மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இறையுதிர் காடு - 61

இறையுதிர் காடு
பிரீமியம் ஸ்டோரி
News
இறையுதிர் காடு

சற்றுநேரத்தில் பொலபொலவென்று விடிந்தும்விட்டது. சிலர் கண்களில் லேசான தூக்கக் கலக்கம். ஆனால், பலரிடம் பெரும் உற்சாக மனநிலை.

அன்று ஜீவசமாதி இப்படித் தனக்குள்ளே பல தன்மைகள் கொண்டிருக்கிறது. சில ஜீவசமாதிகள் அதிசயங்களுக் கெல்லாம் அதிசயமாகிவிடும். சில மாறுபாடுகளும் உண்டு. உடம்பைப் புதைத்த இடத்துக்கு மேலே ஒரு மரக்கன்றை நட்டுவிடுவார்கள். அந்த மரக்கன்று பூத உடலின் திசுக்களை வேர்வழியே தனக்கு உணவாக்கிக்கொண்டு நிமிர்ந்து வளர்ந்து, அந்தச் சமாதிக்குரிய மனிதன் ஆற்றவேண்டிய கடமைகளையும் காலத்தால் ஆற்றிடும்.

இறையுதிர் காடு - 61

பல வனவாசிகள் தங்கள் சந்ததிகளோடு பல தலைமுறைகள் வாழ விரும்பியும், அவர்களைப் பாதுகாக்கவும் விருட்ச சமாதியில் அமர்வர். அவர்களைப் புதைத்த இடத்தில் தங்களுக்கு இஷ்டமான மரக்கன்றுகளை நட்டு, அதைக் கோயிலாக அவர்களின் சந்ததியினர் வழிபடுவார்கள்.

இந்த வனக் குடும்பர்கள் ஒரு மரக்கிளையை ஒடிப்பதைக்கூடப் பாவமாகக் கருதுவர். தங்கள் குடும்ப மர இலைகளை மிதிப்பதுகூட இவர்கள் வரையில் பாவம். மரநிழலில் பணிவாக இளைப்பாறுவர். பிறக்கும் குழந்தைகளை இதன் நிழலில்விட்டு எடுப்பர். நோய் உபாதை சமயத்தில் மரத்தடியில் சிறு குடிசை போட்டுத் தங்கி விரதமிருப்பர். முப்பாட்டன் ஆசியாலே நோவு நொடி நீங்கும் என்பதெல்லாம் வனக்குடும்பர் வழி வழி நம்பிக்கைகள்.

பொதிகை வனக்காட்டுக்குள் வனக்குடும்பர் இப்படி வளர்த்த மரங்கள் ஆயிரங்களில் உள்ளன. அவற்றிடம் நாம் பேசலாம். அவையும் புலனாற்றல் கொண்ட நம்மைப்போல பரிபாஷையில் பேசிடும். இதெல்லாம் சித்த சுத்யங்கள். சாமான்ய மனிதனுக்கு இதெல்லாமே மாயா விநோதங்கள்.

அந்த அதிகாலை வேளையில் சங்கரதிகம்பரர் நிமித்தம் ஒரு ஜீவசமாதிக்கான முனைப்பின் சமயம், சமாதி குறித்து இப்படிப் பல எண்ண ஓட்டங்கள்.

நடுவே சங்கரதிகம்பரர், போகர் பிரானை வலம்வந்து கையிலொரு ருத்ராட்ச மாலை சகிதம் குழிக்குள் இறங்கி, அதில் ஒரு திட்டு மேல் அமர்ந்திருப்பதுபோல அமரத் தயாரானார். அதற்கேற்ப குழிக்குள் செவ்வகப் பாறை ஒன்றை இறக்கி, அதன்மேல் ஒரு காவித் துணியையும் விரித்து, அதன்மேல் காட்டுப் பூக்களைத் தூவியிருந்த நிலையில், திகம்பரனின் திருமேனியும் குழியில் இறங்கி அமர்ந்துகொண்டது. நவமர் இருதோள்களைப் பற்றி அவர் உள்ளிறங்கிட ஒத்தாசை புரிந்தனர். அப்போது மண் துகள்கள் சற்றே சரிந்து விழுந்தன. ஆலம் விழுதின் வேர்களின் ஓட்டங்கள் அங்கே தட்டுப்பட்டன.

ஓர் அதிசயக் காட்சியைக் காணும் ஆவலோடு, தீப்பந்தத்தை நெருக்கமாய்ப் பிடித்துக்கொண்டு எல்லோரும் அடுத்து நடக்கப்போவதைக் காணத் தயாராயினர். கீழே பாலா வார்த்துச் சென்ற பாலின் ஈரம், திகம்பரர் காலில்பட்டுப் பிசுபிசுத்தது.

பக்கவாட்டில் உள்ள இடத்தில் அவரது கமண்டலம், தண்டம் மற்றும் அவர் வாழ்நாள் முழுக்கத் தரித்திருந்த ருத்ராட்ச மாலைகள் வைக்கப்பட்டன. திகம்பரர் கைகளில் அந்த மணற்கடிகை இருந்தது. அது தன் இறுதித் துளிகளை இழக்க இருந்த நொடி, அண்ணாந்து பார்த்துவிட்டு கையிலிருந்த ருத்ராட்சத்தை உருட்டத் தொடங்கினார்.

