மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இறையுதிர் காடு - 62

இறையுதிர் காடு
பிரீமியம் ஸ்டோரி
News
இறையுதிர் காடு

“நான் பொதினியில் ஐயனின் சந்நிதி அருகிலேயே ஜீவசமாதியில் ஆழ்ந்திட உள்ளேன்.”

அன்று போகர் பிரான் முருகப்பெருமானை நவபாஷாணத்தில் செய்வதன் காரணத்தைக் கூறியதிலிருந்து மன்னர் தலைவரான முத்தப்பரிடம் சில கேள்விகள் துளிர்விட்டன.

“குருநாதரே! உரியமுறையில் கலந்தால் பாஷாணங்கள் வேதிவினையால் அமிர்தமாவதை அறிந்தோம். அந்த அமிர்தமே எங்கள் முருகனுக்கு பகையாகிவிடாதா?” என்று கேட்டார் முத்தப்பர்.

“எப்படி?” - போகர் அதிர்ச்சியுடன் திருப்பிக் கேட்டார்.

இறையுதிர் காடு
இறையுதிர் காடு

“அமிர்தம் என்பது சஞ்ஜீவி அல்லவா... நோயில்லா வாழ்வுக்கு சஞ்ஜீவி இருந்தால் போதுமே. நித்ய இளமை, முறுக்கான வாலிபம், அயராத உடல் வலிமை என்று இது மானுடர்களை பலசாலிகளாக ஆக்கிவிடுமல்லவா?”

“அதிலென்ன சந்தேகம்?”

“அப்படியானால் இந்த அமிர்தத்துக்கு ஆசைப்பட்டு முருகனின் திருவுருவை யாராவது களவாட முயன்றால்?”

“ஓ... நீங்கள் அப்படி வருகிறீர்களா... நல்ல கேள்விதான். சிந்திக்க வேண்டியதும்கூட.”

“போகர் பிரானே... இந்தச் சிலையால் சேர சோழ பாண்டிய மண்டலத்துக்கே ஊழியோ, உத்பாதகமோ ஏற்படாது என்றீர். ஊழியும் உத்பாதகமும் இயற்கையின் போக்கில் நடப்பவை. அதை எப்படி இந்த நவபாஷாண முருகனால் கட்டுப்படுத்த முடியும்?” - இடையிட்டு கேள்வி கேட்டார் படையப்பர் என்பவர்.

“முடியும்... எப்படி என்று சுருக்கமாகக் கூறுகிறேன். நீங்கள் எல்லோரும் சித்த புருஷர்களாக இருந்தால் நான் பேசவே தேவையிருக்காது. ஏனென்றால் பஞ்ச பூதங்களையும், காலப் பெருவெளியையும் கசடற அறிந்தவனே சித்தனாவான்.

உங்களை அப்படிச் சொல்ல முடியாது. பசிக்கும் பிணிக்கும் இடையே உறவு பாசம் என்று கூடிவாழும், ஆசாபாசம் மிகுந்த வாழ்வு உங்கள் வாழ்வு.

ஆகையாலே உங்களுக்குப் புரிகிறவிதத்தில் கூறுகிறேன். இந்த பாஷாணச் சிலை உலகின் ஓர் அதிசயம்! இதே பாஷாணத்தில் ஒரு லிங்கம் செய்தாகிவிட்டது. முருகச் சிலை தண்டபாணி யாக ஓரிடத்தில் நின்று அருள் வழங்கும். லிங்கமோ நில்லாது பயணித்து, அன்றாடம் பூஜைகள் கண்டு அருள் வழங்கும். இது நின்று கோயில் கொள்ளப்போவது பொதினிக் குன்றில். இந்தப் பொதினிக் குன்றின் உச்சிமீது செவ்வாய் கிரகத்தின் விசைக் கதிரானது, மேஷம், விருச்சிகம் என்னும் ராசி வீடுகளில் புகுந்து செல்லும்போது படுகிறது. இவ்வேளை சனியின் கதிரும் இணையும் பட்சத்தில், சனி செவ்வாய் சேர்க்கை காரணமாக பூமிச் சுழலில் விசைமாற்றம் ஏற்படும். புயல் உருவாகி பெரு மழை உண்டாகும். இல்லாவிடில் காட்டுத் தீயால் பேரழிவு, அதுவும் இல்லையேல் பூமியில் பிளவு ஏற்படும். பூமியில் இப்படி என்றால், சனி செவ்வாய் சேர்க்கை கூட்டுப் பார்வையுடைய மானுட ஜாதகர் வாழ்வில் பெரும் சண்டை சச்சரவுகள், உடல் உறுப்புகள் பின்னமாதல், உடல் துண்டாகி உயிர்ப் பிரிதல் என்று எது வேண்டுமானாலும் நிகழலாம். குரு பார்வையாலும், நற்கர்ம வினைப் பயன்களாலும் இவ்விளைவுகள் மிகச் சிறிய அளவுக்கும் மாறலாம்.

