மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இறையுதிர் காடு - 64

இறையுதிர் காடு
பிரீமியம் ஸ்டோரி
News
இறையுதிர் காடு

அருளை மட்டும் பெருவதாயின் ஆசையில் பிழையில்லை

அன்று போகரின் கேள்விக்கு முன்னால் அங்குள்ள ஒவ்வொருவரும் பெரும் விடைப்போடு அவரைப் பார்த்தனர்.

‘அது என்ன சத்தியம்… அதை எதற்குக் கேட்கிறார்? சத்தியம் என்றாலே அது ஒரு பெரும் பூட்டாயிற்றே… சத்தியம் என்கிற பெயரில் எதைப் பூட்டப்போகிறார்?’

- இப்படிச் சிலருக்குள் புழுப்போலக் கேள்விகளும் நெளிந்தன. அவர்களிடையே சில வேதியர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் மட்டும் தனக்குள் ஏற்பட்ட கேள்வியைக் கேட்கவும் செய்தார்.

இறையுதிர் காடு
இறையுதிர் காடு

“போக சித்தரே! வனக்கொண்டாட்டம் என்று இயற்கையைக் காத்திடும் விதமாய்ப் பேசிய தாங்கள், இறுதியில் சத்தியத்தில் வந்து நின்றுவிட்டீர். சத்தியம் என்பதற்கு ஒரு பெரும் கட்டுப்பாடு என்றும் பொருள் உண்டு. அப்படிப் பார்த்தால், தாங்கள் கட்டுப்பாடு ஏதோ விதிக்கப்போகிறீர் என்று தெரிகிறது. சத்தியம் என்று கூறாமல், கட்டுப்பாடு என்று மட்டும் அதைச் சொல்லலாமே?” என்றார்.

போகர் அந்த வேதியரை உற்றுநோக்கினார். பின், அவர் அருகில் சென்றவர் சற்றே புன்னகைத்தவராய், “தாங்கள் எங்கிருந்து வருகிறீர்?” என்று கேட்டார்.

“ஆலவாய் நகரமெனப்படும் மதுரையம்பதியிலிருந்து...”

“அப்படியாயின் சொக்கன் உங்கள் குலதெய்வமோ?”

“சரியாகச் சொன்னீர்?”

“உங்கள் பூர்வீகம்?”

“எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாய் மதுரையே எங்கள் ஜென்ம பூமி. ஆயினும், எங்கள் முன்னோர்கள் காசியம்பதியில் வேதவிற்பன்னர்களாகத் திகழ்ந்தனராம். காசிக்குக் கங்கை நீராட வந்த பாண்டிய மன்னர்களில் ஒருவன், அவர்களை மதுரைக்கு அழைத்துவந்து சில வேள்விகளைப் புரிந்து பயன்பெற்றதாகவும், அதன்பின், அந்த விசுவநாதன் வேறில்லை; இந்தச் சொக்கநாதன் வேறில்லை என அவர்கள் இங்கேயே தங்கிவிட்டனர் என்பர்.”

இறையுதிர் காடு
இறையுதிர் காடு

“என்றால், காசிப் பண்டிதர் என்று கூறிடும்.”

“ஆம்! எங்கள் உறவுகள் காஷ்மீரத்திலும் பண்டிதர்களாய் உள்ளனர். தெற்கே தாணுமாலயம் வரை தொடர்புகளுண்டு!”

“அனைத்தும் வேத நிமித்தம் உருவானது என்று கூறும்.”

“ஆம்! வேத நிமித்தமே… வேதமே எங்கள் வாழ்வு! வேதம் உரைப்பதே முதல் கடமை. உரைத்திடும் நாவு முகத்திலிருப்பதால் முகமெங்கள் அம்சம் என்பர்!”

“நால்வகை வர்ணத்தில் முதல் வர்ணத்தைச் சேர்ந்தவர். அப்படித்தானே?”

“ஆம்!”

“தோளானது வலி மிக்கது… வலி மிக்கதில் தோன்றுவதே வலிமை! வலிமை உடையவனே ஷத்ரியன்… அவனே இரண்டாம் வருணத்தவன். சரிதானே?”

நம்ம உயிரணுக்களோட மூல வடிவம் ஒரு பாம்பு உடம்பாதான் இருக்கு. மரபணுக்களோட சேர்க்கை, காலமாற்றம் இதனால பாம்பு உடல், இப்போ நமக்கு இருக்கிற உடலா விருத்தி அடைஞ்சிருக்கு.

“ஆம்! அமர்ந்து வர்த்தகம் புரிபவன் வாணியன். அவனாலேயே வயிறு நிறையும். ஆகவே, அவனை வயிற்றின் அம்சம் என்பர்!”

“நான்காம் வருணத்தவன் சூத்திரன். இவனது களம் நிலமே! அதை வகைப்படுத்தி, அதில் பாத்திகட்டி, வரப்பை எழுப்பி, வாய்க்காலும் வகுத்து, நீரைப் பாய்ச்சி, களையெடுத்து, கதிர் வளர்ப்பது ஒரு கணக்கு. எனவே இவன் கணக்கன். கணக்கிலேதான் சூத்திரமும் வருகிறது. ஆதலால், இவன் சூத்திரன் என்று உயர்வாக அழைக்கப்படுகிறான். நிலத்தில் நடந்து திரிந்தே இதைச் சாதிக்க இயலும். ஆகையால், கால்களே இவன் அம்சம் என்பர். ஆமல்லவா?”

