மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இறையுதிர் காடு - 63

இறையுதிர் காடு
பிரீமியம் ஸ்டோரி
News
இறையுதிர் காடு

ஆண்டுக்கு ஒருமுறை தை அமாவாசையில் இந்த லிங்கத்தைக் கடல் நீராலும் அபிஷேகிக்க வேண்டும்.

அன்று போகர் கேட்டவிதம் மட்டுமல்ல, பார்த்த விதமும் அலாதியாக இருந்தது. எல்லோரிடமும் உன்னிப்பு. அப்போது போகர் பிரானைக் காணவேண்டி மேலும் பலர் வந்திருந்தனர். அவர்களில் சிலருக்குச் சேர நாடு. சிலருக்கோ பாண்டிய நாடு. சிலருக்குச் சோழ நாடு. தொண்டை மண்டலத்திலிருந்தும், ஏன், வடக்கில் காசியில் வசிப்போரும்கூட வந்திருந்தனர்.

இறையுதிர் காடு
இறையுதிர் காடு

ஒரு பெருங்கூட்டம்! போகரே அத்தனை பேரை எதிர்பார்க்கவில்லை என்பது அவர் பார்க்கும் பார்வையில் நன்கு தெரிந்தது.

“வாருங்கள்… எல்லோரும் வாருங்கள்! என்னையும் அறியாமல், `இந்த லிங்கம் முன்னாலே இந்தத் தேசத்து மக்கள் அத்தனை பேரும் உன்னை வணங்கிப் போற்ற வேண்டும் இறைவா’ என்று மிக ஆத்மார்த்தமாய் நினைத்தேன். அந்த நினைப்பு பலித்துவிட்டது. என் பிரார்த்தனை எண்ணம் காற்றில் கலந்து பரவி, உங்களுக்குள் புகுந்து இங்கே உங்களை அழைத்து வந்துவிட்டது. அதுதான் இத்தனை பேர் திரளாக வந்துள்ளீர்கள். மகிழ்ச்சி… மிக்க மகிழ்ச்சி! எல்லோரும் இந்தப் பரம்பொருளை வணங்குங்கள். அந்த வணக்கம் உங்களுக்கெல்லாம் மோட்சமாக மாறட்டும். உங்களில் ஒருவரிடம் நான் இந்த லிங்கத்தை ஒப்படைக்கப் போகிறேன். அது யார் என்று எனக்குத் தெரியாது. உங்களுக்கும்கூடத் தெரியாது. அதை அறிந்தவன் அந்த இறைவன் ஒருவனே!” என்று எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தார் போகர். அவர்கள் முகங்களில் இன்ப அதிர்வு.

‘இந்த அதிசய லிங்கம் தங்களில் ஒருவருக்கா?’ என்று ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். எதனால் இப்படி ஒரு முடிவை போகர் எடுத்தார் என்றும் தங்களுக்குள் கேட்டுக்கொண்டனர்.

போகரோ தொடர்ந்தார். ``மானுட மகா ஜனங்களே! இந்த லிங்கத்தை நான் உருவாக்கிடும்போதே, ஜெகவலபாஷாண லிங்கமாக இருக்க வேண்டும் என்று கருதியே படைத்தேன். இப்படிச் சொல்வதுகூடப் பிழை. என்னைக்கொண்டு இறைவன் தன்னை இப்படிப் படைத்துக்கொண்டான் என்பதே சரியாகும். திருமூலச் சித்தர் என்பவரும் திருமந்திரம் என்று எழுத்து வடிவில் கருத்துப் புதையல் ஒன்றைப் படைத்துள்ளார். அதில் அவர் மானுட வாழ்வு பற்றியும் மானுடப் பிறப்பு பற்றியும் சொல்லாத ஒன்றில்லை.

‘என்னை நன்றாய் இறைவன் படைத்தனன்

தன்னை நன்றாய் தமிழ் செய்யுமாறே!’

என்று அந்தத் திருமந்திரத்துக்கு விளக்கம் அளித்துள்ளார் திருமூலர். அந்த ஈசன் தமிழ்ப் பாடல் வடிவில் தன்னை உலகுக்கு அறிவிக்கச் சொன்னதாக அதற்குப் பொருள். அதேபோல, தமிழில் திருமந்திரம் படைக்கச் சொன்ன இறைவன், பாஷாணத்தில் தன்னையும் தன் மகனையும் படைக்கச் சொன்னான் எனலாம். அல்லது என்னைக்கொண்டு படைத்துக்கொண்டான் எனலாம். மகன் உருவாகி வருகிறான். அப்பன் உருவாகி இதோ உங்களால் அபிஷேகமும் கண்டுவிட்டான். தலைக்கு மேல் கூரையோடு ஓரிடத்தில் இவன் கோயில் கொள்ளப் போவதில்லை. இவன் உங்களில் ஒருவர் இல்லத்தில் இருக்கும்போது உங்கள் இல்லமே இவன் கோயிலாகும். உங்கள் வழிபாடே இவனுக்கான பூசனையாகும். நிதமும் இந்த விங்கம் பூஜை காண வேண்டும். அபிஷேகம் அதில் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும். அபிஷேக பிரசாதத்தை தான் மட்டும் உண்ணாமல் எல்லோருக்கும் வழங்குவதோடு, அதில் ஒரு துளியை ஓடும் நதிப்புனலில் கொண்டுசேர்க்க வேண்டும். நதி வறண்டுவிட்டால் குளம், குளமும் வறண்டுவிட்டால் கிணறு என்று அதை விடாது தொடர வேண்டும்.