சுடுகிறது என்பதற்காக தீயின் குணத்தையோ, குளிர்ந்து பனிக்கட்டியாகிவிடுகிறது என்பதற்காக நீரின் குணத்தையோ மாற்ற நாம் யாரும் எண்ணியதில்லை. அதை மாற்ற முயலாமல் நம்மை நாம் மாற்றிக்கொண்டு செயல்பட்டு வருகிறோம். இதுபோன்றதே சனி கிரகத்தின் குணமும், செவ்வாய் கிரகத்தின் குணமும். இவற்றை மாற்றவும் எவராலும் ஏலாது. நாம்தான் நம்மை இவற்றுக்கேற்ப மாற்றிக்கொள்ள வேண்டும். மழை பொழியும் சமயம், தாழங்குடை பிடித்து அதன் நனைவிலிருந்து தப்பிப்பதுபோல, இவற்றின் பாதிப்பிலிருந்து தப்பிக்க என்ன வழி என்று காண வேண்டும்.

மனிதனின் அறிவு இங்கேதான் பகுத்தறி வாகிறது. அந்தப் பகுத்தறிவில் உச்சம் கண்டவர்கள் சித்தர் பெருமக்கள். அவர்களில் ஒருவனான நானும் என் சித்த ஞானத்தைக்கொண்டு இதற்கொரு தீர்வைக் கண்டறிந்தேன். அதுவே இந்த நவபாஷாண முருகன் சிலை.

இது பொதினியின் மீது நிலைகொண்டுவிட்ட நிலையில், செவ்வாய் கிரகக் கதிர்வீச்சையும், சனி கிரகக் கதிர்வீச்சையும் மட்டுப்படுத்தும். அந்தக் கதிர்வீச்சுகளே பாஷாணக் கதிர்வீச்சுடன் கலந்து குணம் மாறிவிடும்.

புறத்தில் இது இப்படிச் செயல்படும் நிலையில், நம் அகத்திலும் இதே வினைப்பாட்டை செய்திடும். பெரும் அழிவுக்குரிய யுத்தம் என்பது ஆட்சி பலமுள்ள ஒருவன் மனதில் தோன்றி, அது லட்சக்கணக்கான பேருடையதாக மாறும். இந்தச் சிலை வழிபாடு தொடரும்பட்சத்தில், அப்படி ஒருவன் தோன்ற மாட்டான். தோன்றினாலும் வலுப்பெற மாட்டான். இதனால் யுத்த பயமில்லாத நிலை தோன்றும். நல்லிணக்க மனோபாவம் தழைக்கும். மழை பொய்க்காது. பெரும் இயற்கைச் சீரழிவும் உருவாகாது.”

போகர் பிரானின் நெடிய விளக்கம் பெரும் வியப்பளித்த அதேவேளை, ``விசித்திரமான இந்தச் சிலையின் மதிப்பறிந்து பிற நாட்டாரோ, கண்டத்தவரோ இதைக் கவர்ந்து சென்றுவிட்டால் என்ன செய்வது?” என்ற கேள்வியை சூரவேலன் என்பவர் கேட்டார்.

``அவ்வாறு நடவாது... நடக்க நான் விட மாட்டேன்’’ என்றார் போகர் பிரான் சற்று தினவாக.

“அப்படியானால் தாங்கள் காவல் இருக்கப்போகிறீர்களா?”

“ஆம்!”

“எவ்வளவு காலத்துக்கு உங்களால் அப்படிக் காவல் காத்திட முடியும். மனித வாழ்வென்பது ஓர் எல்லைக்குட்பட்டதுதானே?”

“மனித வாழ்வுக்குத்தான் எல்லையெல்லாம். சித்தனின் வாழ்வுக்கு வானமே எல்லை.”

“அப்படியானால்?”

“நான் பொதினியில் ஐயனின் சந்நிதி அருகிலேயே ஜீவசமாதியில் ஆழ்ந்திட உள்ளேன்.”

“ஒருபுறம் கோயில், மறுபுறம் சமாதியா... விந்தையாகத் தெரிகிறதே!”

“கோயில்தான். அதேசமயம் அதை, `அருள் வேதிவினைக்கூடம்’ என்றும் கூறலாம். மறுபுறத்து சமாதி, கர்ம விடுதலையாக முடியாத ஒரு மனிதனின் சதைப் பிண்டத்தாலான சமாதியல்ல. அது சித்தனின் சமாதி. சித்தனின் சமாதியும் ஆலயக் கருவறையும் ஒன்று என்பதை மனதில் வையுங்கள்.”

``அப்படியானால் சமாதியில் இருந்தபடியே தாங்கள் ஆலயத்தைக் கண்காணிப்பீர்கள் எனலாமா?’’

“ஆம்! என் சுவேத உடல், அந்த மலையையே காவல் காத்திடும். என் தண்டபாணியோ, தன் மேனியில் படும் நீர், பால், சந்தனம் இளநீர் ஆகியவற்றால் பக்தர்களைக் காத்திடுவான்.”

இறையுதிர் காடு
இறையுதிர் காடு

“அது எப்படி?”

“தண்டபாணிக்கென்றே பூஜா விதிமுறையை வகுத்திட உள்ளேன். எப்போதும் நவபாஷாணச் சேர்க்கை என்பது ஆயிரம் கோடி அணுச் சேர்க்கைகொண்டிருக்கும். அதனில் ஆயிரம் அணுவை அது ஓராண்டில் இழக்கும். அதாவது, அபிஷேகத்தின்போது உணர முடியாத அளவுக்குக் கரைந்து, அபிஷேக திரவங்கள் எதுவாயினும் அதை சஞ்ஜீவினிக்கு இணையான மருத்துவ குணம் உடையதாக்கும். அதைப் பிரசாதமாக உட்கொள்வோர் நலம் பெற்றிடுவர்.”