இறையுதிர் காடு
இறையுதிர் காடு

“மெத்த சரி சித்தரே… மெத்த சரி! உலகில் ஒரு மனிதன் கண்களின்றிக்கூட வாழ்ந்திடலாம். கால்கள் இல்லாது போனால் அவன் நடைப்பிணம்கூட இல்லை கிடைப்பிணம்! எனவே, உறுப்புகளில் கால்களே மேலானது. அதனாலேயே, நம் சமயத்தில் காலில் விழுந்து வணங்கிடும் முறை பின்பற்றப்படுகிறது.

காலே பெரிது என்பதால், காலில் அணிந்திடும் ரட்சைகளும் பெரிதாகி, அவையும் வணக்கத்துக்குரியதாகின்றன. இதன் உச்சமே, ராமனின் பாதரட்சைகள் அயோத்தி சிம்மாசனத்தில் அமர்ந்த சம்பவம். எனவே, கால்களை அம்சமாகக்கொண்ட சூத்திரனே மற்ற மூவருக்கும் ஆதாரமானவன் எனலாம்.”

“இதனாலேயே நான் என்னை நாடிவருபவர் களில் இவர்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றேன். இப்போதும்கூட இந்த லிங்கத்தை முதலில் இவர்களில் ஒருவர் பெற்றிடவே என் மனம் விரும்புகிறது.”

“நல்ல எண்ணம்! ஆனால், சத்தியம் என்கிற அந்தக் கட்டுப்பாடு...”

“அது மிக மிக அவசியமானது. ஏனெனில், இந்த லிங்கம் ஒரு அருட்கடல். இதன் அருள், ஆசையால் அடையத்தக்கதன்று. தியாகத்தால் அடையவேண்டிய ஒன்றாம்.”

இறையுதிர் காடு
இறையுதிர் காடு

“அருளைப்பெற ஆசைப்படக் கூடாதா?”

“அருளை மட்டும் பெருவதாயின் ஆசையில் பிழையில்லை. அருளோடு பொருளையும் இணைத்துக்கொண்டு சிந்திப்பதல்லவா மனித மனம்?”

“அவனிடம் கேட்காமல் வேறு எவனிடம் கேட்பதாம்?”

“முக்தியைக் கேட்க வேண்டியவனிடம் அதை விடுத்து, அழிந்துபடும் பொன் பொருளையா கேட்பது?”

“முதலில் மண்சார்ந்த பொருள். பின், விண்சார்ந்த பொருள் என்று வகைப்படுத்திக் கொண்டால்?”

“முன் ஏர் எவ்வழி… பின் ஏர் அவ்வழி என்பதை அறியாதவரா தாங்கள்? மண்சார்ந்த விருப்பங்கள், விண்சார்ந்த விருப்பத்தையே மறைத்துவிடுகிறது என்பதுதானே மனிதப் பிறப்பில் நாம் காலங்காலமாய்க் காண்கிற உண்மை.”

“அப்படியானால் நீங்கள் கேட்டிடும் சத்தியம், தியாகம் சார்ந்ததா?”

“ஆம்! அதில் உங்கள் யாருக்கும் சந்தேகமே வேண்டாம்.”

“அது எப்படிப்பட்ட தியாகம்?”

“சொல்கிறேன்… அதற்குமுன் உங்களில் யாருக்கெல்லாம் இந்த லிங்கத்தை நான் கூறிடும் வண்ணம் பூஜித்து வனக்கொண்டாட்டம் புரிந்திட ஆசை?”

போகர் பிரான் கேட்டிட, கிட்டத்தட்ட அங்கே கூடியிருந்த அத்தனை பேருமே தங்கள் கையை உயர்த்தினர்.

போகர் அத்தனை பேரையும் பார்த்து மகிழ்வோடு சிரித்தார். பின் உவகைபொங்க, “மகிழ்ச்சி… மிக்க மகிழ்ச்சி… தியாகம் செய்ய வேண்டும் என்கிற என் கருத்தைக் கேட்ட நிலையில், அதைச் சுமையாகக் கருதாமல், அத்தனை பேரும் விருப்பம் தெரிவித்துள்ளீர்கள். உங்களில் ஒருவனை அந்த இறைவனே தேர்வுசெய்யட்டும். உங்கள் பெயரைச் சுவடியில் எழுதி, அதைக் கலந்து கலைத்து, பின் ஒரு கட்டாய்க் கட்டிய நிலையில், பாலாவை அழைத்துப் புரிகொண்டு பிரித்திட, எவரது ஏடு காட்சிப்படுகிறதோ, அவரே பன்னிரண்டு ஆண்டுகள் இந்த லிங்கத்தை வைத்து பூஜித்திடும் பேறுபெற்றவர் ஆவார். அந்தப் பன்னிரு வருடங்களும் வனக்கொண்டாட்டமும் அவர் புரிந்தாக வேண்டும். பன்னிரண்டாம் வருட முடிவில் பதின்மூன்றாம் ஆண்டுத் தொடக்கத்தில், அதாவது ஒரு சித்திரைப் பௌர்ணமி நாளில், பொதிகைமலை சித்தன் பொட்டலில் இருக்கும் என் தியானக் குகைக்கு வந்து, அங்கே என் வசம் இந்த லிங்கத்தையும் இதன் அணிகளையும் ஒப்படைத்திட வேண்டும்!” என்று கூறியவராக சகலரையும் ஒரு பார்வை பார்த்தார்.

