மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இறையுதிர் காடு - 65

இறையுதிர் காடு
பிரீமியம் ஸ்டோரி
News
இறையுதிர் காடு

கிழார்கள் அவனையும் ஜாடியையும் மாறி மாறிப் பார்த்தனர். அவன் பதிலுக்கு உற்று நோக்கினான்.

அன்று பெருமூச்சு விட்டபடியே கிழார்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“ என்னய்யா இறுதியில் இப்படியாகிவிட்டது… இந்த லிங்கத்தைக் கொண்டு சில பயனை நாம் அடைந்துபார்க்கலாம் என்று எண்ணியது நடவாதுபோல் தெரிகிறதே?”

“துளியும் பற்றின்றி இதைப் பன்னிரண்டு வருடங்கள் ஒருவர் பூஜிக்க வேண்டும் என்றால் அது எப்படி? பற்றுள்ள விஷயத்தில்தானே ஈடுபாடு அதிகரிக்கும். பற்றில்லை என்றாலே அச்செயலில் இறங்க மனம் விரும்பாதே?”

“முதலில் இந்த லிங்கம் போகர்பிரான் கூறியதுபோல கேட்ட அனைத்தையும் தருமா என்பதிலேயே எனக்கு நிறைய கேள்விகள் இருக்கின்றன.”

இறையுதிர் காடு
இறையுதிர் காடு

- கிழார்கள் தங்களுக்குள் இப்படிப் பேசிக் கொண்ட தருணம். அவர்கள் பேச்சைக் கேட்டு விட்டவன்போல் சிரித்தபடியே வந்தான் அடுமனைப் பணியாளன் விடைதாங்கி. அவன் கையில் ஒரு பீங்கான் ஜாடி இருந்தது - அதன் மேல் மூடியில் சில துவாரங்கள்… அந்த துவாரங்கள் வழியே உள்ளிருப்பது கொதிக்கும் ஒரு ரசம் என்பதுபோல் ஆவி பிரிந்து கொண்டிருந்தது.

கிழார்கள் அவனையும் ஜாடியையும் மாறி மாறிப் பார்த்தனர். அவன் பதிலுக்கு உற்று நோக்கினான்.

“என்ன விடைதாங்கி… இது என்ன கைகளில் புது விதமாய் ஒரு பாண்டம்?”

“இது நம் போகர் பிரான் சீனத்தில் இருந்து கொண்டு வந்த அம்மண் பாண்டம்...”

“பீங்கான் என்று ஒருமுறை போகர்பிரான் கூறியது இதைத்தானோ?”

“ஆமாம்… உள்ளிருப்பது நவமூலி ரசம்!”

“நவமூலி ரசமென்றால்?”

“முசுமுசுக்கை, முடக்கற்றான், மிளகரணை, முட்காவேளை, முருங்கை, முன்னை, மூங்கில், மூக்கிரட்டை... இவற்றுடன் வல்லாரை என்று ஒன்பது மூலிகைத் தழைகளை ஒன்றாக்கி, கொதிக்கச் செய்து, பின் அதனுள் மூப்பு சற்று சேர்த்து உருவாக்கியிருக்கும் ரசம் இது.”

“ஒவ்வொரு மூலிகைக்கும் ஒவ்வொரு குணப்பாடாயிற்றே? இவற்றை ஒன்றாக்கினால் அதன் குணப்பாடு எப்படி இருக்கும் என்றும் தெரியாதே?”

“அதைப் பரிசோதிக்கத்தான் இதை என்னைச் செய்யப் பணித்துள்ளார். கொடுத்துவிட்டு வருகிறேன் சற்றுப் பொறுங்கள்” என்ற விடைதாங்கி, அந்த ஜாடியுடன் போகர் குடில் நோக்கிச் சென்றான்.

“இந்த விடைதாங்கி எதற்கு நம்மை இருக்கச் சொல்கிறான்? நாம் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டிருப்பானோ?”

“அப்படித்தான் நினைக்கிறேன் நானும்… வரட்டும், என்ன சொல்லப் போகிறான் என்று பார்ப்போம்...”

- மூவரும் பேசிக்கொண்டே அருகிலுள்ள பெரும் மருத மரத்தின் நிழலில் அமைந்திருக்கும் உடற்பயிற்சி மைதானத்தை அடைந்து நின்றனர். மிகுந்த வெப்பமான பகல் பொழுது! சித்திரை பிறந்துவிட்டதை அந்த வெப்பமே உணர்த்திட, மருத மரக் காற்றும் நிழலும் இதம் கூட்டின. ஆங்காங்கே இளவட்டக்கற்களுடன், சிலம்புக் கம்புகளும், முள்ளுருண்டைச் சங்கிலிகளும், மான்கொம்புகளும் அவற்றுக்கான மரத்தாங்கிகளில் இருந்தன. எவரும் அப்போது பயிற்சி செய்யவில்லை. நல்லவேளையாக கிழார்களைக் காத்திருக்க விடாதபடி விடை தாங்கி திரும்பி வந்து சேர்ந்தான்.

“எங்களைக் காத்திருக்கச் சொன்னாயே… எதற்கு?” - வேல்மணிக்கிழார் எடுத்த எடுப்பிலேயே விஷயத்தைத் தொட்டுவிட்டார்.