போகர் பிரான் பார்வை அந்த உருளும் ருத்ராட்சம் மேலேயே இருந்தது. எல்லாரிடமும் ஒரு மலைபோன்ற கனத்த அமைதி. உள்ளே திகம்பரர், `நமசிவாயம்... நமசிவாயம்... நமசிவாயம்...’ என்று விசும்பும் குரலில் சொல்வதும் கேட்டது. பின் ஒலி தேய்ந்து அடங்க, விரலின் ருத்ராட்ச அசைவும் முற்றுப்பெற்றிட, வெகு தொலைவில் ஒரு சக்கரவாகப்பட்சியின் அலகொலி முத்தாய்ப்புபோல ஒலித்து அடங்கிட, குழிக்குள்ளிருந்து ஒரு தீபச் சுடர்போல, ஒரு சுடரொளி எழும்பி நின்றதோடு, அப்படியே விண்ணோக்கிச் சென்று அனைவர் பார்வையை விட்டு மறைந்தும்போனது.

கண்ணெதிரில் ஓர் ஆத்ம விடுதலையை 12 பேர்கொண்ட ஒரு கூட்டம் கண்டு சிலிர்த்துப் போயிருந்தது. மரணம் என்றாலே துக்கம் என்று யார் சொன்னது? அது ஒரு பேரின்ப நிகழ்வு. ஒரு சித்தன் வரையில் அது அவன் வசம் உள்ள முடிவு.

சிறிது நேரம் கழிந்த நிலையில், குழியின் மேல்பரப்பைப் பலகைபோல வெட்டப்பட்ட பாறைகொண்டு மூடி, மண்ணைக் குழைத்துப் பக்கவாட்டிலும் பூசி, உள்ளே நுண்ணுயிர் புகுந்திடாதபடி செய்த நிலையில், மண்ணைப் பரத்தி, சிறுகற்களால் சமாதிபோல சில அடி உயரத்துக்கு ஸ்தூபி எழுப்பி, அதை நவமரையும் சுற்றச்செய்தார் போகர்.

பின் மான் தோல்பை தங்கத்தை செங்கானிடம் தந்தவர், “இந்த ஜீவசமாதியை நீ உன் காலம் முட்டும் பேணிவருவாய். பின் உன் சந்ததியர் வழிபடட்டும். இந்த மரத்தடியும் இந்தச் சமாதியும், காலத்தால் இப்பகுதி சமநிலை இழக்கும் தருணங்களில் தன் அருள் திறத்தைக் காட்டி சமநிலையை உருவாக்கிடும்” என்றார்.

சற்றுநேரத்தில் பொலபொலவென்று விடிந்தும்விட்டது. சிலர் கண்களில் லேசான தூக்கக் கலக்கம். ஆனால், பலரிடம் பெரும் உற்சாக மனநிலை.

இறையுதிர் காடு
இறையுதிர் காடு

செங்கான் சமாதி ஸ்தூபி மேல் ஒரு அகல்விளக்கை அப்போதே ஏற்றி, அது காற்றில் அணைந்துவிடாதபடி நாற்புறமும் கற்களால் அணைப்பும் கொடுத்தவனாக விழுந்து வணங்கினான். அது அந்த சமாதிக்கான முதல் வணக்கம்.

பின் அங்கிருந்து தண்டபாணி தெய்வ நிமித்தம் உருவாக்கிய சிலை வடிவின் பொருட்டு, எல்லோரும் குகைப்பகுதி நோக்கி நடந்தனர்.

போகர்பிரானின் பொதினிக் கொட்டாரம். வழக்கம்போல இடித்தல், பிழிச்சல், காய்ச்சல் என்று கொட்டார ஊழியர்கள் பாடுகளில் இருந்தனர். கன்னிவாடி அரண்மனையிலிருந்து, சாணியிட்டு மெழுகிய மூங்கில்கூடைகளில் நெற்குவியலும் பழ வகைகளும் தானிய வகைகளும் வந்து இறங்கியிருந்தன.

சேர மலைநாட்டிலிருந்து முண்டுகட்டிய பெண்கள் சிலருடன், மதர்த்த காளை பூட்டிய வண்டிகளில் பலர் வைத்ய நிமித்தம் வந்திருந்தனர். மலைநாட்டு ஆடவர் தங்கள் கூந்தலைத் தோள் புரளத் தொங்கவிடாதபடி உச்சந்தலையில் உருட்டிக் கட்டி, தனித்த அடையாளம் கொண்டு தெரிந்தனர். அவ்வாறு அவர்கள் இருப்பதன் பின்புலத்தில் ஒரு பண்பாடு இருப்பது அவர்களைத் தவிர மற்றவர்கள் அறியமாட்டார்கள்.

மலைநாடு எப்போதும் ஈரப்பதம் மிக்கது. எனவே, பெண் மக்கள் பூமுடி மட்டும் போட்டு, கூந்தலை உலரவிட்டிருப்பர். அதில் அவர்கள் அழகும் தெரியவரும். ஆண் மக்கள் தங்கள் கூந்தலை அடக்கிக் கட்டியிருப்பது என்பது அனைத்தையும் கட்டிச் சிகரமாய் உயர்த்திப் பிடித்துக் காப்பவர் எனும் பொருளில் அமைந்த ஒன்றாகும்.