ஆண்டுக்கு ஒருமுறை தை அமாவாசையில் இந்த லிங்கத்தைக் கடல் நீராலும் அபிஷேகிக்க வேண்டும். அதேபோல ரத சப்தமி எனும் நாளில் எருக்க இலையால் அர்ச்சித்து, சூரியக் கோலம் வரைந்து அதன்மேல் நிறுத்தி, சூரியனின் கிரணங்கள் இதன்மேல் பட்டு கிரண வழிபாடும் புரிதல் வேண்டும்.

இறையுதிர் காடு
இறையுதிர் காடு

இப்படி இந்தப் பூமி உருண்டையின் சுழற்சியின் போது நிகழ்ந்திடும் பருவகாலத் தொடர்புகளோடும் பஞ்சபூதத் தொடர்புகளோடும் இதை வழிபடும் விதத்தை, நான் மேலும் உபதேசிப்பேன். இந்தப் பூஜைகளை ஆர்ப்பாட்டமின்றி மிகுந்த பக்தியோடும் சிரத்தையோடும் செய்திட வேண்டும். இதையெல்லாம் செய்தால் மட்டும் போதாது. இப்போது நான் சொல்லப் போவதே முக்கியமான செய்தியாகும். இப்படி ஒரு ஜெகவல லிங்க வழிபாட்டில் ஈடுபடுவோர், வனக் கொண்டாட்டமும் புரிய வேண்டும்” என்று சற்று இடைவெளி விட்டு ஒரு பார்வை பார்த்தார்.

வனக்கொண்டாட்டம் என்று அவர் இறுதியாகச் சொன்னதை யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. எல்லோருமே திருதிருவென விழித்தனர்.

“வனக்கொண்டாட்டம் என்று கூறியது புரியவில்லையா?” என்று கேட்கவும், `ஆம்’ என்பதுபோல எல்லோருமே தலையை அசைத்தனர்.

“வனம் எப்போதும் கொண்டாடப்பட வேண்டும். அதையே நான் அப்படிச் சொன்னேன். வனம் என்னும் சொல்லை கவனியுங்கள். அப்படியே வானம் என்னும் சொல்லையும் இவ்வேளையில் கவனியுங்கள். வானமே எல்லையில்லாதது. திசைகளற்றது - அளவிட இயலாதது. அது இருப்பதை உணர, அதில் இருப்பவர் என்று ஒருவர் வேண்டும். அதாவது, நாம் இருக்க வேண்டும். நாம் இந்தப் பூமியில் இருப்பவர்கள். பூமி வானில்தான் சுழன்றபடி உள்ளது. எனவே, பூமியின் மேல் நாமிருந்தாலே வானமும் இருக்கும். நாமில்லாத நிலையில் வானமும் இல்லாதுபோய்விடும்.

வானம் இல்லாமல் இருப்பது... அது தன் கால் மடக்கி பூமிமேல் அமர்ந்தால், அதுவே வனம் என்றாகிறது. அதாவது, வானம் எனும் சொல்லில் உயிரெழுத்தில் `ஆ’ காரம் `வா’ எனும் சப்த ஒலிக்குள் அடங்கிக் கிடக்கிறது. அது உயிரெழுத்தின் இரண்டாம் எழுத்து. அந்த ஆகாரம் `அ’ எனும் முதலெழுத்தாய் அடங்கி ஒலிப்பது, வனம் எனும் சொல்லின் `வ’ எனும் எழுத்துக்குள்ளாகும்.

வானத்து `ஆ’காரம் தன்னை அடக்கிக்கொண்டால், வனத்து `அ’காரமாகிறது. இதை நான் வேறு பொருளில் கூறுவதானால், வானத்து `ஆ’ கார சக்திகளெல்லாம் அடங்கி, நிலத்தில் அமருமிடமே வனமாகும். வனம் வேறு வானம் வேறில்லை. வனம் புலனாவது… வானம் புலனாகாதது.

வனம், விருட்சங்கள் வடிவில் அதனூடே வாழ்ந்திடும் விலங்குகள் வடிவில், அதனூடே விளங்கிடும் அருவிகள், ஓடைகள், நதிகள் வடிவில் புலனாகும் ஒன்றாக உள்ளது. இவை அவ்வளவுமே வானத்தில் நாம் காண இயலாத வடிவில் உள்ள சக்திகளே. இறை சக்தியை யோனிவழி பிறப்பெடுத்த நாம், ஊனக் கண்களால் நேராகக் காண ஏலாது. நாம் மறைவாகக் காணச்செய்த ஏற்பாடே வனமாகும்.