“இதை எப்படி இவ்வளவு உறுதிபடக் கூறுகிறீர்?”

“பரிசோதனை நிமித்தமாயும், எதிர்காலத்தில் பல நலன்களை விரும்பியும் உருவாக்கியிருக்கும் நவபாஷாண லிங்கம், தன் சக்தியைக் காட்டத் தொடங்கிவிட்டது. அதைவைத்தே கூறுகிறேன்.”

“அந்த லிங்கத்தை நாங்கள் பார்த்தேயில்லை. நாங்கள் பார்க்க இயலுமா?”

“தாராளமாக!”

போகர் பிரான் அங்கிருந்து விலகிச்சென்று பின்னர் திரும்பி வந்தபோது, அவர் கைகளில் அந்த பாஷாண லிங்கம். அதை எல்லோருக்கும் எதிரில் ஒரு மரப்பலகை மேல் கோலமிட்டு, அக்கோலத்தின் மேல்வைத்து, விலகி நின்று இரு கைகளையும் தன் மார்புப்புறம் இறுக்கமாய் கட்டிக்கொண்டார்.

கிழார்கள் முக்கியமாய் அதைக் காணவே வந்திருந்தனர். அவர்கள் ஒருபுறமும், மன்னர்கள் மறுபுறமுமாய் அந்த லிங்க உருவை கூர்மையாகப் பார்த்தனர்.

கரும்பச்சை நிறத்தில், வழுவழுப்பில்லாத ஒரு வகை சொரசொரப்பில் காட்சியளித்த அந்த லிங்கம் கிழார்களை கும்பிடச் செய்தது. அவர்களே கும்பிடவும் மற்றவர்களும் அதைப் பார்த்து கும்பிட்டனர்.

அதைக் கண்ட போகர், ``உங்கள் விதியை இந்த லிங்கம் முன்பு பரிசோதித்துக்கொள்ளலாம்” என்றார்.

“எப்படி?” என்று கேட்டார் முத்தப்பன் என்பவர்.

“முதலில் இந்த லிங்கத்தை வணங்குங்கள். உங்கள் மனக் குகைக்குள் இதைக் கொண்டுசென்று வைத்துவிடுங்கள். பின், இதன் அபிஷேகப் பாலை அருந்துங்கள். உங்கள் வாழ்க்கை இந்த நொடிமுதலே தலைகீழாய் மாறுவதை போகப் போக அறிவீர்கள்.”

“இதனால் எங்களுக்கு இருக்கும் நோய் நொடி நீங்குமா?” என்று கேட்டார் ஒருவர்.

“பிள்ளைப் பேறின்றி தவிக்கிறேன், அப்பேறு வாய்த்திடுமா?” என்றார் இன்னொருவர்.

“எதிர்பாராதவிதமாக விஷப்புகைபட்டு கண்பார்வை போய்விட்டது என் மனைவிக்கு. அவளுக்கு பார்வை திரும்புமா?” என்றார் மூன்றாமவர்.

“நான் விரும்பும் பெண்ணொருத்தி என்னை விரும்பாமல் அலட்சியப்படுத்துகிறாள். அவள் என்னை விரும்புவாளா?” என்றார் நான்காமவர்.

போகர் பிரான் சிரிக்கத் தொடங்கினார். அது மகிழ்ச்சி சிரிப்புபோலவே தெரியவில்லை. நல்ல ஏளனச் சிரிப்பு! அந்தச் சிரிப்பின் பொருள், அங்குள்ள சகலருக்கும் புரிந்தது.

“பிரானே... எதற்கிந்த ஏளனச் சிரிப்பு?”

“சிரிக்காமல் என்ன செய்வது... நான் உங்களைப் பார்த்து சிரிக்கவில்லை. கலி மாயையை எண்ணியே சிரித்தேன். நல்லவேளை என் முன்னோர் செய்த நற்கருமப் பயன்களால் நான் சித்தனாகித் தப்பித்துவிட்டேன். இல்லாவிட்டால், உங்களைப்போலவே நானும் ஒரு குறைப் பாட்டைச் சொல்லி, எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பவனாகியிருப்பேன்.

இதயக் குகைக்குள் இந்த லிங்கத்தை வையுங்கள் வாழ்வு மாறும் என்றேன். ஆனால், இக்குறைகள் நீங்குவதையே வாழ்வாகக் கருதுகிறீர்கள். இது நீங்கினால் இன்னொன்று புதிதாய் முளைக்கும். அதுவும் நீங்கினால், அடுத்து இன்னொன்று முளைக்கும். இப்படி ஏதாவது ஒன்று முளைத்தபடியே இருப்பதுதான் வாழ்வு. ஏற்ற இறக்கமாய் இருப்பது என்பதுதான் வாழ்வின் சரியான வடிவம். உங்கள் கைவிரல்களைப் பாருங்கள்... ஒன்றுக்கொன்று குறைவுபட்டிருக்கும். இப்படி விரல்கள் இருந்தால்தான் நீட்டி மடக்கிக் காரியம் புரிய முடியும். சமநீளம் கொண்டிருந்தால் காரியத்துக்கு ஆகாது. இடையூறாகவும் ஆகியிருக்கும். இது கால் விரல்களுக்கும் பொருந்தும். எனவே, குறையிருப்பின் அதை எண்ணி வருந்தாதீர்கள். அந்தக் குறையால்தான் நிறையின் சுவையே தெரியவருகிறது!”