“எல்லாம் சரி, அந்தத் தியாகம் என்பது எதுகுறித்து என்று கூறவில்லையே…” என ஒருவர் கேட்டிட, “சொல்கிறேன்… சொல்கிறேன்… முன்பே கூறிவிட்டால், உங்கள் எண்ணங்கள் வேறு விதமாகிவிடும். அதனால்தான் கூறவில்லை.”

“அப்படியாயின் இப்போது கூறலாமே!”

“கூறுகிறேன்… இந்த லிங்கத்தை வைத்து பூஜிக்க விரும்புபவர், தன்பொருட்டோ தன் குடும்பம் பொருட்டோ எதையும் இந்த லிங்கத்திடம் கேட்கக் கூடாது. நிர்மலமான மனதுடன் துளியும் பற்றின்றி பூஜிக்க வேண்டும். உயிரே போவதாயினும், அதன் நிமித்தம் எதையும் வேண்டிடக் கூடாது. இதுதான் அந்த நிபந்தனை” - போகரின் நிபந்தனை, எல்லோரிடமும் ஒரு ஆழ்ந்த அமைதியை விளைவித்தது.

“இந்த நிபந்தனையோடு பரந்த இந்த உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும் நலமாக வாழ வேண்டும். அதற்காக, இந்தப் பூஜையை நிகழ்த்த வேண்டும். இவ்விஷயத்தில் அறியாமல் நேரிடும் பிழைகளை இறைவன் மன்னிப்பான். ஆனால், அறிந்தே பிழை செய்தால், அது சாபமாய் மாறி தலைமுறைகளையும் தொடர்ந்திடும். இதையும் மனதில்கொள்ள வேண்டும்.”

- போகர் பிரான் இப்படி அடுத்து சொன்ன சொற்கள், அமைதியாய் இருந்தவர்களிடையே ஓர் அதிர்வையும் கூட்டுவித்தது. அதை உடைத்துக்கொண்டு அருணாசலக்கிழார் மட்டும் பேச விழைந்தார்.

“பிரானே! இவ்வளவு விளக்கமாய்ச் சொல்வதற்கு, துளியும் பற்றில்லாத ஓர் ஆண்டிக்கே இதை நான் தருவேன் என்று தாங்கள் கூறியிருக்கலாம்” என்றார்.

“என் பேச்சு உங்களுக்குள் பல கருத்துகளை உருவாக்கக் கூடும். உருவாக்கட்டும்! கடையப்பட்டாலே சுவையற்ற வெண்ணெய், தயிரை விட்டுப் பிரியும். கஷ்டப்பட்டாலே மனதிலும் பற்றற்ற தன்மை ஏற்பட்டு அதன் தன்மை புரியும்.

ஆகையால், நீங்கள் எல்லோரும் நன்கு சிந்தித்து உங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கவும். அதன்பிறகே அவர்கள் பெயர்கொண்ட ஏடு உருவாக்கப்பட்டு, அந்த ஏடுகள் நான் கூறியது போலக் கலந்து கலைக்கப்பட்டு, சித்தர்களின் இஷ்ட தெய்வமான வாலை என்னும் பாலாவால் தெரிவுசெய்யப்பட்டு, அவர்கள் வசம் ஒப்புவிக்கப்படும்.

லிங்கத்தோடு அதன் அணிகளாய்க் கருதித் தரப்படும் வஸ்துகள் அபாரமானவை! தற்போது, சொர்ண ரகசியமும், ரோக நிவாரணியும், ரசமணிகள் சிலவும் இதன் அணிகளாம். மேலும் சில அணிகள் சேரக்கூடும். காலகாலத்துக்கும் தங்கள் சிந்தையில் உதித்தது வாழ்ந்திட வேண்டும் என்கிற விருப்பம்கொண்டவர்கள், தங்கள் பங்காக மேலும் சிலவற்றைத் தரக்கூடும். அதில் காலப்பலகணியும், யவ்வனகாந்தியும் இனி சேரப்போகின்றன. மேலும் சில சேரலாம். அவை யாதென்று என்னால் இப்போது கூறிட இயலாது.”

- போகர் பிரான், நவபாஷாண லிங்கத்தின் அணிகள் என்று சொன்ன சொர்ண ரகசியம் ரோக நிவாரணி, காலப்பலகணி, யவ்வனகாந்தி என்ற ஏடுகள் பற்றி அப்போது அறிந்தவர்கள் வாயைப் பிளந்ததோடு இதைப் பயன்படுத்துவதா கூடாதா என்கிற கேள்விக்கும் ஆட்பட்டனர்.

“என்ன யோசனை?”

“அபூர்வமான இந்த அணிகள், மானிடர் பயன்படுத்திடத்தானே?”

“ஆமாம்… அதிலென்ன சந்தேகம்?”