“நீங்கள் பேசியதெல்லாமும் என் காதில் விழுந்தன. அந்த லிங்கம் குறித்து உங்களுக்குள் ஒரு சிறு ஐயப்பாடு இருப்பதையும் உணர்ந்தேன். அது தேவையில்லை… உண்மையில் அது கேட்பதைத் தந்துவிடும் ஒரு வரப்பிரசாத லிங்கமே…!”

“இதைச் சொல்லத்தான் எங்களை இருக்கச் சொன்னாயா?”

“ஆம்… தாங்கள் சந்தேகிப்பதை போகர் பிரான் அறிந்தால் மிக வருந்துவார்...”

இறையுதிர் காடு
இறையுதிர் காடு

“அதை நாங்களும் அறிவோம். அவருடைய மேதைமையில் எங்களுக்கு யாதொரு கேள்வியும் கிடையாது… அவரது சித்த சாகசங்களையும் நாங்கள் கண்டவர்களே! அந்த சாகங்கள் குறித்துக் கேள்வி எழுப்பினால், நீங்கள் சித்தனானால்தான் உங்களுக்குப் புரியும் என்பார். அதுகூடப் பரவாயில்லை… ஏனென்றால், அதில் ஒரு நியாயம் இருக்கிறது. எல்லோராலும் எல்லாவற்றையும் உணர்ந்துவிட முடியாது. இயற்கை சில எல்லைகளை வகுத்துள்ளது. அதை எவராலும் மீற முடியாது. எவ்வளவு முயன்றாலும் என்னால் சூல்கொண்டு ஒரு பிள்ளையைப் பெறவே இயலாது. அது பெண் மக்களுக்கே சாத்தியம். அதுபோலவே மனிதனுக்கு ஒரு எல்லை; சித்தத்துக்கும் ஒரு எல்லை இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். எனவே இதெல்லாம் எங்களுக்குக் கேள்விகளே இல்லை. ஆனால் பாஷாணத்தால் ஆன ஒரு ஜடப்பொருள் நம் விருப்பங்களையெல்லாம், அது எதுவானாலும் நிறைவேற்றிடும் என்பதைத்தான் சந்தேகிக்காமல் இருக்க முடியவில்லை.”

“இதை பிரானிடம் தாங்கள் கேள்வியாகவே கேட்டிருக்கலாமே?”

“கேட்பதை விட நாமே அனுபவித்துப்பார்ப்பது என்பது மேலானது என்று கருதினோம். அதனால் அந்த லிங்கத்தை நாங்கள் கேட்டுப் பெற்று அனுபவித்துப் பார்க்க வழி இல்லாதபடி போகர் பிரான் அதை ஆசையில்லாத ஒருவனுக்கே வழங்க முடியும் என்று கூறிவிட்டார். அதுதான் எங்களுக்கும் ஒரு சிறு சலிப்பை உருவாக்கி விட்டது.”

“வேண்டுமானால் ஒன்று செய்யுங்கள்… போகர் பிரான் சற்று நேரத்தில் கன்னிவாடி மலைப்புலத்திற்குச் சென்றுவிடுவார். அவ்வேளை நீங்கள் வாருங்கள். அந்த லிங்கம் இங்கே அவருடைய தியான அறைக்கள் ஒரு மரப் பேழைக்குள்தான் உள்ளது. அதைத் தாங்கள் வெளியே எடுத்து வைத்து மனப்பூர்வமாய் மலர் தூவி முதலில் வணங்குங்கள். பின் உங்கள் தேவைகள் நிமித்தம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உங்கள் விருப்பங்களும் நிறைவேறிடக் காண்பீர்கள்!”

“இதுகூட ஒரு நல்ல யோசனைதான்… ஆமாம் நீ இப்படி ஏதாவது வேண்டியிருக்கிறாயா?”

“ஆம்… அதனால்தான் உங்களுக்கும் இப்படி ஒரு வழியைக் காட்ட என்னால் முடிகிறது...”

“அப்படி நீ என்ன வேண்டிக்கொண்டாய்?”

“அது எதற்கு… என் வேண்டுதல் மிக அதிகபட்சம் சில மணிநேரத்திற்குள்ளாகவே பலித்துவிட்டது.”

“ஆச்சர்யமாக உள்ளது… இவ்வளவு சொல்லும் நீ அது என்ன என்று கூற மாட்டாயா?”

“சரி சொல்கிறேன். நான் ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன்! அவள்கூட இங்கேதான் பணிபுரிகிறாள். மலர் பறிப்பது மருந்து அரைப்பது, லேகியம் கிளறுவது என்று அவளுக்குப் பல பணிகள். அவளிடம் நான் காதலைச் சொன்னபோது முதலில் மறுத்து விட்டாள். அவ்வைப் பிராட்டிபோல் நான் கன்னிதேவியாகவே வாழப்போகிறேன், என்னை இனி எண்ணாதீர்கள் என்று கூறிவிட்டாள். என்ன இப்படியாகிவிட்டதே என்று எண்ணி போகர் பிரான் இல்லாத தருணத்தில் லிங்கத்தை வெளியே எடுத்து மலர் தூவி விழுந்து வணங்கிக் கண்ணீர் சிந்தினேன். சில மணி நேரத்திலேயே அவள் என்னிடம் வந்து என்னை மன்னித்து விடுங்கள், நான் உங்கள் மனதைப் புண்படுத்திவிட்டேன் என்று பேசினாள். அப்படியானால் என்னை மணந்துகொள்ளச் சம்மதமா என்று கேட்டேன். என்னவோ தெரியவில்லை, உங்கள் பேச்சால் ஒரு சலனம் ஏற்பட்டு விட்டது. தீவிரமாக யோசிக்கத் தொடங்கிவிட்டேன், விரைவில் நல்ல பதிலைச் சொல்கிறேன் என்றாள். என்னால் இந்த விநாடி வரை அதை நம்பமுடியவில்லை.”