போகர் பிரானின் விளக்கம் யாருக்கும் பெரிய திருப்தியைத் தரவில்லை. ஒரு சந்நியாசி என்பவன் இப்படித்தான் பேசுவான் என்பதுபோலதான் எல்லோரும் எண்ணினர். அவர்கள் அப்படி நினைப்பது போகருக்குப் புரியாது போகுமா என்ன...

“என் பதிலால் உங்கள் வாய் மட்டுமே அடைபட்டுள்ளது. மனம் அடைபடவில்லை என்பது எனக்கு நன்கு தெரிகிறது. ஆனால், என் உபதேசங்கள் காலத்தால் உங்களைச் சிந்திக்கச் செய்து, உங்களுக்குள் ஒரு தெளிவை உருவாக்கும்.

போகர் பிரான் தன் குடிலுக்குள் சென்று, ஒரு பெரும் ருத்ராட்ச மாலையைக் கொண்டுவந்தார். தன் கொட்டாரப் பணிமனைச் சீடன் ஒருவன் வசம் அதைத் தந்து லிங்கத்துக்கு அணிவிக்கச் சொன்னார்.

திரும்பவும் சொல்கிறேன்... அசைவே வாழ்வு. அப்படி அசைந்தாலே போதும். இட வலமாய்த்தான் அசைய முடியும். ஒருபுறமாய் மட்டுமே அசைவது காலம் மட்டுமே. அதற்கு முன்னோக்கு மட்டுமே. ஆறும்கூட முன்னோக்கி மட்டுமே சென்றிடும். திரும்பிப் பாராது. இதில் இட வலமாய் அசைவு என்பது நமக்கே. இதில் இடதென்பது எதிர்மறை, வலதென்பது நேர்மறை. நேர்மறையின்றி எதிர்மறை கிடையாது. அறிவால் இயங்கும் வரை இரண்டையும் பாகுபடுத்திப் பார்த்தபடிதான் இருப்போம். அறிவின் பழுத்த நிலையான ஞானத்தை அடைந்து விட்டால், பாகுபடுத்திப் பார்க்க மாட்டோம். பயன்பட்ட ஒன்றே குப்பைகூளமாகிறது. ஒரு ஞானி குப்பைகூளங்களை வெறுக்க மாட்டான். அது முன்னம் அளித்த பயனை எண்ணி, அதன்மேல் பரிவே கொள்வான். பரிவோடு குப்பைகூளங்களை அகற்றுவ தற்கும், அது அசுத்தமானது என்று விகாரத்தோடு அகற்றுவ தற்கும் நிறைய வேற்றுமைகள் உள்ளன. பரிவோடு அகற்றும் போது அது தொண்டாகிறது. வெறுப்போடு அகற்றும்போது வெறும் செயலாகிறது. செயல் தொண்டாவதில்தான் பிறப்பை வெற்றிகொள்ளுதல் இருக்கிறது’’ என்று கூறியவர் திரும்பவும் சிரித்தார்.

இம்முறை அது ஏளனச் சிரிப்பல்ல, ஞானச்சிரிப்பு. “அருமை சகாக்களே... நான் இப்போது எவ்வளவு பேசினாலும் அது எத்தனை அரும் கருத்துடையதாயினும், அதை ஒரு சிறு அற்புதம் வென்றுவிடும். மனித வாழ்வும் அற்புதங்களை விரும்புகிற ஒரு வாழ்வே!

எனவே, உங்களுக்கு இப்போது நான் சொல்லப் போகும் பதில் உவப்புடையதாக இருக்கும் என்று நம்புகிறேன். நீங்கள் எதையெல்லாம் குறை என்று என்னிடம் கூறினீர் களோ, அவற்றை இந்த லிங்கம் நீக்கித் தரும். நீங்கள் கேட்டதை எல்லாமும் தந்திடும். போதுமா...” - என்று எல்லோரையும் பார்த்தார்.

அதைக் கேட்ட அனைவர் முகங்களிலும் மகிழ்ச்சி துளிர்க்கத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து போகர் பிரான் தன் குடிலுக்குள் சென்று, ஒரு பெரும் ருத்ராட்ச மாலையைக் கொண்டுவந்தார். தன் கொட்டாரப் பணிமனைச் சீடன் ஒருவன் வசம் அதைத் தந்து லிங்கத்துக்கு அணிவிக்கச் சொன்னார். அதைத் தொடர்ந்து வட்டமாக ஒன்பது பேர் நின்ற நிலையில் பண் இசைக்கத் தொடங்கினர். விங்கத்தை எண்ணி, `வியத்தல், போற்றல், நெகிழ்தல், களித்தல், ஒன்றுதல்’ ஆகிய பஞ்சகிரியைகளும் அப்பண்ணில் வெளிப்பட வேண்டும்.

அப்போது பண் இசைப்போர் லிங்கத்துடன் கலந்தும், லிங்கமானது அவர்களுடன் கலந்தும் பரவசநிலை தோன்றும். இந்த நிலைக்கு இட்டுச்செல்லும் ஒரு செயல்பாடே பண். இது, ஆரம் போல வட்டமாக நிற்பவர்கள் சகலராலும் வரிசையாகப் பாடப்படுவதால் இவர்களைப் `பண்ணாரர்’ என்பார் போகர்.