“அப்படியானால், அதை பூஜிப்பவர் அதை எப்படிப் பயன்படுத்த முடியும்? துளியும் பற்று கூடாது என்று கூறிவிட்டீர்களே…”

“தனக்கு, தன் குடும்பத்துக்கு என்றுதான் கூறினேன். உலகுக்குப் பயன்படுத்தத் தடையில்லை.”

“அவ்வாறு பயன்படுத்த ஏதேனும் கட்டுப்பாடுகள் உள்ளதா?”

“நிச்சயமாக… அதை நான் லிங்கத்தை ஒப்புவிக்கும் சமயம் கூறுவேன்.”

“மகிழ்ச்சி… ஒரு புதிய பொறுப்பை நீங்கள் உருவாக்கி அளிக்கப்போகிறீர்கள். காலகாலத்துக்கும் இச்செயல் சிந்திக்கப்படும் என்பதில் எங்களுக்கு ஐயமில்லை.”

“அதுவே என் விருப்பம்! இந்த நிகழ்வை நான், தண்டபாணித் தெய்வத்தை உருவாக்கி முடித்து, பொதினி உச்சியில் கோயிலும் எழுப்பிடும் நாளன்று நிகழ்த்த விரும்புகிறேன். ஆகமமாய் பூஜை மகனுக்கு… ஆத்மார்த்தமாய் பூஜை அப்பனுக்கு என்று இந்தப் பூவுலகம் பூஜை காணத் தொடங்கிடும் நாளிலிருந்து, உலகில் ஒரு மாற்றம் நிச்சயம்.”

“தண்டபாணித் தெய்வம் எந்த அளவு உருவாகியுள்ளது?”

“கலவை ஒருபுறம் தயாராகிவருகிறது. உருவம் ஒருபுறம் தயாராகிவருகிறது. என் பயணம் அடுத்து அங்கேதான்!”

“பிரானே! நாங்கள் உங்களோடு கன்னிவாடி குகைப் புலத்துக்கு வந்து சகலத்தையும் கண்டு, `தண்டபாணி வார்ப்பு’ என்று ஒரு நூலாக அதை எழுதிடவா?”

- கார்மேகக்கிழார்தான் இப்படிக் கேட்டார். அடுத்த நொடி போகர் பிரானிடம் ஒரு விதிர்ப்பு.

“ஊஹூம்... கூடாது. கூடவே கூடாது. அந்தத் தவற்றை மட்டும் செய்துவிடாதீர்கள்.”

“அப்படி எழுதுவது தவறா?”

“ஆம்… தவறுதான்! இச்செயல் ஒரு சித்தன் செயல். இதை முழுமையாகப் புரிந்துகொள்ள இன்னொரு சித்தனாலேயே இயலும். சித்தர் அல்லாதோர் இந்த நவபாஷாணக் கலப்பு விகிதாசாரங்களை அறிவது நல்லதற்கல்ல. ஒன்றே ஒன்று என்றிருந்தாலே என்றும் மதிப்பு!”

“அப்படியானால் அந்த முருகத் திருமேனி என்பது ரகசியம் சார்ந்த ஒன்று என்றாகிவிடுகிறதே?”

“ஆம்… ரகசியம் சார்ந்ததே அது. பொதினியே ஒரு ரகசிய சிகரம்தான்! காலத்தால் அங்கே பல ரகசியங்கள் நிலைகொள்ளப்போகின்றன. பலர் சித்தராகப்போகின்றனர். சிலர் பித்தராகவும் போகின்றனர்.”

“பித்தராக என்றால்?”

“இப்போதே எல்லாவற்றையும் என்னால் கூறிட முடியாது. பொதினி பெயர் திரிபுகொள்ளும். பழநி எனப்படலாம். மேலும், குளங்களும் குன்றுகளும் தோன்றும்.”

“தங்களின் வைத்ய முறை இங்கே வளம் பெற்றிடுமா?”

“பெற்றிடும். ஆயினும், கலிபுருஷனுக்குக் கட்டுப்பட்டு விதிப்பாடுடையோர் மட்டுமே பயனுறுவர்.”

“இன்னும் என்னவெல்லாம் நிகழும்?”

“இன்று இவ்வளவு போதும். எல்லோரும் சென்று உணவருந்துங்கள். ஓய்வெடுங்கள். எவர்க்கேனும் நான் நோய்நாடி காண வேண்டுமெனில், அவர்கள் மட்டும் அதோ அந்த அரசமரத்து நிழலுக்குச் சென்று, அமைதியாக சப்பணமிட்டு அமருங்கள். சற்று நேரத்தில் வந்துகாண்கிறேன்” என்ற போகர் பிரான், கல்தொட்டிக்குள் அபிஷேக ஆராதனை கண்டு பூஜிக்கப்பட்டிருந்த அந்தப் பாஷாண லிங்கத்தை எடுத்து, நெஞ்சோடு அணைத்தபடி தன் குடிலுக்குள் புகலானார்.

கிழார்கள் மூவரிடமும் மட்டும் ஒரு பெருமூச்சு!