அவர்களைப் பார்க்கும்போதே அவர்கள் நிலப்பரப்பை நாமும் தெரிந்துகொண்டு விடமுடியும். ஆயுர்வேதிகளான அவர்கள் சித்த வைத்ய நிமித்தம் வருவதென்பது அபூர்வமான ஒன்றும்கூட. சற்றே அவர்களின் வைத்ய முறைகள் போகரிடமும் இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம்.

இதனூடே கையிலொரு கோழிக்கொடி பிடித்த கூட்டத்தவரும் தனியே தென்பட்டனர். அவர்களில் சில பெண்டிர் தங்களின் சிறு கூடையில் கடம்ப மலர்களையும், காந்தள் மலர்களையும் வைத்திருக்க, அவற்றின் மணம் அங்கு பரவியபடி இருந்தது.

புது மணமானோரில் மணப்பெண்ணானவள் கடம்ப மலர் வாசனைக்கு ஆட்பட்டால் உடற்சிலிர்ப்பேற்பட்டு சினைத்தூண்டல் உருவாகிக் கருக்கொள்வர் என்பது ஒரு நம்பிக்கை. இம்மலர்களே குறிஞ்சிக் கடவுளான முருகனுக்கு மிக உகந்ததுமாகும்.

இவ்வேளை பார்த்து அங்கு வந்த கிழார்கள், அக்கூட்டத்தவரை நெருங்கி, அவர்களின் தலைவன்போல கையிலொரு பெரும் தண்டக்கோலுடனும் வேல்கம்புடனும் காட்சி தந்த முத்தப்பன் என்பவருடன் இணக்கமாய்ப் பேசத் தொடங்கினர்.

“முத்தப்பரே... இப்பக்கம் என்ன புதிதாய்... தங்களுக்கும் ஏதும் வாதையோ - போகரின் மருத்துவத்துக்கு ஆட்பட வந்தீரோ?”

வேல் மணிக்கிழார் கேட்ட கேள்வி, முத்தப்பர் என்பவரின் கொக்கு நிற தாடியை நீவிக்கொண்டே அவரைச் சிரிக்கச் செய்தது. உடன்வந்திருந்த சூரவேலன் என்பவர், ``உபாதை காரணமாக வருவோர் இப்படியா கோழிக்கொடியோடு வருவோம்?” என்று திரும்பக் கேட்டார்.

“ஆமல்லவா... கையிலொரு கோழிக்கொடி! பருத்தி ஆடையில் பசலைச் சாற்றை ஒற்றியெடுத்து வரைந்த கோழிவடிவக்கொடி முருக வழிபாடுடையோர் கொண்டாட்டத்தைக் குறித்திடும். தாங்களும் குறிஞ்சித் தெய்வமான முருகனைக் குலக்கடவுளாக வணங்கி வருபவர்கள்தான். அதனாலேயே வேலும் தண்டக்கோலுமாகவும் வந்துள்ளீர். ஒருவேளை ஆவினன் குடிக்குச் சென்று வழிபாடு நிகழ்த்திவிட்டு வருகின்றீரோ?”

அருணாசலக் கிழார் இப்படிக் கேட்கவும், அக்கூட்டத்தில் இருந்த படையப்பன் என்பவன், ``ஆகமொத்தம் நாங்கள் இங்கு வந்தது எதற்கு என்று தங்களால் யூகிக்க இயலவில்லை என்று கூறிடும்” என்று கேட்டான்.

“போகர்பிரானை ஒருவர் காண எதற்கு வருவர்? போகர் சித்த புருஷர்... சித்த தரிசனமே வாத விலக்குக்குதானே?”

“ஏன் வேறு இலக்கு இருக்கக் கூடாதா?”

“என்ன அது?”

“பிரானவர்கள் பாஷாணத்தில் எங்கள் தெய்வத்தைச் செய்யப்போகிறாராமே?”

“ஓ… அவ்விஷயம் உங்கள் வரை பரவிவிட்டதா?”

“நாங்கள் என்ன அந்நிய நாடு நகரங்களிலா இருக்கிறோம்? காடும் கழனியும் அதன் பாடும்தானே எம் கடப்பாடு? இந்திரனால் உருப்பெற்ற எங்களுக்கும், அந்த இந்திரனின் மருமகனான முருகனல்லவா இஷ்ட தெய்வம்?”

“உண்மை… உண்மை… பேருண்மை! இது எனக்கு இவ்வேளை தோன்றவில்லை, மன்னித்துவிடுங்கள். போகர்பிரானின் முருக வார்ப்பால் தங்களுக்கெல்லாம் மகிழ்ச்சிதானே?”

பண்ணாடியின் குறி வழியே கோள்நிலைகளே காரணம் என்றும், குலதெய்வ வழிபாடு இடையூறு நீக்கிடும் என்பதாலும் அதை மேற்கொண்டோம். அதன்பொருட்டு கிருத்திகையில் மேற்கொண்ட விரதத்தை இன்று முடித்தோம். இனி நலமே விளையும்.

“அதிலென்ன சந்தேகம்… ஆயினும் எங்கள் முருகன் பேரழகன் - அமுதன்! முருகு பெயரிலேயே மெல்லின வல்லின இடையின மெய்யோடு, உ எனும் உயிரெழுத்தும் கூடப்பெற்று உயிர்மெய்யாய் விளங்கி, உயிர்களுகெல்லாம் இன்பம் அளிப்பவன். அவனைப் போய் பாஷாணங்களான விஷத்திலா செய்வது?”