பண்ணாரர் தங்கள் கடமையை செய்து முடித்த நிலையில் எல்லோரும் சென்று அமர்ந்திட, ஒரு சிறு கல்தொட்டிக்குள் அந்த லிங்கம் வைக்கப்பட்டு, எல்லோரும் அதற்கு பாலாபிஷேகம் செய்யத் தூண்டினார் போகர்.

“செல்லுங்கள்… குவளைப் பாலை லிங்கத்தின் மேல் உங்கள் கையால் விடுங்கள். கரும்பச்சை நிற லிங்கமும் வெண்ணிறமும் கலந்த ஒரு புதிய பிம்பம் உங்களுக்குப் புலனாகட்டும். அக்காட்சி உங்கள் மனத்தளத்திலும் பதிவாகிவிடும். புறத்தில்கூட உங்களால் ஒரு முறையே இது நிகழ்த்தப்பட்டதாக இருக்கும். ஆனால், இதை உங்கள் மனதில் நீங்கள் எண்ணிப் பார்க்கும்போதெல்லாம் இது நிகழ்ந்திடும். புறத்தில் நிகழ்த்தாமல் அகத்துக்குள் நிகழ்த்தவே முடியாது. சொல்லப்போனால் உங்கள் அகத்தில் இது நிகழவே, புறத்தில் நிகழ்த்தப்படுகிறது. `இது கயிலை ஈசனைக் குளிர்விக்கும் முனைப்பு’ எனும் பெயரில் உங்களுக்குள் ஒளிந்திருக்கும் அவனை குளிர்விக்கும் ஓர் உளவியல் நிகழ்வு!”

- போகருடைய இந்த விளக்கத்தை கிழார் பெருமக்கள், தாங்கள் கொண்டுவந்திருந்த பனை ஏட்டில் எழுத்தாணியால் வேகமாகப் பதித்துக் கொண்டனர். தொட்டிக்குள் தேங்கியிருந்த அபிஷேகப் பால் அனைவரும் பருகுவதற்காக எல்லோருக்கும் தொன்னைகள் வழங்கப்பட்டு, பாலும் அதில் வார்க்கப்பட அனைவரும் அதைக் குடித்தனர்.

“அருமை சகாக்களே! நானறிய நீங்களே பாஷாணப் பாலை முதலில் அருந்தியவர்கள் ஆவீர்கள். பால்தான் ஓர் உயிரின் முதல் உணவு. `வெள்ளை ரத்தம்’ என்றும் இதைக் கூறலாம். இச்சையும் பச்சையும் கொச்சையுமாய் உண்டிடும் ஜீரண மூலம் பாலே! இது சக்தியின் அம்சமாதலால், சக்தி எனும் பெண்பாலிடமே இது சுரக்கும்.

இறையுதிர் காடு
இறையுதிர் காடு

பிரம்ம சிருஷ்டியின் மிகத் திருத்தமான ஒரு செயல் இது. இப்பாலுக்குள் ஜோதி வடிவில் இறை மூலம் உள்ளது. இதைக் காய்ச்சினால், தோயச் செய்தால் தயிராகும். உயிர் ஒளிந்திருக்கும் நிலையையே தயிர் என்போம். தயிரைக் கடைந்திட வெண்ணெய் வரும். இந்த வெண் நெய்யை உருக்கிட, வாச நெய் வரும். வாச நெய்யை நெருப்புப் பற்றிட சுடரொளி தோன்றிடும். இச்சுடரொளியே நெய் விளக்கு. நெய் விளக்குச் சுடருக்கும் நம் ஆத்மச் சுடருக்கும் பேதமில்லை.

புறத்தில் இதைச் செய்யச் செய்ய, அகத்தில் ஒளிந்திருக்கும் நம் ஆன்மச் சுடர் ஒரு நாள் தானும் பற்றிக்கொள்ளும். உள்ளம் முழுக்க அதன் ஒளி பரவிடும் சமயம் ஞானம் கிட்டும். அந்த நொடி, ஒரு பேரமைதிக்கு மனமானது ஆட்படும். `நான் யார்...’ என்ற கேள்விக்கும் விடை கிடைத்துவிடும்.

பாலுண்ட இவ்வேளையில் பால் குறித்து நீங்கள் அறிய வேண்டியதைக் கூறினேன். அதிலும் நீங்கள் இப்போது உண்ட பால் மருந்துப் பால். உங்கள் நற்கருமமே இது உங்களுக்கு கிடைக்கக் காரணம். உங்களுக்கெல்லாம் ஆரோக்கியம் இனி உத்தரவாதம். உங்கள் ஆசைகளும் காலத்தால் ஈடேறக் காண்பீர்கள். பதிலுக்கு நீங்கள் செய்ய வேண்டியதும் ஒன்று உள்ளது. அது என்ன தெரியுமா?”

- போகர் இப்படிக் கேட்டவிதமே அலாதியாகத்தான் இருந்தது!

இன்று பானுவின் போன், ஜோதிடர் நந்தாவுக்குள் ஒரு பெரும் பரபரப்பை உருவாக்கிட, “சொல்லு பானு என்ன நடந்தது... பெட்டியை நம் வசப்படுத்திட்டியா... நீலகண்ட தீட்சிதர் அந்தப் பாம்பை அடக்கிட்டாரா?” என்று படபடத்தார்.