வனத்தின் மிசை காணக் கிடைக்கும் ஒரு சிறு புல்லும்கூட இறைவடிவமே. நாம் உணவின் நிமித்தம் நடமாட வேண்டும். அவற்றுக்கு நடமாடத் தேவையில்லை. அவை நின்ற இடத்தில் இருந்தபடியே காற்றோடு கூடி வினைபுரிந்து மழையைச் சமைத்து தனக்கான உணவாக்கிக்கொள்ளும். அது உண்ட மிச்சமே ஆறாக நிலமிசை நமக்கென ஓடி இறுதியில் கடலில் சென்று கலக்கிறது!”

- போகரின் இக்கூற்று எல்லோரையும் பிரமிக்கச் செய்தது. குறிப்பாக, கிழார்கள் வாய்விட்டே வியக்கத் தொடங்கினர்.

“பிரானே... வனம் மழையைச் சமைக்கிறது எனும் தங்கள் கூற்று அபாரம் அற்புதம்’’ என்றார் வேல்மணிக்கிழார். “அந்தச் சமையலின் மிச்சமே நமக்கான ஆறாகிறது என்பது அரிய கருத்து’’ என்றார் இன்னொரு கிழார்.

“ஆம்… வனமே மழையின் மூலகாரணி. இந்தப் பூமியின் பெரும் பூதம், வனத்தின் ஆசார மூலம்தான் சமுத்திரம். வனம், மழை மூலமாகச் சமுத்திரத் தொடர்போடும் உள்ளது. இது ஓர் அமைப்பு. இது ஒருவித இயற்கை. இப்படி ஓர் இயற்கையைச் செய்த சக்தியாக இதோ இந்த ஈசனே திகழ்கிறான். இவனது இந்தப் பேரறிவை எண்ணிப் பாருங்கள் பேரறிவுடைய இவனே பேரறிவாளனும்கூட. இவனை வியப்பதைத் தவிர நம்மால் என்ன பெரிதாகச் செய்யமுடியும்?” என்று விழிகளில் ஈரம் கசிய நெக்குருகினார் போகர்.

“ஆம்! நம்மால் வியக்க மட்டுமே முடியும்... முடிகிறது’’ என்றனர் கூட்டத்தில் இருந்த சிலரும். அவர்கள் கண்களிலும் கசிவு.

“வியந்தால் மட்டும் போதுமா?” - போகர் திருப்பிக் கேட்டார். அவர் கேட்ட விதமே மேலும் ஏதோ இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்லிற்று. அமைதியாக போகர் பிரானைப் பார்த்தனர். ஓர் அசாத்திய அமைதி அவ்வேளையில் அங்கு உருவாகியிருந்தது. இடையில் `பேரறிவாளன்’ என்று போகர் பிரான் புகழ்ந்திட்ட அந்த பாஷாணலிங்கம். அதன் அரைக்கோள சிர வடிவம் மேல் அபிஷேகப் பால் காய்ந்து, ஒரு மினுமினுப்பு தெரிந்தது.

இறையுதிர் காடு
இறையுதிர் காடு

எல்லோரும் அமைதியாக போகர் பிரானைப் பார்த்தபடியே இருக்க, போகரே தான் எழுப்பிய கேள்விக்குப் பதிலையும் கூறலானார்.

“வியந்தால் போதாது. நம் வியப்பை பக்தியாக்கி, வனத்தை அந்த ஈசனாகக் கருதி வணங்க வேண்டும். அந்த வணக்கத்துக்குரிய செயல்பாட்டையே நான் வனக்கொண்டாட்டம் என்றேன்’’ என்றார்.

அடுத்த நொடியே அதை எப்படிக் கொண்டாடுவது என்கிற கேள்வி எல்லோர் முகங்களிலும். போகரும் விடாது தொடர்ந்தார்.

“வனமே நமக்கான வானம்! நம்மைக் காப்பதும் வனமே. நம்மைக் காப்பதே அதன் பாடு. அதனாலேயே அக்காப்பாடு சுருங்கி, `காடு’ என்று இன்னொரு பெயர்பெற்றது.

இக்காடுகளில் மரங்கள் இலைகளை உதிர்க்கின்றன. அப்படி உதிர்ந்தாலே அடுத்தது துளிர்க்கும். அங்கே துளிர்வதும் உதிர்வதுமே ஓர் இயக்கம். துளிர்ப்பு பிறப்பைக் குறிக்கிறது. உதிர்வது இறப்பைக் குறிக்கிறது. உதிர்பவை உரமாகி திரும்பவும் மரத்தோடு கலந்து, மீண்டும் இலை, கனி, மலர் என்றாகி உதிர்கின்றன. இது அனிச்சையாய் நிகழ்கிறது. என்போன்ற சித்தர்களின் நோக்கில் அக்காடுகளில் உதிர்பவை இலை அல்ல, இறை!’’

இலையல்ல இறை என்று போகர் கூறிய நொடி, கிழார் பெருமக்களிடம் மீண்டும் ஓர் அதிர்வு. போகரும் அந்த அதிர்வை அதிகரிக்கச் செய்வதுபோல, ``எங்கள்வரையில் ஒரு காடென்பது இலையுதிர்காடு மட்டுமல்ல, அது இறையுதிர்காடு” என்று முடித்திட, எல்லோரிடமும் ஒரு பெரும் பிரமிப்பு.