“ஓ… உங்களுக்குள் இப்படி ஒரு ஐயரவமோ?”

“ஏன் தங்களுக்கில்லையோ?”

“இல்லை… இல்லவே இல்லை. காரணம், நாங்கள் அதன் காரணத்தை போகர்பிரானிடம் கேட்டுத் தெளிவடைந்தவர்கள்.’’

“நாங்களும் தெளிவுபெறவே அவரைக் காணவந்தோம். வழியில் ஆவினன் குடியில் வழிபாடு நிகழ்த்தி வெறியாட்டமும் நிகழ்த்தி மகிழ்தோம்.’’

“வேலன் வெறியாடலோ... அடடே அதைக் காணக் கண் கோடி வேண்டுமே? என்றால் இம்முறை புயலோடு கூடிய கன மழை உறுதி என்று கூறும்.”

“அதிலென்ன சந்தேகம்? கடந்த ஈராண்டில் நான்குக்கு அரை மணக்கு மழைப்பொழிவு குறைந்ததால் எங்களுக்குள் பலத்த சிந்தனை. எப்பிழை இக்குறைக்குக் காரணம் என்பதில் எங்களிடையே பலத்த தர்க்க வாதங்கள். நீத்தார் சடங்குகளில் நாங்களறிய பெரும்குறை வைக்கவில்லை. மணச் சடங்குகளிலும் மணமுறிவோ மன்றாடல்களோ எங்களுக்குத் தெரிந்து எவரிடமும் இல்லை. மூத்தோரிடமும் அலட்சியங்களில்லை. மாமிச பட்சணங்களைக்கூட நிவேதமாக்கியே செய்தோம். எங்கும் விதிமீறல் இல்லை. தைப் பொங்கலிலும், காளை பொருதலிலும், உழவுத் தொழுகையிலும் நாங்களறிய ஒரு குறைவில்லை.

இறையுதிர் காடு - 61

தளபதி முதல் தலையாரி வரை அவரவர் கடமையை அவரவர் செய்துவரும் நிலையில் கள்வர் பயமும் இல்லை அயல்நாட்டவனின் ஒற்றுவேலைக் குற்றமோ, இல்லை, நிலம் பறிபோய்விடும் அச்சமோ ஏதுமில்லை.

பண்ணாடியின் குறி வழியே கோள்நிலைகளே காரணம் என்றும், குலதெய்வ வழிபாடு இடையூறு நீக்கிடும் என்பதாலும் அதை மேற்கொண்டோம். அதன்பொருட்டு கிருத்திகையில் மேற்கொண்ட விரதத்தை இன்று முடித்தோம். இனி நலமே விளையும் என்று நம்புகிறோம்.”

- முதுமகனாகிய முத்தப்பரின் தெளிவான விளக்கம் கிழார்களை வியப்பிலாழ்த்தியது.

“வானம் பொய்ப்பதன் பின்னே பூமியின் தொடர்புகள் எவ்வாறெல்லாம் இருக்கும் என்பதை, முத்தப்பரே உங்கள் பேச்சு எங்களுக்குப் புரியவைத்து விட்டது. எங்கும் அறம், எதிலும் அறம் என்பதாகவே உங்கள் பேச்சிலிருந்து நாங்கள் பொருள்கொள்கிறோம். அறம் சார்ந்தோர்க்குத் தெய்வமும் விண்ணின்று இறங்கி ஊழியம் செய்யும் என்கிற தர்ம வாக்குப்படி உங்கள் நம்பிக்கைகளும் வீண்போகாது என்று நம்புகிறோம்.”

“சரியாகச் சொன்னீர்… இதன்பொருட்டே எங்கள் மடத்துக்கு அறமடம் என்றே பெயரிட்டுள்ளோம். இந்திரன் எங்கள் தலைவன், முருகன் எங்கள் இறைவன், தர்மம் எங்கள் கொள்கை, உழைப்பு எங்கள் உயிர்மூச்சு. எல்லோரும் இன்புற வாழவேண்டும் என்பதே எங்கள் பொதுவான வழிபாடு. வழிப்பாடும்கூட அதுவே.”

“உச்சம்… உச்சம்… இமய உச்சம்!”

“நன்றி! பாஷாணத்தால் எதற்காக எங்கள் அழகனைச் செய்கிறார் போகர்பிரான். காரணத்தை அறிவோம் என்றீர்களே… கூறுவீர்களா?”

போகர்பிரான் அதன் நிமித்தம் கன்னிவாடி குகைப்பரப்பில் உள்ளார். அவர் அநேகமாய் சில நாழிகைக்குள் இங்கு வரக்கூடும். நீங்கள் அவரிடமே கேளுங்கள். அவரே விளக்கமாய்க் கூறிடுவார்.’’

“அவர் விரும்பினால் வேலெடுத்து காற்சலங்கை கட்டி எங்கள் இளஞ்சிங்கங்கள் வேலன் வெறியாட்டத்தை அவர்முன் ஆடிக்காட்டவும் சித்தமாயுள்ளோம்.”