யார் அது நீலகண்டதீட்சிதர் என்கிற கேள்விப் பூரான், ராஜா மகேந்திரன் நெற்றியிலும், கணேசபாண்டி முகத்திலும்.

“தீட்சிதர் என்கூட வந்தார் ஜி! நீங்க சொன்ன மாதிரியே கோவிந்தபுரத்துக்குப் போய், தீட்சிதரைப் பார்த்து விஷயத்தைச் சொன்னேன். நான் அவரைப் பார்க்கப் போனப்ப அவர் ஒரு பிராமணர் வீட்டுல புகுந்த நல்லபாம்பை அவரோட சர்ப்ப வஸ்யத்தால பிடிச்சு, அவர் கொண்டுபோயிருந்த பானையில் அடைச்சு கொண்டுவந்திருந்தார். அதை, வர்ற வழியில வள்ளிமலைங்கற மலையடிவாரத்துல என் எதிரிலேயே திறந்துவிட்டார். ஒரு தாய் நாகமும் அது போட்ட குட்டிகளுமா கிட்டதட்ட 12 குட்டிகள். அத்தனையும் மலையடிவாரத்துல விடப்பட்ட நிலையில சரசரன்னு ஓடினதைப் பார்த்து என் உடம்புல ரோமக் காலெல்லாம் சிலிர்த்துப்போச்சு ஜி!”

“விஷயத்துக்கு வா பானு... பிரமாண்டமான பங்களாவுல அந்தச் சித்த நாகத்தைப் பிடிச்சு, பெட்டியையும் அவங்ககிட்டயிருந்து தூக்கிட்டீங்களா?”

“இல்லை ஜி! நாங்க போனப்ப அங்கே யாருமே இல்லை. வேலை செய்துகிட்டிருந்த சிலர்கிட்ட கேட்டப்போ, அவங்க கார்ல வெளிய போயிட்டாங்கன்னு சொன்னாங்க.”

“ஆக, நீ போனதுக்கு எங்கேயோ பிடிச்ச பாம்புகளைப் பார்த்ததுதான் மிச்சம். அப்படித்தானே?”

“ஜி… ஸாரி… ஜி.”

“டோண்ட் சே ஸாரி! உனக்குக் காரியம் ஜெயம் ஆகணும்னுதான் அந்த ரசமணியையும் கொடுத்திருக்கேன். அது இருந்தும் நீ கோட்டை விட்டுட்டே...”

“ஜி, நான் ஒரு விஷயம் உங்ககிட்ட சொல்லலை. அதையும் சொல்லிடறேன். பங்களாவைப் பார்த்துட்டு வரும்போது எங்க கார் மேல ஒரு குடிகாரன் வந்து விழுந்து பெரிய ஆக்ஸிடென்ட். அதுல தீட்சிதருக்கு பலமான காயம். ஆனா, எனக்கு எதுவுமே ஆகலை. தீட்சிதரை ஆஸ்பத்திரில சேர்த்துட்டு இப்போ அங்கிருந்துதான் பேசறேன். ரசமணி மட்டும் இல்லைன்னா நான் சட்னியாகியிருப்பேன்.”

“ ஓ… நோ! நீ வேஸ்ட் பானு. உனக்கு டெல்லி பார்லிமென்ட் ஆபீஸ் வேலையை என்னால இனி வாங்கித் தர முடியாது.”

“ஜி… எனக்கும் அந்த வேலை வேண்டாம். இந்தப் பெட்டி விஷயத்துல ஆரம்பத்திலிருந்தே நான் ஒரு விஷயத்தை கவனிச்சுட்டுதான் வர்றேன். தப்பான எண்ணத்தோட அதை யாராலயும் நெருங்கவே முடியலை. தீட்சிதர்கூட ஆக்ஸிடென்ட்டுக்குப் பிறகு ரொம்ப வருத்தப்படறார். சித்த நாகத்தை நான் பிடிக்க நினைச்சதுக்கு தண்டனைனு ஒரே புலம்பல்.”

“இதையெல்லாம் இப்போ எதுக்கு என்கிட்ட சொல்றே... பயப்படுறியா?”

“ஆமாம் ஜி… விட்ருங்க! பாரதி மேடம் நல்ல காரியம் பண்ணியிருக்காங்க. அதைத் தேடறது நல்லதில்லை.”

‘‘எனக்கே அட்வைஸ் பண்றியா... கீப் கொயட் அண்டு கெட் லாஸ்ட்!”

- கத்திய ஜோதிடர் நந்தா செல்போனை அணைத்தவராக, ராஜா மகேந்திரனின் படுக்கை முன்பு, தாடையைத் தேய்த்தபடியே வந்து நின்றார். ராஜா மகேந்திரனும் பார்வையாலேயே கேட்டார்.

“பானு கவுத்துட்டா… கேட்டா கதை சொல்றா.”

“சரி இப்போ என்ன செய்யலாம்... பாரதியை வேற கடத்தியிருக்காங்க.”

எம்.பி ராஜா மகேந்திரனும் ஜோதிடரும் பேசிக்கொள்வது எஸ்கார்ட்டாக வந்திருக்கும் மாரிமுத்துவுக்குப் புரியவில்லை. கணேச பாண்டிக்கு சமிக்ஞை காட்டி தனியே ஒதுங்கிக் கேட்டார்.