விடைதாங்கி சொன்னதைக் கேட்ட கிழார்கள் மௌனமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

அது எப்படி அவ்வளவு விரைவாக அது சாத்தியமாயிற்று என்கிற கேள்வியை அவர்களால் புறத்தள்ளவும் முடியவில்லை.

“என்ன யோசனை? முப்பத்திரண்டு லட்சணங்கள் கொண்ட எந்த ஒரு சிலைக்கும் பெரும் உயிராற்றல் உண்டாம். அவற்றிடம் நாம் வேண்டுவது நிச்சயம் கிட்டுமாம். இந்த லிங்கமும் அதுபோன்றதே… போகர் பிரான் கூறியதைத்தான் நான் கூறுகிறேன். என் பெயரைக் கவனித்தீர்களா?”

விடைதாங்கி எங்கோ ஆரம்பித்து எங்கோ வந்து நின்றான்.

“உன் பெயருக்கென்ன?”

“விடைதாங்கி என்றால் பொருள் தெரியும்தானே?”

“விடை என்றால் நந்தி. நந்தியைத் தாங்கியிருப்பவன், அதாவது நெஞ்சில் நந்தியை நிலைநிறுத் தியிருப்பவன் என்று பொருள்… சரிதானே?”

“மிகச்சரி… நந்தியெம்பெருமான் சித்தர்களுக்கெல்லாம் ஞான குருவும் கூட… அப்படிப்பட்ட நந்தியெம் பெருமான் பெயரால் உள்ள ஒரு ஊருக்கும் விடைதாங்கி என்கிற பெயருண்டு, அறிவீர்களல்லவா?”

“நன்றாக அறிவோம்...”

“அப்படிப்பட்ட விடைதாங்கியே எனது ஊர். எப்படி சிதம்பரத்திலுள்ளவர்கள் தங்கள் தலைப்பிள்ளைகளுக்கு சிதம்பரம் என்கிற பெயரை வைப்பார்களோ அப்படித்தான் எங்கள் ஊரிலும் வழக்கம்.”

இறையுதிர் காடு - 65

“சரி அதற்கென்ன இப்போது?”

“அதற்கென்னவா? எங்கள் விடைதாங்கியின் பெருமையை நீங்கள் அறியவில்லை என்று நன்கு தெரிகிறது. எங்கள் ஊர் சிவாலயத்து நந்தி முப்பத்திரண்டு லட்சணங்களால் செதுக்கப்பட்ட ஒரு பரிபூரணச்சிலை வடிவம். பௌர்ணமி இரவில் இதன் காதில் சித்தர் ஒருவர் மந்திரம் சொல்லி இதன் மூக்கில் உயிர்க்காற்றை ஊதிடும் பட்சத்தில் இது உயிர்தெழுந்து வெளிவரும். பலமுறை இந்த அதிசயம் எங்கள் ஊரில் நிகழ்ந்ததால் விடை தாங்கி என்பதே ஊர்ப் பெயருமாகி விட்டது. பரிபூரண லட்சணம் கொண்டவற்றுக்குப் பலவித ஆற்றல்கள் உண்டு என்பதற்காக நான் இதைச் சொன்னேன். இந்த லிங்கமும் அப்படிப்பட்டதே!

நாமும் நவகிரகங்களால் வழி நடத்தப்படுகிறோம். இந்த லிங்கமும் நவகிரகங்களால் பெரிதும் ஈர்க்கப்படும் ஒன்றாகும். நாம் இதை வணங்கி மனதால் நெகிழும் சமயம் நாமும் லிங்கமும் ஒன்றுகலந்து விடுகிறோம். அவ்வேளை நம் மனவிருப்பத்திற்கும் சக்தி கிடைத்து அது ஈடேறும் வழியைக் காணத் தொடங்கிவிடுகிறது - நான் மிகச் சுருக்கமாக இதன் செயலாக்கத்தை விளக்கியுள்ளேன். விரிவாக போகர் பிரானிடம் கேளுங்கள். அவரே விரித்துரைக்க சரியானவர்!”

- விடைதாங்கியின் அசராத பேச்சு கிழார்களை வாயடைக்கச் செய்து விட்டது. நெடுநேரத்திற்குப் பிறகு “நாங்கள் எப்போது வந்தால் தோதாக இருக்கும்?” என்று கேட்டனர்.

“நாளை அதிகாலை வாருங்கள். பிரான் அப்போது கன்னிவாடி மலைப்பரப்பில் இருப்பார். உங்களுக்கும் மனம் விட்டு பிரார்த்தனை செய்திட வசதியாக இருக்கும். என்ன சொல்கிறீர்கள்?” என்று விடைதாங்கி கேட்கவும் அவர்களும் தலையசைத்தனர்.