“அதைக் காண நாங்களும் ஆவலாக உள்ளோம். அவர் வரும்முன் தாங்கள் அடுமனைப் பக்கம் சென்று உணவருந்தி வாருங்கள். வேளை தவறி உணவருந்துவது, பசியோடு ஒருவர் இருப்பது இதெல்லாம் போகர்பிரானுக்குப் பிடிக்காத விஷயங்கள்.”

“நல்ல விதிப்பாடு! ஆயினும் நாங்கள் குருவின் இடத்திலிருக்கும் அவரை வழிபடாமல் உணவுண்ணச் செல்வதை விரும்பவில்லை. அவர் வரும்வரை காத்திருந்து எங்கள் காணிக்கைகளை வழங்கிய பின் அதுகுறித்து சிந்திப்போம்.’’

முத்தப்பர் சொன்ன பதிலில் அக்கூட்டத்தவர் கொள்கையும் அவர்களின் தெளிவும் உறுதியும் மின்னியது. கிழார்கள் மூவருமே அதை எண்ணி நெஞ்சகத்தில் விம்முதல் கொண்டபோது, ஒருவித மூலிகை வாசம் கமழ்ந்திட, தன் கொட்டார குடிசைப்புலத்தின் அரைவட்ட வாசல் வழியே போகர்பிரான் வரத் தொடங்கியிருந்தார்.

அவரைக் கண்ட மலைநாட்டவர் முதல் மள்ளர் வரை சகலரும், போகர் வரவும் வந்திக்கத் தொடங்கினர்.

“கும்பிடுதோம் ஆண்டே! கும்புடு சாமி! வந்தனம் சித்தபிரபு! நமஸ்காரம்…!” இப்படிப் பலவித விளிப்புகள். சிலர் மண்டியிட்டு மண்ணில் நெற்றிபடத் தொழுதனர்.

போகர்பிரான் சகலரையும் ஒரு சுற்று பார்த்துமுடித்தார். பின் உள்சென்று திருவோட்டுக் கப்பரையைக் கொண்டுவந்து அதனுள் கிடக்கும் கொட்டாரத்து மருத்துவ விபூதியை எல்லோருக்கும் நெற்றியில் பூசிவிட்டதோடு, வாயைத் திறக்கச்சொல்லி ஒரு சிட்டிகை தூவி விழுங்கச் சொன்னார்.

இதிலேயே முக்காலே மூணு வீச வாதை ஓடிவிடும். இதெல்லாம் அன்றாடங்கள். பிறகே பேச்சும் இதர செயல்பாடுகளும்.

அந்த அன்றாடச் செயல்பாடு முடியவும், போகரும் பேச ஆரம்பிப்பார். அவ்வேளை எவரும் தாங்கள் வந்த நோக்கத்தைக் கூறத் தேவையேயின்றி சில சமயங்களில் போகரே தன் அஷ்டமா சித்தாற்றலால் அவர்கள் உள்ளக் கிடக்கையைத் தெரிந்துகொண்டு பேசுவார்.

இப்போதும் அதுபோலப் பேசத் தொடங்கினார். “முருகப் பெருமானின் நேயமிகு பக்தர்களே! அழகன் முருகனுக்கு எதற்கு பாஷாணத்தில் வடிவம்? பாஷாணம் என்பதும் படு விஷமாயிற்றே... அவனோ அமுதசுரபி! ஒரு அமுதசுரபி விஷமாவதா என்று கேட்டு கலங்கிப்போய்க் கிடப்பவர்களே! நன்கு கேட்டுக்கொள்ளுங்கள். பாஷாணங்கள் என்பவை விஷமே! அதிலும் மேலெழுந்த வாரியாய் இல்லாத கடுமையான விஷங்களே பாஷாணங்கள்! ஆனால், அவை சரியான விகிதாச்சாரத்தில் கூடிடும்போது அமுதமாகி விடும். இது ஒரு வேதிவினை!

இந்த வேதிவினைச் செயல்பாடு இப்பொதினி சார்ந்த, சேர சோழ பாண்டிய மண்டலத்தையே ஒரு தனித்தன்மை மிக்க நாடாக மட்டுமன்றி, யுத்தம், பூகம்பம், ஊழி என்று எதனாலும் பாதிப்புக்குள்ளாகாத ஒரு நாடாக நிலைக்கச் செய்வதோடு ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு, இது தன்னை வணங்குவோரையும் ஆரோக்யமானவர்களாக்கி நேர்ப்படுத்திட உள்ளது. ஒரு படி மேலேபோய் சொல்கிறேன், சித்தநெறியை இதுவே தாங்கிப்பிடித்து நிற்கும்.

தன்னை அறிய விழைவோர்க்கு என் தண்டபாணி ஞானகுருவாய் விளங்கி, அவர்களின் லலாடத்தை விழிக்கச் செய்வான். அதனாலேயே இச்சைக்குரிய குமரனை பிச்சைக்குரிய ஆண்டியாக ஆக்கி, அறிவுத் தெளிவே பெரும்செல்வம், அடுத்தொரு பிறப்பில்லாமையே நல்வரம் என்கிற இரண்டை நல்குகிறவனாய் உருவம் வடிவம் தத்துவம் என்கிற மூன்றிலும் முயன்றுவருகிறேன்” என்று பதிலைச் சொல்லிடவும், அவர்களிடம் சிலிர்ப்பு!