‘இறையுதிர்காடு

இறையுதிர்காடு

இறையுதிர்காடு… ஆஹா என்ன ஒரு சொல் இது? என்ன ஒரு கருத்து இது? ‘இறையுதிர் காட்டை மட்டுப்படுத்தி, `இலையுதிர்காடு’ என்று சாதாரணமாகக் கூறுபவர் களாக அல்லவா நாமெல்லாம் உள்ளோம். இறையுதிர்காடு எனும் சொல்லுக்குள்தான் எவ்வளவு பெரும்பொருள்!’

- எல்லோருமே அந்த இறையுதிர்காடு எனும் சொல்லை அசைபோட்டனர். பிரமிப்பு கண்களில் வழிந்தது.

“மானுட மகாஜனங்களே! நீங்களும் இனி இலைகளை உதிர்க்கின்ற காடுகளை அப்படிக் காணாமல், இறையுதிர்காடுகளாகக் காணுங்கள். அந்தக் காடுகளே நமக்குச் சோறிடுகிறது. நீர் தருகிறது. நம் பிராணக் காற்றைச் சுத்திகரிக்கிறது. நமக்கான நெருப்புக்கு விறகையும் அளிக்கிறது. எனவே, நம்மைக் காத்திடும் பாடுடைய அக்காடே, நமக்கு இந்த உலகில் முதலானது. தட்டையான, நாம் வாழ்ந்திடும் இந்த நிலப்பரப்பு அடுத்ததே. ஆகையால், காட்டை வணங்கக் கற்றுக்கொள்ளுங்கள். காட்டில் வாழும் உயிர்களும் அவன் பிரதிநிதிகளே! எனவே, அவற்றையும் உங்களைப் போலக் கருதிப் போற்றிடுங்கள். அக்காட்டையே தன் கோட்டையாகக் கருதி ஓர் எளிய வாழ்வு வாழ்கிறானே காட்டு மனிதன்... அவன் உண்மையில் காட்டான் அல்ல; அவனே நல்ல நாட்டான்!

அவனே நம் மனிதப் பிறப்பில் மிக மேலானவன். அவன் தவம் செய்யாமல் தவம் செய்பவன். பூஜை செய்யாமல் பூஜை செய்பவன். காடு காத்திடும் ஆசாரங்களுடையவன். தன் இறப்புக்குப் பின் நெடிய காலம் வாழ்ந்திடும் மரமாக விரும்பி, தன்னைப் புதைக்கும் இடத்தின் மேல் மரத்தை நட்டு, அதன் திசுக்களோடு தன்னைக் கரைத்துக்கொண்டுவிடுபவன். அதன்பின் மழையைச் சமைத்துத் தானும் உண்டு, நமக்கும் காலமெல்லாம் தந்தபடியே இருப்பவன். அவனைவிட ஒரு பரோபகாரி இந்த உலகில் இருக்க முடியுமா?”

- போகர் இறுதி வரிகளைப் பலமான குரலில் கேட்டார். கணீரென ஒலித்த அக்குரல், எல்லோருக்குள்ளும் சிந்தனைகளுக்கு நடுவில் ஒரு நெகிழ்வையும் உருவாக்கி யிருந்தது.

காட்டை அச்சமூட்டும் ஓர் இடமாக மட்டுமே கருதிக்கொண்டிருந்த தங்கள் மடமையை நினைத்து அவர்களில் சிலர் வருந்தவும் செய்தனர்.

“இப்படிப்பட்ட காட்டுக்குள் சென்று ஒருவர் செய்யும் சேவையே வனக்கொண்டாட்டமாகும். இந்த லிங்கம் எவர்வசம் சேர்கிறதோ, அவர் இந்த லிங்கத்தின் நிமித்தம் வனத்தைக் கட்டாயம் கொண்டாடியே தீர வேண்டும். அதாவது, வனமிசை சென்று 108 மரங்களை விழுந்து வணங்குதல் முதல், வனமிசை வாழ்ந்துவரும் வனவாசிகளான வனப்பூசாரிகளுக்கு ஆடை அணிகள் தந்து அவர்களில் மூத்தவர் காலில் விழுந்து வணங்குதல் வரை பல செயல்களை உடையதே வனக்கொண்டாட்டம்.

பின் அங்கிருந்து ஒன்பதுக்குக் குறையாத மரக்கன்றுகளைக் கொண்டு வந்து, நகரத்தில் வாழும் தன் மனையைச் சுற்றி அதை நட்டு வளர்த்திட வேண்டும். தன் வாழ்நாளில் எக்காரணம் கொண்டும் பச்சை மரங்களை வெட்டுதல், இலைதழைகளைக் கிள்ளுதல் பிய்த்தல் போன்ற ஈனச் செயல்களைச் செய்திடவே கூடாது!” - கட்டளைக் குரலில் கூறிய போகர்...