இன்று ரிசார்ட் கட்டடத்துக்குள் நுழைந்த சாந்தப்ரகாஷும் சாருபாலாவும் மிகுந்த களைப்பில் இருந்தனர். எதிரில் தென்பட்ட சோபாவில் துவண்டது போல விழுந்தனர். அவர்கள் முன்னால் அவர்களின் சூட்கேஸோடு, அந்த மரப்பெட்டியையும் வைத்துவிட்டு வேலைக்காரர்கள் சென்றுவிட, ஒருவன் மட்டும் திரும்பிவந்து மண்டி போட்டு அமர்ந்து, மரப்பெட்டியை மோந்து பார்த்தான்.

அவன் செயல் சாந்தப்ரகாஷை நிரடியது.

“ஏய்... என்ன பண்றே?”

“விபூதி வாசனைங்க… பெட்டி விபூதிமரத்தால செஞ்சதா?”

“அதெல்லாம் தெரியாது. நீ போய் உன் வேலையைப் பார்!”

“இது என்ன வரிசையா ஓட்டைங்க… திருப்புளி சங்கரம்னு விசித்திரமா பேரு?”

“சொன்னா புரியாதா… போய்யா, போய் வேலையைப் பார்!’’ - சாந்தப்ரகாஷ் சற்று சினந்தான். கேள்வி கேட்டவன் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே சென்றான்.

அவன் விலகவுமே சாருபாலா சாந்துவை உரசத் தொடங்கினாள்.

“சாந்து… இந்தப் பெட்டியை முதல்ல யார் கண்லயும் படாதபடி பத்திரமா வைக்கணும். இப்படிப் பாக்கறவங்க கேட்கறதுக்கெல்லாம் பதில் சொல்லிட்டிருக்க முடியாது.”

“ஆமாம் சாரு… நம்ப பங்களாவில இருந்து வாட்ச்மேன் தாத்தாவும் பேசினாரு. நாம கிளம்பி வந்ததுக்குப் பிறகு, நம்மைத் தேடி பலர் வந்துட்டுப் போயிருக்காங்க. அதுல ஒரு போலீஸ் ஆபீஸரும் இருக்காருன்னா எனக்கு ஆச்சர்யமா இருக்கு. இந்தப் பெட்டி பற்றி நம்மைவிட அவங்களுக்கு நிறைய தெரிஞ்சிருக்கு.”

“எல்லாம்தான் டைரில தெளிவா இருக்குதே… அதுலயும் உங்க தாத்தா எழுதினது மட்டுமல்லாம, சர்ப்பமாவும் இருந்து காவல் காத்துட்டு வந்திருக்கார். இப்பகூட அவர் இல்லைன்னா, இந்தப் பெட்டிய நம்மகிட்டேயிருந்து பிடுங்கியிருப்பாங்க. நாம இவ்வளவு தூரம் வந்தே இருக்கமுடியாது.”

“இந்தப் பாம்பு விஷயம்தான் எனக்குப் பெரிய குழப்பமா இருக்கு சாரு. நீ சீக்கிரம் நம்பிட்டே… என்னால முடியல.”

“எது முடியல?”

“என் தாத்தாதான் பாம்பா நடமாடறாங்கன்னு சொல்றே பார்… அதை!”

“அது ஒரு நம்பமுடியாத அதிசயம் சந்து. அதுல என்ன சந்தேகம்?”

“ஒரு மனுஷன் எப்படிப் பாம்பா மாறமுடியும்? அந்தப் பாம்பு என் தாத்தான்னா, அவர் அவராவே வந்து நமக்கு வழிகாட்டியிருக்கலாமே… நீ டைரியைப் படிக்கத் தேவையில்லையே?”

“இந்தக் கேள்விக்கெல்லாம் சரியான பதில் இருக்கு சந்து. நானும் எடுத்த எடுப்புல நம்பிடலை. பாம்புகள் தொடர்பான மித் பற்றி ஒரு கட்டுரை படிச்சேன். ‘நாகா மிஸ்ட்ரி ஆஃப் த எம்பலம்’னு ஒரு சீரிஸையும் பார்த்தேன்.

நம்ம உயிரணுக்களோட மூல வடிவம் ஒரு பாம்பு உடம்பாதான் இருக்கு. மரபணுக்களோட சேர்க்கை, காலமாற்றம் இதனால பாம்பு உடல், இப்போ நமக்கு இருக்கிற உடலா விருத்தி அடைஞ்சிருக்கு. நம்ம மித்தாலஜியில் நாகலோகம்கிற ஒரு தனி உலகமே இருக்கு, அங்கே நாகர்கள்னு ஓர் இனத்தவங்க இருக்காங்க. இவங்க பாம்பாவும் மனுஷனாவும் இரண்டு சரீரத்தோட இருக்காங்க. அது எப்படிங்கறதுதான் மித்தே! இதையெல்லாம் கட்டுக்கதைன்னு தள்ளிவிட முடியல. 1964-ல நாக்பூர்ல ஒரு பெண்ணுக்குப் பாம்பே குழந்தையா பிறந்திருக்கு. மரபணுச் சிதைவோ, கருப்பிழையோ இல்லை. சுகப்பிரசவத்துல அந்தப் பெண் பாம்பைப் பிரசவிச்ச சம்பவம், ஒரு நிகழ்கால அதிசயம்.