“என்ன நடக்குது இங்கே... யார் இந்த வட நாட்டான்... பார்க்க ஏதோ மாய மந்திரம் பண்ற மாதிரி இருக்கான். பொண்ணு கடத்தப்பட்டதைக்கூட ரெண்டாவதாவெச்சுப் பேசறாங்க.”

“அதெல்லாம் ஒரு கதை. விவரமாச் சொல்ல இது நேரமில்லை.”

“பார்த்துங்க… இந்த மாதிரி ஆளுங்கல்லாம் ரொம்ப ஆபத்தானவங்க. நானும் பார்த் துட்டேன்... இந்தப் பெரிய தலைங்கல்லாம் எப்படித்தான் இப்படிப்பட்ட ஆளுங்ககிட்ட சிக்கறாங்களோ தெரியலை. ஒரு சினிமா ஹீரோகூட இதே மாதிரி ஒரு ஜோசியர்கிட்ட சிக்கி, அவன் சொன்னான்னு அவர் மூத்திரத்தை அவரே குடிச்சுட்டு வந்திருக்காரு. கேட்டா அது ஒரு தெரபியாம்.”

- மாரிமுத்து சொல்லிக் கொண்டிருக்கும் போதே இன்ஸ்பெக்டர் ரேஞ்சிலுள்ள அதிகாரி அங்கு வந்துவிட்டார். நேம்பேட்ஜில் `கலைவாணன்’ என்ற பெயர். வரும்போதே போனில் பேசிக்கொண்டுதான் வந்தார்.

“தெரியும்… நீ போன் பண்ணுவேன்னு நல்லாத் தெரியும்யா. என்ன… பிடிச்சுவெச்சு ருக்கற அந்த ரங்கசாமியை வெளிய விடணுமா?”

“...”

“அது சரி… இதுபோக 50 லட்ச ரூவாயை ரங்கசாமி அண்ணன் குடும்பத்துக்குத் தரணும்... இந்த விஷயம் மீடியாவுக்கும் தெரியக் கூடாதா?”

“...”

“இதெல்லாம் உனக்கே ஓவராத் தெரியல? சத்தியமா மீடியாவுக்குத் தெரியாது. தெரியாமலும் பார்த்துக்கறேன். ஆனா, மத்ததெல்லாம் சாத்தியமே இல்லை. நீங்க தப்புக்கு மேல தப்பு பண்ணிட்டே போறீங்க. உங்க கேங்கை எங்கே பார்த்தாலும் சுடச் சொல்லி உத்தரவுய்யா. அது தெரியுமா உனக்கு?”

“...”

“யோவ்… கொஞ்சம் மரியாதையாப் பேசுய்யா. எப்பவும் நீங்களே ஜெயிச்சுகிட்டிருக்க மாட்டீங்கய்யா. அதைத் தெரிஞ்சுக்க முதல்ல.”

முகம்மது அலின்னு ஒரு ஸ்பெஷல் ஆபீஸர் இருக்கார் சார். ரொம்ப துணிச்சலானவர். சினிமாக்காரங்க கடத்தல் சீனுக்கு அவர்கிட்டதான் ஆலோசனை கேப்பாங்க.

கலைவாணன் பேசுவதிலிருந்தே ராஜா மகேந்திரனுக்கு பாரதியின் நிலை விளங்கிவிட்டது. அப்போது அங்கு ட்ரிப் ஷீட் செக் செய்ய வந்த நர்ஸைப் போகச்சொல்லி, கதவையும் சாத்திவிட்டு வந்து கணேசபாண்டி நிற்க, ராஜா மகேந்திரன் மிகக் கோபமாக கலைவாணனை ஏறிட்டார்.

“வெரி ஸாரி சார். போன்ல அந்த கிட்நாப் பார்ட்டிதான் பேசினான். உங்களால ரொம்ப பாதிக்கப்பட்டுருக்காங்களாம். 50 லட்சம் பணம் தந்து, கேஸை எப்படியாவது க்ளோஸ் பண்ணி, கைது செய்த அந்த குமாரசாமி பிரதரான ரங்கசாமிங்கறவரையும் வெளியவிடச் சொல்லி மிரட்றாங்க.”

“சரி, என்ன செய்யப்போறீங்க?”

“மீடியாவுக்குத் தெரிய வேணாம். தெரிஞ்சா அது நம்ம பாப்பாவுக்குதான் ஆபத்தா முடியும். கழுத்தைத் திருகி, எங்கேயாவது தூக்கிப் போட்டுட்டு போய்கிட்டே இருப்பாங்க சார். ரொம்ப ரொம்ப டேஞ்சரான கேங் சார் அவங்க.”

“இப்போ நான் போய் மீடியாவுக்குப் பேட்டி கொடுக்கப்போறேனா... என்ன டிபார்ட்மென்ட்டுய்யா உன் டிபார்ட்மென்ட். இதுல குடியரசு தினம், சுதந்திர தினத்துல உங்களுக்கு மெடல் வேற... மண்ணாங்கட்டி!”

“சார் கோபப்படறதால எதுவும் ஆகப்போறதில்லை. நான் இப்பவே டாப் லெவல்ல பேசி, நம்ம பாப்பாவை நல்லவிதமா கொண்டுவரப் பார்க்கறேன் சார்.”