கன்னிவாடி குகைப்பரப்பு. ஆழிமுத்துவும் செங்கானும் தண்டபாணிச்சிலை உருவத்தை, போகர் வரைந்து தந்திருந்த வரைபடத்தைப் பார்த்துப் பார்த்துச் செய்து முடித்திருந்தனர். புறத்தில் கற்குழிகளில் போட்டு இடித்தும் சலித்தும் புடமிட்டும் பாஷாணங்கள் சுத்திகரிக்கப்பட்டு பாஷாணத் தொட்டியில் அளந்துபோடப்பட்டிருந்தன. ஓரிடத்தில் செந்தாடுபாவைச் சாற்றினைப் பானைகளில் வடிகட்டிப் பிடித்தபடி இருந்தனர்.

எல்லோரிடமும் ஒரு தனித்த உற்சாகம் தெரிந்தது. எவரிடமும் களைப்பில்லை. வியர்வை பெருகிடும் மேனிகளுமில்லை. அங்கு நிலவிய மூலிகை வாசமே பெரும் புத்துணர்ச்சிக்குக் காரணமாக இருந்தது.

இடையில் செங்கான் மட்டும் சங்கரதிகம்பரர் சமாதிக்குச் சென்று விளக்கேற்றி மலர்தூவி வழிபாடு செய்துவிட்டு வந்திருந்தான். அந்தச் சூழலே மிகப் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் காட்சி தந்துகொண்டிருந்தது.

கன்னிவாடி அரண்மனையிலிருந்து ஊழியர்கள் சிலர் பழவகைகளுடன் தேன் மற்றும் தினை மாவினைப் பெரும் கூடைகளில் வைத்து அவற்றைக் கோவேறு கழுதைகளின் மேல் ஏற்றி அனுப்பியிருந்தனர். போகர் பிரான் புலிப்பாணியிடம் சில கட்டளைகள் பிறப்பித்திருந்தார். நம் காரியம் முடியும் வரை அந்நியர்கள் எவரும் அருகே வரவோ, நடப்பதைப் பார்ப்பதோ கூடாது என்பது அதிலொன்று… எனவே, எவர் வந்தபோதும் எல்லை வகுத்து அதைத் தாண்டாதவாறு பார்த்துக் கொண்டிருந்தனர். அனைவரையும் புலிப்பாணியே மேற் பார்வையிட்டு வழிப்படுத்திக் கொண்டிருந்தான். எப்படி ஒரு புலியானது வருவது தெரியாதபடி வருமோ அப்படியே வந்து நின்று செயல்பட்டவனை அஞ்சுகன் பார்த்து, “உனக்குப் புலிப்பாணி எனச் சரியாகத்தான் பெயரிட்டுள்ளனர்” என்று சிரித்தான்.

“அது சரி… கிழார்கள் ஜாதகங்களை ஆராய்ந்து அவர்களுக்கு பலன் கூறிவிட்டாயா?” - என்று இடையிட்டுக் கேட்டான் சங்கன். புலிப்பாணி அதற்கு மௌனத்தையே பதிலாக வைத்தான்.

“புலி… எதற்கிந்த மௌனம்? உன் மௌனம் நீ அவர்களை அறவோடு மறந்துவிட்டாய் என்பதுபோல உணர்த்துகிறது!”

“என்ன புலி… நாங்கள் தவறாக ஏதும் பேசிவிட்டோமா?”

- இப்படிப் பணியில் ஈடுபட்டபடியே அவர்கள் புலிப்பாணியிடம் கேள்விகளாய்க் கேட்டிட, புலிப்பாணியும் மெல்ல வாய் திறக்கலானான்.

“சகாக்களே, நீங்கள் தேவையே இல்லாமல் அவர்கள் நினைவை எனக்குள் எழுப்பி விட்டீர்கள்… பாவம் அவர்கள்! இப்போதைக்கு என்னால் இவ்வளவுதான் கூறமுடியும்” என்று கூறிவிட்டான்.

“பாவமா? அவர்களா?’’ என்று இரட்டைக் கேள்வியைக் கேட்டபடியே அருகில் வந்தான் மருதன்.

“ஆம்… அவர்கள் பாவம்தான்… அதற்குமேல் எதுவும் கேட்காமல் வேலையைப் பாருங்கள். நமக்குக் கொடுக்கப்பட்ட நாள்களுக்குள் நாம் இச்செயல்பாடுகளைப் பிசிரின்றி முடித்தாக வேண்டும்.”

“அப்படி என்ன நமக்குக் கால நெருக்கடி?”

“கால நெருக்கடியேதான். காலம் என்று இரவும் பகலுமாய் நீங்கள் கருதிடும் நாள்களுக்குப் பின்னாலே வெறும் வெளிச்சமோ இருளோ மட்டும் இல்லை சகாக்களே! சந்திரன் சூரியன் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி எனும் கோள்களின் கதிர்வீச்சுகளும் இதனுள் ஊடாடியபடி இருக்கின்றன. இந்தக் கதிர்வீச்சுகளின் இயக்கம் நம் உடலில் இடையறாது நடத்தபடியும் உள்ளது. இவற்றுக்கிடையில்தான் அழிவில்லாத நம் ஆத்மா நம் உடலுக்குள் உயிராய் விளங்கி நாம் இயங்கக் காரணமாக இருக்கிறது. நாம் செய்யும் ஒவ்வொரு செயலின் பின்னாலும், எண்ணத்தின் பின்னாலும் இக்கதிர்களின் ஆளுமை இருப்பதையே ஜோதிடம் எடுத்துக் காட்டுகிறது. நான் என்று நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைப்பற்றி எண்ணும்போது அந்த நானுக்குள் இந்த எழுவரின் ஆளுமையைத்தான் பார்க்கிறீர்கள்.”

