா, நான் பழைய சாமான் கடை குமரேசன் பேசறேம்மா.”

“நீயா... இந்த செல்போன் எப்படி உன் கைல?”

``அவர் தோட்டத்துல மரம் நட்டுகிட்டிருக்காரு. பங்களாவுல வெச்சுட்டுப் போய்ட்டாரு. எடுத்துக்கொடுக்கத்தான் போய்க்கிட்டிருக்கேன். உங்க பேரைப் பார்க்கவும் தகவல் சொல்லத்தான் கூப்பிட்டேன். தப்பா எடுத்துக்காதீங்க.”

“அது சரி, அங்கே என்ன வேலை உனக்கு?”

“அதை ஏம்மா கேக்கறீங்க...”

குமரேசன் தாங்கள் பெயர்த்தெடுத்த சட்டங்களோடு வந்திருப்பதைச் சொல்லிக்கொண்டே நடந்தபடி இருக்க, பாரதியும் ஆச்சர்யத்தோடு “சீக்கிரம் அவர்கிட்ட கொடு’’ என்றாள்.

இறையுதிர் காடு - 60

அவள் அப்படிச் சொன்ன சமயம் சாந்த ப்ரகாஷ் கையில் மண் சேற்றோடு ``யார் போன்ல?’’ எனக் கேட்க, ``பாரதிம்மா’’ என்று குமரேசனும் கூறிட, ``ஒரு நிமிஷம்’’ என்று கை கழுவச் சென்றான்.

பாரதியிடம் டென்ஷன்!

ஹாஸ்பிடலில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடியே பேசிக்கொண்டிருந்தவள் எதிரில் ஒரு மிடுக்கான சஃபாரி சூட்காரர் வந்து நின்றார்.

பாரதியும் ஏறிட்டாள்.

``மேடம் நீங்கதானே பாரதி?”

“யெஸ்”

“நான் க்ரைம் பிராஞ்ச் கான்ஸ்டபிள் முத்துகருப்பன் - உங்களுக்கு எஸ்கார்ட்டா சார் அனுப்பியிருக்காரு.”

“ஓகே... கீப் த டிஸ்டன்ஸ். அண்டு டூ யுவர் டியூட்டி.”

“பை த பை... ஒரு பத்தே பத்து நிமிஷம் உங்களை கமிஷனர் ஆபீஸுக்குக் கூட்டிக்கிட்டு வரச்சொன்னார். உங்ககிட்ட நேர்ல பேசணுமாம்.”

“எப்போ?”

“இப்போ... இம்மிடியட்டா!”

- பாரதி தயங்கிட, அந்த கான்ஸ்டபிள் “வாங்க மேடம், என் கார்லயே போயிடலாம். உடனே திரும்பிடலாம்” என்றார்.

கச்சிதமாக சாந்த ப்ரகாஷும் பாரதிக்கு அப்போது இயர்போன் வழி, ``ஹலோ மேடம்’’ என்றிட, அந்த கான்ஸ்டபிளோடு நடந்தபடியே பாரதி பேசத் தொடங்கினாள். கூடவே கான்ஸ்டபிள் இருப்பதால் விலாவரியாகப் பேசத் தயக்கமாக இருந்தது.

“சார், எந்தப் பிரச்னையும் இல்லேதானே?”

“நோ பிராப்ளம். நாங்களும் பொதிகை மலைக்குக் கிளம்பிகிட்டே இருக்கோம். அதுக்கு முந்தி ஒரு காரியம் செய்யணும்னு எங்க தாத்தா சொல்லியிருந்தபடி ஒன்பது மரக்கன்றுகளை நட்டிருக்கோம். அதுவும் இப்பதான்.”

“பொதிகைக்கு இப்போ எதுக்குப் போறீங்க?’’

“இந்தப் பெட்டி இதுல இருக்கற ஐட்டம் எல்லாமே ரொம்பவே மிஸ்டிக்கான விஷயங்களாச்சே. இதை இதுக்குரியவர்கிட்ட சேர்க்கற கடமை இருக்கே எங்களுக்கு?”

“அது யாரு?”

“நான் சொன்னா சிரிப்பீங்க. நானும் சொல்ல விரும்பல. ஆமா, நீங்க எதுக்குக் கூப்பிட்டீங்க?”

“ஆல் த பெஸ்ட் சொல்லத்தான். இந்த ஊர்லயே இருக்காதீங்க. முதல்ல கிளம்புங்க. நீங்க எங்க போறீங்கன்னும் யாருக்கும் தெரிய வேண்டாம். செல்போனை தயவுசெய்து ஸ்விட்ச் ஆஃப் பண்ணிடுங்க. இட் ஈஸ் வெரி சீரியஸ். தயவுசெய்து யாரையும் நம்பாதீங்க. உங்கள நம்புங்க.’’

“நீங்க பேசறதே விசித்திரமா இருக்கு.”

“ப்ளீஸ் முதல்ல புறப்படுங்க. ஆல் த பெஸ்ட்!” - சொன்னபடியே கான்ஸ்டபிளோடு காரில் ஏறினாள். கான்ஸ்டபிள் முகத்தில் மர்மப் புன்னகை!

- தொடரும்