இன்று காரும் புறப்பட்டது!

சென்னை நகரின் சந்தடி மிகுந்த தெருக்களில் கார் ஒரு அலட்சியமான வேகத்தைக் காட்டவும் பாரதியிடம் சற்று சலனம்.

“எதுக்கு இவ்வளவு வேகம், ஸ்லோவா போலாமே?”

“நோ ப்ராப்ளம். நீங்க பதற்றமில்லாம வாங்க.”

“நோ... நோ... ரூல்ஸை ப்ரீச் பண்ற போலீஸே அதை மீறக்கூடாது.”

பாரதி அப்படிக் கூறவும் வேகம் சற்று மட்டுப்பட்டது. அவளுக்குள் மளுக்கென்று அரவிந்தனிடம் பேசும் ஒரு விருப்பம் துளிர்விடவும், அதன் நிமித்தம் போனை இயக்கியவள் அரவிந்தனையும் பிடித்தாள்.

“நானே பண்ணணும்னு இருந்தேன். நீ பண்ணிட்டே... ஆமா எடிட்டர் சார் பேசினாரா?”

“இல்லையே.”

“நான் இப்ப சோமர்செட் ஹோட்டல்ல இருக்கேன். உனக்குத் தெரியும்தானே?”

“ராஜா அண்ணாமலைபுரத்துல ஒரு ஸ்கூல் பக்கத்துல இருக்கே அங்கேயா?”

“எக்ஸாக்ட்லி!”

“அங்கே எதுக்கு அரவிந்தன்?”

“எல்லாம் காரணமாத்தான். நீயும் உடனே இங்க வந்துடு, எடிட்டரும் வந்துடுவார்.”

“எல்லாருக்கும் பங்களா மாதிரி வீடு இருக்கும்போது காஸ்ட்லியான அந்த ஹோட்டல் எதுக்கு?”

“எல்லாத்தையும் நேர்ல பேசலாம் பாரதி. இந்த செல்போன் இனி நமக்கு வேண்டாம்.”

“என்னாச்சு... எதுக்கு இப்படி ஒரு போக்கு?”

“நேர்ல பேசலாம்னு சொன்னேனே... பைத பை உன் அப்பாகூட நீ இருக்கணும்னு நெருக்கடியெல்லாம் இல்லையே?”

இறையுதிர் காடு
இறையுதிர் காடு

“அவர் இருக்கச் சொன்னாலும் எனக்கு அதுல விருப்பமில்லை. அவர் இப்ப படுத்துக்கிட்டே பல வில்லத்தனமான வேலைகளைச் செய்துகிட்டிருக்கார். அதை முறியடிக்கறதுதான் அரவிந்தன் என் நோக்கம். இந்த விஷயத்துல உங்க உதவி கிடைச்சா சந்தோஷப்படுவேன். அப்புறம் அரவிந்தன் அந்த குமாரசாமி பிரதர் பிடிபட்டும் பிரச்னை தீரலை. அந்த நபர் ஒரு தீவிரவாதக் கும்பல்ல ஒருத்தனாம். யாரோ ஒரு எக்ஸ் அவன் சார்பா எனக்கு போன் பண்ணி திரும்ப மிரட்ட ஆரம்பிச்சுட்டான்!”

“இருக்கறது போதாதுன்னு இது வேறயா. சரி நீ உடனே ஹோட்டலுக்கு வா. ஆமா, கமிஷனருக்கு போன் பண்ணி இதைச் சொன்னியா?”

“நான் சொல்லி அவர் எனக்கொரு எஸ்கார்ட்டயும் போட்டு இப்ப அந்த எஸ்கார்ட் போலீஸோடதான் கமிஷனரைப் பார்க்க போய்க்கிட்டிருக்கேன்.”

“இந்த ஷார்ட் டைம்ல இவ்வளவு விஷயங்களா? ஒரு பி.எம். சி.எம். லெவல்லதான் இப்படி ஒரு வேகம் இருக்கும். எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு பாரதி.”

மறுமுனையில் அரவிந்தன் சொல்லிமுடிக்க பாரதியின் இணைப்பும் கட்டாகியது. டிரைவிங் சீட்டிலிருந்த அந்த கான்ஸ்டபிள் முகத்தில் மட்டும் ஒரு மர்மச் சிரிப்பு!

ஆஸ்பத்திரி.

கணேசபாண்டியன் வாங்கிக் கொண்டு வந்து தந்திருந்த காபியைக் குடித்தபடியே, “எங்கே பாரதி?” என்று கேட்டாள் முத்துலட்சுமி.

“இங்கே வெளியே ரிசப்ஷன்கிட்ட நின்னு பேசிக்கிட்டிருந்தாங்கம்மா. கூப்பிடவா?”

“கூப்பிடு... நானும் கிளம்பறேன். ஆமா, மகேந்திரனை எப்ப டிஸ்சார்ஜ் பண்ணுவாங்கன்னு ஏதாவது தெரியுமா?”

“இனிமேதாம்மா அதைப் பத்தி யோசிக்கணும். சாருக்கும் சுத்தமா இங்க இப்படிப் படுத்திருக்கப் பிடிக்கல. நம்ப வீடுன்னா அந்த சௌகரியமே வேறதானே?”