“புலி, என்ன இது... அப்படியானால் நாம் ஏழ்விசைத் தொகுப்பா… நமக்கென்று தனித்தன்மை கிடையாதா?”

- அகப்பை முத்து பாஷாண இடிப்புக்கு நடுவில் காற்றுக்குரலில் கேட்டான். ஏனோ புலிப்பாணியால் அதற்கொரு பதிலை உடனடியாகக் கூற முடியவில்லை. பெரும் மௌனத்திற்கு நடுவே ஒரு பெருமூச்சைத்தான் பதிலாக விட்டான்.

இறையுதிர் காடு
இறையுதிர் காடு

“என்ன புலி… பதில் கூறப் பிரியமில்லையா? இல்லை முடியவில்லையா?” என்று நிமிண்டினான் நாரணபாண்டி.

“என்னவென்று சொல்வேன்… எதைச் சொல்வேன்? சுருக்கமாகக் கூறுகிறேன். நாம் சிக்கிக்கொண்டிருப்பவர்கள்… அதாவது, உலகில் வாழ்க்கை என்னும் வளையத்துக்குள் சிக்கிக் கொண்டிருப்பவர்கள். கடன்காரர்களும்கூட… அப்புறம், சில வினைப்பாடுகளுக்கு ஆட்பட்டே தீர வேண்டியவர்கள். நான் கூறிய எதிலும் எந்த மாற்றத்திற்கும் இடமில்லை.”

“நீ என்ன சொல்கிறாய்... எங்களுக்கு எதுவும் புரியவில்லை?”

அவர்கள் இப்படித் தங்களுக்குள் பேசிக் கொண்ட தருணத்தில் நல்ல சுகந்தவாசம் முதலில் காற்றில் கலந்து வந்தது. பின் போகர் பிரான் அவர்கள் நடுவே ஒரு வழித்தடத்தில் நடந்து வந்தபடி இருந்தார்.

அவர் வருகையைப் பார்க்கவும் எல்லோரிடமும் ஒரு விடைப்பு… தம் பணியில் கவனமாகினர். போகரும் குகைக்குள் நுழைந்து மெழுகாலான தண்டபாணி உருவத்தை நோக்கினார். வரைபடமும் உருவமும் சரியாகத்தான் இருந்தன. முகத்தில் மட்டும் சற்று புன்சிரிப்பு தெரிந்தது. அதை மட்டும் சற்று மாற்றச் சொன்ன போகர் “தண்டபாணித் தெய்வம் நோய்நொடியற்ற வாழ்வையும் ஞானத்தையும் தரவல்லவன். அதற்கேற்ப முகத்தில் சிந்தனை வரிகள் இருக்க வேண்டும்” என்றார்.

இன்று திவ்யப்ரகாஷ்ஜியின் பொட்டில் அடித்தாற்போன்ற பதிலால் அரவிந்தன் ஆச்சர்ய வழிசல் கொண்ட அவ்வேளையில் ஜீ அவர்கள் இருவரையும் ஆழமாய்ப் பார்த்து “நாம கொஞ்சம் அப்படி உள்ளே போய் உட்கார்ந்து பேசுவோமா?” என்றும் கேட்டார்.

“நீங்க கேக்கறத பார்த்தா பேச நிறைய விஷயம் இருக்கற மாதிரி தெரியுதே ஜீ…?”

நானும் அந்த பிரம்மாண்ட ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன்தான்! இப்ப இருக்கற சாந்தப்ரகாஷ் என் கசின் பிரதர்னா நீங்க நம்பித்தான் தீரணும்!

“ஆமாம். நீங்க என்னைப் பத்தித் தெரிஞ்சிக்க இன்னும் சில விஷயங்கள் இருக்கு...”

“இப்ப அதைப்பத்தி எல்லாம் பேசற மூடில் நீங்க இருக்கீங்களா? நாம இங்க வந்திருக்கறது பாரதியைக் காப்பாத்த...”

“அது கிட்டத்தட்ட முடிஞ்சுபோச்சு… பாரதி கிடைச்சிட்ட மாதிரிதான். நோ பிராப்ளம்.”

“உங்க கான்ஃபிடன்ட்டை நினைச்சு சந்தோஷம். ஆனாலும்...”

“பயப்படாதீங்க. பாரதி அந்த வீட்லதான் இருக்கா. அவளைக் கலைவாணன் மீட்டுக் கொண்டு வந்துடுவாரு. அவங்களும் வசமா மாட்டப் போறாங்க. இனி பாரதிக்கு அவங்களால எந்த ஆபத்தும் எந்தக் காலத்திலேயும் கிடையாது.”

“நல்லது… இந்தப் பிரச்னையைவிட அந்தப் பெட்டியை ஃபாலோ பண்ணிப்போய் நாம் தெரிஞ்சிக்கப் போற விஷயங்கள்தான் எனக்கு ரொம்ப முக்கியம்...” - என்றார் ஜெயராமன்.

“ஆமாம்… நாம அப்படித் தெரிஞ்சிக்கப்போற விஷயங்கள் சாதாரண விஷயங்களில்லை. ஒரு பத்திரிகை ஆசிரியரா, ஒரு எழுத்தாளரா உங்களுக்கும் அசாதாரண அனுபவமா அது நிச்சயம் இருக்கப்போகுது.”