ரொம்ப சமீபத்துல, கும்பகோணம் பக்கத்துல தேப்பெருமாநல்லூர்ங்கற ஊரின் சிவன் கோயில்ல, ஒரு நாகப்பாம்பு வில்வமரம் மேல ஏறி, தன் வாயால வில்வ இலையைப் பறிச்சு, சந்நிதிக்குப் போய், வாய்ல கவ்வியிருந்த இலையைத் துப்பி அர்ச்சனை செய்திருக்கு. இது வீடியோவாவும் இருக்கு.”

“இதையெல்லாம் நீ பார்த்தியா?”

“ராத்திரி தூக்கம் வராமப் புரள்றப்ப இதான் எனக்கு வேலையே. ஆனா, நீ நல்லாத் தூங்கிடறே. எனக்கு அதுதான் பெரிய ஆச்சர்யம்.”

- அவர்கள் இருவர் பேச்சின் இடையே பக்கவாட்டில் ஜன்னலை ஒட்டி யாரோ கடந்துபோனதுபோல இருந்தது.

“ஒன் மினிட்’’ என்று சாருவைக் கட்டுப்படுத்திய சாந்தப்ரகாஷ், எழுந்து சென்று ஜன்னலுக்கு வெளியே பார்த்தான். முக்காடு போட்டுக்கொண்டு ஒருவன் கையில் கம்போடு தெரிந்தான். அவனை ஒட்டி ஓர் ஆடும் மேய்ந்துகொண்டிருந்தது.

“ஏய்... யாரது?” - சந்துவின் குரல், அவனை முக்காட்டோடு நகர்ந்து போகச்செய்தது.

“ஏய் கேக்கறேன்ல… யார் அது? இங்க என்ன பண்றே?” என்று கேட்டபடியே மின்னல் வேகத்தில் வெளியே சென்ற சாந்தப்ரகாஷ், அந்த முக்காட்டு மனிதனைப் பிடித்து முகத்தை விலக்கிப் பார்க்கவும், பகீரென்றாகிவிட்டது. அப்படியே கையை உதறிக்கொண்டு பின்னுக்கு வந்தவன், முகத்தில் தாறுமாறாய்க் கலவர ரேகைகள்.

“நான் ஒரு கீதாரிங்க. பார்த்தா பயப்படுவாங் கன்னுதான் முகத்தை மூடிட்டுத் திரியறேன். காட்டுல தேன் எடுக்கப் போகையில கரடி அடிச்சு, கன்னத்தையே பிச்சுத் தின்னுடிச்சுங்க சாமி… அதான்!” - அவன் விளக்கம் அளித்தான்.

“ஐ ஆம் சாரி… நான்தான் தப்பா நினைச்சுட்டேன். அப்போ, நீ இந்த ஊர்க்காரனா?”

“ஆமாம் சாமி… பத்து ஆடுங்க இருக்குது. அதை மேய்ச்சுட்டு ஏதோ பொழப்பு ஓடுதுங்க… நீங்க?”

“சும்மா டூர் வந்திருக்கோம்...”

“தேனு, சந்தனம், ஜாதிக்கா, மாசிக்கா, பருந்து முட்டைல்லாம் கிடைக்கும். வேணுங்களா?”

“அதெல்லாம் இருக்கட்டும். இங்கே சித்தன் பொட்டல்ங்கற இடம் எங்கே இருக்குன்னு தெரியுமா?”

“சித்தன் பொட்டலா?”

“ஏன் அதிர்ச்சியடையறே?”

“ஐயய்யோ... அது ஆபத்தான இடம். சித்தர் சாமிங்க நடமாடற இடம். அவங்க துணையோட மட்டும்தான் போகமுடியும். நாமெல்லாம் போகமுடியாது.”

“அப்போ இப்பவும் சித்தர் சாமிங்க நடமாடறாங்களா?”

“நானே பார்த்திருக்கேனே. கரடி என் கன்னத்த பிச்சுத் தூக்கிப் போட்டப்ப என்னைக் காப்பாத்தி மருந்து கொடுத்ததே ஒரு சித்தர் சாமிதானே?”

“ஃபென்டாஸ்டிக். நாங்க அங்கதான் போகணும். நீ வழிய காட்டுவியா?”

“நீங்கன்னா?” - அவன் கேட்க, சாரு வெளியேவந்து தன் துப்பட்டாவை விரித்துப் போர்த்திக்கொள்ள, அவனும் அவளைப் பார்த்திட, அவளிடமும் ஒரு பயம் கலந்த அதிர்வு.

“சந்து... என்ன இது கோரம்?”

“டிபிக்கல் ஃபாரஸ்ட் இஞ்சரிங்! கரடி அடிச்சிருச்சாம்.”

“மைகாட்… கொடுமை சந்து!”

“நம்ம பிரச்னையெல்லாம் இப்போ சின்னதாத் தெரியுதில்ல?”

“அஃப்கோர்ஸ்… உள்ளே வா! முதல்ல எனக்கு ஒரு கப் காப்பி வேணும். ஒரே தலைவலி...”

“இரு… நம்ப டிராவலுக்கே இப்போ வழி கிடைக்கப்போகுது. திஸ் கை ஈஸ் ஸோ ஆப்ட்!”

“அப்போ முதல்ல உள்ள கூப்பிட்டு பெட்டிய ரூம்ல வெச்சுப் பூட்டு. அந்த மோந்து பார்த்தவன், சுத்தி சுத்தி வர ஆரம்பிச்சிட்டான்.”