சொல்லிக்கொண்டே வெளியே சென்ற கணேசபாண்டி, எல்லாப் பக்கமும் பார்வையை விட்டதில் பாரதி எங்கும் இல்லை. எதிரில் யூனிஃபார்மில் மார்பில் மாரிமுத்து என்கிற நேம் பேட்ஜோடு ஒரு போலீஸ்காரர் இடுப்பு பெல்ட்டில் ஒரு கன் பளிச்சென்று தெரிந்திட நடந்துவந்தபடியிருந்தார். கணேசபாண்டிக்கு அவரை நன்கு தெரிந்திருந்தது.

“அடடே வாங்க மாரிமுத்து. என்ன சாரைப் பாக்கவா?”

“சாரைப் பாக்க மட்டுமில்ல... சாரோட டாட்டருக்கு நான்தான் இனி எஸ்கார்ட். எங்கே அவங்க?”

“சரிதான், அந்தத் தீவிரவாதி சமாச்சாரமா?”

“அதேதான். அவங்கதான் அடங்கறவங்களே கிடையாதே.”

“அதுசரி, அதுக்காக இவங்களுக்குமா செக்யூரிட்டி?”

“நியாயமா பார்த்தா உங்களுக்கும் தனியா தரணும். ஆனா சாருக்குத் தரும்போது உங்களுக்கும் சேர்த்துதான் இப்ப புரொடக்‌ஷன் கொடுத்திருக்கோம். அவங்க யாரை வேணா தூக்குவாங்க. தூக்கிட்டு டிமாண்ட் க்ரியேட் பண்ணுவாங்க. அவங்க விஷயத்துல டிபார்ட்மென்ட் வளைஞ்சுகொடுத்ததுதான் அதிகம். அவங்களில் ஒருத்தனைக்கூட இதுவரை புடிச்சு பனிஷ் பண்ண டிபார்ட்மென்ட்டால முடியல. அவங்க அவ்வளவு புத்திசாலித்தனமா செயல்படுவாங்க. ஆமா எங்கே மேடம்?”

“அவங்களத்தான் நானும் தேடிக்கிட்டிருக்கேன். ரொம்ப துடிப்பான பொண்ணு. எல்லாவிதத்துலயும் சாருக்கு நேரெதிரான கேரக்டர். அப்படியே அவங்க அம்மா மாதிரி.”

கணேசபாண்டியும் பதிலோடு அங்கும் இங்குமாக நடந்து பாரதியைத் தேடினார். வெளியே கார் பார்க்கிங் பக்கமாக நடந்தபடியே போனில் பேசுவது வழக்கம் என்பதால், அந்தப் பக்கமாகவும் ஒரு பார்வை.

அப்போது தரையை மாப் போட்டுத் துடைத்தபடியிருந்த ஒரு ஸ்வீப்பர், “சார் அம்மாவைத் தேடறீங்களா?” என்று கேட்டபடியே மாப்பை உதறியதில் சோப்பு வாசத்தோடு சில துளிகள் சிதறி விழுந்தன.

கணேசபாண்டியும் ஆமோதிக்க, “இப்பதான் ஒருத்தரோட கார்ல ஏறிப்போனாங்க” என்றான் அந்த ஸ்வீப்பர்.

“கார்ல ஏறிப்போனாங்களா யாரோடு?”

“அது தெரியல சார். காரு போலீஸ் கார் மாதிரிதான் தெரிஞ்சுச்சு. போலீஸ்னு ஸ்டிக்கர் ஒட்டியிருந்துச்சு.”

ஸ்வீப்பரின் பதில் இருவரையும் சற்று மண்டையை உதறச்செய்தது.

“யாரா இருக்கும். இருங்க போன்ல பிடிச்சுப் பாக்கறேன்” என்று முயன்றால், நாட் ரீச்சபிள் என்கிற வாசகம் காதில் ஒலித்தது.

“உங்க டிபார்ட்மென்ட் ஆளுங்கதான் யாராச்சும் இருக்குமோ... போனும் போகமாட்டேங்குதே?”

கணேசபாண்டி முணுமுணுத்திட அந்த போலீஸ்காரர் சிசிடிவி மானிட்டரைப் பார்த்தபடியே ரிசப்ஷனை நெருங்கி, ``மானிட்டரை இம்மீடியட்டா ரீவைண்ட் பண்ணிப் பாக்கணும்’’ என்றபடி தன் அடையாள அட்டையைக் காட்டினார்.

ரிசப்ஷனிஸ்ட், மானிட்டர் கன்ட்ரோல் ரூம் வளைந்துசெல்லும் மாடிப்படிக்குக் கீழ் இருப்பதைக் காட்ட, ஓடிப்போய் சுறுசுறுப்பாகச் செயல்பட்டதில், பாரதி காரில் ஏறிக்கொண்டு சம்பந்தப்பட்ட நபரோடு செல்வது தெளிவாகத் தெரிந்தது. அந்த நபரும் போலீஸ் இல்லை.

“முந்திட்டானுங்க, திருட்டு நாயுங்க” என்றபடி அந்த மாரிமுத்து கமிஷனருக்குத்தான் அடுத்து போன் செய்யலானார்.

கணேசபாண்டியிடம் உதறல்!

“என்னய்யா?”

“ஒரு பத்து நிமிஷ கேப்ல மேடத்தைக் கடத்திட்டாங்க சார்.”