“சல்லிப் பைசா தர மாட்டேன். ஆனா, என் பொண்ணு வந்தாகணும். அந்த ரங்கசாமியோ சிங்கசாமியோ அவனும் வெளியே போகக் கூடாது. பேய் வேஷம் போட்டே எங்களில் ரெண்டு பேரைக் கொன்ன கொலைகாரன்யா அவன்.”

இறையுதிர் காடு
இறையுதிர் காடு

“எல்லாம் தெரியும் சார். அதுல எங்க டிபார்ட்மென்ட் போலீஸ் ஆபீஸரும் அடக்கம்கிறது தெரியாம இல்லை சார். நான் இப்பவே போய் டாப் லெவல்ல டிஸ்கஸ் பண்ணிட்டு உங்களுக்கும் ஃபீட்பேக் தர்றேன் சார். அவங்க இப்போதைக்கு மூணு நாள் டைம் கொடுத்திருக்காங்க. இது அவங்களைப் பிடிக்கப் போதுமான காலம் சார். முகம்மது அலின்னு ஒரு ஸ்பெஷல் ஆபீஸர் இருக்கார் சார். ரொம்ப துணிச்சலானவர். சினிமாக்காரங்க கடத்தல் சீனுக்கு அவர் கிட்டதான் ஆலோசனை கேப்பாங்க. அவரை இதுல இறக்கிவிட்டா, மிச்சத்தை அவர் பார்த்துக்குவார் சார். இப்போ நான் புறப்படறேன் சார்.”

- கலைவாணன் புறப்பட, ராஜா மகேந்திரன் நந்தா பக்கம் திரும்பி ``நீங்க என்ன செய்யப்போறீங்க?” என்பதுபோலப் பார்க்க, ``நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வர்றேன் ஜி” என்றபடியே புறப்பட்டார் ஜோசியர்.

கணேச பாண்டி மட்டும்தான் அருகில். யாரும் இல்லாத அந்த நிலையில், ``ஐயா... பேசாம பணத்தைக் கொடுத்துருவோம். இல்லைன்னா ஆபத்துல முடியலாம்யா. நீங்க உசுரு பொழச்சது போதாதுங்களா. இதுவே எவ்வளவு பெரிய விஷயம்...” என்ற கணேச பாண்டியை, எம்.பி முறைத்தவிதமே மிகக் கடுமையாக இருந்தது.

அப்போது எம்.பிக்கும் போன்!

ஹோட்டல்!

அரவிந்தன் அறைக்குள் எடிட்டர் ஜெயராமனோடு, யோகி திவ்யப்ரகாஷும் வந்ததுதான் விந்தை!

“என்ன அரவிந்தன், இவரை நீங்க இப்போ எதிர்பார்க்கலை இல்லை...”

“ஆமாம் சார்… ஹாய் ஜி...”

“இனி இவரும் நம்மகூடதான் இருப்பார். ஆமா, பாரதி வந்துட்டாளா?”

“இல்லை சார்… அங்கே விஷயம் வேற மாதிரி போய்கிட்டிருக்கு. என்னன்னு தெரியலை. பாரதி என்கூட பேசிகிட்டிருக்கும்போதே போன் கட் ஆகிடுச்சு. அப்புறம் நான் எவ்வளவு ட்ரை பண்ணியும் பேச முடியலை.”

- அரவிந்தன் சொல்லும்போதே அவனுக்கு முத்துலட்சுமியிடமிருந்து போன்!

இறையுதிர் காடு - 62

“சொல்லுங்க பாட்டிம்மா...”

“தம்பி, பாரதியைக் கடத்திட்டாங்களாம்!”

“வாட்… யாரு... எப்ப?”

“வேற யாரு… எல்லாம் அந்த நிலத்தை இழந்தவன் தம்பிக் கூட்டம்தான்.”

“ஐயோ… இது போலீஸுக்குத் தெரியுமா?”

“முதல்ல அவங்ககிட்ட பேசிட்டுதான் என் மகன்கிட்ட பேசியிருங்காங்க. இவன் விறைப்பா சல்லிக்காசு தர மாட்டேன்னுட்டான். பொண்ணோட உயிரைவிட இவனுக்கு இவன் வீம்புதான் பெருசாத் தெரியுது. எனக்கு உங்ககிட்ட சொல்லணும்னு தோணிச்சு. சொல்லிட்டேன். ஏதாச்சும் பண்ணுங்க தம்பி. பாரதி என் குலசாமி!

“உங்களுக்கு குலசாமின்னா எனக்கு அவ ஒரு தேவதை பாட்டி. தைரியமா இருங்க. நாங்க பார்த்துக்கிறோம்.”

- அரவிந்தன் போனை முடக்கிவிட்டு நிமிர்ந்த நொடி, ``நாம மூணு பேரும் இப்போ இம்மீடியட்டா போலீஸ் ஹெட் குவாட்டர்ஸுக்குப் போறோம். அங்கே போய் அவங்கள்ல யார்கூடவாவது நான் பேசினாலும் போதும். மற்ற விஷயங்கள் தானா சுலபமாயிடும்’’ என்றார் திவ்யப்ரகாஷ்.

“யூ ஆர் ரைட்… நம்ப அசைன்மென்ட் இப்பவே தொடங்கிடுச்சு. புறப்படுங்க” என்றார் எடிட்டர் ஜெயராமன்.

- தொடரும்.