“நீ போ வரேன். கொஞ்சம் ரெஸ்ட் எடுப்போம். காலைல நம்ப ஜர்னியை ஸ்டார்ட் பண்ணுனா போதும்தானே?”

“ம்...”

- சாரு உள்பக்கம் திரும்பிட, சந்தப்ரகாஷ் அந்த ஆட்டுக்காரனை கரெக்ட் செய்யத் தொடங்கினான்.

திரிசூலம் எனப்படும் திருச்சுர மலைப்பகுதி. காருக்குள் பிரவேசித்த நிலையில் கோயில் முகப்பில் இறங்கியபோது, அரவிந்தனிடம் சொல்லமுடியாத அளவு வியப்பு. நான்குபுறமும் சிறிதாய் நான்கு மலை நடுவில், தொட்டிபோன்ற நிலப்பரப்பில் ஊரும் சிவன் கோயிலும். சென்னையின் மையத்திலிருந்து ஒரு 10 கிலோமீட்டருக்குள் இப்படிக் கிராமாந்தரமான ஒரு நகரப் பரப்பை அரவிந்தன் கற்பனைகூடச் செய்திருக்கவில்லை.

யோகி திவ்யப்ரகாஷ் கோயில் கோபுரத்தைப் பார்த்து, பக்தி சிரத்தையோடு கன்னத்தில் போட்டுக்கொண்டார். கடிகாரத்தில் அந்த இரண்டு மணி நேரம் கழிந்திருந்தது. கூடவே கலைவாணனும் வந்திருந்தார். காக்கி பேன்ட், ஆனால் மேலுக்கு ஒரு ஒயிட் டிஷர்ட். எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு சிறிய கைத்துப்பாக்கி.

அதை காருக்குள் இருக்கும்போதே அரவிந்தன் எடுத்துப் பிடித்துப் பார்த்தான். ஒரு அரைக் கிலோ எடைக்கல்லைப் பிடித்திருப்பதுபோல இருந்தது. அப்படியெல்லாம் ஒருவரைப் பார்த்து சாதாரணமாய் சுட்டுவிட முடியாது என்று அது அவனுக்கு உணர்த்திவிட்டது.

“ப்ரகாஷ்ஜி… உங்க விருப்பப்படியே இங்கே வந்தாச்சு. அடுத்து என்ன பண்ணப்போறோம்?”

“நாம சாமி கும்பிட வந்த மாதிரியே நடந்துப்போம். பார்வை மட்டும் துழாவட்டும். அதோ பாருங்க... ஒரு கிழவி உக்காந்திருக்கற பெட்டிக் கடை...”

- திவ்யப்ரகாஷ்ஜி மண்ணில் கால்வைத்த வேகத்தில் கடையைக் காட்டவும், கலைவாணனுக்கே சற்று அமிலத்தைச் சப்பினது போல்தான் இருந்தது.

“சார்… நீங்க போய் சுருட்டு இருக்கான்னு கேளுங்க. கொஞ்சநஞ்ச டவுட்டும் க்ளியர் ஆயிடும்’’ என்றிடும்போதே, ஒரு சைக்கிளில் வந்த ஏழுமலை என்கிற கான்ஸ்டபிள்...

“குட் ஈவினிங் சார்… நீங்க சொன்னபடி எல்லாமே கன்ஃபர்ம்தான். அந்தக் கெழவிகிட்ட ஒருத்தன் சுருட்டு வாங்கியிருக்கான். அவளும் சில்லறை இல்லைன்னு சொல்லியிருக்கா. அந்தக் கடையேதான் சார். சுருட்டு வாங்கின பார்ட்டிக்காகத்தான் சார் நானும் வெயிட் பண்ணிக்கிட்டிருக்கேன். அதேசமயம் நீங்க இப்படிப் புறப்பட்டு வருவீங்கன்னு எதிர்பார்க்கல சார்” என்றார்.

“வெரிகுட் ஏழுமலை… யாரும் சந்தேகப்படலியே?”

“இல்ல சார்… இங்கே நிறைய தனி வீடுங்க காலியா இருக்கு சார். எல்லாமே அந்தக் காலத்து வீடுங்க. அந்த வீட்டுக்கு உரியவங்களில் பலர் வெளிநாடு போய் பசங்களோடு செட்டில் ஆகிட்டாங்க. அதனால, வாடகைக்கு வீடுங்க நிறையவே இருக்கு. கோயில்லயே புரோக்கருங்க நிறைய நடமாடறாங்க. நாம நிக்கிறதையும் பார்க்கிறதையும் வெச்சே, என்ன சார் வீடு வாடகைக்கு வேணுமான்னு கிட்ட வந்துடறாங்க. மலையடிவாரத்துல ஒதுக்குப்புறமா ஒரு பங்களா மாதிரி வீடு ஒண்ணு. அநேகமா சுருட்டுக்காரன் அங்கிருந்துதான் வந்து வாங்கணும். அந்தக் கெழவிகிட்ட மெல்ல போட்டு வாங்கினதுல இதெல்லாம் தெரிஞ்சிச்சு சார்.”