“அப்படி நீங்கள் நாளெல்லாம் நடக்கும்போது உங்கள் செயல்பாடு ஒன்றே போதும். இந்தப் பூமியில் ஆயிரமாயிரவர் தெரிந்தும் தெரியாமலும், புரிந்தும் புரியாமலும் செய்திடும் பாவங்களுக்குப் பரிகாரச் செயலாகி, இதன் சமநிலையைக் காப்பாற்றித் தரும். ஒரு தீவினைக்கு இரு நல்வினையே சரியான செயலாகும். இந்தச் செயல்பாட்டில் அவ்வப்போது என்போன்ற சித்தர் பெருமக்களும் பங்கேற்போம். இதைத் தேடி நாங்கள் ஓர் ஆடாகக்கூட வருவோம். மாடாகவும் வருவோம். ஏன், ஓர் ஈ எறும்பு வடிவில்கூட வந்து, எதிர்காலத்தில் இந்த ஜெகவல லிங்க பூசனையை நீங்கள் செய்திடும் சமயம் நாங்கள் பங்கேற்போம்” - என்று போகர் கூறிட, எல்லோருக்குள்ளும் பெரும் ஆவல்!

போகர் தங்களில் யாருக்கு இதைத் தரப்போகிறார்? யார் அந்த அதிர்ஷ்டசாலி? கேட்டதையெல்லாம் தருகின்ற அமுதசுரபி போன்ற இதை அடையப்போகும் ஒருவன், இதன் பொருட்டு எதையும் செய்யலாமே?

நித்ய பூஜையும் வனக் கொண்டாட்டமும் இதன்முன் ஒரு பெரிய விஷயமா என்ன? இப்படி ஆளுக்கு ஆள் தங்களுக்குள் கேள்விகளோடு நின்ற அவ்வேளை, ``இதைப் பெற்றிட விரும்புகின்றவர்கள் ஒரு சத்தியத்தைச் செய்ய வேண்டும். அது என்ன தெரியுமா?” என்று கேட்டு எல்லோரையும் பார்த்தார்.

இன்று க்ரைம் பிராஞ்சில், இன்ஸ்பெக்டர் கலைவாணனின் அறை.

உலக வரைபடம், பூகோள உருண்டை, குற்றத் தகவல்கள் எழுதப்பட்ட பலகை, படிக்கப்படாத தடித்த புத்தகங்கள் என்று எதுவுமே அவர் அறையில் இல்லை. மாறாக, ஒரே ஒரு புத்தர் சிலை மட்டுமிருந்தது. டேபிள் மேல் நடப்பது வல்லரசு காலம் என்பதன் அடையாளமாக, மெல்லிய கரும்பலகைபோல், தன் தொப்பைப் புடைப்பை ஒழித்துக்கட்டிவிட்ட சாம்சங் கம்ப்யூட்டர்.

அதில் எதையோ தேடியபடி கலைவாணன்.

அப்போதுதான் எடிட்டர் ஜெயராமன், அரவிந்தன், திவ்யப்பிரகாஷ் ஜி என்கிற அந்த மூவரும் வணக்கம் சொன்னபடி உள்நுழைந்தனர்.

சார்… அவங்க நிச்சயம் அடிக்கடி போன் பண்ணிப் பேசிட்டு இருப்பாங்க. அதை நான் கேட்டா போதும். அவங்க எங்கிருந்து பேசறாங்கன்னு என்னால ஓரளவு சொல்ல முடியும். மனோயூகரணின்னு ஒரு யோகப் பயிற்சி இருக்கு.

“வாங்க சார்… உங்களுக் காகத்தான் காத்திருகேன். எங்கவரையில் ரொம்ப டென்ஷனான நேரம் இந்த நேரம்” என்றார் கலைவாணன்.

“தெரியும் சார். பாரதியைப் பிடிக்கற முயற்சியில எல்லாரும் ரொம்ப டென்ஷன்ல இருக்கறது நல்லா தெரியுது. நாங்க வந்திருக்கறதும் அது சம்பந்தமாதான்.”

“அப்போ சொல்லுங்க. உங்களால ஒரு சிறு க்ளூ கிடைச்சாலும் அது எங்களுக்குப் பயன்படக்கூடும்.”

“அதுக்கு முன்னாடி சில கேள்விகள்.”

“கேளுங்க...”

“பாரதியைக் கடத்தியிருக்கிற அந்த ரங்கசாமி ஆட்கள், ஓர் இயக்கமா தங்களைக் காட்டிக்கறவங்களா... இல்லே, அண்டர் வேர்ல்டு தாதாக்கள் மாதிரி ரொம்ப க்ரூயலான வங்களா?”

“இதை எதுக்குக் கேட்கறீங்க?”

“இல்ல… உங்க பதிலை வெச்சுதான் சில முடிவுகளை நாங்க எடுக்கணும். அதனால தான்!”

“நீங்க எதுக்கு முடிவெடுக்கணும், அது எங்க கடமையாச்சே?”

“மிஸ்டர் கலைவாணன், இப்போ நீங்க வேற நாங்க வேற இல்லை. நாமெல்லாம் ஒண்ணுதான். இதோ இவர் பேர் திவ்யப்ரகாஷ். இவரை உங்களுக்குத் தெரியலியா?”

“இவர்… இவர்… பார்த்த மாதிரி இருக்கு.”