“சரி… ஏதோ முக்கிய விஷயமா சொல்ல வந்தீங்களே?”

“சொல்றேன். நான் சொல்றதைக் கேட்டு நீங்க அதிர்ச்சியடையக் கூடாது...”

“இப்ப அதிர்ச்சி பழகிப்போச்சு ஜீ! சும்மா சொல்லுங்க” என்றான் அரவிந்தன்.

“எந்தப் பெட்டியை அந்த எம்.பி தேடறாரோ, எந்தப் பெட்டி பாரதி வீட்ல பல நாள் இருந்துச்சோ, அந்தப் பெட்டிக்குச் சொந்தக்காரங்களில் நானும் ஒருத்தன்னா நீங்க நம்புவீங்களா?”

திவ்யப்ரகாஷ்ஜி நிஜமாலுமே ஜெயராமனையும் அரவிந்தனையும் ஒரு உலுக்கு உலுக்கினார்.

“ஜீ..!’’

“யெஸ்… நானும் அந்த பிரம்மாண்ட ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன்தான்! இப்ப இருக்கற சாந்தப்ரகாஷ் என் கசின் பிரதர்னா நீங்க நம்பித்தான் தீரணும்!”

திவ்யப்ரகாஷ் சொன்ன விஷயம் நிஜமாலுமே ஒரு கிள்ளு கிள்ளியது.

“ஈஸ் இட்?”

“ஓ… அதான் பேர்ல பிரகாஷ்ங்கற வார்த்தையா?”

“ஆமாம். எங்க குடும்பத்துல ஆண் வாரிசுகள் பிரகாசமா இருக்கணும்கற விருப்பத்தாலயும், அப்படிப் பேர் வெச்சாலாவது ஆண் வாரிசுகள் ஆண் வாரிசா இருப்பாங்கன்னு நம்பியும் என் தாத்தா, அதாவது கொள்ளுத்தாத்தா செய்த ஏந்பாடுதான் அது?”

“ ஆண் வாரிசு ஆண்வாரிசா இருப்பாங்கன்னு நம்பியும்னா, புரியலையே…?”

“பாயின்ட்டை கரெக்டா பிடிச்சிட்டீங்க. வளர்சிதை மாற்றங்கள் பதினைஞ்சு வயசளவுல ஏற்பட்டு தங்களுக்குள்ள பெண்மையை உணருகிற ஆண்களை நீங்க என்னன்னு சொல்வீங்க?”

“மைகாட்…. யூ மீன் திருநங்கை?”

“எக்ஸாக்ட்லி”

“அப்ப உங்க குடும்பத்துல…?”

“ஒவ்வொரு தலைமுறைலயும் ஒரு திருநங்கைப்பிறப்பு ஏற்பட்டது! நடுவுல இல்லாமப்போன அது, திரும்ப தொடர்ந்து கிட்டும் இருக்குது!”

“ஜீ… என்ன இது? யார் அது? அதுக்கும் பெட்டிக்கும் என்ன சம்பந்தம்?”

“நிறைய இருக்கு… அது பெட்டி இல்லை - புதையல்! அந்தப் பெட்டி கிடைக்கக் காரணம் என் கொள்ளுத்தாத்தாதான்… அவர் டைரியைத்தான் நீங்க படிச்சீங்க! அவர் தன் மகன் ஒரு திருநங்கையாகவும், இந்த வாழ்கையை வேண்டாம்னு வெறுத்துப்போய் குற்றாலம் பக்கம் போய், அப்படியே சித்தர்கள் தொடர்பு ஏற்பட்டு, தன்னையே கிட்டத்தட்ட ஒரு சித்தனாக்கிக்கிட்டவர்! அவருக்கு போகர் கிட்ட இருந்து கிடைச்ச அதிசயம்தான் அந்தப் பெட்டி… அந்த லிங்கம் போகரால செய்யப்பட்ட லிங்கம். அதுக்குப் பேர் பாஷாண ஜெகவல லிங்கம்!