“எப்படிய்யா?”

“நான் வரப்போறதைத் தெரிஞ்சுக்கிட்டு என்னைப் போலவே ஒருத்தன் வந்து போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டின கார்ல தூக்கிட்டான் சார்.”

“எம்.பி-க்குத் தெரியுமா?”

“இல்ல சார்... எனக்கு விஷயம் தெரியவும் உங்களுக்குச் சொல்லியிருக்கேன்.”

“சரி, நான் புறப்பட்டு வரேன். அதுவரை

எம்.பி-க்குத் தெரியவேண்டாம்.”

கமிஷனர் கூறி முடிக்கும் முன்பு கணேசபாண்டி அங்கிருந்து ராஜாமகேந்திரன் வார்டு நோக்கி ஓடிக்கொண்டிருந்தார்.

“சார் நான் ட்ரை பண்றேன். பி.ஏ கேட்டுட்டு ஓடிட்டான் சார். அவன் சொல்லிட்டா ஒண்ணும் பண்றதுக்கில்ல.”

“சமாளிய்யா... எப்படியும் போன் பண்ணுவாங்க. உள்ள புடிச்சவனை வெளிய விடச் சொல்வாங்க. இவங்களோட இதே கூத்து!”

இறையுதிர் காடு
இறையுதிர் காடு

கமிஷனரின் ஆவேசம், மாரிமுத்துவின் செல்போனில் பீறிட்டு வழிந்தது. அதை அடக்கி பாக்கெட் செய்தபடி வார்டுக்குள் நுழையவும், ``வாங்கய்யா வாங்க... என்னய்யா டிபார்ட்மென்ட் உங்க டிபார்ட்மென்ட். இத்தனை பேர் இருக்கும்போது ஒருத்தன் வந்துருக்கான்னா அவன் எவ்வளவு அழுத்தக்காரனா இருக்கணும்” என்று மகேந்திரனும் வெடித்தார்.

முத்துலட்சுமிக்கு மயக்கமே வந்துவிட்டது. “மகேந்திரா, என்னப்பா இது?” என்ற கேள்வியோடு சாய்ந்தவளை, சில நர்சுகள் வந்து வேறு வார்டு பக்கமாய் அழைத்துச்செல்ல, ராஜா மகேந்திரன் பார்வை, `ஜோதிடர் எங்கே?’ என்று தேடியது.

ஜோதிடரும் அவரை நோக்கி வந்தவராய், ``நான் சொன்னேன்ல... அவங்களுக்கு ஒரு கண்டம் இருக்குன்னு” என்றார்.

“நந்தாஜி, அடுத்து என்ன செய்யறது. அதை முதல்ல சொல்லுங்க. எல்லாத்துக்கும் பிரடிக்‌ஷன் சொல்வீங்களே. இதுக்கும் சொல்லுங்க.”

“ஒரே வழிதான். அந்தப் பெட்டி நம்ம கைக்குக் கிடைக்கணும். அந்த லிங்கத்துக்கு நீங்க பூஜை செய்யணும். அதன்பின் சிக்கல்னு ஒரு சிறு விஷயம்கூட இருக்காது. நான் பத்திரத்துல எழுதித் தரேன்.”

“அதைத்தான் தூக்கிட்டு வரச்சொல்லிட்டேனே. எங்கே பானு?”

“அவளை நான் அதுக்காகத்தான் அனுப்பியிருக்கேன். ஒவ்வொரு விநாடியும் அவ போனைத்தான் எதிர்பார்த்துட்டும் இருக்கேன்.”

“அதான் போலீஸ்ல இருந்து அடியாட்கள் வரை எல்லார் சப்போர்ட்டும் இருக்கே. அந்தப் பங்களாவுக்குப்போய்க் கொண்டுவர இன்னுமா முடியல?”

“இல்ல ஜி... ட்ரை பண்ணிப் பாத்துட்டாங்க. பெட்டிய ஒரு சர்ப்பம் காவல் காக்குதுன்னு சொன்னேன்ல, அதைப் பாத்துட்டு ஓடிவந்துட்டாங்க. வேற ரூட்ல ஒரு பிளான் போட்டுக் கொடுத்திருக்கேன். அது ஒர்க் அவுட் ஆயிட்டா போதும். நமக்கு அப்புறம் எந்தப் பிரச்னையும் இல்லை.”

“இந்த எழுத்தாளர்கிட்ட எல்லாம் போட்டோ ஸ்டேட் காப்பியா இருக்கறதா சொன்னீங்களே அது?”

“அந்த எடிட்டர் நம்பள போலவே அவருக்கும் போலீஸ் புரொடக்‌ஷன் வாங்கிட்டாரு.”

“ஜி… என்ன இது, ஒரு விஷயம்கூட நமக்கு சாதகமா இல்லை. நான் பிழைச்சு எழுந்தும் பிரயோஜனம் இல்லாமப்போயிடுமா?”

“நிச்சயமா இல்ல, நீங்க தைரியமா இருங்க. அந்தப் பெட்டி நமக்குக் கட்டாயம் கிடைக்கும்!”

ஜோதிடர் நந்தாவிடம் ஏதோ ஒரு நம்பிக்கை. கச்சிதமாய் அப்போது பானுவிடமிருந்தும் போன்!

- தொடரும்