“பிரபல யோகி திவ்யப்ரகாஷ் ஜி! எவ்வளவு செமினார்ஸ் இவர் கன்டக்ட் பண்ணியிருக்கார் தெரியுமா? உங்க போலீஸ் ஆபீசர்ஸ் அசோசியேஷனுக்கே வந்து, யோகப் பயிற்சிகளைச் சொல்லிக்கொடுத்ததோடு, மனதை ஒருமுகப்படுத்தி சிங்கிள் டாட் கான்சன்ட்ரேஷன்கற விஷயத்தைக் கத்துக் கொடுத்திருக்கார்”

“யெஸ்... யெஸ்… இப்போ இங்கே இவர்கூட எதுக்கு வந்திருக்கீங்க?”

இறையுதிர் காடு - 63

“உங்களுக்கு உதவத்தான்! இவர் இப்போ தன்னைக் கட்டுப்படுத்திக்கிட்டு அமைதியா இருக்கார். உங்களைப் பற்றி இவர் பேசினாலே போதும், மிரண்டுபோயிடுவீங்க.”

“ஈஸ் இட்?”

“ஜி… ஒரு சின்ன டெமோ காட்டுங்களேன்.”

- ஜெயராமன் துண்டிவிட, திவ்யப்ரகாஷும் ஒரு சம்பிரதாய வணக்கத்துடன், ``சார்… அவங்க நிச்சயம் அடிக்கடி போன் பண்ணிப் பேசிட்டு இருப்பாங்க. அதை நான் கேட்டா போதும். அவங்க எங்கிருந்து பேசறாங்கன்னு என்னால ஓரளவு சொல்ல முடியும். மனோயூகரணின்னு ஒரு யோகப் பயிற்சி இருக்கு. இதுல தேறிட்டா உங்களுக்கும் இது சாத்தியம். அது எப்படின்னு இப்போ சொல்றேன் பாருங்க. நாங்க உள்ளே நுழையறதுக்கு முந்தி இங்கே டி.ஐ.ஜி பெருமாள் சாமிங்கறவர் வந்துட்டுப் போனாரா?”

“யெஸ்!”

“அவர் சட்டையில் கரை இருந்து அதை நீங்க நோட் பண்ணிக்கிட்டே அவர்கூட பேசினீங்களா?”

- திவ்யப்ரகாஷ்ஜியின் கேள்வி, கலைவாணனை சீட்டை விட்டு எழுந்து நிற்கச் செய்தது. கண்களில் திகைப்போடு வெறிக்கவும் செய்தது.

“என்ன சார்… ஜி சொன்னபடி நடந்துச்சா?”

- ஜெயராமன் இடையிட்டு நிமிண்டிட, அரவிந்தன் மௌனமாய் கவனித்தபடி இருக்க...

“யெஸ்… எப்படி இப்படி பக்கத்திலிருந்து பார்த்த மாதிரி சொல்றீங்க?” - கலைவாணன் காற்றுக் குரலுக்கு மாறியவராய்க் கேட்டார்.

“சார்… அதுக்குப் பேர்தான் மதியூகரணி” என்றார் ஜெயராமன்.

“ரியலி ஒண்டர்ஃபுல்… நிஜமா இது யோகா சம்பந்தப்பட்டதுதானா?”

“வேண்டாம்… நீங்க நம்பாமல் பேசப் பேச உங்களுக்குத்தான் அது ஆபத்து. அப்புறம் இவர் ரொம்ப டீப்பா உங்களுக்குள்ளே நுழைவார். உங்க ரகசியங்களையெல்லாம் சொல்லிட்டுவார்.”

- ஜெயராமன் அப்படிச் சொன்ன மறுநொடி கலைவாணன் கழுத்தில் வியர்வை துளித்தது. அடர்வான மௌனம். உதட்டில் `மிராக்கிள்’ என்கிற முணுமுணுப்பு!

“ஆமாம்… மிராக்கிள்தான். அதான் இவரோடு வந்திருக்கோம். அடுத்த போன் அவங்ககிட்ட இருந்து எப்போ வரும்னு தெரியுமா?”

“எனி டைம்! அவங்களோடு மோத வேண்டாம். அவங்க போக்குக்கே போய் பாரதியை மீட்கச் சொல்லிட்டாங்க எங்க டிபார்ட்மென்ட்ல...”

“யு மீன் அவங்க கேட்ட பணத்தைக் கொடுத்தா?”

“ஆமாம்!”

“அப்போ அந்த எம்.பி பணம் கொடுக்க சம்மதிச்சுட்டாரா?”

“அவர் கொடுக்கல… பணத்துக்குப் பதிலா தங்க நகைகள். பாரதியோட பாட்டி, தன் நகைகளை ஒரு பெட்டியில் போட்டுக் கொடுத்துவிட்டிருக்காங்க” என்றபடியே முத்துலட்சுமி கொடுத்திருந்த ஒரு பிரீஃப்கேஸைத் திறந்து காட்டினார். உள்ளே காசுமாலை, வைர நெக்லஸ், வளையல் என்று நகைக்குவியல்!

“அப்போ இதைக் கொடுக்கப்போறீங்களா?”

“வேற வழி?”

“எப்படி சார் இப்படி ஒரு கேள்வியை உங்களால கேட்க முடியுது?”

“வாட் டு யூ மீன்… நாங்க சினிமா ஹீரோ மாதிரி சண்டை போட்டு, ஒரு பக்க வசனமெல்லாம் பேசி, அவங்களைச் சுட்டுக் கொல்லணுமா?”