ஒரு பன்னிரண்டு வருஷம் தன் கட்டுப்பாட்டுல வெச்சு வழிபடறதுக்காக போகர் தந்த லிங்கத்தோடு திரும்பின என் தாத்தா கூடவே சில அபூர்வ ஏடுகளையும் அதோடு கொண்டு வந்திருந்தார். அதையெல்லாம் நீங்க அதுல பார்த்திருப்பீங்க. அவருக்கு அறுபது வயசுல பிறந்த ஒரு பிள்ளைதான் எங்க தாத்தா! எங்க தாத்தாவோட இரண்டு வாரிசுகளில் ஒரு வாரிசுதான் என் அப்பா. இன்னொரு வாரிசு சாந்தப்ரகாஷின் அப்பா. இதுல என் அப்பா என் தாத்தா சொன்னப்படி பூஜை புனஸ்காரம்னு வாழ்ந்தார். குறிப்பா அதிக அளவு மரங்களை நட்டு ஒரு புரட்சியே செய்தார். சொன்னா நம்ப மாட்டீங்க, எங்கப்பா ஒரு லட்சத்து எட்டாயிரம் மரங்களை நட்டு வளர்க்க சங்கல்பம் பண்ணிக்கிட்டு அதன்படி வளர்த்தவர். என்னையும் என் தாத்தா விருப்பப்படி யோகம், தியானம்னு வளர்த்தார். அதுல வந்ததுதான் என் மதியூகரணி எல்லாம்… இந்த மதியூகரணி பற்றின சித்தர் பாடல்கள் கொண்ட ஏடு இப்பவும் என்கிட்ட இருக்கு. இது அந்தப் பெட்டில இருந்த ஒரு ஏட்டுக்கட்டுதான். நடுவுல என் சித்தப்பா பாதை மாறி, தன் விருப்பத்துக்குத் தொழில் செய்து வெளி நாட்டு மோகத்தோடு இருந்தார். என் அப்பா எவ்வளவு சொல்லியும் என் சித்தப்பா, அதாவது சாந்தப்ரகாஷின் அப்பா கேட்கல. சொத்தையும் பிரிச்சு வாங்கிட்டாரு. அதுல பல்லாவரம் பங்களா அவங்க பக்கம் போயிடிச்சு. கடைசில என் தாத்தாவும், என் அப்பாவும் பயந்த மாதிரி அவங்க தலைமுறைல ஒரு திருநங்கைப்பிறப்பு ஏற்பட்டுச்சு! அது நீங்கணும்னுதான் என் கொள்ளுத்தாத்தா போகரின் லிங்கத்தைக் கொண்டு வந்ததோடு மரங்கள வளர்த்து வனக்கொண்டாட்டம்னு சில விஷயங்களையெல்லாம் பின்பற்றினார். அதோட தொடர்ச்சியில அந்தப் பெட்டியை போகர்கிட்ட திரும்ப ஒப்படைக்கற நடைமுறை ஒண்ணும் இருக்கு. அதாவது பன்னிரண்டு வருஷத்துக்கு மேல ஒருத்தர் அந்த லிங்கத்தையோ அது தொடர்புடைய ஏடுகளையோ வெச்சுக்கக்கூடாது. ஒரு சித்ரா பெளர்ணமி நாளில் பொதிகை மலையில் இருக்கற சித்தர்பொட்டல்ங்கற இடத்துக்குப் போய் அப்ப அங்க வரும் போகர்சித்தர்கிட்ட ஒப்படைச்சிடணும்.’’

- திவ்யப்ரகாஷ் தனக்குத் தெரிந்த தகவல்களைச் சொல்லிக்கொண்டே வந்ததில் சற்று இடைவெளி விட்டு இருவரையும் பார்த்தார். இடையில் கோயில் மணிச் சப்தமும் எவர் அர்ச்சனையின் பொருட்டோ ஒலித்து அடங்கியது!

“நீங்க சொல்றதெல்லாம் சரிதான்… இந்தத் தகவல்களைத்தான் நானும் உங்க தாத்தாங்கறவரோட டைரில படிச்சேன்… ஒண்ணு நல்லாப் புரியுது. ஒப்படைக்க வேண்டிய காலத்துல அந்த லிங்கத்தை ஒப்படைக்கல, அதுவே ஒரு தப்பா ஆகி திரும்ப உங்க குடும்பம் திருநங்கைப்பிறப்பைச் சந்திக்கத் தொடங்கிடுச்சு… அப்படித்தானே?”

“ஆமாம்… எங்களுக்குப் பல விதத்துல பலவிதமான இழப்புகள்! அதுல உச்சபட்சம்தான் என் தாத்தா ஒரு சர்ப்பமா ஜென்மமெடுத்து வந்து அந்தப் பெட்டிக்குக் காவல் இருந்த சம்பவங்கள்!”

“நீங்க சொன்னதை வெச்சு எனக்குள்ள பல கேள்விகள் இருக்கு. இந்த விஷயத்துல பாரதிக்கு எப்படித் தொடர்பு ஏற்பட்டது. அந்தப் பெட்டியும் பாம்பும் பாரதி வீட்டுக்கு எதுக்காக வரணும்?”

“எல்லாத்துக்கும் சரியான காரண காரியம் இருக்கு. நான் எனக்குத் தெரிஞ்சதைச் சொல்றேன். இதுல நானும் என் அப்பாவும்கூட ஒரு தப்பு செஞ்சிருக்கோம். பெட்டில இருந்த மதியூகரணி ஏட்டை எடுத்து நாங்க சுயநலமா பயன்படுத்திக்கிட்டோம். அதுல சொர்ண ரகசியம்னும் ஒரு ஏடு இருக்குமே?”

“ஆமாம் இருக்கு...”

“அதுதான் என் அப்பா தொலைஞ்சுபோகக் காரணம்.”

“என்ன… உங்கப்பா தொலைஞ்சுபோயிட்டாரா... இது என்ன புதுத் திருப்பம்?”

“அந்த ஏட்டுக்கட்டுல தங்கம் செய்யற ரகசியக் குறிப்புகள் இருக்கு, அதைப் படிச்சிட்டு அதுக்கான மூலிகைகளைத்தேடி அதே பொதிகை மலைக்குப் போனவர்தான் என் அப்பா… இன்னிக்கு வரை அவர் திரும்பி வரலை!’’

“ரியலி?”

“யெஸ்… நானும் அவரைத் தேடித் தேடியே அலுத்துட்டேன். எல்லாமே பேராசைப்பட்டதால வந்த வினை! போகர் விதிச்ச கட்டுப்பாடுகளைப் பின்பற்றாததால வந்த கோளாறு. இங்க எங்கப்பாவுக்கு இப்படின்னா அங்க எங்க சித்தப்பாவும் ஒரு விபத்துல காலமாயிட்டாரு!”