- ஏழுமலை சைக்கிளை விட்டு இறங்காமல் மிக இயல்பான உடல்மொழியோடு பேசியதில், கிட்டத்தட்ட எல்லாமே தெரிந்துவிட்டது.

திவ்யப்ராகாஷ்ஜியிடம் உடனே ஒரு திட்டம்.

“சார்... உங்க சைக்கிளைக் கொடுங்க. நான் சும்மா அந்தப் பக்கம் போய், அந்த வீட்டைப் பார்க்கிறேன். பாரதி உள்ள இருந்தா நிச்சயம் என் திருஷ்டில பட்டே தீருவா” என்ற திவ்யப்ரகாஷ், சைக்கிளை வாங்கிக்கொண்டு, படு இயல்பாக ஏழுமலை சுட்டிக்காட்டிய மலையடிவாரப் பகுதி நோக்கிச் செல்லானார்.

அரவிந்தனும் ஜெயராமனும் அவரின் வேகத்தை வெகுவாய் ரசித்த நிலையில், ``அரவிந்தன்… இப்படி ஒரு ட்ரூ எக்ஸ்பீரியன்ஸ் உங்களுக்கு ஏற்படும்னு நிச்சயம் நினைச்சிருக்க மாட்டீங்க இல்லையா?” என்று கேட்டார்.

“ஆமாம் சார்! ரொம்பவே த்ரில்லிங்கா இருக்கு இந்த அனுபவம். இப்போதைக்கு ஹீரோ திவ்யப்ரகாஷ்ஜி சார்தான். என்ன சொல்றீங்க?”

“சந்தேகமேயில்ல சார். இவரை இனி எங்க டிபார்ட்மென்ட் விடவே விடாது பாருங்க.”

“அதுக்கு சார் சம்மதிக்கணுமே?”

“அரசாங்க விஷயம். பொதுநலம்னு வரும் போது மறுப்பாரா என்ன? நம்ப மிலிட்டரிலகூட சில லாமாக்களை வெச்சு நமக்குள்ள எதிரிங்க ஊடுருவியிருந்தா கண்டுபிடிச்சிடுவாங்களாமே… அவங்களுக்கு இந்த மதியூகரணி மாதிரி பயிற்சியெல்லாம் சர்வ சாதாரணமாமே?” - கலைவாணன் பேசிக்கொண்டே திவ்யப்ரகாஷ்ஜியைப் பார்த்தபடி இருக்க, அவர் பார்வையை விட்டே மறைந்துபோனார்.

“நாம உள்ளே போய் சாமி தரிசனம் பண்ற மாதிரி நேரத்தைக் கடத்தலாமா?”

“ஆமாமா! நல்லவேளை கோயில் வாசல்ங்கறதால யாரும் நம்மளைக் கண்டுபிடிச்சிட சான்ஸ் இல்லை. ஏழுமலை, ஒரு தேங்காய் பழத்தட்டு வாங்குங்க பார்ப்போம்.”

- கலைவாணனின் கட்டளை செயலாகி, தேங்காய் பழத்தட்டுடன் கோயில் முகப்புக்குள் கால்வைத்த நொடி, திவ்யப்ரகாஷ் அறக்கப்பறக்கத் திரும்பி வந்திருந்தார். சைக்கிளை வேகமாய் ஓட்டியதில் மார்பில் ஏற்ற இறக்கம்.

“என்ன ஜி?”

“பாரதி உள்ளேதான் இருக்கா. மயக்கத்துல இருக்கிற மாதிரி தெரியுது. நாலு பேர் சீட்டாடிக்கிட்டிருக்காங்க. எனக்கு இதுல எந்தச் சந்தேகமும் இல்லை.”

“அப்போ நாமளே போதுமா? இல்லை, போலீஸ் ஸ்குவாட் வேணுமா?”

“நிச்சயமா ஸ்குவாட் வேணும். எதிரிங்க தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்ல, எதிரிக்கு ரெண்டு கண்ணு போகணும்னு நினைக்கிறவங்க” திவ்யப்ரகாஷ் சொல்லிக்கொண்டிருக்கும்போது, கிழவி கடைக்கும் அந்தச் சுருட்டுப் பார்ட்டி வந்து, வாங்கிக்கொண்டு புகைத்தபடியே நடந்தபோது, காரை நகர்த்தி அவனை உரசியவாறு சென்று, பிடித்து இழுத்து, அவனைப் பின் சீட்டில் படுக்கவைத்தனர். டிரைவிங் சீட்டில் இருந்த ஏழுமலையும், ``சார், யாரும் பார்க்கலை… ஒதுக்குப்புறமாப்போய் இவனைக் கேட்கறவிதமா கேட்டா, சார் சொன்னது சரியான்னு தெரிஞ்சிடும்’’ என்றார்.

கார் புழுதிகிளப்பி ஒரு தனித்த இடம் நோக்கிச் சென்றிட, கோயிலுக்கு வெளியே ஓர் இடத்தில் அரவிந்தன், ஜெயராமன், திவ்யப்ரகாஷ்ஜி.

“அதிகபட்சம் அரை மணி நேரத்துல பாரதி நமக்குக் கிடைச்சிடுவா. அதுல எனக்கு சந்தேகமேயில்லை’’ என்று அவர் சொன்னபோது, அரவிந்தனிடம் பிரமிப்பு.

- தொடரும்...