“…………”

“யதார்த்த வாழ்க்கைல நடக்கமுடியாததை நடத்திப் பார்க்கிறதுதான் சினிமான்னு ஆயிடிச்சு. சினிமால ஹீரோவுக்கு உதவிசெய்ய ஸ்டன்ட் மாஸ்டர்ல இருந்து பல பேர் இருக்காங்க சார். நிஜத்துல நாங்க ரொம்ப பாவப்பட்ட ஜனங்க சார். ஆளுக்குத் தகுந்த மாதிரிதான் போகமுடியும்.”

“அப்போ எப்படிக் குற்றங்கள் குறையும்? குற்றவாளிகளும் பயப்படுவாங்க?”

“சாரி… இது விவாதிக்கிற நேரமில்லேன்னு உங்களுக்கே நல்லா தெரியும்.”

“சரி, அவங்க இருக்கற இடம் தெரிஞ்சா பிடிக்கவாவது செய்வீங்களா?”

“நிச்சயமா! பாரதிக்கு எதுவும் ஆயிடக் கூடாது. அதான் முக்கியம். டெல்லியிலிருந் தெல்லாம் போன் சார்!”

- கலைவாணன் சொல்லி முடிக்கவும், டேபிள் மேலுள்ள லேண்ட்லைனில் போனின் அமட்டல் சப்தம் கேட்டு, உடனே எடுக்கவில்லை கலைவாணன்.

“அநேகமா அந்த குரூப்பா இருக்கலாம்.”

“அப்படி இருந்தா போனை ஜி கிட்ட மட்டும் கொடுங்க. மற்றதை ஜி பார்த்துக்குவார்’’ - ஜெயராமனின் பேச்சு செயலாகியது. ரிஸீவர் திவ்யப்ரகாஷ்ஜி காதுக்கு இடம் மாறியது.

இறையுதிர் காடு - 63

“என்ன சார்… என்ன முடிவெடுத்திருக்கீங்க? பணத்தைத் தர சம்மதிச்சிட்டானா அந்த எம்.பி?” என்று மறுபுறமிருந்து கேள்வி.

“அது… ம்... அவர் சம்மதிச்சிட்டாரு.”

“சந்தோஷம்... இது யார் போன்ல புதுசா?”

“அது நான் கலைவாணன் சாரோட பி.ஏ பேசுறேன்.”

“பார்றா! க்ரைம் பிராஞ்ச்ல இன்ஸ்பெக்டர் போஸ்ட்டுக்கெல்லாம் பி.ஏ இருக்காரா?”

“பி.ஏ மாதிரி… நான்தான் கான்ஸ்டபிள் பேசுறேன்.”

“யாரா வேணா இருந்துட்டுப் போ… பணம் கேட்ருந்தேனே என்னாச்சு?”

“பணமா… பணம் கிடைச்சிடுச்சு. எங்கே கொண்டுவரணும்னு சொன்னீங்கன்னா...”

“அதை ஈவினிங்குக்கு மேல சொல்றோம். நடுவுல ஏதாவது திருட்டு வேலை பார்த்தா, இங்கே பொண்ணை கழுத்தைத் திருகிப் போட்ருவோம்.”

திரிசூலத்துக்கிட்ட இருக்கற திருச்சுரம் சிவன் கோயில் சார்ந்த பகுதிக்குப் போங்க. அங்கே பப்ளிக் டெலிபோன் பூத் எத்தனை இருக்குன்னு பாருங்க. அப்படியே வெத்தல பாக்குக் கடைகளையும் சர்ச் பண்ணுங்க.

- மறுபுறம் பேச்சு கட்டானது. திவ்யப்ராகாஷ்ஜியும் நிமிரிந்து கலைவாணனைப் பார்த்தார். என்ன பேசினான் என்று கேட்கத் தேவையே இல்லாத பேச்சு. திவ்யப்ரகாஷிடமும் தீவிரச் சிந்தனை!

“என்ன சார்… எனி க்ளூ?”

“ஏதோ பப்ளிக் பூத்ல இருந்து பேசியிருக்கான். நாலாபுறமும் மலை தெரியுது. கைல சுருட்டு இருந்து பிடிச்சிக்கிட்டே பேசியிருக்கான். சுருட்டை மொத்தமா ஒரு கடைல ஒரு கிழவிகிட்ட வாங்கியிருக்கான். 100 ரூபா கொடுத்து வாங்கினவன், சில்லறை இல்லைன்னு கிழவி சொல்லவும், அப்புறம் வந்து சுருட்டு வாங்கியே கழிச்சுக்கறதா சொல்லி யிருக்கான்.”

“அவ்வளவுதானா? இன்னும் ஏதாவது தகவல்கள்.”

“இல்ல… இவ்வளவுதான் தோணுது. ஆள் கட்ட குட்டையான ஆள். தலையில பெருசா முடியில்லை. பால்ட்ஹெட்!”

“அப்போ நாலா பக்கம் மலையுள்ள இடத்துக்கு நடுவுல இருக்கிற ஊரிலிருந்து ஒருத்தன், சுருட்டு பிடிச்சிகிட்டே பேசியிருக்கான். அந்த இடத்துல இருக்கிற கடையை ஒரு கிழவி நடத்தறா. ஆம் ஐ கரெக்ட்?”