“இவ்வளவு விஷயங்கள் நடத்திருக்கா… எப்படி நீங்க பல்லாவரம் ஜமீன் வாரிசுன்னு யாருக்கும் தெரியாமப்போச்சு?!” - கேள்வியும் பதிலுமாய் அரவிந்தனும் திவ்யப்ரகாஷ்ஜியும் இருக்க, இடையில் ஜெயராமனின் கைப்பேசிக்கு ஒரு அழைப்பு. காதைக் கொடுத்தவர் முகத்தில் மலர்ச்சி.

இறையுதிர் காடு
இறையுதிர் காடு

“என்ன சார்… குட் நியூஸ்தானே?”

“யெஸ்… யெஸ். கலைவாணன் கான்ஸ்டபிள் ஏழுமலையுடனும் இன்னும் சிலருடனும் அந்த வீட்டைச் சுத்தி வளைச்சு பாரதியை மீட்டுட்டாராம். நம்மையெல்லாம் உடனே வரச் சொல்றாரு” என்றார்.

“நான்தான் சொன்னேனே… அரைமணி நேரத்துல பாரதி கிடைச்சிடுவான்னு...” என்று திவ்யப்ரகாஷ்ஜியும் உற்சாகமானார்.

“ஜீ… பாரதி திரும்பக் கிடைச்சதவிடப் பெரிய த்ரில் இப்ப நீங்க சொன்ன விஷயங்கள்தான்… எவ்வளவு ட்விஸ்ட்டு… எவ்வளவு ஆச்சர்யங்கள்! வாங்க போய்க்கிட்டே பேசலாம். பாரதியும் இனி முரண்டுபிடிக்க மாட்டான்னு நினைக்கறேன்...”

பேசிக்கொண்டே மூவரும் புறப்பட்டனர்.

ஆஸ்பத்திரியில் இருந்த ராஜா மகேந்திரனுக்குத்தான் முதல் செய்தியே. கணேச பாண்டியன் மிக வேகமாக அவர் முன் சென்று “அய்யா… பாப்பாவை போலீஸ் கண்டு பிடிச்சிட்டாங்களாம். பாப்பா நல்லா இருக்குதாம்; எந்த ஆபத்துமில்லையாம்” என்றார்.

“இதை முதல்ல என் அம்மாவுக்குச் சொல்லு… ஆமா, எங்க இருந்திருக்கா, எப்படிப் பிடிச்சாங்களாம்?”

“எல்லாத்தையும் ஆபீஸர் நேர்ல வந்து சொல்றேன்னு சொன்னாருங்க… மீடியாவுக்குத் தெரியாமலேயே எல்லாம் நடத்திருக்கு. பாப்பா கிடைக்க அந்தப் பத்திரிகை ஆசிரியர் ஜெயராமனும், எழுத்தாளர் தம்பியும்கூட பெரிய காரணமா இருந்திருக்காங்கபோல தெரியுது...”

“ சரி எங்க நம்ப ஜோசியர்?”

“அவர் அப்போ போனவர் தான்… என்ன ஆனார்னே தெரியல.”

“போன் போடு… பெட்டி விஷயம் என்னாச்சுன்னு தெரியவில்லையே?”

கணேச பாண்டியன் போன் போட முயலும்போதே அங்கு வந்துவிட்ட ஜோதிடர் “கணேசபாண்டி… ஸ்டாப் இட்’’ என்றபடி வந்து நின்றார்.

“என்னங்க நந்தா ஜீ… எங்க போய்ட்டீங்க? பாரதி கிடைச்சிட்டாளாம். இந்தப் பிரச்னை தீர்ந்திடுச்சு. பொட்டி விஷயம் என்னாச்சு?’’ பரபரத்தார் ராஜா மகேந்திரன்.

“அந்த ஜமீன் கப்பிள்ஸ் பெட்டியோட இப்ப குற்றாலத்துல இருக்காங்க… இப்பதான் எனக்குத் தகவல் வந்துச்சு!” என்றார் நந்தா.

இறையுதிர் காடு - 65

“அங்க எதுக்குப் போயிருக்காங்க?”

“அந்தப் பெட்டி சித்தர்கள் சமாசாரமாச்சே… குற்றாலமும் அந்த மலைகளும் சித்தர்கள் நடமாடுற இடம்தானே?”

“அதனால?”

“அது சித்தர்கள் பிராப்பர்ட்டி. திருப்பி ஒப்படைக்கப் போறாங்கன்னு நினைக்கிறேன்.”

“என்ன சொல்றீங்க நந்தாஜீ. அப்ப அது நமக்குக் கிடைக்காதா?”

“கிடைக்கும்… கிடைக்காம எங்க போயிடும்... அதுக்கு என்ன செய்யணுமோ அதைச் செய்துகிட்டேதானே இருக்கேன்?”

“என்ன செய்திருக்கீங்க?”

நந்தாஜி நெருக்கமாய் நெருங்கி ராஜா மகேந்திரன் காதில் ஏதோ சொன்னார். ராஜா மகேந்திரன் முகத்தில் சூரியன் டௌன்லோடு ஆனதுபோல ஒரு பிரகாசம்!

- தொடரும்