“கரெக்ட்!”

“நாலு பக்கம் மலைன்னா, சென்னையை இதுல சேர்க்க முடியாதே…”

“ஏன் சேர்க்க முடியாது? திரிசூலம் பல்லாவரத்துக்கு நடுவுல நாலு பக்கமும் மலையும், நடுவுல ஊரும் இருக்கே. திருச்சுரம்ன்னு பேரு. அங்கே ஒரு சிவன் கோயில்கூடப் பிரபலமாச்சே?” என ஜெயராமன் எடுத்துத் தந்ததிட, கலைவாணன் வேகமான, “யெஸ்… யெஸ்...” ஆமோதிப்போடு தன் கைப்பேசி கூகிள் மேப்புக்குள் வேகமாய் நுழைந்து பார்த்து, ``யூ ஆர் ரைட்… யூ ஆர் ரைட்!’’ என்றார் படபடப்பாய்.

அதே வேகத்தில், “இப்பவே ஒரு இரண்டு மணி நேரத்துக்குள்ள இந்தத் தகவலை வெச்சு அந்த டெலிபூத்தை கன்ஃபார்ம் பண்றேன்” என்றவர், சில விநாடிகளில் தன் செல்போன் வழியாக, ``ஏழுமலை, இம்மிடியட்டா திரிசூலத்துக்கிட்ட இருக்கற திருச்சுரம் சிவன் கோயில் சார்ந்த பகுதிக்குப் போங்க. அங்கே பப்ளிக் டெலிபோன் பூத் எத்தனை இருக்குன்னு பாருங்க. அப்படியே வெத்தல பாக்குக் கடைகளையும் சர்ச் பண்ணுங்க. அதுல ஒரு கடையைக் கிழவி ஒருத்தி நடத்தறாளான்னும் தெரியணும்” என்றார். அதே வேகத்தில், ``உங்களுக்கு இதுக்கு நான் அதிகபட்சம் இரண்டு மணி நேரம்தான் தருவேன்” என்று முடித்தார்.

“அப்போ இரண்டு மணி நேரம் நாங்களும் காத்திருக் கோம். எனக்கென்னவோ இந்த க்ளூ ஒர்க் அவுட்டாகி அவங்களை நெருங்க முடியும்னு தோணுது. அவங்க இருக்கற இடம் தெரிஞ்சுட்டா பிடிக்கறதுல நீங்க சுணக்கம் காட்டக்கூடாது’’ என்று ஜெயராமன் கூற, கலைவாணன் முகத்தில் மழுப்பலாய் ஒரு சிரிப்பு.

“சார்… நீங்க சிங்கம் சூர்யாவாக ஒரு நல்ல சான்ஸ்’’ என்றான் அரவிந்தனும் சற்றுக் கிண்டலாய்.

“இது மட்டும் சக்சஸ் ஆகிட்டா, சாரை எங்க டிபார்ட்மென்ட்ல இழுத்துப் போட்ருவோம்” என்று கலைவாணனும் திவ்யப்ரகாஷைப் பார்த்தான்.

அவரோ, ``நாம புறப்படலாம். அந்த இடம்தான் சார்… அங்கே நாம போகவும் விஷயம் கன்ஃபார்ம் ஆகவும் சரியா இருக்கும் பாருங்க’’ என்று எழுந்து நின்றார்.

கலைவாணனிடம் பிரமிப்பு!

குற்றாலம் ரிசார்ட் ஒன்றுக்குள் அந்தக் கார் புகுந்து நிற்கவும், உள்ளிருந்து சாந்தப்ராகாஷும் சாருபாலாவும் இறங்கினர்.

கூதல்காற்று முகத்தில் வாலாட்டிப் புசுபுசுத்தது. தலைமுடி கலைந்து பறந்திட, இழுத்துக் கட்டி ஹேர்பின்னால் அடக்கி முடித்தாள் சாரு. ரிசார்ட்டுக்குள்ளிருந்து சில வேலைக்காரர்கள் ஓடிவந்தனர். டிரைவரும் கார் டிக்கியைத் திறந்தான். உள்ளே இரண்டு பெரிய சூட்கேஸுக்கு நடுவில் அந்தப் பெட்டி!

சுற்றிலும் ஓங்குதாங்கான மரங்கள்... அவை உதிர்த்திருக்கும் சருகுகள்... அதன்மேல் எதையோ பொறுக்கிக்கொண்டு நடமாடும் குரங்குகள்!

அத்தனைக்கும் நடுவில் ஒரு கறுப்பு நிறப் போர்வையைப் போர்த்திக்கொண்டு, கையில் கொம்புடன் ஆட்டுக் கூட்டம் ஒன்றை மேய்த்தபடி இருந்த ஒருவன், கண்களுக்கு மேல் கையைக் கூரையாக்கிக்கொண்டு, பெட்டி காரிலிருந்து இறக்கி ரிசார்ட் கட்டடத்துக்குள் தூக்கிச் செல்லப்படுவதைப் பார்த்தான்.

- தொடரும்